26

3. வரவில்லை , திருவருள் - இவற்றைப் பிரித்துக்காட்டி இடையில் உள்ள உடம்படுமெய்யைக் குறிப்பிடுக .

விடை

4. சே + அடி - இது எவ்வெவ்வாறு புணரும் ?

விடை

5. முச்சுட்டு என்று கூறப்படுவன யாவை ?

விடை

6. எகர வினா , முச்சுட்டின் முன்னர் உயிரும் யகரமும் வரின் இடையே தோன்றும் மெய் யாது ?

விடை

7. செய்யுளில் சுட்டு நீண்டு வருவதற்கு ஒரு சான்று தருக .

விடை

8. எகர வினா , முச்சுட்டின் முன் பொருள் என்ற சொல் எவ்வாறு புணர்ந்து வரும் ?

விடை

9. இ + உலகம் - எவ்வாறு சேர்ந்து வரும் ?

விடை

10. அவ்விடம் - பிரித்துக் காட்டுக .

குற்றியலுகரத்தின் முன்னர் உயிரும் யகரமும் புணர்தல்

இப்புணர்ச்சி பற்றி நன்னூலார் கூறுவனவற்றைக் காண்பதற்கு முன்னர் , குற்றியலுகரம் என்றால் என்ன என்பது பற்றி அறிந்து கொள்வது நலம் .

குற்றியலுகரத்தைப் பற்றியும் , அதன் வகைகளைப் பற்றியும் ஏற்கெனவே சார்பு எழுத்துகள் என்ற பாடத்தில் படித்துள்ளோம் .

அவற்றை ஈண்டு மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம் .

மேலும் குற்றியலுகரத்தோடு தொடர்புடைய முற்றியலுகரத்தைப் பற்றியும் அறிந்து கொள்வோம் .

ஏனெனில் குற்றியலுகரப் புணர்ச்சிக்குக் கூறப்படும் விதிகளுள் சில , முற்றியலுகரத்திற்கும் பொருந்துவனவாக நன்னூலாரால் கூறப்பட்டுள்ளன .

குற்றியலுகரம் என்றால் என்ன ?

தனி நெட்டெழுத்தைத் தொடர்ந்தோ , இரண்டும் அதற்கும் மேற்பட்ட எழுத்துகளைத் தொடர்ந்தோ ஒரு சொல்லின் இறுதியில் வல்லின மெய்கள் ஆறன்மேல் ஏறிவரும் உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவே ஒலிக்கும் .

இதுவே குற்றியலுகரம் எனப்படும் .

குற்றியலுகரம் , தான் ஏறியிருக்கும் வல்லின மெய்க்கு ( கு , சு , டு , து , பு , று ஆகிய ஆறனுள் ஒன்றனுக்கு ) அயலே ( இடப்பக்கத்தில் ) வரும் எழுத்தைக் கொண்டு ஆறு வகைப்படும் .

அவையும் அவற்றிற்கான சான்றும் வருமாறு :

1. நெடில் தொடர்க் குற்றியலுகரம் - நாடு , காது , ஆறு

2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் - அஃது , எஃகு

3. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் - முரசு , வயது , கிணறு

4. வன்தொடர்க் குற்றியலுகரம் - பாட்டு , பத்து , பாக்கு

5. மென்தொடர்க் குற்றியலுகரம் - பந்து , பஞ்சு , குரங்கு

6. இடைத் தொடர்க் குற்றியலுகரம் - சார்பு , மார்பு , வீழ்து

இனி , முற்றியலுகரம் என்றால் என்ன என்று பார்ப்போம் .

தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின மெய்யின் மேல் ஏறி வருகின்ற உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறையாது ஒரு மாத்திரை அளவாகவே ஒலிக்கும் .

இது முற்றியலுகரம் எனப்படும் .

சான்று :

அது , பசு , கொடு , அறு .

மேலும் தனி நெட்டெழுத்தைத் தொடர்ந்தோ , பல எழுத்துகளைத் தொடர்ந்தோ ஒரு சொல்லின் இறுதியில் வல்லினம் அல்லாத பிற மெய்களின் மேல் ஏறி வரும் உகரமும் முற்றியலுகரம் ஆகும் .

சான்று :

சாவு , நோவு , கதவு , உறவு , நிலவு

குற்றியலுகரத்தின் முன்னர் உயிர் எழுத்துகளும் , யகர மெய்யும் வந்து புணரும் புணர்ச்சி பற்றி நன்னூலார் இரண்டு விதிகளைக் கூறுகிறார் .

சிலவிடங்களில் முற்றியலுகரத்திற்கும் இவ்விதிகள் பொருந்தும் எனக் கூறுகிறார் .

அவை வருமாறு :

1 நிலைமொழி ஈற்றில் குற்றியலுகரம் இருந்து , வருமொழி முதலில் உயிர் எழுத்து ஒன்று வந்து சேர்ந்தால் , அக்குற்றியலுகரம் தான் ஏறியிருக்கின்ற வல்லின மெய்யை விட்டு நீங்கும் .

சான்று :

நாடு + எல்லாம்

( நா ( ட் + உ ) + எல்லாம் ) = நாடெல்லாம்

அஃது + இல்லார் = அஃதில்லார்

முரசு + அறைந்தான் = முரசறைந்தான் பாட்டு + இசை = பாட்டிசை

பந்து + ஆட்டம் = பந்தாட்டம்

சார்பு + எழுத்து = சார்பெழுத்து

இங்கே காட்டிய சான்றுகளில் நிலைமொழி ஈற்றில் உள்ள குற்றியலுகரம் , வருமொழியின் முதலில் உயிர் வந்து சேரும்போது , தான் ஏறியிருந்த வல்லின மெய்யை விட்டு நீங்கியதைக் காணலாம் .

2 வருமொழி முதலில் யகரமெய் வந்து சேர்ந்தால் குற்றியலுகரம் இகரமாகத் திரியும் .

சான்று :

நாடு + யாது = நாடியாது

குரங்கு + யாது = குரங்கியாது

களிற்று + யானை = களிற்றியானை

இங்கே காட்டிய சான்றுகளில் , நிலைமொழியின் ஈற்றில் உள்ள குற்றியலுகரம் , வருமொழி முதலில் யகரமெய் வந்து சேரும்போது இகரமாகத் திரிந்துள்ளதைக் காணலாம் .

இவ்வாறு திரிந்து வரும் இகரம் குற்றியலிகரம் எனப்படும் .

குற்றியலுகரத்திற்குக் கூறப்பட்ட இவ்விரண்டு விதிகளை முற்றியலுகரமும் சிலவிடங்களில் பெற்றுவரும் .

சான்று :

சாவு + இல்லை = சாவில்லை

கதவு + எங்கே = கதவெங்கே

உறவு + இல்லை = உறவில்லை

இங்கே காட்டிய சான்றுகளில் நிலைமொழியின் ஈற்றில் உள்ள முற்றியலுகரம் வருமொழியின் முதலில் உயிர் வந்து சேரும்போது , தான் ஏறியிருக்கின்ற வகரமெய்யை விட்டு நீங்கியதைக் காணலாம் .

கதவு + யாது = கதவியாது

இங்கே முற்றியலுகரம் வருமொழியின் முதலில் யகரம் வர இகரமாகத் திரிந்திருப்பதைக் காணலாம் .

நூற்பா :

உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும் ;

யவ்வரின் இய்யாம் முற்றும்அற் றொரோவழி .

( நன்னூல் - 164 )

( ஓடும் = நீங்கும் ; உக்குறள் , குறள் உ = குற்றியலுகரம் ; மெய்விட்டோடும் - வல்லின மெய்யை விட்டு நீங்கும் ; அற்று - குற்றியலுகரத்தைப்போல ; முற்றும் - முற்றியலுகரமும் ; ஒரோவழி = சிலவிடங்களில் . )

நன்னூலார் தாம் கூறும் இலக்கண விதிகள் சிலவற்றிற்குச் சான்றுகளை , அவ்விதிகளைக் கூறும் நூற்பாவினுள்ளேயே அமைத்துக் காட்டியிருப்பதைக் காணலாம் .

இந்நூற்பாவில் ,

மெய்விட்டு + ஓடும் = மெய்விட்டோடும்

அற்று + ஒரோவழி = அற்றொரோவழி

என வருவனவற்றில் குற்றியலுகரம் வருமொழியின் முதலில் உயிர் வரும்போது , முறையே தான் ஏறியிருக்கின்ற டகர , றகர வல்லின மெய்களை விட்டு நீங்கியிருப்பதைக் காணலாம் .

உயிர் ஈற்றின்முன் வல்லினம் புணர்தல்

நிலைமொழியின் இறுதியில் இயல்பு ஈறாகவோ , விதி ஈறாகவோ நிற்கும் உயிர்களின் முன்னர் , வருமொழியின் முதலில் வருகின்ற க , ச , த , ப என்னும் வல்லின மெய்கள் , பெரும்பாலும் மிகும் ; ( சிறப்பு விதிகளில் சொல்லாதவையாய் இருந்தால்)

இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்

க ச த ப மிகும் விதவாதன மன்னே .

( நன்னூல் - 165 )

( விதவாதன - சிறப்பு விதிகளில் சொல்லாதவை . )

இந்நூற்பாவில் கூறப்படும் இயல்பு ஈறு , விதி ஈறு என்பனவற்றை விளங்கிக் கொள்வது இன்றியமையாதது .

• இயல்பு ஈறு

நிலைமொழியின் ஈற்றில் உள்ள உயிரானது , எத்தகைய விகாரமும் அடையாமல் இயல்பாய் இருப்பது இயல்பு ஈறு எனப்படும் .

சான்று :

பலா , வாழை , மலை

( இவற்றுள் சொல்லின் இறுதியில் உள்ள உயிர் எழுத்துகள் இயல்பாய் அமைந்தவை)

• விதி ஈறு

நிலைமொழியின் ஈற்றில் இயல்பாய் நிற்கின்ற உயிர் , மெய் ஆகிய இரண்டனுள் , ஏதேனும் ஓர் இலக்கண விதி காரணமாக , உயிரானது நீங்கி வேறோர் உயிர் ஈறாய் நிற்பதும் , மெய்யானது நீங்கி உயிர் ஈறாய் நிற்பதும் , மெய்யின் மேல் ஓர் உயிர் ஏறி நிற்பதும் விதி ஈறு எனப்படும் .

சான்று :

நேற்று - நேற்றை

மரம் - மர

தாழ் - தாழ

( இவற்றுள் சொல்லின் இறுதியில் உள்ள உயிர் எழுத்துகள் விதி காரணமாக அமைந்தவை)

இனி , இயல்பு ஈறாகவும் , விதி ஈறாகவும் நிற்கும் உயிர்களின் முன்னர் , க , ச , த , ப என்னும் வல்லின மெய்கள் வந்து புணர்தலைச் சான்றுகளுடன் காண்போம் .

• இயல்பு உயிர் ஈறுகளின் முன்னர் வல்லினம் வந்து மிகுதல் சான்று :

எட்டி + காய் = எட்டிக்காய்

பலா + சுளை = பலாச்சுளை

வாழை + தோப்பு = வாழைத்தோப்பு

மலை + பழம் = மலைப்பழம்

இச்சான்றுகளில் எட்டி , பலா , வாழை , மலை என்னும் நிலைமொழிகளின் இறுதியில் இ , ஆ , ஐ என்னும் உயிர் ஈறுகள் இயல்பாய் நிற்றலால் இயல்பு உயிர் ஈறுகள் ஆகும் .

இவற்றின் முன்னர் வந்த க , ச , த , ப என்னும் வல்லின மெய்கள் மிக்கு வந்துள்ளதை இச்சான்றுகள் காட்டுகின்றன .

• விதி உயிர் ஈறுகளின் முன்னர் வல்லினம் வந்து மிகுதல்

சான்று :

நேற்று + பொழுது = நேற்றைப்பொழுது

மரம் + கிளை = மரக்கிளை

தாழ் + கோல் = தாழக்கோல்

இச்சான்றுகளில் நேற்று என்பது நேற்றை என்றும் , மரம் என்பது மர என்றும் , தாழ் என்பது தாழ என்றும் சில இலக்கண விதிகளின் காரணமாக மாறியுள்ளன .

இவ்வாறு விதிகளின் காரணமாக மாறியுள்ள நிலைமொழிச் சொற்களாகிய நேற்றை , மர , தாழ என்பனவற்றில் முறையே இறுதியில் வரும் ஐ , அ என்பன விதி உயிர் ஈறுகள் ஆகும் .

இவ்விதி உயிர் ஈறுகளின் முன்னர் வந்த க , ச , த , ப என்னும் வல்லின மெய்கள் மிக்கு வந்துள்ளதை இச்சான்றுகள் காட்டுகின்றன .

சிறப்பு விதிகளில் சொல்லாதவை பெரும்பாலும் மிகும் என்றமையால் , சிறப்பு விதிகளில் சொல்லியவை பெரும்பாலும் வல்லினம் மிகா என்பது பெறப்படும் .

அதனை அடுத்து வரும் உயிர் ஈற்றுச் சிறப்பு விதிகள் என்ற பாடத்தில் பார்க்கலாம் .

உயிர் ஈற்று மரப்பெயர் முன் வல்லினம் புணர்தல்

மரத்தின் பெயர்கள் சிலவற்றுக்கெனப் புதிய விதிகளை நன்னூல் கூறுகிறது .

வேற்றுமைப் புணர்ச்சியில் , உயிர் எழுத்தை ஈற்றிலே கொண்ட சில மரப்பெயர்களுக்கு முன்னர் வரும் க , ச , த , ப என்னும் வல்லெழுத்துகள் , மேலே சொன்ன பொதுவிதிப்படி மிகாமல் , வருகின்ற அவ்வல்லெழுத்துகளுக்கு இனமான மெல்லெழுத்துகள் தோன்றப் பெறுவதும் உண்டு .

மரப்பெயர் முன்னர் இனமெல் லெழுத்து

வரப்பெறு னவும்உள வேற்றுமை வழியே ( நன்னூல் , 166 )

சான்று :

விள + காய் = விளங்காய்

மா + பழம் = மாம்பழம்

காயா + பூ = காயாம் பூ

நூற்பாவில் , வரப்பெறுனவும் உள ( தோன்றப் பெறுவதும் உண்டு ) என்ற உம்மையால் , மரப் பெயர்களின் முன்னர் மெல்லெழுத்துப் பெறாமல் வல்லெழுத்து மிகப் பெறுவனவே பெரும்பான்மை என்பது பெறப்படும் .

சான்று :

பலா + காய் = பலாக்காய்

அத்தி + பழம் = அத்திப்பழம்

அத்தி + காய் = அத்திக்காய்

வாழை + காய் = வாழைக்காய்

வாழை + பழம் = வாழைப்பழம்

இலந்தை + பழம் = இலந்தைப்பழம்

தொகுப்புரை

நிலைமொழியின் இறுதியிலும் வருமொழியின் முதலிலும் உயிர் வரும்போது , அவ்விரண்டு உயிர்களையும் அடுத்தடுத்து ஒலிக்கும்போது தோன்றும் விட்டிசையைத் தடுக்க , அவ்விரண்டு உயிர்களுக்கு இடையே உடம்படுமெய்களாக யகரமெய்யும் , வகர மெய்யும் வருகின்றன .

விட்டிசை காரணமாக உடம்படாமல் இருக்கும் இரண்டு உயிர்களை உடம்படுத்தும் மெய்களாக இவை வருதலால் உடம்படு மெய்கள் எனப்பட்டன .

நிலை மொழியின் இறுதியில் இ , ஈ , ஐ வரும்போது யகரமெய்யும் , பிற வரும்போது வகர மெய்யும் உடம்படு மெய்களாக வருகின்றன .

எகர வினா , முச்சுட்டுகளின் முன்னர் உயிரும் யகர மெய்யும் வரும் போது இடையில் வகர மெய் தோன்றும் , வல்லினம் , மெல்லினம் , யகரம் நீங்கிய இடையினமும் வரும்போது , இடையில் வருகின்ற அந்தந்த மெய் எழுத்துகளே மிக்குத் தோன்றும் .

நிலை மொழியின் இறுதியில் உள்ள குற்றியலுகரம் , வருமொழியின் முதலில் உயிர் வரும்போது , தான் ஏறியிருக்கும் வல்லின மெய்யை விட்டு நீங்கும் .

முற்றியலுகரமும் வருமொழியின் முதலில் உயிர் வரும்போது தான் ஏறியிருக்கும் மெய்யை விட்டு நீங்கும் .

இயல்பு ஈறாகவும் , விதி ஈறாகவும் மொழி இறுதியில் வரும் எல்லா உயிர்கள் முன்னும் வரும் க , ச , த , ப என்னும் வல்லின மெய்கள் நான்கும் பெரும்பாலும் மிகும் .

இவ்விதிக்கு மாறாகச் சில உயிர் ஈற்று மரப்பெயர்களின் முன்னர் வரும் வல்லினம் மிகாமல் , அவ்வல்லினத்திற்கு இனமாகிய மெல்லினம் தோன்றப் பெறுவதும் உண்டு .

இவற்றை எல்லாம் இந்தப் பாடத்தின் வாயிலாக விளக்கமாக அறிந்து கொண்டோம் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும் ?

விடை

2. பின்வரும் சொற்களுள் எவை குற்றியலுகரச் சொற்கள் , எவை முற்றியலுகரச் சொற்கள் எனக் குறிப்பிடுக .

காது , அது , கொடு , நாடு , முரசு , கதவு விடை

3. நாடு + எல்லாம் , சார்பு + எழுத்து - இவற்றைச் சேர்த்து எழுதுக . விடை

4. நிலைமொழி இறுதியில் உள்ள குற்றியலுகரம் வருமொழி முதலில் யகர மெய் வந்தால் எவ்வாறு திரியும் ?

விடை

5. இயல்பினும் , விதியினும் நின்ற நிலைமொழி உயிர் ஈற்றின் முன்னர் வரும் எந்த மெய்கள் மிகும் ?

விடை

6. மரக்கிளை , பலாச்சுளை , நேற்றைப் பொழுது , மலைப்பழம் - இவற்றில் இயல்பு உயிர் ஈறாகவும் , விதி உயிர் ஈறாகவும் அமைந்தவை எவை எனக் காட்டுக .

விடை

7. மா + பழம் , விள + காய் - இவை எவ்வாறு புணர்ந்து வரும் ?

உயிர் ஈற்றுப் புணர்ச்சி - சிறப்பு விதிகள்

பாட முன்னுரை

உயிர் ஈற்றுப் புணரியலில் எல்லா உயிர் ஈறுகளுக்குமான சிறப்புப் புணர்ச்சியை விளக்கிக் கூறிய நன்னூலார் ஒவ்வோர் உயிர் ஈற்றிற்குமான புணர்ச்சி விதிகளை , அகர ஈற்றுச் சிறப்பு விதிகள் , ஆகார ஈற்றுச் சிறப்பு விதிகள் எனத் தனித் தனியாகக் கூறுகிறார் .

மொழிக்கு இறுதியில் பன்னீர் உயிர்களும் வரும் என்கிறார் நன்னூலார் .

இவற்றுள் எ என்பது வினா எழுத்து என்ற நிலையில் மட்டும் ஈறாகும் .

இதனோடு நாற்கணமும் புணர்வது பற்றி உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சியில் ‘ எகர வினா முச்சுட்டின் முன்னர் ’ என்று தொடங்கும் நூற்பாவில் பேசினார் .

இதனைச் சென்ற பாடத்தில் பார்த்தோம் .

ஒ என்பது தனித்து ஈறாகாது .

மெய்யோடு சேர்ந்து ஈறாகும்போது நகர மெய்யுடன் சேர்ந்து ‘ நொ ’ என்ற ஒரு சொல்லில் மட்டும் ஈறாகும் .

நொ என்ற சொல் புணர்ச்சியில் வருவது பற்றி ‘ எண்மூ எழுத்து ’ என்று தொடங்கும் பொதுப்புணர்ச்சி பற்றிய நூற்பாவில் கூறியுள்ளார் , இதனையும் ஏற்கெனவே பார்த்துள்ளோம் .

ஔ என்னும் உயிர் கௌ , வௌ ஆகிய சொற்களில் மட்டுமே ஈறாகும் .

இவை சிறப்பில்லாதவை .

எனவே எ , ஒ , ஔ ஆகிய மூன்று உயிர்களும் நீங்கலான பிற ஒன்பது உயிர் ஈற்றுச் சிறப்பு விதிகள் பற்றி , உயிர் ஈற்றுப் புணரியலில் பேசுகிறார் .

ஈகார ஈற்றுச் சிறப்பு விதியில் அவர் குறிப்பிடும் விதிகள் பெரும்பாலும் இடக்கர் அடக்கல் சொல் ( பொது இடத்தில் பலர் முன் கூறத்தகாத சொல் ) பற்றியனவாக உள்ளன .

எனவே ஈகார ஈற்றைத் தவிர்த்து , ஏனைய எட்டு உயிர் ஈற்றுச் சிறப்புவிதிகளை இப்பாடத்தில் ஒன்றன்பின் ஒன்றாகச் சான்றுகளுடன் விளக்கிக் காண்போம் .

அகர ஈற்றுச் சிறப்பு விதிகள்

‘ இயல்பினும் விதியினும் ’ என்று தொடங்கும் நூற்பாவில் கூறிய பொதுவிதிப்படி , நிலைமொழியின் ஈற்றில் உயிர்வந்து , வருமொழி முதலில் வல்லினம் வந்தால் , அவ்வல்லினம் பெரும்பாலும் மிகும் என ஏற்கெனவே பார்த்தோம் .

அப்பொதுவிதிக்கு மாறாக , சில அகர ஈற்றுச் சொற்களின் முன்னர் வரும் வல்லினம் மிகாமல் இயல்பாய் வரும் என்பதை நன்னூலார் ஒரு சில நூற்பாக்களில் குறிப்பிடுகிறார் .

• அகர ஈற்றுச் சொற்கள் சிலவற்றின் முன் வல்லினம் இயல்பாதல்

1. செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களின் முன்னர் வரும் வல்லினம் ( க , ச , த , ப ) இயல்பாகும் .

சான்று :

காணிய + சென்றான் = காணிய சென்றான் ( காண்பதற்குச் சென்றான் )

உண்ணிய + போனான் = உண்ணிய போனான் ( உண்பதற்குப் போனான் )

2. பல வகைப்பட்ட அகர ஈற்றுப் பெயரெச்சங்களுக்கு முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் .

சான்று :

உண்ட + பையன் = உண்ட பையன் ( தெரிநிலைப்

பெயரெச்சம் )

கரிய + பையன் = கரிய பையன் ( குறிப்புப்

பெயரெச்சம் )

அறியாத + பையன் = அறியாத பையன் ( எதிர்மறைப்

பெயரெச்சம் )

3. பல வகைப்பட்ட அகர ஈற்று வினைமுற்றுகளுக்கு முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் .

சான்று :

உண்டன + குதிரைகள் = உண்டன குதிரைகள் ( தெரிநிலை வினைமுற்று )

கரியன + குதிரைகள் = கரியன குதிரைகள் ( குறிப்பு வினைமுற்று )

வாழ்க + தலைவா = வாழ்க தலைவா ( வியங்கோள் வினைமுற்று )

4. ஆறாம் வேற்றுமைப் பன்மை உருபாகிய ‘ அ ’ என்பது பெயரைச் சார்ந்து வரும்போது அதன் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் .

சான்று :

என + அ + கைகள் = என கைகள் ( என்னுடைய கைகள் )

5. அகர ஈற்றுப் பன்மைப் பெயர்களுக்கு முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் .

சான்று :

பல + குதிரைகள் = பல குதிரைகள் சில + தந்தான் = சில தந்தான்