180

வீரத்தாயாக விளங்குதல் வேண்டும் ; குடும்ப விளக்காக ஒளிவிட வேண்டும் .

அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்

அழகிய தமிழ்நாட்டின் கண்கள் !

( இசையமுது )

என்று பாரதிதாசன் பெண்ணுக்கு இன்றியமையாத பண்புகள் என்று கூறப்பெற்ற அச்சம் மடமை ஆகியவற்றை உதறித் தள்ள வேண்டுகிறார் .

பெண் அச்சம் மடம் கொண்டவளாக இருந்தால் , நாடாளவும் , விண்வெளியில் பறக்கவும் இயலுமா ?

கவிஞர் கண்ட மகளிர் வாழ்வியலில் மூன்று நிலைகளை வரும் பகுதிகளில் காண்போமா ?

3.3.1 வீரத்தாய்

காட்சி

தாய்மார்கள் வீரமுடையவர்களாக இருத்தல் வேண்டும் .

அப்போதுதான் வீரமிக்க பிள்ளைகள் நாட்டில் தோன்றுவர் .

பண்டைக்கால மகளிரிடையே , தந்தையையும் கணவனையும் போரிலே பறிகொடுத்த தையல் ( பெண் ) ஒருத்தி தன் இளம் மகனைத் தலைவாரி வெள்ளை உடை உடுத்தி வேலைக் கையில் கொடுத்துப் போருக்கு அனுப்பினாள் என அறிகிறோம் .

மற்றொருத்தி தன்மகன் போரில் புறமுதுகு காட்டினான் என்று கேட்டு அவ்வாறாயின் அவனுக்குப் பால் கொடுத்த என் மார்பை அறுத்து எறிவேன் எனச்

சூளுரைத்துப் போர்க்களத்தில் பிணமெல்லாம் புரட்டித் தன்மகன் மார்பிலே புண்பட்டு வீரச்சாவு கொண்டதறிந்து அவனைப் பெற்ற பொழுதை விட அப்பொழுது மகிழ்கிறாள் எனப் படிக்கிறோம் .

பாரதிதாசன் இந்தப் பரம்பரையை மறுபடியும் உயிர்ப்பிக்க விரும்புகிறார் .

கவிஞர் படைப்புகளில் ‘ வீரத்தாய் ’ என்ற ஒரு சிறிய காவியம் உள்ளது .

நெருக்கடியான சூழ்நிலையில் இராணி விஜயா பொய்த்தாடி அணிந்து முதியவராய் மாறுவேடம் பூண்டு மகன் சுதர்சனுக்குப் போர்த்தொழில் கற்பிக்கிறாள் .

வஞ்சக நெஞ்சம் கொண்ட சேனைத்தலைவன் இளவரசனைக் கொல்வதற்கு ஓங்கிய வாளைத் தன் வாளால் துண்டாடுகின்றாள் .

தக்க சமயத்தில் தன் மாறுவேடம் களைந்து தான் யாரென்று காட்டுகின்றாள் .

காட்சி

தாடியும் பொய் !

என்றன் தலைப்பாகையும் பொய்யே !

கூடியுள்ள அங்கியும் பொய் !

கொண்ட முதுமையும் பொய் !

நான் விஜயராணி !

( வீரத்தாய் தொகுதி : 1 )

என்று அரசி தன் முன்னே கூடியுள்ள மன்னர்களின் முன்னிலையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள் .

பாரதிதாசனின் ‘ பாண்டியன் பரிசு ’ காவியத்திலும் அரசி வாளேந்தி வருபவளாகச் சித்தரிக்கப்படுகின்றாள் !

கதிர்நாட்டின் அரசியான அவள் வஞ்சகம் புரிந்த தன் உடன்பிறந்தான் நரிக்கண்ணனை வாள் கொண்டு மாய்க்க வருகின்றாள் .

நரிக்கண்ணன் தன் உடன்பிறந்தாளின் கணவனை மறைந்து நின்று வேலெறிந்து கொன்று விடுகின்றான் .

அரசி களத்துக்கு வருகின்றாள் .

மன்னன் இறந்து கிடப்பது அறிந்து துயரப்படுகின்றாள் .

இறந்த கணவனின் உடம்பைத் தடவிப் பார்க்கிறாள் .

தணல்போலும் புண்பட்ட முதுகு கண்டாள்

தலைகுனிந்தாள் !

அப்பிணத்தை நிலத்திற்போட்டாள்

அதோடு மட்டுமா ?

ஐயகோ !

முதுகு காட்டத் துணிந்ததுவோ தமிழா நின் தமிழ் நெஞ்சம் என்கின்றாள் .

தாய்மாரைச் சித்தரிப்பதில் பாரதிதாசன் இவ்வாறு தனித்தன்மை காட்டுகிறார் .

பாரதிதாசனின் வீரத்தாய்மார்கள்

• போரிடுவார்கள் .

• புகழுக்காக உயிர் கொடுப்பார்கள் .

• முதுகிற் புண்பட்டுச் சாவதைப் பொறுக்க மாட்டார்கள் .

• ஆண்களைவிட அறிவுக் கூர்மையும் வீர உணர்வும் மிக்கவர்களாகத் திகழ்வார்கள் .

3.3.2 காதல் தலைவி

பாரதிதாசனின் படைப்பில் இளம்பெண்கள் உரிமை மிக்கவர்கள் .

சமுதாயக் கட்டுகளை , ஆடவர்களைத் தாண்டிவந்து உடைப்பவர்கள் .

குறத்தி ஒருத்தி தன் காதலனிடம் பேசுகிறாள் பாருங்கள் ! மோதவரும் ஆணழகே வாவா வாவா

முத்தம்வை இன்னொன்று வை இன்னொன்று

( காதல் நினைவுகள் )

இப்படிப்பட்ட காதல் தலைவியை எந்தக் கவிஞனும் காட்டவில்லை .

பெண்களை ஊமையாகவும் செயலற்றவளாகவும் , அழகுப் பதுமையாகவும் , அச்சம் , நாணம் என்ற பண்புகளின் இருப்பிடங்களாகவும் உருவாக்கும் மரபைக் கவிஞர் உடைத்தெறிந்தார் .

உன் காதலன் என்ன சாதி என்று கேட்டனராம் பெற்றோர் .

அதற்கு அவள் தன் தோழியிடம் கூறும் விடையைக் கேளுங்கள் !

இந்தாடி அன்புள்ள தோழி - எனக்கு

எப்போது அடங்கும் சிரிப்பு

வந்தவன் ஆண்சாதி என்றால் - அவனை

மணந்தவள் பெண்சாதி தானே !

( தொகுதி : 4 காதல் கவிதைகள் )

என்கின்றாள் .

சாதிப் பாகுபாட்டைப் பாரதிதாசன் தலைவியர் பொருட்படுத்துவதே இல்லை .

‘ எதிர்பாராத முத்தம் ’ என்ற காதல் காவியம் கவிஞரால் இயற்றப்பட்டது .

அதில் தலைவன் பொன்முடி ; தலைவி பூங்கோதை .

தலைவி பூங்கோதை தன் காதலனுக்கு எழுதும்

பழத்தோட்டம் அங்கே ; தீராப்

பசிகாரி இவ்வி டத்தில் !

( எதிர்பாராத முத்தம் )

கடிதத்தில் என்று எழுதுகிறாள் .

பெண் தன் மனத்தில் உள்ள காதலை இப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம் என்று காட்டியவர் பாரதிதாசன் .

‘ புரட்சிக்கவி ’ என்ற குறுங்காவியத்தில் இளவரசி அமுதவல்லி கவிஞன் உதாரனிடம் காதல் கொள்கிறாள் .

அவன் தயங்குகிறான் ; நாடாளும் வேந்தன் மகளை நாம் காதலிக்கவில்லை என்று தயங்குகிறான் .

அமுதவல்லி அவனுக்குத் துணிவூட்டுகிறாள் ; காதலிக்கத் தூண்டுகிறாள் .

வருணம் , சாதி , செல்வம் என்றெல்லாம் பாராமல் பாரதிதாசன் தலைவியர் காதல் பயிர் வளர்க்கின்றார்கள் .

3.3.3 குடும்பவிளக்கு

பெண்ணே குடும்பவிளக்கு எனக் கூறத்தக்கவள் .

ஏனெனில் அவளே கல்வியும் அறிவும் சிந்தனையும் , திட்டமிட்டுச் செயலாற்றும் திறமும் படைத்தவள் என்று பாரதிதாசன் கருதினார் .

‘ குடும்பவிளக்கு ’ படித்தவர் யாரையும் விடாது பிணிக்கும் தேன்தமிழ் ஏடு. குடும்பவிளக்கான தலைவி தங்கத்திற்கு என்ன பணிதான் தெரியவில்லை !

அவள்

• பாத்திரம் துலக்குகிறாள்

• பால் கறக்கிறாள்

• வீட்டைத் தூய்மை செய்கிறாள்

• வீணையில் தமிழ் இசைக்கிறாள்

• குழந்தை வளர்க்கிறாள்

• கணவனைப் பேணுகிறாள்

• கடையில் வணிகம் செய்கிறாள்

• துணி தைக்கிறாள்

• தமிழ்ப்பணி செய்கிறாள்

• கல்வி கற்பிக்கிறாள்

• தச்சு வேலைகள் புரிகிறாள்

பற்பல பணிகளைப் புரியும் அவள் பல கலைகளும் அறிந்தவளாக இருக்கிறாள் .

தங்கத்தின் மகன் வேடப்பன் ; மருமகள் நகைமுத்து .

இருவரும் இனிய இல்லறம் நடத்துகின்றனர் .

ஓர் இரவில் நகைமுத்து தன் குழந்தையைப் பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டு தூங்குகிறாள் .

வலக்கை அவளுக்குத் தலையணை ஆயிற்று .

இடக்கை குழந்தையின் மேலே வில்லைப்போல் வளைந்து பாதுகாப்பாய் இருக்க அவள் தூங்குகின்றாள் .

வேடப்பன் நள்ளிரவில் எழுந்தான் .

நகைமுத்து அருகே குழந்தை தூங்கக் காண்கிறான் . அவள் இடக்கை கூடாரமாய்க் குழந்தையை வளைத்திருப்பதைப் பார்க்கிறான் .

“ என்ன இது !

ஒருநூல் புரண்டால் கூடப் போதுமே !

குழந்தை நசுங்கிவிடுமே ! ” என்று கருதி அவளை எழுப்ப நினைக்கின்றான் .

காட்சி

நகைமுத்து தன் கூந்தலிலிருந்து அகற்றிய ஒரு மலர்ச்சரத்தை எடுத்து வேடப்பன் அவளுடைய முகத்தில் போடுகிறான் .

அவள் கண் விழிக்கவில்லை ; மலர்ச்சரத்திலிருந்து ஒரே ஒரு மலர் இதழை எடுத்துக் குழந்தையின் மீது போடுகின்றான் .

தூங்கிக் கொண்டிருக்கும் நகைமுகத்தின் கை மலர் இதழை நீக்கி விட்டு மறுபடியும் கூடாரமாய் வளைகிறது .

குழந்தையைப் பாதுகாக்கும் தாய்மை ஆற்றலைக் கண்டு தாய்மையை வணங்குகின்றான் .

இவ்வாறு குடும்பவிளக்குப் பெண்ணின் பெருமையைப் போற்றுகின்றது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. பாரதிதாசன் பெண்குழந்தையை எப்படித் தாலாட்டுகின்றார் ?

[ விடை ]

2. மடம் என்பதன் பொருள் யாது ?

[ விடை ]

3. பாடாத தேனீ , உலவாத தென்றல் , பசியாத நல்வயிறு ஆகியவை இல்லாதது போல் எது இல்லை என்கிறார் கவிஞர் ?

[ விடை ]

4. முதுகில் புண்பட்ட கணவனின் உடல் கண்டு கதிர் நாட்டு அரசன் மனைவி என்ன கூறுகின்றாள் ?

[ விடை ]

5. ‘ குடும்ப விளக்கு ’ என்ற படைப்பில் தலைவியின் பெயர் என்ன ?

3.4 பாரதிதாசனின் புரட்சிப்பெண்

E

பாரதிதாசனின் புரட்சி மனத்தை அவருடைய பெண் பாத்திரங்களில் காணலாம் .

பல்வேறு படைப்புகளில் துலங்கும் அவருடைய பெண் பாத்திரங்கள் வருமாறு :

1. வஞ்சி - சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

2. அமுதவல்லி - புரட்சிக்கவி

3. விஜயா - வீரத்தாய்

4. தங்கம் - குடும்ப விளக்கு

5. நகைமுத்து - குடும்ப விளக்கு

6. கிள்ளை - காதலா கடமையா

7. சுப்பம்மா - தமிழச்சியின் கத்தி

8. அன்னம் - பாண்டியன் பரிசு

9. பூங்கோதை - எதிர்பாராத முத்தம்

இப்பாத்திரப் படைப்புகள் தேவை ஏற்படும்போது கடும்புயலாக உருக் கொள்கின்றனர் ; மற்ற சமயங்களில் குளிர் தென்றலாய் இதம் செய்கின்றனர் .

பெண்மையின் பன்முக ஆற்றலை இப்பாத்திரப் படைப்புகள் காட்டுகின்றன .

3.4.1 குழந்தை நிலையில்......

குழந்தையாய் இருக்கும்போதே மொழி உணர்வும் வேண்டும் ; தாய்மொழியில் தேர்ந்து சிறக்கப் பயிற்சியும் வேண்டும் எனக் கருதினார் கவிஞர் .

இளஞ்சேரனை நீயார் என்று கேட்டுப்

பதிலை எதிர்பார்த்திருந்தார் .

அவனோ

தன்மார்பு காட்டி ‘ நான் தம்பி ’ என்றான்

“ தமிழன் என்றுநீ சாற்றடா தம்பி ”

என்றே இயம்பி அமிழ்து வந்தாள்

( குடும்பவிளக்கு 4 )

இளஞ்சேரன் கைக்குழந்தை ; இளஞ்சேரனின் தமக்கை அமிழ்து .

அமிழ்துக்கு ஆறு வயது .

ஆறு வயதில் அவளிடத்தே மொழி உணர்வு எப்படி வந்தது ?

பெற்றோர் கொண்ட உணர்வு வழிவழியாய் வருதலையே கவிஞர் இங்ஙனம் காட்டுகின்றார் .

குழந்தைகளை வளர்க்கும் நெறி பற்றியும் பாரதிதாசன் கூறுவதை நாம் நினைக்க வேண்டும் .

‘ ஆல் ஒடிந்து வீழ்ந்தாலும் தோள்கள் தாங்கும் ’ வலிமை பிள்ளைகளுக்கு வேண்டும் என்கிறார் . ஆலமரமே விழுந்தாலும் இளம்பிள்ளையின் தோள்கள் தாங்க வேண்டுமாம் .

நல்ல பழக்கங்களைப் பிள்ளைகட்குக் கற்பிக்கக் கவிஞர் வற்புறுத்துகின்றார் .

இன்னம் தூக்கமா - பாப்பா

இன்னம் தூக்கமா ?

பொன்னைப் போல வெயிலும் வந்தது

பூத்த பூவும் நிறம் குறைந்தது

உன்னால் தோசை ஆறிப் போனதே !

ஒழுங்கெல்லாமே மாறிப் போனதே !

( இளைஞர் இலக்கியம் )

என்று நல்ல நெறிகளை அறிவுறுத்தும் பாடல்கள் பலப்பல அவர் புனைந்தார் .

இன்று குழந்தைகள் நீங்கள் !

எனினும்

இனி இந்த நாட்டினை ஆளப் பிறந்தீர் !

குன்றினைப் போல் உடல் வன்மை வேண்டும்

கொடுமை தீர்க்கப் போராடுதல் வேண்டும் !

( இசையமுது )

என்று குழந்தை மனத்திலேயே தீமையை எதிர்த்துப் போராடும் விதையை விதைத்து விடுகிறார் .

3.4.2 மணப்பெண் நிலையில்.....

நாணிக் குனிந்து , நாயகனின் முகம் பார்க்கவும் நடுங்கித் தூணுக்குப் பின்னால் நின்றே உலகைக் காணும் கோழைச் சமூகமாகப் பெண்கள் சமூகத்தைக் கருதினர் பழைய உலகத்தினர் .

புதியதோர் உலகம் செய்யப் புறப்பட்ட கவிஞர் , திருமணப் பந்தலில் மணமகள் நகைமுத்து ‘ வேடப்பனை நான் விரும்பியது உண்டு ; வாழ்வின் துணைஎன்று கருதியது உண்டு ’ என்று கூறச் செய்கிறார் .

புரட்சிக் கவிஞரின் குடும்ப ஓவியத்தில் வேலைக்காரிக்கு இடமில்லை .

அப்படிச் சமுதாயத்தில் ஒருத்தியை உருவாக்குவதை அவர் விரும்பவில்லை .

மணம் செய்து வந்த புதிதில் மணவாளன் தன் மனைவியைப் பார்த்து “ நீ போய் கிளியோடு பேசுக ; யாழ் இசை கூட்டுக ; எனக்கு எண்ணெய் தேய்க்க வேலைக்காரியை அனுப்புக ” என்கிறான் .

அவளும் போனாள் .

சிறிது நேரத்தில் முக்காடு போட்டுக் கொண்டு ஒரு வேலைக்காரப்பெண் வந்தாள் .

எண்ணெய் தேய்த்து விட்டாள் .

பணி முடிந்து அவள் திரும்பும் போது அவள் முக்காடு விலகியது .

அப்போதுதான் மணவாளன் வேலைக்காரி போல வந்தது தன் மனைவியே என்று அறிகிறான் .

காட்சி

தலைவர் விருப்பம் தலைவி அறிவாள்

பொறுப்பிலாத் தோழி அறிவது உண்டோ

( குடும்ப விளக்கு )

என்று கேட்கிறாள் மணந்து வந்தவள் .

இப்படிப்பட்ட பெண்ணை மணந்து வாழ்ந்த வாழ்க்கையின் நிறைவை

பெண் இவளோ ஆண் நானோ என வேறு வேறாய்ப்

பிரித்துரை மாட்டாது பிசைந்த கூட்டமிழ்து

எங்கள் வாழ்க்கை என்கிறான் கணவன் .

3.4.3 முதியவள் நிலையில்

காட்சி

பல்லாண்டுகள் வாழ்ந்து நரைத்து முதிர்ந்த நிலை அடைகிறாள் தலைவி .

அப்போதும் அவள் நெஞ்சிலே கணவனே குடியிருக்கின்றான் .

‘ என் கணவனை அந்த நாளில் நான் எப்படிக் காத்தேன் தெரியுமா ?

வெயில்பட்டால் உருகிவிடும் மெழுகுப்பாவை ; மழை பட்டால் கரையும் கற்கண்டுப் பேழை ; புயல் வீசினால் தாங்காத பூம்பொழில் என்றல்லவா நான் அவனைக் காத்தேன் ’ என்கிறாள் தலைவி .

இன்று நலிந்து மெலிந்து திண்ணையில் குந்திக் கிடக்கும் தன் முதிய கணவனை அந்தக்கிழவி மனத் தொட்டிலில் துயில வைத்துத் தாலாட்டிக் கொண்டிருக்கிறாள் .

‘ இன்றும் எனது ஐந்து புலன்களுக்கும் அவன் நினைவுகள் தேன்மழை அல்லவா பெய்கின்றன ’ என்று மகிழ்கிறாள் .

முதியோர் காதலைப் பாரதிதாசன் பாடியது போல எவரும் பாடவில்லை .

3.5 பாரதிதாசனின் பெண்ணுலகம்

E

பாரதிதாசனின் பெண்ணுலகம் மற்றைக் கவிஞர்களின் படைப்பிலிருந்து வேறுபட்டது .

பாரதிதாசனின் பெண் புதுமைப்பெண் மட்டும் அல்லள் ; அவள் புரட்சிப் பெண்ணும் ஆவாள் . சிங்காரச் சிமிழாய்க் காட்சி தரும் அவளிடம் பொங்கி வெடிக்கும் எரிமலையும் இருக்கும் .