என்று கூறுகின்றாள் .
இதோ குடும்ப விளக்கான மனைவி கணவனைப் பார்த்து அடுக்கடுக்காய் கேட்பதைப் பாருங்கள் !
அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்
இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ?
என்பதைநாம் நினைத்துப் பார்ப்பதுவு மில்லை .
இன்றைக்கு கறிஎன்ன ?
செலவு யாது ?
ஏகாலி வந்தானா ?
வேலைக் காரி
சென்றாளா ?
கொழுக்கட்டை செய்ய லாமா ?
செந்தாழை வாங்குவமா ?
கடைச் சரக்கை
ஒன்றுக்கு மூன்றாக விற்பது எந்நாள் ?
உன்மீதில் எனக்காசை பொய்யா ?
மாடு
குன்றுநிகர் குடம்நிறையக் கறப்ப துண்டா ?
கொடுக்கலென்ன வாங்கலென்ன இவைதாம் கண்டோம் .
( குடும்பவிளக்கு - 1 )
( ஏகாலி = சலவைத் தொழிலாளி )
வாழ்க்கையில் உயர் குறிக்கோள்கள் வேண்டும் என்பதை இந்தப் பகுதி எடுத்துரைக்கின்றது அல்லவா ?
குடும்பவிளக்கில் வரும் தங்கம் அறிவு நிறைந்த பெண்ணாக மட்டுமன்றிச் செயல்திறன் வாய்ந்தவளாகவும் அமைகிறாள் .
வானூர்தியைப் பெண் செலுத்த வேண்டும் ; மாக்கடலிடையே கலம் ( கப்பல் ) ஓட்ட வேண்டும் ; ஒருகையால் தனக்கென்று அமைந்த பணி இயற்றும்போதே மறுகையில் பெண் உலகு விடுதலை எய்துதற்குரியன செய்ய வேண்டும் என்று எண்ணுகிறாள் கவிஞரின் தலைவி .
3.1.3 மொழிப்பற்றுள்ள பெண்
பால் கணக்கு , தயிர்க்கணக்கு வைத்துக் கொள்ளும் அளவு கணக்கறிவு , எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்த அளவு படிப்பு ஆகியவை பெண்ணுக்குப் போதும் என்று கருதியிருந்தது பழைய உலகம் .
கல்வி இல்லா நிலம் களர் நிலம் ; அங்குப் புல் விளையலாம் ; நல்ல புதல்வர் விளைய மாட்டார் என்றார் பாரதிதாசன் .
கல்வி வல்லாராய்ப் பெண்கள் திகழ வேண்டும் ; தாய் மொழிக் கல்வியைப் பெண்கள் பெறுதல் வேண்டும் என்று நினைத்தார் கவிஞர் .
இந்தப் பழம்புகழ் மீள வேண்டும் நாட்டில்
எல்லோரும் தமிழர்களாய் வாழ வேண்டும்
வழிந்தொழுகும் சுவைத்தமிழே பெருக வேண்டும்
மாற்றலர்கள் ஏமாற்றம் தொலைய வேண்டும்
( குடும்பவிளக்கு : முதல் தொகுதி )
( மாற்றலர்கள் = பகைவர்கள் )
என்று வீட்டுத் தலைவி பேசுகிறாள் .
வீட்டுப் பிள்ளைகள் புறநானூறும் திருக்குறளும் படிக்கின்றனர் .
பிள்ளைகள் முன்னேறத் தமிழ்க்கல்வி இன்றியமையாதது என்கிறாள் குடும்பத்தலைவி .
3.2 பாரதிதாசனும் பெண் விடுதலையும்
E
பல தளை ( தடை , கட்டுபாடு ) களிலிருந்து பெண் விடுவிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார் பாவேந்தர் .
அவற்றில் மூன்று தலையாயவை .
1. கைம்மைக் கொடுமை
2. வழிவழி வந்த அச்சம்
3. பழைய கண்மூடி வழக்கங்கள்
இவற்றை அகற்றப் பாடுபடும்போது அவர்க்கு எதிர்ப்பு இருந்தது .
அவர் ஓர் எதிர் நீச்சல்காரர் .
அவர் தொய்வடையாமல் தொடர்ந்து முழங்கினார் .
வைதிக நெறி பரப்பியிருந்த மடமைக் கருத்துகளைச் சாய்ப்பதற்கென்று கவிதை சமைத்த முதல்வர் அவர்தாம் .
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே !
( பெண்குழந்தை தாலாட்டு தொகுதி : 1 )
என்று பெண் குழந்தையை இதற்கு முன்பு இப்படித் தாலாட்டியவர் உண்டா ?
பாரதிதாசனின் பெண் அறிவின் உரு ; ஆற்றலின் மைய அச்சு ; ஆணுக்கு அவ்வப்போது நெறிகாட்டும் ஆசான் .
கவிஞர்களெல்லாம் இதற்கு முன்பு பெண்களை அழகுப் பதுமையாகவே வருணித்தனர் .
அவள் கைம்மைக் கோலம் கண்டு கண்ணீர் வடித்தனர் ; விதி இப்படி ஆக்கிற்றே என நொந்தனர் .
பெண்கள் அச்சப்படும்போது அழகாயிருப்பதாகப் புனைந்து பாடினர் .
பழைய வழக்கங்களை விடாமல் பின்பற்றுவதில்தான் பெண்மையின் அழகு உறைவதாகக் கூறினர் .
பாரதிதாசன் இந்த வேலிகளைத் தகர்த்தெறிந்தார் .
பெண்ணின் உரிமைப் பயணத்திற்கென அகலமான சாலையைக் கவிதையின் வழியில் அவர் காட்டினார் .
3.2.1 கைம்மையிலிருந்து....
கணவன் இறந்தபின் பெண் கூந்தலில் மலர் சூடுதல் கூடாது ; நெற்றியில் திலகம் தீட்டிக் கொள்ளக் கூடாது .
ஏதேனும் ஒரு செயல் கருதிப் புறப்பட்டவர் எதிரே அவள் வருவது அபசகுனம் - அதாவது அந்தச் செயல் நடவாது தடுத்துவிடக் கூடிய தீங்கு எனக் கருதினர் .
இவை மட்டுமா ?
தரையிற் படுத்தல் வேண்டும்
சாதம் குறைத்தல் வேண்டும்
இப்படியெல்லாம் வாழப் பணித்தது வைதிகம் .
கணவனை இழந்த பெண் காதலிக்கலாம் ; மறுமணம் செய்து கொள்ளலாம் என்று பாரதிதாசன் சீர்திருத்தப் பாதை காட்டினார் .
வெள்ளைப் புடவை உடுத்திக் கொண்டு , நெற்றியைப் பாழாக்கும் வெறுமையுடன் , கூந்தலில் மலர் சூடாமல் இதோ ஓர் இளம் பெண் நிற்கின்றாள் பாருங்கள் !
இவள் ஓர் இளைஞனைக் காதலித்தாள் ; அவனுந்தான் .
ஆனால் என்ன செய்வது ?
சமூகம் இவர்கள் மணந்து கொள்ள ஒப்பவில்லை .
பாரதிதாசன் பாட்டு ஒலிக்கிறது கேளுங்கள் !
காட்சி
இன்பவருக்கம் எல்லாம் நிறைவாகி
இருக்கின்ற பெண்கள் நிலைஇங்கு
இவ்விதமாய் இருக்குதண்ணே !
இதில்
யாருக்கும் வெட்கமிலை !
காதல் சுரக்கின்ற நெஞ்சத்திலே - கெட்ட
கைம்மையைத் தூர்க்காதீர் - ஒரு
கட்டழகன் திருத்தோளினைச் சேர்ந்திடச்
சாத்திரம் பார்க்காதீர் !
( 30. கைம்மைப்பழி : தொகுதி : 1 )
( வருக்கம் = வர்க்கம் , இனம் ; தூர்க்காதீர் = நிரப்பாதீர் )
இதைவிட மனத்தை உருக்கும் வகையில் யாரும் கூற முடியுமா ?
வைதிக நெறி கடுமையான கட்டுப்பாட்டைக் கைம்பெண்களுக்கு விதித்தது .
மனைவி இறந்து விட்டால் கணவன் வேறு பெண்ணை மணக்கலாம் .
ஆனால் பெண்ணுக்கு அந்த உரிமை இல்லை .
வையக மீதினில் தாலி இழந்தவள்
மையல் அடைவது கூடுமோ ?
துய்ய மணாளன் இறந்தபின் மற்றவன்
தொட்டதை வைதிகம் ஏற்குமோ ?
( பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி )
என்று பகுத்தறிவற்ற நிலையில் கேட்டுக் கொண்டிருந்தனர் பழைய மடமைப்பிடியில் சிக்கித் தவித்தவர்கள் .
இந்தியா முழுவதிலும் கைம்பெண்களின் வாழ்க்கை துன்பமிக்கதாக இருந்தது .
கணவன் இறந்தவுடன் அவனோடு மனைவியும் சாகவேண்டும் அல்லது கைம்மை நோன்பேற்றுத் துன்பங்களைத் தாங்க வேண்டும் என்று விதித்த வழக்கத்தைச் சமூகத்தில் புரட்சி செய்தோர் எதிர்த்தனர் .
அவர்களில் பாரதிதாசன் குரல் வன்மையாக ஒலித்தது .
மண்படைப்பே காதலெனில் காதலுக்கு
மறுப்பெதற்குக் கட்டுப்பா டெதற்கு ? ( பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி )
என்று அவர் கேட்டார் .
காதல் கொள்வது இயற்கை அல்லவா ?
இளம்பெண் நெஞ்சத்தில் காதல் ஊற்று நிகழ்வது குற்றமா ?
பாடாத தேனீயைப் பார்த்ததுண்டா ?
தென்றல் உலா வராமல் இருக்க முடியுமா ?
பசியாத நல்வயிறு எங்காவது இருக்கிறதா ?
இவை போலத்தானே இளைஞர்களின் இதயமும் ?
என்று கேட்டார் பாரதிதாசன் .
இப்போது மறுமணம் தடையின்றி நிகழ்கிறது .
வரலாறு திசை மாறியிருக்கிறது .
எல்லாம் அந்தப் பாவேந்தனின் கனல் உமிழும் கவிதையால்தான் !
3.2.2 அச்சத்திலிருந்து.........
பெண்ணுக்கு நான்கு பண்புகளை விதித்தது சமூகம் .
அவை அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு என்பன .
நண்பர்களே !
இந்த நான்கு சொற்களுக்கும் உங்களுக்குப் பொருள் தெரியுமா ?
தமிழ்நாட்டில் பலருக்கு அச்சம் , நாணம் என்பவற்றுக்குப் பொருள் தெரியும் .
அச்சம் என்றால் பயம் என்றும் நாணம் என்றால் வெட்கம் என்றும் கூறிவிடுவார்கள் .
ஆனால் மடம் , பயிர்ப்பு என்பவற்றுக்குப் பொருள் கூறமாட்டார்கள் .
மடம் என்பதற்குச் சொல்லிக் கொடுத்த நெறிப்படி நடத்தல் என்பது பொருள் .
அவளாகச் சிந்தித்துப் பார்க்கக் கூடாது .
ஏன் இப்படித்தான் நடக்க வேண்டுமென்று அவள் எண்ணிப் பார்க்கக் கூடாது .
இஃது ஒருவகை அறியாமை .
அந்த அறியாமை என்னும் பள்ளத்தில் பெண் இருப்பது சமூக அமைப்பிற்கு நல்லது எனக் கருதினர் .
பயிர்ப்பு என்பது அருவருப்பு , அறிமுகம் இல்லாதவற்றிலிருந்து விலகி நிற்பதாகும் .
பெற்றோர் முடிவு செய்யும் இளைஞனுக்கு அல்லது முதியவனுக்குப் பெண் ‘ கழுத்தை நீட்டக் ’ கட்டுப்பட்டவள் .
மாமியாரால் குட்டுப்படவும் , கணவனால் வெட்டுப்படவும் , மற்றவரால் திட்டப்படவும் வாழ்க்கைப்பட்டவள் .
புகுந்த வீட்டில் மாட்டுக்கும் நாய்க்கும் உள்ள மரியாதை கூட அவளுக்கு இல்லாமல் போகலாம் .
அவள் ஆமையாகப் புலனடக்கி வாழ வேண்டும் ; ஊமையாகப் பேசாமல் இருக்க வேண்டும் .
இந்த நிலையில் புரட்சிக் கவிஞர் எடுத்துரைக்கின்றார் பாருங்கள் !
காட்சி
தனித்துக் கிடந்திடும் லாயம் - அதில்
தள்ளி அடைக்கப்படும் குதிரைக்கும்
கனைத்திட உத்தரவுண்டு - வீட்டில்
காரிகை நாணவும் அஞ்சவும் வேண்டும்
( 35 : பெண்ணுக்கு நீதி தொகுதி : 1 )
இந்த நிலை மாறப் பெண்கள் புலிநிகர்த்தவராக ஆகவேண்டுமென்று பாரதிதாசன் கருதினார் .
பெண்கள் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் வாய்த்தவராக மாற வேண்டுமென்று பாரதியார் கூறினார் .
பாரதிதாசன் என்ன கூறுகின்றார் தெரியுமா ?
சேவல் என நிமிர்ந்து சிறுத்தையெனப் பகையைச்
சீறும் குழந்தைகளைப் பெற்றே - நீ
செல்வம் பலவும் மிக உற்றே - நல்ல
காவல் இருந்துவளம் தாவும் திராவிடத்தைக்
காப்பது காண வேண்டும்
( இசையமுது 2 : அன்னையின் ஆவல் )
இன்று பெண்கள் வான் ஊர்தி இயக்குகின்றனர் ; ஆழக் கடலிற் புகுந்து ஆய்வுகள் செய்கின்றனர் .
அச்சம் ஒழிந்தது என ஆர்ப்பரிக்கின்றனர் .
பெண்கள் மேவாத ( விரும்பாத ) துறையில்லை .
இதோ காந்தியடிகளுக்குத் தென்னாப்பிரிக்க அறப்போரில் துணைநின்ற தில்லையாடி வள்ளியம்மை ! தென்னாட்டின் அறப்போர்த் திலகமெனத் திகழ்ந்த நாகம்மையார் !
( பெரியார் ஈ.வெ.ரா.வின் துணைவியார் ) தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் !
சீர்திருத்தப் புயல் மூவலூர் இராமாமிர்தத்தம்மையார் !
ஆயிரமாயிரமாய்க் கல்விக் கூடம் நோக்கிச் செல்லும் ஆரணங்குகள் பாரீர் !
எதிர்காலத் தமிழகத்தின் ஏடுகளில் புதிய வரலாறு எழுதப்போகும் புரட்சி எழுத்தாளிகள் இவர்கள் .
இவர்களின் அணிவகுப்புத்தான் புரட்சிக் கவிஞர் கனவு .
3.2.3 பழைய வழக்கங்களிலிருந்து...........
பெண் மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து விடுதலை அடைய வேண்டுமெனப் புரட்சிக் கவிஞர் விரும்பினார் .
பதினெட்டு முழப்புடவையிலே அவள் பதுங்கியிருக்க வேண்டும் .
வாரத்தில் பலநாள் விரதம் கடைப்பிடிக்க வேண்டும் .
வீட்டின் எல்லைகளை எந்த நிலையிலும் தாண்டக் கூடாது .
வீட்டுச் சமையலைப் பெண்ணே செய்ய வேண்டும் .
பால்கணக்கு தயிர்க்கணக்கு பார்க்குமளவுக்கு அவளுக்குக் கல்வி அறிவு போதும் .
இப்படித்தானிருந்தது மகளிர் சமூகம் .
ஆடை அணிகலன் ஆசைக்கு வாசமலர்
தேடுவதும் ஆடவர்க்குச் சேவித் திருப்பதுவும்
அஞ்சுவதுவும் நாணுவுதுவும் ஆமையைப்போல் வாழுவதும்
கொஞ்சுவது மாகக் கிடக்கும் மகளிர்குலம்
மானிடர் கூட்டத்தில் வலியற்ற ஒர்பகுதி
( வீரத்தாய் : தொகுதி 1 )
இவ்வாறு மகளிர் வாழ்ந்தநிலை விளக்குகின்றார் பாவேந்தர் .
கல்வி பெருக வளர்ந்த சமூகத்தில் பெண்கள் பகுத்தறிவு பெற்றனர் ; மூடப்பழக்கங்களைக் கைவிட்டனர் .
பெண் இல்லம் தாண்டி , ஊர் கடந்து , நாடு கடந்து , கண்டங்களை விட்டுப் பறக்கின்றாள் ; ஒலிம்பிக் பந்தயங்களில் ஓடுகின்றாள் ; ஐக்கிய நாடுகள் மன்றத்தில் முழங்குகின்றாள் ; பழமைக் கட்டுகளை உடைத்தெறிந்து விட்டாள் .
இதோ கவிஞர் இப்பெண்களைக் கண்டு களி கொள்கிறார் காணுங்கள் !
கலையினில் வளர்ந்தும் , நாட்டுக்
கவிதையில் ஒளிமிகுந்தும் ,
நிலவிடும் நிலா முகத்து
நீலப்பூ விழி மங்கைமார்
தலையாய கலைகள் ஆய்ந்து
தம்வீடு போதல் கண்டேன் !
உலவிடு மடமைப் பேயின்
உடம்பின்தோல் உரிதல் கண்டேன் !
( அழகின் சிரிப்பு )
இதோ பெண்கள் வீரச் செயலுக்காகப் பரிசு பெறுதல் காணுங்கள் !
நாட்டின் காவல்துறையில் பணிசெய்யும் மகளிர் அணி காணுங்கள் !
கவிஞர் கனவு நனவாகி விட்டதன்றோ !
3.3 பாரதிதாசன் கண்ட மகளிர் வாழ்வியல்
E
பாரதிதாசன் மகளிர் வாழ்வில் மறுமலர்ச்சியை எதிர் நோக்கினார் .
முதலில் பெண் பள்ளிக்குச் செல்ல வேண்டும் .
சிறுபருவத்திலேயே பெண்ணுக்குக் கல்வி அறிவு தரப்பட வேண்டும் .
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன்அன்னை !
சிலைபோல ஏனங்கு நின்றாய் ? - நீ
சிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய் ?
( இசையமுது )
என்று தந்தை கேட்பதாகக் கவிஞர் பாடுகின்றார் .
பெண் ஓவியம் கற்க வேண்டும் ; காவியம் கற்க வேண்டும் ; கவிதை எழுதி உலக அமைதியை அதன்வழி உருவாக்க வேண்டும் .
கவிஞர் இவற்றோடு நிற்கவில்லை .
மங்கைப்பருவம் அவள் எய்தும்போது தனக்குரிய மணமகனைக் காட்டித் ‘ தேவை இவன் ’ எனக் கூற வேண்டுமாம் ! கல்வி கற்றவளாக , காதல் தலைவியாக மட்டும் இருந்தால் போதுமா ?