23

( மேவலது - அடையாதது . )

சான்று :

தாமரை + பூத்தது = தாமரை பூத்தது

பொன் + மலை = பொன் மலை

கதவு + திறந்தது = கதவு திறந்தது

1.6.2 விகாரப் புணர்ச்சி

நிலைமொழி வருமொழியுடன் புணரும்பொழுது , அவ்விரு சொற்களில் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ ஏதேனும் எழுத்து மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும் .

விகாரப் புணர்ச்சியை நன்னூலார் தோன்றல் விகாரம் , திரிதல் விகாரம் , கெடுதல் விகாரம் என மூன்று வகைப்படுத்திக் காட்டுகிறார் .

இம்மூவகை விகாரங்களும் நிலைமொழியாகவும் , வருமொழியாகவும் வரும் சொற்களின் முதல் , இடை , இறுதி ஆகிய மூன்று இடங்களிலும் நிகழும் என்று அவர் கூறுகிறார் .

தோன்றல் , திரிதல் , கெடுதல் விகாரம்

மூன்றும் மொழிமூ இடத்தும் இயலும் - ( நன்னூல் , 154 )

( மொழி = சொல் ; மூ இடத்தும் = சொல்லின் முதல் , இடை , இறுதி ஆகிய மூன்று இடங்களிலும்)

• தோன்றல் விகாரம்

இரு சொற்களுக்கு இடையில் எழுத்தோ , சாரியையோ தோன்றுவது தோன்றல் விகாரம் எனப்படும் .

சான்று :

பூ + கொடி = பூங்கொடி ( ங் என்ற எழுத்துத் தோன்றியது )

யானை + கொம்பு = யானைக் கொம்பு ( க் என்ற எழுத்துத் தோன்றியது )

ஆ + பால் = ஆவின் பால் ( இன் என்ற சாரியை தோன்றியது )

• திரிதல் விகாரம்

இரு சொற்களில் , ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து இன்னோர் எழுத்தாகத் திரிதல் ( மாறுதல் ) திரிதல் விகாரம் எனப்படும் .

சான்று :

பொன் + குடம் = பொற்குடம்

( நிலைமொழி இறுதி ன் என்பது ற் எனத் திரிந்துள்ளது )

முன் + நிலை = முன்னிலை

( வருமொழி முதல் ந் என்பது ன் எனத் திரிந்துள்ளது )

சில நேரங்களில் நிலைமொழியின் இறுதி எழுத்தும் , வருமொழியின் முதல் எழுத்தும் இன்னோர் எழுத்தாகத் திரிதல் உண்டு .

சான்று :

பொன் + தாமரை = பொற்றாமரை

( நிலைமொழி இறுதி ன் என்பதும் , வருமொழி முதல் த் என்பதும் ற் எனத் திரிந்துள்ளன)

• கெடுதல் விகாரம்

இரு சொற்களில் ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து மறைந்து போதல் கெடுதல் விகாரம் எனப்படும் .

( கெடுதல் - மறைதல் )

சான்று :

மரம் + நிழல் = மரநிழல்

( நிலை மொழி இறுதி ம் என்பது கெட்டது)

மேலே கூறப்பட்ட மூன்று விகாரங்களும் நிலைமொழியாகவும் , வருமொழியாகவும் அமையும் இரு சொற்களின் முதல் , இடை , இறுதி ஆகிய மூன்று இடங்களிலும் நிகழும் என நன்னூலார் குறிப்பிட்டுள்ளார் .

சான்று :

ஆறு + பத்து = அறுபது

இதில் நிலைமொழியின் முதலில் உள்ள ஆ என்னும் நெட்டெழுத்து அ என்னும் குற்றெழுத்தாகத் திரிந்தது .

வருமொழியின் இடையில் உள்ள த் என்ற மெய் கெட்டது .

• ஒரே புணர்ச்சியில் பல விகாரங்கள்

இரு சொற்கள் சேர்ந்துவரும் ஒரு புணர்ச்சியில் தோன்றல் , திரிதல் , கெடுதல் என்னும் மூன்றுவகை விகாரங்களில் ஒரே ஒரு விகாரம் மட்டும் அல்லாமல் இரண்டு விகாரமோ , மூன்று விகாரமோ கூட வரப்பெறும் என்கிறார் நன்னூலார்

ஒரு புணர்க்கு இரண்டும் மூன்றும் உறப்பெறுமே - ( நன்னூல் , 157 )

( புணர் = புணர்ச்சி )

சான்று :

1. யானை + கொம்பு = யானைக் கொம்பு

இதில் தோன்றல் விகாரம் மட்டும் வந்தது .

2. மரம் + பெட்டி = மரப்பெட்டி

இதில் நிலைமொழியின் இறுதியில் உள்ள மகரமெய் கெட்டு , அங்கே வருமொழியின் முதலில் உள்ள எழுத்துக்கு ஏற்ப , பகர மெய் தோன்றியதால் கெடுதல் , தோன்றல் என்னும் இரு விகாரங்கள் வந்தன . 3. பனை + காய் = பனங்காய்

இதில் நிலைமொழியாக வந்துள்ள பனை என்பதன் இறுதியில் உள்ள ஐகாரம் கெட்டு ( கெடுதல் விகாரம் ) , இடையில் அம் என்ற சாரியை தோன்றி ( தோன்றல் விகாரம் ) , அம் என்ற சாரியையில் உள்ள மகரமெய் ஙகர மெய்யாகத் திரிந்ததால் .

( திரிதல் விகாரம் ) மூன்று விகாரங்களும் வந்தன .

பனை + காய்

பன் + காய் ( ஐ - கெடுதல் )

பன் + அம் + காய் ( அம் - தோன்றல் )

பன் + அங் + காய் ( ம் ங் எனத் திரிதல் )

= பனங்காய்

• புணர்ச்சியால் ஓசை இனிமையும் , பொருள் தெளிவும்

இரு சொற்கள் புணர்ச்சியில் சேரும்பொழுது சில இடங்களில் இயல்பாக வருகின்றன என்பதையும் , சில இடங்களில் தோன்றல் , திரிதல் , கெடுதல் என்னும் விகாரங்களுள் ஒன்றையோ பலவற்றையோ பெற்று வருகின்றன என்பதையும் மேலே பார்த்தோம் .

இவை எல்லாம் அச்சொற்களைச் சேர்த்துப் பேசுபவர்க்கு எளிதில் உச்சரித்துக் கூறும் ஓசை இனிமையையும் , அவற்றைக் கேட்பவர்க்குச் செவி மடுத்துக் கேட்கும் ஓசை இனிமையையும் தருகின்றன .

மேலும் சில இடங்களில் பொருள் தெளிவையும் தருகின்றன .

இயல்பு புணர்ச்சிக்கும் , விகாரப் புணர்ச்சிக்கும் மேலே காட்டிய சான்றுகளை நோக்கினால் , அவற்றை வாய்விட்டுச் சொல்லிப் பார்த்தால் இவ்வுண்மை நன்கு தெரியவரும் .

பூ + கொடி என்பதை இயல்பாக , பூகொடி என்று சேர்த்தும் , இடையில் ங் என்ற மெய் எழுத்துத் தோன்ற , பூங்கொடி என்று சேர்த்தும் சொல்லிப் பாருங்கள் .

பின்னதிலேயே ஓசை இனிமை உள்ளதை உணரலாம் .

மேலும் பூ என்பதோடு கா , சோலை , தடம் , பொழில் முதலிய சொற்கள் சேர்ந்து வந்து பூங்கா , பூஞ்சோலை , பூந்தடம் , பூம்பொழில் என்று ஓசை இனிமையுடன் அமைவதையும் காணலாம் .

மரம் + பெட்டி என்பதை இயல்பாக , மரம்பெட்டி என்று கூறினால் ஒரு பொருள்படும் .

அதையே மரப்பெட்டி என்று விகாரப்படுத்திக் கூறினால் வேறொரு பொருள்படும் .

மரத்தால் ஆகிய பெட்டி வாங்கி வந்த ஒருவர் மற்றொருவரிடம் ,

நான் மரம்பெட்டி வாங்கி வந்தேன்

என்று இயல்பாகக் கூறினால் , கேட்பவர்க்கு நான் மரமும் பெட்டியும் வாங்கி வந்தேன் என்றல்லவா பொருள்பட்டுவிடும் ?

நான் மரப்பெட்டி வாங்கி வந்தேன்

என்று விகாரப்படுத்திக் கூறும் போதுதான் , நான் மரத்தால் ஆகிய பெட்டி வாங்கி வந்தேன் என்று கேட்பவர்க்குப் பொருள் தெளிவுபடும் .

மேலும் மரப்பெட்டி என்று சொல்லும்போதே ஓசை இனிமையும் தோன்றுகிறது .

எனவே ஓசை இனிமைக்கும் , பொருள் தெளிவுக்கும் காரணம் புணர்ச்சியே என்பதை நன்கு விளங்கிக் கொள்ளலாம் .

செய்யுள் விகாரங்கள்

தோன்றல் , திரிதல் , கெடுதல் என்னும் மூவகை விகாரங்களும் செய்யுள் வழக்கிலும் , உலக வழக்கிலும் ( பேச்சு வழக்கிலும் ) ஒருங்கே வரும் .

இவை அல்லாமல் செய்யுளில் மட்டுமே வரும் விகாரங்களைப் பற்றியும் நன்னூலார் குறிப்பிடுகிறார் .

அவற்றைப் பற்றி இனிக் காண்போம் .

செய்யுளில் அசை , சீர் , தளை , அடி , தொடை முதலியவற்றின் இலக்கணம் நோக்கிச் சில இடங்களில் சொற்கள் விகாரப்படுவது உண்டு .

இவ்விகாரங்கள் செய்யுள் இலக்கணத்தை நிறைவு செய்தற்பொருட்டு வருவதால் செய்யுள் விகாரங்கள் எனப்பட்டன .

செய்யுள் விகாரங்கள் மொத்தம் ஒன்பது வகைப்படும் .

அவை வலித்தல் விகாரம் , மெலித்தல் விகாரம் , நீட்டல் விகாரம் , குறுக்கல் விகாரம் , விரித்தல் விகாரம் , தொகுத்தல் விகாரம் , முதற்குறை , இடைக்குறை , கடைக்குறை என்பனவாம் .

வலித்தல் , மெலித்தல் , நீட்டல் , குறுக்கல் ,

விரித்தல் , தொகுத்தல் வரும்செய்யுள் வேண்டுழி ( நன்னூல் , 155 )

ஒருமொழி மூவழிக் குறைதலும் அனைத்தே ( நன்னூல் , 156 )

( மூவழி = சொல்லின் முதல் , இடை , கடை என்ற மூன்று இடத்திலும் )

• வலித்தல் விகாரம்

மெல்லின எழுத்தை வல்லின எழுத்து ஆக்குதல் .

சான்று :

சிலப்பதிகாரம்

இதில் சிலம்பு என்பதில் உள்ள ம் என்ற மெல்லின எழுத்து ப் என்ற வல்லின எழுத்தாகியது .

• மெலித்தல் விகாரம்

வல்லின எழுத்தை மெல்லின எழுத்து ஆக்குதல் .

சான்று :

தண்டையின் இனக்கிளி கடிவோள்

( தினைப்புனத்தைக் காவல் காக்கும் தலைவி , தினைக்கதிர்களை உண்ணவரும் கிளிகளை , தென்னை , பனை ஆகியவற்றின் மட்டையை மூன்று அல்லது நான்காகப் பிளந்து செய்த தட்டை என்ற கருவியை அடித்து ஒலி எழுப்பி விரட்டுவாள்)

இதில் தட்டை என்பது தண்டை என்றாகியது .

ட் என்ற வல்லின எழுத்து ண் என்ற மெல்லின எழுத்தாகியது .

• நீட்டல் விகாரம் குற்றெழுத்தை நெட்டெழுத்து ஆக்குதல் .

சான்று :

ஈசன் எந்தை இணையடி நீழலே

இதில் நிழல் என வரவேண்டியது , நீழல் என்று நீண்டது .

• குறுக்கல் விகாரம்

நெட்டெழுத்தைக் குற்றெழுத்து ஆக்குதல் .

சான்று :

..............................................................................யானை

எருத்தத்து இருந்த இலங்கிலைவேல் தென்னன்

திருத்தார் நன்றென்றேன் தியேன்

( யானையின் பிடரியில் வீற்றிருந்த ஒளி வீசும் வேலை ஏந்திய பாண்டியன் மார்பில் கிடந்த அழகிய மாலை நன்று என்று சொன்னேன் தீயவளாகிய நான் - இது தலைவி தன் தோழியரிடம் கூறியது . )

இதில் தீயேன் என வரவேண்டியது தியேன் என்று குறுகியது .

• விரித்தல் விகாரம்

ஒரு சொல்லில் இல்லாத எழுத்தை வருவித்தல் .

சான்று :

சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே

( வெதிரின் = மூங்கிலின் )

இதில் விளையுமே என்று வரவேண்டிய இடத்தில் , விளையும்மே என்று மகரமெய் வந்துள்ளது .

• தொகுத்தல் விகாரம்

ஒரு சொல்லில் உள்ள எழுத்தை நீக்குதல் .

சான்று :

சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே

சிறிய + இலை என்பதில் .

இடையில் உள்ள அகர உயிரை ( சிறி + ( ய் ) + இலை - ய் என்பது உடம்படுமெய் ) நீக்கியிருப்பதால் தொகுத்தல் விகாரம் .

• முதற் குறை

ஒரு சொல்லில் முதல் எழுத்துக் குறைந்து வருவது .

சான்று :

மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி

( தாமரை இதழைப் போன்ற அழகிய சிவந்த சிறிய பாதங்கள் )

இதில் தாமரை என்ற சொல்லில் முதல் எழுத்துக் குறைந்து வந்துள்ளதால் முதற்குறை .

• இடைக்குறை

ஒரு சொல்லில் இடையில் உள்ள எழுத்துக் குறைந்து வருவது .

சான்று :

வேதின வெரிநின் ஓதி முதுபோத்து

( வேதினம் = கருக்கரிவாள் ; கருக்கரிவாளைப் போன்ற முதுகினைப் பெற்ற ஓந்தி ; வெரிந் = முதுகு முதுபோத்து = முதிய ஆண்)

இதில் ஓந்தி ( ஓணான் ) என்ற சொல்லின் இடையில் உள்ள நகர மெய் குறைந்து வந்துள்ளதால் இடைக்குறை .

• கடைக்குறை

ஒரு சொல்லில் இறுதி எழுத்துக் குறைந்து வருவது .

சான்று :

நீல் உண் துகிலிகை கடுப்ப

( நீலம் உண்ட வெண்மையான ஆடையைப் போன்று )

இதில் நீலம் என்ற சொல்லின் இறுதியில் உள்ள அகர உயிரும் , மகர மெய்யும் குறைந்து வந்துள்ளதால் கடைக்குறை .

தொகுப்புரை

இரண்டு சொற்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து வருவது புணர்ச்சி எனப்படும் .

இது சந்தி என்ற வடசொல்லாலும் குறிப்பிடப்படும் .

இரண்டு சொற்களில் முதல் சொல் நிலைமொழி என்றும் , இரண்டாம் சொல் வருமொழி என்றும் கூறப்படும் .

தொல்காப்பியரும் நன்னூலாரும் எழுத்ததிகாரத்தில் புணர்ச்சிக்கு முக்கிய இடம் தந்துள்ளனர் .

நிலைமொழியின் ஈற்றிலும் , வருமொழியின் முதலிலும் வரும் எழுத்துகளை அடிப்படையாக வைத்துப் புணர்ச்சியை நன்னூலார் உயிர் ஈற்றின் முன் உயிர்வரல் , உயிர் ஈற்றின் முன் மெய்வரல் , மெய் ஈற்றின் முன் உயிர்வரல் , மெய் ஈற்றின் முன் மெய்வரல் என நால்வகையாகப் பிரித்து விளக்குகிறார் .

இருசொற்கள் சேர்ந்து வரும்போது அவை எவ்வகைப் பொருளில் பொருந்துகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு புணர்ச்சியை வேற்றுமைப் புணர்ச்சி , அல்வழிப் புணர்ச்சி என்று இருவகையாகப் பிரித்து விளக்குகிறார் நன்னூலார் .

இரு சொற்கள் சேர்ந்து வரும்போது அச்சொற்களில் நிகழும் எழுத்து மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு நன்னூலார் புணர்ச்சியை இயல்பு புணர்ச்சி , விகாரப் புணர்ச்சி என இருவகையாகப் பிரித்து விளக்குகிறார் . இயல்பு புணர்ச்சியை ஒன்றாகவும் , விகாரப் புணர்ச்சியைத் தோன்றல் விகாரம் , திரிதல் விகாரம் , கெடுதல் விகாரம் என மூன்றாகவும் பகுத்து அவர் விளக்குகிறார் .

புணர்ச்சியில் சொற்கள் சேர்ந்து இயல்பாக வருவதும் , தோன்றல் , திரிதல் , கெடுதல் என்னும் விகாரங்கள் பெற்று வருவதும் பேசுவோர்க்கும் , கேட்போர்க்கும் ஓசை இனிமையையும் , பொருள் தெளிவையும் தருகின்றன .

இவற்றையெல்லாம் இந்தப் பாடத்தின் வாயிலாக நன்கு அறிந்துகொண்டோம் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும் ?

அவை யாவை ?

விடை

2. பூ + கொடி - புணர்ச்சியில் எவ்வாறு சேர்ந்து வரும் ?

விடை

3. மர நிழல் - பிரித்துக் காட்டுக .

விடை

4. பனை + காய் - புணர்ச்சியில் எவ்வாறு சேர்ந்து வரும் ?

விடை

5. பொற்றாமரை - பிரித்துக் காட்டுக .

விடை

6. ஒரே புணர்ச்சியில் இரண்டு விகாரங்கள் வருவதற்கு ஒரு சான்று தருக .

விடை

7. ஒரே புணர்ச்சியில் மூன்று விகாரங்கள் வருமா ?

விடை

8. செய்யுள் விகாரங்கள் எத்தனை ?

விடை

9. செய்யுள் விகாரங்கள் உலக வழக்கில் வருமா ?

விடை

10. சிலப்பதிகாரம் - இதில் அமைந்துள்ள செய்யுள் விகாரம் யாது ?

பொதுப்புணர்ச்சி

பாட முன்னுரை

நிலை மொழியின் ஈற்று எழுத்தும் , வருமொழியின் முதல் எழுத்தும் ஒன்றோடு ஒன்று பொருந்தி நிற்பதே புணர்ச்சி எனப்படும் என்பதைச் சென்ற பாடத்தில் பார்த்தோம் .

நிலைமொழி ஈற்று எழுத்தும் , வருமொழி முதல் எழுத்தும் ஒற்றோடொன்று புணர்வதை அடிப்படையாக வைத்தே நன்னூலார் பலவகையான புணர்ச்சி விதிகளை உயிர் ஈற்றுப் புணரியலிலும் , மெய் ஈற்றுப் புணரியலிலும் கூறுகிறார் .

எனவே மொழிக்கு ( சொல்லுக்கு ) இறுதியில் எந்த எந்த எழுத்துகள் வரும் , மொழிக்கு முதலில் எந்த எந்த எழுத்துகள் வரும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வது இங்கே மிகவும் இன்றியமையாதது ஆகும் .

இது பற்றி மொழியின் அமைப்பு என்ற பகுதியில் ஏற்கெனவே படித்துள்ளோம் .

இருந்தாலும் , அதனை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வதற்காக , அது பற்றிய நன்னூலார் கருத்துகள் இப்பாடத்தில் சுருக்கமாகக் கூறப்படுகின்றன .

நிலைமொழியின் இறுதியில் வரும் உயிர் எழுத்துகள் மற்றும் குற்றியலுகரத்தை வைத்து உயிர் ஈற்றுப் புணரியலையும் , நிலை மொழியின் இறுதியில் வரும் மெய் எழுத்துகளை வைத்து மெய் ஈற்றுப் புணரியலையும் நன்னூலார் அமைத்துள்ளார் .

உயிர் ஈறுகளையும் , மெய் ஈறுகளையும் , குற்றியலுகர ஈற்றையும் கொண்ட நிலைமொழிகள் வல்லினம் , மெல்லினம் , இடையினம் என்ற மெய்களை முதலாகக் கொண்ட சில வருமொழிச் சொற்களோடு பொருந்தி வருவது பற்றிய பொதுவான புணர்ச்சி விதிகளை நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலில் நான்கு நூற்பாக்களில் ( நன்னூல் , 158-161 ) கூறுகிறார் .

அவற்றைப் பற்றி இப்பாடத்தில் விரிவாகக் காண்போம் .

மொழி இறுதி , முதல் எழுத்துகள்

புணர்ச்சியில் வரும் இரண்டு சொற்களில் , முதலாவது சொல்லாகிய நிலைமொழியின் ஈற்றில் உயிர் அல்லது மெய் எழுத்து இருக்கும் .

இரண்டாவது சொல்லாகிய வருமொழியின் முதலிலும் உயிர் அல்லது மெய் எழுத்து இருக்கும் .

எனவே நிலைமொழியின் இறுதியிலும் , வருமொழியின் முதலிலும் வரும் எழுத்துகளைப் பற்றித் தெரிந்து கொள்வது இன்றியமையாதது .

இதுபற்றி நன்னூலார் எழுத்ததிகாரத்தில் முதற்கண் அமைந்த எழுத்தியலில் கூறியுள்ளார் .

அதனை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி மீண்டும் இங்கே கூறப்படுகிறது .

2.1.1 மொழி இறுதி எழுத்துகள்

உயிர்கள் பன்னிரண்டும் , மெய்களில் ‘ ஞ , ண , ந , ம , ன , ய , ர , ல , வ , ழ , ள ’ என்னும் பதினொன்றும் , குற்றியலுகரம் ஒன்றும் ஆக மொத்தம் இருபத்து நான்கு எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும் என்கிறார் நன்னூலார் .

ஆவி , ஞணநமன யரல வழள மெய் ,

சாயும் உகரம் நால்ஆறும் ஈறே ( நன்னூல் , 107 )

( ஆவி = உயிர் ; சாயும் உகரம் = குற்றியலுகரம் ; நால்ஆறு = இருபத்து நான்கு)

உயிர் எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும்போது பெரும்பாலும் மெய்யோடு சேர்ந்தே வரும் .

அஃதாவது உயிர்மெய்யாகவே வரும் .

சான்று :

பல ( ல் + அ = ல )

அணி ( ண் + இ = ணி ) எகரம் மட்டும் மெய்யோடு சேர்ந்து ஈறாகாது .