171

எட்டயபுரத்தில் வாழ்கின்ற போதே ,

தாய்மொழிக் காதல்

நாட்டுப்பற்று

மன்னரையும் செல்வந்தரையும் மதிக்காத சுயமரியாதை உணர்வு

ஆகியன அவரிடத்தில் அமைந்திருந்தன .

தம்மை ஆங்கிலக் கல்விக்கு உட்படுத்தியமை குறித்துக் கூறும் போது ,

வாதும் பொய்மையும் என்றவி லங்கினம்

வாழும் வெங்குகைக்கு என்னை வழங்கினன்

( சுயசரிதை .

27 )

( வாது = வீண் விவாதம் , வெங்குகை = கொடிய குகை )

என்று கூறக் காணலாம் .

இத்தகைய உணர்ச்சியைக் கொண்ட மனிதன் விடுதலைப் பண் பாடுகின்ற வானம்பாடியாக மலர்ந்ததில் வியப்பில்லை .

பொருள் செய்வதையே நோக்கமாகக் கொண்ட தந்தை ; பாரதி ஐந்து வயதுச் சிறுவனாய் இருக்கும் போதே உயிர்நீத்த தாய் ; சிருங்காரச் சுவையில் ஈடுபட்டு அத்தகைய இலக்கியங்களைச் சுவைப்பதே வாழ்வெனக் கருதிய மன்னர் ; தூதும் அந்தாதியும் கலம்பகமும் ( சிற்றிலக்கிய வகைகள் - இவை பற்றிய விளக்கம் சிற்றிலக்கியம் குறித்த பாடத்தில் காண்க ) பாடிப் பரிசில் பெற்றுக் கொண்டிருந்த புலவர் கூட்டம் என்ற சூழலில் வாழ்ந்த பாரதியின் வாழ்க்கையில் மேலும் துன்பங்கள் ஏற்பட்டன .

இதனை ,

தந்தை போயினன் பாழ்மிடி சூழ்ந்தது ;

தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர்

சிந்தையில் தெளிவில்லை ; உடலினில்

திறனுமில்லை ; உரன் உளத்தில்லையால்

மந்தர் பாற் பொருள் போக்கிப் பயின்றதாம்

மடமைக் கல்வியால் மண்ணும் பயனிலை

எந்த மார்க்கமும் தோன்றிலது என் செய்கேன் ?

ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே ?

( சுய , 46 )

என்று குறிப்பிடுகின்றார் .

( பாழ்மிடி = பாழான வறுமை , தரணி = உலகம் , உரன் = வலிமை , மந்தர் = அறிவு குறைந்தவர் , மார்க்கம் = வழி )

தந்தையும் இறந்து விட்டார் .

தமக்கு ஆறுதல் கூறுவதற்கு யாருமில்லை .

அதனால் மனக்குழப்பம் , உடலிலும் உள்ளத்திலும் வலிமை இல்லை .

கல்வியினாலும் பயனில்லை .

வழி எதுவும் தெரியாமல் இருக்கும் நான் ஏன் பிறந்தேனோ என வருந்துகிறார் பாரதியார் .

ஆனாலும் இந்தத் துன்பங்கள் பாரதியின் குறிக்கோள் மிக்க வாழ்க்கைப் பயணத்தை மாற்றவில்லை .

எட்டயபுரத்திலிருந்து பாட்டுக்குயில் சென்னைக்குப் பறக்கின்றது .

6.2.2 சென்னையில்

பாரதியார் ‘ சுதேசமித்திரன் ’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து ஆற்றிய பணி , சென்னை வாழ்க்கை , இந்தியா வாரப் பத்திரிகைப்பணி சூரத்நகரில் நிகழ்ந்த காங்கிரஸ்மாநாட்டுப் பணி , வ.உ.சிதம்பரம் பிள்ளை , சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீதான வழக்குகள் ஆகியன பாரதியின் புகழைப் பெருக வைத்தன .

மிதவாதியான கிருஷ்ணசாமி ஐயர் பாரதியின் ‘ சுதேச கீதங்களை ’ உலகிற்கு அறிமுகப்படுத்துகிறார் .

பின்பு 1908-இல் ‘ ஸ்வதேச கீதங்கள் ’ என்ற தலைப்பில் பதினாறு பாடல்கள் பாரதியாரால் வெளியிடப் பெறுகின்றன .

23.1.1908 அன்று சுதேசமித்திரன் ஏட்டில் வந்த விளம்பரத்தைச் சீனி .

விசுவநாதன் அப்படியே தருகிறார் .

அது கீழ்வருமாறு :

விபின் சந்திர பாலர் , தமக்கு விதிக்கப்பட்ட தண்டனை முடிவுற்று விடுதலை பெற்ற நாளைச் சென்னையில் பாரதி பெருவிழாவாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார் .

இந்திய விடுதலை வரலாற்றில் குறிப்பிடத்தக்க இந்த நிகழ்ச்சிக்குப் பாரதியாரே தலைமை தாங்கினார் .

பாரதியாரின் நினைவை அழியாமல் போற்றும் இந்த நிகழ்வைக் குறித்து , அவர் 7.3.1908-இல் சுதேசமித்திரனில் வெளியிட்ட அறிக்கையே கூறுவதைக் கேட்கலாம் .

நாளது பிலவங்க வருஷம் மாசி மாதம் 27-ந் தேதி திங்கட்கிழமையன்று ( 9.3.1908 ) மகரிஷி பாலர் தமது யாகத்தைமுடித்து விட்டுக் காரியத்தை நிறைவேற்ற வருகிற புண்ணியதினம் .

அன்று நடைபெறும் ஊர்கோலம் முதலியவைகளைச் சிறப்பாய் நடத்த மயிலாப்பூர் மகாஜனங்களின் உதவி அவசியமாதலால் , அவர்கள் ( மாணவர்கள் உட்பட ) தாங்களாகவே மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயில் தெரு , 8 நெ. கதவு இலக்கமுள்ள ஜாதீய பிரதம பாடசாலையிலாவது , தலையாரித் தெரு , 10 நெ. வீட்டிலாவது வாலண்டியராகப் பதிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் .

( மகாகவி பாரதி வரலாறு , பக்.307 )

இந்தக் கூட்டத்தில் 20,000 பேர் கலந்து கொண்டதாகக் காவல்துறைக் குறிப்புக் கூறுகின்றது .

சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் பாரதி பேசிய பேச்சு விடுதலைக் கனலை எழுப்புவதாக அமைந்தது .

காவல்துறையிலிருந்து பெற்ற அப்பேச்சைச் சீனி . விசுவநாதன் அளிப்பதைக் காணலாம் .

கனவான்களே !

அன்றாடம் மக்கள் சிறைக்கு அனுப்பப்படுவதும் விடுதலை செய்யப்படுவதும் காணவும் கேட்கவும் செய்கின்றீர்கள் .

ஆனால் நீங்கள் அவற்றைப் பற்றி அக்கறை படுவதில்லை .

பின் ஏன் இன்று இங்குக்கூடிஇருக்கிறீர்கள் ?

ஒரு மகாராஜாவையோ , பெருத்த விருது பெற்றவரையோ மதிக்கும் பொருட்டு இங்கு நீங்கள் வரவில்லை .

விபின் சந்திர பாலர் விடுதலை பெற்றதைக் கொண்டாடவே கூடி இருக்கிறீர்கள் .

பாலர்அவர்களின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு நாம் இங்கு வரவில்லை .

சுயராஜ்யத்தில்- தாய்நாட்டுப் பற்றில் - நம்பிக்கை வைத்திருப்பதால் இங்கே கூடி இருக்கிறோம் .

நம் தேச நலனுக்காக நாம் பாடுபட்டு வருகிறோம் .

பாலர் அவர்களும் இவை போன்ற கருத்துடையவர் .

இவை பொருட்டு எழுந்த துன்பங்களை யெல்லாம் அனுபவித்திருக்கிறார் .

நாமும் நம் சக்திக்கு இயன்றவரை சுயராஜ்ய கொள்கைக்காகவும் , தேசப்பற்றுக்காகவும் துன்பங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் .

ஆகவே , நாம் அனைவரும் ஒன்று கூடிச் சுதேசிய சுயராஜ்யக் கொள்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படவோ - போராடவோ முன்வர வேண்டும் .

( அரசாணை எண் 923 ( நீதித் துறை ) நாள் 4-7-1908 )

( மகாகவி பாரதி வரலாறு பக்.311 )

இத்தகைய அச்சமின்மையே இந்திய விடுதலைப் போரினை உருவாக்கியது .

அந்நிய அரசின் அடக்குமுறை பாரதியைக் கட்டுப்படுத்த முடியவில்லை .

உச்சிமீது வான் இடிந்து வீழினும் அச்சமில்லை என்ற கவிஞர் அவர் .

சாக்ரடீசுக்கும் , திருநாவுக்கரசர்க்கும் , காந்தி அண்ணலுக்கும் இந்த அச்சமின்மை இருந்தது .

பேரரசுகளுக்கு அறைகூவல் விடுக்கும் இந்தப் பேராண்மையினால் , பாரதியின் பெயர் விடுதலை வரலாற்றில் நிலைத்து விட்டது .

சென்னையில் இதனைப் போல நிகழ்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பாரதியின் ஆளுமை வெளிப்பட்டது .

விடுதலை வரலாற்றில் கவிஞர்கள் உணர்ச்சி பொங்கப் பாடுவார்கள் ; சற்று மிகுதியாகப் போனால் , இயக்கக்கிளர்ச்சிகளில் பங்கேற்பர் .

ஆனால் பாரதி அதனை முன்னின்று நடத்த வல்லவராக இருந்திருக்கிறார் என்பது கருதத்தக்கது .

தமிழ்நாட்டிலிருந்த காங்கிரஸ் இயக்கத்தோடு கூட அவர் உறவுடையவராக இல்லை ; அவர் தாமே ஒரு தனி இயக்கமாக விளங்கினார் .

எவரிடமும் அனுமதி பெறாமல் நேரே சென்று காந்தியடிகளைக் கண்டு தாம் நடத்தும் கூட்டத்திற்கு வர இயலுமா என்றும் கேட்டார் .

இந்திய விடுதலை பற்றி எண்ணும் எவரும் பாரதியை விலக்கிவிட முடியாதபடி அவருடைய சுவடு வரலாற்றில் பதிந்துள்ளமையினைக் கண்டுகொள்ளலாம் .

6.2.3 புதுவையில்

பாரதியின் பாடல்களில் , வேதாந்தப் பாடல்கள் , சக்திப்பாடல்கள் , பெண்விடுதலைப் பாடல்கள் , சுயசரிதை , வசனகவிதை ஆகியனவும் கண்ணன் பாட்டு , குயில்பாட்டு , பாஞ்சாலி சபதம் என்ற முப்பெரும்பாடல்களும் , பாரதி புதுவையில் இருக்கும்போது தான் பாடப்பெற்றன .

அரவிந்தர் , வ.ராமசாமி , வ.வே.சு.ஐயர் , சுரேந்திரநாத் ஆர்யா , பாரதிதாசன் , கனகலிங்கம் ஆகியவர்கள் புதுவையில் பாரதியோடு தொடர்புடையவராக இருந்தார்கள் .

படைப்பிலக்கியப் புதுமைகள்

பாரதியார் இன்றும் பேசப்பெறுவதற்குரிய நிலையில் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன .

அவற்றுள் ஒன்று அவரது எளிமையான நடை. பாரதிக்கு முன் ‘ பாட்டு இலக்கியம் ’ இல்லை .

செய்யுள் இலக்கியமே இருந்தது .

அந்தச் செய்யுளுக்கு உரை இருந்தால்தான் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது .

செய்யுட்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரைகள் எழுந்தன .

எவ்வளவுக் கெவ்வளவு எளிமையாக இல்லாமல் இருக்கிறதோ அவ்வளவுக் கவ்வளவு செய்யுள் இலக்கியம் மதிப்புடையதாகக் கருதப்பட்டது .

பாரதிக்கு இந்தக் கருத்து உடன்பாடாக இல்லை .

மக்கள் அனைவருக்கும் விளங்கும் எளிய தமிழில் பாட்டு இலக்கியப் படைப்பு இருக்க வேண்டுமென்று பாரதி கருதினார் .

பாரதியார் புதுவையில் அரவிந்தரிடம் ரிக் வேதப் பாடல்களை முறையாகக் கற்றுக் கொண்டார் .

அவற்றைத் தமிழில் மிக எளிமையாகப் பாட்டு வடிவத்தில் கொண்டு வந்தார் .

ரிஷிகள் : எங்கள் வேள்விக் கூட மீதில் ஏறுதே தீ !

தீ ! - இந் நேரம் பங்க முற்றே பேய்க ளோடப் பாயுதே !

தீ !

தீ ! - இந்நேரம்

அசுரர் : தோழரே , நம் ஆவி வேகச் சூழுதே தீ !

தீ ! - ஐயோ நாம் வாழ வந்த காடு வேக வந்ததே தீ !

தீ ! - அம்மாவோ !

( அக்னி ஸ்தோமம் , 1-2 )

மேற்குறிப்பிட்டவாறு அவர் எழுதினார் . பாரதியின் இந்த எளிய பாடல்களைக் குறித்துக் கூறுங்கால் ,

பாரதியாரை ஒரு மகாகவி ஆக்குவதற்கு மேற்கூறிய பாடல்களே போதும் .

ஆயினும் அவர் இம்மட்டோடு நின்றுவிடவில்லை , மக்களுக்கு நிரந்தரமான விடுதலையையும் , இன்பத்தையும் அளிக்க விரும்பித் தம் ஆத்மானுபவத்தையும் தீர்க்க தரிசனத்தையும் சக்திப் பாடல்களிலும் வேதாந்தப் பாடல்களிலும் மக்கள் பேசும் எளிய நடையில் விளக்கமாகப் பாடியிருக்கிறார் .

( புதுவையில் பாரதி , ப.கோதண்டராமன் பக். - 50 )

என்று கூறக் காணலாம் .

பாரதியின் புதுவை வாழ்க்கை , தமிழில் அவர் பல சோதனை முயற்சிகளை மேற்கொள்ளக் களம் அமைத்துத் தந்தது .

தமிழில் சுயசரிதை

நூலாசிரியர் வரலாறுகள் பல நமக்குக் கிடைப்பதில்லை .

தொல்காப்பியர் , திருவள்ளுவர் போன்றோரின் வரலாற்றுக் குறிப்புகள் நமக்குக் கிடைக்காமை பேரிழப்பேயாகும் .

அருமை மிக்க படைப்புகளைச் செய்வோர் தம் வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைப்பதில்லை .

இந்த வகையில் பாரதியும் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுமே தங்கள் வாழ்க்கைக் குறிப்பை ஓரளவு வெறும் பாட்டுவடிவில் அமைத்தவர்கள் .

‘ சுயசரிதை ’ என்ற இலக்கிய வகை பாட்டு வடிவில் இவர்களாலேயே தொடங்கி வைக்கப்பெற்றது .

பாரதியின் ‘ சுயசரிதை ’ அவரை இன்றும் வாழும் வரலாற்று மாமனிதராகக் காட்டுகின்றது .

திட்டமிட்ட செயல்முறைகளால் தமிழை வளர்க்க முனைவதையும் பாரதியாரின் சுயசரிதை காட்டுகிறது .

ஆங்கில ஆட்சி இந்தியாவை விட்டு நீங்கியது .

ஆனால் ஆங்கில வழிக் கல்வி இந்தியாவை விட்டு நீங்கியதா ?

நீங்குமா என்ற வினாவுக்கு உறுதியான விடையைத் தர இயலாது .

புதுவை நிகழ்ச்சிகள்

புதுவை வாழ்க்கையில் எண்ணற்ற நிகழ்ச்சிகள் அவரை நமக்கு நினைவூட்டுகின்றனவாக உள்ளன .

கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞருக்கு அவர் பூணூல் போட்டுவிட்டதும் , தம்போலா என்ற தோட்டி வீட்டில் போய் உட்கார்ந்து காற்று வாங்கியதும் , தேசமுத்து மாரியம்மன் கோயிலில் சென்று பாட்டிசைத்ததும் , வசன கவிதைகளுக்கு அடித்தளம் அமைத்ததும் , எளிய நிகழ்ச்சிகளல்ல .

வரலாற்றில் இவை பெரிய மாற்றங்களையும் திருப்பங்களையும் உண்டாக்கிவிட்டன .

6.2.4 அறைகூவல்கள்

பாரதியின் காலத்தில் அவர் கொண்ட குறிக்கோள்களுக்கும் நடத்திய வாழ்க்கை முறைக்கும் நிறைய அறைகூவல்கள் ( challenges ) இருந்தன .

தமிழ்க் கவிஞர்

தேசிய விடுதலைப் போராட்ட வீரர்

சாதி மதம் பாராதவர்

செல்வத்தையும் பணத்தையும் ஒரு பொருட்டாகக் கருதாதவர்

பெண்களின் உரிமையை வற்புறுத்தியவர்

கட்சி அமைப்புகளுக்குக் கட்டுப்படாதவர்

தமிழைப் பெரிதும் போற்றியவர்

துணிச்சலான பத்திரிகைக்காரர்

இத்தகைய பன்முகப் பண்பு நலம் கொண்ட ஒருவருக்கு அறைகூவல்கள் இருந்தமை வியப்பில்லை .

இந்த அறைகூவல்களுக்கு அவர் அஞ்சவில்லை ; இவற்றை எதிர் கொள்ள அந்தக் கவிஞன் யாருடைய உதவியையும் நாடியதில்லை .

அவர் வழிபாடு செய்த பராசக்தியிடம் கூட அவர் தம் ஆளுமை குன்றாத நிலையிலேயே வேண்டுதல் நிகழ்த்தினார் .

பராசக்தி !

இந்த உலகத்தின் ஆத்மா நீ !

உனக்கு அறிவில்லையா ?

உனக்குக் காது கேட்காதா ?

நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன் .

நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா ?

பராசக்தி - உன்னை நான் நம்புவதை முற்றிலும் விட்டு நிச்சயமாக நாஸ்திகனாய் விடுவேன் .

நீ என்னை அற்பத் தொல்லைகளுக்கு உட்படுத்திக் கொண்டே யிருந்தால் .

மஹாசக்தி - நீ இருப்பதை எவன் கண்டான் ?

உனக்கு அறிவுண்டென்பதை எவன் கண்டான் ?

இந்த உலகம் - சரி. சரி இப்போது உன்னை வைய மாட்டேன் .

என்னைக் காப்பாற்று .

உன்னைப் போற்றுகிறேன் .

( மகாகவி பாரதி வரலாறு , பக்.478-79 )

வாழ்க்கைச் சோதனைகளில் மனிதர்களுக்கு இத்தகைய தீரம் வேண்டும் .

அவருடைய அஞ்சாமை என்றும் அழியாதது ; எனவே பாரதியார் வாழ்கிறார் . 6.3 பாரதிக்குப் பின்

1921 செப்டம்பர் 12

பாரதியார் - தமிழை உலகமொழிகளிலேயே சிறந்ததாக்க முனைந்த மகாகவி , இந்தியா விடுதலை அடையு முன்பே " விடுதலை விடுதலை - ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே " என்று பாடிய விடுதலை வீரர் , பத்திரிகை உலகில் பல புதுமைகளைச் செய்த ஓர் இதழாசிரியர் திருவல்லிக்கேணியில் ஒரு வாடகை வீட்டில் அமரரானார் .

அவருடைய இறப்பு ஊர்வலத்தில் ஏறத்தாழ இருபது பேர் கலந்து கொண்டதாக நெல்லையப்பர் தெரிவிக்கிறார் .

அவருடைய இறப்பைக் குறித்துச் சுதேசமித்திரன் பத்திரிகை கீழ்க்காணுமாறு எழுதியது .

. பள்ளிக் கூடத்தை விட்டுக் கிளம்பியதும் , ஸ்ரீமான் ஜி , சுப்பிரமணிய ஐயரிடத்தில் மித்திரன் உதவி ஆசிரியராக அமர்ந்து , வேலை செய்து வரும் நாளில் , ‘ இந்தியா ’ என்ற வாரப் பத்திரிகை ஒன்றைத் தாமே நடத்தி வந்தார் .

அதன் மூலமாக ராஜாங்கத்தாருடைய கோபத்துக்கு ஆளாகி சுமார் 10 வருஷ காலம் , பிரஞ்சு இந்தியாவில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது .

பரபரப்பாக வேலை செய்யும் இயல்புடைய ஒருவர் சும்மா இருக்கும்படி நேர்ந்த காரணத்தால் , அவருடைய தேகம்மெலிந்து போய் , பழைய பாரதியின் சாயல்போல் இரண்டு வருஷங்களுக்கு முன் அவர் புதுச்சேரியிலிருந்து மீண்டு வந்தார் .

சிறிதுகாலம் தம்முடைய ஊராகிய கடையத்தில் இருந்து விட்டுத் தமது ஆசையைக் கவர்ந்த பத்திரிகை வேலைக்குத் திரும்பி வந்து மித்திரன் உதவி ஆசிரியர்களில் ஒருவராகி தேச ஊழியம் செய்து வரும் நாளில் திடீரென்று நம்மையெல்லாம் விட்டுமறைந்து போய்விட்டார் .

- சுதேச மித்திரன் 13.9.1921 பக்.1 .

( மகாகவி பாரதி வரலாறு , பக்.521 )

பாரதியின் மறைவுக்குப் பிறகு , நாடு , மொழி , சமூகம் ஆகிய மூன்றும் எவ்வாறு இருக்கின்றன என்பது ஆய்வுக்குரியது .

பாரதியின் மறைவுக்குப் பிறகு , நாடு , மொழி , சமூகம் ஆகிய மூன்றும் எவ்வாறு இருக்கின்றன என்பது பற்றிச் சிந்திக்கும் போது , பாரதியார் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது புலப்படும் .

6.3.1 நாடு

1921ஆம் ஆண்டிற்குப் பிறகு நாட்டில் காங்கிரஸ் இயக்கம் விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது .

அண்ணல் காந்தியடிகளின் தலைமையைக் கருத்து வேறுபாடின்றித் தேசிய இயக்கத்தினர் ஏற்றுக் கொண்டனர் .

நாட்டின் விடுதலைக்கு அகிம்சை வழியிலான போராட்டமே தகுதியானது என்ற கருத்தைப் பெரும்பான்மை மக்கள் ஏற்றனர் .

1928-இல் கல்கத்தாவில் நிகழ்ந்த காங்கிரஸ் மாநாட்டில் , இந்தியாவிற்கு உரிமை வழங்க வெள்ளை அரசுக்கு ஓராண்டுக் கால வரையறை அளித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

1929-இல் லாகூரில் நிகழ்ந்த மாநாட்டில் வெள்ளையர் அரசை எதிர்த்துச் சத்தியாக்கிரகப் போர் தொடங்க முடிவு செய்யப்பட்டது .

1935-இல் மாநில சுயாட்சி உரிமை வழங்கப்பெற்றது .

1947 , ஆகஸ்ட் 15-இல் இந்தியா விடுதலை பெற்றது ;

நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம் - இது

நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் - இந்தப்

பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம் - பரி

பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம் .

( சுதந்திரப்பள்ளு - 5 )

[ பரிபூரணன் = முழுமுதற் கடவுள் ]

என்ற பாரதியின் வாக்கு மெய்யாயிற்று .

விடுதலை அடைந்து , குடியரசு அமைத்து விடுதலைப் பொன்விழாக் கொண்டாடிப் புதிய நூற்றாண்டிலும் இந்தியா காலடி எடுத்து வைத்து விட்டது .

ஆனால் நாட்டின் சிக்கல்கள் தீர்ந்து விட்டனவா ?

பொருளாதார நலிவு - சமத்துவமின்மை

சாதிச் சமூகப் பிரிவு - தீண்டாமை

அரசியல்வாதிகளின் தன்னலம் - ஊழல்

ஒருமைப்பாட்டில் தளர்ச்சி - ஒற்றுமைக் குலைவு

தாய்மொழி வளர்ச்சியின்மை - பிறமொழி மோகம்

பெண்களுக்கு உரிமையின்மை - பெண்களைக் கொடுமை செய்தல்

மத வேறுபாடும் போரும் - நல்லிணக்கம் இன்மை

இப்படிப்பட்ட தீமைகள் முற்றிலும் தீர்ந்தபாடில்லை .

எண்ணிலா நோயுடையார் - இவர்

எழுந்து நடப்பதற்கு வலிமையிலார்

கண்ணிலாக் குழந்தைகள் போல் - பிறர்

காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார் ;

நண்ணிய பெருங்கலைகள் - பத்து

நாலாயிரங் கோடி நயந்து நின்ற

புண்ணிய நாட்டினிலே - இவர்

பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்

( பாரத ஜனங்களின் தற்கால நிலைமை - 7 )

( எண்ணிலா = எண்ண முடியாத , நண்ணிய = அடைந்த , நயந்து = விரும்பி , பொறி = அறிவு )

என்று அன்று பாரதி கூறிய நிலை இன்றைக்கும் பொருந்துகிறது .

நாட்டின் இந்த நிலையை நீள நினைந்து புதிய உலகம் காணப் பாரதியே பயன்படுவார் . 6.3.2 மொழி