176

என்று கூறும் அளவிற்கு அவர்கள் நிலை தாழ்ந்து போய்விட்டது .

ஒரு மொந்தைக் கூழைப் பலர் மொய்த்துக் குடித்தார்களாம் .

ஈக்கள் எறும்புகள் போல் எண்ணிக்கையில் பெருகிக் கிடப்பதனால் மொய்த்துக் குடித்ததாகச் சொல்கிறார் .

இந்த நிலைக்குக் காரணம் யாது ?

தலைவிதியா ?

அப்படிச் சொல்லித்தான் கடந்த காலத்தில் ஏமாற்றினார்கள் .

பாரதிதாசன் காணும் புதிய சமுதாயத்தில் , பொதுவுடைமை மணம் பரப்பும் சமுதாயத்தில் அது நடவாது .

பாரதிதாசன் பகுத்தறிவு வாய்ந்த சமூகம் காண விரும்பினார் .

முன்னோர்கள் சொன்னதை ஆராயாமல் , வேதவிதி என்றும் , உலக வழக்கம் என்றும் , சாத்திரங்கள் சொல்லியிருக்கின்றன என்றும் கூறியவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் , அறிவால் எதனையும் ஆராயும் நிலை வேண்டுமென்றார் .

கடவுள் பெயர் கூறியும் மதங்களின் பெயர் கூறியும் ஏமாற்றும் வழக்கங்களைச் சாடி அறிவுமிக்க ஒரு சமுதாயம் தோன்றுவதற்கு அவர் குரல் கொடுத்தார் .

2.1.1 யார் படைத்த உலகம் ?

உலகத்தை யார் படைத்தார் ?

கடவுள் படைத்தார் என்று சமய உலகம் கூறுகின்றது .

கடவுள் படைத்த உலகம் சமமாக அல்லவா இருக்க வேண்டும் என்கிறார் கவிஞர் .

நடவு செய்பவனுக்கு நான்கணாக் கூலி ; உடல் உழைப்பு இல்லாதவனுக்குக் கடல்போலச் செல்வம் .

இதுதான் கடவுள் ஆணையா ?

இப்படிப்பட்ட காட்சிகளைக் காணும் நேர்மையான மனிதர் யார்க்கும் நெஞ்சுக் கொதிப்பு வராதா ?

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்

குறள் 1062

என்று திருவள்ளுவரும் கூறினார் .

பிச்சை எடுத்து வாழவேண்டியது சிலர்க்கு இவ்வுலகில் தலைவிதி என்றால் அப்படி விதித்தவன் அழிந்து தொலையட்டுமே என்று ஆற்ற முடியாத அளவு திருவள்ளுவர் கொதிக்கவில்லையா ?

அவரைப் போலவே பாரதிதாசனும் கொதித்துப் பேசுகிறார் .

உலகம் தொழிலாளரால் உருவானது என்று மனித அறிவு கற்பிக்க வேண்டும் .

காட்டை நாடாக்கினோமே !

கழனி திருத்தி உழவு செய்தோமே !

நாடுகளைப் படைத்தோமே !

அங்கு நான்கு திசைகளிலும் வீதிகள் வகுத்தோமே !

வீடுகள் கட்டினோமே !

மலையைப் பிளந்தோமே !

கடலைத் தூர்த்தோமே !

கப்பல்கள் செலுத்தினோமே !

தொழிலாளராகிய நாங்கள் படைத்ததல்லவா இந்த உலகம் என்று கேட்கின்றனராம் புரட்சிக்கவிஞர் கண்ட தொழிலாளர்கள் .

2.1.2 எல்லார்க்கும் எல்லாம்

உலகத்தின் நலங்கள் எல்லாம் இயற்கையின் கொடை .

அவற்றைப் பயன்தர உருச்சமைத்தனர் தொழிலாளத் தோழர் .

எல்லோரும் அவற்றைத் துய்த்தல் வேண்டும் .

“ உலகம் உண்ண உண் ; உடுத்த உடுப்பாய் ” என்பது பாரதிதாசன் கூற விரும்பும் அறிவுரை .

எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான

இடம்நோக்கி நடக்கின்றது இந்த வையம்

( பாண்டியன் பரிசு 56:4 )

என்று அவர் பாடுகின்றார் .

எல்லார்க்கும் எல்லாம் என்று கருதுகின்ற உள்ளமே தாயுள்ளம் என்கிறார் அவர் , வேறு ஒர் இடத்தில் :

தூயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்

தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும்

தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் !

( உலக ஒற்றுமை : 13-15 , முதல் தொகுதி )

என்று மக்களெல்லாம் ஒன்றாய்க் காணும் பேருள்ளத்தின் பண்பு கூறுகின்றார் .

உள்ளத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிடின் அந்நாட்டில் ஏற்றத் தாழ்வுகளும் போட்டி , பொறாமை , பகை எனும் உணர்வுகளும் தோன்றமாட்டா . ஆனால் அப்படிப்பட்ட உலகை அடைவதுதான் எளிதா ?

கவிஞர்களின் இலட்சியக் கனவாக அன்றோ விளங்குகின்றது அவ்வுலகு !

இராமலிங்க வள்ளலார் , ஒத்தார் , உயர்ந்தார் , தாழ்ந்தார் ஆகிய மூவரும் ஒன்றாய்க் கூடி உலகியல் நடத்த வேண்டும் என்று கூறுகின்றார் .

பலரும் கூறியிருப்பினும் பாரதிதாசனே பணக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் குரலில் பொது உடைமையை ஒத்துக் கொள்ளுமாறு பாடியவர் ஆவார் .

இப்பொழுதே நீர் - பொது

இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை

ஒப்படைப்பீரே - எங்கள்

உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே

( தொழிலாளர் விண்ணப்பம் : 53-56 , முதல் தொகுதி )

என்று தொழிலாளர் சினங்கொண்டு கூறுவதாகப் பாடிய முதல் கவிஞர் அவரே .

2.1.3 கொலைவாளினை எடு

புரட்சிக் கவிஞர் சமுதாயத்தில் எப்பாடு பட்டேனும் சமநிலையைக் கொண்டுவந்து விட வேண்டுமென்று விரும்பினார் .

ஆமையாய் , ஊமையாய் அடங்கிக் கிடக்கும் ஏழைகளின் நிலையை எடுத்துரைக்கும் வன்மை மிக்க குரலாக அவர் குரல் வெளிப்பட்டது .

தமிழனே !

நீ புலிக்குணம் உடையவன் என்று வரலாறு கூறுவது பொய்யாய்ப் போகலாமா ?

உனது அதிகாரத்தை நிறுவக் கொலைவாளினை எடு என்கிறார் .

வலியோர் சிலர் எளியோர்தமை

வதையே புரிகுவதா

மகராசர்கள் உலகாளுதல்

நிலையாம் எனும் நினைவா ?

உலகாள உனதுதாய் மிக

உயிர்வாதை அடைகிறாள்

உதவாதுஇனி ஒருதாமதம்

உடனேவிழி தமிழா !

( வாளினை எடடா !

1-8 , முதல் தொகுதி )

பாட்டின் நடையில் ஒரு வீறு , வீரக்கொப்பளிப்புத் தெரிகிறது பாருங்கள் .

பன்னெடுங்காலமாக உலகச்சமத்துவத்தை வேண்டுகோள் முறையிலும் , அறிவுறுத்தல் முறையிலுமே சான்றோர்கள் உரைத்து வந்த நிலையைக் கவிஞர் மாற்றினார் .

இதில் என்ன கெஞ்சுவது ?

இனி எவர் மிஞ்சுவது ?

என அடங்காச் சினம் கொண்டெழுந்த போர்க்குரலாக அவர் பொதுவுடைமைப்பாடு எண்ணம் பலருடைய குருதி நாளங்களிற் புகுந்து புரட்சி வேகத்தை உண்டாக்கிவிட்டது .

2.1.4 சமத்துவப் பாட்டு

பாரதிதாசன் காணவிரும்பிய சமுதாயத்தில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் நிலையாக நீங்கிச் சமத்துவம் இடம்பெற வேண்டுமென்று கூறினார் .

இதற்கு அடிப்படையில் பிறப்பால் உயர்வு தாழ்வு பேசும் பேதைமை ஒழியவேண்டுமென்று கூறினார் .

மனிதர் எல்லாரும் சமம் என்ற கோட்பாட்டை உடைத்துவிட்ட அயலாரின் சூழ்ச்சியை அவர் கடுமையாகச் சாடினார் .

பாவம் , புண்ணியம் , மேல் உலகம் , கீழ் உலகம் , சொர்க்கம் , நரகம் என்றெல்லாம் கூறி அறியாமைப் பள்ளத்தில் பலரைப் புதைத்துவிட்ட சூழ்ச்சியைப் பாரதிதாசன் போல யாரும் வெளிப்படுத்தவுமில்லை ; கண்டிக்கவுமில்லை .

யார் தாழ்ந்தவர்கள் ?

என்ற வினாவுக்கு உழைக்கின்றவர்களே தாழ்ந்தவர்கள் என்று உண்டாக்கி விட்ட வருணப் பாகுபாட்டைப் புரட்சிக் கவிஞர் ‘ சமத்துவப்பாட்டு ’ என்ற தலைப்பில் கண்டித்து எழுதுகின்றார் .

பொய்மை வருணபேதம்

போனால் புனிதத்தன்மை

நம்மில்நாம் காண்போமடி - சகியே

நம்மில் நாம்காண்போமடி !

( சமத்துவப்பாட்டு : 365-368 .

மூன்றாம் தொகுதி )

என்று கூறுவதைக் கேளுங்கள் .

பாரதிதாசன் காண விரும்பிய சமுதாயத்தில் , சாதி , மதம் , தீண்டாமை , பிறப்பில் உயர்வு தாழ்வு ஆகியவற்றுக்கு இடமே இல்லை .

2.2 மதவேறுபாடு நீங்குக

E

மதவேறுபாடுகளால் உலகம் பல குழப்பங்களையும் போர்களையும் சந்தித்திருக்கிறது .

மதங்களுக்கிடையே வேறுபாடுகள் , மதங்களுக்கு உள்ளேயே வேறுபாடுகள் தோன்றிக் கிளைத்து அசுரவல்லமை பெற்று மனிதநேயம் என்ற மாபெரும் தத்துவத்தை அழித்துக் கொண்டிருக்கின்றன . இந்தப் போரில் யாரும் ஈடுபடல் கூடாது என்கிறார் பாரதிதாசன் .

சேசு முகம்மது என்றும் - மற்றும்

சிவனென்றும் அரியென்றும் சித்தார்த்தனென்றும்

பேசி வளர்க்கின்ற போரில் - உன்

பெயரையும் கூட்டுவர் நீஒப்ப வேண்டாம் .

( வாழ்வில் உயர்வுகொள் : 11-14 , முதல் தொகுதி )

என்று அறிவுரை கூறுகின்றார் .

மனிதனின் வறுமையை அகற்ற இந்தப் போர்கள் பயன்பட மாட்டா ; அறிவை வளர்க்கவும் இவை உதவமாட்டா என்பது அவர் கருத்து .

சமயத்துறைகளிலே இருந்த பலர் இக்கருத்தைக் கூறி இருந்தாலும் , மத உலகிலிருந்து மனிதனை விடுவிக்கும் ஓர் அறிவுப் போரைப் பாரதிதாசனே தொடங்கி வைத்தவர் எனலாம் .

பொருளாதார அடித்தட்டிலே இருக்கும் மனிதனை அவன் உயர்வுக்காகப் போராடாமல் தடுத்தது மதம் ; வறுமைப் பள்ளத்திலே இருக்கும் பலரை வழிபாடு , அருச்சனை , விழா , வேள்வி , தலப்பயணம் , கழுவாய் தேடல் போன்ற முயற்சிகளுக்காகச் செலவழிக்கத் தூண்டியது .

மீள முடியாத துன்பச் சுமை தமக்குப் பழைய பிறவிகளில் செய்த கருமங்களின் விளைவாக வந்தது என்று மதம் கற்பித்தது .

கடவுள்தான் இதற்கு அருள்செய்ய வேண்டுமென்று மதவாத நூல்கள் கூறின .

இந்நிலையிலேதான் பாரதிதாசன் கடவுள் மறுப்புக் கொள்கையை நோக்கிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது .

மதம் மனிதகுலத்தின் அமைதியைக் கெடுத்துவிடும் என்ற நிலையில் உலகை நோக்கிக் கவிஞர் இரு விளக்கங்களைக் கேட்கிறார் .

சாந்தியால் உலகம் தழைப்பது நன்றா ?

சமயபேதம் வளர்த்தே தளர்வது நன்றா ?

( ஆய்ந்துபார் : 1-2 , முதல்தொகுதி )

எது நன்று ?

அமைதியால் உலகம் தழைப்பது நன்று என்றுதானே உலகம் கூறும் .

2.2.1 மதங்களால் மடமை

மதங்கள் மனிதரின் அறிவைத் தேய்த்து விடுகின்றன என்று பாரதிதாசன் கருதினார் .

மதம் அறிவில் மயக்கத்தை உண்டாக்கும் ; நாட்டில் தீமை என்ற எரிமலையைப் புகைய விடும் ; இது நலம் இது தீயது என்று பகுத்துப் பார்க்கும் அறிவை இழக்கச் செய்யும் என்று அவர் கூறுகின்றார் .

மதம்என்ற கருங்கற் பாங்கில்

மல்லிகை பூப்ப தில்லை

மதியினில் மயக்கம் என்ற

நஞ்சொன்றே மலரும் !

நாட்டில்

புதியதோர் பொல்லாங்கு என்னும்

எரிமலை புகையும் ; மக்கள்

இதுநலம் இதுதீது என்னும்

எண்ணமும் இழந்து போவார் .

( குறிஞ்சித்திட்டு 20 : 193-200 )

இந்தப் பாட்டை எண்ணுங்கள் .

கவிஞர் என்ன கூறுகிறார் தெரிகிறதா ?

மதம் ஒரு கருங்கல்லாம் .

கருங்கல் பாறையில் மல்லிகை பூக்குமா என்று கேட்கிறார் .

சிந்தனைகள் பூக்காமல் மடமை என்ற முட்கள் தோன்றச் செய்துவிடும் மதங்கள் மனித குல நலனுக்கு ஏற்றவை அல்ல என்பது அவர் கருத்து .

நாய்களைப் போல்தமக் குள்ளே - சண்டை

நாளும் வளர்க்கும் மதங்கள்

( வாழ்வு : 19-20 .

இரண்டாம் தொகுதி )

என்றும் அவர் எடுத்துரைப்பதைப் பாருங்கள் !

மதத்தை வளர்ப்போர் மனிதர்களின் சிந்தனையை முடக்கி விட்டதை அவர் எடுத்துக் காட்டினார் .

“ கட்டிச் சமூகத்தின் கண் அவித்து ” விட்டதாக மதங்களின் மீது அவர் குற்றம் சாட்டினார் .

மதங்களின் சார்பாகத் தோன்றிய புராணங்களில் சொல்லப்பட்ட அறிவுக்கொவ்வாத நிகழ்ச்சிகளை அவர் இகழ்ந்துரைத்தார் .

2.2.2 மக்கள் நலம் பேணுக

• மன்னர் ஆட்சியும் மக்கள் சக்தியும்

எந்த அமைப்பும் மக்களின் நலம் காப்பதாக அமைய வேண்டும் என்று பாரதிதாசன் கருதினார் .

சமுதாய நலம் படைப்பதற்கு மன்னராட்சி இடையூறாக இருப்பின் மக்கள் கிளர்ச்சி செய்து அதனை மாற்ற வேண்டும் என்று கவிஞர் கருதினார் .

பாரதிதாசன் பாடல்கள் பலவற்றில் மன்னராட்சிக்கு எதிரான கிளர்ச்சி சித்தரிக்கப் பெறுவதைக் காணலாம் . இந்நிலத்துப் பெருமக்கள் ஓர் கடல்

இடர்செய் மன்னவர் அக்கடற் குமிழிகள்

( கடல்மேற்குமிழிகள் : 17,19-20 , மூன்றாம் தொகுதி )

என்று கூறி மக்கள் எல்லாரும் ஒன்றாய்த் திரண்டுக் குடியரசை நாட்டுதல் நன்று என அறிவுறுத்துவதைக் ‘ கடல்மேற் குமிழிகள் ’ என்ற அவர் படைப்புக் காட்டுகின்றது .

‘ புரட்சிக்கவி ’ என்ற சிறுகாப்பியத்தில் உதாரன் என்ற கவிஞன் கொலைக்களத்தில் நிற்கின்றான் .

அவன் தலையை வெட்டுவதற்குக் கொலையாளிகள் காத்திருக்கின்றனர் .

அப்போது உதாரன் மக்களை நோக்கிப் பேசுகின்றான் .

‘ என் நாடு உரிமை பெற்று வாழவேண்டும் ; கொடுங்கோன்மை வீழ வேண்டும் ’ என்று முழங்குகின்றான் .

மக்கள் சக்தி இந்த உரைகேட்டுத் திரள்கின்றது .

கொலையாளிகளிடமிருந்து உதாரனை மீட்கின்றது .

• மதத்தலைவர்களுக்கு ஓர் அறைகூவல்

மன்னராட்சி பெரும்பாலும் மக்கள் நலம் காப்பதில்லை .

மன்னர்கள் மதவாதிகளால் வழிநடத்தப் பெறுகின்றனர் .

மதவாதிகள் நாட்டுமக்கள் ஒன்றுகூடாமல் இருப்பதற்காக விதி , தலையெழுத்து , ஆண்டவன் கட்டளை ஆகியவற்றை உருவாக்கி விட்டனர் .

பாரதிதாசன் இவற்றை எல்லாம் எதிர்ப்பதில் தீவிரம் காட்டினார் .

மதத்தின் தலைவீர் ! - இந்த

மண்ணை வளைத்துள்ள அண்ணாத்தைமாரே !

குதர்க்கம் விளைத்தே - பெரும்

கொள்ளை அடித்த கோடீசுவரர்காள் !

வதக்கிப் பிழிந்தே - சொத்தை

வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே !

( தொழிலாளர் விண்ணப்பம் : 41-46 , முதல் தொகுதி )

என்று மதத்தலைவர்களுக்கு மக்கள் அறைகூவல் விடவேண்டும் என்று கூறுகின்றார் .

2.2.3 சான்றோர் நெறி அறிக

பாரதிதாசன் மதங்களால் விளைந்த கொடுமைகளை எதிர்த்தார் .

மதத்தலைவர்கள் தங்கள் மதமே உயர்ந்தது என்று கூறி மற்ற மதங்களைத் தாக்க முனைந்தமையால் உண்டான தீங்கை எடுத்துரைத்தார் .

மதம் சார்ந்தவர்களில் சிலர் சீர்திருத்தக்காரர்களாக இருந்தனர் .

அவர்களைப் பாரதிதாசன் போற்றினார் .

புத்தரை அவர் போற்றிப்பாடினார் :

தன்னேரிலாப் புத்தர் நெறியை வீழ்த்தித்

தம்சமயம் மேலோங்கச் செய்யும் சூழ்ச்சி

நன்றாமோ ?

உலகுக்குக் கொல்லா நோன்பை

நடுவாய்ந்து முதற்புகன்றோர் புத்தர் தாமே !

( புத்தர் புகன்றார் இல்லை : 29-32 , நான்காம் தொகுதி )

என்று புத்தர் அருள் உணர்வின் அடிப்படையில் உயிர்களைக் கொல்லாதீர் , புலால் உணவு தவிர்ப்பீர் என்று கூறியதைப் பாரதிதாசன் காட்டுகின்றார் .

பாரதிதாசன் புலால் உண்பவரே ஆயினும் அவர் உள்ளம் கொல்லாமையில் பிடிப்புக் கொண்டிருந்தது .

குடும்பவிளக்கு நூலில் அவர் பல்வேறு சமையல் பக்குவங்களை எடுத்துரைக்கின்றார் .

அவற்றில் ஒன்றுகூடப் புலால் வகை சார்ந்தது இல்லை .

பாரதிதாசன் இராமலிங்க வள்ளலாரையும் , ராமானுசரையும் ஏற்றுக் கொண்டவர் .

குமரகுருபரரையும் அவர் பாடிய மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழையும் பாரதிதாசன் ‘ எதிர்பாராத முத்தம் ’ என்ற நூலில் பாராட்டுகின்றார் .

இச்சான்றோர்கள் கற்பித்த நெறியை எல்லோரும் அறிந்து பின்பற்ற வேண்டுமென்று பாரதிதாசன் விரும்பினார் .

2.3 சாதிகள் ஒழிக

E

' சாதி ’ என்ற சொல்லே தமிழுக்கு உரியதில்லை , பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சாதிப் பிரிவுகள் பழந்தமிழகத்தில் இல்லை .

சாதி மதம் தமிழ் இல்லை - அந்தச்

சாதி மதத்தைத் தமிழ்கொள்வ தில்லை .

பன்மணித்திரள் ( பக் : 67 )

என்பது பாரதிதாசன் கூற்று .

தமிழ்நாட்டில் சாதி வேரூன்றி வளர்ந்து விட்டது . பெயருக்குப் பின்னால் சாதியைக் குறித்து வழங்குவதை மதிப்பாகச் சமூகம் கருதியது .