177

தெருக்களின் பெயர்களில் கூடச் சாதிப்பெயர்கள் ஆட்சி கொண்டிருந்தன .

மேல்சாதி கீழ்ச்சாதி என்ற பாகுபாடு பலருடைய உள்ளத்திலும் உணர்விலும் இருந்தது .

தீண்டாமை என்ற கொடிய வழக்கம் தமிழகத்தின் முன்னேற்றத்தை வெறும் கனவாக்கிக் கொண்டிருந்தது .

சாதி நம் பண்பாட்டுக்கு முரண் என்று கூறிய பாரதிதாசன் சாதி இருக்கின்றது என்று கூறுவோன் இன்னும் உயிர் வாழ்கின்றானே என்று துடிக்கின்றார் .

இருட்டறையில் உள்ளதடா உலகம் !

சாதி

இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே !

( பாண்டியன் பரிசு , 56 : 17-18 )

என்று அவர் பாடுகின்றார் .

சாதிகளை ஒழிப்பதற்குக் கவிஞர் கொடுத்த குரல் தமிழ் நாடெங்கும் பரவியது .

அவர் அச்சமின்றிச் சாதிகளைச் சாடினார் ; வாழ்நாள் முழுதும் சாதி ஒழிப்புப் போர் நிகழ்த்தினார் .

2.3.1 வருணக் கொடுமைகள் கெடுக

மனித குலத்தை நான்கு வருணங்களாகப் பிரித்து அவற்றிற்கு உயர்வு தாழ்வு கற்பித்த கொடுமை நாட்டில் பரவிவிட்டது .

கடவுளின் முகத்தில் தோன்றியவர் ஒரு வருணத்தார் ; தோளில் தோன்றியவர் இரண்டாவது வருணத்தார் ; இடையிற் பிறந்தவர் மூன்றாவது வருணத்தார் ; தொடையிற் பிறந்தவர் நான்காம் வருணத்தவர் என்று அயல்மொழியாளர் கற்பித்த நெறி தமிழ்நாட்டிற்குள் புகுந்து விட்டது .

பலர் இதை உண்மையாக இருக்கக்கூடுமென நம்பிவிட்டனர் .

ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற முடியும் .

ஆனால் ஒரு வருணத்தவர் மற்றொரு வருணத்தவராக மாற முடியாது .

இராமானுஜர் , சுப்பிரமணிய பாரதியார் ஆகியோர் தாழ்ந்த வருணத்தவரை உயர்ந்த வருணத்தவராக மாற்ற முயன்றனர் .

பாரதிதாசனும் வருணக் கொடுமையை எதிர்க்கப் புயலாகப் புறப்பட்டார் .

வருணங்கள் உண்டாக்கப்படுவதற்கு முன்பு உலகம் ஒழுங்காய் இருந்தது ; பல முன்னேற்றங்களைத் தொழிலாளர் உழைப்பால் உலகம் கண்டது .

வருணங்கள் உண்டாக்கப்பட்ட பின்பு மனிதரிடையே வேற்றுமைகள் வளர்ந்தன .

இக்கால நால்வருணம் அன்றி ருந்தால்

இருட்டுக்கு முன்னேற்றம் ஆவ தன்றிப்

புக்கபயன் உண்டாமோ ?

( புரட்சிக்கவி : 426-428 , முதல் தொகுதி )

என்று கேட்கிறார் .

ஒவ்வொரு வருணத்தவருக்கும் ஒரு நீதி உரைக்கப்பட்டது .

சட்டை அணிந்து கொள்வதும் , செருப்பணிந்து கொள்வதும் கூட குறிப்பிட்ட வருணத்தவர்க்கு ஒவ்வாத செயல்களாக உரைக்கப்பட்டன .

கீழ்வருணத்தவரைச் ‘ சூத்திரர் ’ என்று இகழ்ந்தனர் .

இந்திய ஒருமைப்பாட்டை வருணப் பாகுபாடு குலைத்துவிடுமென்று பாரதிதாசன் எச்சரித்தார் .

அவருடைய நெருப்புக் கவிதைகளால் வருணப்பாகுபாடு சுட்டுப் பொசுக்கப்பட்டது .

2.3.2 தீண்டாமை வீழ்க

தொட்டால் தீட்டு , பட்டால் பாவம் என்ற கருத்தை வருணப் பாகுபாட்டைப் பரப்பியவர்கள் விதைத்தார்கள் .

உழைக்கும் தொழிலாளர்களை இப்பாகுபாடு ‘ பஞ்சமர் ’ என்று கண்டது .

பஞ்சமர் என்றால் நான்கு வருணத்திற்கும் அப்பாற்பட்ட ஐந்தாவது தாழ்ந்த பிரிவினர் என்பது பொருள் .

தொழிலாளி உருவாக்கிய நெல்லுக்கும் .

காய்கறிகளுக்கும் , பாலுக்கும் , தயிருக்கும் , கனிகளுக்கும் தீட்டு இல்லை .

ஆனால் அவன் உயர்ந்த வருணத்தார் வாழும் தெருக்களிலே நடக்கும் உரிமை அற்றிருந்தான் .

அவனைத் தொட்ட தீட்டை நீரில் மூழ்கித் துடைத்தனர் மேல்வருணத்தவர் .

சதுர்வர்ணம் சொன்னபோது

தடிதூக்கும் தமிழ்மக்கள்

அதில் ஐந்தாம் நிறமாயினர் - சகியே

அதில் ஐந்தாம் நிறமாயினர் .

( சமத்துவப்பாட்டு : 381-384 , மூன்றாம் தொகுதி )

என்று அதனை ஒழிக்க முயன்றவர்களைப் ‘ பஞ்சமர் ’ என்று ஒதுக்கிவைத்தது மேல்குலம் .

வரலாற்றில் தீண்டாமை நீண்ட காலமாக இடம் பெற்றுப் பல கொடுமைகளை இழைத்து விட்டது .

நந்தனாரையும் திருப்பாணாழ்வாரையும் அது கோயிலுக்குள் புகவிடாமல் தடுத்தது .

எலிகளும் , பெருச்சாளிகளும் ஓடி உலவும் கோயிலுக்குள் உயிரும் உணர்வும் உள்ள மனிதர்கள் புகுதல் தடுக்கப் பெற்றது .

தீண்டாமை என்னுமொரு பேய் - இந்தத் தேசத்தினில் மாத்திரமே திரியக் கண்டோம்

( ஞாயமற்ற மறியல் : 17-18 , மூன்றாம் தொகுதி )

என்று கவிஞர் கூறினார் .

கவிஞரின் எரிமலைக் கவிதைகள் தீண்டாமை நீங்கப் பெரும் புரட்சி செய்தன .

தீண்டாமை சட்டப்படிக் குற்றமாக்கப்பட்டது .

இன்று நாகரிக மனிதர்கள் தீண்டாமையை ஏற்கவில்லை .

2.3.3 சாதியற்ற சமூகம் மலர்க

சாதி என்பது ஓர் இருட்டு .

அந்த இருட்டு அகன்றாலே உலகம் விடியும் .

இந்தக் கருத்தைப் பாரதிதாசன் குழந்தைகளின் தாலாட்டுப் பாட்டிலேயே சேர்த்துரைத்தார் .

வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்

தூண்டா விளக்காய் துலங்கும் பெருமாட்டி

( பெண்குழந்தை தாலாட்டு : 17-18 , முதல் தொகுதி )

என்று பெண்குழந்தையைத் தாலாட்டுகின்றார் .

சாதி எங்கே பெரிய தடையை விதித்தது தெரியுமா ?

ஆணும் பெண்ணும் காதலிப்பார்கள் ; உயிர் ஒன்றிய நிலையில் அவர்களிடையே அன்பு பெருகும் ; காதல் செழிக்கும் ; அப்போது அந்தக் காதல் என்ற பச்சை மரத்தை வெட்டச் சாதிக் கோடரி நீளும் .

காதல் இருவர்களும் - தம்

கருத்தொருமித்தபின்

வாதுகள் வம்புகள் ஏன் ? - இதில்

மற்றவர்க் கென்ன உண்டு ?

சூதுநிறை உளமே - ஏ

துட்ட இருட்டறையே !

நீ

திகொள் ’ என்றுலகை - அவள்

நிந்தனை செய்திடுவாள் .

( காதற் பெருமை : 65-72 .

முதல் தொகுதி )

என்று ஒரு காதலி புலம்புவதைக் கவிஞர் ஓவியம் செய்கின்றார் .

சாதிப் பாகுபாட்டால் எத்தனைக் காதலர்கள் நஞ்சருந்தினர் ?

ஆற்றிற் பாய்ந்தனர் ?

கடலில் மூழ்கினர் ?

தீயிற் குளித்தனர் ?

இன்னும் இப்படிப்பட்ட செய்திகளுக்குச் செய்தித் தாள்களில் இடமில்லாமல் போகவில்லை .

கவிஞர் சாதி ஒழியக் கலப்புமணம் நல்ல தீர்வு என்று கருதினார் .

அவர் எழுதிய ‘ பாண்டியன் பரிசு ’ என்னும் காவியத்தில் இளவரசி அன்னம் என்பவள் தன் திருமணத்தைக் குறித்துக் கூறுகையில் ‘ இவ்வுலகில் எல்லோரும் நிகரே ’ என்கிறாள் .

திருமணத்திற்குச் சாதி பார்க்கக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்துகிறாள் .

சாதியற்ற சமூகம் கவிஞரின் கனவு .

அக்கனவு மெல்ல மெல்ல உருவாகி வருகின்றது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. ஓடப்பர் என்பவர் யார் ?

[ விடை ]

2. உலகம் யாரால் உருவானது என்று பாரதிதாசன் கூறுகிறார் ?

[ விடை ]

3. புனிதத்தன்மை எப்போது வருமென்று கவிஞர் கூறுகிறார் ?

[ விடை ]

4. மதம் சமுதாயத்தில் என்ன செய்யுமென்று பாரதிதாசன் கருதுகின்றார் ?

[ விடை ]

5. சமயத் தலைவர்களில் யார் யாரைப் பாரதிதாசன் ஏற்றுக் கொள்கிறார் ?

2.4 மூடப்பழக்கங்களை அழிப்போம்

E தமிழ்ச் சமுதாயம் பகுத்தறிவுப் பாதையிலிருந்து விலகி மூடப்பழக்கங்கள் என்ற குழிகளில் விழுந்து விழுந்து நலிந்து கொண்டிருந்தது .

அதனை அவ்வப்போது கரையேற்றும் முயற்சிகள் இருந்தன .

எனினும் , அக்குழிகளைத் தூர்த்துப் பகுத்தறிவு நெறியில் செலுத்தும் பணியைப் பெரியார் இராமசாமி ஏற்றார் .

தொடக்கத்தில் கல்லெறியும் சொல்லெறியும் அவர்க்குக் கிடைத்தன .

இதோ அவர் உருவத்தைக் கவிஞர் வருணிப்பதைப் பாருங்கள் !

தொண்டு செய்து பழுத்த பழம்

தூயதாடி மார்பில் விழும்

மண்டைச்சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும் !

( பெரியார் ! : 16-19 )

‘ பகுத்தறிவுப் பகலவன் ’ என்று மக்களால் போற்றப் பெற்ற பெரியார் குழந்தை மணம் , கட்டாய மணம் , வைதிகச் சடங்குகள் , சோதிடம் ஆகியவற்றைச் சாடினார் .

பாரதிதாசன் இந்த மூடப்பழக்கங்களைக் கவிதை மூலம் தாக்கிப் பலரை விழிப்புறச் செய்தார் .

இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில்

முப்பத்து முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன ?

செப்பும் இயற்கை வளங்கள் செறிந்தென்ன ?

மூடப்பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம்

ஓடுவதென்றோ ?

உயர்வது என்றோ ?

( சஞ்சீவி பர்வதத்தின் சாரல் : 397-401 , முதல்தொகுதி )

2.4.1 குழந்தைமணக் கொடுமை

பால்ய மணம் என்று சொல்லப்பட்ட குழந்தை மணம் இந்தியா முழுவதும் வழக்கத்தில் இருந்தது .

வைதிக நெறி இந்த வழக்கத்தைப் புகுத்தியது .

சாதிவிட்டுச் சாதி திருமணம் நடப்பதைத் தடுக்கவே இந்த அகமண முறை ( சாதிக்குள்ளேயே திருமண முறை ) அமைந்தது .

ஆனால் இதன் பின்விளைவுகள் எவ்வாறு இருந்தன ?

மணம் செய்து கொண்ட சிறுவன் இறந்து விட்டால் சிறுமி கைம்பெண் ஆகிவிடுவாள் .

அவளுக்கு அறிவு முதிர்ந்து பருவம் அடைகின்றபோது தாங்காத துயரம் அவளைச் சேரும் .

அவள் வெள்ளைப் புடவை உடுத்த வேண்டும் .

யார் முன்னிலையிலும் வரக்கூடாது ; வந்தால் , அபசகுனம் ( கருதிச் செல்லும் செயல் நடைபெறாது ) என்று பொருளாகுமாம் .

மங்கலமான செயல்களுக்கு அவள் ஒவ்வாதவள் .

அவள் நெற்றியில் குங்குமப் பொட்டிடுதலோ , கூந்தலில் மலர் சூடுதலோ கூடாது .

அப்படிப்பட்ட ஒருத்தி வளர்ந்த பின் காதல் கொண்டதைக் கண்டு தாய் கொதித்துப் பேசுகிறாள் ; காதலனின் தாயும் அவர்கள் காதலை ஏற்க மறுக்கிறாள் .

கவிஞர் அதனைக் காட்டுகிறார் பாருங்கள் !

பெற்ற இளந்தலைக் கைம்பெண்ணடீ ! - என்ன

பேதைமை என்றனள் , மங்கையின் தாய் .

சிற்சில ஆண்டுகள் முற்படவே - ஒரு

சின்னக் குழந்தையை நீ மணந்தாய் ;

குற்றம் புரிந்தனை இவ்விடத்தே - அலங்

கோலமென்றாள் அந்தச் சுந்தரன் தாய்

புற்றரவு ஒத்தது தாயர் உள்ளம் - அங்குப்

புன்னகை கொண்டது மூடத்தனம் .

( காதற்குற்றவாளிகள் : 41-48 .

முதல் தொகுதி )

இவ்வாறு உள்ளத்தில் படியுமாறு சொல்லிச் சொல்லி இன்று இந்த வழக்கம் பெரும்பாலும் ஒழிந்துவிட்டது .

2.4.2 கிழவனுக்கு மணமா ?

வயது முதிர்ந்தவர் இளம்பெண்களை மணக்கும் கொடுமையும் நாட்டில் இருந்தது .

வறுமை காரணமாக ஒருவன் , தன் மகளைக் கிழவன் ஒருவனுக்கு மணம் செய்து கொடுத்துவிடுகிறான் .

மகளைப் பெற்ற தாய் தன்மகள் வாழ்க்கையைப் பார்க்கிறாள் , என்ன கொடுமை !

நரைத்த தலை ; சோர்ந்த உடல் ; மருமகக் கிழவன் பள்ளியறையில் வாயெச்சில் ஒழுகத் தூங்கிக் கிடக்கிறான் .

மகள் என்ன செய்தாள் தெரியுமா ?

பாலில் நஞ்சு கலந்து குடிக்கப் போனாள் . தாய் ஓடித் தடுத்தாள் .

என்னைச் சாகவும் விடாத பாழுந்தாயே !

என்று மகள் குமுறினாள் .

தாய் , சமூக அமைப்பைத் தூற்றுகிறாள் .

மண்ணாய்ப் போக !

மண்ணாய்ப் போக !

மனம் பொருந்தா மணம் மண்ணாய்ப் போக !

சமூகச் சட்டமே !

சமூக வழக்கமே !

நீங்கள் , மக்கள் அனைவரும்

ஏங்கா திருக்க மண்ணாய்ப் போகவே !

( மூடத்திருமணம் : 46-51 .

முதல்தொகுதி )

என்று துயரம் தாங்காது புலம்புகிறாள் .

பொருந்தா மணம் என்பது செல்வர்கள் தம் பணவலிமையில் சமூகத்தில் இழைக்கும் கொடுமையாக இருந்தது .

இவ்வழக்கம் பெரும்பாலும் இன்று ஒழிந்தது .

2.4.3 சோதிடம் இகழ்

மனிதனின் உழைப்பும் முயற்சியும் இகழப்பட்டன .

மனிதனின் வாழ்வை முடிவு செய்வன வானில் உள்ள கோள்களே என்று கூறிய சோதிடம் வாழ்க்கை வழிகாட்டி ஆகிவிட்டது .

குருப்பெயர்ச்சி , சனிப்பெயர்ச்சி என்று கூறி மக்கள் அலையத் தொடங்கினர் .

நவக்கிரகங்கள் என்று கூறப்பட்ட ஒன்பது கோள்களுக்கு உரிய சிறப்புத் தலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு கழுவாய்த் தேடினர் .

திருமணம் செய்யத் தடையாகச் ‘ செவ்வாய் தோஷம் ’ என்பது

கூறப்பட்டது .

மனிதனின் ஜாதகத்தில் செவ்வாய்க்கோள் இருக்குமிடம் கொண்டு இந்தச் ‘ செவ்வாய்தோஷம் ’ என்பது முடிவு செய்யப்பட்டது .

ஒருநாளில் ஆகாத நேரம் என்று இராகுகாலம் ஒன்றரை மணி நேரமும் எமகண்டம் ஒன்றரைமணியும் ஒதுக்கப்பட்டன .

வாரசூலை , அட்டமி , நவமி , பரணி , கார்த்திகை என்று பயணத்திற்கு ஒவ்வாத நாட்களின் பட்டியல் போடப்பட்டது .

இப்படிப்பட்ட நம்பிக்கைகள் கொண்ட குடும்பம் முன்னேறுமா ?

பாரதிதாசன் ‘ இருண்டவீடு ’ என்னும் நூலில் இத்தகைய மூடநம்பிக்கைகளால் கெட்டழிந்த குடும்பத்தைக் காட்டுகின்றார் .

‘ நல்லமுத்துக் கதை ’யின் வழியாகச் சோதிடம் கூறுவானின் பொய்ம்மை வெளிப்படுத்தப்படுகின்றது .

ஆடியில் திருமணம் கூடுதல் உறுதி

( நல்லமுத்துக்கதை : 53 , மூன்றாம் தொகுதி )

என்கிறார் சோதிடர் .

ஆடி மாதத்தில் எப்படிக் கூடும் என்று மற்றவர் கேட்கிறார் .

ஏனெனில் சாத்திர வழக்கப்படி ஆடி மாதத்தில் திருமணம் நடத்துதல் இல்லை .

உடனே சோதிடம் கூறுபவர் விழித்துக் கொள்கிறார் .

ஆடி கடைசியில் ஆகும் என்றால்

ஆவணி முதலில் என்றுதான் அர்த்தம்

( நல்லமுத்துக்கதை : 55-56 , மூன்றாம் தொகுதி )

என்கிறார் .

இப்படி ஏமாற்று வேலை நிகழ்கிறது .

இச்சோதிடம் இகழத் தக்கது என்று உணர்த்துகிறார் பாவேந்தர் .

2.5 சுயமரியாதைச் சமூகம்

E

பாரதிதாசன் தாம் காணவிரும்பிய தமிழ்ச் சமுதாயம் சுயமரியாதை மிக்கதாக இருக்க வேண்டுமென்று விரும்பினார் .

தமிழ் , தமிழர் , தமிழ்நாடு இவற்றின் பெருமைக்குக் குறைவு வராமல் இருத்தல் வேண்டும் .

தொழிலாளர் உழைப்புக்கு மதிப்பளித்தல் வேண்டும் .

பெண்ணுலகு தலை நிமிர்ந்து வாழ வேண்டும் .

அடிமையாகிக் கிடக்காமல் மனிதரெல்லாரும் உரிமை பெற்றுத் திகழ வேண்டும் .

இவையே அவர் விரும்பிய சுய மரியாதைச் சமூகத் தன்மைகள் .

சுயமரியாதைச் சமூகத்தில் உயர்வென்றும் தாழ்வென்றும் இல்லை ; அங்கு மக்கள் எல்லாரும் சமம் . மனிதனை அடிமைப்படுத்துவதற்குரிய கருவிகளான சாதி , மதம் ஆகியவற்றுக்கு அங்கு இடமில்லை .