அறிவுத்திறன் மட்டுமன்று ; ஆண்மகனை வழிநடத்தும் செயல்திறமும் அவளுக்கு உண்டு .
வஞ்சி என்பவள் குப்பன் என்ற தன் காதலனைச் சஞ்சீவி பர்வதத்திற்கு அழைத்து வந்தாள் .
எதற்கு ?
சத்தமில்லாமல் முத்தமிடுவதற்கா ?
இயற்கை அழகு கண்டு இன்பம் அள்ளவா ?
இல்லை இல்லை .
அவளே கூறுகின்றாள் கேளுங்கள் !
மீளாத மூடப்பழக்கங்கள் மீண்டும் உமை
நாடாது இருப்பதற்கு நான் உங்களை இன்று
சஞ்சீவி பர்வதத்தில் கூப்பிட்டேன்
என்கிறாள் .
புராணக் கதைகளால் பகுத்தறிவு அழிவதை வஞ்சி குப்பனுக்குப் புரிய வைத்தாள் .
வையத்தை வழிநடத்த வலிமை மிக்க ஆற்றலாக விளங்குகின்றாள் .
புரட்சிக்கவிஞர் படைத்த பெண் !
3.5.1 தங்கம் - நகைமுத்து
தங்கம் , நகைமுத்து இருவரும் குடும்ப விளக்கில் வரும் பாத்திரங்கள் .
தமிழ்நாட்டுப் பண்பாட்டின் முத்திரைகளாக இவர்கள் உருவகிக்கப் பெற்றுள்ளனர் .
வானூர்தி செலுத்தவும் , கடலில் மூழ்கி அளக்கவும் பெண்களால் ஆகுமென்று தங்கம் கருதுகின்றாள் .
புதுமைப் பெண்ணாக உருப்பெற வேண்டுமென்று கருதும் தங்கம் வீட்டுக் கடமைகளைப் புறக்கணிக்கவில்லை .
சமையலில் புதுமை வேண்டும் என்ற கருத்துடையவளாய் அவள் விளங்குகின்றாள் .
ஒரு பெண்ணுக்குப் பெருமிதம் அவள் பலகலையும் தேர்ந்தவளாக இருப்பதில்தான் இருக்கிறது என்கிறார் கவிஞர் .
தங்கம் வீட்டுக் கடமைகளை ஆற்றுவதிலும் வல்லவள் ; நாட்டுத்தொண்டு , மொழித்தொண்டு ஆகியவற்றிலும் கருத்துச் செலுத்தும் திறன் மிக்கவள் .
இந்நாளில் பெண்கட் கெல்லாம்
ஏற்பட்ட பணியை நன்கு
பொன்னேபோல் ஒருகை யாலும்
விடுதலை பூணும் செய்கை
இன்னொரு மலர்க்கை யாலும்
இயற்றுக !
( குடும்பவிளக்கு )
என்று தங்கத்தம்மையார் கூறுவது பாரதிதாசனின் இலக்கியப் பெண்ணுக்குரிய பண்பாகும் .
நகைமுத்து குடும்பவிளக்கில் இடம்பெறும் மற்றொரு பாத்திரம் .
நகைமுத்து வேடப்பன் மீது காதல் கொள்கிறாள் .
சிக்கலின்றி அவர்கள் விரும்பியவண்ணம் திருமணம் நிகழ்கின்றது .
குழந்தை வளர்க்கும் கலையைப் பாவேந்தர் நகைமுத்து வழியாக நமக்கு விளக்குகின்றார் .
3.5.2 அன்னம் - ஆதிமந்தி
‘ பாண்டியன் பரிசு ’ என்ற காவியத்தில் இடம்பெறும் அன்னம் கதிர்நாட்டு அரசனின் மகள் .
எளிய குடியில் பிறந்த வேலனோடு இவள் காதல் கொள்கின்றாள் .
அன்னத்தின் தந்தையும் தாயும் கொல்லப்படுகின்றனர் .
அரச உரிமையைப் பெறுவதற்குரிய பேழை எங்கே இருக்கின்றது எனத் தெரியவில்லை .
( பேழை - பெட்டி ) அந்தப் பேழைக்குள் அரச உரிமை குறிக்கும் பட்டயமும் , உடைவாளும் இருக்கும் .
இந்தப் பேழை பாண்டிய அரசன் ஒருவனால் அளிக்கப்பட்டது .
இது பாண்டியன் பரிசெனப்படும் .
என்பாண்டியன் பரிசை எனக்களிப்போன் எவன்
எனினும் அவனுக்கே உரியோள் ஆவேன்
( பாண்டியன் பரிசு )
என்று அறிவிக்கின்றாள் .
பாண்டியன் பரிசைக் கொண்டு வருபவன் ஒரு கிழவனாக இருந்தால் என்ன செய்வது என்று கேட்டபோது அன்னம் , “ கிழவர் என்றால் என்னை மணக்க நினைப்பாரா ?
நினைப்பார் என்றால் அவர் நெஞ்சத்தில் இளையார் வயதில் மூத்தார் ” என்கின்றாள் .
அரச குடும்பத்தில் பிறந்திருந்தும் அன்னம் புரட்சி மனப்பாங்கு உடையவளாகப் படைக்கப் பட்டிருக்கின்றாள் . ஆதிமந்தி சோழன் கரிகாலனின் மகள் ; சேர இளவரசன் ஆட்டனத்தியிடம் ஆடல் பயின்றவள் .
இருவரும் மணம் புரிந்து கொள்கின்றனர் .
ஆட்டனத்தி காவிரியில் நீராடுகையில் வெள்ளம் அவனை அடித்துச் செல்கிறது .
ஆதிமந்தி வருந்திக் கண்ணீர் வடித்து ஆற்றின் கரையில் தொடர்ந்து செல்கிறாள் .
காவிரி கடலொடு கலக்கும் இடத்தில் கணவனைப் பெறுகின்றாள் .
இந்த நிகழ்ச்சி பழைய தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது .
பாரதிதாசன் இதனை அழகிய நாடகமாகச் ‘ சேரதாண்டவம் ’ என்ற பெயரில் வடித்திருக்கிறார் .
இதோ அலைகொழிக்கும் காவிரியில் ஆட்டனத்தி ஆடுவதைப் பாருங்கள் !
..........கரையோரத்தில் ஆதிமந்தி கணவனைத் தேடிக் கலங்குவதைக் காணுங்கள் .
காதல் மடந்தையான ஆதிமந்தி கலை மடந்தையாகக் கவிஞரால் அழகுற உருவாக்கப் பெற்றுள்ளாள் .
3.5.3 கண்ணகி - மணிமேகலை
சிலப்பதிகாரக் கண்ணகியின் கதையைப் புரட்சிக் கவிஞர் ‘ கண்ணகி புரட்சிக் காப்பியம் ’ எனப் படைத்தார் .
இந்தப் படைப்பில் பாரதிதாசன் பகுத்தறிவு மணம் கமழச் செய்கிறார் .
இயற்கை மீறிய நிகழ்ச்சிகளைக் கவிஞர் நீக்கி விடுகிறார் .
கணவனைப் பெறவேண்டுமென்றால் , கண்ணகி சோமகுண்டம் , சூரியகுண்டம் என்ற குளங்களிலே மூழ்கி மன்மதனைத் தொழ வேண்டும் என்று தேவந்தி என்ற தோழி கூறுகின்றாள் .
சிலப்பதிகாரக் கண்ணகி அது சிறப்பாகாது என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்கிறாள் .
பாவேந்தரின் கண்ணகி “ உன் தீய ஒழுக்கத்தை இங்கு நுழைக்காதே ” என்று எச்சரிக்கின்றாள் .
மதுரையைக் கண்ணகி தன் ஆற்றலால் எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறியதை மாற்றினார் பாரதிதாசன் .
கண்ணகிக்கு நிகழ்ந்த கொடுமை கண்டு மக்கள் மதுரை நகர்க்குத் தீயிட்டனர் என்றார் கவிஞர் .
கண்ணகி வானநாடு போனதாகக் கூறப்பட்டதை மாற்றி மலையிலிருந்து விழுந்து இறந்தாள் என்று கூறினார் கவிஞர் .
கண்ணகி காவியம் கவிஞரின் படைப்பில் சீர்திருத்தக் காவியமாயிற்று .
3.6 தொகுப்புரை
ஆண் , பெண் என்ற பாகுபாடு இயற்கையில் அமைந்தது ; இருவேறு பாலினம் ஒன்றுவதில்தான் உலக இயக்கம் இருக்கிறது .
ஆண் பெண் இருவரும் குடும்பக் கடமைகளையும் சமுதாயக் கடமைகளையும் ஆற்ற வேண்டியவர்கள் .
இயற்கை வகுத்த பால் வேறுபாடு தவிர இருவரிடையே வேறு வேற்றுமைகள் தோன்றியிருக்கத் தேவையில்லை .
ஆனால் மிகப் பழங்காலத்திலிருந்து பல சமூக அமைப்புகளிலும் ஆண் ஆதிக்கம் மிக்கவனாகவும் , பெண் அவனுக்கு அடங்கி வாழ்பவளாகவும் இருக்கும் நிலை உள்ளது .
பெண்பிறப்பு மதிப்புக் குறைந்ததாகக் கருதப்படும் நிலை , திருமணத்திற்கு முன்னும் பின்னும் அளவற்ற கட்டுப்பாடுகளுக்குள் வாழவேண்டிய சூழல் , தனித்து இயங்க முடியாத வாழ்க்கைப் போக்கு ஆகியவற்றால் பெண்களின் வாழ்வியல் நலிந்தது .
அவ்வப்போது சீர்திருத்தவாதிகள் தோன்றிப் பெண்ணுலகு உரிமை பெறக் குரல் கொடுத்தனர் .
தமிழ்ச் சமுதாயத்தில் கவிஞர் பாரதிதாசன் பெண்களின் விடுதலைக்காகப் பெரிதும் பாடுபட்டார் .
தம் படைப்புகள் அனைத்திலும் புரட்சி உள்ளமும் செயல்திறனும் கொண்ட பெண்களைப் படைத்தார் .
‘ இந்தியாவிற்கு விடுதலை வேண்டும் என்கின்றீரா ?
அப்படியானால் முதலில் பெண்ணுக்கு விடுதலை கொடுங்கள் ’ என்று பேசினார் .
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்துவரல் முயற்கொம்பே
( பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி )
என்று பேசிய முதல்கவிஞர் அவரே , பெண்கள் உற்ற கைம்மைப் பழியைத் துடைக்க அவர் போரிட்டார் ; பெண்கள் மீது திணிக்கப்பட்ட பொருந்தா மணத்தை அவர் கண்டித்தார் ; பெண்கள் உரிமையுடன் காதல் மணம் கொள்வதை அவர் வரவேற்றார் ; பெண்கள் மறுமணம் கொள்வதை அவர் வற்புறுத்தினார் .
எங்கெங்குப் பெண்களின் விடுதலை இயக்கமும் உரிமைப்போரும் நடக்கின்றனவோ அங்கெல்லாம் அவர் பாடல்களே முழங்கும் ; அவருடைய பாத்திரப் படைப்புகளே பேசும் .
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா ?
-எமக்கு
இன்பம் சேர்க்க மாட்டாயா ?
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. பாண்டியன் பரிசு நூலில் கதைத் தலைவியன் பெயர் யாது ?
[ விடை ]
2. அமிழ்து தன் தம்பியை நோக்கி யாது கூறினாள் ?
[ விடை ]
3. தலைவன் எண்ணெய் தேய்க்க வேலைக்காரியை அனுப்புக என்றபோது தலைவி என்ன செய்தாள் ?
[ விடை ]
4. வஞ்சி குப்பனை எதற்குச் சஞ்சீவி பர்வதத்தின் சாரலுக்குக் கூப்பிட்டதாகக் கூறுகின்றாள் ?
[ விடை ] 5. மதுரையை யார் எரித்ததாகப் புரட்சிக் கவிஞர் கூறுகின்றார் ?
பாரதிதாசனின் பகுத்தறிவுப் பார்வை
4.0 பாட முன்னுரை
பாரதிதாசன் புரட்சிக் கவிஞர் என்று பாராட்டப்படுகிறார் .
புரட்சி என்பது மாறுபட்ட சிந்தனையை வெளிப்படுத்தும் செயல் ஆகும் .
இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் நிலவிய சாதிக் கொடுமை , சமயச் சண்டை , அறியாமை , மூடப்பழக்க வழக்கம் முதலியவற்றுக்கு எதிராகத் தமது பகுத்தறிவுக் கருத்துகளைப் பாரதிதாசன் பாடியுள்ளார் .
எனவேதான் , அவர் புரட்சிக் கவிஞர் என்று போற்றப்படுகிறார் .
அறியாமையில் மூழ்கி இருந்த மக்களுக்கு அடிப்படை அறிவைக் கொடுக்க எண்ணினார் பாரதிதாசன் .
அதன் பின்னர் அவர்களைப் பகுத்து அறியும் சிந்தனை உடையவர்களாக உயர்த்த எண்ணினார் .
ஆகவே , தமது பாடல்களில் எங்கு எல்லாம் பகுத்தறிவுச் சிந்தனையைப் புகுத்த முடியுமோ அங்கு எல்லாம் பாரதிதாசன் புகுத்தி உள்ளார் .
• பகுத்தறிவு
அறிவுக்குப் பொருந்தாத கருத்துகளை மறுப்பதும் அறிவுக்குப் பொருந்தும் கருத்துகளை ஏற்பதும் பகுத்தறிவு ஆகும் .
இந்தச் சிந்தனை உடையவர்களைப் பகுத்தறிவாளர்கள் என்கிறோம் .
4.1 சாதி
E
அறிவுக்குப் பொருந்தாத ஒன்று சாதி ஆகும் .
மனித சமுதாயத்தை ஒரே குலமாகப் பார்க்கும் பண்பு கொண்டவர்கள் தமிழர்கள் .
உலக மக்கள் இடையே எந்தப் பிரிவும் இல்லை என்ற எண்ணம் கொண்டு அவர்கள் வாழ்ந்தார்கள் .
இவ்வாறு உலக மக்களை ஒன்று என்று கருதினாலும் ஆட்சி நிர்வாகத்திற்காக உலகில் பல நாடுகள் பிரிந்துள்ளன .
அவற்றுள் மொழி அடிப்படையில் பல இனங்கள் உள்ளன .
இந்தப் பிரிவுகளுக்கு நிர்வாக நோக்கம் இருப்பதை நாம் அறிய முடிகிறது .
ஆனால் , இந்தச் சாதிப்பிரிவிற்கு நம்மால் எந்த நல்ல நோக்கத்தையும் அறிய இயலவில்லை .
ஆகவே சாதியை அறிவுக்குப் பொருந்தாது என்று பாரதிதாசன் கூறியுள்ளார் .
உலகினில் சாதிகள் இல்லை - என்
உள்ளத்தில் வேற்றுமை இல்லை
கலகத்தைச் செய்கின்ற சாதி - என்
கைகளைப் பற்றி இழுப்பதும் உண்டோ ?
( காதல் பாடல்கள் , ‘ அவள் அடங்காச் சிரிப்பு ’ - 3 )
என்று கேள்வி கேட்டு , ஒரு பெண்ணின் வாய்மொழியாக இந்த உலகில் சாதி இல்லை என்று பாரதிதாசன் பாடியுள்ளார் .
4.1.1 சாதி நீக்குவது தமிழர் கடமை
தமிழ் மக்கள் தங்களிடையே இருக்கும் சாதி உணர்வை ஒழிக்கவேண்டும் .
அவ்வாறு ஒழிக்காமல் உயர்வு , தாழ்வு சொல்லித் திரிவது மடமை ஆகும் என்பதைப் பாவேந்தர் உணர்த்த எண்ணினார் .
எனவே ,
பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை - இந்தப்
பிழை நீக்குவதே உயிர் உள்ளாரின் கடமை
( பாரதிதாசன் கவிதைகள் , 60 , சகோதரத்துவம் - 1 )
என்று தமிழர்களின் கடமையை உணர்த்தியுள்ளார் .
இந்தக் கடமையை உணராமல் மேலும் , சாதி வளர்ப்பவர்களைப் பார்த்துப் பாரதிதாசன் கேள்வி கேட்கிறார் பாருங்கள் .
மாந்தரில் சாதி வகுப்பது சரியா ?
மக்கள் ஒரேகுலமாய் வாழ்வது சரியா ?
( பாரதிதாசன் கவிதைகள் 50. ஆய்ந்துபார் - 1 )
என்று கேட்கும் கேள்விக்கு நாம் என்ன பதில் சொல்வோம் ?
‘ மக்கள் ஒரே குலமாய் வாழ்வதுதான் சரி ’ என்றுதானே சொல்வோம் .
பாவேந்தர் , எந்தக் கருத்தை வலியுறுத்த விரும்புகிறாரோ அந்தக் கருத்தை நம் வாயால் வர வைக்கும் திறத்தை இந்தப் பாடலில் வெளிப்படுத்தியிருக்கிறார் பார்த்தீர்களா ?
4.1.2 ஐந்து சாதிகள்
முதலில் நான்கு பிரிவுகள் மட்டுமே நம்மிடையே புகுத்தப்பட்டன .
அவை வேதியர் , சத்திரியர் , வைசியர் , சூத்திரர் என்பவை ஆகும் .
இந்த நான்கு சாதிகளுக்கும் அப்பால் ஐந்தாம் சாதியாகப் ‘ பஞ்சமர் ’ என்று ஒரு பிரிவையும் உருவாக்கி விட்டார்கள் .
இன்று அப்பிரிவுகள் பலநூறு சாதிகளாக வளர்ந்து விட்டன .
இந்தச் சாதிகளுக்கு அடிப்படை யார் ? என்ற கேள்வி இப்போது நம்மிடம் தோன்றுகிறது அல்லவா ?
பாரதிதாசனே சொல்கிறார் பாருங்கள் .
வேதம் உணர்ந்தவன் அந்தணன் - இந்த
மேதினியை ஆளுபவன் சத்திரியனாம் - மிக
நீதமுடன் வைசியன் என்று உயர்வு செய்தார் - மிக
நாதியற்று வேலைகள் செய்தே - முன்பு
நாத்திறம் அற்றிருந்தவன் சூத்திரன் என்றே - சொல்லி
ஆதியினில் மனு வகுத்தான் - இவை
அன்றியும் பஞ்சமர்கள் என்பதும் ஒன்றாம்
( பாரதிதாசன் கவிதைகள் 3 , ஞாயமற்ற மறியல் 6 )
( நீதமுடன் = நீதியுடன் , நாதியற்று = உதவியில்லாமல் , நாத்திறம் = வாதாடும் திறமை , ஆதியினில் = பழங்காலத்தில் )
என்று இந்த வருணப் பாகுபாட்டை முதலில் மனு என்பவர் வகுத்ததாகப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார் .
( வருணம் - நிறம் , நிறம் அடிப்படையில் உண்டான பிரிவு ) இந்தச் சாதிப்பிரிவு உலகநாடுகளில் எல்லாம் உள்ளதா ?
அல்லது நம் இந்திய நாட்டில் மட்டுமே உள்ளதா ?
என்ற கேள்விக்குப் பதிலாகப் பாரதிதாசன் ,
தீண்டாமை என்னும் ஒருபேய் - இந்தத்
தேசத்தில் மாத்திரமே திரியக் கண்டோம் - எனில்
ஈண்டு பிறநாட்டில் இருப்போர் - செவிக்கு
ஏறியதும் இச்செயலைக் காறி உமிழ்வார்
( பாரதிதாசன் கவிதைகள் 3 , ஞாயமற்ற மறியல் - 3 )
( காறி உமிழ்தல் = எச்சிலைச் சேர்த்துக் கோபத்துடன் துப்புதல் )
என்று பாடியுள்ளார் .
இந்தப் பாடல் மூலம் தீண்டாமைக் கொடுமை இந்தியாவில் மட்டுமே உள்ளது என்று பதில் தந்துள்ளார் .
இந்தக் கொடுமையைப் பிறநாட்டைச் சேர்ந்தவர்கள் அறிந்தால் நம்மை உமிழ்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார் .
பகுத்தறிவுக்குப் பொருந்தாத இந்தச் சாதிப்பிரிவை ஏன் இந்தியாவில் நாம் வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா ?
இதற்கும் பாரதிதாசன் தமது பாடல் வழியே பதில் சொல்லியிருக்கிறார் .
சாதிப்பிரிவு செய்தார்
தம்மை உயர்த்துதற்கே
நீதிகள் சொன்னாரடி - சகியே
நீதிகள் சொன்னாரடி
( பாரதிதாசன் கவிதைகள் 3 , சமத்துவப்பாட்டு - 45 )
என்று தம்மை மேலும் உயர்த்திக் கொள்வதற்காகத்தான் சாதிப்பிரிவுகளை ஏற்படுத்தியுள்ளார்கள் .
தாங்கள் வகுத்த சாதிப்பிரிவுகளுக்கு ஏற்ப அவர்கள் நீதியையும் வகுத்துக் கொண்டார்கள் என்றும் பாரதிதாசன் பாடியுள்ளார் .
4.1.3 தமிழர்க்குச் சாதி இல்லை
தமிழ் மக்களுக்குச் சாதி கிடையாது .
அவர்கள் அனைவரும் தமிழர்கள் என்ற இன வரையறைக்கு உட்பட்டவர்கள் .
ஆனால் , தற்காலத் தமிழர்களிடம் சாதி வேரூன்றி விட்டது .
இதைப் போக்க எண்ணிய பாரதிதாசன் தமிழர்களுக்குச் சாதி இல்லை என்ற உண்மையை ,
மிக்கு உயர்ந்த சாதி , கீழ்ச்சாதி என்னும்
வேற்றுமைகள் தமிழ்க்கில்லை ; தமிழர்க்கில்லை
பொய்க் கூற்றே சாதி எனல்
( பாரதிதாசன் கவிதைகள் - கடல்மேல் குமிழிகள் : 26 )
என்று உணர்த்தியுள்ளார் .
மேலும் , தமிழர்க்குச் சாதி உண்டு என்று கூறுவது பொய்க்கூற்று என்பதையும் வெளிப்படுத்தி உள்ளார் .
மனிதர்களில் சாதியாலோ வேறு காரணங்களாலோ உயர்வும் இல்லை ; தாழ்வும் இல்லை என்ற நிலை வரவேண்டும் .
அப்போது மனித வாழ்க்கையானது இன்பத்தின் எல்லையாக விளங்கும் என்பதை
தாழ்வில்லை உயர்வில்லை
சமமென்ற நிலைவந்தால்
வாழ்வெல்லை காண்போமடி - சகியே
வாழ்வெல்லை காண்போமடி ( பாரதிதாசன் கவிதைகள் - 3 , சமத்துவப்பாட்டு - 109 )