178

2.5.1 உழைப்பவர் உயர்க

உழைப்பவரால் உருவானது இந்த உலகம் .

தொழிலாளர் யாவரினும் உயர்ந்தோராகக் கருதத்தக்கவர் .

ஆனால் சமுதாயத்தில் அவர்கள் நிலை என்ன ?

அதோ வானத்தைப் பாருங்கள் !

விண்மீன்கள் ; இந்த விண்மீன்களைப் பூக்கள் என்றும் வைரங்கள் என்றும் சோளப் பொரிகள் என்றும் வான மகளின் சிமிட்டும் கண்கள் என்றும்தான் கவிஞர்கள் எல்லாம் பாடினார்கள் .

பாரதிதாசன் மீன்களை எப்படிப் பார்க்கிறார் தெரியுமா ?

அவை வானத்தில் ஏற்பட்ட கொப்புளங்கள் என்கிறார் .

ஏன் கொப்பளித்தது ?

தொழிலாளர் பகல் பொழுது முழுதும் உழைத்து அந்தியிலே தங்கள் உரிமையைக் கேட்ட போது முதலாளிகள் சீறினார்கள் ; வசை பொழிந்தார்கள் ; இதனைக்கண்டு வானம் கொப்பளித்து விட்டது என்கிறார் .

மண்மீதில் உழைப்பா ரெல்லாம்

வறியராம் ; உரிமை கேட்டால்

புண்மீதில் அம்பு பாய்ச்சும்

புலையர்செல் வராம்இ தைத்தான்

கண்மீதில் பகலி லெல்லாம்

கண்டுகண்டு அந்திக் குப்பின்

விண்மீனாய்க் கொப்ப ளித்த

விரிவானம் பாராய் தம்பி !

( அழகின் சிரிப்பு )

என்பது பாவேந்தர் பாட்டு .

சித்திரச் சோலைகள் உருவாக எத்தனைத் தோழர்கள் இரத்தம் சொரிந்திருப்பார்கள் !

நெல்விளையும் நிலங்களுக்கு எத்தனை மனிதர் வியர்வை இறைத்திருப்பார்கள் !

தாமரை பூத்த தடாகங்களைச் சமைக்க எத்தனை மாந்தர் மண்ணுக்கடியில் புதைந்திருப்பார்கள் !

நெடும்பாதைகள் , ஆர்த்திடும் இயந்திரக் கூடங்கள் , ஆகியன எல்லாம் தொழிலாளர் உழைப்பால் மலர்ந்தவை அன்றோ !

இவர்கள் நிலை மாறப் புதிய உலகு படைக்க வேண்டுமென்று கூறுகிறார் கவிஞர் .

கோடரிக்காரனைக் காதல் தலைவனாகப் படைத்த பெருமை பாரதிதாசனுக்கு உண்டு .

கூடைமுறம் கட்டுவோர் , பூக்காரி , குறவர் , ஆலைத்தொழிலாளி , உழத்தி , சுண்ணாம்பு இடிப்போர் ஆகியோரின் ஏற்றத்தைப் பாடிய கலைஞரும் அவரே .

2.5.2 புரட்சித் திருமணம்

பழந்தமிழர் திருமணத்தில் வேதமந்திரங்களோ , தீ வளர்த்தலோ , தாலி அணிவித்தலோ இல்லை .

இடையில் புகுந்த இந்த வழக்கங்கள் இல்லாத தமிழ்த் திருமணத் திட்டத்தைக் கவிஞர் வகுத்தளித்துள்ளார் .

1. பெரியார் ஒருவர் தலைமை தாங்க முன்மொழிதல்

2. வழிமொழிதல்

3. அவைத்தலைவர் தமிழ்த்திருமணம் குறித்துப் பேசுதல்

4. மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்த உரை கூறல்

4. மாலையும் கணையாழியும் மாற்றிக் கொள்ளுதல்

5. அறமொழிகளால் வாழ்த்துக் கூறல்

6. வந்தோர்க்கு நன்றி கூறல்

என அத்திருமணம் அமைகின்றது .

இத்திருமணம் இன்று தமிழ்நாட்டில் பரவலாக நடைபெறுகின்றது .

இதோ அந்தத் திருமண வாழ்த்துக் கேளுங்கள் !

ஒருமனதாயினர் தோழி - இந்தத்

திருமணமக்கள் என்றும் வாழி

பெருமனதாகி இல்லறம் காக்கவும்

பேறெனப்படும் பதினாறையும் சேர்க்கவும்

ஒரு மனதாயினர் தோழி

இசையமுது - II

2.5.3 கல்வி ஓங்குக

சமுதாயம் சீர்பெறக் கல்வி வேண்டும் .

கல்வியில்லாத வீடு ஒளிவிளக்குகள் இருந்தாலும் இருண்ட வீடே ! கல்வியில்லாத சமுதாயம் களர் நிலம் .

இவ்வாறு பாரதிதாசன் கருதினார் .

ஆண் பெண் எல்லாரும் கற்க வேண்டுமென்று வற்புறுத்தினார் .

என்னுடைய அருமைத் தமிழ்நாட்டில் எல்லோரும் கல்வி கற்று இமயமலையென ஓங்கினார் என்று கூறும் நாள் எந்நாளோ ?

எனக் கவிஞர் கேட்கிறார் .

இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்

என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்

துன்பங்கள் நீங்கும் ......

( தமிழ்ப் பேறு : 21-23 .

முதல் தொகுதி )

என்று தமிழ்க்கல்வி யாவருக்கும் வேண்டுமென்று வற்புறுத்துகின்றார் .

கல்வி ஓங்கிய தமிழ்ச் சமுதாயம் அவர் கனவு .

அஃது இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது .

2.6 தொகுப்புரை

மாணவர்களே !

பாரதிதாசன் கனவு கண்ட சமுதாயத்தைப் பற்றி இதுவரை விரிவாகப் பார்த்தோம் .

அச்சமுதாயம் ,

• சாதி மதங்களற்றது

• வருணப் பாகுபாடற்றது

• சமத்துவத் தன்மை உடையது

• மூடப்பழக்கங்கள் இல்லாதது

• சுயமரியாதை மிக்கது

• உழைப்பவர்க்கு மதிப்பளிப்பது

• எல்லோரும் கற்றவர்களாகத் துலங்குவது

இந்தச் சமுதாயம் இன்றும் முழுமையாக உருவாகிவிடவில்லை .

அதனை நோக்கிய பயணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .

‘ தடைக்கற்கள் உண்டு என்றாலும் தடந்தோள் உண்டு ’ எனப் பாரதிதாசன் கூறுவதுபோல் மன உறுதியோடு அதனை அடைய முயலவேண்டும் .

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1. பகுத்தறிவுப் பகலவன் என்று போற்றப் பெற்றவர் யார் ?

2. அகமணமுறை என்பதன் பொருள் யாது ?

3. புரட்சித் திருமணத்தின் ஏழு கூறுகள் யாவை ?

4. கல்வியில்லாத சமுதாயம் எது போன்றது ?

பாரதிதாசன் கண்ட பெண்ணுலகம்

3.0 பாட முன்னுரை

ஆண் , பெண் என்ற இருபால்களும் உலக வாழ்வின் இயக்கத்திற்கு இன்றியமையாதன .

ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்வின் நிறைவிலேயே வையம் சிறக்கின்றது .

வண்டிக்கு இருபுறம் அமைந்த சக்கரங்கள் ; மனித உடம்பிற்கு இரண்டு கால்கள் ; வானவெளிக்குக் கதிர் நிலவு என இரண்டு சுடர்கள் , இப்படிச் சமமாக அமைந்த இரட்டைப் பொருள்களாக வாழ்க்கைக்கு ஆண் பெண் அமைகின்றனர் .

ஆனால் உலகம் காலகாலமாகப் பெண்ணை ஆணுக்குச் சமமாக நடத்தியதா ?

இல்லை .

ஆணாதிக்கப் பிடியில் பெண் உரிமை இழந்தாள் .

சமைப்பது , பிள்ளை பெறுவது என்பனவே அவள் கடமைகள் .

கணவனின் கொடுமைகளையெல்லாம் அவள் தாங்கினாள் .

பெண் சித்திரவதைப்பட்டாள் ; ஆமையாய் , ஊமையாய் வாழ்ந்தாள் .

காட்சி

அவளுக்கு எதிராகவே சாத்திரங்கள் , புராணங்கள் எல்லாம் எழுந்தன .

‘ வரதட்சணை ’ என்ற கொடுமையில் அவள் திருமணப்பந்தலை அணுக முடியாதவளாக இருந்தாள் .

நம் புதிய உலகின் சட்டங்களும் தொடக்கத்தில் அவளுக்குச் சொத்துரிமை தரவில்லை .

ஆண் குழந்தை என்றால் அகமகிழும் சமுதாயம் பெண்குழந்தையைக் கருவிலேயே கண்டு அழிக்கத் தொடங்கியது .

அறிவு வளராத சிற்றூர்களில் பெண் குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பாலுக்குப் பதிலாக எருக்கம் பாலிட்டுக் கொலை செய்யப்பட்டது .

இந்தக் கொடுமைகளை எதிர்த்துச் சீர்திருத்தக் குரல் முழங்கியவர் சிலர் . அந்தச் சிலரில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குப் பெரும்பங்குண்டு .

தமிழ்ச் சமுதாயத்தில் இன்று பெண் தலைநிமிர்ந்து இருப்பதற்கு அவர் எழுதுகோல் தலைகுனிந்து பணியாற்றியதே பெரிய காரணமாகும் .

அவர் கண்ட பெண்ணுலகம் எத்தகையது என்பதைக் காண்போமா ?

3.1 பாரதிதாசன் கண்ட பெண்

E

இதோ நாக்கைத் துருத்திக் கொண்டு கண்களை உருட்டி விழித்தபடிச் செக்கச் செவேர் என்று கையில் போர்க்கருவி ஏந்தி நிற்கும் காளிதேவியைப் பாருங்கள் !

பக்தர்கள் இவருக்குப் படையலிடும் சிறப்பும் , பூக்குழி என்று கூறி நெருப்புக் கட்டிகளில் பாதம் பதிய நடக்கும் பணிவும் பாருங்கள் !

ஆம் !

காட்சி

இவளுக்குச் சக்தி என்று பெயர் .

கடவுள்களில் பெண் கடவுளுக்குச் சக்தி இருந்தது .

ஆனால் மனிதப் படைப்பில் பெண்ணுக்குச் சக்தி இல்லாமல் போய் விட்டது .

எனினும் அவ்வப்போது மாதர் திலகங்கள் நாடாண்டனர் ;

காட்சி

வாளேந்திப் போர் செய்தனர் ; விண்ணேறிப் பறந்தனர் ; கோள்களைத் தொட்டனர் .

என்றாலும் இவற்றையெல்லாம் விதிவிலக்கு என்று கருதிற்று உலகம் .

பாரதியார் ‘ பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் ’ என்று பெண்களை உரிமை மிக்கவர்களாகப் படைத்தார் .

பாரதிதாசன் பெண்களைப் புரட்சி செய்யத் தூண்டினார் .

பெண் ஆண் என்ற

இரண்டு உருளையில் நடக்கும் இன்ப வாழ்க்கை

( 29. பெண்களைப் பற்றி பெர்னாட்ஷா தொ.1 )

என்று கூறி ஆண் , பெண் சமம் என்றார் .

பெண் விடுதலை பெறாத வரையில் நாடு விடுதலை பெற முடியாது என்று கவிஞர் கருதினார் .

நாட்டின் மக்கள் தொகையில் பாதியாய் உள்ள பெண்கள் சேர்ந்து முயலாமல் நாட்டு விடுதலையை எப்படி ஈட்ட முடியும் ?

பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் திருநாட்டு

மண்ணடிமை தீர்ந்துவரல் முயற்கொம்பே

( சஞ் .

ப.சா. தொ.1 )

என்றார் .

முயலுக்குக் கொம்பு உண்டா ?

அதுபோலத்தான் நாட்டு விடுதலையும் இல்லை என்று ஆகிவிடும் எனக் கருதுகிறார் .

பெண்கள் சிரித்தால் போயிற்று எல்லாம் என்று பழமொழி கண்டதல்லவா நம் உலகம் .

அவள் சிரிக்கக்கூடாது அதிகபட்சம் புன்னகைக்கலாம் ; அதுவும் மிக நெருங்கிய உறவினர்களிடம் .

அவள் குனிந்த தலைநிமிராமல் இருந்தால் சிறப்பு .

இதோ பாரதிதாசன் இரண்டு வகைப் பெண்களைப் படைக்கின்றார் பாருங்கள் .

அதோ !

ஒரு பெரிய மலையைக் காணுங்கள் !

அதுதான் சஞ்சீவி பர்வதம் .

அங்கே குப்பன் என்பவன் வந்து நிற்கிறான் .

குப்பனுடைய காதலி குப்பனிடம் கூறுகிறாள் .

“ மலையின் உச்சியில் உள்ள மூலிகை வேண்டும் .

போய்ப் பறித்து வாருங்கள் ” என்கிறாள் .

குப்பன் மலைக்கிறான் .

இவ்வளவு பெரிய மலையின் உச்சியை எப்படி அடைவது என்று எண்ணுகிறான் .

அவன் மலைப்பதைக் கண்டு அவள் சிரித்துவிட்டாள் .

அவ்வளவுதான் .

குப்பன் காதலியையும் தூக்கிக் கொண்டு மலையின் மீது தாவினான் ; பறந்தான் .

எப்படி முடிந்தது அவனால் ?

கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்

( சஞ் . ப.சா. தொ.1 )

என்கிறார் .

பெண் , மற்றவர்களை இயக்கும் சக்தியாகத் திகழ்வதை இங்கு நாம் கண்டோம் .

இதோ இன்னொரு வகைப் பெண்ணைப் பாருங்கள் !

சுப்பம்மா தமிழச்சி ; தேசிங்கு மன்னனின் படை அதிகாரியான சுதரிசன் என்பவன் தீய நோக்கோடு சுப்பம்மாவை அணுகுகின்றான் .

அப்போது அவள் ,

கத்தியை நீட்டினாள் ; தீ என்னை வாட்டினும்

கையைத் தொடாதேயடா - இந்த

முத்தமிழ் நாட்டுக்கு மானம் பெரிதன்றி

மூச்சுப் பெரிதில்லை காண்

( தமிழச்சியின் கத்தி - 20 )

என்று வீர மற உணர்வோடு கூறுகின்றாள் .

தேவைப்பட்டால் தானே இயங்கவும் செய்வாள் என்பதற்குக் கவிஞர் படைத்துக் காட்டும் எடுத்துக்காட்டு இது .

3.1.1 பகுத்தறிவுப் பெண்

புரட்சிக் கவிஞரின் பெண் மூடப்பழக்கங்களை ஏற்காதவள் .

பெண்ணுரிமையை மற்றவர்கள் தரும் வகையில் அவள் காத்திருப்பதில்லை .

இதோ ஒரு காட்சி காணுங்கள் !

சோலையிலே நிற்கின்றாள் அந்த அழகுமயில் ; செல்வப்பிள்ளை ஒருவன் அவளைக்கண்டு விழிகளில் அள்ளினான் .

அருகில் வந்தான் .

தன் கன்னத்தில் முத்தமொன்று கேட்டான் .

‘ படித்திருக்கின்றீரா ’ ?

என்று அவள் கேட்டாள் .

பலநூல் படித்த பண்டிதன் நான் என்றான் அவன் .

‘ அப்படியானால் பெண்ணுக்கு உரிமையுண்டா ?

சொல்க ’ என்று கேட்டாள் .

‘ கொடுத்தால் பெற்றுக் கொள்வதுதான் அறம் ’ என்றான் அவன் .

‘ நானே எடுத்துக் கொண்டால் என்ன ’ என்று கேட்டு அவனை மடக்கினாள் .

அதனோடு விட்டாளா அவள் ?

இல்லை இல்லை .

அவன் அவளை நெருங்க முற்பட்டபோது வாளை உருவினாள் ; ஓடிப்போ என்று விரலால் குறிப்புக் காட்டினாள் .

ஓடினான் ஓடினான் ; வாழ்க்கையின் ஓரத்திற்கே அவன் ஓடினான் .

செல்வப் பிள்ளாய் !

இன்று புவியில் பெண்கள்

சிறுநிலையில் இருக்க வில்லை !

விழித்துக் கொண்டார் !

( பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி )

என்று கூறிக் கவிஞர் மதிக்கிறார் .

இப்படிப்பட்ட பெண் பிறந்தபோது அவளைத் தாலாட்டும் கவிஞர் மொழி கேளுங்கள் !

மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற

காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே !

( பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி )

கற்பூரம் வைத்திருந்த பெட்டியைத் திறந்தவுடன் காடு முழுதும் மணப்பதுபோல் இந்தச் சமுதாயம் முழுதும் அவள் புகழ் பரப்பப் பிறந்திருக்கிறாள் .

இப்படிப்பட்ட பகுத்தறிவுச் சுடராகப் பாரதிதாசனின் பெண் திகழ்கின்றாள் .

3.1.2 செயல்திறன் வாய்ந்த பெண்

நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்றார் கவிஞர் .

அந்தப் பல்கலைக்கழகத்தின் மைய அச்சுப் பெண்தான் .

பழைய நூல்கள் பெண் என்பவள் , தாதியாக , தாயாக , அமைச்சராக , மனைவியாக வெவ்வேறு பொறுப்புகளில் கணவனுக்குப் பணிசெய்வதாகக் கண்டன .

ஆனால் புரட்சிக் கவிஞன் படைத்த பெண் , தன் வீடு , தன் குடும்பம் , தன் பிள்ளைகள் என்று பாராமல் நாடு , மொழி ஆகியவற்றுக்கும் தொண்டு செய்யும் தகைமை வாய்ந்தவளாகத் திகழ்கிறாள் !

விழுந்த தமிழ்நாடு தலைகாக்க என்றன்

உயிர்தனையே வேண்டிடினும் தருவேன் ( குடும்பவிளக்கு - 1 )