173

6.5.2 மருந்தும் மந்திரமும்

பாரம்பரியப் பெருமையும் நாட்டுப்பற்றும்

எதிர்காலத்தில் அச்சுறுத்தும் பலநோய்களையும் எதிர்கொள்ள வேண்டுமெனில் நாட்டுப்பற்று என்னும் மருந்தும் , வந்தே மாதரம் என்ற மருந்தும் வேண்டுமெனப் பாரதி அறிவுறுத்துகின்றார் .

ஒருவரது பாரம்பரியத்தைப் பற்றிய அறிவும் பெருமையும் வேண்டும் என்கிறார் .

மாரத வீரர் மலிந்த நன்னாடு

மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன்னாடு

பூரண ஞானம் பொலிந்த நன்னாடு

புத்தர் பிரானருள் பொங்கிய நாடு

பாரத நாடு பழம் பெரும் நாடே

பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே

( எங்கள் நாடு , 2 )

( மாரத வீரர் = பெரிய இரத வீரர் )

இந்த உணர்வைக் காப்பாற்றும் கல்வியும் , ஞானமும் வரும் தலைமுறையினர்க்கு ஊட்டப் பெற வேண்டும் .

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்

அந்நியர் வந்து புகல் என்ன நீதி ?

( வந்தே மாதரம் , 3 )

என்ற வலிமைமிக்க ஒருமைப்பாடு வேண்டும் .

வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமை வேண்டும் .

இந்து , முசுலீம் , கிறித்தவர் , சீக்கியர் என்ற மத வேறுபாடுகள் இந்தியர் என்ற ஒருமையில் கரைய வேண்டும் .

இந்திய தேசியக் கொடி ஏற்றப்படுகிறது .

கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் - எங்கும்

காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்

நம்பற் குரியர் அவ்வீரர் - தங்கள்

நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர்

( மாதாவின் துவஜம் , 4 )

தமிழர் , கேரளர் , தெலுங்கர் , துளுவர் , கன்னடர் , ஒட்டியர் , மராட்டர் , இந்துஸ்தானத்தர் , ராஜபுத்ரர் , பாஞ்சாலர் ஆகிய எல்லாரும் சேர்ந்து கொடியினைக் காக்கின்றனர் .

அரசாங்கம் , குடிமக்கள் எல்லாருடைய நலன்களையும் சமமாய் மதித்து காக்கும் போது , கொடிக்கு மரியாதை தோன்றுகிறது .

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லாமல் பட்டினி கிடக்க விடாத சமூகத்தில் நாட்டுப்பற்று தானே வேர்விடும் .

சாதி ஒழிப்பு

சாதியைக் கொண்டு மனிதனை மதிப்பிடாமல் குணங்களைக் கொண்டு மதிப்பிடும் நிலையைப் பாரதி அறிவுறுத்துகின்றார் .

‘ வேதியராயினும் வேறு குலத்தவராயினும் ஒன்றே ’ என்று அவர் பாடினார் .

அவர் சாதியிலிருந்து விலக்கப்பட்டதற்குச் சிறிதும் வருத்தப்படவில்லை .

எல்லோருக்கும் பூணூல் போட்டுப் பிராமணராக்கிவிட வேண்டுமென்று அவர் கருதுகின்றார் .

அவருடைய சீர்திருத்தத்தால் இன்று பிராமணீயம் வலிமை குன்றிவிட்டது .

சாதி ஒழிப்புச் சிந்தனையால் , முற்போக்கு எண்ணம் கொண்டவர்களிடையே பாரதியார் இன்றும் வாழ்கிறார் .

பெண் உரிமை

ஸ்திரீகள் தமக்கிஷ்டமான பேரை விவாகம் செய்து கொள்ளலாம் விவாகம் செய்து கொண்ட புருஷனுக்கு ஸ்திரீ அடிமையில்லை உயிர்த்துணை : வாழ்க்கைக்கு ஊன்று கோல் : ஜீவனிலே ஒரு பகுதி

( தமிழ் நாட்டின் விழிப்பு , பாரதியார் கட்டுரைகள் பக்.261 )

என்று கூறிப் பெண்கள் ‘ சாத்விகப் புரட்சி ’ யால் தம் உரிமையை நிலை நாட்டிக் கொள்ள வேண்டும் என்கிறார் .

கைம்பெண்களின் மறுமணத்தைப் போற்றுகிறார் .

பெண்கள் பல தீமைகளிலிருந்தும் விடுபடுவதற்குக் கல்வி ஒன்றே வழிவகுக்கும் என்ற அவரின் கூற்று உண்மையாகி விட்டது .

இன்று ஆண்களை விட எண்ணிக்கையில் மிகுதியாகப் பெண்கள் படிக்கிறார்கள் ; தங்கள் விருப்பத்திற்கும் தகுதிக்கும் ஏற்ப மணமகனைத் தேர்ந்து கொள்கின்றனர் .

இது பாரதி காண விழைந்த கனவு .

அந்த கனவு மெய்ப்பிக்கப்பட்டு விட்டது .

குழந்தைக் கல்வி

சமூக அமைப்பில் ஒவ்வோர் அங்கத்தையும் வளர்ந்தபின் திருத்துவது இயலாது .

குழந்தை நிலையிலேயே கோணல் வளர்ச்சி இல்லாதவாறு ஒழுங்குபடுத்த வேண்டும் .

அறத்தில் நம்பிக்கை , ஒழுக்கத்தில் உறுதி , நன்னெறிகள் ஆகியவற்றை இளம் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும் .

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும் புறஞ் சொல்ல லாகாது பாப்பா

தேம்பி அழும் குழந்தை நொண்டி - நீ

திடம் கொண்டு போராடு பாப்பா

( பாப்பா பாட்டு , 7 , 10 )

என்றவாறு குழந்தைகளுக்குக் கற்பிக்கும் நெறி காட்டுகின்றார் பாரதி .

எதிர்காலச் சமூக நலிவுகளுக்குப் பாரதியாரின் சொற்கள் மருந்தென்று கூறத்தக்கன ; மந்திரமாகக் கூறித் தீமை அகற்றிக் கொள்ளத் தக்கன .

6.5.3 சாகாததோர் சரித்திரம்

இது , என்றும் அழியாத ஒரு வரலாறு கொண்டவர் பாரதி என்பதைக் குறிக்கும் .

‘ அச்சமில்லை அச்சமில்லை ’

ஒரு கூட்டம் சோர்ந்து தளர்ந்து இருக்கிறது .

என்ன நடக்குமோ என்று அச்சம் கொண்டிருக்கிறது .

பணம் , அதிகாரம் , மேல்சாதி போன்ற ஆதிக்க சக்திகளை எதிர்த்து ஆயிரம் பேராக இருந்தாலும் எதிர்த்துப் போராட முடியுமா என்று அவர்கள் கருதுகின்றனர் .

அவர்கள் குடிசைகள் எரிக்கப்பட்டு விட்டன .

அவர்களின் உறவினர் நெருப்பில் வெந்து மடிந்து விட்டனர் .

அவர்கள் அன்றாடம் உழைத்த உழைப்பில் கஞ்சி குடிப்பவர்கள் .

அவர்கள் ஒன்று திரண்டு அடுத்து என் செய்வது எனத் தேம்பித் திகைத்து நிற்கையில் ஓர் இளைஞன் அவர்களின் முன்னால் நின்று ,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே !

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே !

( அச்சமில்லை , 2 )

என்று பாடினான் ; கூட்டத்தினர் ஆன்ம பலம் பெற்றனர் .

ஒன்று கூடி ஆதிக்க சக்திகளை எதிர்த்துச் சத்தியாக்கிரப் போர் தொடுக்க முடிவெடுத்தனர் .

பாரதியே அவர்களின் போர்க்குரல் ; இன்றல்ல என்றைக்கும் .

சமய ஒருமைப்பாடு

ஒரு வழிபாட்டுக் கூட்டம் கூடுகிறது .

இந்து முசுலீம் கிறித்துவர் எனப் பல சமயத்தினரும் கூடினர் .

எந்தச் சமயப் பாடலைப் பாடுவது ?

ஒரு நொடி தான் தயக்கம் .

பின்பு சிலர் முழங்கினார் :

ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து

மோனத் திருக்கும் முழுவெண் மேனியான் ;

கருநிறம் கொண்டு பாற்கடல் மிசைக் கிடப்போன் ;

மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்

ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்

உருவகத் தாலே உணர்ந்துணராது

பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்

ஒன்றே ; அதனியல் ஒளியுறும் அறிவாம்

( புதிய ஆத்திசூடி , காப்பு 1-8 )

இது எல்லார்க்கும் நிறைவு .

இந்தச் சமரச ஞானப் பாடலில் பாரதி வாழ்கிறார் .

பெண் உயர்வு

காலைச் செய்தித்தாளில் பரபரப்பு .

பெண் உயிரோடு எரிக்கப்பட்டாள் ; வரதட்சணைக் கொடுமை காரணமாம் .

விசாரணை நடக்கிறதாம் .

கொன்ற கணவன் செல்வாக்கு மிக்கவனாம் ; எப்படியும் வெளி வந்து விடுவான் என்று ஊர் பேசிற்று .

பெண்கள் திரண்டனர் ; கூட்டம் கூட்டினர் என்ன பேசுவது ?

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் ;

எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண்

இளைப்பில்லை காணென்று கும்மியடி வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்

வேண்டி வந்தோமென்று கும்மியடி !

சாதம் படைக்கவும் செய்திடுவோம் ; தெய்வச்

சாதி படைக்கவும் செய்திடுவோம் .

( பெண்கள் விடுதலைக்கும்மி , 6,7 )

எல்லோரும் ஒன்றிணைந்து பாடுகின்றனர் .

பாரதி , வானிலிருந்து தம் மீசையை முறுக்கி கொள்கிறார் .

இவைபோல எத்தனையோ !

கலப்புத் திருமணம் ; ஆலைகளின் முழக்கம் ; கல்விக் கூடங்களின் அணிவகுப்பு ; ஆயுதங்களும் காகிதங்களும் முழுவீச்சில் உற்பத்தி ; மாநிலங்களிடையே வணிகப் பரிவர்த்தனை ( பண்டமாற்று ) உழவுக்கும் தொழிலுக்கும் அரசு ஆதரவு .

இவை , எல்லாவற்றிலும் பாரதியின் முகம் பளிச்சென்று தெரிகிறது .

புரட்சி , புதுமை , பெருமை

மாணவர்களுக்குக் குறுவினாப் போட்டி நிகழ்கிறது .

ஆசிரியர் தொடர்ந்து வினாக்களை அடுக்கிக் கொண்டே போகிறார் .

1. பத்திரிகையில் முதன்முதல் கார்ட்டூன் என்ற கருத்துப்படம் வெளியிட்டவர் யார் ?

2. வாழ்க தமிழ் என்று முதன்முதல் கவிதையில் இசைத்தவர் யார் ?

3. தாழ்த்தப் பட்டவர்களுக்குப் பூணூல் அணிவித்து விட்டுத் தாம் பூணூல் அணியாத புரட்சிக்காரர் யார் ?

4. வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கப்பலோட்டிய தீரத்தைக் கவிதையில் பாடியவர் யார் ?

5. தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களை ‘ வறுமைக்கு அஞ்சாதீர்கள் ’ என்று தேற்றிக் கவிதை இசைத்தவர் யார் ?

6. மகாபாரதத்தில் தருமன் சூதாடியமை க ண்டு ‘ சீச்சீ ’ என்று இகழ்ந்து பாடிய பெருமைக்குரியவர் யார் ?

7. ‘ சுதந்திர தேவி ’ என்ற புதிய சக்தி வழிபாட்டைத் தொடங்கியவர் யார் ?

8. கண்ணனைச் சேவகனாகவும் படைத்து மிக நெருக்கமாக உரிமை கொண்டாடிப் பக்தி இலக்கியத்தில் புதிய பரிணாமம் அமைத்த புதுமைக்காரர் யார் ?

9. அக்கினிக் குஞ்சு , நெருப்புச்சுவை , தந்தையர் நாடு , என்ற புதிய சொல்லாட்சிகளைப் படைத்தவர் யார் ?

10. இந்திய தேசிய விடுதலைப் போரில் தனி மனிதனாக இருந்து பல போராட்டங்களை நடத்திய வீரமிக்க கவிஞர் யார் ?

எல்லாவற்றுக்கும் ஒரே விடைதான் என்று கூறி அவ்விடை ‘ பாரதி ’ என்றனர் .

ஆம் பாரதி வாழ்கிறார் ; என்றும் வாழ்வார் .

6.6 தொகுப்புரை

பாரதியார் முப்பத்தொன்பது ஆண்டுகளே வாழ்ந்தவர் ; ஆனால் தம் பலப்பல சாதனைகளால் , எந்தக் காலத்து மனிதனாலும் மறக்க முடியாதவாறு வரலாற்றில் தடம் பதித்து விட்டார் .

இந்திய விடுதலை வரலாறு எழுதுவோர் , தமிழ்க் கவிதை வரலாறு அமைப்போர் , யாப்பிலக்கண வளர்ச்சி குறிப்போர் , காப்பிய வார்ப்புப் பற்றி எழுதுவோர் , பத்திரிகைப் புரட்சி பற்றி எண்ணுவோர் , பெண்ணுலக மறுமலர்ச்சி வேண்டும் என்போர் , சமூகச்சீர்திருத்தம் பற்றித் திட்டமிடுவோர் யாராயினும் பாரதியைத் தொடாமல் எழுத முடியாது .

பாரதி என்றும் இறவாமல் வாழும் மனிதர்களில் ஒருவர் .

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1. நம் குடியரசு எப்படியிருக்க வேண்டுமென விரும்புகிறார் பாரதியார் ?

[ விடை ]

2. தமிழை வளம்படுத்தற்குரிய வழிகள் எனப் பாரதி குறிப்பன யாவை ?

[ விடை ]

3. நாட்டுப்பற்று வேர்விடப் பாரதி கூறும் தீர்வு யாது ?

[ விடை ]

4. பெண்கள் பல தீமைகளிலிருந்து விடுபட எது அவசியம் என்கிறார் பாரதி ?

[ விடை ]

5. பாரதியார் வாழ்கிறார் என்பதற்குச் சான்றாகக் கூறத் தக்கனவற்றுள் இரண்டைக் கூறுக ,

பாரதிதாசன் ஓர் அறிமுகம்

1.0 பாட முன்னுரை

அன்பர்களே !

இதோ புதுச்சேரி நகரைக் காணுங்கள் !

கடலலைகள் தாலாட்டக் கவின் மிகுந்த கட்டடங்களும் , பெருவீதிகளும் அமைந்த இந்த அழகுக்கோலத் தலைநகர் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியில் இருந்த காலம் .

தோப்பும் துரவுமாய் ( துரவு - பாசனத்துக்கு உதவும் பெருங்கிணறு ) இருந்த இந்தப் புதுச்சேரியில் ஒரு குயில் தோன்றிற்று .

வையகத்து வாழ்க்கையையே மாற்றும்படியாக அக்குயில் புரட்சிக் குரல் கொடுத்தது .

கடலலைகளும் , கட்டிடங்களும் ,

பெருவீதிகளும் அமைந்த புதுச்சேரி நகரம்

காட்சி ( 164 kb )

தொட்டாலும் கைம்மணக்கும் ; சொன்னாலும் வாய்மணக்கும் ; துய்ய சேற்றில் நட்டாலும்

தமிழ்ப்பயிராய் விளைந்திடுமே !

என்று கவிஞர் ஒருவருடைய கவிதையைப் பற்றிப் பழங்காலப் புலவர் ஒருவர் பாடினார் .

உண்மையில் புதுச்சேரியில் பிறந்த அந்தப் புரட்சிக் குயிலின் பாட்டிற்கு முற்றிலும் இது பொருந்தும் .

இதோ !

அந்தக் குயிலின் செம்மாந்த தோற்றத்தைக் காணுங்கள் !

பாரதிதாசன்

புதுச்சேரியின் புரட்சிக் குயில்

வாரிப்படிந்த தலை !

வண்டு மீசை !

சுடர் எரிக்கும் கண்கள் !

நிமிர்ந்த மார்பு !

எவர்க்கும் அஞ்சாத பீடு ( பெருமை ) காட்டும் தோற்றம் !

ஆம் !

இந்தக் குயில்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் .

இவர் காலம் எவ்வாறு இருந்தது ?

அக்காலத்தில் கவிதையின் உள்ளுறை கருத்து எவ்வாறு இருந்தது ?

என்பவற்றைக் காண்போமா ?

1.1 குயில் பிறந்த கூடு E

புதுச்சேரியில் காமாட்சியம்மன் கோயில் தெருவில் தானிய வணிகம் செய்து வந்த கனகசபை என்பார் வாழ்ந்து வந்தார் .

இவருக்கு மனைவியர் இருவர் .

இரண்டாம் மனைவியின் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார் சுப்புரத்தினம் .

இந்தச் சுப்புரத்தினமே பிற்காலத்தில் பாரதிதாசன் எனப் புகழ்பெற்ற நம் கவிஞர் .

1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் 29ஆம் நாள் புதன்கிழமை இரவு பத்தேமுக்கால் மணிக்கு இவர் தோற்றம் நிகழ்ந்தது .

பாரதிதாசனின் தந்தையார் இராமலிங்க அடிகளாரோடு தொடர்பு உடையவர் .

இராமலிங்க சுவாமிகள் என்ற வள்ளலார் பாரதிதாசனின் தந்தையாருக்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறார் .

பாரதிதாசனின் தந்தையாருக்கு நாடகக் கலையில் ஈடுபாடு மிகுதி .

வெளியூர் சென்று சிறந்த நாடகங்களைப் பார்த்து வருவார் .

தம் ஊரிலேயே சிறந்த நாடகங்களைக் கொண்டுவந்து அரங்கேற்றுவார் .

தந்தையிடம் அமைந்திருந்த இந்தக் கலை ஈடுபாடே , மைந்தனின் இரத்தத்திலும் ஊறிவந்தது போலும் !

பாரதிதாசன் பற்பல நாடகங்களைப் பிற்காலத்தில் படைத்தார் என்பது சிந்திப்பதற்கு உரியது .

காமாட்சியம்மன் கோயில் தெரு வள்ளலார்

பாரதிதாசன் படைத்த நாடகங்கள்

நம் பாட்டுக் குயில் பிறந்த புதுவையில் அன்று சைவம் , வைணவம் என்ற சமயங்கள் இருந்தன .

பற்பல சாதிகள் இருந்தன .

அவற்றிடையே வேறுபாடுகளும் தீண்டாமையும் இருந்தன .

பிரெஞ்சு , ஆங்கிலம் , தமிழ் ஆகிய மொழிகள் கல்வி உலகில் இடம் பெற்றிருந்தன .

தமிழகத்திலிருந்தும் , இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் தேசபக்தர்கள் அடைக்கலமாகச் சென்று வாழ்வதற்குரிய பகுதியாக அன்று இருந்தது புதுவை .

அரவிந்தர் , பாரதியார் , வரகனேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர் , வ.ராமசாமி போன்றோர் அங்கு வந்து தங்கினர் .

பாரதிதாசனுக்கு இவர்களோடு நெருக்கமான தொடர்பு ஏற்படுவதற்குப் புதுவை , வாய்ப்பு நல்கியது .

அந்தப் புதுச்சேரி இன்று இல்லை .

அதற்குப் போகின்ற வழி வேண்டுமா ?

வ.ரா .

என்று புரட்சிக் கவிஞரின் மொழியிலேயே சொல்லலாம் .

1.1.1 புதுவையின் அரசியல்

எட்டு மணிநேர வேலைச் சட்டம்

ஆயி மண்டபம்

1666இல் பிரெஞ்சுக்காரர்கள் வாணிக நோக்கத்தோடு இந்தியா வந்தனர் .

அவர்கள் ஆங்கிலேயரோடும் ஹாலந்துக்காரர்களோடும் போட்டியிட வேண்டிய சூழலில் சென்னையை விட்டுவிட்டுப் புதுச்சேரியை அடைந்தனர் .

புதுச்சேரி அப்போது ஒரு சிறிய ஊராக இருந்தது . அங்குப் பிரெஞ்சுக்காரர்கள் கோட்டை கட்டினர் .