29

இவை , ஒற்று இடையில் மிக்கவை ஆகும் .

ஆடு என்ற நெடில் தொடர்க் குற்றியலுகரத்தின் இடையில் டகர ஒற்றும் , வயிறு என்னும் உயிர்த்தொடர்க் குற்றியலுகத்தின் இடையில் றகர ஒற்றும் மிகுந்தன .

இவை ஆடு கால் , வயிறு பசி என்று இடையில் ஒற்று மிகாமல் வருவது இல்லை .

• ஒற்று இடையில் மிகாதன

சான்று :

நாகு + கால் = நாகு கால் ( நெடில் தொடர் )

வரகு + சோறு = வரகு சோறு ( உயிர்த் தொடர் )

( நாகு - பசு ; நாகு கால் - நாகினது கால் , பசுவினது கால் - ஆறாம் வேற்றுமைத் தொகை ; வரகு சோறு - வரகு என்னும் தானியத்தால் ஆக்கப்பட்ட சோறு , மூன்றாம் வேற்றுமைத் தொகை )

இவை ஒற்று இடையில் மிகாதவை ஆகும் .

இவை நாக்குக் கால் , வரக்குச் சோறு என்று இடையில் ஒற்று மிகுந்து வருவது இல்லை .

வேற்றுமையில் குற்றியலுகரத்தின் முன் வல்லினம்

வேற்றுமைப் புணர்ச்சியில் இடைத்தொடர்க் குற்றியலுகரம் , ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் , ஒற்று இடையில் மிகாத நெடில்தொடர்க் குற்றியலுகரம் , ஒற்று இடையில் மிகாத உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் ஆகியவற்றின் முன் வருகின்ற வல்லினம் இயல்பாகும் .

இடைத்தொடர் , ஆய்தத் தொடர் , ஒற்று இடையில்

மிகா நெடில் , உயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை

( நன்னூல் , 182 )

சான்று :

மார்பு + கடுமை = மார்பு கடுமை ( இடைத்தொடர் )

எஃகு + பெருமை = எஃகுபெருமை ( ஆய்தத்தொடர் )

நாகு + கால் = நாகு கால் ( ஒற்று இடையில் மிகாத

நெடில் தொடர் )

வரகு + சோறு = வரகு சோறு ( ஒற்று இடையில் மிகாத

உயிர்த்தொடர் )

( மார்பு கடுமை - மார்பினது கடுமை ; எஃகு பெருமை - எஃகினது பெருமை , எஃகு - வேர் .

இவை ஆறாம் வேற்றுமைத் தொகை)

• ஒற்று இடையில் மிகும் குற்றியலுகரங்கள் முன் வல்லினம் வேற்றுமையில் மிகுதல்

ஒற்று இடையில் மிகாத நெடில் தொடர் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்களின் முன் வருகின்ற வல்லினம் வேற்றுமையில் இயல்பாகும் எனவே , ஒற்று இடையில் மிகும் அவ்விரு குற்றியலுகரங்களின் முன் வருகின்ற வல்லினம் வேற்றுமையில் மிகும் என்பது பெறப்படும் .

சான்று :

ஆடு + கால் = ஆட்டுக்கால்

வயிறு + பசி = வயிற்றுப்பசி

மேலும் , இந்நூற்பாவில் வேற்றுமையில் மிகா எனப்பட்ட குற்றியலுகரங்களில் கூறப்படாத வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன்னும் மென்தொடர்க் குற்றியலுகரத்தின் முன்னும் வருகின்ற வல்லினம் வேற்றுமையில் மிகும் .

சான்று :

பாக்கு + தின்றான் = பாக்குத் தின்றான் ( பாக்கைத் தின்றான் )

பாட்டு + பாடினாள் = பாட்டுப் பாடினாள் ( பாட்டைப் பாடினாள் )

கொக்கு + சிறகு = கொக்குச் சிறகு ( கொக்கினது சிறகு )

இச்சான்றுகளில் வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வந்த வல்லினம் வேற்றுமையில் மிகுந்ததைக் காணலாம் .

குரங்கு + குட்டி = குரங்குக் குட்டி ( குரங்கினது குட்டி )

வண்டு + கால் = வண்டுக்கால் ( வண்டினது கால் )

கூண்டு + கிளி = கூண்டுக் கிளி ( கூண்டின்கண் கிளி )

இச்சான்றுகளில் மென்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வந்த வல்லினம் வேற்றுமையில் மிகுந்ததைக் காணலாம் .

இதுகாறும் கூறியவற்றிலிருந்து , எந்த எந்தக் குற்றியலுகரங்களுக்கு முன் வரும் வல்லினம் அல்வழியிலும் , வேற்றுமையிலும் மிகும் , மிகாது என்பது பற்றி மூன்று கருத்துகள் பெறப்படுகின்றன .

அவை வருமாறு .

1. ஆய்தத் தொடர் , இடைத் தொடர் , ஒற்று இடையில் மிகாத நெடில் தொடர் , ஒற்று இடையில் மிகாத உயிர்த்தொடர் ஆகிய குற்றியலுகரங்களுக்கு முன் வருகின்ற வல்லினம் அல்வழி , வேற்றுமை என்னும் இருவகைப் புணர்ச்சியிலும் மிகா ( இயல்பாகும் )

2. ஒற்று இடையில் மிகும் நெடில்தொடர் , ஒற்று இடையில் மிகும் உயிர்த்தொடர் , வன்தொடர் ஆகிய குற்றியலுகரங்களுக்கு முன் வருகின்ற வல்லினம் அல்வழி , வேற்றுமை என்னும் இருவகைப் புணர்ச்சியலும் மிகும் .

3. மென்தொடர்க் குற்றியலுகரத்துக்கு முன் வருகின்ற வல்லினம் அல்வழியில் மிகா ; வேற்றுமையில் மிகும் .

ஒற்று இடையில் மிகும் குற்றியலுகரங்கள் முன் நாற்கணம்

டு , று என முடியும் நெடில்தொடர் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்களில் உள்ள ட , ற என்னும் வல்லின மெய்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் நாற்கணமும் ( உயிர் , வலி , மெலி , இடை ) வந்து புணரும்பொழுது பெரும்பாலும் இரட்டிக்கும் .

நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள்

ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே ( நன்னூல் , 183 )

( ஒற்று - மெய் ; ட ற ஒற்று இரட்டும் - ட் என்பது ட்ட் எனவும் , ற் என்பது ற்ற் எனவும் இரட்டிக்கும் ; வேற்றுமை மிகவே - வேற்றுமைப் புணர்ச்சியில் பெரும்பாலும் ) சான்று :

நாடு + அரசன் = நாட்டரசன்

சோறு + பானை = சோற்றுப்பானை

காடு + மனிதன் = காட்டு மனிதன்

மாடு + வால் = மாட்டு வால்

இச்சான்றுகளில் டு , று என முடியும் நெடில்தொடர் முன் வேற்றுமையில் நாற்கணமும் வர , இறுதியில் உள்ள ட , ற என்னும் மெய்கள் இரட்டித்தன .

பகடு + ஏர் = பகட்டேர்

வயிறு + பசி = வயிற்றுப்பசி

முரடு + மனிதன் = முரட்டு மனிதன்

வயிறு + வலி = வயிற்று வலி

( பகடு - எருது , காளை ; பகட்டேர் - காளை மாட்டைப் பூட்டிய ஏர் )

இச்சான்றுகளில் டு , று என முடியும் உயிர்த்தொடர் முன் வேற்றுமையில் நாற்கணமும் வர , இறுதியில் உள்ள ட , ற என்னும் மெய்கள் இரட்டித்தன .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. வன்தொடர் அல்லன என்று கூறப்படும் குற்றியலுகரங்கள் எத்தனை ?

விடை

2. அல்வழியில் எந்தக் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும் ?

விடை

3. கொக்கு + சிறகு , குரங்கு + குட்டி - இவற்றைச் சேர்த்து எழுதுக .

விடை

4. செய்து + கொடுத்தான் , எடுத்து + கொடுத்தான் - இவற்றைச் சேர்த்து எழுதுக .

விடை

5. வேற்றுமையில் ஒற்று இடையில் மிகுந்தும் , மிகாமலும் வரும் குற்றியலுகரங்கள் யாவை ?

விடை

6. வயிற்றுப்பசி , ஆட்டுக்கால் - இவற்றைப் பிரித்து எழுதுக .

விடை

7. ஒற்று இடையில் மிகும் குற்றியலுகரங்களின் முன் வேற்றுமையில் வல்லினம் மிகுமா ?

விடை

8. வேற்றுமைப் புணர்ச்சியில் நாற்கணம் வரும்போது இரட்டிக்கும் வல்லின மெய்கள் யாவை ?

விடை

9. நாடு + அரசன் - சேர்த்து எழுதுக .

மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் முன் நாற்கணம்

மென்தொடர்க் குற்றியலுகரத்தை ஈற்றிலே பெற்ற சொற்களுள் சில , வேற்றுமைப் புணர்ச்சியில் நாற்கணத்தோடு புணரும்போது , தமக்கு இனமாகிய வன்தொடர்க் குற்றியலுகரமாகத் திரியும் .

எனவே பல சொற்கள் அவ்வாறு வன்தொடர்க் குற்றியலுகரமாகத் திரியா .

மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்களாகவே இருக்கும் .

மென்தொடர் மொழியுள் சிலவேற் றுமையில்

தம் இன மென்தொடர் ஆகா மன்னே ( நன்னூல் , 184 )

இந்நூற்பாவில் வருமொழி முதல் எழுத்துச் சொல்லப்படவில்லை .

எனவே நாற்கணமும் வருமொழி முதல் எழுத்தாகக் கொள்க என்பர் நன்னூல் உரையாசிரியர்கள் .

சான்று :

குரங்கு + இனம் = குரக்கினம்

மருந்து + பை = மருத்துப் பை

சுரும்பு + நாண் = சுருப்பு நாண்

கரும்பு + வில் = கருப்பு வில்

( சுரும்பு - வண்டு ; நாண் - கயிறு ; சுருப்பு நாண் - வண்டால் ஆகிய கயிறு ; கருப்பு வில் - கரும்பால் ஆகிய வில் .

இது மன்மதனுக்கு உரியது )

இச்சான்றுகளில் வரும் குரங்கு , மருந்து , சுரும்பு , கரும்பு ஆகியன மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் .

இவை வேற்றுமைப் புணர்ச்சியில் நாற்கணம் வர , முறையே குரக்கு , மருத்து , சுருப்பு , கருப்பு என வன்தொடர்க் குற்றியலுகரமாகத் திரிந்தன .

வேற்றுமைப் புணர்ச்சியில் மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்களாக மட்டும் வருபவையே அதிகம் என மேலே பார்த்தோம் .

சான்று :

சங்கு + இனம் = சங்கினம் வண்டு + கால் = வண்டுக்கால்

சங்கு + மாலை = சங்கு மாலை

இவை வேற்றுமைப் புணர்ச்சியில் வன்தொடராகத் திரியாதவை .

ஐகாரச் சாரியை பெறும் குற்றியலுகரச் சொற்கள்

ஐகாரச் சாரியையை இறுதியில் பெற்று வருகின்ற மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்களும் உண்டு .

ஐஈற் றுடைக் குற்றுகரமும் உளவே ( நன்னூல் , 185 )

இந்நூற்பா மென்தொடர் என்று தொடங்கும் நூற்பாவை அடுத்து வருகின்றமையின் , இந்நூற்பாவில் கூறப்படும் குற்றியலுகரம் மென்தொடர் என்றும் , இந்நூற்பாவிலும் வருமொழி முதல் எழுத்துச் சொல்லப்படாமையால் நாற்கணமும் வரும் என்றும் உரையாசிரியர்கள் கூறுகின்றனர் .

சான்று :

ஒன்று + ஆள் = ஒற்றையாள்

பண்டு + காலம் = பண்டைக்காலம்

இன்று + நாள் = இன்றை நாள் , இற்றைநாள்

இரண்டு + வேடம் = இரட்டை வேடம்

‘ ஐ ஈற்றுடைக் குற்றுகரமும் உளவே ’ என்று பொதுப்படக் கூறியிருப்பதால் பிறதொடர்க் குற்றியலுகரங்களும் சில சமயம் ஐகாரச் சாரியை பெறுதல் உண்டு .

சான்று :

நேற்று + கூலி = நேற்றைக் கூலி

நேற்று + பொழுது = நேற்றைப் பொழுது

இங்கே நேற்று என்ற வன்தொடர்க் குற்றியலுகரம் ஐகாரச் சாரியை பெற்று வந்தது .

திசைப்பெயர்ப் புணர்ச்சி

வடக்கு , தெற்கு , கிழக்கு , மேற்கு ஆகிய நான்கும் திசைப்பெயர்கள் ஆகும் .

இவையாவும் வன்தொடர்க் குற்றியலுகரங்கள் ஆகும் .

மேலும் கிழக்குத் திசையைக் குறிக்க , குணக்கு என்ற சொல்லும் , மேற்குத் திசையைக் குறிக்க , குடக்கு என்ற சொல்லும் இலக்கியங்களில் வழங்குகின்றன .

குணக்கு , குடக்கு என்பனவும் வன்தொடர்க் குற்றியலுகரங்களே ஆகும் .

• திசைப்பெயரோடு திசைப்பெயரும் , பிறபெயரும் புணரும் முறை

குற்றியலுகரத்தை ஈற்றிலே கொண்டு நிலைமொழியில் இருக்கும் திசைப்பெயர்களோடு , வருமொழியில் மற்றத் திசைப்பெயர்களும் , பிற பெயர்களும் வந்து புணரும் போது , நிலைமொழியின் ஈற்றில் நிற்கும் ‘ கு ’ என்னும் உயிர்மெய்யும் , அதன் அயலில் ( இடப்புறத்தில் ) நிற்கும் , ‘ க ’ கர மெய்யும் நீங்குதலும் , ஈற்று உயிர்மெய் ( கு ) நீங்கி , அதன் அயலில் நிற்கும் றகரமெய் னகரமெய்யாகவும் , லகர மெய்யாகவும் திரிதலும் ஆகும் புணர்ச்சியைப் பெறும் என்கிறார் நன்னூலார் .

திசையொடு திசையும் பிறவும் சேரின்

நிலைஈற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும் ,

றகரம் னலவாத் திரிதலு மாம்பிற ( நன்னூல் , 186 )

( உயிர்மெய் - கு என்பதாகும் )

நிலைமொழி ஈற்று உயிர்மெய்யும் ( கு என்பதும் ) கவ்வொற்று நீங்குதல் , குணக்கு , குடக்கு , வடக்கு என்பனவற்றிற்கும் , றகரம் னகரமாகத் திரிதல் தெற்கு என்பதற்கும் , றகரம் லகரமாகத் திரிதல் மேற்கு என்பதற்கும் ஆகும் .

நூற்பாவில் ‘ பிற ’ என்றதனால் , கிழக்கு என்பதில் உள்ள ழகரத்தின் அகர உயிர் நீங்கி , முதல் நீண்டு வருதலும் கொள்ளப்படும் .

எனவே , இந்நூற்பாவில் திசைப்பெயர்ப் புணர்ச்சி பற்றி நன்னூலார் நான்கு விதிகளைக் கூறியுள்ளார் என்பது புலனாகின்றது .

அவற்றினைச் சான்றுடன் கீழே காண்போம் .

1. ஈற்று உயிர்மெய்யும் கவ்வொற்றும் நீங்குதல்

சான்று :

வடக்கு + கிழக்கு = வடகிழக்கு

வடக்கு + மேற்கு = வடமேற்கு

வடக்கு + திசை = வடதிசை

வடக்கு + வேங்கடம் = வடவேங்கடம்

வடக்கு + நாடு = வடநாடு

குடக்கு + மலை = குடமலை

குடக்கு + நாடு = குடநாடு

குணக்கு + நாடு = குணநாடு

இச்சான்றுகளில் நிலைமொழியில் உள்ள திசைப்பெயர்களின் ஈற்று உயிர்மெய்யும் , அதன் அயலே நின்ற ககரமெய்யும் நீங்கியமை காணலாம் .

2. றகர மெய் னகர மெய்யாகத் திரிதல்

சான்று :

தெற்கு + மேற்கு = தென்மேற்கு

தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு

தெற்கு + திசை = தென்றிசை ( தென்திசை )

தெற்கு + குமரி = தென்குமரி

தெற்கு + நாடு = தென்னாடு இச்சான்றுகளில் நிலைமொழியில் உள்ள தெற்கு என்ற திசைப்பெயரின் ஈற்று உயிர்மெய் நீங்கி , அதன் அயலே நின்ற றகரமெய் னகர மெய்யாகத் திரிந்தது காணலாம் .

3. றகர மெய் லகர மெய்யாகத் திரிதல்

சான்று :

மேற்கு + நாடு = மேல்நாடு

மேற்கு + திசை = மேல்திசை

இச்சான்றுகளில் நிலைமொழியில் உள்ள மேற்கு என்ற திசைப்பெயரின் ஈற்று உயிர்மெய் நீங்கி , அதன் அயலே நின்ற றகரமெய் லகர மெய்யாகத் திரிந்தது காணலாம் .

4. ழகரத்தில் உள்ள அகரஉயிர் நீங்கி முதல் எழுத்து நீளூதல்

சான்று :

கிழக்கு + நாடு = கீழ்நாடு

கிழக்கு + திசை = கீழ்த்திசை

இச்சான்றுகளில் நிலைமொழியில் உள்ள கிழக்கு என்ற திசைப்பெயரின் ஈற்று உயிர்மெய்யும் , கவ்வொற்றும் நீங்கி , அவற்றின் அயலே நின்ற ழ என்பதில் அகர உயிர் நீங்கி , ‘ கி ’ என்னும் முதல் எழுத்து ‘ கீ ’ என நீண்டது காணலாம் .

மேல் , கீழ் என வருவன ஐகாரம் பெற்று வருதலும் உண்டு .

சான்று :

மேல் + நாடு = மேலை நாடு

கீழ் + கடற்கரை = கீழைக் கடற்கரை

திசைப்பெயர்கள் பிறதிசைப் பெயர்களோடும் , பிறபெயர்களோடும் புணரும்போது , மேலே கூறப்பட்டவை போன்று எத்தகைய விகாரமும் பெறாமல் இயல்பாய் நிற்றலும் உண்டு என்பது பெறப்படும் .

சான்று :

தெற்கு + வடக்கு = தெற்கு வடக்கு

கிழக்கு + மேற்கு = கிழக்கு மேற்கு

வடக்கு + திசை = வடக்குத் திசை

மேற்கு + திசை = மேற்குத் திசை

• தெங்கு முன்னர்க் காய்

தெங்கு என்னும் நிலைமொழியின் முன் காய் என்னும் சொல் வருமொழியாக வந்தால் , தெங்கு என்னும் அந்நிலைமொழியின் முதல் நீண்டு அதன் ஈற்றில் உள்ள கு என்ற உயிர்மெய் நீங்கும் .

தெங்குநீண்டு ஈற்றுஉயிர் மெய்கெடும் காய்வரின் ( நன்னூல் , 187 )

( தெங்கு - தென்னை மரம் )

சான்று :

தெங்கு + காய்

தேங்கு + காய் ( முதல் நீளல் )

தேங் + காய் ( ஈற்று உயிர்மெய் நீங்கல் )

= தேங்காய்

தொகுப்புரை

இதுகாறும் ஆறுவகைக் குற்றியலுகரங்களின் புணர்ச்சி பற்றியும் , திசைப்பெயர்களின் புணர்ச்சி பற்றியும் நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலில் கூறியனவற்றை விரிவாகப் பார்த்தோம் .

அவற்றை ஈண்டுச் சுருக்கமாகத் தொகுத்துக் காண்போம் .

அல்வழியில் வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும் ; ஏனைய ஐந்து தொடர்க் குற்றியலுகரங்களின் முன் வரும் வல்லினம் அல்வழியில் மிகாது .

வேற்றுமைப் புணர்ச்சியில் நெடில் தொடர்க் குற்றியலுகரமும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரமும் ஒற்று இடையில் மிகுதல் , ஒற்று இடையில் மிகாதல் என்னும் இருவகையாக வரும் .

வேற்றுமையில் இடைத்தொடர் , ஆய்தத்தொடர் , ஒற்று இடையில் மிகாத நெடில்தொடர் , ஒற்று இடையில் மிகாத உயிர்த்தொடர் ஆகியவற்றின் முன் வரும் வல்லினம் இயல்பாகும் .

வேற்றுமையில் வன்தொடர் , மென்தொடர் என்னும் குற்றியலுகரங்கள் முன் வரும் வல்லினம் மிகும் .

வேற்றுமையில் நெடில்தொடர் , உயிர்த்தொடர் என்னும் குற்றியலுகரங்களில் ஈற்றில் வரும் ட , ற என்னும் மெய்கள் இரட்டிக்கும் .

மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் சிலவும் , பிற குற்றியலுகரச் சொற்கள் சிலவும் ஈற்றில் ஐகாரச் சாரியை பெற்று வருதல் உண்டு .

வடக்கு , தெற்கு , கிழக்கு , மேற்கு , குணக்கு , குடக்கு ஆகியன திசைகளைக் குறிக்கும் பெயர்கள் .

வடக்கு , குணக்கு , குடக்கு ஆகிய திசைப்பெயர்கள் புணர்ச்சியில் , ஈற்று உயிர்மெய் குவ்வும் , அதன் அயலே உள்ள கவ்வும் நீங்கி வருமொழிகளோடு புணரும் .

தெற்கு என்பதில் உள்ள றகரம் னகரமாகவும் , மேற்கு என்பதில் உள்ள றகரம் லகரமாகவும் திரியும் .

கிழக்கு என்பதில் உள்ள ழகரத்தில் உள்ள அகர உயிர் நீங்கி , முதல் எழுத்து நீண்டு வரும் .

இவற்றை எல்லாம் இப்பாடத்தில் விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்தோம் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுள் சில வேற்றுமையில் எவ்வாறு திரியும் ?

விடை

2. கருப்புவில் - பிரித்து எழுதுக .

விடை

3. மருந்து + பை = வேற்றுமைப் புணர்ச்சியில் எவ்வாறு வரும் ? விடை