18

பெயர்ச் சொல்லாக அமையும் பகாப்பதம் பெயர்ப் பகாப்பதம் எனப்படும் .

எடுத்துக் காட்டுகள் :

நிலம் , நீர் , நெருப்பு , காற்று என வருவன .

( 2 ) வினைப் பகாப்பதம் :

வினைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் வினைப் பகாப்பதங்கள் எனப்படும் .

எடுத்துக் காட்டுகள் :

நட , வா , உண் , தின் முதலியன .

( 3 ) இடைப்பகாப்பதம் :

இடைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் இடைப் பகாப்பதம் எனப்படும் .

எடுத்துக் காட்டுகள் :

மன் , கொல் , போல் , மற்று என்பன .

( 4 ) உரிப் பகாப்பதம் :

உரிச் சொற்களாக வரும் பகாப்பதம் உரிப் பகாப்பதம் எனப்படும் .

எடுத்துக் காட்டுகள் :

கூர் , மிகு , உறு , தவ , நனி , கழி

மேலே சுட்டிய எடுத்துக் காட்டுகளில் கண்ட பெயர் , வினை , இடை , உரிச் சொற்களைப் பிரித்தால் பொருள் தருவதில்லை ; அவை இடுகுறியில் , இட்டு வழங்கி வருகின்ற தன்மையில் அமைந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .

இதனை நன்னூல் பின்வருமாறு விளக்குகின்றது .

பகுப்பால் பயனற்று இடுகுறியாகி

முன்னே ஒன்றாய் முடிந்தியல் கின்ற

பெயர் வினை இடை உரி நான்கும் பகாப்பதம் ( 131 )

பகுபதம்

5.2.1 பகுபதத்தின் இலக்கணம்

பொருள் , இடம் , காலம் , சினை , குணம் , தொழில் ஆகிய ஆறு பெயர்களையும் அடிப்படையாகக் கொண்டு அமையும் பெயர்களும் , வெளிப்படையாகவோ குறிப்பாகவோ காலம் காட்டும் வினைச்சொற்களும் பகுபதங்கள் ஆகும் .

இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பகுபதங்கள் ஆக மாட்டா .

5.2.2 பகுபதத்தின் வகைகள்

முதல் நிலையில் பகுபதத்தை இருவகையாகப் பிரிக்கலாம் .

அவை ,

( 1 ) பெயர்ப் பகுபதம் ( பெயர்ச்சொல்லாக அமையும் பகுபதம் )

( 2 ) வினைப் பகுபதம் ( வினைச்சொல்லாக அமையும் பகுபதம் )

பெயர்ப் பகுபதத்தை மேலும் ஆறு வகையாகப் பிரிக்கலாம் .

அவை ,

( 1 ) பொருட்பெயர்ப் பகுபதம்

( 2 ) இடப் பெயர்ப் பகுபதம்

( 3 ) காலப் பெயர்ப் பகுபதம்

( 4 ) சினைப் பெயர்ப் பகுபதம்

( 5 ) குணப் பெயர்ப் பகுபதம்

( 6 ) தொழில் பெயர்ப் பகுபதம்

என்பன .

5.2.3 பெயர்ப் பகுபதங்கள்

( 1 ) பொருட்பெயர்ப் பகுபதம்

ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பெயர்ப் பகுபதம் பொருட்பெயர்ப் பகுபதம் எனப்படும் .

எடுத்துக்காட்டு :

பொன்னன் - அவன் பொன்னை உடையவன் என்பது பொருள் .

இதைப் பிரித்தால் ( பொன் + அன் ) பொருள் தரக் கூடியதாகவும் அமைந்திருக்கின்றது .

எனவே இது பொன் என்னும் பொருள் அடிப்படையாகப் பிறந்த பொருட் பெயர்ப் பகுபதம் ஆகும்( இதைப் போலவே , பிற பெயர்ப் பகுபதங்களும் அமைகின்றன)

( 2 ) இடப் பெயர்ப் பகுபதம்

இடத்தின் அடிப்படையில் அமைவது இடப்பெயர்ப் பகுபதம் ஆகும் .

எடுத்துக்காட்டு :

விண்ணோர் - ‘ விண்‘ என்னும் இடப்பெயரால் அமைந்த பகுபதம் . அகத்தான் - ‘ அகம்‘ என்னும் இடப்பெயரின் அடிப்படையில் அமைந்திருப்பதால் இது இடப் பெயர்ப் பகுபதம் என்று அழைக்கப்படுகிறது .

( 3 ) காலப் பெயர்ப் பகுபதம் :

நாள் , திங்கள் , ஆண்டு எனவரும் காலப் பெயர்களின் அடிப்படையில் அமையும் பகுபதங்கள் காலப் பெயர்ப் பகுபதங்கள் எனப்படுவன .

எடுத்துக்காட்டு :

கார்த்திகையான் - இது கார்த்திகைத் திங்களில் பிறந்தவன் என்று பொருள்படும் .

இது காலப் பெயரின் அடிப்படையில் அமைந்திருப்பதால் காலப்பெயர்ப் பகுபதம் ஆகும் .

ஆதிரையாள் - ஆதிரை நாளில் ( நட்சத்திரத்தில் ) பிறந்தவள் என்று காலப் பெயர் அடிப்படையில் அமைந்த பகுபதம் ஆகும் .

( 4 ) சினைப் பெயர்ப் பகுபதம்

சினை என்பது உறுப்பு என்று பொருள்படும் .

உறுப்பின் பெயர் அடிப்படையில் அமைந்த பகுபதங்கள் சினைப் பெயர்ப் பகுபதங்கள் எனப்படும் .

எடுத்துக்காட்டு :

கண்ணன் - இச் சொல்லில் ‘ கண்‘ என்பது உடலின் உறுப்பு ( சினை ) .

அதன் அடிப்படையில் கண்ணன் எனும் பெயர் அமைந்துள்ளது .

இதனை கண் + அன் என்று பிரித்தால் ‘ கண்‘ என்பது பொருள்தரும் சொல்லாக அமைகின்றது .

எனவே இது சினைப் பெயர்ப் பகுபதம் ஆகும் .

இதைப் போலவே , மூக்கன் , பல்லன் என்னும் சினைப் பெயர்ப் பகுபதங்களையும் அறிந்து கொள்ளலாம் .

( 5 ) குணப் பெயர்ப் பகுபதம் :

ஒரு பண்பைக் ( குணம் ) குறிக்கும் சொல்லின் அடிப்படையில் அமையும் பெயர் குணப் பெயர்ப் பகுபதம் எனப்படும் .

எடுத்துக்காட்டு :

கரியன் , - இச் சொல் கருமை என்னும் பண்புப் பெயரின் அடிப்படையில் அமைந்தது .

( 6 ) தொழிற் பெயர்ப் பகுபதம் :

தொழிலின் பெயரை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பெயர்ச் சொற்கள் தொழிற் பெயர்ப் பகுபதங்கள் எனப்படும் .

எடுத்துக்காட்டு :

தட்டான் , தச்சன் எனவரும் பெயர்ச் சொற்கள் தொழிற்பெயரால் அமைந்தவை .

5.2.4 வினைப் பகுபதங்கள்

பெயர்ப் பகுபதங்கள் ஆறு வகைப்படும் என்பதைக் கண்டோம் .

இனி , வினைப் பகுபதங்களின் வகைகளைக் காண்போம் .

தெரிநிலை ( வெளிப்படையாக ) யாகவும் குறிப்பாகவும் காலத்தைக் காட்டும் வினைச் சொற்கள் வினைப் பகுபதங்கள் எனப்படுவன .

வினைப் பகுபதங்களை முதலில் இரு வகையாகப் பிரித்துக் காணலாம் .

அவை ,

( 1 ) வினைமுற்றுப் பகுபதம்

( 2 ) வினையாலணையும் பெயர்ப் பகுபதம்

என்பன .

வினைமுற்றுப் பகுபதம் இருவகைப்படும் .

அவை ,

( 1 ) தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம்

( 2 ) குறிப்பு வினைமுற்றுப் பகுபதம்

என்பன .

தெரிநிலை , குறிப்பு வினைமுற்றுப் பகுபதங்களின் விளக்கங்களைக் காணலாம் .

( 1 ) தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் : ஒரு வினைப் பகுபதம் காலத்தை வெளிப்படையாகக் காட்டுமானால் அது தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் எனப்படும் .

எடுத்துக்காட்டு :

நடந்தான் , நடக்கின்றான் , நடப்பான் - எனவரும் வினைமுற்றுகளில் இறந்தகாலம் , நிகழ்காலம் , எதிர்காலம் என்று காலங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன .

இவ்வாறு வினை நிகழ்ந்த காலம் வெளிப்படையாகத் தெரிவதால் இவை தெரிநிலை வினைமுற்றுகள் எனப்படுகின்றன .

தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் எதிர்மறையாகவும் வரும் .

எடுத்துக்காட்டு : நடவான்

( 2 ) குறிப்பு வினைமுற்றுப் பகுபதம் : ஒரு வினைப் பகுபதம் காலத்தைக் குறிப்பால் உணர்த்துமானால் அது குறிப்பு வினைமுற்றுப் பகுபதம் எனப்படும் .

குறிப்பு வினை என்பது பொருள் , இடம் , காலம் , சினை , குணம் , தொழில் என்னும் ஆறுவகைப் பெயர்களின் அடிப்படையாகத் தோன்றி , வினைச்சொல்லின் பொருளைத் தருவது எனப்படும் .

எடுத்துக் காட்டு :

பொன்னன் , ஊணன் , அற்று , இற்று எனவரும் சொற்களில் காலம் தெரிநிலையாக வெளிப்படவில்லை .

ஆனால் இச்சொற்களில் காலம் குறிப்பால் உணர்த்தப்படுகின்றது . அவன் பொன்னனாக இருந்தான் , பொன்னனாக இருக்கிறான் , பொன்னனாக இருப்பான் எனப் பொருள் வரும் போது காலம் குறிப்பாக உணரப்படுகிறது .

எனவே இவை குறிப்பு வினை முற்றுகள் எனப்படுகின்றன .

குறிப்பு வினைமுற்றுப் பகுபதம் எதிர்மறையிலும் வரும் .

எடுத்துக் காட்டு : அவன் இல்லாதவன் .

• தெரிநிலையாகவும் குறிப்பாகவும் காலம் காட்டும் பெயரெச்சங்களும் வினையெச்சங்களும் வினைப் பகுபதங்களே .

பெயர் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் .

எடுத்துக் காட்டு :

( 1 ) உண்ட பையன்

( 2 ) ஓடாத குதிரை

இத் தெரிநிலை வினைகள் பையன் , குதிரை என்ற பெயர்ச்சொற்களைக் கொண்டு பொருள் முடிவு பெறுகின்றன .

எனவே , இவை தெரிநிலைப் பெயரெச்சப்பகுபதம் எனப்படும் .

மற்றொரு வினைமுற்றைக் கொண்டு பொருள் நிறைவடையும் வகையில் அமையும் எச்சம் வினையெச்சப் பகுபதம் எனப்படும் .

எடுத்துக்காட்டு :

உண்டு வந்தான்

உண்ண வருகின்றான்

உண்டு , உண்ண எனவரும் வினைகள் , வந்தான் , வருகின்றான் , என்னும் வினைமுற்றுகளைக் கொண்டு பொருள் முடிவைப் பெறுகின்றன .

குறிப்புப் பெயரெச்சம் , குறிப்பு வினையெச்சம் இவை காலத்தைக் குறிப்பாகக் காட்டுவன .

எடுத்துக்காட்டு :

பெரிய பையன் - பெயரெச்சம்

மெல்ல வந்தான் - வினையெச்சம்

இதுவரையில் வினைமுற்றுப் பகுபதங்களை மட்டும் கண்டோம் .

இனி வினையாலணையும் பெயர்ப் பகுபதங்களைப் பற்றிக் காணலாம் .

அவை , இருவகைப் படும் .

( 1 ) தெரிநிலை வினையாலணையும் பெயர்ப் பகுபதம் .

எடுத்துக்காட்டு : நடந்தானைக் கண்டேன் , நடந்தவனைக் கண்டேன் என்பன .

இவை காலத்தை வெளிப்படையாகக் காட்டுகின்றன .

( 2 ) குறிப்பு வினையாலணையும் பெயர்ப் பகுபதம் :

எடுத்துக்காட்டு : பொன்னனைக் கண்டேன் ,

இது காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை .

குறிப்பாகவே காலம் உணர்த்தும் .

பகுபத உறுப்புகள்

ஒரு பதத்தைப் பிரித்தால் அது பொருள் தருமானால் அது பகுபதம் என்று கண்டோம் அல்லவா ?

அவ்வாறு ஒரு பகுபதம் பிரிந்து நிற்கும் நிலையில் அமையும் உறுப்புகள் பகுபத உறுப்புகள் எனப்படுவன .

இப்பகுபத உறுப்புகள் ஆறு. அவை ,

( 1 ) பகுதி

( 2 ) விகுதி

( 3 ) இடைநிலை

( 4 ) சாரியை

( 5 ) சந்தி

( 6 ) விகாரம்

ஆகியன .

இப்பகுபத உறுப்புகளைப் பின்வரும் நன்னூல் நூற்பா தொகுத்துக் கூறுகின்றது .

பகுதி , விகுதி , இடைநிலை , சாரியை ,

சந்தி , விகாரம் ஆறினும் ஏற்பவை

முன்னிப் புணர்ப்ப முடியும் எப்பதங்களும்

என்பது நூற்பா ( 133 )

இந்த ஆறு உறுப்புகளையும் அறிவுடையோர் கூட்டிச் சேர்த்தால் எல்லாவிதமான பகுபதங்களும் அமையும் என்பது பொருள்

இனி , இந்த ஆறு உறுப்புகள் ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம் .

பெயர்ப்பகுபதம் : வேலன்

வேல் + அன் . இதில் வேல் - பகுதி

அன் - விகுதி

வினைப் பகுபதம் : செய்தான்

செய் + த் + ஆன்

இதில் செய் - பகுதி

த் - இடைநிலை

ஆன் - விகுதி .

எனவே ஒருபகுபதம் பகுதி , விகுதி ஆகிய இரு உறுப்புகளைப் பெற்றுவரலாம் : இவ்விரண்டோடு இடைநிலையைப் பெற்றும் வரலாம் .

மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் பகுபத உறுப்புகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டுத் தரப்பட்டன .

இனி ஆறு பகுபத உறுப்புகளையும் பற்றிக் காண்போம் .

5.3.1 பகுதி

பகுதி ஒரு பகுபதத்தின் முதலில் அமையும் உறுப்பு ஆகும் .

எனவே இதனை முதனிலை என்றும் வழங்கலாம் .

உண்டான் என்னும் பகுபதத்தில் ( உண் + ட் + ஆன் ) உண் என்பது பகுதியாகும் .

5.3.2 விகுதி

விகுதி பகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு என்பதால் இதனை இறுதிநிலை என்றும் வழங்குவது மரபு .

பகுதியின் பொருளை , அதற்குப் பின்னால் வந்து நின்று விகாரப் படுத்துவதால் ( வேறுபடுத்திக் காட்டுவதால் ) இது விகுதி என்ற பெயர் பெற்றது என்பர் .

உண்டான் என்னும் பகுபதத்தில் ( உண் + ட் + ஆன் ) ஆன் என்பது விகுதி ஆகும் .

இது திணை , பால் , எண் , இடம் ஆகியவற்றைக் காட்டுகிறது .

5.3.3 இடைநிலை

இடைநிலை , முதனிலைக்கும் ( பகுதி ) இறுதிநிலைக்கும் ( விகுதி ) இடையில் நிற்கும் உறுப்பு என்பதால் இடைநிலை என்னும் பெயர் பெறுகின்றது .

வினைப் பகுபதத்தில் இடைநிலை காலம் காட்டும் உறுப்பு ஆகும் .

உண் + ட் + ஆன் என்னும் பகுபதத்தில் - உண் : முதனிலை

ட் : இடைநிலை

ஆன் : இறுதிநிலை .

என ‘ இடைநிலை‘ - பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்திருத்தலைக் காணலாம் .

5.3.4 சாரியை

சாரியை , பெரும்பான்மையாக , இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும் உறுப்பு ஆகும் .

சிறுபான்மையாகச் சந்திக்கும் விகுதிக்கும் இடையிலும் வரும் .

சாரியை = சார்ந்து இயைந்து நிற்பது .

தனக்கெனப் பொருள் எதுவும் இன்றிப் பிற உறுப்புகள் இணையும்போது இடையில் வருவது .

வந்தனன் என்னும் சொல் ‘ வா + த் + த் + அன் + அன்‘

என்று பிரிந்து நிற்கும் .

இதில் ,

வா - பகுதி

த் - சந்தி

த் - இடைநிலை

அன் - சாரியை

அன் - விகுதி ,

‘ த் ’ இடைநிலைக்கும் , ‘ அன்‘ விகுதிக்கும் இடையில் சாரியை வந்துள்ளதைக் காணலாம் .

5.3.5 சந்தி

சந்தி பெரும்பாலும் முதனிலை ( பகுதி ) க்கும் இடைநிலைக்கும் இடையில் வரும் .

பகுதிக்கும் விகுதிக்கும் இடையிலும் சிறுபான்மை வரக்கூடும் .

உறுப்புகளின் இணைவில் ( சந்தி ) , அவற்றை இணைக்க வருவது சந்தி .

நடத்தல் என்னும் பகுபதம் நட + த் + தல் என்று பிரிந்து வரும் .

இதில் - நட - பகுதி

த் - சந்தி

தல் - விகுதி

பகுதிக்கும் , விகுதிக்கும் இடையில் ‘ த்‘ சந்தி வந்திருப்பதைக் காண முடிகிறது .

5.3.6 விகாரம் விகாரம் என்று தனியாக ஓர் உறுப்பு இல்லை .