28

ஏழு + கடல் = ஏழு கடல்

( எண்ணுப்பெயர்களில் ஏழு என்ற எண்ணைத் தவிர ஒன்று , இரண்டு முதலிய பிற எண்ணுப்பெயர்கள் குற்றியலுகர ஈற்றுப் பெயர்கள் ஆகும்)

( ii ) விகாரப்பட்டு வரும் முற்றியலுகர ஈற்று எண்ணுப்பெயர் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் .

( விகாரப்பட்டு வருதல் = சொல் உருமாறி வருதல் .

ஒன்று என்பது ஒரு எனவும் , இரண்டு என்பது இரு எனவும் , ஆறு என்பது அறு எனவும் வருதல் )

சான்று :

ஒரு + கை = ஒரு கை

இரு + படை = இரு படை

ஒரு + புறம் = ஒரு புறம்

இரு + புறம் = இரு புறம்

அறு + படைவீடு = அறுபடைவீடு

எழு + கடல் = எழுகடல்

4. வினைத்தொகையில் , முற்றியலுகர ஈற்று வினைப்பகுதிக்கு முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் .

சான்று :

நடு + கல் = நடுகல் ( நட்ட , நடுகின்ற , நடும் கல் )

சுடு + சோறு = சுடுசோறு ( சுட்ட , சுடுகின்ற , சுடும்சோறு )

வரு + புனல் = வருபுனல் ( வந்த , வருகின்ற , வரும்புனல் )

5. அது , இது , உது என்னும் மூன்று சுட்டுப் பெயர்களின் முன் வரும் வல்லினம் இயல்பாகும் .

சான்று :

அது + கண்டான் = அது கண்டான்

இது + சிறியது = இது சிறியது

உது + பெரியது = உது பெரியது

சுட்டுப் பெயர்களின் முன்னர் வல்லினம் இயல்பாகும் எனவே , எது என்ற முற்றியலுகர ஈற்று வினாப்பெயர் முன்னர் வரும் வல்லினமும் இயல்பாகும் .

சான்று :

எது + கண்டான் = எது கண்டான் ?

எது + சிறியது = எது சிறியது ?

ஊகார ஈற்றுச் சிறப்பு விதி

பூ என்னும் ஓர் எழுத்துப் பெயர்ச்சொல்லின் முன்னர் வல்லினம் வந்தால் , அவ்வல்லினம் பொதுவிதிப்படி மிகுதலே அல்லாமல் , அவ்வல்லினத்துக்கு இனமான மெல்லினமும் மிகும் .

பூப்பெயர் முன்இன மென்மையும் தோன்றும் ( நன்னூல் , 200 )

சான்று :

பூ + கொடி = பூங்கொடி

பூ + சோலை = பூஞ்சோலை

பூ + தடம் = பூந்தடம்

பூ + பொழில் = பூம்பொழில்

பொதுவிதிப்படி பூ முன்னர் வரும் வல்லினம் மிகும் .

சான்று :

பூ + பறித்தாள் = பூப்பறித்தாள்

பூ + கடை = பூக்கடை

பூ + கூடை = பூக்கூடை

ஏகார , ஓகார ஈற்றுச் சிறப்பு விதி

ஏகாரமும் ஓகாரமும் இடைச்சொற்கள் ஆகும் .

இவை பெரும்பாலும் பெயர்ச்சொற்களுக்கு இறுதியில் வரும் .

ஏ , ஓ என்னும் இடைச்சொற்களுக்கு முன்னர் வரும் வல்லினம் பொதுவிதிப்படி மிகாமல் இயல்பாகும் .

இடைச்சொல் ஏ ஓ முன்வரின் இயல்பே .

( நன்னூல் , 201 )

சான்று :

அவனே + கண்டான் = அவனே கண்டான்

அவனோ + கண்டான் = அவனோ கண்டான் ?

ஐகார ஈற்றுச் சிறப்பு விதிகள் அல்வழிப் புணர்ச்சியில் , ஐகாரத்தை ஈற்றிலே உடைய அஃறிணைப் பெயர்களின் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகவும் , மிகுந்தும் , விகற்பமாகவும் வரும் என்பதை இகர ஈற்றுச் சிறப்பு விதிகளில் ஏற்கெனவே பார்த்தோம் .

வேற்றுமைப் புணர்ச்சியில் ஐகார ஈற்றுச் சொற்கள் நிலைமொழிகளாக நின்று , வருமொழிகளோடு புணரும் முறை குறித்து நன்னூலார் இரண்டு நூற்பாக்களில் கூறுகிறார் .

அவற்றைச் சான்றுடன் காண்போம் .

• ஐகார ஈற்றுச் சொற்களின் முன்னர் மெய் எழுத்துகள் புணர்தல்

ஐகார ஈற்றுச் சொற்கள் சில வேற்றுமைப் புணர்ச்சியில் வரும்போது , ஈற்றில் உள்ள ஐகாரம் கெடுதலுடன் , அம் என்னும் சாரியையைப் பெற்று முடிவதும் உண்டு .

வேற்றுமை ஆயின் ஐகான் இறுமொழி

ஈற்று அழி வோடும்அம் ஏற்பவும் உளவே ( நன்னூல் , 202 )

( அழிவோடும் - கெடுதலுடன் ; அம் - ஒரு சாரியை )

சான்று :

தென்னை + தோப்பு > தென்ன் + தோப்பு >

தென்ன் + அம் + தோப்பு = தென்னந்தோப்பு

ஆவிரை + வேர் > ஆவிர் + வேர் >

ஆவிர் + அம் + வேர் = ஆவிரம் வேர்

இச்சான்றுகளில் தென்னை , ஆவிரை ஆகிய சொற்கள் , ஈற்று ஐகாரம் கெட்டு , அம் சாரியை பெற்று முடிந்தது காணலாம் .

நூற்பாவில் அழிவொடும் என்ற உம்மை கொடுத்துக் கூறியதனால் , ஈற்றில் உள்ள ஐகாரம் கெடாமலேயே அம் என்னும் சாரியையைப் பெற்று முடிவதும் உண்டு என்பது பெறப்படும் .

சான்று :

புன்னை + கானல் > புன்னை + அம் + கானல் = புன்னையங் கானல்

முல்லை + புறவம் > முல்லை + அம் + புறவம் = முல்லையம் புறவம்

( புன்னை - ஒரு மரம் ; கானல் - கடற்கரைச் சோலை ; முல்லை - ஒரு மலர் ; புறவம் - காடு )

இச்சான்றுகளில் புன்னை , முல்லை ஆகிய சொற்கள் , ஈற்று ஐகாரம் கெடாமலேயே அம் சாரியை பெற்று முடிந்தது காணலாம் .

• பனை என்னும் சொல்லுக்குப் புணர்ச்சி விதி

வேற்றுமைப் புணர்ச்சியில் பனை என்னும் பெயர் நிலைமொழியாக வரும்போது வருமொழிகளுடன் புணரும் முறை பற்றி நன்னூலார் நான்கு விதிகள் கூறுகிறார் .

1. பனை என்னும் பெயரின் முன்னர் , கொடி என்னும் பெயர் வருமாயின் , வருகின்ற மொழி முதல் ககர மெய் மிகும் .

சான்று :

பனை + கொடி = பனைக்கொடி

( பனைக்கொடி - கண்ண பிரானின் அண்ணனாகிய பலராமனுடைய கொடி )

2. பனை என்னும் பெயரின் முன்னர்க் க , ச , த , ப என்னும் வல்லின மெய்கள் வருமாயின் , நிலைமொழி ( பனை ) ஈற்று ஐகாரம் கெட்டு , அம் என்னும் சாரியை பெறும் .

சான்று :

பனை + கிழங்கு = பனங்கிழங்கு

பனை + சாறு = பனஞ்சாறு ( பதநீர் )

பனை + தோப்பு = பனந்தோப்பு

பனை + பழம் = பனம்பழம்

3. பனை என்னும் பெயரின் முன்னர்த் திரள் என்ற சொல் வருமாயின் , வருகின்ற மொழி முதல் தகர மெய் மிக்கும் , ஈற்று ஐகாரம் கெட்டு அம் சாரியை பெற்றும் வரும் .

சான்று :

பனை + திரள் = பனைத்திரள் , பனந்திரள்

4. பனை என்னும் பெயரின் முன்னர் அட்டு என்னும் பெயர் வருமாயின் , நிலைமொழி ஈற்றில் உள்ள ஐகாரம் கெட்டு , வருமொழி முதலில் உள்ள அகரம் ஆகாரமாக நீளும் .

சான்று :

பனை + அட்டு

பன் + அட்டு ( ஐகாரம் கெட்டது )

பன் + ஆட்டு ( அகரம் ஆகாரமாக நீண்டது )

= பனாட்டு

( பனாட்டு - பனைவெல்லக் கட்டி )

மேலே சொன்ன நான்கு புணர்ச்சி விதிகளையும் நன்னூலார் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார் .

பனைமுன் கொடிவரின் மிகலும் , வலிவரின்

ஐ போய் அம்மும் , திரள்வரின் உறழ்வும் ,

அட்டு உறின் ஐ கெட்டு அந் நீள்வுமாம் வேற்றுமை

( நன்னூல் , 203 )

தொகுப்புரை

இதுகாறும் உயிர் ஈறுகள் ஒவ்வொன்றிற்குமான புணர்ச்சி விதிகளாக நன்னூலார் கூறியனவற்றைத் தக்க சான்றுகளுடன் பார்த்தோம் .

அவற்றை ஈண்டுத் தொகுத்துக் காண்போம் . செய்யிய என்னும் வினையெச்சம் , அகர ஈற்றுப் பெயரெச்சம் , அகர ஈற்று வினைமுற்று , ஆறாம் வேற்றுமைப் பன்மை உருபு , அகர ஈற்றுப் பன்மைப் பெயர் ஆகியவற்றின் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் என்பதைத் தெரிந்து கொண்டோம் .

குறிப்பாக இக்காலத் தமிழில் வந்த பையன் , ஓடிய பையன் , சென்ற பையன் , நல்ல பையன் என்பன போல எவ்வளவோ அகர ஈற்றுப் பெயரெச்சங்கள் வழங்குகின்றன .

இவற்றை வல்லினம் மிகாமல் எழுத நன்னூலார் கூறும் புணர்ச்சி விதிகள் மிகவும் பயன்படக் காண்கிறோம் .

பல , சில என்னும் சொற்கள் தம்முன் தாமும் , தம்மொடு பிற சொற்களுமாகப் புணரும் திறத்தை அறிந்து கொண்டோம் .

நாழி , உரி போன்ற பழங்கால முகத்தல் அளவைப் பெயர்கள் புணர்ச்சியில் வருவதை அறிந்து கொண்டோம் .

நாழி + உரி = நாடுரி என்றாகி அச்சொல் ஒன்றரைப்படி என்னும் பொருளைத் தருவதையும் அறிந்து கொண்டோம் .

இகர , ஐகார ஈற்றுச் சொற்களின் முன்னர் வரும் வல்லினம் எழுவாய்த் தொடர் , உம்மைத்தொகை ஆகியவற்றில் இயல்பாதலை அறிந்து கொண்டோம் .

அதே வல்லினம் இருபெயரொட்டுப் பண்புத்தொகை , உவமைத்தொகை ஆகியவற்றில் மிகுதலையும் தெரிந்து கொண்டோம் .

ஒடு உருபு , அது உருபு , முற்றியலுகர ஈற்று எண்ணுப் பெயர் , வினைத்தொகை , அது , இது , உது என்னும் சுட்டுப் பெயர்கள் , எது என்னும் வினாப் பெயர் ஆகியவற்றின் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் என்பதை நன்கு அறிந்து கொண்டோம் .

பனை என்ற பெயரோடு , க , ச , த , ப என்னும் வல்லின மெய்கள் புணரும்போது , பனை என்ற சொல் ஈற்று ஐகாரம் கெட்டு அம் சாரியை பெறும் என்பதை , பனங்கிழங்கு , பனஞ்சாறு , பனந்தோப்பு , பனம்பழம் முதலிய சான்றுகளால் அறிந்து கொண்டோம் .

இச்சொற்கள் யாவும் இன்றும் பனையோடு தொடர்புடையனவாய் வழங்கி வருவதை அறிந்து கொள்கிறோம் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. ஒடு உருபின் முன்னர் வரும் வல்லினம் எவ்வாறு ஆகும் ?

விடை

2. அது உருபின் முன்னர் வரும் வல்லினம் மிகுமா ?

விடை

3. வினைத்தொகையில் வல்லினம் மிகுமா ?

இரு சான்றுகள் தருக .

விடை

4. பூப்பெயர் முன்னர் வரும் வல்லினம் பொதுவிதிப்படி எவ்வாறு ஆகும் ?

விடை

5. ஏகார இடைச்சொல்லுக்கு முன் வரும் வல்லினம் எவ்வாறு ஆகும் ?

ஒரு சான்று தருக .

விடை

6. பனை முன்னர்க் கொடி என்னும் சொல் எவ்வாறு புணரும் ?

விடை

7. ஆவிரை + வேர் = சேர்த்து எழுதுக .

விடை

8. புன்னையங்கானல் - பிரித்து எழுதுக .

விடை

9. பனந்தோப்பு - பிரித்து எழுதுக .

விடை

10. பனை + அட்டு = சேர்த்து எழுதுக .

குற்றியலுகர ஈற்றுப் புணர்ச்சி - சிறப்பு விதிகள்

பாட முன்னுரை

மொழிக்கு இறுதியில் வரும் என்று கூறப்பட்ட எழுத்துகள் இருபத்து நான்கு .

அவற்றுள் குற்றியலுகரமும் ஒன்று .

இது சொல்லின் இறுதியில் வல்லினமெய்கள் ஆறன் மேல் ஏறி வரும் .

குற்றியலுகரம் அதற்கு அயலே ( அதற்குமுன்னதாக ) உள்ள எழுத்தை அடிப்படையாகக் கொண்டு ஆறு வகைப்படும் .

புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதியில் உள்ள குற்றியலுகரம் , வருமொழியின் முதலில் உயிர் வரும்போது , தான் ஏறியிருக்கும் மெய்யை விட்டு நீங்கும் .

இவற்றைக் கடந்த பாடத்தில் பார்த்தோம் .

இப்பாடத்தில் , ஆறுவகைக் குற்றியலுகரங்கள் ஒவ்வொன்றின் முன்னரும் வருகின்ற வல்லினம் , அல்வழிப் பொருளிலும் வேற்றுமைப் பொருளிலும் இயல்பாகவும் , மிக்கும் வருவது பற்றி நன்னூலார் கூறும் இலக்கண விதிகள் தக்க சான்றுகளுடன் விளக்கிக் காட்டப்படுகின்றன .

வேற்றுமையில் வரும் நெடில் தொடர் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள் ஒற்று இடையில் மிக்கும் , மிகாமலும் வருமொழிகளோடு புணரும் திறம் பற்றி நன்னூலார் பேசுகிறார் .

மேலும் வன்தொடர்க் குற்றியலுகரங்களாக அமைந்த திசைப்பெயர்கள் பற்றிய புணர்ச்சி விதிகளையும் அவர் குறிப்பிடுகிறார் .

இவையாவும் இப்பாடத்தில் விளக்கிக் கூறப்படுகின்றன .

அல்வழியில் குற்றியலுகரத்தின் முன் வல்லினம்

வன்தொடர்க் குற்றியலுகரம் நீங்கிய , மற்ற ஐந்து தொடர்க் குற்றியலுகரங்களின் முன் வருகின்ற வல்லினம் அல்வழிப் புணர்ச்சியில் மிகாது ; இயல்பாகும் .

சான்று :

காடு + கொடிது = காடு கொடிது ( நெடில் தொடர் )

எஃகு + பெரிது = எஃகு பெரிது ( ஆய்தத் தொடர் ) வரகு + சிறிது = வரகு சிறிது ( உயிர்த்தொடர் )

வந்து + தந்தான் = வந்து தந்தான் ( மென்தொடர் )

செய்து + கொடுத்தான் = செய்து கொடுத்தான் ( இடைத் தொடர் )

இவற்றில் காடு கொடியது , எஃகு பெரிது , வரகு சிறிது என்பன எழுவாய்த் தொடர் , வந்து தந்தான் , செய்து கொடுத்தான் என்பன வினையெச்சத் தொடர் .

நூற்பாவில் வன்தொடர் அல்லன முன்மிகா என்று கூறப்பட்டிருப்பதால் , வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வருகின்ற வல்லினம் மிகும் என்பது பெறப்படும் .

சான்று :

கொக்கு + பறந்தது = கொக்குப் பறந்தது

எடுத்து + கொடுத்தான் = எடுத்துக் கொடுத்தான்

கற்று + தந்தான் = கற்றுத் தந்தான்

பார்த்து + சிரித்தாள் = பார்த்துச் சிரித்தாள்

இவற்றில் கொக்குப் பறந்தது எழுவாய்த் தொடர் .

மற்றவை வினையெச்சத் தொடர் .

அல்வழியில் மென்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வருகின்ற வல்லினம் மிகாது எனக் கூறப்பட்டது .

சான்று : வந்து தந்தான் .

இவ்விதிக்கு மாறாகச் சில மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்கு முன் வருகின்ற வல்லினம் மிகுதல் காணப்படுகிறது .

ஏழாம் வேற்றுமைக்கு இடப்பொருள் , காலப்பொருள் என்னும் இருவகைப் பொருள்கள் உண்டு .

இவற்றுள் இடப்பொருளை உணர்த்துகின்ற ‘ அங்கு , இங்கு , உங்கு , எங்கு ; ஆங்கு , ஈங்கு , ஊங்கு , யாங்கு ; ஆண்டு , ஈண்டு , யாண்டு ’ என்னும் மென்தொடர்க் குற்றியலுகர ஈற்று இடைச்சொற்களின் முன் வருகின்ற வல்லினம் மிகும் .

சான்று :

அங்கு + கண்டான் = அங்குக் கண்டான்

இங்கு + சென்றான் = இங்குச் சென்றான்

உங்கு + தந்தான் = உங்குத் தந்தான்

எங்கு + போனான் = எங்குப் போனான் ?

ஆங்கு + கண்டாள் = ஆங்குக் கண்டாள்

ஈங்கு + சென்றாள் = ஈங்குச் சென்றாள்

ஊங்கு + தந்தாள் = ஊங்குத் தந்தாள் ?

யாங்கு + போனாள் = யாங்குப் போனாள் ?

ஆண்டு + கண்டோம் = ஆண்டுக் கண்டோம்

ஈண்டு + காண்போம் = ஈண்டுக் காண்போம்

யாண்டு + போனாய் = யாண்டுப் போனாய் ?

ஆனால் , ஏழாம் வேற்றுமைக்கு உரிய மற்றொரு பொருளான காலப்பொருளை உணர்த்துகின்ற ‘ அன்று , இன்று , என்று , பண்டு , முந்து ’ என்னும் மென்தொடர்க் குற்றியலுகர ஈற்று இடைச்சொற்களின் முன் வருகின்ற வல்லினம் மிகாது .

சான்று :

அன்று + கொடுத்தேன் = அன்று கொடுத்தேன்

இன்று + கண்டேன் = இன்று கண்டேன்

என்று + காண்பேன் = என்று காண்பேன்

பண்டு + தந்தேன் = பண்டு தந்தேன்

முந்து + பெற்றேன் = முந்து பெற்றேன்

( பண்டு - முன்னர் ; முந்து = முன்னமே )

இவையாவும் சொல்லால் அல்வழியும் , பொருளால் வேற்றுமையும் ஆதலால் , சில அல்வழி விதியையும் ( அன்று , இன்று முதலியன ) , சில வேற்றுமை விதியையும் ( அங்கு , இங்கு முதலியன ) பெற்றன .

அல்வழியில் வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வருகின்ற வல்லினம் கட்டாயம் மிகும் என்று கூறப்பட்டது .

ஆனால் ஒரே ஒரு விதிவிலக்கு .

வினைத்தொகையில் மட்டும் வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வருகின்ற வல்லினம் மிகாது .

சான்று :

ஈட்டு + புகழ் = ஈட்டு புகழ் ( ஈட்டிய , ஈட்டுகின்ற , ஈட்டும் புகழ் )

வேற்றுமையில் ஒற்று இடையில் மிகுவனவும் மிகாதனவும்

ஆறுவகைக் குற்றியலுகரங்களுள் நெடில் தொடர்க் குற்றியலுகரமும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரமும் வேற்றுமைப் புணர்ச்சியில் ஒற்று இடையில் மிகுவன , ஒற்று இடையில் மிகாதன என்ற இருவகையில் வருகின்றன .

( ஒற்று - மெய் எழுத்து )

• ஒற்று இடையில் மிகுவன

சான்று :

ஆடு + கால் = ஆட்டுக்கால் ( நெடில் தொடர் )

வயிறு + பசி = வயிற்றுப்பசி ( உயிர்த் தொடர் ) ( ஆட்டுக்கால் - ஆட்டினது கால் , ஆறாம் வேற்றுமைத் தொகை ; வயிற்றுப்பசி - வயிற்றின் கண் பசி , ஏழாம் வேற்றுமைத் தொகை )