ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கொள்ளும் காதல் அகப்பொருள் எனப்பட்டது .
போர் , வீரம் , இரக்கம் , நிலையாமை , கொடை , கல்வி முதலியவை எல்லாம் புறப்பொருள் எனப்பட்டன .
தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் செய்யுளில் இயற்றப் பட்டவையே .
செய்யுள்களின் அமைப்பு , ஓசை , பாக்களின் வகைகள் முதலியவற்றைச் சொல்லுவதே யாப்பு இலக்கணம் ஆகும் .
சங்க காலத்திற்குப்பின் பக்தி இலக்கியக் காலத்திலும் அதற்குப் பின்பும் பல வகைச் சிறிய இலக்கிய வடிவங்கள் தோன்றின .
தூது , உலா , அந்தாதி , மாலை , பிள்ளைத்தமிழ் முதலியவை இவ்வகையான இலக்கியங்களாகும் .
இவற்றுக்கு இலக்கணம் சொல்லுவது பாட்டியல் இலக்கணம் ஆகும் .
இலக்கியங்களில் அழகுக்காகவும் பொருள் விளங்குவதற்காகவும் உவமைகளைப் பயன்படுத்துவது கவிஞர்களின் இயல்பு .
அவ்வாறு இடம்பெறும் உவமை , உருவகம் முதலியவற்றுக்கு அணி என்று பெயரிட்டு அவற்றின் இலக்கணத்தைச் சொல்லுவது அணி இலக்கணம் ஆகும் .
தமிழ் இலக்கண நூல்கள்
தமிழ் இலக்கியத்தின் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்டது .
இரண்டாயிரம் ஆண்டுகளில் ஏராளமான இலக்கியங்கள் தோன்றி , மொழியை வளப்படுத்தியுள்ளன .
இலக்கியங்களைப் போலவே இலக்கண நூல்களும் தமிழில் மிகுதியாகத் தோன்றியுள்ளன .
நீண்ட வரலாற்றில் அரசாட்சி , பிறமொழிகளின் தாக்கம் , சமூக மாற்றம் , பண்பாடு , நாகரிகம் முதலியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக மொழியும் இலக்கியமும் மாறின .
எனவே இந்த மாற்றங்களை உள்வாங்கிப் புதிய இலக்கண நூல்கள் தோன்ற வேண்டியதும் அவசியம் ஆனது .
இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு காலம் தோறும் புதிய இலக்கண நூல்கள் தோன்றி வந்தன .
எனவே தமிழில் இலக்கண வளம் மிகுதியாக உள்ளது என்று கூறலாம் .
தமிழில் உள்ள சில இலக்கண நூல்கள் பற்றிச் சிறு குறிப்பு இங்கே தரப்படுகிறது .
1.3.1 தொல்காப்பியம்
தமிழில் மிகவும் பழைய இலக்கண நூலாக விளங்குவது தொல்காப்பியம் ஆகும் .
இது கி.மு. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது .
இதை இயற்றியவர் தொல்காப்பியர் ஆவார் .
இந்த நூலில் எழுத்து அதிகாரம் , சொல் அதிகாரம் , பொருள் அதிகாரம் என்ற மூன்று அதிகாரங்கள் உள்ளன .
ஒவ்வோர் அதிகாரத்திலும் ஒன்பது இயலாக இருபத்து ஏழு இயல்கள் உள்ளன .
தமிழில் உள்ள இலக்கண நூல்களிலேயே மிகவும் பெரியது தொல்காப்பியம் ஆகும் .
பொருள் அதிகாரத்தில் தமிழின் பொருள் இலக்கணமும் , யாப்பு இலக்கணமும் சொல்லப்பட்டுள்ளன .
தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தில் உள்ள உவமை இயலில் அணி இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது .
இன்று தமிழில் உள்ள ஐந்திலக்கணங்களுக்கும் தோற்றுவாயாகத் தொல்காப்பியம் திகழ்கிறது .
தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் என்னும் அறிஞர் பாயிரம் எழுதியுள்ளார் .
இவர் தொல்காப்பியருடன் பயின்றவர் என்று அறிய முடிகிறது .
பாயிரம் என்பது தற்காலத்தில் எழுதப்படும் முன்னுரை போன்றது .
நிலந்தரு திருவின் பாண்டிய மன்னனின் அவையில் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேறியது என்று பாயிரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .
தொல்காப்பியம் இலக்கணத்தை மிகவும் விரிவாகக் கூறுகிறது .
சூத்திரங்கள் இலக்கண அமைப்பை விளக்கும் முறையில் அமைந்துள்ளன .
சிறு இலக்கண விதிகளைக்கூட விட்டுவிடாமல் மிகவும் நுட்பமாகத் தொல்காப்பியம் கூறுகிறது .
தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர் , நச்சினார்க்கினியர் , சேனாவரையர் , தெய்வச்சிலையார் , கல்லாடர் , பேராசிரியர் ஆகியோர் உரை எழுதியுள்ளனர் .
1.3.2 நன்னூல்
பவணந்தி முனிவர் என்ற சமண சமய முனிவரால் இயற்றப்பட்டது நன்னூல் என்ற இலக்கண நூல் .
இது , எழுத்து இலக்கணம் , சொல் இலக்கணம் ஆகிய இரண்டு இலக்கணங்களையும் கூறுகிறது .
நன்னூல் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றியது .
நன்னூல் , இலக்கணத்தைச் சுருக்கமாகக் கூறும் நூல் ஆகும் .
நன்னூலில் முதலில் பாயிரம் என்று ஒரு பகுதி உள்ளது .
இதில் ஐம்பத்தைந்து சூத்திரங்கள் உள்ளன .
பாயிரப் பகுதியில் நூலின் இலக்கணம் , நூலைக் கற்றுத்தரும் ஆசிரியர் இலக்கணம் , கற்றுத்தரும் முறை , மாணவர்களின் குணங்கள் , மாணவர்கள் கற்கும் முறை ஆகியவை இடம் பெற்றிருக்கும் .
எழுத்து அதிகாரத்தில் ஐந்து இயல்கள் உள்ளன ; 202 சூத்திரங்கள் உள்ளன .
சொல்லதிகாரத்தில் ஐந்து இயல்கள் உள்ளன ; 205 சூத்திரங்கள் உள்ளன .
அருங்கலை விநோதன் என்ற பட்டப் பெயர் பெற்ற சீயகங்கன் என்ற அரசனின் வேண்டுகோளின்படி நன்னூல் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது .
தொல்காப்பியம் தோன்றிப் பல நூற்றாண்டுகள் சென்றுவிட்டதால் அதில் உள்ள மரபுகள் மாறிவிட்டன .
மேலும் தொல்காப்பியம் கடல் போலப் பரந்துவிரிந்த நூல் ஆகும் . எனவே நன்னூல் தோன்றிய பின்பு பரவலாக அனைவரும் நன்னூலையே கற்கத் தொடங்கினர் .