27

6‘ அம்ம ’ என்னும் உரையசை இடைச்சொல்லுக்கு முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் .

சான்று :

அம்ம கண்ணா

( அம்ம என்னும் இடைச்சொல் , ஒருவனை ஒருவன் ஒன்றுகேள் என்று சொல்லுதற்கண் வரும் என்பர் தொல்காப்பியர் .

அம்ம கேட்பிக்கும் - ( தொல் , சொல் , 276 )

மேலே கூறப்பட்ட புணர்ச்சி விதிகளை நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலில் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார் :

செய்யிய என்னும் வினையெச்சம் , பல்வகைப்

பெயரின் எச்சம் , முற்று , ஆறன் உருபே ,

அஃறிணைப் பன்மை , அம்ம முன் இயல்பே ( நன்னூல் , 167 )

• ‘ சாவ ’ என்னும் சொல்லின் முன் வல்லினம்

‘ சாவ ’ என்பது செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் ஆகும் .

இதனுடைய ஈற்றில் உள்ள வகர உயிர்மெய்யானது , வருமொழி முதலில் வல்லினம் வரும் போது கெடுதலும் ( நீங்குதலும் ) விதியாம் .

சாவ என் மொழிஈற்று உயிர்மெய் சாதலும் விதி ( நன்னூல் , 169 )

சான்று :

சாவ + குத்தினான் = சாக்குத்தினான் - ( சாகும்படி குத்தினான் )

‘ இயல்பினும் விதியினும் ’ என்ற பொதுவிதிப்படி , ‘ சாவ + குத்தினான் = சாவக் குத்தினான் ’ என வல்லினம் மிகும் .

சாவ என்னும் இச்சொல் செய்யுளில் ‘ சா ’ என இறுதி வகர உயிர்மெய் நீங்கி அமைதலும் உண்டு .

அப்போது சா என நின்றாலும் வருமொழி முதலில் உள்ள வல்லினத்தோடு புணரும்போது சாக்குத்தினான் என வல்லினம் மிகுந்தே வரும் .

இதுவே விதி என நூற்பாவில் கூறப்படுகிறது .

• பல , சில என்னும் சொற்கள் புணரும் முறை

1. பல , சில என்னும் இருசொற்களும் தமக்குமுன் தாமே வருமாயின் ( பல என்பதற்கு முன் பல என்பதும் , சில என்பதற்கு முன் சில என்பதும் வந்தால் ) , இயல்பாதலும் , வல்லினம் மிகுதலும் , நிலைமொழி இறுதியில் நின்ற அகரம் கெட , லகர மெய் றகர மெய்யாகத் திரிதலும் உண்டு .

சான்று :

பல + பல = பலபல இயல்பாயின

சில + சில = சிலசில

பல + பல = பலப்பல வல்லினம் மிக்கன

சில + சில = சிலச்சில

பல + பல = பற்பல அகரம் கெட லகரம் றகரம் ஆயிற்று

சில + சில = சிற்சில

2. பல , சில என்னும் இருசொற்களின் முன்னர் , நாற்கணத்தில் தொடங்கும் சொற்கள் வரின் , அவ்விரு சொற்களின் ஈற்றில் உள்ள அகரம் நிற்பதும் உண்டு ; நீங்குவதும் உண்டு .

சான்று :

பல + ஆண்டு = பலவாண்டு , பல்லாண்டு

பல + கலை = பலகலை , பல்கலை

சில + நாள் = சிலநாள் , சின்னாள் ( சில் + நாள் )

பல + வகை = பலவகை , பல்வகை

நூற்பா :

பல சில எனும்இவை தம்முன் தாம்வரின்

இயல்பும் , மிகலும் , அகரம் ஏக

லகரம் றகரம் ஆகலும் , பிறவரின்

அகரம் விகற்பம் ஆகலும் உளபிற ( நன்னூல் , 170 )

ஆகார ஈற்றுச் சிறப்பு விதிகள்

ஆகார ஈற்றுச் சிறப்பு விதிகளை நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலில் இரண்டு நூற்பாக்களில் குறிப்பிடுகிறார் .

• ஆகாரத்தின் முன் வல்லினம் இயல்பாதல்

அல்வழிப் புணர்ச்சியில் ஆ என்னும் பெயர்க்கும் , மா என்னும் பெயர்க்கும் , மியா என்னும் முன்னிலை அசைச்சொல்லுக்கும் , ஆகார ஈற்று எதிர்மறைப் பலவின்பால் வினைமுற்றுக்கும் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் .

அல்வழி ஆ , மா , மியா , முற்று முன்மிகா ( நன்னூல் , 171 )

( ஆ - பசு ; மா - விலங்கு , மரம் )

சான்று :

ஆ + தின்றது = ஆ தின்றது

மா + பெரிது = மா பெரிது

கேண்மியா + கண்ணா = கேண்மியா கண்ணா உண்ணா + குதிரைகள் = உண்ணா குதிரைகள் ( உண்ணமாட்டா

குதிரைகள் )

• தனிக்குறிலை அடுத்து வரும் ஆகார ஈற்றுச் சொற்கள்

நிலா , சுறா , இறா , கனா , உணா ( உணவு ) போன்றவை தனிக்குறிலை அடுத்து வரும் ஆகாரத்தை ஈற்றிலே உடைய சொற்கள் .

இத்தகைய சொற்கள் செய்யுளில் எவ்வாறு வரும் என்பது பற்றி நன்னூலார் கூறியுள்ளார் .

அவர் கூறுவதைச் சான்றுடன் காண்போம் .

தனிக்குறிலை அடுத்து வரும் ஆகாரத்தை ஈற்றிலே உடைய சொற்கள் செய்யுளில் வரும்போது , இறுதியில் உள்ள ஆகாரம் அகரமாகக் குறுகுதலும் , அதனோடு உகரம் பெறுதலும் , அவ்விரண்டும் அல்லாமல் இயல்பாய் நிற்றலும் ஆகிய மூன்று விதிகளை உடையன .

குறியதன் கீழ்ஆக் குறுகலும் , அதனோடு

உகரம் ஏற்றலும் , இயல்புமாம் , தூக்கின் ( நன்னூல் , 172 )

( தூக்கின் - செய்யுளில் )

சான்று :

நிலவிரி கானல்வாய் நின்று

- ஈற்றில் உள்ள ஆ என்பது அ எனக் குறுகியது .

மருவின் என் செய்யுமோ நிலவு

- ஆ என்பது அ எனக் குறுகி உகரம் ஏற்றது .

நிலா வணங்கும் வெண்மணல் மேல் நின்று

- இயல்பாயிற்று .

செய்யுளில் இம்மூன்றும் ( நில , நிலவு , நிலா ) வரும் .

எனவே , வழக்கில் இரண்டும் ஒன்றும் வரப்பெறும் என்பது பெறப்படும் .

அவ்வாறு வரும்போதும் , ஆகாரம் குறுகி உகரம் ஏற்காமல் நிற்றல் ( நில என நிற்றல் ) வருவதில்லை .

மற்ற இரண்டில் , இரண்டுமோ , ஒன்று மட்டுமோ வழக்கில் வரும் .

சான்று :

நிலவு உதித்தது , நிலா உதித்தது

கனவு கண்டேன் , கனாக் கண்டேன்

இச்சான்றுகளில் வரும் நிலா , கனா என்னும் சொற்கள் குறுகி , உகரம் ஏற்றல் , இயல்பு என்ற இரண்டும் பெற்று வந்தன .

சுறா

இறா

இவை வழக்கில் இயல்பு என்ற ஒன்றுமட்டும் பெற்று வந்தன .

இவை சுறவு , இறவு என வழங்குவது வழக்கில் இல்லை .

இகர ஈற்றுச் சிறப்பு விதிகள்

நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலில் உள்ள நூற்பாக்கள் சிலவற்றில் இகர ஈற்றுச் சிறப்பு விதிகளைப் பற்றிப் பேசுகிறார் .

• நாழி , உரி என்னும் சொற்களுக்குப் புணர்ச்சி விதி

நாழி , உரி என்பன பழங்காலத்தில் வழங்கிய முகத்தல் அளவைப் பெயர்கள் .

நாழி என்ற சொல் ஒரு படியையும் , உரி என்ற சொல் அரைப் படியையும் குறிக்கும் .

உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் ( நல்வழி , 28:1 )

என்ற ஔவையாரின் நல்வழிப் பாடலில் நாழி என்ற சொல் வந்திருப்பது காணலாம் .

நன்னூலார் நாழி என்ற சொல்லின் முன்னர் உரி என்ற சொல்லும் , உரி என்ற சொல்லின் முன்னர் ஏற்ற பிற சொற்களும் புணரும் முறை பற்றி இரண்டு விதிகளைக் கூறுகிறார் .

1. நாழி என்னும் முகத்தல் அளவைப் பெயர் நிலைமொழியாக நிற்கும்போது , உரி என்னும் மற்றொரு முகத்தல் அளவைப் பெயர் வருமொழியாக வந்தால் , நாழி என்பதன் ஈற்றில் உள்ள ழி என்னும் உயிர்மெய் நீங்க , அவ்விடத்தே டகரமெய் வரும் .

சான்று :

நாழி + உரி

நா + உரி ( நாழி என்பதன் ஈற்று உயிர்மெய் ழி நீங்கியது )

நாட் + உரி ( ழி நீங்க அவ்விடத்தே டகரமெய் வந்தது )

= நாடுரி

( நாடுரி என்பதற்கு ஒன்றரைப்படி என்று பொருள் )

2. உரி என்னும் முகத்தல் அளவைப் பெயர் நிலைமொழியாக நிற்கும்போது , அதன் முன்னர் ஏற்ற சொற்கள் வந்து சேரும்போது , நிலைமொழியின் பின் யகர உயிர்மெய் வந்துசேரும் .

சான்று :

உரி + உப்பு = உரியவுப்பு

உரி + பயறு = உரியபயறு

உரி + மிளகு = உரியமிளகு

உரி + வரகு = உரியவரகு நன்னூலார் இவ்விரு புணர்ச்சி விதிகளையும் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார் .

உரிவரின் நாழியின் ஈற்றுஉயிர் மெய்கெட

மருவும் டகரம் ; உரியின் வழியே

யகரஉயிர் மெய்யாம் ஏற்பன வரினே ( நன்னூல் , 174 )

( மருவும் - வரும் ; ஏற்பன = ஏற்ற சொற்கள் )

• புளி என்னும் சொல்லுக்குப் புணர்ச்சி விதி

புளி என்னும் இகர ஈற்றுச் சொல் புளியமரம் , புளியம்பழம் , புளிப்புச்சுவை என்னும் பல பொருளை உணர்த்தும் ஒரு சொல்லாகும் .

இவற்றுள் புளிப்புச்சுவை என்பது அறுவகைச் சுவைகளுள் ஒன்று .

சுவையை உணர்த்தும் புளி என்ற சொல்லின் முன்னர் , வல்லினத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தால் , அவ்வல்லினம் ‘ இயல்பினும் விதியினும் ’ என்ற பொதுவிதிப்படி மிகுவதோடு , அதற்கு இனமான மெல்லினமும் சில சமயம் மிகும் என்கிறார் நன்னூலார் .

இதனை ,

சுவைப்புளி முன்இன மென்மையும் தோன்றும் ( நன்னூல் , 175 )

என்ற நூற்பாவில் குறிப்பிடுவார் .

சான்று :

புளி + கறி = புளிங்கறி

புளி + சோறு = புளிஞ்சோறு

புளி + தயிர் = புளிந்தயிர்

புளி + பாளிதம் = புளிம்பாளிதம் ( பாளிதம் - சோறு )

இவை பொதுவிதிப்படி முறையே புளிக்கறி , புளிச்சோறு , புளித்தயிர் , புளிப்பாளிதம் என வல்லினம் மிக்கே பெரும்பாலும் வரும் .

• அல்வழிப் புணர்ச்சியில் இகர , ஐகார ஈற்று அஃறிணைப் பெயர்கள்

அல்வழிப் புணர்ச்சியில் இகர , ஐகார ஈற்று அஃறிணைப் பெயர்கள் முன்னர் வல்லினம் வருமாயின் , அவ்வல்லினம் இயல்பாகவும் , மிகுந்தும் , விகற்பமாகவும் வரும் .

அல்வழி ‘ இ , ஐ ’ம் முன்னர் ஆயின்

இயல்பும் , மிகலும் , விகற்பமும் ஆகும் ( நன்னூல் , 176 )

இந்நூற்பாவில் கூறப்படும் புணர்ச்சி விதி இகர ஈற்றிற்கும் , ஐகார ஈற்றிற்கும் , ஒரு சேர உரியதாக உள்ளதால் , நன்னூலார் இங்கே இகர ஈற்றோடு , ஐகார ஈற்றையும் உடன்வைத்துக் கூறினார் .

( i ) வல்லினம் இயல்பாதல்

எழுவாய்த் தொடரிலும் , உம்மைத் தொகையிலும் இ , ஐ முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் .

சான்று :

புலி + சிறியது = புலி சிறியது

யானை + பெரியது = யானை பெரியது

இவை எழுவாய்த் தொடர் .

செடி + கொடி = செடி கொடி ( செடியும் கொடியும் )

யானை + குதிரை = யானை குதிரை ( யானையும் குதிரையும் )

இவை உம்மைத் தொகை .

( ii ) வல்லினம் மிகுதல்

இருபெயரொட்டுப் பண்புத்தொகையிலும் , உவமைத் தொகையிலும் இ , ஐ முன்னர் வரும் வல்லினம் மிகும் .

சான்று :

மார்கழி + திங்கள் = மார்கழித் திங்கள் ( மார்கழி ஆகிய திங்கள் )

சாரை + பாம்பு = சாரைப் பாம்பு ( சாரை ஆகிய பாம்பு )

இவை இருபெயரொட்டுப் பண்புத் தொகை .

காவி + கண் = காவிக்கண் ( காவி மலர் போன்ற கண் )

பனை + கை = பனைக்கை ( பனைமரம் போன்ற கை )

இவை உவமைத் தொகை .

( iii ) விகற்பமாதல்

சில எழுவாய்த் தொடர்களில் இ , ஐ முன்னர் வரும் வல்லினம் விகற்பம் ஆகும் .

அதாவது ஒரே புணர்ச்சியில் இயல்பாகவும் , வல்லினம் மிக்கும் வரும் .

சான்று :

கிளி + சிறிது = கிளி சிறிது , கிளிச்சிறிது

தினை + சிறிது = தினை சிறிது , தினைச் சிறிது

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்திற்கு முன்னர் வரும் வல்லினம் மிகுமா ?

இயல்பாகுமா ? விடை

2. அகர ஈற்றுப் பெயரெச்சத்திற்கு முன்னர் வரும் வல்லினம் எவ்வாறு வரும் ?

விடை

3. உண்ட பையன் , உண்டப் பையன் - இவற்றில் எது பிழையில்லாத பெயரெச்சத் தொடர் ?

விடை

4. பற்பல , சிற்சில - இவற்றைப் பிரித்துக் காட்டுக .

விடை

5. நிலா என்ற சொல் செய்யுளில் வேறு எவ்வாறு வழங்குகிறது ?

விடை

6. நாடுரி - பிரித்துக் காட்டுக .

விடை

7. உரி + பயறு - புணர்த்து எழுதுக .

விடை

8. உம்மைத் தொகையில் இ , ஐ முன்னர் வல்லினம் இயல்பாதலுக்கு இரு சான்றுகள் தருக .

விடை

9. இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் இ , ஐ முன்னர் வரும் வல்லினம் இயல்பாக வருமா ?

மிக்கு வருமா ?

விடை

10. உவமைத் தொகையில் இ , ஐ முன்னர் வல்லினம் மிகுதலுக்குச் சான்று தருக .

உகர ஈற்றுச் சிறப்பு விதிகள்

உகர ஈறு இருவகைப்படும் .

1. முற்றியலுகர ஈறு 2. குற்றியலுகர ஈறு. ஒரு மாத்திரை அளவாய் ஒலிக்கும் உகரம் முற்றியலுகரம் எனப்படும் .

ஒரு மாத்திரையிலிருந்து குறுகி அரை மாத்திரை அளவாய் ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் எனப்படும் .

நன்னூலார் மொழிக்கு இறுதியாகும் பன்னிரண்டு உயிர்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருக்கும் உகர உயிர் முற்றியலுகரமே ஆகும் .

குற்றியலுகரம் நன்னூல் ஆசிரியரால் மொழிக்கு இறுதியாகும் 24 எழுத்துகளுள் ஒன்றாகத் தனியே குறிப்பிடப்பட்டுள்ளது .

எனவே நன்னூலார் உகர ஈற்றுச் சிறப்பு விதிகள் பற்றிக் கூறும்போது , முதற்கண் முற்றியலுகர ஈற்றுச் சிறப்பு விதிகளைக் ( நன்னூல் , 179 - 180 ) கூறுகிறார் .

அதன் பின்பே குற்றியலுகர ஈற்றுச் சிறப்பு விதிகளைக் கூறுகிறார் .

குற்றியலுகர ஈற்றுச் சிறப்பு விதிகள் அடுத்த பாடத்தில் காணப்படும் .

இங்கே முற்றியலுகர ஈற்றுச் சிறப்பு விதிகளே கூறப்படுகின்றன .

• சில முற்றியலுகர ஈற்றுச்சொற்கள் முன்னர் வல்லினம்

ஒடு என்னும் மூன்றாம் வேற்றுமை உருபுக்கும் , அது என்னும் ஆறாம் வேற்றுமை உருபுக்கும் , இயல்பாகவும் , விகாரப்பட்டும் வரும் எண்ணுப்பெயர்களுக்கும் , வினைத்தொகைக்கும் , அது , இது , உது என்னும் சுட்டுப்பெயர்களுக்கும் இறுதியாகிய முற்றியலுகரத்தின் முன்னர் வருகின்ற வல்லினம் இயல்பாகும் .

மூன்று , ஆறு உருபு , எண் , வினைத்தொகை , சுட்டு , ஈறு

ஆகும் உகரம் முன்னர் இயல்பாம் .

( நன்னூல் , 179 )

ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப் பெயர்களில் முற்றியலுகர ஈற்று எண்ணுப் பெயர் ஏழு என்பது மட்டுமே ஆகும் .

மற்ற ஒன்று , இரண்டு மூன்று முதலான எண்ணுப்பெயர்கள் எல்லாம் குற்றியலுகர ஈற்று எண்ணுப்பெயர்கள் ஆகும் .

ஒன்று , இரண்டு , ஆறு , ஏழு என்ற நான்கு எண்ணுப் பெயர்களும் புணர்ச்சியில் விகாரப்பட்டு முறையே ஒரு , இரு , அறு , எழு என முற்றியலுகர ஈறாக வரும் .

இவற்றை மொழியியலார் எண்ணுப்பெயரடைகள் ( Numerical Adjectives ) என்று குறிப்பிடுகின்றனர் .

காரணம் இவை இரு கோடுகள் , அறு படைவீடுகள் எனப் பெயருக்கு அடையாக வருவதால் இவ்வாறு குறிப்பிடுகின்றனர் .

இந்நூற்பாவில் நன்னூலார் குறிப்பிடும் முற்றியலுகரப் புணர்ச்சி விதிகள் ஐந்து .

இவற்றினைச் சான்றுடன் காண்போம் .

1. மூன்றாம் வேற்றுமைக்கு உரிய ஒடு உருபின் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் .

சான்று :

இராமனொடு + சென்றான் = இராமனொடு சென்றான்

கண்ணனொடு + படித்தான் = கண்ணனொடு படித்தான்

2. ஆறாம் வேற்றுமைக்கு உரிய அது உருபின் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் .

சான்று :

இராமனது + கை = இராமனது கை

கண்ணனது + தலை = கண்ணனது தலை

3( i ) இயல்பாக வரும் முற்றியலுகர ஈற்று எண்ணுப்பெயர் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் . சான்று :