172

பாரதிக்குப்பின் கவிதை , இலக்கியம் , பத்திரிகை ஆகிய துறைகளில் பல வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன .

இவற்றுக்கெல்லாம் மூல காரணராக அமைந்தவர் பாரதியே .

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை உலகின் விடிவெள்ளி பாரதியே .

பற்பல சாதனைகளை அவர் புரிந்திருக்கிறார் .

அவர் மொழியிலேயே கூறினால் ,

சாலமிகப் பெரிய சாதனை காண் இஃதெல்லாம் !

தால மிசை நின்றன் சமர்த்துரைக்க வல்லார் யார் ?

ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவிலுமே

கானாமுதம் படைத்த காட்சிமிக விந்தையடா !

காட்டு நெடுவானம் கடலெல்லாம் விந்தையெனில் ,

பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா !

( குயில் பாட்டு , குயிலும்மாடும் , 91-96 )

என்றுதான் கூற வேண்டும் .

பாரதிதாசன் , பாரதியின் பெருமையெல்லாம் அறிந்தவர் .

பாரதிதாசனின் பாடுபொருள் மாற்றம் பாரதியால் விளைந்தது .

தமிழை வீறு கொண்டு எழச் செய்த பாரதியின் கவித்துவம் , இந்த நூற்றாண்டின் கவிதைப் பாதையையே திருப்பிவிட்டது .

தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்

இமை திறவாமல் இருந்த நிலையில்

தமிழகம் தமிழுக்குத் தகும் உயர் வளிக்கும்

தலைவனை எண்ணித் தவம் கிடக்கையில்

இலகு பாரதிப்புலவன் தோன்றினான்

( பாரதிதாசன் கவிதைகள் , தொகுதி 2 - பாரதி )

( நிகர் = சமம் )

1 நடையில் எளிமை

2 சமூக உணர்வே பாடுபொருள்

3 பெண்களின் விடுதலை ,

4 புதிய புதிய வடிவங்கள் ,

5. புராணப் பழமைகளின் உட்பொருள் அறிந்து அவற்றைப் புதுக்கருத்துகளோடு பரிணாமம் பெற எண்ணிப் படைத்தல் .

6 தெய்வத்தைப் பாடுவதிலும் மக்கள் சிந்தனையே அடிப்படை

7. புதுமையும் புரட்சியும் படைக்கும் கருவியாகக் கவிதை உருக்கொள்ளல் .

8. உலகளாவிய நோக்கு என்ற கூறுகள்

இன்றைய கவிதைகளில் இடம் பெறப் பாரதியே காரணர் .

பாரதி அவற்றின் வழி வாழ்கிறார் .

வால்ட்விட்மன் படைத்த புதுக்கவிதையின் பொருளைப் பெரிதும் பாரதி போற்றினார் .

விட்மன் , ஏழை பணக்காரரற்ற , உயர்வு தாழ்வற்ற ஆண் பெண் வேறுபாடு அற்ற , அரசர் குடிமக்கள் வேறுபாடற்ற ஒரு நகரத்தைத் தம் கவிதைகளில் படைக்கிறார் .

" மக்களின் முகத்தில் நான் கடவுளைக் காண்கிறேன் " என்கிறார் .

விட்மன் போலவே பாரதியும் மக்கள் கவிஞனாக மலர்ந்து மணம் பரப்பினார் .

இந்த நூற்றாண்டைப் ‘ பாரதியுகம் ’ என்று அடையாளம் காணும் வழக்கு நிலைபெற்றுவிட்டது .

பாரதியின் கவிதைப் பெருவெள்ளம் , அந்தாதிக் கலம்பகங்கள் என்ற இலக்கியங்களைப் புதையுண்ணச் செய்து விட்டது .

செல்வர்களின் தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் பாட்டுப்பாடும் வழக்கத்தை நீக்கிவிட்டது .

சுவை புதிது , பொருள் புதிது , வளம் புதிது ,

சொற்புதிது , சோதி மிக்க

நவகவிதை எந்நாளும் அழியாத

மாகவிதை .

( வெங்கடேசு ரெட்டப்ப பூபதி , சீட்டுக்கவி - 1 , 3 )

என்றவாறு கவிதையின் புதிய தகுதிகள் இன்று பேசப் பெறுகின்றன .

இதற்கெல்லாம் காரணராய் இருந்தவர் பாரதி , இன்று தோன்றும் எழுச்சிமிக்க புதுயுகப் பாடல்களில் பாரதியின் முகம் தெரிகிறது ; அகம் தெரிகிறது ; குரல் கூடக் கேட்கிறது .

ஆம் !

பாரதியார் வாழ்கிறார் . 6.3.3 சமூகம்

பாரதிக்குப் பின் சமூக நிலையில் பலமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன .

சமத்துவமான நிலைநோக்கிச் சமூகம் செல்வதற்கு அரசால் ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன .

பட்டினிச்சாவுகள் குறைந்திருக்கின்றன .

தனி மனிதர் வருவாய் விழுக்காடு உயர்ந்துள்ளது ; கல்வி பரவலாக்கப்பட்டுள்ளது ; பெண்கள் உரிமை பெற்று வருகின்றனர் .

நாடு தொழில் மயமாகிக் கொண்டிருக்கிறது .

அறிவியல் கருவிகளின் பயன்பாடு மிகுந்துள்ளது .

பொருள்களை வாங்கும் சக்தி கூடியுள்ளது .

புற நாகரிகம் செம்மையாகியுள்ளது .

எனினும் குறைகள் இல்லாமல் இல்லை .

இன்று கோடிக் கணக்கில் செல்வம் சேர்த்தவர் எண்ணிக்கை பெருகியுள்ளது .

ஏழை பணக்காரர் இடையே இடைவெளி பெருகியுள்ளது .

" எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு " என்று பாரதி கூறியது உண்மையாகவில்லை .

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்

எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர்

( பாரத சமுதாயம் , சரணம் .

4 )

என்று பாரதி கூறிய மக்களாட்சித் தத்துவம் அடையப்பெறவில்லை .

சாதிச்சண்டைகள் , மதக் கலவரங்கள் , இனப்பூசல்கள் , பெண்களைச் சித்திரவதை செய்தல் , பெண் குழந்தைகளைக் கருவில் அழித்தல் , சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்போரை உயிருடன் கொளுத்துதல் , கிராமங்களைச் சூறையாடுதல் , சாதியடிப்படையிலான தேர்தலும் அரசியலும் , இன்னும் எத்தனை எத்தனையோ தீமைகளும் பெருகிவிட்டன .

இச்சூழலில் பாரத சமூகம் எப்படி இருக்க வேண்டுமென்பது குறித்துப் பாரதி தாம் பாடிய பல பாடல்களில் தெளிவுபடுத்தியுள்ளார் .

அவை இன்றும் பொருந்துகின்றன .

எனவே இன்றும் பாரதி வாழ்கிறார் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. வித்தகர்க்கு உரிய இலக்கணம் யாது ?

[ விடை ]

2. மனிதரின் புகழ் உடம்பு குறித்துத் திருவள்ளுவர் கூறுவது யாது ?

[ விடை ]

3. பாரதி வெளியிட்ட முதல் நூல் எது ?

[ விடை ]

4. விபின் சந்திர பாலர் விடுதலை பெற்ற நாளைக் கொண்டாடும் போது பாரதியார் கூறியது யாது ?

[ விடை ]

5. தேசியக் கல்வி எனப் பாரதியார் எதனைக் குறிக்கின்றார் ?

[ விடை ]

6. சமூகத் தீமைகளாகிய நோய்களைத் தீர்க்கும் மருந்தாக எவற்றைக் கூறுகிறார் ?

6.4 பாரதி தீர்வு தருகிறார்

புகழொடு தோன்றிய கவிஞர் பாரதி .

பராசக்திக்கே புதிய பரிணாமத்தையும் , ( ஒன்று மற்றொன்றாக மாறுதலையும் ) புதிய பணிகளையும் படைத்த பாரதி , பாரத நாட்டில் தோன்றிய - தோன்றும் சிக்கல்களுக்குத் தீர்வுகளைக் கூறாமலா விடுவார் ?

அதனால் , அவர் இன்றும் நினைக்கப்பெறுகிறார் ; மக்கள் நினைவில் மங்காமல் வாழ்கிறார் .

பொருளாதார நிலையில் தோன்றிய சிக்கல்கள்

தாய்மொழி வளர்ச்சியில் தோன்றிய சிக்கல்கள்

சமூக அமைப்பில் தோன்றிய சிக்கல்கள்

என்ற மூன்று வகைச் சிக்கல்களையும் அவர் ஆழமாக நினைந்து தந்த தீர்வுகள் கருதற்குரியன .

6.4.1 எல்லாரும் இந்நாட்டு மன்னர்

நம் குடியரசானது , எல்லா மனிதர்களையும் ஒரு நிலையில் வைத்துப் பார்க்க வேண்டும் ; எல்லார்க்கும் ஒத்த உரிமையும் , ஒத்த உடைமையும் நல்கும் அமைப்பாக அது விளங்க வேண்டும் .

எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்பது குடியரசின் கோட்பாடு .

அது நன்கு செயல்பட என்ன செய்ய வேண்டும் ?

முதலாவது சிலருக்குச் சோறு மிதமிஞ்சி இருக்க , பலர் தின்னச் சோறில்லாமல் மடியும் கொடுமையைத் தீர்த்து விட வேண்டும் .

இது இலக்கம் ஒன்று . பூமியின் மீதுள்ள நன்செய் , புன்செய் , தோப்பு , துரவு , சுரங்கம் , நதி , அருவி , குப்பை , செத்தை , தரை - கடவுளுடைய சொத்தில் நாம் வேலி கட்டக் கூடிய பாகத்தை யெல்லாம் சிலர் தங்களுக்குச் சொந்தமென்று வேலி கட்டிக் கொண்டனர் .

பலருக்கு ஆகாசமே உடைமை .

வாயு ஆகாரம் .

இதற்கு மருந்து என்னவென்றால் , எல்லோரும் சமானம் .

அண்ணன் தம்பிபோல என்ற புத்தி உண்டாய் ஏழைகள் வயிறு பசிக்காமல் செல்வர்கள் காப்பாற்ற வேண்டும் .

அது முடியாவிட்டால் , ஐரோப்பாவில் ’சோஷலிஸ்ட் ’ கட்சியார் சொல்வது போல் , நிலத்தை சகலருக்கும் பொதுவென்று ராஜ்யவிதி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் .

( பாரதியார் கட்டுரைகள் - ஜன வகுப்பு , பக் .59 )

இந்த அருமையான தீர்வைப் பாரதியார் அளித்துள்ளார் .

செல்வம் , அதிகாரம் ஆகியன தனி உடைமையாய் ஆகிவிடக் கூடாது .

பாரதியின் இந்தத் தீர்வு இன்று பலராலும் பேசப்படுகின்றது ; தேர்தல் அறிக்கைகளில் இடம் பெறுகின்றது .

ஆனால் நடைமுறைப் படுத்தப்படவில்லை .

சமஉடைமைச் சமுதாயம் நீண்ட நாளாக நம் கனவு .

அது நனவாகும் நாளில் பாரதி நம்மோடு மேலும் நெருக்கமாக வந்து புன்னகைப்பார் .

6.4.2 சென்றிடுவீர் எட்டுத் திக்கும்

தமிழ்மொழி யாமறிந்த மொழிகளில் இனிமையானது என்றார் பாரதியார் .

ஆனால் தமிழர்களால் அது பேணி வளர்க்கப்படவில்லை .

அதிலே தேக்கநிலை ஏற்பட்டு விட்டது .

புதுமைப் பூக்கள் , காலமாறுதலுக்கேற்ற புதிய மணங்கள் தமிழில் தோன்றாத நிலை உண்டாகியது .

தமிழை வளர்க்க என்ன செய்வது ?

பாரதி தீர்வு தருகிறார் .

தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல்

உலகமெலாம் தேமதுரத் தமிழ் பரப்புதல்

பிறநாட்டுச் சாத்திரங்களை மொழி பெயர்த்தல்

புதுநூல்கள் பற்பல தமிழில் இயற்றுதல்

வெள்ளம் போல் கலைப் பெருக்கும் கவிப்பெருக்கும் மிகச் செய்தல் .

இந்த ஐந்து பணிகளையும் பாரதியே செய்து காட்டினார் .

இன்று தமிழ் நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ் இல்லையே என்கிறார் பாரதிதாசன் .

நம் கல்வி மொழியாக ஆங்கிலம் ; நிர்வாக மொழியாக ஆங்கிலம் ; நம்மை ஆளும் மொழியாக இந்தி ; வழிபாட்டு மொழியாகச் சமஸ்கிருதம் ; இசை மொழியாகத் தெலுங்கு என்ற நிலை மேலும் மேலும் பரவலாகி வருகிறது .

தமிழ் வளர்ச்சிக்கான செயல் முறைகளும் தொலைநோக்கும் நமக்கு வேண்டும் .

நிறைய மொழிகளைக் கற்று , அவற்றிலுள்ளவற்றைக் கொண்டு தமிழை மேலும் செழுமைப்படுத்த வேண்டும் .

பாரதியார் நமக்கு இவற்றை நாள்தோறும் வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார் .

6.4.3 சாதிகள் இல்லையடி பாப்பா

இந்தியா சாதியின் அடிப்படையிலான சமூக அமைப்பைக் கொண்டது .

எனவே சாதியின் பெயரால் இன்றளவும் பல சண்டைகள் , போராட்டங்கள் நடைபெறுகின்றன .

இதை உணர்ந்த பாரதி ,

சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

( பாப்பா பாட்டு , 15 )

என்றார் .

சாதி உணர்வு என்பது அநாகரிகத்தின் அடையாளம் .

ஆனால் அதை மனிதனிடமிருந்து மாற்ற முடியவில்லை .

சாதிக் கலவரங்களால் உயிர் உடைமை இழப்புகள் நிகழ்ந்த வண்ணமாகவே இருக்கின்றன .

இதற்கு என்ன செய்வது ?

மதம் மாறலாம் ; சாதியை மாற்றிக் கொள்ள முடியாது ; முடியவே முடியாதா ?

இராமானுஜர் , இறையடியவர் எல்லோரும் சமம் என்றும் , அனைவரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்றும் கூறினார் .

அவ்வாறே செய்தும் காட்டினார் .

பாரதியும் அதைச் செய்தார் .

கனகலிங்கத்திற்கும் அவருடைய நண்பர்க்கும் பூணூல் மாட்டி " இன்று முதல் நீர் பிராமணர் " என்றார் .

இஃது என்ன சாதி மாற்றம் ?

இது மாற்றமில்லை . சாதிகள் இல்லை என்ற அறிவிப்பு .

நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் - இந்த

நாட்டினில் இல்லை ; குணம் நல்லதாயின்

எந்தக் குலத்தினரேனும் - உணர்வு

இன்பம் அடைதல் எளிதெனக் கண்டோம் .

( உயிர் பெற்ற தமிழர் பாட்டு - ஜாதி 5 )

ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உணர்வு வேண்டும் .

சீர்திருத்தம் பேசும் - விரும்பும் - கடைப்பிடிக்கும் எந்தச் சமூகத்திலும் பாரதி இருப்பார் .

6.5. பாரதி வாழ்கிறார்

மனிதரில் மூவகையினர் உள்ளனர் .

1. வாழும் போதே இறந்து போனவர்கள் .

2. வாழ்வு முடிந்து இறந்து போனவர்கள் 3. வாழ்க்கை முடிந்தும் இறவாத நிலையினர் .

பாரதி மூன்றாம் வகைக்குரியவர் .

நம் நாட்டையும் மொழியையும் சமூகத்தையும் நினைக்கும் போதெல்லாம் அவர் நம் முன் வருகிறார் .

இராமனும் கண்ணனும் , இயேசுவும் புத்தரும் , சங்கரரும் இராமானுஜரும் செத்துப் போய்விட்டார்கள் ; நான் சாகாதிருப்பேன் என்று வைர நெஞ்சுறுதியோடு முழங்கியவர் .

அவர் எழுதாமலும் , பேசாமலும் போயிருந்தால் , ‘ வாழ்கிறார் ’ என்று கூற முடியாது .

அத்வைத நிலைகண்டால் மரண முண்டோ ?

( பாரதி அறுபத்தாறு , மரணத்தை வெல்லும் வழி , - 4 )

என்பது பாரதி வாக்கு .

தம்முடைய இலட்சியங்களாலும் , தொண்டாலும் , வாழ்கின்ற மாமனிதர் பாரதியார் .

அவரை நினைவு கூரும் வண்ணம் நாம் இருப்பதற்கு அவர் வாழ்ந்த பெருவாழ்வே காரணமாகும் .

6.5.1 எதிர்கால நோய்கள்

இந்தியாவை இன்று வந்து சூழ்ந்துள்ள எத்தனையோ சமூக நோய்கள் அகற்றப்படாமலிருக்கும் போது எதிர்காலத்திலும் பல புதிய நோய்கள் வந்து தாக்கும் அச்ச நிலை உள்ளது .

இந்தியாவின் அகத்திலும் புறத்திலும் பலப்பல பகைகள் பெருகியுள்ளன .

புறப்பகை அண்டை நாட்டினால் தோன்றி வளர்ந்து கொண்டே வருகிறது .

இதனைத் தடுக்க என்ன செய்வது ?

அகத்தே பகையின்றி ஒருமைப்பாடு குலையாமல் இருப்பதே புறத்தே கொடும் பகை செயல்படாதவாறு தடுக்கும் .

அகத்தே ஆயிரம் ஆயிரமாய் வேறுபாடுகள் மலிந்து கிடக்கின்றன .

பாரதிதாசன் கூறுவது போல் ,

வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள் என்றால்

சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும் .

( சஞ்சீவி பர்வதத்தின் சாரல் , 144-145 )

( பேதம் = வேறுபாடு )

என்ற நிலை பெரும் அறைகூவலாகி இந்திய ஒருமைப்பாட்டை அவ்வப்போது அச்சுறுத்தி வருகிறது .

வெடிகுண்டு வீச்சுகள் , தீவைப்புகள் , இயந்திரத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுடுதல் நிகழ்வுகள் , வானூர்திக் கடத்தல்கள் என்பன அடிக்கடி நிகழ்கின்றன .

இவை எதிர்காலத்தில் மேலும் தீவிரப்படலாம் .

இவற்றைத் தடுப்பது எங்ஙனம் ?

சாதிபேதங்கள் கடந்த காலத்திலேயே உச்ச நிலைக்குப் போய்விட்டன .

சாதி ஒழிப்புச் சீர்திருத்தங்கள் இன்று புகைந்து போய்விட்டன .

கலப்பு மணங்கள் ஒரு பக்கம் பெருகினாலும் , சாதிக் கட்டுப்பாடுகள் , சாதியிலிருந்து விலக்கங்கள் ஆகியனவும் பெருகி வருகின்றன .

இவற்றைத் தடுப்பது எப்படி ?

இன்று பெண் படிக்கிறாள் ; பணி செய்கிறாள் ; அலுவலகத்தை ஆளுகிறாள் ; நாட்டையே ஆளும் திறன் பெற்று உயர்ந்திருக்கவும் காணுகிறோம் .

ஆனாலும் பெண்ணினம் விடுதலையும் உரிமையும் பெற்று விட்டதாகக் கூறமுடியவில்லை .

பெண்ணின் பணிச்சுமை கூடியிருக்கிறது .

அலுவலகத்தில் பணி செய்பவள் அடுப்பங்கரையிலும் பணி செய்கிறாள் .

இதனைப் போக்குவது எப்படி ?

சமூக அமைப்பில் வர வர அறம் தேய்ந்து வருகிறது .

அறத்தின் மீது கொண்ட நம்பிக்கை குறைந்து வருகிறது .

இவற்றைச் சரி செய்வது எவ்வாறு ?

மேலே கூறியவற்றுக்கெல்லாம் பாரதி மருந்தும் மந்திரமும் வைத்திருக்கிறார் . அவர் சிறந்த நாட்டு மருத்துவர் ; நாட்டுப் பற்று மிக்க மருத்துவர் .