25

இவை எழுவாய்த் தொடர் .

நம்பி + பெருமை = நம்பி பெருமை - வேற்றுமை

நங்கை + புகழ் = நங்கை புகழ்

அவர் + கதை = அவர் கதை

இவை ஆறாம் வேற்றுமைத் தொகை .

மேலே காட்டிய சான்றுகளில் நிலைமொழியாக உள்ள பொதுப்பெயர் , உயர்திணைப் பெயர் ஆகியவற்றின் இறுதியில் வல்லினம் அல்வழியிலும் வேற்றுமையிலும் மிகாமல் இயல்பாதலைக் காணலாம் .

3. உயிர் ஈற்றையும் , மெய் ஈற்றையும் கொண்ட உயர்திணைப் பெயர்களுள் சில பெயர்கள் உயிர் , வல்லினம் , மெல்லினம் , இடையினம் என்ற நாற்கணத்தோடு புணரும்போது , நிலைமொழி வருமொழிகள் தோன்றல் , திரிதல் , கெடுதல் என்னும் விகாரங்களை அடையும் .

சான்று :

கபிலன் + பரணன் = கபிலபரணர் - அல்வழி

வடுகன் + நாதன் = வடுகநாதன்

அரசன் + வள்ளல் = அரசவள்ளல்

விராடன் + அரசன் = விராடவரசன்

( கபிலபரணர் - கபிலரும் பரணரும் , உம்மைத் தொகை ; வடுகநாதன் - வடுகன் ஆகிய நாதன் ; அரச வள்ளல் - அரசனாகிய வள்ளல் ; விராட அரசன் - விராடன் ஆகிய அரசன் .

இவை இருபெயரொட்டுப் பண்புத் தொகை )

சமணர் + பள்ளி = சமணப் பள்ளி - வேற்றுமை

பாண்டியன் + நாடு = பாண்டிய நாடு

குமரன் + கோட்டம் = குமரக் கோட்டம்

மக்கள் + பண்பு = மக்கட் பண்பு

( சமணப் பள்ளி - சமணரது பள்ளி ; பாண்டிய நாடு - பாண்டியனது நாடு ; குமரக் கோட்டம் - குமரனது கோட்டம் ; மக்கட் பண்பு - மக்களது பண்பு .

இவை ஆறாம் வேற்றுமைத் தொகை. ) [ கோட்டம் - கோயில் ]

இங்கே அல்வழிக்கும் , வேற்றுமைக்கும் காட்டிய சான்றுகளில் நிலைமொழியிலும் , வருமொழியிலும் வரும் உயர்திணைப்பெயர்கள் தம்முள் புணரும்போது தோன்றல் , திரிதல் , கெடுதல் என்னும் விகாரங்கள் அடைந்துள்ளதைக் கண்டு அறிந்து கொள்ளலாம் .

மேலே கூறிய மூன்று விதிகளையும் பின்வரும் நூற்பாவில் நன்னூலார் குறிப்பிடுகிறார் .

பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்கள் ஈற்றுமெய்

வலிவரின் இயல்பாம் ; ஆவி யரமுன்

வன்மை மிகா ; சில விகாரமாம் உயர்திணை - ( நன்னூல் , 159 )

வினாப்பெயர் , விளிப்பெயர் முன் வல்லினம்

சொல்லின் ஈற்றில் வருகின்ற ஆ , ஏ , ஓ என்னும் மூன்று வினா எழுத்துகளுக்கு முன்னும் , யா என்னும் வினாப்பெயருக்கு முன்னும் , விளிவேற்றுமை ஏற்ற பெயர்களுக்கு முன்னும் வரும் வல்லினம் இயல்பாகும் .

ஈற்றுயா வினா விளிப்பெயர் முன் வலி இயல்பே - ( நன்னூல் , 160 )

சான்று :

அவனா + தந்தான் = அவனா தந்தான் ?

அவனே + தந்தான் = அவனே தந்தான் ?

அவனோ + தந்தான் = அவனோ தந்தான் ?

யா + தந்தான் = யா தந்தான் ?

( எது தந்தான் ? )

தம்பீ + தா = தம்பீ தா

தோழீ + தா = தோழீ தா

முன்னிலை வினை , ஏவல் வினை முன் வல்லினம்

உயிர் எழுத்துகளையும் ய , ர , ழ என்னும் மூன்று மெய் எழுத்துகளையும் இறுதியாகக் கொண்ட முன்னிலை வினைமுற்று , ஏவல் வினைமுற்று ஆகியவற்றின் முன்னர் வரும் க , ச , த , ப என்னும் வல்லின மெய் எழுத்துகள் இயல்பாயும் , விகற்பமாயும் வரும் .

ஆவி யரழ இறுதி முன்னிலை வினை ,

ஏவல் முன் வல்லினம் இயல்பொடு விகற்பே ( நன்னூல் , 161 )

விகற்பமாய் வருதலாவது , ஒரே புணர்ச்சியில் வல்லினம் இயல்பாகவும் , மிக்கும் வருதலாகும் .

சான்றாக , கீழ் + குலம் என்பது கீழ்குலம் என இயல்பாகவும் , கீழ்க்குலம் என வருமொழி முதல் எழுத்துக்கு ஏற்ற வல்லினம் மிக்கும் வருவதைச் சொல்லலாம் .

இதனை ,

கீழின்முன் வன்மை விகற்பமும் ஆகும் .

( நன்னூல் , 226 )

என்ற நூற்பாவால் அறியலாம் .

சான்று :

முன்னிலை வினைமுற்று

உண்டனை + கொற்றா = உண்டனை கொற்றா உண்டாய் + சாத்தா = உண்டாய் சாத்தா

உண்பாய் + தம்பி = உண்பாய் தம்பி

உண்டனீர் + புலவரே = உண்டனீர் புலவரே

ஏவல் வினைமுற்று

வா + கொற்றா = வா கொற்றா

பாய் + சாத்தா = பாய் சாத்தா

சேர் + தேவா = சேர் தேவா

வாழ் + புலவா = வாழ் புலவா

இங்கே காட்டிய சான்றுகளில் உயிர் எழுத்துகளையும் , ய , ர , ழ என்னும் மெய் எழுத்துகளையும் இறுதியாகக் கொண்ட முன்னிலை வினைமுற்று , ஏவல்வினை முற்றுகளின் முன் வந்த க , ச , த , ப என்னும் வல்லின மெய் எழுத்துகள் மிகாது இயல்பாய் வந்தன .

நட + கொற்றா = நட கொற்றா , நடக்கொற்றா

எய் + கொற்றா = எய் கொற்றா , எய்க் கொற்றா

இங்கே காட்டிய சான்றுகளில் முன்னிலை வினைமுற்றின் முன்வரும் வல்லினம் இயல்பாகவும் , மிக்கும் வந்தது .

தொகுப்புரை

மொழி இறுதியில் பன்னிரண்டு உயிர்களும் , ஞ , ண , ந , ம , ன , ய , ர , ல , வ , ழ , ள என்னும் பதினொரு மெய்களும் , குற்றியலுகரம் ஒன்றும் ஆக 24 எழுத்துகள் வரும் .

மொழிமுதலில் பன்னிரண்டு உயிர்களும் , க , ச , த , ந , ப , ம , வ , ய , ஞ , ங என்னும் பத்தும் மெய்களும் வரும் .

இவ்வெழுத்துகளே புணர்ச்சிக்கு அடிப்படை .

இருபத்து நான்கு எழுத்துகளை இறுதியாகக் கொண்ட எல்லாவகைச் சொற்களுக்கும் முன்வரும் ஞ , ந , ம , வ , ய என்னும் மெல்லின , இடையின மெய்கள் இயல்பாக வரும் .

தனிக்குறிலை அடுத்து வரும் யகரமெய் , தனி ஐகாரம் , நொ , து என்பனவற்றிற்கு முன் வரும் ஞ , ந , ம என்னும் மெல்லின மெய்கள் மிக்கு வரும் .

நகரமெய் ‘ ண , ள ’ என்னும் மெய்களுக்கு முன் வரும்போது ணகரமாகவும் , ‘ ன , ல ’ என்னும் மெய்களுக்கு முன் வரும்போது னகரமாகவும் திரியும் .

பொதுப்பெயர் , உயர்திணைப் பெயர்களின் ஈற்று மெய்கள் , வருமொழி முதலில் வல்லினம் வந்தால் இயல்பாகும் .

பொதுப்பெயர் , உயர்திணைப் பெயர்களுக்கு முன்வரும் வல்லினம் இயல்பாகும் .

சில உயர்திணைப் பெயர்கள் நாற்கணத்தோடு புணரும்போது தோன்றல் , திரிதல் , கெடுதல் என்னும் விகாரங்களை அடையும் .

வினாப்பெயர் , விளிப்பெயர்களுக்கு முன் வரும் வல்லினம் இயல்பாகும் .

உயிர்களையும் , ய , ர , ழ என்னும் மெய்களையும் இறுதியாகக் கொண்ட முன்னிலை வினை , ஏவல்வினைகளுக்கு முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் .

ஏவல் வினையின் முன் வரும் வல்லினம் சில இடங்களில் இயல்பாக வருதலோடு , மிக்கும் வரும் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. பொதுப்பெயர் என்றால் என்ன ?

சான்று தருக .

விடை

2. நாற்கணம் யாவை ?

விடை

3. கபிலன் + பரணன் - இது புணர்ச்சியில் எவ்வாறு வரும் ?

விடை

4. மக்கட் பண்பு - பிரித்துக்காட்டுக .

விடை

5. சொல்லின் ஈற்றிலே வரும் மூன்று வினா எழுத்துகள் யாவை ?

விடை

6. வினாப் பெயர் யாது ?

உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி

பாட முன்னுரை

நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலின் தொடக்கத்தில் புணர்ச்சி என்றால் என்ன என்பது பற்றியும் , புணர்ச்சியின் பாகுபாடு பற்றியும் , பொதுப்புணர்ச்சி பற்றியும் கூறியனவற்றைக் கடந்த இரு பாடங்களில் பார்த்தோம் .

அவற்றைத் தொடர்ந்து அவர் உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி பற்றி விரிவாகக் கூறுகிறார் .

உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி என்றால் என்ன ?

நிலைமொழியின் இறுதியில் வரும் உயிர் ஈறு , மெய் ஈறு , குற்றியலுகர ஈறு என்னும் இருபத்து நான்கு ஈறுகளுக்கும் பொதுவாகக் கூறப்படும் புணர்ச்சி பொதுப்புணர்ச்சி என்று கூறப்பட்டதைக் கடந்த பாடத்தில் பார்த்தோம் .

அதேபோல் நிலைமொழியின் இறுதியில் வரும் உயிர் ஈறுகள் எல்லாவற்றிற்கும் , குற்றியலுகர ஈற்றிற்கும் சிறப்பாகக் கூறப்படும் புணர்ச்சி உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி எனப்படும் .

நன்னூலார் உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி பற்றி ஐந்து நூற்பாக்களில் ( நன்னூல் , 162-166 ) விளக்கிக் கூறுகிறார் .

அவற்றைத் தக்க சான்றுகளுடன் காண்போம் .

உயிர் முன் உயிர் புணர்தல்

நிலைமொழியின் ஈற்றில் ஓர் உயிர் எழுத்து நின்று , வருமொழியின் முதலிலும் ஓர் உயிர் எழுத்து வந்தால் , அவ்விரண்டு உயிர் எழுத்துகளும் புணரும் புணர்ச்சி உயிர்முன் உயிர் புணர்தல் எனப்படும் .

நிலைமொழியின் ஈற்றிலும் , வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்துகள் வருமானால் , அவ்விரண்டு உயிர்களையும் அடுத்தடுத்து ஒலிக்கும்போது , இரண்டுக்கும் இடையே விட்டிசை தோன்றும் . ஓர் எழுத்தை ஒலித்து , சற்று இடைவெளி விட்டு , பின்பு அதற்கு அடுத்த எழுத்தை ஒலிப்பது விட்டிசை எனப்படும் .

விட்டு இசைப்பது விட்டிசை .

இரண்டு உயிர்களுக்கு இடையே தோன்றும் விட்டிசை , ஒலிக்கும் முயற்சியை அரிதாக்குகிறது .

சான்று :

மணி + அரசன் ( இ முன் அ )

வர + இல்லை ( அ முன் இ )

இச்சான்றுகளை அப்படியே உள்ளபடி வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள் .

நிலைமொழி ஈற்று உயிர்க்கும் , வருமொழி முதல் உயிர்க்கும் இடையே விட்டிசை தோன்றுவதைக் காணலாம் .

இதற்குக் காரணம் மணி + அரசன் என்பதில் , இ , அ என்னும் இரண்டு உயிர்களும் வர + இல்லை என்பதில் , அ , இ என்னும் இரண்டு உயிர்களும் உடம்படாமல் ( உடன்படாமல் ) அல்லது ஒன்றுபடாமல் இருப்பதே ஆகும் .

இத்தகைய சூழலில் உடம்படாத அவ்விரண்டு உயிர்களை உடம்படுத்துவதற்காக , அவ்வுயிர்களுக்கு இடையே ய் , வ் என்னும் மெய்களுள் ஏதேனும் ஒன்று வரும் .

சான்று :

மணி + அரசன் > மணி + ய் + அரசன் = மணியரசன்

வர + இல்லை > வர + வ் + இல்லை = வரவில்லை

இச்சான்றுகளில் உள்ள மணியரசன் , வரவில்லை என்பனவற்றை அப்படியே உள்ளபடி சொல்லிப் பாருங்கள் .

ஒலிக்கும் முயற்சியில் எளிமை இருப்பதை உணர்வீர்கள் .

உடம்படாத இரண்டு உயிர்களை உடம்படுத்துவதற்காக வருகின்ற மெய்கள் ஆதலால் , நம் தமிழ் இலக்கண நூலார் , ய் , வ் என்னும் மெய்களை உடம்படுமெய் என்று வழங்கினர் .

மொழியியலார் இவ்விரண்டு மெய்களை அரை உயிர்கள் ( Semi Vowels ) என்று குறிப்பிடுவர் .

இவை முறையே இகர உயிரையும் , உகர உயிரையும் ஒத்த ஒலியை உடையதால் இவ்வாறு கூறினர் .

உயிர்முன் உயிர்வந்து புணரும் புணர்ச்சியில் உடம்படுமெய் வருவது பற்றி நன்னூலார் மூன்று விதிகளைக் குறிப்பிடுகிறார் .

அவை பின்வருமாறு :

1. நிலைமொழியின் ஈற்றில் இ , ஈ , ஐ - என்னும் மூன்று உயிர் எழுத்துகளில் ஏதேனும் ஒன்று நின்று , வருமொழியின் முதலில் ஏதேனும் ஓர் உயிர் எழுத்து வந்தால் , அவ்விரண்டு உயிர் எழுத்துகளுக்கு இடையே யகர மெய்யானது உடம்படுமெய்யாக வரும் .

சான்று :

மணி + அடித்தான் > மணி + ய் + அடித்தான் = மணியடித்தான்

தீ + அணைத்தான் > தீ + ய் + அணைத்தான் = தீயணைத்தான்

வாழை + இலை > வாழை + ய் + இலை = வாழையிலை

2. நிலைமொழியின் ஈற்றில் இ , ஈ , ஐ - என்னும் மூன்று உயிர் எழுத்துகளைத் தவிர , மற்ற உயிர் எழுத்துகளில் ஏதேனும் ஒன்று நின்று , வருமொழியின் முதலில் ஏதேனும் ஓர் உயிர் எழுத்து வந்தால் , அவற்றிற்கு இடையே வகர மெய்யானது உடம்படுமெய்யாக வரும் .

சான்று :

பல + இடங்கள் > பல + வ் + இடங்கள் = பலவிடங்கள்

நிலா + ஒளி > நிலா + வ் + ஒளி = நிலாவொளி

திரு + அருள் > திரு + வ் + அருள் = திருவருள்

பூ + அழகி > பூ + வ் + அழகி = பூவழகி

3 நிலைமொழியின் ஈற்றில் ஏ என்னும் உயிர் எழுத்து நின்று , வருமொழியின் முதலில் ஏதேனும் ஓர் உயிர் எழுத்து வந்தால் , அவற்றிற்கு இடையே யகரம் , வகரம் ஆகிய இரண்டும் உடம்படுமெய்களாக வரும் .

சான்று :

சே + அடி > சே + ய் + அடி = சேயடி

சே + அடி > சே + வ் + அடி = சேவடி

( சே - செம்மை )

மேலே கூறப்பட்ட புணர்ச்சி விதிகளை நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலில் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார் .

இஈ ஐவழி யவ்வும் , ஏனை

உயிர்வழி வவ்வும் , ஏமுன் இவ் விருமையும் ,

உயிர்வரின் உடம்படு மெய் என்று ஆகும் .

( நன்னூல் , 162 )

( யவ்வும் - யகர மெய்யும் ; வவ்வும் - வகர மெய்யும் ; இவ்விருமையும் - இந்த யகரமெய் , வகரமெய் ஆகிய இரண்டும் . )

எகரவினா , முச்சுட்டின் முன்னர் நாற்கணமும் புணர்தல்

எ என்னும் எழுத்து வினாப் பொருளைத் தருவதால் வினா எழுத்து எனப்படும் .

அ , இ , உ என்னும் மூன்று எழுத்துகளும் சுட்டுப் பொருளைத் தருவதால் சுட்டு எழுத்துகள் எனப்படும் .

அ என்பது சேய்மைச் சுட்டு ; இ என்பது அண்மைச்சுட்டு ; உ என்பது இடைநிலைச் சுட்டு ; இடைநிலைச் சுட்டாகிய உ என்பது தற்போது வழக்கில் இல்லை .

ஆனால் யாழ்ப்பாணத்தில் வழங்கும் தமிழில் வழக்கில் உள்ளது .

நாற்கணம் என்பது உயிர் , வல்லினம் , மெல்லினம் , இடையினம் ஆகிய நான்கனைக் குறிக்கும் .

எகர வினா எழுத்தின் முன்னரும் , அ , இ , உ என்னும் மூன்று சுட்டு எழுத்துகளின் முன்னரும் நாற்கணமும் வந்து புணரும் புணர்ச்சி பற்றி நன்னூலார் பின்வரும் மூன்று விதிகளைக் குறிப்பிடுகிறார் .

அவற்றைச் சான்றுகளுடன் காண்போம் . 1. எ என்னும் வினா எழுத்தின் முன்னரும் , அ , இ , உ என்னும் மூன்று சுட்டு எழுத்துகளின் முன்னரும் உயிர் எழுத்துகளும் , யகர மெய்யும் வந்தால் அவற்றிற்கு இடையில் வகரமெய் தோன்றும் .

சான்று :

எ + அளவு > எ + வ் + அளவு = எவ்வளவு

அ + இடம் > அ + வ் + இடம் = அவ்விடம்

இ + உலகம் > இ + வ் + உலகம் = இவ்வுலகம்

உ + இடம் > உ + வ் + இடம் = உவ்விடம்

எ + யானை > எ + வ் + யானை = எவ்யானை

அ + யாழ் > அ + வ் + யாழ் = அவ்யாழ்

இ + யாழ் > இ + வ் + யாழ் = இவ்யாழ்

உ + யானை > உ + வ் + யானை = உவ்யானை

இச்சான்றுகளில் எகர வினா முச்சுட்டுகளின் முன்னர் உயிரும் , யகரமும் வர , அவற்றிற்கு இடையில் வகர மெய் தோன்றியதைக் காணலாம் .

2. எகர வினா , முச்சுட்டுகளின் முன்னர் உயிரும் யகரமும் நீங்கிய பிற வல்லின , மெல்லின , இடையின மெய் எழுத்துகள் வரும்போது அவற்றிற்கு இடையில் , வருகின்ற அந்தந்த மெய் எழுத்துகளே மிகும் .

சான்று :

வல்லினம்

எ + குதிரை = எக்குதிரை

அ + குதிரை = அக்குதிரை

இ + குதிரை = இக்குதிரை

உ + குதிரை = உக்குதிரை

மெல்லினம்

எ + நாள் = எந்நாள்

அ + நாள் = அந்நாள்

இ + நாள் = இந்நாள்

உ + நாள் = உந்நாள்

இடையினம்

எ + விதம் = எவ்விதம்

அ + விதம் = அவ்விதம்

இ + விதம் = இவ்விதம்

உ + விதம் = உவ்விதம்

இச்சான்றுகளில் எகர வினா , முச்சுட்டுகளின் முன்னர் வல்லினமும் , மெல்லினமும் , யகரம் நீங்கிய இடையினமும் வர அவற்றிற்கு இடையில் , வருகின்ற மெய் எழுத்துகளே மிக்கு வந்துள்ளதைக் காணலாம் .

3. செய்யுளில் சுட்டு எழுத்து நீண்டு வரும்போது , அதற்கும் வருமொழியின் முதலில் உள்ள உயிர்க்கும் இடையில் யகரமெய் தோன்றும் .

சான்று :

அ + இடை > ஆ + இடை > ஆ + ய் + இடை = ஆயிடை

இதில் வந்துள்ள ய் என்பது உடம்படுமெய் அன்று .

ஆ + இடை என்னும் இரு சொற்களுக்கு இடையே , யகரமெய் தோன்றல் என்னும் புணர்ச்சி விதி காரணமாகத் தோன்றியதாகும் .

இத்தகைய சுட்டு நீண்டு அமையும் புணர்ச்சி செய்யுளில் மட்டுமே வரும் .

அதற்கேற்ப ஆயிடை என்றசொல் ,

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்

என்ற தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் வந்துள்ளதைக் காணலாம் .

மேலே கூறப்பட்ட புணர்ச்சி விதிகளை நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலில் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார் .

எகர வினாமுச் சுட்டின் முன்னர்

உயிரும் எகரமும் எய்தின் வவ்வும் ,

பிறவரின் அவையும் , தூக்கில் சுட்டு

நீளின் யகரமும் தோன்றுதல் நெறியே .

( நன்னூல் - 163 )

( தூக்கில் = செய்யுளில் )

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. தமிழ் இலக்கண நூலார் குறிப்பிடும் உடம்படுமெய்கள் யாவை ?

விடை

2. இ ஈ ஐ - முன்னர் உயிர்வரின் இடையே வரும் உடம்படுமெய் யாது ? விடை