20

நட , வா , என வரும் 23 வினைகளும் தன்வினைப் பகுதிகள் ஆகும் .

இவற்றிற்கான பிறவினைப் பகுதிகளைக் காண்போம் .

இத் தன்வினை ஏவல் பகுதிகள் பிறவினைப் பகுதிகளாக மாறுதற்கு உரிய இலக்கணத்தை நன்னூலார் வகுத்துள்ளார் .

‘ செய் ’ என்னும் வினைப் பகுதியின் பின் ‘ வி‘ என்பதோ அல்லது ‘ பி‘ என்பதோ தனித்து வருமாயின் அது ‘ செய்வி‘ என்னும் வாய்பாட்டு ஏவல் பகுதியாகும் .

அந்த வினையுடன் இவ்விரு விகுதிகளில் ஏதேனும் ஒன்று தன்னுடன் தானோ ( பி + பி ) தன்னுடன் பிறவோ ( பி + வி அல்லது வி + பி ) இணைந்து வருமாயின் அது செய்விப்பி என்னும் வாய்பாட்டு ஏவல் பகுதியாகும் .

இரு விகுதிகள் சேர்ந்து வருவது ஈரேவல் எனப்படும் .

வரு + வி - வருவி - ‘ வி ’ தனித்து வந்துள்ளது நடப்பி - நட + பி - பி தனித்து வந்துள்ளது நட + பி + பி - நடப்பிப்பி - ‘ பி ’ தன்னுடன் தான் பி + பி என இணைந்து வந்துள்ளது .

நடப்பிவி - இதில் நட + பி + வி என்று ‘ பி ’ யுடன் ‘ வி ’ இணைந்து வந்துள்ளது .

‘ வி ’ என்னும் விகுதி தன்னுடன் தான் இணைந்து வருவதில்லை .

இவை விகுதியுடன் சேர்ந்து வருவியாய் , வருவிப்பாய் , நடப்பியாய் , நடப்பிப்பாய் என வரும் .

இதனை ,

செய்என் வினைவழி ‘ வி‘ ப்‘ பி‘ தனிவரின் செய்விஎன் ஏவல் ; இணையின் ஈர்ஏவல்

என்னும் நூற்பா ( 138 ) விளக்குகிறது .

இவையே அல்லாமல் ஏவல் வினைப் பகுதிகள் பின்வரும் மூன்று முறைகளிலும் பிறவினையாக மாறுகின்றன .

அவை ,

( 1 ) கு , சு , டு , து , பு , று என்ற விகுதிகளைப் பெற்றுப் பிறவினையாக மாற்றம் அடைகின்றன .

( 2 ) சிலபகுதிகளில் இடையில் உள்ள மெல்லின மெய் வல்லின மெய்யாகத் திரிகின்றன .

( 3 ) சில பகுதிகளில் நடுவில் மெய் இரட்டித்துப் , பிறவினையாய் வருகின்றன .

( 1 ) கு , சு , டு , து , பு , று என்ற விகுதிகளைப் பெற்றுப் பிறவினையாதல்

( 1 ) போ + கு - போக்கு - கு விகுதி

( 2 ) பாய் + சு - பாய்ச்சு - சு விகுதி

( 3 ) உருள் + டு - உருட்டு - டு விகுதி

( 4 ) நட + து - நடத்து - து விகுதி

( 5 ) எழு + பு - எழுப்பு - பு விகுதி

( 6 ) துயில் + று - துயிற்று - று விகுதி

( 2 ) மெல்லின மெய்கள் வல்லின மெய்களாதல்

திருந்து - திருத்து - ந் - த் ஆதல்

தோன்று - தோற்று - ன் - ற் ஆதல்

( 3 ) நடுவில் மெய் இரட்டித்தல் .

உருகு - உருக்கு - க் - க்க் - ஆதல்

ஆடு - ஆட்டு - ட் - ட்ட் - ஆதல்

• தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவான வினைப்பகுதிகள்

தன்வினைகளுக்கும் பிறவினைகளுக்கும் பொதுவான வினைப் பகுதிகளும் உள்ளன .

அவை ,

கரை , தேய் , மறை , உடை , அலை , சேர் , மடி என்பன .

கரைந்தான் , தேய்ந்தான் என்று மெல்லின மெய் பெற்றுத் தன்வினையாக வருவன .

இவையே ,

கரைத்தான் , தேய்த்தான் என்று வல்லின மெய் பெற்றுப் பிறவினையாக வருவன .

5.4.8 ஏனைய வினைப் பகுதிகள் பிறவினை ஆதல்

‘ நடவாய் ’ என்னும் ஏவல் வினைமுற்றில் உள்ள ‘ நட ’ முதலான பகுதிகள் ‘ நடப்பியாய் ’ , ‘ நடப்பிப்பியாய் ’ என்று பிற வினையாக வருவதைப் போல , ‘ நடப்பித்தான் ’ , ‘ நடப்பிப்பித்தான் ’ என்ற முறையில் ஏனைய வினைப் பகுதிகளும் பிறவினையாக வரும் .

இதற்கான இலக்கண அமைதியை , ‘ விளம்பிய பகுதி வேறாதலும் விதியே ’ என்னும் நன்னூல் நூற்பா ( 139 ) விளக்கிச் செல்கிறது .

தொகுப்புரை

இந்தப் பாடத்தில் பகாப்பதம் , பகுபதம் ஆகியவற்றின் வகைகள் விளக்கப் பெற்றன .

பகாப்பதம் பெயர் , வினை , இடை , உரி என நான்கு வகைப்படும் என்பது எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டது .

பகுபதம் பெயர்ப்பகுபதம் என்றும் வினைப்பகுபதம் என்றும் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றது .

அடுத்ததாக வரும் வினைப்பகுபதங்களும் வினைமுற்று , வினையாலணையும் பெயர் என்று இருவகையாகப் பிரித்துக் காட்டப்பட்டன .

இவற்றுள் வினைமுற்றுப் பகுபதம் தெரிநிலை என்றும் குறிப்புவினை என்றும் வகைப் படுத்தப்பட்டன .

பெயரெச்சங்களும் , வினையெச்சங்களும் பகுபதங்களாக அமைவதற்கான இலக்கணக் கூறுகள் விளக்கப்பட்டன .

வினையாலணையும் பெயர்ப் பகுபதங்கள் தெரிநிலை என்றும் குறிப்பு என்றும் இருவகைப்படும் என்பது எடுத்துக் காட்டுகளுடன் விளக்கப்பட்டது . அடுத்ததாகப் பகுபதத்தின் உறுப்புகள் ஆறும் விளக்கப்பட்டன .

அவை , ஒருபகுபதத்தில் வந்தமையும் பாங்கும் எடுத்துக் காட்டுகளுடன் காட்டப்பட்டது .

பகுபத உறுப்புகள் ஆறனுள் ‘ பகுதி ’ என்பது குறித்து விரிவாகக் கூறப்பட்டது .

ஒரு பகுபதத்தின் முதலில் நிற்கும் ‘ பகாப்பதமே ’ பகுதி என்பதும் , பெயர்ப்பகுபதத்திலும் வினைப்பகுபதத்திலும் வரும் பகுதிகள் , எவ்வாறு வரும் என்பதும் விளக்கப்பட்டன .

பண்புப் பெயர்ப் பகுபதத்தின் பகுதிகளாக வரும் செம்மை , சிறுமை என்பனவற்றின் தன்மையும் இவை பிற சொற்களோடு புணரும் போது அடையும் மாற்றங்களும் விளக்கிக் கூறப்பட்டன .

தெரிநிலை வினைமுற்றுப் பகுபதத்தின் பகுதிகள் .

இவை ‘ செய் ’ என்னும் ஏவல் பகாப்பதங்களாகவும் அமையும் என்பதும் காட்டப்பட்டது .

நட , வா , மடி , சீ எனவரும் 23 ஏவல்மற்றும் தெரிநிலைப் பகாப்பதங்களின் பட்டியல் எடுத்துக் காட்டப்பட்டது .

இவை பிறவினையாய் வரும் முறைகள் எடுத்துக்காட்டப்பட்டன .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. பகுபத உறுப்புகளுள் ‘ பகுதியின் ’ இலக்கணத்தை வரையறுக்க .

விடை

2. பெயர்ப் பகுபதங்களின் பகுதிகள் எவ்வாறு வரும் ?

விடை

3. வினைப் பகுபதங்களின் பகுதிகள் எவ்வாறு அமையும் ?

விடை

4. பண்புப்பெயர்ப் பகுதிக்கு , நன்னூல் கூறும் சிறப்பு விதி யாது ?

விடை

5. பண்புப்பெயர்ப்பகுதி பிற சொற்களோடு புணரும் போது அடையும் மாற்றங்கள் யாவை ?

விடை

6. வினைப் பகுபதங்களின் பகுதிகளுக்கான சிறப்பு விதி யாது ?

விடை

7. வினைப் பகுபதங்களின் பகுதி பிற சொற்களோடு சேரும்போது அடையும் மாற்றங்களை எழுதுக .

பகாப்பதமும் பகுபதமும் - பகுதி II

பாட முன்னுரை

பதவியல் தொடர்பான முந்தைய பாடத்தில் பகுபதத்தின் இலக்கணத்தை அறிந்து கொண்டோம் .

அதன் உறுப்புகள் பகுதி , விகுதி , இடைநிலை , சாரியை , சந்தி , விகாரம் ஆகிய ஆறு என்பதையும் தெரிந்து கொண்டோம் .

மேலும் சென்ற பாடத்தில் பகுபதத்தின் பகுதி குறித்து விரிவான பல செய்திகளையும் அறிந்தோம் .

இந்தப் பாடத்தில் பகுபத உறுப்புகளில் விகுதி , இடைநிலை ஆகிய இரண்டு குறித்தும் விளக்கமாகக் காண்போம் .

விகுதி - அறிமுகம்

பகுபதத்தில் கடைசியில் நிற்கும் உறுப்பு விகுதி ஆகும் .

இதனை இறுதிநிலை என்றும் கூறுவர் .

இந்த விகுதியைப் பலவாறாகப் பகுத்துக் கூறுகிறது தமிழ் இலக்கணம் .

• விகுதிகளின் எண்ணிக்கை

நன்னூல் ‘ அன் ’ என்று தொடங்கி , ‘ உம் ’ என்று முடியும் 37 விகுதிகளைத் தொகுத்துக் கூறுகின்றது .

அவை ,

அன் , ஆன் , அள் , ஆள் , அர் , ஆர் , ப , மார்

அ , ஆ , கு , டு , து , று , என் , ஏன் , அல் , அன்

அம் , ஆம் , எம் , ஏம் , ஓம்

கும் , டும் , தும் , றும்

ஐ , ஆய் , இ , மின் , இர் , ஈர் , ஈயர் ,

க , ய , உம் - என்பனவாம் .

இந்த விகுதிகளை நன்னூல் நூற்பா ( 140 ) தொகுத்துக் கூறுகிறது .

இவற்றுள் கு , டு , து , று என்னும் நான்கும் தன்மை ஒருமை விகுதிகள் .

இவற்றுக்குள் து , று , டு என்னும் அஃறிணை ஒன்றன்பால் விகுதிகளும் அடங்கியுள்ளன .

ஆகவே விகுதிகளின் மொத்த எண்ணிக்கை 40 ஆகும் .

• விகுதிகளின் வகைகள்

விகுதிகளின் எண்ணிக்கையை 40 என்று நன்னூல் தொகுத்துத் தந்துள்ள போதிலும் அவற்றை முதல்நிலையில் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம் .

( 1 ) வினைமுற்று விகுதிகள்

( 2 ) பெயர் விகுதிகள் 6.1.1 தெரிநிலை வினைமுற்று விகுதிகள்

காலத்தை வெளிப்படையாகக்காட்டும் வினைமுற்றுகள் தெரிநிலை வினை முற்றுகள் என்பதை முன்னரே அறிந்துள்ளீர்கள் .

இவ்வகையில் தெரிநிலை வினைமுற்றுகளுக்கு விகுதியாய் வருபவை தெரிநிலை வினைமுற்று விகுதிகள் ஆகும் .

இத்தெரிநிலை வினைமுற்று விகுதிகள் தன்மை , முன்னிலை , படர்க்கை என்ற மூவிடங்களிலும் வருவன .

I. படர்க்கை வினைமுற்று விகுதிகள் :

( 1 ) நடந்தனன் , நடந்தான் - அன் - ஆன் - ஆண்பால்

( 2 ) நடந்தனள் , நடந்தாள் - அள் , ஆள் - பெண்பால்

( 3 ) நடந்தனர் , நடந்தார் நடப்ப , நடமார் - அர் , ஆர் , - ப , மார் - பலர்பால்

( 4 ) நடந்தன , நடவா - அ , ஆ - பலவின்பால்

( 5 ) குறுந்தாட்டு , நடந்தது , போயிற்று - டு , து , று - ஒன்றன்பால்

( குறுந்தாட்டு = குறுகிய தாள்களை உடையது)

II. தன்மை வினைமுற்று விகுதிகள்

தன்மை வினைகளைச் சுட்டும் வினைமுற்றுகளில் அமையும் விகுதிகளைத் தன்மை வினைமுற்று விகுதிகள் என்கிறோம் .

முதலில் தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகளைக் காண்போம் .

கு , டு , து , று. என்னும் விகுதிகள் :

யான் நடக்கு ( நடப்பேன் ) உண்டு ( உண்டேன் ) நடந்து ( நடந்தேன் ) சேறு ( செல்வேன் )

இவை இன்று வழக்கில் இல்லை .

இவற்றோடு என் , ஏன் , அல் , அன் என்பனவும் தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் ஆகும் .

யான் நடந்தனென் , நடந்தேன் - என் , ஏன்

நடப்பல் , நடப்பன் - அல் , அன்

நடப்பல் என்பது நடப்பேன் என்று பொருள்படும் .

தன்மைப் பன்மை வினை முற்று விகுதிகள் :

அம் , ஆம் , எம் , ஏம் , ஓம் , கும் , டும் , தும் , றும் ஆகியவை தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள் ஆகும்

யாம் நடப்பம் - நடப்பாம் - அம் , ஆம் நடப்பெம் - நடப்பேம் - எம் , ஏம் நடப்போம் , - ஓம்

யாம் நடக்கும் , உண்டும் , நடந்தும் , சேறும் - கும் , டும் , தும் , றும் .

III. முன்னிலை வினைமுற்று விகுதிகள்

முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகள் :

நடந்தனை , நடந்தாய் , நடத்தி - ஐ , ஆய் , இ முன்னிலை ஒருமை விகுதிகள்

( நடத்தி என்பது நடப்பாய் என்று பொருள்படும்)

முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகள் :

நடமின் - மின்

நடந்தனிர் - இர்

நடந்தீர் - ஈர்

முன்னிலைப் பன்மை விகுதிகள்

இவற்றோடு வியங்கோள் வினைமுற்று விகுதிகளையும் ‘ செய்யும் ’ என்னும் வாய்பாட்டு வினைமுற்று விகுதியையும் சேர்த்துக் காண்பது பொருத்தமாகும் .

வியங்கோள் வினைமுற்று விகுதிகள் :

நிலீயர் - ஈயர்

நிற்க - க

வாழிய - ய

செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று விகுதி , ‘ உம் ’ என்பதாம் .

அவன் நடக்கும் - உம்

6.1.2 குறிப்பு வினைமுற்று விகுதிகள்

வினைமுற்று விகுதிகளில் அடுத்ததாக வருபவை குறிப்பு வினைமுற்று விகுதிகள் ஆகும் .

இவை குறிப்பாகக் காலங்காட்டுவன என்பதால் , மேலே கண்ட விகுதிகளுள் , காலம் காட்டும் விகுதிகளைத் தவிர மற்ற விகுதிகளான , அன் , ஆன் , அள் , ஆள் , அர் , ஆர் , அ , டு , து , று , என் , ஏம் , அம் , ஆம் , எம் , ஏம் , ஓம் , ஐ , ஆய் , இ , இர் , ஈர் என்னும் 22 விகுதிகளோடு அந்தக் குறிப்பு வினைமுற்றுகள் வரும் .

இவற்றிற்கான எடுத்துக் காட்டுகளைக் கீழே காண்போம் .

கரியன் , கரியான் கரியள் , கரியாள் கரியர் , கரியார் கரியன கருந்தாட்டு , கரிது , குழையிற்று - அன் , ஆன் - அள் , ஆள் - அர் , ஆர் - அ - டு , து , று படர்க்கை

கரியென் , கரியேன் கரியம் , கரியாம் கரியெம் , கரியேம் கரியோம் - என் , ஏன் - அம் , ஆம் - எம் , ஏம் - ஓம் தன்மை

கரியை , கரியாய் வில்லி கரியிர் , கரியீர் - ஐ , ஆய் - இ - இர் , ஈர் முன்னிலை

இதுவரையில் வினைமுற்று விகுதிகளைக் கண்டோம் .

இனிப் பெயர் விகுதிகளைக் காண்போம் . 6.1.3 எச்சவினை விகுதிகள்

எச்சவினை விகுதிகளையும் இங்குக் காண்போம் .

தெரிநிலைப் பெயரெச்ச விகுதிகள் :

நடந்த , நடக்கின்ற , நடவாத , நடக்கும் - இவற்றுள் அ , உம் விகுதிகள் .

குறிப்புப் பெயரெச்ச விகுதிகள் :

சிறிய - அ

பெரிய - அ

தெரிநிலை வினையெச்ச விகுதிகள் :

தெரிநிலை வினையெச்ச விகுதிகள் பின்வருமாறு .

உ , இ , ய் , பு , ஆ , ஊ , என , ஏ , அ , இன் , ஆல் , கால் , ஏல் , எனின் , ஆயின் , ஏனும் , கு , இய , இயர் , வான் , பான் , பாக்கு , கடை , கண் , வழி , இடத்து , உம் , மல் , மை , மே , து முதலியன .

இவற்றில் மல் , மை , மே , து என்ற நான்கும் எதிர்மறைப் பொருளிலும் வருவன .

இனி இவற்றில் சிலவற்றிற்கு எடுத்துக் காட்டுகளைக் காண்போம் .

நடந்து , சென்று உ

ஓடி , நாடி இ

போய் ய்

உண்ணா ஆ

உண்ண , ஆட அ

உண்டால் , பார்த்தால் ஆல்

உண்ணாமல் , உண்ணாமை மல் , மை

உண்ணாமே , உண்ணாது மே , து

இனி , குறிப்பு வினையெச்ச விகுதிகளைக் காண்போம் .

குறிப்பு வினையெச்ச விகுதிகள் பின்வருமாறு :

அ , றி , து , ஆல் , மல் , கால் , கடை , வழி , இடத்து என்னும் 9 விகுதிகள் .

இவற்றில் சிலவற்றிற்கு எடுத்துக் காட்டுகளைக் காண்போம் .

மெல்ல - அ அன்றி - றி

அல்லது - து அல்லால் - ஆல்

என வருவன .

6.1.4 பெயர் விகுதிகள்

பெயர்ப்பகுபத விகுதிகளையும் நன்னூல் நூற்பா சுட்டிக் காட்டுகின்றது .

அவை ,

அன் , ஆன் , அள் , ஆள் , அர் , ஆர் , மார் , து , அ , இ

என்பவை .

இவற்றிற்கு எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம் .

சிறியன் , சிறியான் - அன் , ஆன்

சிறியள் , வானத்தாள் - அள் , ஆள்

குழையர் , வானத்தார் தேவிமார் - அர் , ஆர் , மார்

சிறியது , சிறியன , பொன்னி - து , அ , இ

இவற்றோடு , மன் , மான் , கள் , வை , தை , கை , பி , முன் , அல் , ன் , ள் , ர் , வ் என்னும் 13 விகுதிகளும் பெயர் விகுதிகளாம் .

வடமான் , கோமான் , கோக்கள் - மன் , மான் , கள்

அவை , இவை - வை .

எந்தை , எங்கை , - தை , கை

எம்பி , எம்முன் , தோன்றல் - பி , முன் , அல்

பிறன் , பிறள் , பிறர் , அவ் - ன் , ள் , ர் , வ்

6.1.5 தொழிற்பெயர் விகுதிகள்

பெயர்ப் பகுபதங்களில் தொழிற்பெயர்களும் அடங்கும் .

எனவே தொழிற்பெயர் விகுதிகளையும் இங்குச் சேர்த்துக் காண்போம் .

தொழிற்பெயர் விகுதிகள் பின்வருமாறு :

தல் , அல் , அம் , ஐ , கை , வை , கு , பு , உ , தி , சி , வி , உள் , காடு , பாடு , அரவு , ஆனை , மை , து , என்னும் 19 விகுதிகள் .

இனி இவற்றில் சிலவற்றிற்கான எடுத்துக் காட்டுகளைக் காண்போம் .

நடத்தல் - தல் ; ஆடல் - அல் ; வாட்டம் - அம் ; கொலை - ஐ ; பார்வை - வை ; போக்கு - கு ; நடப்பு - பு ; நடவாமை - மை . 6.1.6 பண்புப் பெயர் விகுதிகள் :