புதுச்சேரியை நகராக்கி 150 ஆண்டுகள் அங்கு நிலையாகப் பிரெஞ்சுக்காரர் ஆட்சி செய்தனர் .
பிரெஞ்சுக்காரர் ஆட்சியில் புதுவை பல மாற்றங்களைக் கண்டது .
சேரிகளில் கல்வி கற்பிக்கப் பள்ளிகளை இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கண்டது புதுவை மாநிலம் .
தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலைச் சட்டம் , பெண்களுக்கெனத் தனிப்பள்ளிக் கூடம் , முதியோர் கல்விக் கூடம் , இலவச மதிய உணவுத் திட்டம் ஆகிய முற்போக்குத் திட்டங்கள் புதுவையில் சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் , இந்நூற்றாண்டுத் தொடக்கத்திலும் தொடங்கப் பெற்றன .
பெண்கள் தனிப்பள்ளிக் கூடம்
முதியோர் கல்விக் கூடம் இலவச மதிய உணவுத் திட்டம்
பிரெஞ்சுக்காரர்கள் கட்டிய பாலம்
கலங்கரைவிளக்கம்
' எல்லோர்க்கும் கல்வி ' என்ற கொள்கையைப் பிரெஞ்சுப் புதுவை கடைப்பிடித்தது .
சாதி மதவேறுபாடு இல்லாமல் கல்வி அளிக்கும் நடைமுறையினைப் புதுவை அரசியல் மேற்கொண்டது .
ஜூல்ஸ் பெரி ( Jules Fery ) என்ற பிரெஞ்சுக் குடியரசுத் தலைவர் , மதக்குருக்களின் வலிமைமிக்க பிடியிலிருந்து கல்வியை அரசின் பொறுப்புக்கு மாற்றினார் .
நம் கவிஞர் பாரதிதாசன்
என்று குடியரசுத்தலைவரின் செயலை அன்று போற்றிப் பாடினார் .
சுதந்திரம் , சமத்துவம் , சகோதரத்துவம் என்ற பிரெஞ்சுக் கோட்பாடுகள் புதுவை அரசியலிலும் ஒளிவிட்டன .
1.1.2 கவிஞரின் முன்னோர்
இவ்வாறு அமைகிற நம் கவிஞர் குடிவழி .
இவருடைய தாத்தா சுப்பராய முதலியார் பள்ளிக்கூடத்தான் முதலியார் என்று ஊராரால் அழைக்கப்பட்டவர் .
தந்தையார் கனகசபைக்கு மனைவியர் இருவர் .
முதல் மனைவிக்குத் தெய்வநாயகம் என்ற மகனும் , இரண்டாம் மனைவிக்குக் கவிஞர் உள்ளிட்ட மூவரும் மக்களாவர் .
கவிஞருக்கு 25 வயதாகும் போது அவருடைய தந்தையாரும் , பிறகு சில ஆண்டுகளில் தாயாரும் இறந்தனர் .
கவிஞரின் தந்தையார் சோதிடக்கலை வல்லுநர் .
கவிஞரின் தமையனாரும் அக்கலையில் வல்லவராகத் திகழ்ந்தார் .
எனினும் கவிஞருக்கு அக்கலையில் நம்பிக்கை இல்லை .
கவிஞரின் தந்தையார் செல்வராக வாழ்ந்து பின் ஏழையாக மாறியவர் .
கவிஞர் தம் மகன் மன்னர் மன்னனிடம் இவ்வாறு கூறுகிறார் :
" முந்திரிப் பயிரை அரைத்துப் பிசைந்து அதிலே இடை
யின்றி வாதுமைப் பருப்பு பதித்து , கொதிக்கும் பசு
நெய்யில் வடைதட்டிப் போட்டுத் தின்று கொண்டிருந்
தோம் நாங்கள் .
சரிவு ஏற்பட்ட பின்னர் பழைய
சோறு சாப்பிடுவதற்கே திண்டாட்டம் ஆகிவிட்டது .
ஒருகாலத்தில் செல்வத்துடன் விளங்கிய எந்தையார்
யாரிடமும் கையேந்த விரும்பியதில்லை .
வந்துவிட்ட
துயரத்தைத் தாம் ஒருவராகவே ஏற்றுக் கொண்டார் .
இந்த வறுமை இருள் அவரைப் பொறுத்தவரையில்
இறுதிவரை விடியாமலே போய்விட்டது .
விளைவுகள் ?
வீடு ஏலத்தில் போய்விட்டது .
எங்கள் குடும்பம் சிதறிச்
சின்னா பின்னமாயிற்று .
நாங்கள் நடுத்தெருவில்
நின்றோம் "
வணிகம் என்ற கப்பல் தரைதட்டி விட்ட சூழலில் கவிஞர் காலத்தில் குடும்பம் அத்தொழிலைக் கைக்கொள்ளவில்லை .
1.1.3 கவிஞரின் இளமைப் பருவம்
கவிஞருக்கு இளம் பருவத்திலேயே கவிதை படைக்கும் ஆற்றல் இருந்தது .
அதனோடு முரட்டுத்தனமும் , பிடிவாதமும் இருந்தன .
கவிஞர் தம் தொடக்கக் கல்வியைத் திருப்புளிசாமி ஐயா என்ற புகழ்பெற்ற திண்ணைப்பள்ளி ஆசிரியரிடம் பயின்றார் .
திருப்புளிசாமி ஐயா கவிஞருக்கு எண்ணும் எழுத்தும் கற்றுக் கொடுத்ததோடு அமையவில்லை . ஆண்டாளின் திருப்பாவைப் பாடல்களை மார்கழி மாதத்தில் பக்தியோடு ஓதக் கற்பித்தார் .
பள்ளிக்கூட நாடகங்களை நடத்தி அவற்றில் கவிஞருக்குப் பங்களித்தார் .
' ஆயுதபூஜை ' போன்ற விழாக்களில் முழு ஈடுபாட்டோடு பாரதிதாசன் பங்கேற்றார் .
அக்காலத்தில் புதுவையில் ஒரு பிரெஞ்சுக் கல்லூரி இருந்தது .
அதில் பிரெஞ்சுக்காரரும் அவரோடு உறவுகொண்ட ஏனையவரும் மட்டுமே சேர்க்கப்பட்டார் .
திருப்புளிசாமி ஐயா
புதுவையில் வாழ்ந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர் .
அவர்கள் ஆங்கிலமோ தமிழோ கற்க இயலாத நிலை அப்போது இருந்தது .
இந்நிலையை அகற்ற முன்வந்தார் கலவை சுப்பராயச் செட்டியார் என்ற செல்வர் .
இவர் அளித்த பெருநிதியத்தால் எழுந்தது ' கல்வே கல்லூரி '
இக்கல்லூரி ஆங்கிலம் , பிரெஞ்சு , தமிழ் ஆகிய மும்மொழிகளையும் கற்பித்தது .
பாரதிதாசன் இக்கல்லூரி மாணவரானார் .
கல்வே கல்லூரி
1.2 தமிழ் உலகில் கவிஞர் E
சி.பங்காரு பத்தர்
பெரியசாமிப்பிள்ளை
கல்வே கல்லூரியின் தமிழாசிரியராக இருந்தவர் சி. பங்காரு பத்தர் என்பவர் .
இவர் அன்று புதுவையில் வெளியான ' கலைமகள் ' என்ற இலக்கிய இதழுக்கு ஆசிரியர் .
அதனோடு புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் ஆவார் .
பங்காரு பத்தரிடம் பாரதிதாசன் உயர்நிலைக் கல்வி பெற்றார் .
வகுப்பில் தம்மோடு பயின்ற நாற்பது மாணவர்களில் முதலாமவராகத் திகழ்ந்தார் .
அரசு தகுதிமிக்க மாணவருக்கு வழங்கும் படிப்புதவித்தொகை பெற்றார் .
இக்கல்லூரியில் கவிஞர் ஓரளவு பிரெஞ்சு மொழியும் , பிரான்சு நாட்டு வரலாறும் பயின்றார் .
பதினேழாம் வயதிற்குள் இவ்வுயர் கல்வியைப் பாரதிதாசன் முடித்து வெற்றி பெற்றார் .
பாரதிதாசன் ஓர் ஆசிரியராக இருந்து கற்பிக்கும் தகுதி பெற்றார் .
இந்தத் தகுதியோடு அமையாது பாரதிதாசன் சிறந்த தமிழ்க் கல்வி பெறவேண்டுமென்று விரும்பிய அவருடைய தந்தையார் அவரைச் சாரம் மகாவித்துவான் பு.அ.பெரியசாமிப்பிள்ளை என்ற தமிழாசிரியரிடம் கல்வி பயில அனுப்பினார் .
இக்கல்வியே பாரதிதாசனாரைத் தமிழ் உலகில் நிலை பெற வைத்தது .
1.2.1 தமிழ்க்கல்வி
சாரம் மகாவித்துவான் பெரியசாமிப் பிள்ளையிடம் பாரதிதாசன் கற்ற கல்வி அவருக்கு அழுத்தமான புலமையைத் தந்தது .
இக்கல்வி அவருக்குப் புராண இலக்கியங்களிலும் ஓர் ஆழ்ந்த பயிற்சியைத் தந்தது .
கவிஞரின் மகன் மன்னர் மன்னன் குறிப்பிடும் கீழ்க்காணும் நிகழ்ச்சி இதற்குச் சான்று அளிக்கின்றது .
கவிஞரின் மகன் மன்னர் மன்னன்
" ஒருநாள் விசுவலிங்கம் பிள்ளை உரை நிகழ்த்தி வரும்போது ” , ' அல்லை ஈது அல்லை ஈது என நான்மறைகளும் ' என்று தொடங்கும் அவையடக்கச் செய்யுளின் ' ஆசை என் சொல்வழி கேளாய் ' என்று கடைசி வரியைச் சொல்லி முடித்தார் .
அப்பாடல் வரியை மனதால் தொடர்ந்து வந்துகொண்டிருந்த இளந்தமிழாசிரியர் சுப்புரத்தினம் எழுந்து நின்று ' கேளாய் என்பதில்லைங்க , கேளா என்பதுதான் பாடல் என்றார் .
' நீ சின்ன பையன் , உனக்கென்ன தெரியும் ?
சும்மா உட்காரப்பா , என ஆணவத்தோடு மீண்டும் கூறினார் பிள்ளை .
' அப்படியில்லைங்க !
நீங்கள் கூறியது பிழை !
என்று அழுத்தந்திருத்தமாகப் பேசினார் சுப்புரத்தினம் .
திருவிளையாடற் புராண நூல் ஒன்று எடுத்துவரப்பட்டது .
முதுபெரும்புலவர் கூனிக் குறுகிப் போனார் .
' மூலச்செய்யுளையே பிழையாகப் பாடும்படி என் ஆசிரியர் என்னைப் பயிற்றுவிக்கவில்லை "
என்பதே அந்த நிகழ்ச்சி .
இதிலிருந்து கவிஞர் , பெரியசாமிப்பிள்ளையிடம் கற்ற கல்விப் பெருமை விளங்கும் .
பெரியபுராணம் , தாயுமானவர் பாடல்கள் , இராமலிங்க சுவாமிகளின் அருட்பா , திருக்குறள் , நிகண்டுகள் , சதகங்கள் , அந்தாதிகள் ஆகியனவற்றில் பலப்பல பகுதிகள் அவரால் மனனம் ( மனப்பாடம் ) செய்யப்பட்டிருந்தன .
பதினேழு வயதிற்குள் தகுதிவாய்ந்த தமிழறிஞராகக் கவிஞர் உருவானார் .
தமிழ் இலக்கணம் தமிழ் இலக்கியம்
எனக்குச் சொல்லிக் கொடுத்தவர் புதுவைத்
திருப்புளிசாமி ஐயா , செந்தமிழ்
இருப்பே என்னும் பங்காரு பத்தர் புலவர்க்குப் புலமை ஈந்து , நிலவு
பெரும்புகழ்ப் பெரியசாமிப் பிள்ளை
என்பவர் ஆவர் .
இவர்களின் அருளினால்
பதினேழாண்டும் பற்றா இளையேன்
நாற்பது புலவர் தேர்வில் முதலாத்
தேர்வு பெற்றேன் .
என்று அவரே தாம்பெற்ற தமிழ்க்கல்வியைக் குறிப்பிடுகின்றார் .
1.2.2 பக்திப் பாடல்கள்
பாரதிதாசன் முப்பது வயது வரையில் பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார் .
' கடவுள் அருள் இதோ ' என்று சொல்லும்படியான பாடல்களைத் தாம் பாடிக்கொண்டிருந்தாலும் அடிமனத்தில் கடவுள் உருவங்களைப் பற்றி ஆராய்ச்சி இருந்ததென்று அவர் கூறுகின்றார் .
இந்தப் பாட்டைத் திரும்பப் படித்துப் பாருங்கள் !
இதுபோல நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடினார் கவிஞர் .
முருகன் , பிள்ளையார் , சிவபெருமான் , திருமால் , கலைமகள் ஆகிய பல தெய்வங்களைக் கவிஞர் பாடியுள்ளார் .
பசுவைத் தெய்வமென்று வணங்க வேண்டுமென்று பாடியுள்ளார் .
முப்பது வயதிற்குப் பிறகு இந்தப் போக்கு மாறியது .
புரட்சிக் கவிஞராவதற்குரிய தொடக்கம் முப்பது வயதிற்குப்பின் நிகழ்ந்தது .
1.2.3 ஆசிரியப்பணி
கவிஞர் தம் பதினேழாம் வயதில் 26.7.1909இல் நிரவி என்ற ஊரில் உள்ள பள்ளியில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார் .
மெலிந்த உடலோடும் குறைந்த வயதோடும் புகுந்த ' இவரா ஆசிரியர் ' என்று முதலில் எண்ணியவர்கள் , பின்னர் பாராட்டும் படியாகப் பணி செய்தார் .
நிரவியிலே தொடங்கிய இவரது ஆசிரியப்பணி நிலையாக
ஓர் ஊரில் பல ஆண்டுகள் நீடிக்கவில்லை .
அரசியல்வாதிகளால் அவ்வப்போது தொல்லைக்கு உள்ளானார் ; ஊர்விட்டு ஊர் மாற்றப்பட்டார் .
தம் பணிக்காலத்தில் அவர் பதினாறு பள்ளிக் கூடங்களைப் பார்த்து விட்டார் .
ஏறத்தாழ இரண்டாண்டுக் காலம் பணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார் .
மாணவர்கள் நலம் காக்கவும் , ஊர்மக்கள் நலம் பேணவும் தாம் சென்ற இடமெல்லாம் போரிட்டார் .
செல்வர்களாகவும் அரசியல் துறையில் வலிமை படைத்தவர்களாகவும் இருந்தோர் ஊர்மக்களை இவருக்கு எதிராக இயங்கச் செய்தார்கள் .
இவருக்கு எந்த உதவியும் செய்யக் கூடாதென்று கட்டுப்பாடு விதித்தனர் .
ஒருமுறை இவருடைய இறந்த கைக்குழந்தையை இவரே கையில் எடுத்துக் கொண்டுபோய் அடக்கம் செய்ய நேரிட்டது .
தன் இறந்த குழந்தையை அடக்கம் செய்யும் காட்சி
ஆசிரியப் பணி செய்த காலத்திலே பாரதிதாசன் பல மாற்றங்களைச் செய்தார் .
பெரும்பாலும் தொடக்க வகுப்புக்குப் பாடம் கற்பிப்பதிலேயே அவர் காலம் கழிந்தது .
' அ ' என்ற எழுத்தைக் கற்பிக்க ' அணில் ' என்ற சொல்லைத்தான் காட்ட வேண்டுமா ?
' அம்மா ' என்று அனைவரும் அறிந்த சொல்லைக் காட்டக் கூடாதோ என்று அவர் கேட்டார் .
ஆங்கில ஆதிக்கம் நிலவிய தமிழ்நாட்டில் பாடமாக இருந்த தமிழ்ப் புத்தகமே புதுவையிலும் பாடமாக இருந்தது .
அதில் இங்கிலாந்து மன்னர் பற்றிய பாடத்தைக் கற்பிக்கக் கவிஞர் மறுத்தார் .
சுதந்திரம் , சமத்துவம் , சகோதரத்துவம் ஆகிய மூன்று கொள்கைகளை உலகிற்குக் கூறும் பிரெஞ்சுக்குடியரசில் இப்படி ஒரு பாடமா என்று அவர் கேட்டார் .
பிரெஞ்சுமொழி ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியத்தைத் தமிழாசிரியர்களுக்கும் வழங்க வேண்டுமென்று கவிஞர் போராடினார் .
தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பள்ளியிலே சேர்ந்து படிக்கப் பிறர் ஏற்படுத்தியிருந்த தடைகளை அகற்றினார் .
இவர் தேர்வாளராகப் பணிசெய்த காலத்தில் , நூற்றுக்குப் பத்துப்பேரே தமிழில் தேர்ச்சிபெற்ற நிலைமாறி நூற்றுக்குத் தொண்ணூறு பேர் தேர்ச்சி பெற்றனர் .
அஞ்சாமை , பொதுநலம் , கல்விப்பணியில் தளராத ஊக்கம் , ஆகியன இந்த ஆசிரியரின் அரும் பண்புகளாகத் திகழ்ந்தன .
1.3 கவிஞர் கண்ட திருப்பம்
E
கவிஞருக்குப் பதினேழு வயதான போது பாரதியாருடன் சந்திப்பு ஏற்பட்டது .
பாரதியாரின் பாடலை ஒரு திருமண வீட்டில் சுப்புரத்தினம் இசையோடு பாடினார் .
பாரதியாருடன் பாரதிதாசன்
அங்கு வந்திருந்த பாரதி , அதனைக் கேட்டார் .
சுப்புரத்தினம் பாடியமுறை சுப்பிரமணிய பாரதியைக் கவர்ந்தது .
பதினெட்டாம் வயதில் பாரதியின் முன்னர் சுப்புரத்தினக் கவிஞர் , அவர் வேண்டுகோளுக்கேற்ப ,
என்று தொடங்கும் பாடலை எழுதிப் பாடினார் . இந்தப் பாடலைப் பாரதியார் தம் கைப்படவே பெயர்த்து எழுதி " ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது ' ' என்ற குறிப்பையும் இணைத்துச் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பி வைத்தார் .
பாரதியின் பழக்கம் சுப்புரத்தினத்தின் பழைய கவிதை நடையை மாற்றியது .
' பாரதிதாசன் ' என்று புனைபெயர் வைத்துக் கொள்ளச் செய்தது .
" நான் பாரதிதாசன் என்று புனைபெயர் வைத்துக் கொண்டுள்ளேன் .
அதற்குக் காரணம் , அப்போது அவர் என் உள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்ததுதான் .
சாதிக் கொள்கையை நன்றாக , உண்மையாக எதிர்த்தவர் பாரதியார்தாம் !
அவருக்கு முன் பன்னூற்றாண்டுகளுக்கு முன் அவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்த வரை நான் கண்டதில்லை .
பாரதி எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது .
பாரதியாரை நான் ஆதரித்ததும் பாரதிதாசன் என்று நான் புனைபெயர் வைத்துக் கொண்டதும் , ஏதாவது ஒரு கூட்டத்தாரிடம் நன்மையை எண்ணியன்று .
சாதி ஒழிப்பு விளம்பரம் ஆதல் வேண்டும் என்பதற்காகவும் பாரதியாரைப் போல எளிய நடையில் மக்களுக்கு இன்றைக்கு வேண்டிய கருத்தை வைத்துப் பாடல் இயற்ற வேண்டும் என்பதைப் புலவர்க்கு நினைவூட்ட வேண்டும் என்பதற்காகவுமே "
என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறுவது எண்ணத்தக்கது .
1.3.1 தேசியப் பாடல்கள்
சுப்புரத்தினக் கவிஞருக்கு இயல்பாகவே நாட்டுப் பற்று மிகுதி .
சைகோன் சின்னையா என்ற அவருடைய நண்பர் நடத்திய ' தேசசேவகன் ' என்ற இதழில் அவர் பாரதநாட்டின் மேன்மை குறித்துப் பல பாடல்களை எழுதியுள்ளார் .
என்று பாடியுள்ளார் .
காந்தியடிகளைப் போற்றி அக்காலத்தில் பாடல் புனைந்துள்ளார் .
மதுவிலக்கை வற்புறுத்தும் வகையில் ' ' கள்ளை அகற்றுதல் தேசக்கலை ' ' என்று பாடியுள்ளார் .
காங்கிரஸ் இயக்கத்தைத் தெய்வமென்றே அவர் தம் பாட்டில் தொழுது போற்றுகின்றார் .
1.3.2 கவிஞரும் கதரும்
தம் மனைவி மக்களுடன்
கதர் இயக்கத்தில் மிக அழுத்தமான பற்றுக் கொண்டவர் கவிஞர் .
தாம் கதர் ஆடைகளை உடுத்தியோதோடு அல்லாமல் , தம் மனைவி மக்களையும் கதர் உடுத்த வைத்தார் .
கதர்த்துணியைத் தம் தோளில் சுமந்து விற்றார் .
கைராட்டினத்தில் நூல் நூற்றலை அவர் ஊக்கப்படுத்தினார் .
இராட்டினம் சுழற்றிச் சுழற்றி எதிரியின்
போக்கையும் சுழலவைக்கலாம் போலும் !
என்று அவர் பாடுகிறார் .
காங்கிரசில் ஏற்பட்ட பிளவு , அதன் தலைவர்களிடையே இருந்த வருணாசிரம நம்பிக்கை , சாதிப்பாகுபாடு ஆகியவற்றின் காரணமாகக் கவிஞர் தேசிய நீரோடையை விட்டு விலக வேண்டியதாயிற்று .
அந்நிலையில் கவிஞர் கதரையும் கைவிட்டார் .
பாரதிதாசன் பயன்படுத்திய பொருட்கள்
காட்சி ( 78 kb )
1.3.3 பொதுநல வாழ்வு
பாரதிதாசன் நாட்டுக்காகவும் மொழிக்காகவும் வாழ்ந்தவர் .
இந்தியா விடுதலை அடையக் கருதி அவர் பல பாடல்களை இசைத்தார் .
விடுதலை வீரர்கள் பலருக்குத் துணை செய்தார் .
திலகரின் உரிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்டுக் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட மாடசாமிக்கு இவர் உதவினார் .
பாரதியார் , அரவிந்தர் ஆகியோருக்காக உதவச் சென்று பலமுறை செத்துப்பிழைத்தார் .
மக்கள் நலம் காக்க எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாதவர் கவிஞர் .
மக்கள் நலம் காத்தல் கண்டு ஆளவந்தார்
எக்கேடு சூழினும் அஞ்சேன் ; ஒருநாள்
சிறைக்கதவு திறக்கப்பட்டது ; சென்றேன் ;
அறைக்கதவு புனிதப்பட்டது மீண்டேன் .
என்று பொதுவாழ்வில் தாம் சிறை புக நேர்ந்ததனையும் அவர் கூறக் காணலாம் .
இப்படி உழைத்ததால்தான் இவரை இதோ நாம் மெரினா கடற்கரையில் அவர்க்கே உரிய செம்மாந்த தோற்றத்தோடு சிலை வடிவில் காண்கின்றோம் !
மெரினா கடற்கரையில் பாரதிதாசனின் சிலை
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. பாரதிதாசனின் தந்தையார் பெயர் யாது ?
[ விடை ]
2. புதுவை அரசு கொண்டிருந்த முற்போக்குத் திட்டங்கள் யாவை ?
[ விடை ] 3. பாரதிதாசனின் ஆசிரியர் மூவர் பெயரைக் குறிப்பிடுக .