பாரதிதாசன் கவிதை உலகம் - 1
பாடம் - 1
கடலலைகளும், கட்டிடங்களும்,
பெருவீதிகளும் அமைந்த புதுச்சேரி நகரம்
காட்சி (164kb)
தொட்டாலும் கைம்மணக்கும்; சொன்னாலும்
வாய்மணக்கும்; துய்ய சேற்றில் நட்டாலும்
தமிழ்ப்பயிராய் விளைந்திடுமே!
என்று கவிஞர் ஒருவருடைய கவிதையைப் பற்றிப் பழங்காலப் புலவர் ஒருவர் பாடினார். உண்மையில் புதுச்சேரியில் பிறந்த அந்தப் புரட்சிக் குயிலின் பாட்டிற்கு முற்றிலும் இது பொருந்தும். இதோ! அந்தக் குயிலின் செம்மாந்த தோற்றத்தைக் காணுங்கள்!
பாரதிதாசன்
புதுச்சேரியின் புரட்சிக் குயில்
வாரிப்படிந்த தலை! வண்டு மீசை! சுடர் எரிக்கும் கண்கள்! நிமிர்ந்த மார்பு! எவர்க்கும் அஞ்சாத பீடு (பெருமை) காட்டும் தோற்றம்! ஆம்! இந்தக் குயில்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இவர் காலம் எவ்வாறு இருந்தது? அக்காலத்தில் கவிதையின் உள்ளுறை கருத்து எவ்வாறு இருந்தது? என்பவற்றைக் காண்போமா?
வள்ளலார் காமாட்சியம்மன் கோயில் தெரு வள்ளலார்
பாரதிதாசன் படைத்த நாடகங்கள்
நம் பாட்டுக் குயில் பிறந்த புதுவையில் அன்று சைவம், வைணவம் என்ற சமயங்கள் இருந்தன. பற்பல சாதிகள் இருந்தன. அவற்றிடையே வேறுபாடுகளும் தீண்டாமையும் இருந்தன. பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகள் கல்வி உலகில் இடம் பெற்றிருந்தன.
தமிழகத்திலிருந்தும், இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் தேசபக்தர்கள் அடைக்கலமாகச் சென்று வாழ்வதற்குரிய பகுதியாக அன்று இருந்தது புதுவை. அரவிந்தர், பாரதியார், வரகனேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர், வ.ராமசாமி போன்றோர் அங்கு வந்து தங்கினர். பாரதிதாசனுக்கு இவர்களோடு நெருக்கமான தொடர்பு ஏற்படுவதற்குப் புதுவை, வாய்ப்பு நல்கியது. அந்தப் புதுச்சேரி இன்று இல்லை. அதற்குப் போகின்ற வழி வேண்டுமா
வ.ரா.
என்று புரட்சிக் கவிஞரின் மொழியிலேயே சொல்லலாம்.
ஆயி மண்டபம்
1666இல் பிரெஞ்சுக்காரர்கள் வாணிக நோக்கத்தோடு இந்தியா வந்தனர். அவர்கள் ஆங்கிலேயரோடும் ஹாலந்துக்காரர்களோடும் போட்டியிட வேண்டிய சூழலில் சென்னையை விட்டுவிட்டுப் புதுச்சேரியை அடைந்தனர். புதுச்சேரி அப்போது ஒரு சிறிய ஊராக இருந்தது. அங்குப் பிரெஞ்சுக்காரர்கள் கோட்டை கட்டினர். புதுச்சேரியை நகராக்கி 150 ஆண்டுகள் அங்கு நிலையாகப் பிரெஞ்சுக்காரர் ஆட்சி செய்தனர். பிரெஞ்சுக்காரர் ஆட்சியில் புதுவை பல மாற்றங்களைக் கண்டது. சேரிகளில் கல்வி கற்பிக்கப் பள்ளிகளை இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கண்டது புதுவை மாநிலம். தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலைச் சட்டம், பெண்களுக்கெனத் தனிப்பள்ளிக் கூடம், முதியோர் கல்விக் கூடம், இலவச மதிய உணவுத் திட்டம் ஆகிய முற்போக்குத் திட்டங்கள் புதுவையில் சென்ற நூற்றாண்டின் இறுதியிலும், இந்நூற்றாண்டுத் தொடக்கத்திலும் தொடங்கப் பெற்றன.
பெண்கள் தனிப்பள்ளிக் கூடம்
முதியோர் கல்விக் கூடம்
இலவச மதிய உணவுத் திட்டம்
பிரெஞ்சுக்காரர்கள் கட்டிய பாலம்
கலங்கரைவிளக்கம்
‘எல்லோர்க்கும் கல்வி’ என்ற கொள்கையைப் பிரெஞ்சுப் புதுவை கடைப்பிடித்தது. சாதி மதவேறுபாடு இல்லாமல் கல்வி அளிக்கும் நடைமுறையினைப் புதுவை அரசியல் மேற்கொண்டது. ஜூல்ஸ் பெரி (Jules Fery) என்ற பிரெஞ்சுக் குடியரசுத் தலைவர், மதக்குருக்களின் வலிமைமிக்க பிடியிலிருந்து கல்வியை அரசின் பொறுப்புக்கு மாற்றினார். நம் கவிஞர் பாரதிதாசன்
என்று குடியரசுத்தலைவரின் செயலை அன்று போற்றிப் பாடினார்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற பிரெஞ்சுக் கோட்பாடுகள் புதுவை அரசியலிலும் ஒளிவிட்டன.
கவிஞரின் தந்தையார் சோதிடக்கலை வல்லுநர். கவிஞரின் தமையனாரும் அக்கலையில் வல்லவராகத் திகழ்ந்தார். எனினும் கவிஞருக்கு அக்கலையில் நம்பிக்கை இல்லை. கவிஞரின் தந்தையார் செல்வராக வாழ்ந்து பின் ஏழையாக மாறியவர். கவிஞர் தம் மகன் மன்னர் மன்னனிடம் இவ்வாறு கூறுகிறார்:
“முந்திரிப் பயிரை அரைத்துப் பிசைந்து அதிலே இடை
யின்றி வாதுமைப் பருப்பு பதித்து, கொதிக்கும் பசு
நெய்யில் வடைதட்டிப் போட்டுத் தின்று கொண்டிருந்
தோம் நாங்கள். சரிவு ஏற்பட்ட பின்னர் பழைய
சோறு சாப்பிடுவதற்கே திண்டாட்டம் ஆகிவிட்டது . . .
ஒருகாலத்தில் செல்வத்துடன் விளங்கிய எந்தையார்
யாரிடமும் கையேந்த விரும்பியதில்லை. வந்துவிட்ட
துயரத்தைத் தாம் ஒருவராகவே ஏற்றுக் கொண்டார்.
இந்த வறுமை இருள் அவரைப் பொறுத்தவரையில்
இறுதிவரை விடியாமலே போய்விட்டது. விளைவுகள்? . . .
வீடு ஏலத்தில் போய்விட்டது. எங்கள் குடும்பம் சிதறிச்
சின்னா பின்னமாயிற்று. நாங்கள் நடுத்தெருவில்
நின்றோம்”
வணிகம் என்ற கப்பல் தரைதட்டி விட்ட சூழலில் கவிஞர் காலத்தில் குடும்பம் அத்தொழிலைக் கைக்கொள்ளவில்லை.
திருப்புளிசாமி ஐயா
புதுவையில் வாழ்ந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர். அவர்கள் ஆங்கிலமோ தமிழோ கற்க இயலாத நிலை அப்போது இருந்தது. இந்நிலையை அகற்ற முன்வந்தார் கலவை சுப்பராயச் செட்டியார் என்ற செல்வர். இவர் அளித்த பெருநிதியத்தால் எழுந்தது ‘கல்வே கல்லூரி’. இக்கல்லூரி ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் ஆகிய மும்மொழிகளையும் கற்பித்தது. பாரதிதாசன் இக்கல்லூரி மாணவரானார்.
கல்வே கல்லூரி
பெரியசாமிப்பிள்ளை
கல்வே கல்லூரியின் தமிழாசிரியராக இருந்தவர் சி. பங்காரு பத்தர் என்பவர். இவர் அன்று புதுவையில் வெளியான ‘கலைமகள்’ என்ற இலக்கிய இதழுக்கு ஆசிரியர். அதனோடு புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் ஆவார். பங்காரு பத்தரிடம் பாரதிதாசன் உயர்நிலைக் கல்வி பெற்றார். வகுப்பில் தம்மோடு பயின்ற நாற்பது மாணவர்களில் முதலாமவராகத் திகழ்ந்தார். அரசு தகுதிமிக்க மாணவருக்கு வழங்கும் படிப்புதவித்தொகை பெற்றார். இக்கல்லூரியில் கவிஞர் ஓரளவு பிரெஞ்சு மொழியும், பிரான்சு நாட்டு வரலாறும் பயின்றார். பதினேழாம் வயதிற்குள் இவ்வுயர் கல்வியைப் பாரதிதாசன் முடித்து வெற்றி பெற்றார். பாரதிதாசன் ஓர் ஆசிரியராக இருந்து கற்பிக்கும் தகுதி பெற்றார். இந்தத் தகுதியோடு அமையாது பாரதிதாசன் சிறந்த தமிழ்க் கல்வி பெறவேண்டுமென்று விரும்பிய அவருடைய தந்தையார் அவரைச் சாரம் மகாவித்துவான் பு.அ.பெரியசாமிப்பிள்ளை என்ற தமிழாசிரியரிடம் கல்வி பயில அனுப்பினார். இக்கல்வியே பாரதிதாசனாரைத் தமிழ் உலகில் நிலை பெற வைத்தது.
கவிஞரின் மகன் மன்னர் மன்னன்
“ஒருநாள் விசுவலிங்கம் பிள்ளை உரை நிகழ்த்தி வரும்போது”, ‘அல்லை ஈது அல்லை ஈது என நான்மறைகளும்’ என்று தொடங்கும் அவையடக்கச் செய்யுளின் ‘ஆசை என் சொல்வழி கேளாய்’ என்று கடைசி வரியைச் சொல்லி முடித்தார். அப்பாடல் வரியை மனதால் தொடர்ந்து வந்துகொண்டிருந்த இளந்தமிழாசிரியர் சுப்புரத்தினம் எழுந்து நின்று ‘கேளாய் என்பதில்லைங்க, கேளா என்பதுதான் பாடல் என்றார்.
‘நீ சின்ன பையன், உனக்கென்ன தெரியும்? சும்மா உட்காரப்பா, என ஆணவத்தோடு மீண்டும் கூறினார் பிள்ளை.
‘அப்படியில்லைங்க! நீங்கள் கூறியது பிழை! என்று அழுத்தந்திருத்தமாகப் பேசினார் சுப்புரத்தினம். . .
திருவிளையாடற் புராண நூல் ஒன்று எடுத்துவரப்பட்டது. முதுபெரும்புலவர் கூனிக் குறுகிப் போனார்.
‘மூலச்செய்யுளையே பிழையாகப் பாடும்படி என் ஆசிரியர் என்னைப் பயிற்றுவிக்கவில்லை. . . . ”
என்பதே அந்த நிகழ்ச்சி. இதிலிருந்து கவிஞர், பெரியசாமிப்பிள்ளையிடம் கற்ற கல்விப் பெருமை விளங்கும். பெரியபுராணம், தாயுமானவர் பாடல்கள், இராமலிங்க சுவாமிகளின் அருட்பா, திருக்குறள், நிகண்டுகள், சதகங்கள், அந்தாதிகள் ஆகியனவற்றில் பலப்பல பகுதிகள் அவரால் மனனம் (மனப்பாடம்) செய்யப்பட்டிருந்தன. பதினேழு வயதிற்குள் தகுதிவாய்ந்த தமிழறிஞராகக் கவிஞர் உருவானார்.
தமிழ் இலக்கணம் தமிழ் இலக்கியம்
எனக்குச் சொல்லிக் கொடுத்தவர் புதுவைத்
திருப்புளிசாமி ஐயா, செந்தமிழ்
இருப்பே என்னும் பங்காரு பத்தர்
புலவர்க்குப் புலமை ஈந்து, நிலவு
பெரும்புகழ்ப் பெரியசாமிப் பிள்ளை
என்பவர் ஆவர். இவர்களின் அருளினால்
பதினேழாண்டும் பற்றா இளையேன்
நாற்பது புலவர் தேர்வில் முதலாத்
தேர்வு பெற்றேன் . . .
என்று அவரே தாம்பெற்ற தமிழ்க்கல்வியைக் குறிப்பிடுகின்றார்.
இந்தப் பாட்டைத் திரும்பப் படித்துப் பாருங்கள்! இதுபோல நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடினார் கவிஞர். முருகன், பிள்ளையார், சிவபெருமான், திருமால், கலைமகள் ஆகிய பல தெய்வங்களைக் கவிஞர் பாடியுள்ளார். பசுவைத் தெய்வமென்று வணங்க வேண்டுமென்று பாடியுள்ளார். முப்பது வயதிற்குப் பிறகு இந்தப் போக்கு மாறியது. புரட்சிக் கவிஞராவதற்குரிய தொடக்கம் முப்பது வயதிற்குப்பின் நிகழ்ந்தது.
ஓர் ஊரில் பல ஆண்டுகள் நீடிக்கவில்லை. அரசியல்வாதிகளால் அவ்வப்போது தொல்லைக்கு உள்ளானார்; ஊர்விட்டு ஊர் மாற்றப்பட்டார். தம் பணிக்காலத்தில் அவர் பதினாறு பள்ளிக் கூடங்களைப் பார்த்து விட்டார். ஏறத்தாழ இரண்டாண்டுக் காலம் பணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். மாணவர்கள் நலம் காக்கவும், ஊர்மக்கள் நலம் பேணவும் தாம் சென்ற இடமெல்லாம் போரிட்டார். செல்வர்களாகவும் அரசியல் துறையில் வலிமை படைத்தவர்களாகவும் இருந்தோர் ஊர்மக்களை இவருக்கு எதிராக இயங்கச் செய்தார்கள். இவருக்கு எந்த உதவியும் செய்யக் கூடாதென்று கட்டுப்பாடு விதித்தனர். ஒருமுறை இவருடைய இறந்த கைக்குழந்தையை இவரே கையில் எடுத்துக் கொண்டுபோய் அடக்கம் செய்ய நேரிட்டது.
தன் இறந்த குழந்தையை அடக்கம் செய்யும் காட்சி
ஆசிரியப் பணி செய்த காலத்திலே பாரதிதாசன் பல மாற்றங்களைச் செய்தார். பெரும்பாலும் தொடக்க வகுப்புக்குப் பாடம் கற்பிப்பதிலேயே அவர் காலம் கழிந்தது. ‘அ’ என்ற எழுத்தைக் கற்பிக்க ‘அணில்’ என்ற சொல்லைத்தான் காட்ட வேண்டுமா? ‘அம்மா’ என்று அனைவரும் அறிந்த சொல்லைக் காட்டக் கூடாதோ என்று அவர் கேட்டார். ஆங்கில ஆதிக்கம் நிலவிய தமிழ்நாட்டில் பாடமாக இருந்த தமிழ்ப் புத்தகமே புதுவையிலும் பாடமாக இருந்தது. அதில் இங்கிலாந்து மன்னர் பற்றிய பாடத்தைக் கற்பிக்கக் கவிஞர் மறுத்தார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்று கொள்கைகளை உலகிற்குக் கூறும் பிரெஞ்சுக்குடியரசில் இப்படி ஒரு பாடமா என்று அவர் கேட்டார்.
பிரெஞ்சுமொழி ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியத்தைத் தமிழாசிரியர்களுக்கும் வழங்க வேண்டுமென்று கவிஞர் போராடினார். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பள்ளியிலே சேர்ந்து படிக்கப் பிறர் ஏற்படுத்தியிருந்த தடைகளை அகற்றினார். இவர் தேர்வாளராகப் பணிசெய்த காலத்தில், நூற்றுக்குப் பத்துப்பேரே தமிழில் தேர்ச்சிபெற்ற நிலைமாறி நூற்றுக்குத் தொண்ணூறு பேர் தேர்ச்சி பெற்றனர்.
அஞ்சாமை, பொதுநலம், கல்விப்பணியில் தளராத ஊக்கம், ஆகியன இந்த ஆசிரியரின் அரும் பண்புகளாகத் திகழ்ந்தன.
பாரதியாருடன் பாரதிதாசன்
அங்கு வந்திருந்த பாரதி, அதனைக் கேட்டார். சுப்புரத்தினம் பாடியமுறை சுப்பிரமணிய பாரதியைக் கவர்ந்தது. பதினெட்டாம் வயதில் பாரதியின் முன்னர் சுப்புரத்தினக் கவிஞர், அவர் வேண்டுகோளுக்கேற்ப,
என்று தொடங்கும் பாடலை எழுதிப் பாடினார். இந்தப் பாடலைப் பாரதியார் தம் கைப்படவே பெயர்த்து எழுதி “ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது” என்ற குறிப்பையும் இணைத்துச் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பி வைத்தார். பாரதியின் பழக்கம் சுப்புரத்தினத்தின் பழைய கவிதை நடையை மாற்றியது. ‘பாரதிதாசன்’ என்று புனைபெயர் வைத்துக் கொள்ளச் செய்தது.
“நான் பாரதிதாசன் என்று புனைபெயர் வைத்துக் கொண்டுள்ளேன். அதற்குக் காரணம், அப்போது அவர் என் உள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்ததுதான். சாதிக் கொள்கையை நன்றாக, உண்மையாக எதிர்த்தவர் பாரதியார்தாம்! அவருக்கு முன் பன்னூற்றாண்டுகளுக்கு முன் அவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்த வரை நான் கண்டதில்லை. பாரதி எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது. பாரதியாரை நான் ஆதரித்ததும் பாரதிதாசன் என்று நான் புனைபெயர் வைத்துக் கொண்டதும், ஏதாவது ஒரு கூட்டத்தாரிடம் நன்மையை எண்ணியன்று. சாதி ஒழிப்பு விளம்பரம் ஆதல் வேண்டும் என்பதற்காகவும் பாரதியாரைப் போல எளிய நடையில் மக்களுக்கு இன்றைக்கு வேண்டிய கருத்தை வைத்துப் பாடல் இயற்ற வேண்டும் என்பதைப் புலவர்க்கு நினைவூட்ட வேண்டும் என்பதற்காகவுமே”
என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறுவது எண்ணத்தக்கது.
என்று பாடியுள்ளார். காந்தியடிகளைப் போற்றி அக்காலத்தில் பாடல் புனைந்துள்ளார். மதுவிலக்கை வற்புறுத்தும் வகையில் ”கள்ளை அகற்றுதல் தேசக்கலை” என்று பாடியுள்ளார். காங்கிரஸ் இயக்கத்தைத் தெய்வமென்றே அவர் தம் பாட்டில் தொழுது போற்றுகின்றார்.
கதர் இயக்கத்தில் மிக அழுத்தமான பற்றுக் கொண்டவர் கவிஞர். தாம் கதர் ஆடைகளை உடுத்தியோதோடு அல்லாமல், தம் மனைவி மக்களையும் கதர் உடுத்த வைத்தார். கதர்த்துணியைத் தம் தோளில் சுமந்து விற்றார். கைராட்டினத்தில் நூல் நூற்றலை அவர் ஊக்கப்படுத்தினார்.
இராட்டினம் சுழற்றிச் சுழற்றி எதிரியின்
போக்கையும் சுழலவைக்கலாம் போலும்!
என்று அவர் பாடுகிறார். காங்கிரசில் ஏற்பட்ட பிளவு, அதன் தலைவர்களிடையே இருந்த வருணாசிரம நம்பிக்கை, சாதிப்பாகுபாடு ஆகியவற்றின் காரணமாகக் கவிஞர் தேசிய நீரோடையை விட்டு விலக வேண்டியதாயிற்று. அந்நிலையில் கவிஞர் கதரையும் கைவிட்டார்.
பாரதிதாசன் பயன்படுத்திய பொருட்கள்
மக்கள் நலம் காத்தல் கண்டு ஆளவந்தார்
எக்கேடு சூழினும் அஞ்சேன்; ஒருநாள்
சிறைக்கதவு திறக்கப்பட்டது; சென்றேன்;
அறைக்கதவு புனிதப்பட்டது மீண்டேன்.
என்று பொதுவாழ்வில் தாம் சிறை புக நேர்ந்ததனையும் அவர் கூறக் காணலாம். இப்படி உழைத்ததால்தான் இவரை இதோ நாம் மெரினா கடற்கரையில் அவர்க்கே உரிய செம்மாந்த தோற்றத்தோடு சிலை வடிவில் காண்கின்றோம்!
மெரினா கடற்கரையில் பாரதிதாசனின் சிலை
காங்கிரஸ் இயக்கத்தில் பெரும் பங்கு பெற்றிருந்த பெரியார் ஈ.வெ.இராமசாமி, சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனப் பிள்ளைகளுக்கும், பார்ப்பனர் அல்லாத பிள்ளைகளுக்கும் தனிப்பந்தி வைத்து உணவிடுவதை அறிந்தார். அதற்கு ஆதரவளித்த தேசபக்தர் வ.வே.சு. ஐயரின் செயலைப் பெரியார் கண்டித்தார். காங்கிரஸ் இயக்கத்தவர் வருணாசிரமத்தையும் சாதிப் பாகுபாட்டையும் கண்டிக்காத செயலை வெறுத்த பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார். பெரியாரின் முயற்சியில் சுயமரியாதைச் சங்கம் தோன்றியது. பெரியார் தோற்றுவித்த ‘குடி அரசு’ இதழ் சாதி மத எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, வருணாசிரம எதிர்ப்பு ஆகியவற்றைத் தீவிரமாக வெளிப்படுத்தியது. பாரதிதாசன் இந்த இதழால் கவரப்பட்டார். சுயமரியாதை வீரரானார். 1938-இல் குடி அரசு ஏட்டில் பெரியார்,
“தோழர் பாரதிதாசன் அவர்கள் தமிழ்நாட்டிற்குப் புதியவரல்ல. அவர் சென்ற பத்து ஆண்டுகளாகச் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றார். மனித சமுதாயத்தின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் சந்தோஷ வாழ்க்கைக்கும் இன்றியமையாத புரட்சியான பல சீர்திருத்தங்களை ஆதரிப்பது மட்டுமன்றி, அவைகளை ஜன சமூகத்தில் பல வழிகளிலும் பரப்ப வேண்டுமென்ற ஆசையைக் கொண்டவர். சிறப்பாகவும் சுருக்கமாகவும் கூற வேண்டுமானால், பாரதிதாசன் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி என்றுதான் கூறவேண்டும் . . . ”
என்று எழுதியுள்ளதைக் கவிஞரின் மகனார் மன்னர் மன்னன் தம் நூலில் எடுத்துக் காட்டியுள்ளார்.
நெருப்பில் துடித்திடும் மக்கட் கெல்லாம் நல்ல காப்பு – நல்கும் நீதிச் சுயமரியாதை யென்னும் குளிர் தோப்பு.
என்று சுயமரியாதைப் பெருமையைப் பாரதிதாசன் பாடுவார்.
சுயமரியாதைப் பெயர்கொள் பயிர்செழிக்கத்
தொண்டு செய்யும் இராமசாமித் தலைவா!
என்று பெரியாரைப் போற்றும் கவிஞரின் கவிதை ‘குடி அரசில்’ வெளியிடப்படுகின்றது. கடவுளர்களைப் பாடுவதைக் கவிஞர் அறவே விட்டு விட்டார். 1929ஆம் ஆண்டில் அவரிடம் இம்மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.
“சாதி வேற்றுமை சமய வேற்றுமை இவற்றை அறவே ஒழிக்க வேண்டுமானால் குடியரசின் கொள்கைகளை அஞ்சாது கொள்ளத்தான் வேண்டும்”
என்று கவிஞர் கூறினார். கவிஞருக்கு ஊரில் இதனால் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதை அவர் பொருட்படுத்தவில்லை.
கவிஞர் சுயமரியாதைக் கருத்துகளைப் பறைசாற்ற சிவப்பிரகாசம், நோயெல் என்ற நண்பர்களோடு சேர்ந்து ‘புதுவை முரசு’ என்ற இதழைத் தொடங்கினார். இவ்வேட்டில் பல புனைபெயர்களில் தலையங்கம், கவிதை, கட்டுரை, நூல் மதிப்புரை ஆகியவற்றைக் கவிஞர் எழுதினார். இவ்வேட்டில் வெளிவந்த ஒரு கட்டுரை காரணமாகக் கிறித்துவப் பாதிரிமார்கள் வழக்குத் தொடுத்தனர். இப்பத்திரிகைக்குச் சில காலம் குத்தூசி குருசாமியும் பூவாளூர் பொன்னம்பலனாரும் ஆசிரியராக இருந்ததுண்டு. அரசின் நெருக்கடிக்கு உள்ளாகி இவ்வேடு நிறுத்தப்பட்டுவிட்டது.
பாரதிதாசன் பணியாற்றிய திரைப்படங்கள் மற்றும் பாடல்களின் தொகுப்பு
தீண்டாமை
பெண்ணடிமை
இளமை மணம்
எத்தனையோ இயக்கங்கள் தோன்றி வளர்ந்தும் இவற்றை மாற்ற முடியவில்லை. எத்தனையோ முற்போக்குச் சிந்தனையாளர்கள் சமூகத்தை மாற்ற முயன்றும் முடியவில்லை. கவிஞர் சுப்புரத்தினம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆனார்.
மதுப்பழக்கம்
இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி
இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே!
என்று மனம் நைந்தார். நைந்து வருந்தி மனம் சோம்பிடவில்லை. “கொலைவாளினை எடடா” என முழங்கினார். மரத்துப்போயிருந்த தமிழர்களைக் கனல் தெறிக்கும் கவிதைகளால் துடித்தெழச் செய்தார்.
என்று மனிதனின் உள்ளத்தில் ஓர் இயக்கத்தை ஏற்படுத்தினார். மனிதர்களில் உயர்வு தாழ்வு, மேல் கீழ் கற்பித்துச் சமூகத்தில் குப்பை எண்ணங்களும் கழிவு வேலைகளும் மலிந்த காலத்தில் கவிஞர் ஒரு புலவராக உருக்கொண்டார்; மொழி நடையில் ஒரு மின்வேகம்; கருத்தில் ஒரு புத்தொளி; பார்வையில் ஒரு தொலைநோக்கு; செயலில் ஒரு புரட்சி முதலியவற்றைக் கொண்ட கவிஞரால் சமூகம் ஒரு புதிய திருப்பத்தை எய்தியது.
சோதிடம் தனை இகழ் என்றார் பாரதி. மனிதர்கள் இகழ்ந்தனரா? ஒருநாளில் இராகு காலம், யமகண்டம் என வேலை செய்யாமல் இருக்கும் நேரத்தை வளர்த்தனர். சூலம், அட்டமி, நவமி எனப் பயணத்திற்கு ஆகாத நாட்களெனக் கூறி இயங்காமல் சோம்பிக்கிடக்கச் செய்தனர். செவ்வாய், வெறுவாய் எனக் கிழமையை ஒதுக்கினர். ஆனி, பங்குனி குடிபுகக் கூடாது எனப் புறக்கணித்தனர். ‘பூனை குறுக்கே வந்தால் போகும் காரியம் பாழ்’ என்றனர். எண்ணெய் கொண்டு எதிரே வந்தால் செல்லும் செயல் கைகூடாது எனக் கணித்தனர். தும்மினால், தொடங்கிய செயல் அழிந்தது எனக் கருதினர். மனிதரில் சிலரைத் தொட்டால் தீட்டு என்றனர். சொர்க்கம், நரகம் என்ற இரண்டு உலகங்கள் உள்ளன என்றும் மனிதர் செய்யும் புண்ணிய பாவங்களுக்குத் தகுந்தாற்போல இறப்புக்குப்பின் அங்குப் போய்ச் சேர்வர் என்றும் பகர்ந்தனர். ஏழு பிறவிகள் இருப்பதாக நவின்றனர். இவ்வாறு பகுத்தறிவுக்கு ஒவ்வாத எத்தனையோ நம்பிக்கைகளை நாட்டில் விதைத்து வளர்த்தனர். இவற்றைப் பாரதிதாசன் கடுமையாக எதிர்த்தார்.
என்று குழந்தைக்குப் பாடும் தாலாட்டிலேயே புரட்சிப்பண் பொருத்தினார். மூட நம்பிக்கைகளை வாழ்நாள் முழுவதும் அவர் கடுமையாகச் சாடினார்; அம்முயற்சியில் வெற்றியும் கண்டார்.
தமிழன் என்ற இன உணர்வைப் பாரதிதாசன் வளர்த்தார். பிற பண்பாடுகளால் சீர்குலைந்து சிதையாதவாறு தமிழ்ப்பண்பாடு காக்கப்பெற வேண்டும் என அவர் முழங்கினார். தமிழர்களிடையே உள்ள வேறுபாடுகள் மறைந்து தமிழர் அனைவரும் ஒன்றுபட வேண்டுமென அவர் உரைத்தார்.
இனத்தைச் செய்தது மொழிதான்; இனத்தின்
மனத்தைச் செய்தது மொழிதான்.
என்று அவர் பாடுகின்றார். தமிழ் இனம் உலகில் புகழ்பெற்ற இனமாக வேண்டும் என்பது அவர் அவா.
தமிழ் மொழியைக் காப்பதற்காக அவர் களம் புகவும் சிறை செல்லவும் தயங்கவில்லை. வேற்றுமொழிகளின் ஆதிக்க வேரைக் கல்லி எறியும் முயற்சியில் அவர் தலைநின்றார். இதோ இந்த இசைப்பாட்டைக் கேளுங்கள்!
காட்சி
மூச்சடக்கி முத்தெடுப்போர் ஒருபுறம்; அதை மாலையாக்கி அணிந்து பகட்டுவோர் மறுபுறம். இந்த நிலை நீக்கப்பட வேண்டாமா? எல்லாரும் இந்நாட்டு மன்னர்தாமா? இதோ அதற்குத்தான் முழங்குகிறது பாருங்கள் புரட்சிக் கவிஞரின் குரல்!
பாடம் - 2
விலங்குகளுக்குக் கூட்டமே உண்டு; சமூகம், சமுதாயம் என்ற அமைப்பு அவ்வுலகில் இல்லை. சமூகம் என்பதற்குத் திரண்டது என்பது பொருள். பாலில் வெண்ணெய் திரள்வது போல மாந்தரிடையே சமூகம் உருவாகும்.
சாதி சமய அடிப்படையிலான சமூகங்கள் உயர்ந்தன அல்ல; உயர்ந்த கருத்தின் அடிப்படையில் உருவாகும் சமூகங்கள் வையத்தை உய்விக்கும். இந்தியச் சமுதாயம் சிதறிக் கிடந்தது; மாநிலங்களாய்ப் பிரிந்து கிடந்தது; மதங்களால் போரிட்டுக் குலைந்தது. அடிமை இருளில் அறியாமைச் சேற்றில் புதைந்து கிடந்தது. அதனை ஒருமைப்படுத்த ‘விடுதலை’ என்னும் குறிக்கோள் தோன்றியது. இந்தியச் சமுதாயம் தோள்தட்டி ஆர்த்தது. விடுதலை பெற்றது. உரிமை வாழ்வு மலர்ந்தது.
உரிமை பெறு முன்பு இந்தச் சமூகம் எப்படி இருந்தது தெரியுமா? உப்புக் காய்ச்சுவதற்காகப் போராட ஓடுகிறது பாருங்கள் மக்கள் திரள்! உண்ணா நோன்பிருந்து நைகிறது பாருங்கள்! இப்படிப் போராடிக் கொண்டிருந்தது ஒரு சமூகம். அதன் மற்றொரு பகுதி எப்படி இருந்தது? இதோ பாரதியார் கூறுகிறார் கேளுங்கள்!
நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்
அஞ்சி அஞ்சிச் சாவார் – இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் – இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்திலென்பார்
துஞ்சுது முகட்டி லென்பார் மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்
(பாரதியார் பாடல், பாரத ஜனங்களின் தற்கால நிலை: 1-8)
இப்படித்தான் மூடநம்பிக்கைகளில் ஆழ்ந்து கிடந்தது நாடு. இதனை அகற்றத் தோன்றியவரே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இது, “மடமைச் சேறு எழுந்திரு வெளியே வா ஒளியை நோக்கிய உன் பயணம் தொடங்கு,” என்று அறிவுறுத்திய பாவேந்தரல்லரோ அவர்?
வறுமைப் பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்தது தமிழ்ச் சமுதாயம். வறுமைக் கோட்டுக்குக் கீழே, மிகக் கீழே கோடிக்கணக்கான மக்கள் நைந்து நலிந்தனர். சிலர் மட்டும் செல்வராய், நில உடைமை கொண்டவராய், குறுநில மன்னராய்த் திகழ்ந்தனர். வறுமைச் சமூகத்தின் உழைப்பைச் சுரண்டிச் செல்வச் சமூகம் கொழுத்தது. வறியோர் எலியாக முயலாகக் கிடந்தார்கள். அஞ்சிக் கிடந்த அவர்களைப் புலிவேடம் போட்டு மேலும் அச்சுறுத்தினார் முதலாளிமார்கள்.
நாலுபேர் கைகளில் கருவி ஏந்திப் பாறைகளைப் புரட்டுகின்ற காட்சி
அதோ நாலுபேர் வெயிலில் வேர்வை அருவிகள் பெருகக் கைகளில் கருவி ஏந்திப் பாறைகளைப் புரட்டுகின்றனர் பாருங்கள். அவர்களின் குழிந்த வயிறு, ஒட்டிய கன்னங்கள், உலர்ந்த விழிகளைப் பாருங்கள். ஆனால் அங்கே குடைபிடித்துக் கொண்டு ஒருவர் கொழுத்த உடலோடு நிற்பதைக் காணுங்கள்! இந்தக் காட்சியைக் காணும் கவிஞனின் உள்ளம் கொதிக்கின்றது. இந்தச் சமுதாயம் மாற்றப்பட வேண்டுமெனக் கருதுகின்றார்.
கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர்
கொள்ளையடிப்பதும் நீதியோ? – புவி
வாழ்வதுதான் எந்தத் தேதியோ?
(சாய்ந்த தராசு: 5-7, முதல் தொகுதி)
• சமத்துவம் சாத்தியம்
உலகம் இப்படியே இருந்துவிடாது என்றும் அவர் கருதுகின்றார். ஏழை கோழையாக இருக்கும் வரைதான் இந்த நிலை இருக்கும். அவன் தாழ்ந்து குனிந்து பணிந்து வாழும் நிலையிலிருந்து நிமிரும் நிலை வரும். அப்படி நிமிர்ந்தால் ஒரே நொடியில் உலகம் மாறிவிடாதா எனக் கேட்கின்றார். கையிலே திருவோடுதான் உண்டு என்று கூறும் ஓடப்பர் ஒருபுறம்; செல்வநிலையின் உச்சியிலே இருக்கும் உயரப்பர் மற்றொருபுறம். ஏழையப்பராக இருக்கும் ஓடப்பரும், உயரப்பரும் ஒன்றாக முடியுமா? முடியும் என்கிறார் கவிஞர்.
ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!
(உலகப்பன் பாட்டு: 37-40, முதல் தொகுதி)
அடி, உதை என்றாலே அஞ்சுவோர் கீழோர் அல்லவா? அந்த நிலையிலேதான் இவர்கள் சுரண்டிச் சுருட்டி வைத்திருக்கும் செல்வத்தைப் பிறரோடு பகிர்ந்து கொள்வார்கள். இயந்திரத்தில் இட்டுப் பிழிந்தால்தானே கரும்பு சாறுதரும்? உலகம் வழங்கும் உடைமை எல்லாம் பொது எனும் மனநிலை வரவேண்டுமென்று பாரதிதாசன் கருதுகின்றார். பொருளாதார நிலையில் ஒரு சமத்துவம் நிலவும் சமுதாயத்தையே அவர் காண விரும்பினார்.
• வறுமையின் காரணம்
நெருப்பில் கூடக் கண்மூடித் தூங்கலாம்; வறுமை வசப்பட்டவன் தூங்க முடியாது என்றார் திருவள்ளுவர். கல்லுக்குள் வாழும் தேரைக்குக் கூட உணவு கிடைத்துவிடுகிறது; அருகம்புல்லுக்குக் கூட இயற்கை ஓர் ஆடையைச் சுற்றியிருக்கிறது. ஆனால் ஏழை மாந்தர்தம் நிலை என்ன?
கந்தை அணிந்தோம் – இரு
கையே விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்
மொந்தையிற் கூழைப் – பலர்
மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்
(தொழிலாளர் விண்ணப்பம்: 33-36, முதல் தொகுதி)
என்று கூறும் அளவிற்கு அவர்கள் நிலை தாழ்ந்து போய்விட்டது. ஒரு மொந்தைக் கூழைப் பலர் மொய்த்துக் குடித்தார்களாம். ஈக்கள் எறும்புகள் போல் எண்ணிக்கையில் பெருகிக் கிடப்பதனால் மொய்த்துக் குடித்ததாகச் சொல்கிறார். இந்த நிலைக்குக் காரணம் யாது? தலைவிதியா? அப்படிச் சொல்லித்தான் கடந்த காலத்தில் ஏமாற்றினார்கள். பாரதிதாசன் காணும் புதிய சமுதாயத்தில், பொதுவுடைமை மணம் பரப்பும் சமுதாயத்தில் அது நடவாது.
பாரதிதாசன் பகுத்தறிவு வாய்ந்த சமூகம் காண விரும்பினார். முன்னோர்கள் சொன்னதை ஆராயாமல், வேதவிதி என்றும், உலக வழக்கம் என்றும், சாத்திரங்கள் சொல்லியிருக்கின்றன என்றும் கூறியவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அறிவால் எதனையும் ஆராயும் நிலை வேண்டுமென்றார். கடவுள் பெயர் கூறியும் மதங்களின் பெயர் கூறியும் ஏமாற்றும் வழக்கங்களைச் சாடி அறிவுமிக்க ஒரு சமுதாயம் தோன்றுவதற்கு அவர் குரல் கொடுத்தார்.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்
குறள் 1062
என்று திருவள்ளுவரும் கூறினார். பிச்சை எடுத்து வாழவேண்டியது சிலர்க்கு இவ்வுலகில் தலைவிதி என்றால் அப்படி விதித்தவன் அழிந்து தொலையட்டுமே என்று ஆற்ற முடியாத அளவு திருவள்ளுவர் கொதிக்கவில்லையா? அவரைப் போலவே பாரதிதாசனும் கொதித்துப் பேசுகிறார். உலகம் தொழிலாளரால் உருவானது என்று மனித அறிவு கற்பிக்க வேண்டும். காட்டை நாடாக்கினோமே! கழனி திருத்தி உழவு செய்தோமே! நாடுகளைப் படைத்தோமே! அங்கு நான்கு திசைகளிலும் வீதிகள் வகுத்தோமே! வீடுகள் கட்டினோமே! மலையைப் பிளந்தோமே! கடலைத் தூர்த்தோமே! கப்பல்கள் செலுத்தினோமே! தொழிலாளராகிய நாங்கள் படைத்ததல்லவா இந்த உலகம் என்று கேட்கின்றனராம் புரட்சிக்கவிஞர் கண்ட தொழிலாளர்கள்.
எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான
இடம்நோக்கி நடக்கின்றது இந்த வையம்
(பாண்டியன் பரிசு 56:4)
என்று அவர் பாடுகின்றார். எல்லார்க்கும் எல்லாம் என்று கருதுகின்ற உள்ளமே தாயுள்ளம் என்கிறார் அவர், வேறு ஒர் இடத்தில்:
தூயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும்
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்!
(உலக ஒற்றுமை: 13-15, முதல் தொகுதி)
என்று மக்களெல்லாம் ஒன்றாய்க் காணும் பேருள்ளத்தின் பண்பு கூறுகின்றார். உள்ளத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிடின் அந்நாட்டில் ஏற்றத் தாழ்வுகளும் போட்டி, பொறாமை, பகை எனும் உணர்வுகளும் தோன்றமாட்டா. ஆனால் அப்படிப்பட்ட உலகை அடைவதுதான் எளிதா? கவிஞர்களின் இலட்சியக் கனவாக அன்றோ விளங்குகின்றது அவ்வுலகு!
இராமலிங்க வள்ளலார், ஒத்தார், உயர்ந்தார், தாழ்ந்தார் ஆகிய மூவரும் ஒன்றாய்க் கூடி உலகியல் நடத்த வேண்டும் என்று கூறுகின்றார். பலரும் கூறியிருப்பினும் பாரதிதாசனே பணக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் குரலில் பொது உடைமையை ஒத்துக் கொள்ளுமாறு பாடியவர் ஆவார்.
இப்பொழுதே நீர் – பொது
இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை
ஒப்படைப்பீரே – எங்கள்
உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே
(தொழிலாளர் விண்ணப்பம்: 53-56, முதல் தொகுதி)
என்று தொழிலாளர் சினங்கொண்டு கூறுவதாகப் பாடிய முதல் கவிஞர் அவரே.
வலியோர் சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?
உலகாள உனதுதாய் மிக
உயிர்வாதை அடைகிறாள்
உதவாதுஇனி ஒருதாமதம்
உடனேவிழி தமிழா!
(வாளினை எடடா! 1-8, முதல் தொகுதி)
பாட்டின் நடையில் ஒரு வீறு, வீரக்கொப்பளிப்புத் தெரிகிறது பாருங்கள். பன்னெடுங்காலமாக உலகச்சமத்துவத்தை வேண்டுகோள் முறையிலும், அறிவுறுத்தல் முறையிலுமே சான்றோர்கள் உரைத்து வந்த நிலையைக் கவிஞர் மாற்றினார். இதில் என்ன கெஞ்சுவது? இனி எவர் மிஞ்சுவது? என அடங்காச் சினம் கொண்டெழுந்த போர்க்குரலாக அவர் பொதுவுடைமைப்பாடு எண்ணம் பலருடைய குருதி நாளங்களிற் புகுந்து புரட்சி வேகத்தை உண்டாக்கிவிட்டது.
பொய்மை வருணபேதம்
போனால் புனிதத்தன்மை
நம்மில்நாம் காண்போமடி – சகியே
நம்மில் நாம்காண்போமடி!
(சமத்துவப்பாட்டு: 365-368. மூன்றாம் தொகுதி)
என்று கூறுவதைக் கேளுங்கள். பாரதிதாசன் காண விரும்பிய சமுதாயத்தில், சாதி, மதம், தீண்டாமை, பிறப்பில் உயர்வு தாழ்வு ஆகியவற்றுக்கு இடமே இல்லை.
சேசு முகம்மது என்றும் – மற்றும்
சிவனென்றும் அரியென்றும் சித்தார்த்தனென்றும்
பேசி வளர்க்கின்ற போரில் – உன்
பெயரையும் கூட்டுவர் நீஒப்ப வேண்டாம்.
(வாழ்வில் உயர்வுகொள்: 11-14, முதல் தொகுதி)
என்று அறிவுரை கூறுகின்றார். மனிதனின் வறுமையை அகற்ற இந்தப் போர்கள் பயன்பட மாட்டா; அறிவை வளர்க்கவும் இவை உதவமாட்டா என்பது அவர் கருத்து. சமயத்துறைகளிலே இருந்த பலர் இக்கருத்தைக் கூறி இருந்தாலும், மத உலகிலிருந்து மனிதனை விடுவிக்கும் ஓர் அறிவுப் போரைப் பாரதிதாசனே தொடங்கி வைத்தவர் எனலாம். பொருளாதார அடித்தட்டிலே இருக்கும் மனிதனை அவன் உயர்வுக்காகப் போராடாமல் தடுத்தது மதம்; வறுமைப் பள்ளத்திலே இருக்கும் பலரை வழிபாடு, அருச்சனை, விழா, வேள்வி, தலப்பயணம், கழுவாய் தேடல் போன்ற முயற்சிகளுக்காகச் செலவழிக்கத் தூண்டியது. மீள முடியாத துன்பச் சுமை தமக்குப் பழைய பிறவிகளில் செய்த கருமங்களின் விளைவாக வந்தது என்று மதம் கற்பித்தது. கடவுள்தான் இதற்கு அருள்செய்ய வேண்டுமென்று மதவாத நூல்கள் கூறின. இந்நிலையிலேதான் பாரதிதாசன் கடவுள் மறுப்புக் கொள்கையை நோக்கிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. மதம் மனிதகுலத்தின் அமைதியைக் கெடுத்துவிடும் என்ற நிலையில் உலகை நோக்கிக் கவிஞர் இரு விளக்கங்களைக் கேட்கிறார்.
சாந்தியால் உலகம் தழைப்பது நன்றா?
சமயபேதம் வளர்த்தே தளர்வது நன்றா?
(ஆய்ந்துபார்: 1-2, முதல்தொகுதி)
எது நன்று? அமைதியால் உலகம் தழைப்பது நன்று என்றுதானே உலகம் கூறும்.
மதம்என்ற கருங்கற் பாங்கில்
மல்லிகை பூப்ப தில்லை
மதியினில் மயக்கம் என்ற
நஞ்சொன்றே மலரும்! நாட்டில்
புதியதோர் பொல்லாங்கு என்னும்
எரிமலை புகையும்; மக்கள்
இதுநலம் இதுதீது என்னும்
எண்ணமும் இழந்து போவார்.
(குறிஞ்சித்திட்டு 20: 193-200)
இந்தப் பாட்டை எண்ணுங்கள். கவிஞர் என்ன கூறுகிறார் தெரிகிறதா? மதம் ஒரு கருங்கல்லாம். கருங்கல் பாறையில் மல்லிகை பூக்குமா என்று கேட்கிறார். சிந்தனைகள் பூக்காமல் மடமை என்ற முட்கள் தோன்றச் செய்துவிடும் மதங்கள் மனித குல நலனுக்கு ஏற்றவை அல்ல என்பது அவர் கருத்து.
நாய்களைப் போல்தமக் குள்ளே-சண்டை
நாளும் வளர்க்கும் மதங்கள்
(வாழ்வு: 19-20. இரண்டாம் தொகுதி)
என்றும் அவர் எடுத்துரைப்பதைப் பாருங்கள்! மதத்தை வளர்ப்போர் மனிதர்களின் சிந்தனையை முடக்கி விட்டதை அவர் எடுத்துக் காட்டினார். “கட்டிச் சமூகத்தின் கண் அவித்து” விட்டதாக மதங்களின் மீது அவர் குற்றம் சாட்டினார். மதங்களின் சார்பாகத் தோன்றிய புராணங்களில் சொல்லப்பட்ட அறிவுக்கொவ்வாத நிகழ்ச்சிகளை அவர் இகழ்ந்துரைத்தார்.
எந்த அமைப்பும் மக்களின் நலம் காப்பதாக அமைய வேண்டும் என்று பாரதிதாசன் கருதினார். சமுதாய நலம் படைப்பதற்கு மன்னராட்சி இடையூறாக இருப்பின் மக்கள் கிளர்ச்சி செய்து அதனை மாற்ற வேண்டும் என்று கவிஞர் கருதினார். பாரதிதாசன் பாடல்கள் பலவற்றில் மன்னராட்சிக்கு எதிரான கிளர்ச்சி சித்தரிக்கப் பெறுவதைக் காணலாம்.
இந்நிலத்துப் பெருமக்கள் ஓர் கடல்
இடர்செய் மன்னவர் அக்கடற் குமிழிகள்
(கடல்மேற்குமிழிகள்: 17,19-20, மூன்றாம் தொகுதி)
என்று கூறி மக்கள் எல்லாரும் ஒன்றாய்த் திரண்டுக் குடியரசை நாட்டுதல் நன்று என அறிவுறுத்துவதைக் ‘கடல்மேற் குமிழிகள்’ என்ற அவர் படைப்புக் காட்டுகின்றது.
‘புரட்சிக்கவி’ என்ற சிறுகாப்பியத்தில் உதாரன் என்ற கவிஞன் கொலைக்களத்தில் நிற்கின்றான். அவன் தலையை வெட்டுவதற்குக் கொலையாளிகள் காத்திருக்கின்றனர். அப்போது உதாரன் மக்களை நோக்கிப் பேசுகின்றான். ‘என் நாடு உரிமை பெற்று வாழவேண்டும்; கொடுங்கோன்மை வீழ வேண்டும்’ என்று முழங்குகின்றான். மக்கள் சக்தி இந்த உரைகேட்டுத் திரள்கின்றது. கொலையாளிகளிடமிருந்து உதாரனை மீட்கின்றது.
• மதத்தலைவர்களுக்கு ஓர் அறைகூவல்
மன்னராட்சி பெரும்பாலும் மக்கள் நலம் காப்பதில்லை. மன்னர்கள் மதவாதிகளால் வழிநடத்தப் பெறுகின்றனர். மதவாதிகள் நாட்டுமக்கள் ஒன்றுகூடாமல் இருப்பதற்காக விதி, தலையெழுத்து, ஆண்டவன் கட்டளை ஆகியவற்றை உருவாக்கி விட்டனர். பாரதிதாசன் இவற்றை எல்லாம் எதிர்ப்பதில் தீவிரம் காட்டினார்.
மதத்தின் தலைவீர்! – இந்த
மண்ணை வளைத்துள்ள அண்ணாத்தைமாரே!
குதர்க்கம் விளைத்தே – பெரும்
கொள்ளை அடித்த கோடீசுவரர்காள்!
வதக்கிப் பிழிந்தே – சொத்தை
வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே!
(தொழிலாளர் விண்ணப்பம்: 41-46, முதல் தொகுதி)
என்று மதத்தலைவர்களுக்கு மக்கள் அறைகூவல் விடவேண்டும் என்று கூறுகின்றார்.
தன்னேரிலாப் புத்தர் நெறியை வீழ்த்தித்
தம்சமயம் மேலோங்கச் செய்யும் சூழ்ச்சி
நன்றாமோ? உலகுக்குக் கொல்லா நோன்பை
நடுவாய்ந்து முதற்புகன்றோர் புத்தர் தாமே!
(புத்தர் புகன்றார் இல்லை: 29-32, நான்காம் தொகுதி)
என்று புத்தர் அருள் உணர்வின் அடிப்படையில் உயிர்களைக் கொல்லாதீர், புலால் உணவு தவிர்ப்பீர் என்று கூறியதைப் பாரதிதாசன் காட்டுகின்றார். பாரதிதாசன் புலால் உண்பவரே ஆயினும் அவர் உள்ளம் கொல்லாமையில் பிடிப்புக் கொண்டிருந்தது. குடும்பவிளக்கு நூலில் அவர் பல்வேறு சமையல் பக்குவங்களை எடுத்துரைக்கின்றார். அவற்றில் ஒன்றுகூடப் புலால் வகை சார்ந்தது இல்லை. பாரதிதாசன் இராமலிங்க வள்ளலாரையும், ராமானுசரையும் ஏற்றுக் கொண்டவர். குமரகுருபரரையும் அவர் பாடிய மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழையும் பாரதிதாசன் ‘எதிர்பாராத முத்தம்’ என்ற நூலில் பாராட்டுகின்றார். இச்சான்றோர்கள் கற்பித்த நெறியை எல்லோரும் அறிந்து பின்பற்ற வேண்டுமென்று பாரதிதாசன் விரும்பினார்.
சாதி மதம் தமிழ் இல்லை – அந்தச்
சாதி மதத்தைத் தமிழ்கொள்வ தில்லை.
பன்மணித்திரள் (பக்: 67)
என்பது பாரதிதாசன் கூற்று. தமிழ்நாட்டில் சாதி வேரூன்றி வளர்ந்து விட்டது. பெயருக்குப் பின்னால் சாதியைக் குறித்து வழங்குவதை மதிப்பாகச் சமூகம் கருதியது. தெருக்களின் பெயர்களில் கூடச் சாதிப்பெயர்கள் ஆட்சி கொண்டிருந்தன. மேல்சாதி கீழ்ச்சாதி என்ற பாகுபாடு பலருடைய உள்ளத்திலும் உணர்விலும் இருந்தது.
தீண்டாமை என்ற கொடிய வழக்கம் தமிழகத்தின் முன்னேற்றத்தை வெறும் கனவாக்கிக் கொண்டிருந்தது. சாதி நம் பண்பாட்டுக்கு முரண் என்று கூறிய பாரதிதாசன் சாதி இருக்கின்றது என்று கூறுவோன் இன்னும் உயிர் வாழ்கின்றானே என்று துடிக்கின்றார்.
இருட்டறையில் உள்ளதடா உலகம்! சாதி
இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே!
(பாண்டியன் பரிசு, 56: 17-18)
என்று அவர் பாடுகின்றார். சாதிகளை ஒழிப்பதற்குக் கவிஞர் கொடுத்த குரல் தமிழ் நாடெங்கும் பரவியது. அவர் அச்சமின்றிச் சாதிகளைச் சாடினார்; வாழ்நாள் முழுதும் சாதி ஒழிப்புப் போர் நிகழ்த்தினார்.
ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற முடியும். ஆனால் ஒரு வருணத்தவர் மற்றொரு வருணத்தவராக மாற முடியாது. இராமானுஜர், சுப்பிரமணிய பாரதியார் ஆகியோர் தாழ்ந்த வருணத்தவரை உயர்ந்த வருணத்தவராக மாற்ற முயன்றனர். பாரதிதாசனும் வருணக் கொடுமையை எதிர்க்கப் புயலாகப் புறப்பட்டார். வருணங்கள் உண்டாக்கப்படுவதற்கு முன்பு உலகம் ஒழுங்காய் இருந்தது; பல முன்னேற்றங்களைத் தொழிலாளர் உழைப்பால் உலகம் கண்டது. வருணங்கள் உண்டாக்கப்பட்ட பின்பு மனிதரிடையே வேற்றுமைகள் வளர்ந்தன.
இக்கால நால்வருணம் அன்றி ருந்தால்
இருட்டுக்கு முன்னேற்றம் ஆவ தன்றிப்
புக்கபயன் உண்டாமோ?
(புரட்சிக்கவி: 426-428, முதல் தொகுதி)
என்று கேட்கிறார். ஒவ்வொரு வருணத்தவருக்கும் ஒரு நீதி உரைக்கப்பட்டது. சட்டை அணிந்து கொள்வதும், செருப்பணிந்து கொள்வதும் கூட குறிப்பிட்ட வருணத்தவர்க்கு ஒவ்வாத செயல்களாக உரைக்கப்பட்டன. கீழ்வருணத்தவரைச் ‘சூத்திரர்’ என்று இகழ்ந்தனர். இந்திய ஒருமைப்பாட்டை வருணப் பாகுபாடு குலைத்துவிடுமென்று பாரதிதாசன் எச்சரித்தார். அவருடைய நெருப்புக் கவிதைகளால் வருணப்பாகுபாடு சுட்டுப் பொசுக்கப்பட்டது.
சதுர்வர்ணம் சொன்னபோது
தடிதூக்கும் தமிழ்மக்கள்
அதில் ஐந்தாம் நிறமாயினர் – சகியே
அதில் ஐந்தாம் நிறமாயினர்.
(சமத்துவப்பாட்டு: 381-384, மூன்றாம் தொகுதி)
என்று அதனை ஒழிக்க முயன்றவர்களைப் ‘பஞ்சமர்’ என்று ஒதுக்கிவைத்தது மேல்குலம். வரலாற்றில் தீண்டாமை நீண்ட காலமாக இடம் பெற்றுப் பல கொடுமைகளை இழைத்து விட்டது. நந்தனாரையும் திருப்பாணாழ்வாரையும் அது கோயிலுக்குள் புகவிடாமல் தடுத்தது. எலிகளும், பெருச்சாளிகளும் ஓடி உலவும் கோயிலுக்குள் உயிரும் உணர்வும் உள்ள மனிதர்கள் புகுதல் தடுக்கப் பெற்றது.
தீண்டாமை என்னுமொரு பேய் – இந்தத்
தேசத்தினில் மாத்திரமே திரியக் கண்டோம
(ஞாயமற்ற மறியல்: 17-18, மூன்றாம் தொகுதி)
என்று கவிஞர் கூறினார். கவிஞரின் எரிமலைக் கவிதைகள் தீண்டாமை நீங்கப் பெரும் புரட்சி செய்தன. தீண்டாமை சட்டப்படிக் குற்றமாக்கப்பட்டது. இன்று நாகரிக மனிதர்கள் தீண்டாமையை ஏற்கவில்லை.
வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
தூண்டா விளக்காய் துலங்கும் பெருமாட்டி
(பெண்குழந்தை தாலாட்டு: 17-18, முதல் தொகுதி)
என்று பெண்குழந்தையைத் தாலாட்டுகின்றார். சாதி எங்கே பெரிய தடையை விதித்தது தெரியுமா? ஆணும் பெண்ணும் காதலிப்பார்கள்; உயிர் ஒன்றிய நிலையில் அவர்களிடையே அன்பு பெருகும்; காதல் செழிக்கும்; அப்போது அந்தக் காதல் என்ற பச்சை மரத்தை வெட்டச் சாதிக் கோடரி நீளும்.
காதல் இருவர்களும் – தம்
கருத்தொருமித்தபின்
வாதுகள் வம்புகள் ஏன்? – இதில்
மற்றவர்க் கென்ன உண்டு?
சூதுநிறை உளமே – ஏ
துட்ட இருட்டறையே! நீ
திகொள்’ என்றுலகை – அவள்
நிந்தனை செய்திடுவாள்.
(காதற் பெருமை: 65-72. முதல் தொகுதி)
என்று ஒரு காதலி புலம்புவதைக் கவிஞர் ஓவியம் செய்கின்றார். சாதிப் பாகுபாட்டால் எத்தனைக் காதலர்கள் நஞ்சருந்தினர்? ஆற்றிற் பாய்ந்தனர்? கடலில் மூழ்கினர்? தீயிற் குளித்தனர்? இன்னும் இப்படிப்பட்ட செய்திகளுக்குச் செய்தித் தாள்களில் இடமில்லாமல் போகவில்லை. கவிஞர் சாதி ஒழியக் கலப்புமணம் நல்ல தீர்வு என்று கருதினார். அவர் எழுதிய ‘பாண்டியன் பரிசு’ என்னும் காவியத்தில் இளவரசி அன்னம் என்பவள் தன் திருமணத்தைக் குறித்துக் கூறுகையில் ‘இவ்வுலகில் எல்லோரும் நிகரே’ என்கிறாள். திருமணத்திற்குச் சாதி பார்க்கக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்துகிறாள். சாதியற்ற சமூகம் கவிஞரின் கனவு. அக்கனவு மெல்ல மெல்ல உருவாகி வருகின்றது.
தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச்சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்!
(பெரியார்!: 16-19)
‘பகுத்தறிவுப் பகலவன்’ என்று மக்களால் போற்றப் பெற்ற பெரியார் குழந்தை மணம், கட்டாய மணம், வைதிகச் சடங்குகள், சோதிடம் ஆகியவற்றைச் சாடினார். பாரதிதாசன் இந்த மூடப்பழக்கங்களைக் கவிதை மூலம் தாக்கிப் பலரை விழிப்புறச் செய்தார்.
இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில்
முப்பத்து முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன?
செப்பும் இயற்கை வளங்கள் செறிந்தென்ன?
மூடப்பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம்
ஓடுவதென்றோ? உயர்வது என்றோ?
(சஞ்சீவி பர்வதத்தின் சாரல்: 397-401, முதல்தொகுதி)
பெற்ற இளந்தலைக் கைம்பெண்ணடீ ! – என்ன
பேதைமை என்றனள், மங்கையின் தாய்.
சிற்சில ஆண்டுகள் முற்படவே – ஒரு
சின்னக் குழந்தையை நீ மணந்தாய்;
குற்றம் புரிந்தனை இவ்விடத்தே – அலங்
கோலமென்றாள் அந்தச் சுந்தரன் தாய்
புற்றரவு ஒத்தது தாயர் உள்ளம் – அங்குப்
புன்னகை கொண்டது மூடத்தனம்.
(காதற்குற்றவாளிகள்: 41-48. முதல் தொகுதி)
இவ்வாறு உள்ளத்தில் படியுமாறு சொல்லிச் சொல்லி இன்று இந்த வழக்கம் பெரும்பாலும் ஒழிந்துவிட்டது.
மண்ணாய்ப் போக! மண்ணாய்ப் போக!
மனம் பொருந்தா மணம் மண்ணாய்ப் போக!
சமூகச் சட்டமே! சமூக வழக்கமே!
நீங்கள், மக்கள் அனைவரும்
ஏங்கா திருக்க மண்ணாய்ப் போகவே!
(மூடத்திருமணம்: 46-51. முதல்தொகுதி)
என்று துயரம் தாங்காது புலம்புகிறாள். பொருந்தா மணம் என்பது செல்வர்கள் தம் பணவலிமையில் சமூகத்தில் இழைக்கும் கொடுமையாக இருந்தது. இவ்வழக்கம் பெரும்பாலும் இன்று ஒழிந்தது.
கூறப்பட்டது. மனிதனின் ஜாதகத்தில் செவ்வாய்க்கோள் இருக்குமிடம் கொண்டு இந்தச் ‘செவ்வாய்தோஷம்’ என்பது முடிவு செய்யப்பட்டது. ஒருநாளில் ஆகாத நேரம் என்று இராகுகாலம் ஒன்றரை மணி நேரமும் எமகண்டம் ஒன்றரைமணியும் ஒதுக்கப்பட்டன. வாரசூலை, அட்டமி, நவமி, பரணி, கார்த்திகை என்று பயணத்திற்கு ஒவ்வாத நாட்களின் பட்டியல் போடப்பட்டது. இப்படிப்பட்ட நம்பிக்கைகள் கொண்ட குடும்பம் முன்னேறுமா? பாரதிதாசன் ‘இருண்டவீடு’ என்னும் நூலில் இத்தகைய மூடநம்பிக்கைகளால் கெட்டழிந்த குடும்பத்தைக் காட்டுகின்றார். ‘நல்லமுத்துக் கதை’யின் வழியாகச் சோதிடம் கூறுவானின் பொய்ம்மை வெளிப்படுத்தப்படுகின்றது.
ஆடியில் திருமணம் கூடுதல் உறுதி
(நல்லமுத்துக்கதை: 53, மூன்றாம் தொகுதி)
என்கிறார் சோதிடர். ஆடி மாதத்தில் எப்படிக் கூடும் என்று மற்றவர் கேட்கிறார். ஏனெனில் சாத்திர வழக்கப்படி ஆடி மாதத்தில் திருமணம் நடத்துதல் இல்லை. உடனே சோதிடம் கூறுபவர் விழித்துக் கொள்கிறார்.
ஆடி கடைசியில் ஆகும் என்றால்
ஆவணி முதலில் என்றுதான் அர்த்தம்
(நல்லமுத்துக்கதை: 55-56, மூன்றாம் தொகுதி)
என்கிறார். இப்படி ஏமாற்று வேலை நிகழ்கிறது. இச்சோதிடம் இகழத் தக்கது என்று உணர்த்துகிறார் பாவேந்தர்.
பாரதிதாசன் மீன்களை எப்படிப் பார்க்கிறார் தெரியுமா? அவை வானத்தில் ஏற்பட்ட கொப்புளங்கள் என்கிறார். ஏன் கொப்பளித்தது? தொழிலாளர் பகல் பொழுது முழுதும் உழைத்து அந்தியிலே தங்கள் உரிமையைக் கேட்ட போது முதலாளிகள் சீறினார்கள்; வசை பொழிந்தார்கள்; இதனைக்கண்டு வானம் கொப்பளித்து விட்டது என்கிறார்.
மண்மீதில் உழைப்பா ரெல்லாம்
வறியராம்; உரிமை கேட்டால்
புண்மீதில் அம்பு பாய்ச்சும்
புலையர்செல் வராம்இ தைத்தான்
கண்மீதில் பகலி லெல்லாம்
கண்டுகண்டு அந்திக் குப்பின்
விண்மீனாய்க் கொப்ப ளித்த
விரிவானம் பாராய் தம்பி!
(அழகின் சிரிப்பு)
என்பது பாவேந்தர் பாட்டு. சித்திரச் சோலைகள் உருவாக எத்தனைத் தோழர்கள் இரத்தம் சொரிந்திருப்பார்கள்! நெல்விளையும் நிலங்களுக்கு எத்தனை மனிதர் வியர்வை இறைத்திருப்பார்கள்! தாமரை பூத்த தடாகங்களைச் சமைக்க எத்தனை மாந்தர் மண்ணுக்கடியில் புதைந்திருப்பார்கள்! நெடும்பாதைகள், ஆர்த்திடும் இயந்திரக் கூடங்கள், ஆகியன எல்லாம் தொழிலாளர் உழைப்பால் மலர்ந்தவை அன்றோ! இவர்கள் நிலை மாறப் புதிய உலகு படைக்க வேண்டுமென்று கூறுகிறார் கவிஞர். கோடரிக்காரனைக் காதல் தலைவனாகப் படைத்த பெருமை பாரதிதாசனுக்கு உண்டு. கூடைமுறம் கட்டுவோர், பூக்காரி, குறவர், ஆலைத்தொழிலாளி, உழத்தி, சுண்ணாம்பு இடிப்போர் ஆகியோரின் ஏற்றத்தைப் பாடிய கலைஞரும் அவரே.
பெரியார் ஒருவர் தலைமை தாங்க முன்மொழிதல்
வழிமொழிதல்
அவைத்தலைவர் தமிழ்த்திருமணம் குறித்துப் பேசுதல்
மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்த உரை கூறல்
மாலையும் கணையாழியும் மாற்றிக் கொள்ளுதல்
அறமொழிகளால் வாழ்த்துக் கூறல்
வந்தோர்க்கு நன்றி கூறல்
என அத்திருமணம் அமைகின்றது. இத்திருமணம் இன்று தமிழ்நாட்டில் பரவலாக நடைபெறுகின்றது. இதோ அந்தத் திருமண வாழ்த்துக் கேளுங்கள்!
ஒருமனதாயினர் தோழி – இந்தத்
திருமணமக்கள் என்றும் வாழி
பெருமனதாகி இல்லறம் காக்கவும்
பேறெனப்படும் பதினாறையும் சேர்க்கவும்
ஒரு மனதாயினர் தோழி
இசையமுது-II
இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்
துன்பங்கள் நீங்கும் …….
(தமிழ்ப் பேறு: 21-23. முதல் தொகுதி)
என்று தமிழ்க்கல்வி யாவருக்கும் வேண்டுமென்று வற்புறுத்துகின்றார். கல்வி ஓங்கிய தமிழ்ச் சமுதாயம் அவர் கனவு. அஃது இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது.
சாதி மதங்களற்றது
வருணப் பாகுபாடற்றது
சமத்துவத் தன்மை உடையது
மூடப்பழக்கங்கள் இல்லாதது
சுயமரியாதை மிக்கது
உழைப்பவர்க்கு மதிப்பளிப்பது
எல்லோரும் கற்றவர்களாகத் துலங்குவது
இந்தச் சமுதாயம் இன்றும் முழுமையாக உருவாகிவிடவில்லை. அதனை நோக்கிய பயணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ‘தடைக்கற்கள் உண்டு என்றாலும் தடந்தோள் உண்டு’ எனப் பாரதிதாசன் கூறுவதுபோல் மன உறுதியோடு அதனை அடைய முயலவேண்டும்.
பாடம் - 3
காட்சி
அவளுக்கு எதிராகவே சாத்திரங்கள், புராணங்கள் எல்லாம் எழுந்தன. ‘வரதட்சணை’ என்ற கொடுமையில் அவள் திருமணப்பந்தலை அணுக முடியாதவளாக இருந்தாள். நம் புதிய உலகின் சட்டங்களும் தொடக்கத்தில் அவளுக்குச் சொத்துரிமை தரவில்லை. ஆண் குழந்தை என்றால் அகமகிழும் சமுதாயம் பெண்குழந்தையைக் கருவிலேயே கண்டு அழிக்கத் தொடங்கியது. அறிவு வளராத சிற்றூர்களில் பெண் குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பாலுக்குப் பதிலாக எருக்கம் பாலிட்டுக் கொலை செய்யப்பட்டது. இந்தக் கொடுமைகளை எதிர்த்துச் சீர்திருத்தக் குரல் முழங்கியவர் சிலர். அந்தச் சிலரில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குப் பெரும்பங்குண்டு. தமிழ்ச் சமுதாயத்தில் இன்று பெண் தலைநிமிர்ந்து இருப்பதற்கு அவர் எழுதுகோல் தலைகுனிந்து பணியாற்றியதே பெரிய காரணமாகும். அவர் கண்ட பெண்ணுலகம் எத்தகையது என்பதைக் காண்போமா?
காட்சி
இவளுக்குச் சக்தி என்று பெயர். கடவுள்களில் பெண் கடவுளுக்குச் சக்தி இருந்தது. ஆனால் மனிதப் படைப்பில் பெண்ணுக்குச் சக்தி இல்லாமல் போய் விட்டது. எனினும் அவ்வப்போது மாதர் திலகங்கள் நாடாண்டனர்;
காட்சி
வாளேந்திப் போர் செய்தனர்; விண்ணேறிப் பறந்தனர்; கோள்களைத் தொட்டனர். என்றாலும் இவற்றையெல்லாம் விதிவிலக்கு என்று கருதிற்று உலகம். பாரதியார் ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று பெண்களை உரிமை மிக்கவர்களாகப் படைத்தார். பாரதிதாசன் பெண்களைப் புரட்சி செய்யத் தூண்டினார்.
பெண் ஆண் என்ற
இரண்டு உருளையில் நடக்கும் இன்ப வாழ்க்கை
(29. பெண்களைப் பற்றி பெர்னாட்ஷா தொ.1)
என்று கூறி ஆண், பெண் சமம் என்றார். பெண் விடுதலை பெறாத வரையில் நாடு விடுதலை பெற முடியாது என்று கவிஞர் கருதினார். நாட்டின் மக்கள் தொகையில் பாதியாய் உள்ள பெண்கள் சேர்ந்து முயலாமல் நாட்டு விடுதலையை எப்படி ஈட்ட முடியும்?
பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்துவரல் முயற்கொம்பே
(சஞ்.ப.சா. தொ.1)
என்றார். முயலுக்குக் கொம்பு உண்டா? அதுபோலத்தான் நாட்டு விடுதலையும் இல்லை என்று ஆகிவிடும் எனக் கருதுகிறார். பெண்கள் சிரித்தால் போயிற்று எல்லாம் என்று பழமொழி கண்டதல்லவா நம் உலகம். அவள் சிரிக்கக்கூடாது அதிகபட்சம் புன்னகைக்கலாம்; அதுவும் மிக நெருங்கிய உறவினர்களிடம். அவள் குனிந்த தலைநிமிராமல் இருந்தால் சிறப்பு. இதோ பாரதிதாசன் இரண்டு வகைப் பெண்களைப் படைக்கின்றார் பாருங்கள். அதோ! ஒரு பெரிய மலையைக் காணுங்கள்! அதுதான் சஞ்சீவி பர்வதம். அங்கே குப்பன் என்பவன் வந்து நிற்கிறான். குப்பனுடைய காதலி குப்பனிடம் கூறுகிறாள். “மலையின் உச்சியில் உள்ள மூலிகை வேண்டும். போய்ப் பறித்து வாருங்கள்” என்கிறாள். குப்பன் மலைக்கிறான். இவ்வளவு பெரிய மலையின் உச்சியை எப்படி அடைவது என்று எண்ணுகிறான். அவன் மலைப்பதைக் கண்டு அவள் சிரித்துவிட்டாள். அவ்வளவுதான். குப்பன் காதலியையும் தூக்கிக் கொண்டு மலையின் மீது தாவினான்; பறந்தான். எப்படி முடிந்தது அவனால்?
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்
(சஞ்.ப.சா. தொ.1)
என்கிறார். பெண், மற்றவர்களை இயக்கும் சக்தியாகத் திகழ்வதை இங்கு நாம் கண்டோம். இதோ இன்னொரு வகைப் பெண்ணைப் பாருங்கள்! சுப்பம்மா தமிழச்சி; தேசிங்கு மன்னனின் படை அதிகாரியான சுதரிசன் என்பவன் தீய நோக்கோடு சுப்பம்மாவை அணுகுகின்றான். அப்போது அவள்,
கத்தியை நீட்டினாள்; தீ என்னை வாட்டினும்
கையைத் தொடாதேயடா – இந்த
முத்தமிழ் நாட்டுக்கு மானம் பெரிதன்றி
மூச்சுப் பெரிதில்லை காண்
(தமிழச்சியின் கத்தி – 20)
என்று வீர மற உணர்வோடு கூறுகின்றாள். தேவைப்பட்டால் தானே இயங்கவும் செய்வாள் என்பதற்குக் கவிஞர் படைத்துக் காட்டும் எடுத்துக்காட்டு இது.
சோலையிலே நிற்கின்றாள் அந்த அழகுமயில்; செல்வப்பிள்ளை ஒருவன் அவளைக்கண்டு விழிகளில் அள்ளினான். அருகில் வந்தான். தன் கன்னத்தில் முத்தமொன்று கேட்டான். ‘படித்திருக்கின்றீரா’? என்று அவள் கேட்டாள். பலநூல் படித்த பண்டிதன் நான் என்றான் அவன். ‘அப்படியானால் பெண்ணுக்கு உரிமையுண்டா? சொல்க’ என்று கேட்டாள். ‘கொடுத்தால் பெற்றுக் கொள்வதுதான் அறம்’ என்றான் அவன். ‘நானே எடுத்துக் கொண்டால் என்ன’ என்று கேட்டு அவனை மடக்கினாள். அதனோடு விட்டாளா அவள்? இல்லை இல்லை. அவன் அவளை நெருங்க முற்பட்டபோது வாளை உருவினாள்; ஓடிப்போ என்று விரலால் குறிப்புக் காட்டினாள். ஓடினான் ஓடினான்; வாழ்க்கையின் ஓரத்திற்கே அவன் ஓடினான்.
செல்வப் பிள்ளாய்! இன்று புவியில் பெண்கள்
சிறுநிலையில் இருக்க வில்லை! விழித்துக் கொண்டார்!
(பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி)
என்று கூறிக் கவிஞர் மதிக்கிறார். இப்படிப்பட்ட பெண் பிறந்தபோது அவளைத் தாலாட்டும் கவிஞர் மொழி கேளுங்கள்!
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!
(பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி)
கற்பூரம் வைத்திருந்த பெட்டியைத் திறந்தவுடன் காடு முழுதும் மணப்பதுபோல் இந்தச் சமுதாயம் முழுதும் அவள் புகழ் பரப்பப் பிறந்திருக்கிறாள். இப்படிப்பட்ட பகுத்தறிவுச் சுடராகப் பாரதிதாசனின் பெண் திகழ்கின்றாள்.
விழுந்த தமிழ்நாடு தலைகாக்க என்றன்
உயிர்தனையே வேண்டிடினும் தருவேன்
(குடும்பவிளக்கு – 1)
என்று கூறுகின்றாள். இதோ குடும்ப விளக்கான மனைவி கணவனைப் பார்த்து அடுக்கடுக்காய் கேட்பதைப் பாருங்கள்!
அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்
இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம்?
என்பதைநாம் நினைத்துப் பார்ப்பதுவு மில்லை.
இன்றைக்கு கறிஎன்ன? செலவு யாது?
ஏகாலி வந்தானா? வேலைக் காரி
சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?
செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை
ஒன்றுக்கு மூன்றாக விற்பது எந்நாள்?
உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு
குன்றுநிகர் குடம்நிறையக் கறப்ப துண்டா?
கொடுக்கலென்ன வாங்கலென்ன இவைதாம் கண்டோம்.
(குடும்பவிளக்கு – 1)
(ஏகாலி = சலவைத் தொழிலாளி)
வாழ்க்கையில் உயர் குறிக்கோள்கள் வேண்டும் என்பதை இந்தப் பகுதி எடுத்துரைக்கின்றது அல்லவா? குடும்பவிளக்கில் வரும் தங்கம் அறிவு நிறைந்த பெண்ணாக மட்டுமன்றிச் செயல்திறன் வாய்ந்தவளாகவும் அமைகிறாள். வானூர்தியைப் பெண் செலுத்த வேண்டும்; மாக்கடலிடையே கலம் (கப்பல்) ஓட்ட வேண்டும்; ஒருகையால் தனக்கென்று அமைந்த பணி இயற்றும்போதே மறுகையில் பெண் உலகு விடுதலை எய்துதற்குரியன செய்ய வேண்டும் என்று எண்ணுகிறாள் கவிஞரின் தலைவி.
இந்தப் பழம்புகழ் மீள வேண்டும் நாட்டில்
எல்லோரும் தமிழர்களாய் வாழ வேண்டும்
வழிந்தொழுகும் சுவைத்தமிழே பெருக வேண்டும்
மாற்றலர்கள் ஏமாற்றம் தொலைய வேண்டும்
(குடும்பவிளக்கு : முதல் தொகுதி)
(மாற்றலர்கள் = பகைவர்கள்)
என்று வீட்டுத் தலைவி பேசுகிறாள். வீட்டுப் பிள்ளைகள் புறநானூறும் திருக்குறளும் படிக்கின்றனர். பிள்ளைகள் முன்னேறத் தமிழ்க்கல்வி இன்றியமையாதது என்கிறாள் குடும்பத்தலைவி.
1. கைம்மைக் கொடுமை
2. வழிவழி வந்த அச்சம்
3. பழைய கண்மூடி வழக்கங்கள்
இவற்றை அகற்றப் பாடுபடும்போது அவர்க்கு எதிர்ப்பு இருந்தது. அவர் ஓர் எதிர் நீச்சல்காரர். அவர் தொய்வடையாமல் தொடர்ந்து முழங்கினார். வைதிக நெறி பரப்பியிருந்த மடமைக் கருத்துகளைச் சாய்ப்பதற்கென்று கவிதை சமைத்த முதல்வர் அவர்தாம்.
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!
(பெண்குழந்தை தாலாட்டு தொகுதி:1)
என்று பெண் குழந்தையை இதற்கு முன்பு இப்படித் தாலாட்டியவர் உண்டா? பாரதிதாசனின் பெண் அறிவின் உரு; ஆற்றலின் மைய அச்சு; ஆணுக்கு அவ்வப்போது நெறிகாட்டும் ஆசான். கவிஞர்களெல்லாம் இதற்கு முன்பு பெண்களை அழகுப் பதுமையாகவே வருணித்தனர். அவள் கைம்மைக் கோலம் கண்டு கண்ணீர் வடித்தனர்; விதி இப்படி ஆக்கிற்றே என நொந்தனர். பெண்கள் அச்சப்படும்போது அழகாயிருப்பதாகப் புனைந்து பாடினர். பழைய வழக்கங்களை விடாமல் பின்பற்றுவதில்தான் பெண்மையின் அழகு உறைவதாகக் கூறினர். பாரதிதாசன் இந்த வேலிகளைத் தகர்த்தெறிந்தார். பெண்ணின் உரிமைப் பயணத்திற்கென அகலமான சாலையைக் கவிதையின் வழியில் அவர் காட்டினார்.
தரையிற் படுத்தல் வேண்டும்
சாதம் குறைத்தல் வேண்டும்
இப்படியெல்லாம் வாழப் பணித்தது வைதிகம். கணவனை இழந்த பெண் காதலிக்கலாம்; மறுமணம் செய்து கொள்ளலாம் என்று பாரதிதாசன் சீர்திருத்தப் பாதை காட்டினார்.
வெள்ளைப் புடவை உடுத்திக் கொண்டு, நெற்றியைப் பாழாக்கும் வெறுமையுடன், கூந்தலில் மலர் சூடாமல் இதோ ஓர் இளம் பெண் நிற்கின்றாள் பாருங்கள்! இவள் ஓர் இளைஞனைக் காதலித்தாள்; அவனுந்தான். ஆனால் என்ன செய்வது? சமூகம் இவர்கள் மணந்து கொள்ள ஒப்பவில்லை. பாரதிதாசன் பாட்டு ஒலிக்கிறது கேளுங்கள்!
காட்சி
இன்பவருக்கம் எல்லாம் நிறைவாகி
இருக்கின்ற பெண்கள் நிலைஇங்கு
இவ்விதமாய் இருக்குதண்ணே! இதில்
யாருக்கும் வெட்கமிலை!
காதல் சுரக்கின்ற நெஞ்சத்திலே – கெட்ட
கைம்மையைத் தூர்க்காதீர் – ஒரு
கட்டழகன் திருத்தோளினைச் சேர்ந்திடச்
சாத்திரம் பார்க்காதீர்!
(30. கைம்மைப்பழி : தொகுதி:1)
(வருக்கம் = வர்க்கம், இனம்; தூர்க்காதீர் = நிரப்பாதீர்)
இதைவிட மனத்தை உருக்கும் வகையில் யாரும் கூற முடியுமா? வைதிக நெறி கடுமையான கட்டுப்பாட்டைக் கைம்பெண்களுக்கு விதித்தது. மனைவி இறந்து விட்டால் கணவன் வேறு பெண்ணை மணக்கலாம். ஆனால் பெண்ணுக்கு அந்த உரிமை இல்லை.
வையக மீதினில் தாலி இழந்தவள்
மையல் அடைவது கூடுமோ?
துய்ய மணாளன் இறந்தபின் மற்றவன்
தொட்டதை வைதிகம் ஏற்குமோ?
(பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி)
என்று பகுத்தறிவற்ற நிலையில் கேட்டுக் கொண்டிருந்தனர் பழைய மடமைப்பிடியில் சிக்கித் தவித்தவர்கள். இந்தியா முழுவதிலும் கைம்பெண்களின் வாழ்க்கை துன்பமிக்கதாக இருந்தது. கணவன் இறந்தவுடன் அவனோடு மனைவியும் சாகவேண்டும் அல்லது கைம்மை நோன்பேற்றுத் துன்பங்களைத் தாங்க வேண்டும் என்று விதித்த வழக்கத்தைச் சமூகத்தில் புரட்சி செய்தோர் எதிர்த்தனர். அவர்களில் பாரதிதாசன் குரல் வன்மையாக ஒலித்தது.
மண்படைப்பே காதலெனில் காதலுக்கு
மறுப்பெதற்குக் கட்டுப்பா டெதற்கு?
(பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி)
என்று அவர் கேட்டார். காதல் கொள்வது இயற்கை அல்லவா? இளம்பெண் நெஞ்சத்தில் காதல் ஊற்று நிகழ்வது குற்றமா? பாடாத தேனீயைப் பார்த்ததுண்டா? தென்றல் உலா வராமல் இருக்க முடியுமா? பசியாத நல்வயிறு எங்காவது இருக்கிறதா? இவை போலத்தானே இளைஞர்களின் இதயமும்? என்று கேட்டார் பாரதிதாசன். இப்போது மறுமணம் தடையின்றி நிகழ்கிறது. வரலாறு திசை மாறியிருக்கிறது. எல்லாம் அந்தப் பாவேந்தனின் கனல் உமிழும் கவிதையால்தான்!
காட்சி
தனித்துக் கிடந்திடும் லாயம் – அதில்
தள்ளி அடைக்கப்படும் குதிரைக்கும்
கனைத்திட உத்தரவுண்டு – வீட்டில்
காரிகை நாணவும் அஞ்சவும் வேண்டும்
(35: பெண்ணுக்கு நீதி தொகுதி: 1)
இந்த நிலை மாறப் பெண்கள் புலிநிகர்த்தவராக ஆகவேண்டுமென்று பாரதிதாசன் கருதினார். பெண்கள் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் வாய்த்தவராக மாற வேண்டுமென்று பாரதியார் கூறினார். பாரதிதாசன் என்ன கூறுகின்றார் தெரியுமா?
சேவல் என நிமிர்ந்து சிறுத்தையெனப் பகையைச்
சீறும் குழந்தைகளைப் பெற்றே-நீ
செல்வம் பலவும் மிக உற்றே-நல்ல
காவல் இருந்துவளம் தாவும் திராவிடத்தைக்
காப்பது காண வேண்டும்
(இசையமுது 2: அன்னையின் ஆவல்)
இன்று பெண்கள் வான் ஊர்தி இயக்குகின்றனர்; ஆழக் கடலிற் புகுந்து ஆய்வுகள் செய்கின்றனர். அச்சம் ஒழிந்தது என ஆர்ப்பரிக்கின்றனர். பெண்கள் மேவாத (விரும்பாத) துறையில்லை. இதோ காந்தியடிகளுக்குத் தென்னாப்பிரிக்க அறப்போரில் துணைநின்ற தில்லையாடி வள்ளியம்மை! தென்னாட்டின் அறப்போர்த் திலகமெனத் திகழ்ந்த நாகம்மையார்! (பெரியார் ஈ.வெ.ரா.வின் துணைவியார்) தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார்! சீர்திருத்தப் புயல் மூவலூர் இராமாமிர்தத்தம்மையார்! ஆயிரமாயிரமாய்க் கல்விக் கூடம் நோக்கிச் செல்லும் ஆரணங்குகள் பாரீர்! எதிர்காலத் தமிழகத்தின் ஏடுகளில் புதிய வரலாறு எழுதப்போகும் புரட்சி எழுத்தாளிகள் இவர்கள். இவர்களின் அணிவகுப்புத்தான் புரட்சிக் கவிஞர் கனவு.
ஆடை அணிகலன் ஆசைக்கு வாசமலர்
தேடுவதும் ஆடவர்க்குச் சேவித் திருப்பதுவும்
அஞ்சுவதுவும் நாணுவுதுவும் ஆமையைப்போல் வாழுவதும்
கொஞ்சுவது மாகக் கிடக்கும் மகளிர்குலம்
மானிடர் கூட்டத்தில் வலியற்ற ஒர்பகுதி
(வீரத்தாய்: தொகுதி 1)
இவ்வாறு மகளிர் வாழ்ந்தநிலை விளக்குகின்றார் பாவேந்தர். கல்வி பெருக வளர்ந்த சமூகத்தில் பெண்கள் பகுத்தறிவு பெற்றனர்; மூடப்பழக்கங்களைக் கைவிட்டனர். பெண் இல்லம் தாண்டி, ஊர் கடந்து, நாடு கடந்து, கண்டங்களை விட்டுப் பறக்கின்றாள்; ஒலிம்பிக் பந்தயங்களில் ஓடுகின்றாள்; ஐக்கிய நாடுகள் மன்றத்தில் முழங்குகின்றாள்; பழமைக் கட்டுகளை உடைத்தெறிந்து விட்டாள். இதோ கவிஞர் இப்பெண்களைக் கண்டு களி கொள்கிறார் காணுங்கள்!
கலையினில் வளர்ந்தும், நாட்டுக்
கவிதையில் ஒளிமிகுந்தும்,
நிலவிடும் நிலா முகத்து
நீலப்பூ விழி மங்கைமார்
தலையாய கலைகள் ஆய்ந்து
தம்வீடு போதல் கண்டேன்!
உலவிடு மடமைப் பேயின்
உடம்பின்தோல் உரிதல் கண்டேன்!
(அழகின் சிரிப்பு)
இதோ பெண்கள் வீரச் செயலுக்காகப் பரிசு பெறுதல் காணுங்கள்! நாட்டின் காவல்துறையில் பணிசெய்யும் மகளிர் அணி காணுங்கள்! கவிஞர் கனவு நனவாகி விட்டதன்றோ!
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன்அன்னை!
சிலைபோல ஏனங்கு நின்றாய்? – நீ
சிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய்?
(இசையமுது)
என்று தந்தை கேட்பதாகக் கவிஞர் பாடுகின்றார்.
பெண் ஓவியம் கற்க வேண்டும்; காவியம் கற்க வேண்டும்; கவிதை எழுதி உலக அமைதியை அதன்வழி உருவாக்க வேண்டும். கவிஞர் இவற்றோடு நிற்கவில்லை. மங்கைப்பருவம் அவள் எய்தும்போது தனக்குரிய மணமகனைக் காட்டித் ‘தேவை இவன்’ எனக் கூற வேண்டுமாம்! கல்வி கற்றவளாக, காதல் தலைவியாக மட்டும் இருந்தால் போதுமா? வீரத்தாயாக விளங்குதல் வேண்டும்; குடும்ப விளக்காக ஒளிவிட வேண்டும்.
அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்
அழகிய தமிழ்நாட்டின் கண்கள்!
(இசையமுது)
என்று பாரதிதாசன் பெண்ணுக்கு இன்றியமையாத பண்புகள் என்று கூறப்பெற்ற அச்சம் மடமை ஆகியவற்றை உதறித் தள்ள வேண்டுகிறார். பெண் அச்சம் மடம் கொண்டவளாக இருந்தால், நாடாளவும், விண்வெளியில் பறக்கவும் இயலுமா? கவிஞர் கண்ட மகளிர் வாழ்வியலில் மூன்று நிலைகளை வரும் பகுதிகளில் காண்போமா?
தாய்மார்கள் வீரமுடையவர்களாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் வீரமிக்க பிள்ளைகள் நாட்டில் தோன்றுவர். பண்டைக்கால மகளிரிடையே, தந்தையையும் கணவனையும் போரிலே பறிகொடுத்த தையல் (பெண்) ஒருத்தி தன் இளம் மகனைத் தலைவாரி வெள்ளை உடை உடுத்தி வேலைக் கையில் கொடுத்துப் போருக்கு அனுப்பினாள் என அறிகிறோம். மற்றொருத்தி தன்மகன் போரில் புறமுதுகு காட்டினான் என்று கேட்டு அவ்வாறாயின் அவனுக்குப் பால் கொடுத்த என் மார்பை அறுத்து எறிவேன் எனச்
சூளுரைத்துப் போர்க்களத்தில் பிணமெல்லாம் புரட்டித் தன்மகன் மார்பிலே புண்பட்டு வீரச்சாவு கொண்டதறிந்து அவனைப் பெற்ற பொழுதை விட அப்பொழுது மகிழ்கிறாள் எனப் படிக்கிறோம். பாரதிதாசன் இந்தப் பரம்பரையை மறுபடியும் உயிர்ப்பிக்க விரும்புகிறார். கவிஞர் படைப்புகளில் ‘வீரத்தாய்’ என்ற ஒரு சிறிய காவியம் உள்ளது. நெருக்கடியான சூழ்நிலையில் இராணி விஜயா பொய்த்தாடி அணிந்து முதியவராய் மாறுவேடம் பூண்டு மகன் சுதர்சனுக்குப் போர்த்தொழில் கற்பிக்கிறாள். வஞ்சக நெஞ்சம் கொண்ட சேனைத்தலைவன் இளவரசனைக் கொல்வதற்கு ஓங்கிய வாளைத் தன் வாளால் துண்டாடுகின்றாள். தக்க சமயத்தில் தன் மாறுவேடம் களைந்து தான் யாரென்று காட்டுகின்றாள்.
காட்சி
தாடியும் பொய்! என்றன் தலைப்பாகையும் பொய்யே!
கூடியுள்ள அங்கியும் பொய்! கொண்ட முதுமையும் பொய்!
நான் விஜயராணி
(வீரத்தாய் தொகுதி : 1)
என்று அரசி தன் முன்னே கூடியுள்ள மன்னர்களின் முன்னிலையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள். பாரதிதாசனின் ‘பாண்டியன் பரிசு’ காவியத்திலும் அரசி வாளேந்தி வருபவளாகச் சித்தரிக்கப்படுகின்றாள்! கதிர்நாட்டின் அரசியான அவள் வஞ்சகம் புரிந்த தன் உடன்பிறந்தான் நரிக்கண்ணனை வாள் கொண்டு மாய்க்க வருகின்றாள். நரிக்கண்ணன் தன் உடன்பிறந்தாளின் கணவனை மறைந்து நின்று வேலெறிந்து கொன்று விடுகின்றான். அரசி களத்துக்கு வருகின்றாள். மன்னன் இறந்து கிடப்பது அறிந்து துயரப்படுகின்றாள். இறந்த கணவனின் உடம்பைத் தடவிப் பார்க்கிறாள்.
தணல்போலும் புண்பட்ட முதுகு கண்டாள்
தலைகுனிந்தாள்! அப்பிணத்தை நிலத்திற்போட்டாள்
அதோடு மட்டுமா? ஐயகோ! முதுகு காட்டத் துணிந்ததுவோ தமிழா நின் தமிழ் நெஞ்சம் என்கின்றாள். தாய்மாரைச் சித்தரிப்பதில் பாரதிதாசன் இவ்வாறு தனித்தன்மை காட்டுகிறார். பாரதிதாசனின் வீரத்தாய்மார்கள்
• போரிடுவார்கள்.
• புகழுக்காக உயிர் கொடுப்பார்கள்.
• முதுகிற் புண்பட்டுச் சாவதைப் பொறுக்க மாட்டார்கள்.
• ஆண்களைவிட அறிவுக் கூர்மையும் வீர உணர்வும் மிக்கவர்களாகத் திகழ்வார்கள்.
மோதவரும் ஆணழகே வாவா வாவா
முத்தம்வை இன்னொன்று வை இன்னொன்று
(காதல் நினைவுகள்)
இப்படிப்பட்ட காதல் தலைவியை எந்தக் கவிஞனும் காட்டவில்லை. பெண்களை ஊமையாகவும் செயலற்றவளாகவும், அழகுப் பதுமையாகவும், அச்சம், நாணம் என்ற பண்புகளின் இருப்பிடங்களாகவும் உருவாக்கும் மரபைக் கவிஞர் உடைத்தெறிந்தார். உன் காதலன் என்ன சாதி என்று கேட்டனராம் பெற்றோர். அதற்கு அவள் தன் தோழியிடம் கூறும் விடையைக் கேளுங்கள்!
இந்தாடி அன்புள்ள தோழி – எனக்கு
எப்போது அடங்கும் சிரிப்பு
வந்தவன் ஆண்சாதி என்றால் – அவனை
மணந்தவள் பெண்சாதி தானே!
(தொகுதி : 4 காதல் கவிதைகள்)
என்கின்றாள். சாதிப் பாகுபாட்டைப் பாரதிதாசன் தலைவியர் பொருட்படுத்துவதே இல்லை. ‘எதிர்பாராத முத்தம்’ என்ற காதல் காவியம் கவிஞரால் இயற்றப்பட்டது. அதில் தலைவன் பொன்முடி; தலைவி பூங்கோதை. தலைவி பூங்கோதை தன் காதலனுக்கு எழுதும்
பழத்தோட்டம் அங்கே; தீராப்
பசிகாரி இவ்வி டத்தில்!
(எதிர்பாராத முத்தம்)
கடிதத்தில் என்று எழுதுகிறாள். பெண் தன் மனத்தில் உள்ள காதலை இப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம் என்று காட்டியவர் பாரதிதாசன். ‘புரட்சிக்கவி’ என்ற குறுங்காவியத்தில் இளவரசி அமுதவல்லி கவிஞன் உதாரனிடம் காதல் கொள்கிறாள். அவன் தயங்குகிறான்; நாடாளும் வேந்தன் மகளை நாம் காதலிக்கவில்லை என்று தயங்குகிறான். அமுதவல்லி அவனுக்குத் துணிவூட்டுகிறாள்; காதலிக்கத் தூண்டுகிறாள். வருணம், சாதி, செல்வம் என்றெல்லாம் பாராமல் பாரதிதாசன் தலைவியர் காதல் பயிர் வளர்க்கின்றார்கள்.
• பாத்திரம் துலக்குகிறாள்
• பால் கறக்கிறாள்
• வீட்டைத் தூய்மை செய்கிறாள்
• வீணையில் தமிழ் இசைக்கிறாள்
• குழந்தை வளர்க்கிறாள்
• கணவனைப் பேணுகிறாள்
• கடையில் வணிகம் செய்கிறாள்
• துணி தைக்கிறாள்
• தமிழ்ப்பணி செய்கிறாள்
• கல்வி கற்பிக்கிறாள்
• தச்சு வேலைகள் புரிகிறாள்
பற்பல பணிகளைப் புரியும் அவள் பல கலைகளும் அறிந்தவளாக இருக்கிறாள். தங்கத்தின் மகன் வேடப்பன்; மருமகள் நகைமுத்து. இருவரும் இனிய இல்லறம் நடத்துகின்றனர். ஓர் இரவில் நகைமுத்து தன் குழந்தையைப் பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டு தூங்குகிறாள். வலக்கை அவளுக்குத் தலையணை ஆயிற்று. இடக்கை குழந்தையின் மேலே வில்லைப்போல் வளைந்து பாதுகாப்பாய் இருக்க அவள் தூங்குகின்றாள். வேடப்பன் நள்ளிரவில் எழுந்தான். நகைமுத்து அருகே குழந்தை தூங்கக் காண்கிறான். அவள் இடக்கை கூடாரமாய்க் குழந்தையை வளைத்திருப்பதைப் பார்க்கிறான். “என்ன இது! ஒருநூல் புரண்டால் கூடப் போதுமே! குழந்தை நசுங்கிவிடுமே!” என்று கருதி அவளை எழுப்ப நினைக்கின்றான்.
காட்சி
நகைமுத்து தன் கூந்தலிலிருந்து அகற்றிய ஒரு மலர்ச்சரத்தை எடுத்து வேடப்பன் அவளுடைய முகத்தில் போடுகிறான். அவள் கண் விழிக்கவில்லை; மலர்ச்சரத்திலிருந்து ஒரே ஒரு மலர் இதழை எடுத்துக் குழந்தையின் மீது போடுகின்றான். தூங்கிக் கொண்டிருக்கும் நகைமுகத்தின் கை மலர் இதழை நீக்கி விட்டு மறுபடியும் கூடாரமாய் வளைகிறது. குழந்தையைப் பாதுகாக்கும் தாய்மை ஆற்றலைக் கண்டு தாய்மையை வணங்குகின்றான். இவ்வாறு குடும்பவிளக்குப் பெண்ணின் பெருமையைப் போற்றுகின்றது.
1. வஞ்சி – சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
2. அமுதவல்லி – புரட்சிக்கவி
3. விஜயா – வீரத்தாய்
4. தங்கம் – குடும்ப விளக்கு
5. நகைமுத்து – குடும்ப விளக்கு
6. கிள்ளை – காதலா கடமையா
7. சுப்பம்மா – தமிழச்சியின் கத்தி
8. அன்னம் – பாண்டியன் பரிசு
9. பூங்கோதை – எதிர்பாராத முத்தம்
இப்பாத்திரப் படைப்புகள் தேவை ஏற்படும்போது கடும்புயலாக உருக் கொள்கின்றனர்; மற்ற சமயங்களில் குளிர் தென்றலாய் இதம் செய்கின்றனர். பெண்மையின் பன்முக ஆற்றலை இப்பாத்திரப் படைப்புகள் காட்டுகின்றன.
இளஞ்சேரனை நீயார் என்று கேட்டுப்
பதிலை எதிர்பார்த்திருந்தார். அவனோ
தன்மார்பு காட்டி ‘நான் தம்பி’ என்றான்
“தமிழன் என்றுநீ சாற்றடா தம்பி”
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்
(குடும்பவிளக்கு 4)
இளஞ்சேரன் கைக்குழந்தை; இளஞ்சேரனின் தமக்கை அமிழ்து. அமிழ்துக்கு ஆறு வயது. ஆறு வயதில் அவளிடத்தே மொழி உணர்வு எப்படி வந்தது? பெற்றோர் கொண்ட உணர்வு வழிவழியாய் வருதலையே கவிஞர் இங்ஙனம் காட்டுகின்றார். குழந்தைகளை வளர்க்கும் நெறி பற்றியும் பாரதிதாசன் கூறுவதை நாம் நினைக்க வேண்டும். ‘ஆல் ஒடிந்து வீழ்ந்தாலும் தோள்கள் தாங்கும்’ வலிமை பிள்ளைகளுக்கு வேண்டும் என்கிறார். ஆலமரமே விழுந்தாலும் இளம்பிள்ளையின் தோள்கள் தாங்க வேண்டுமாம். நல்ல பழக்கங்களைப் பிள்ளைகட்குக் கற்பிக்கக் கவிஞர் வற்புறுத்துகின்றார்.
இன்னம் தூக்கமா – பாப்பா
இன்னம் தூக்கமா?
பொன்னைப் போல வெயிலும் வந்தது
பூத்த பூவும் நிறம் குறைந்தது
உன்னால் தோசை ஆறிப் போனதே!
ஒழுங்கெல்லாமே மாறிப் போனதே!
(இளைஞர் இலக்கியம்)
என்று நல்ல நெறிகளை அறிவுறுத்தும் பாடல்கள் பலப்பல அவர் புனைந்தார்.
இன்று குழந்தைகள் நீங்கள்! எனினும்
இனி இந்த நாட்டினை ஆளப் பிறந்தீர்!
குன்றினைப் போல் உடல் வன்மை வேண்டும்
கொடுமை தீர்க்கப் போராடுதல் வேண்டும்!
(இசையமுது)
என்று குழந்தை மனத்திலேயே தீமையை எதிர்த்துப் போராடும் விதையை விதைத்து விடுகிறார்.
புரட்சிக் கவிஞரின் குடும்ப ஓவியத்தில் வேலைக்காரிக்கு இடமில்லை. அப்படிச் சமுதாயத்தில் ஒருத்தியை உருவாக்குவதை அவர் விரும்பவில்லை. மணம் செய்து வந்த புதிதில் மணவாளன் தன் மனைவியைப் பார்த்து “நீ போய் கிளியோடு பேசுக; யாழ் இசை கூட்டுக; எனக்கு எண்ணெய் தேய்க்க வேலைக்காரியை அனுப்புக” என்கிறான். அவளும் போனாள். சிறிது நேரத்தில் முக்காடு போட்டுக் கொண்டு ஒரு வேலைக்காரப்பெண் வந்தாள். எண்ணெய் தேய்த்து விட்டாள். பணி முடிந்து அவள் திரும்பும் போது அவள் முக்காடு விலகியது. அப்போதுதான் மணவாளன் வேலைக்காரி போல வந்தது தன் மனைவியே என்று அறிகிறான்.
காட்சி
தலைவர் விருப்பம் தலைவி அறிவாள்
பொறுப்பிலாத் தோழி அறிவது உண்டோ
(குடும்ப விளக்கு)
என்று கேட்கிறாள் மணந்து வந்தவள். இப்படிப்பட்ட பெண்ணை மணந்து வாழ்ந்த வாழ்க்கையின் நிறைவை
பெண் இவளோ ஆண் நானோ என வேறு வேறாய்ப்
பிரித்துரை மாட்டாது பிசைந்த கூட்டமிழ்து
எங்கள் வாழ்க்கை என்கிறான் கணவன்.
பல்லாண்டுகள் வாழ்ந்து நரைத்து முதிர்ந்த நிலை அடைகிறாள் தலைவி. அப்போதும் அவள் நெஞ்சிலே கணவனே குடியிருக்கின்றான். ‘என் கணவனை அந்த நாளில் நான் எப்படிக் காத்தேன் தெரியுமா? வெயில்பட்டால் உருகிவிடும் மெழுகுப்பாவை; மழை பட்டால் கரையும் கற்கண்டுப் பேழை; புயல் வீசினால் தாங்காத பூம்பொழில் என்றல்லவா நான் அவனைக் காத்தேன்’ என்கிறாள் தலைவி. இன்று நலிந்து மெலிந்து திண்ணையில் குந்திக் கிடக்கும் தன் முதிய கணவனை அந்தக்கிழவி மனத் தொட்டிலில் துயில வைத்துத் தாலாட்டிக் கொண்டிருக்கிறாள். ‘இன்றும் எனது ஐந்து புலன்களுக்கும் அவன் நினைவுகள் தேன்மழை அல்லவா பெய்கின்றன’ என்று மகிழ்கிறாள். முதியோர் காதலைப் பாரதிதாசன் பாடியது போல எவரும் பாடவில்லை.
மீளாத மூடப்பழக்கங்கள் மீண்டும் உமை
நாடாது இருப்பதற்கு நான் உங்களை இன்று
சஞ்சீவி பர்வதத்தில் கூப்பிட்டேன்
என்கிறாள். புராணக் கதைகளால் பகுத்தறிவு அழிவதை வஞ்சி குப்பனுக்குப் புரிய வைத்தாள். வையத்தை வழிநடத்த வலிமை மிக்க ஆற்றலாக விளங்குகின்றாள். புரட்சிக்கவிஞர் படைத்த பெண்!
வானூர்தி செலுத்தவும், கடலில் மூழ்கி அளக்கவும் பெண்களால் ஆகுமென்று தங்கம் கருதுகின்றாள். புதுமைப் பெண்ணாக உருப்பெற வேண்டுமென்று கருதும் தங்கம் வீட்டுக் கடமைகளைப் புறக்கணிக்கவில்லை. சமையலில் புதுமை வேண்டும் என்ற கருத்துடையவளாய் அவள் விளங்குகின்றாள். ஒரு பெண்ணுக்குப் பெருமிதம் அவள் பலகலையும் தேர்ந்தவளாக இருப்பதில்தான் இருக்கிறது என்கிறார் கவிஞர். தங்கம் வீட்டுக் கடமைகளை ஆற்றுவதிலும் வல்லவள்; நாட்டுத்தொண்டு, மொழித்தொண்டு ஆகியவற்றிலும் கருத்துச் செலுத்தும் திறன் மிக்கவள்.
இந்நாளில் பெண்கட் கெல்லாம்
ஏற்பட்ட பணியை நன்கு
பொன்னேபோல் ஒருகை யாலும்
விடுதலை பூணும் செய்கை
இன்னொரு மலர்க்கை யாலும்
இயற்றுக!
(குடும்பவிளக்கு)
என்று தங்கத்தம்மையார் கூறுவது பாரதிதாசனின் இலக்கியப் பெண்ணுக்குரிய பண்பாகும்.
நகைமுத்து குடும்பவிளக்கில் இடம்பெறும் மற்றொரு பாத்திரம். நகைமுத்து வேடப்பன் மீது காதல் கொள்கிறாள். சிக்கலின்றி அவர்கள் விரும்பியவண்ணம் திருமணம் நிகழ்கின்றது. குழந்தை வளர்க்கும் கலையைப் பாவேந்தர் நகைமுத்து வழியாக நமக்கு விளக்குகின்றார்.
என்பாண்டியன் பரிசை எனக்களிப்போன் எவன்
எனினும் அவனுக்கே உரியோள் ஆவேன்
(பாண்டியன் பரிசு)
என்று அறிவிக்கின்றாள். பாண்டியன் பரிசைக் கொண்டு வருபவன் ஒரு கிழவனாக இருந்தால் என்ன செய்வது என்று கேட்டபோது அன்னம், “கிழவர் என்றால் என்னை மணக்க நினைப்பாரா? நினைப்பார் என்றால் அவர் நெஞ்சத்தில் இளையார் வயதில் மூத்தார்” என்கின்றாள். அரச குடும்பத்தில் பிறந்திருந்தும் அன்னம் புரட்சி மனப்பாங்கு உடையவளாகப் படைக்கப் பட்டிருக்கின்றாள்.
ஆதிமந்தி சோழன் கரிகாலனின் மகள்; சேர இளவரசன் ஆட்டனத்தியிடம் ஆடல் பயின்றவள். இருவரும் மணம் புரிந்து கொள்கின்றனர். ஆட்டனத்தி காவிரியில் நீராடுகையில் வெள்ளம் அவனை அடித்துச் செல்கிறது. ஆதிமந்தி வருந்திக் கண்ணீர் வடித்து ஆற்றின் கரையில் தொடர்ந்து செல்கிறாள். காவிரி கடலொடு கலக்கும் இடத்தில் கணவனைப் பெறுகின்றாள். இந்த நிகழ்ச்சி பழைய தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. பாரதிதாசன் இதனை அழகிய நாடகமாகச் ‘சேரதாண்டவம்’ என்ற பெயரில் வடித்திருக்கிறார். இதோ அலைகொழிக்கும் காவிரியில் ஆட்டனத்தி ஆடுவதைப் பாருங்கள்! ……….கரையோரத்தில் ஆதிமந்தி கணவனைத் தேடிக் கலங்குவதைக் காணுங்கள். காதல் மடந்தையான ஆதிமந்தி கலை மடந்தையாகக் கவிஞரால் அழகுற உருவாக்கப் பெற்றுள்ளாள்.
சிலப்பதிகாரக் கண்ணகி அது சிறப்பாகாது என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்கிறாள். பாவேந்தரின் கண்ணகி “உன் தீய ஒழுக்கத்தை இங்கு நுழைக்காதே” என்று எச்சரிக்கின்றாள். மதுரையைக் கண்ணகி தன் ஆற்றலால் எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறியதை மாற்றினார் பாரதிதாசன். கண்ணகிக்கு நிகழ்ந்த கொடுமை கண்டு மக்கள் மதுரை நகர்க்குத் தீயிட்டனர் என்றார் கவிஞர். கண்ணகி வானநாடு போனதாகக் கூறப்பட்டதை மாற்றி மலையிலிருந்து விழுந்து இறந்தாள் என்று கூறினார் கவிஞர். கண்ணகி காவியம் கவிஞரின் படைப்பில் சீர்திருத்தக் காவியமாயிற்று.
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்துவரல் முயற்கொம்பே
(பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி)
என்று பேசிய முதல்கவிஞர் அவரே, பெண்கள் உற்ற கைம்மைப் பழியைத் துடைக்க அவர் போரிட்டார்; பெண்கள் மீது திணிக்கப்பட்ட பொருந்தா மணத்தை அவர் கண்டித்தார்; பெண்கள் உரிமையுடன் காதல் மணம் கொள்வதை அவர் வரவேற்றார்; பெண்கள் மறுமணம் கொள்வதை அவர் வற்புறுத்தினார். எங்கெங்குப் பெண்களின் விடுதலை இயக்கமும் உரிமைப்போரும் நடக்கின்றனவோ அங்கெல்லாம் அவர் பாடல்களே முழங்கும்; அவருடைய பாத்திரப் படைப்புகளே பேசும்.
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? -எமக்கு
இன்பம் சேர்க்க மாட்டாயா?
பாடம் - 4
• பகுத்தறிவு
அறிவுக்குப் பொருந்தாத கருத்துகளை மறுப்பதும் அறிவுக்குப் பொருந்தும் கருத்துகளை ஏற்பதும் பகுத்தறிவு ஆகும். இந்தச் சிந்தனை உடையவர்களைப் பகுத்தறிவாளர்கள் என்கிறோம்.
இவ்வாறு உலக மக்களை ஒன்று என்று கருதினாலும் ஆட்சி நிர்வாகத்திற்காக உலகில் பல நாடுகள் பிரிந்துள்ளன. அவற்றுள் மொழி அடிப்படையில் பல இனங்கள் உள்ளன. இந்தப் பிரிவுகளுக்கு நிர்வாக நோக்கம் இருப்பதை நாம் அறிய முடிகிறது. ஆனால், இந்தச் சாதிப்பிரிவிற்கு நம்மால் எந்த நல்ல நோக்கத்தையும் அறிய இயலவில்லை. ஆகவே சாதியை அறிவுக்குப் பொருந்தாது என்று பாரதிதாசன் கூறியுள்ளார்.
உலகினில் சாதிகள் இல்லை-என்
உள்ளத்தில் வேற்றுமை இல்லை
கலகத்தைச் செய்கின்ற சாதி-என்
கைகளைப் பற்றி இழுப்பதும் உண்டோ?
(காதல் பாடல்கள், ‘அவள் அடங்காச் சிரிப்பு’ – 3)
என்று கேள்வி கேட்டு, ஒரு பெண்ணின் வாய்மொழியாக இந்த உலகில் சாதி இல்லை என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.
பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை – இந்தப்
பிழை நீக்குவதே உயிர் உள்ளாரின் கடமை
(பாரதிதாசன் கவிதைகள், 60, சகோதரத்துவம் – 1)
என்று தமிழர்களின் கடமையை உணர்த்தியுள்ளார்.
இந்தக் கடமையை உணராமல் மேலும், சாதி வளர்ப்பவர்களைப் பார்த்துப் பாரதிதாசன் கேள்வி கேட்கிறார் பாருங்கள்.
மாந்தரில் சாதி வகுப்பது சரியா?
மக்கள் ஒரேகுலமாய் வாழ்வது சரியா?
(பாரதிதாசன் கவிதைகள் 50. ஆய்ந்துபார் – 1)
என்று கேட்கும் கேள்விக்கு நாம் என்ன பதில் சொல்வோம்? ‘மக்கள் ஒரே குலமாய் வாழ்வதுதான் சரி’ என்றுதானே சொல்வோம்.
பாவேந்தர், எந்தக் கருத்தை வலியுறுத்த விரும்புகிறாரோ அந்தக் கருத்தை நம் வாயால் வர வைக்கும் திறத்தை இந்தப் பாடலில் வெளிப்படுத்தியிருக்கிறார் பார்த்தீர்களா?
வேதம் உணர்ந்தவன் அந்தணன் – இந்த
மேதினியை ஆளுபவன் சத்திரியனாம் – மிக
நீதமுடன் வைசியன் என்று உயர்வு செய்தார் – மிக
நாதியற்று வேலைகள் செய்தே – முன்பு
நாத்திறம் அற்றிருந்தவன் சூத்திரன் என்றே – சொல்லி
ஆதியினில் மனு வகுத்தான் – இவை
அன்றியும் பஞ்சமர்கள் என்பதும் ஒன்றாம்
(பாரதிதாசன் கவிதைகள் 3, ஞாயமற்ற மறியல் 6)
(நீதமுடன் = நீதியுடன், நாதியற்று = உதவியில்லாமல், நாத்திறம் = வாதாடும் திறமை, ஆதியினில் = பழங்காலத்தில்)
என்று இந்த வருணப் பாகுபாட்டை முதலில் மனு என்பவர் வகுத்ததாகப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார். (வருணம் – நிறம், நிறம் அடிப்படையில் உண்டான பிரிவு) இந்தச் சாதிப்பிரிவு உலகநாடுகளில் எல்லாம் உள்ளதா? அல்லது நம் இந்திய நாட்டில் மட்டுமே உள்ளதா? என்ற கேள்விக்குப் பதிலாகப் பாரதிதாசன்,
தீண்டாமை என்னும் ஒருபேய் – இந்தத்
தேசத்தில் மாத்திரமே திரியக் கண்டோம் – எனில்
ஈண்டு பிறநாட்டில் இருப்போர் – செவிக்கு
ஏறியதும் இச்செயலைக் காறி உமிழ்வார்
(பாரதிதாசன் கவிதைகள் 3, ஞாயமற்ற மறியல் – 3)
(காறி உமிழ்தல் = எச்சிலைச் சேர்த்துக் கோபத்துடன் துப்புதல்)
என்று பாடியுள்ளார். இந்தப் பாடல் மூலம் தீண்டாமைக் கொடுமை இந்தியாவில் மட்டுமே உள்ளது என்று பதில் தந்துள்ளார். இந்தக் கொடுமையைப் பிறநாட்டைச் சேர்ந்தவர்கள் அறிந்தால் நம்மை உமிழ்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
பகுத்தறிவுக்குப் பொருந்தாத இந்தச் சாதிப்பிரிவை ஏன் இந்தியாவில் நாம் வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? இதற்கும் பாரதிதாசன் தமது பாடல் வழியே பதில் சொல்லியிருக்கிறார்.
சாதிப்பிரிவு செய்தார்
தம்மை உயர்த்துதற்கே
நீதிகள் சொன்னாரடி-சகியே
நீதிகள் சொன்னாரடி
(பாரதிதாசன் கவிதைகள் 3, சமத்துவப்பாட்டு – 45)
என்று தம்மை மேலும் உயர்த்திக் கொள்வதற்காகத்தான் சாதிப்பிரிவுகளை ஏற்படுத்தியுள்ளார்கள். தாங்கள் வகுத்த சாதிப்பிரிவுகளுக்கு ஏற்ப அவர்கள் நீதியையும் வகுத்துக் கொண்டார்கள் என்றும் பாரதிதாசன் பாடியுள்ளார்.
மிக்கு உயர்ந்த சாதி, கீழ்ச்சாதி என்னும்
வேற்றுமைகள் தமிழ்க்கில்லை; தமிழர்க்கில்லை
பொய்க் கூற்றே சாதி எனல்
(பாரதிதாசன் கவிதைகள் – கடல்மேல் குமிழிகள் : 26)
என்று உணர்த்தியுள்ளார். மேலும், தமிழர்க்குச் சாதி உண்டு என்று கூறுவது பொய்க்கூற்று என்பதையும் வெளிப்படுத்தி உள்ளார். மனிதர்களில் சாதியாலோ வேறு காரணங்களாலோ உயர்வும் இல்லை; தாழ்வும் இல்லை என்ற நிலை வரவேண்டும். அப்போது மனித வாழ்க்கையானது இன்பத்தின் எல்லையாக விளங்கும் என்பதை
தாழ்வில்லை உயர்வில்லை
சமமென்ற நிலைவந்தால்
வாழ்வெல்லை காண்போமடி – சகியே
வாழ்வெல்லை காண்போமடி
(பாரதிதாசன் கவிதைகள் – 3, சமத்துவப்பாட்டு – 109)
என்ற பாடல் வரிகளின் வழியாகப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார். சாதிப் பற்றுக் கொண்ட தமிழர்கள் தமிழ் மொழியைத் தமது மொழியாகவும் உயர்ந்த மொழியாகவும் கருதுவது இல்லை. சாதிவெறி கொண்ட தமிழ் இளைஞர்களால் தமிழ் எழுச்சிக்காகப் போரிட இயலாது. எனவே தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தமிழர்களிடம் சாதிப் பற்று இருக்கக் கூடாது என்பதனைப் பாரதிதாசன் பின்வருமாறு பாடியுள்ளார்.
சாதி களைந்திட்ட ஏரி – நல்ல
தண்டமிழ் நீரினை ஏற்கும்
சாதிப் பிணிப்பற்ற தோளே – நல்ல
தண்டமிழ் வாளினைத் தூக்கும்
(பாரதிதாசன் கவிதைகள் – 2, 25, பாரதி உள்ளம் -1)
இந்தப் பாடலில் பாரதிதாசன் சமுதாயத்தை ஏரியாக உருவகம் செய்து உள்ளார்; தமிழை நீராக உருவகம் செய்துள்ளார். சாதி இல்லாத சமுதாயம் அமைந்தால் அது தமிழை உயர்த்தும் என்ற உண்மையை உணர்த்துவதற்கு இவ்வாறு உருவகப்படுத்தி உள்ளார்.
காட்சி
நமது சாதி வேறு நல்லோய்
அவனது சாதிவேறு என்று அறிகிலாய்
என்று சினத்தைச் சொல்லில் ஏற்றினான்
(காதல் பாடல்கள், ‘கலப்புமணம் வாழ்க’ – 2)
என்று கூறுகிறார். அதைக் கேட்ட மகள்,
அப்பா! உண்மையில் அவரும் என்போல்
மனிதச் சாதி, மந்தி அல்லர்;
காக்கை அல்லர்; கரும்பாம்பு அல்லர்
(காதல் பாடல்கள், ‘கலப்பு மணம் வாழ்க’ -2)
என்று கேலியாகக் கூறுகிறாள். அதைக் கேட்ட அவளது தந்தை,
மனிதரில் சாதி இல்லையா மகளே
(காதல் பாடல்கள், ‘கலப்பு மணம் வாழ்க’ – 2
என்று கேட்கிறார். அதற்கு மகள்,
சாதி சற்றும் என்நினைவில் இல்லை
மாது நான் தமிழனின் மகள்ஆதலாலே
(காதல்பாடல்கள், கலப்பு மணம் வாழ்க – 3)
என்று பதில் சொல்கிறாள். இந்த உரையாடலில் தந்தையார் முதலில் தனது மகளைப் பார்த்துக் கோபமாகக் கேட்பதுபோல் பாரதிதாசன் பாடியுள்ளார். கலப்பு மணம் செய்து கொள்ள விரும்பும் மகளும் சற்றும் விட்டுக் கொடுக்காமல் எள்ளலுடன் (கேலியுடன்) பதில் சொல்வதுபோல் பாரதிதாசன் அமைத்து உள்ளார்.
இந்தப் பகுதியின் தொடக்கத்திலிருந்து கலப்புத் திருமணத்தை, வெற்றியை நோக்கி வளர்த்துக் கொண்டு வந்து முடித்துள்ள தன்மை சிறப்பு உடையது ஆகும்.
மதம் வளர்ந்தால்
படுபாழாம் பகுத்தறிவு
(குறிஞ்சித்திட்டு : பக். 136)
என்று பாடியுள்ளார். அறிவை அழிப்பதாலேயே மதங்களை வேண்டாம் என்று எண்ணிய பாரதிதாசன், ‘குறிஞ்சித்திட்டு’ என்ற கற்பனை நாடு ஒன்றைப் படைக்கிறார் அந்நாடு நன்றாக இருப்பதற்குக் காரணம்.
மதமில்லை குறிஞ்சித் திட்டில்
மதம் பெற்ற சாதி இல்லை
(குறிஞ்சித்திட்டு : ப. 6)
என்று பாடியுள்ளார்.
காட்சி
மத ஓடத்தில் ஏறிய மாந்தரே – பலி
பீடத்திலே சாய்ந்தீரே
(பாரதிதாசன் கவிதைகள், 59 பலிபீடம்)
என்று பாடியுள்ளார். இப்பாடலில் மதத்தைப் பலிபீடமாக உருவகம் செய்து பாடியுள்ளார் பாரதிதாசன். மேலும் ஓடத்தின் செயலாகிய சாய்தலை, மதத்தின் பிடியில் சிக்கியுள்ள மனிதர்களுக்கு உருவகம் செய்து உள்ளார். இவ்வாறு இரண்டு வரிகளில் உருவக அழகை வெளிப்படுத்தியுள்ளார் பாரதிதாசன்.
காட்சி
மூடத்தனத்தை முடுக்கும் மதத்தைநிர்
மூலப்படுத்த கை ஓங்குவீர் – பலி
பீடத்தை விட்டுஇனி நீங்குவீர் – செல்வ
நாடு நமக்கு என்று வாங்குவீர்
(பாரதிதாசன் கவிதைகள், 59 பலிபீடம்)
என்னும் வரிகளில் மூடத்தனத்தை வளர்ப்பதற்கு மதமே காரணம் என்னும் கருத்தை எடுத்துக் கூறியுள்ளார். இனிமலோவது பலிபீடத்தை விட்டு நீங்குங்கள் என்று மதத்திலிருந்து மக்களை விலக்குவதற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மதம் என்பது கருங்கல் போன்றது. அதில் மல்லிகைக் கொடி வளர்ந்து மல்லிகைப் பூக்களைத் தருவது இல்லை என்ற கருத்தைப் பாரதிதாசன்,
மதம் என்ற கருங்கல் பாங்கில்
மல்லிகை பூப்பது இல்லை
(குறிஞ்சித்திட்டு, பக். 115)
என்று பாடியுள்ளார்.
மதத்தைக் கருங்கல் என்று கூறிய பாரதிதாசன் அதே பொருள் கொண்ட சமயத்தைச் சூளை என்று கூறியுள்ளார்.
சமயம் எனும் சூளையிலே
தமிழ்நட்டால் முளையாது
(தமிழியக்கம் : 20)
என்னும் பாடலில் சமயத்தைச் செங்கல் சூளையாகப் பாடியுள்ளார். செங்கல் சூளையில் வெப்பம்தான் இருக்கும். இந்த வெப்பத்தில் தமிழாகிய பயிரை நட்டால் அது முளைக்காது என்று எடுத்துக் கூறியுள்ளார்.
ஆயிரம் சாதிகள் ஒப்பி – நரி
அன்னவர் காலிடை வீழ்ந்து
நாய்களைப் போல் தமக்கு உள்ளே-சண்டை
நாளும் வளர்க்கும் மதங்கள்
(பன்மணித்திரள், பக். 147)
என்று சாதிச்சண்டை போடுவது, நாய்கள் தமக்குள்ளே சண்டை போடுவதுபோல் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இதில் மதத்தைச் சாதிகளின் வேராகப் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு சாதிச்சண்டைக்கு வேராக விளங்கும் மதம் பொய்யானது, போலியானது என்பதைப் பெண்குழந்தைத் தாலாட்டு என்னும் பாடலில் குறிப்பிட்டு உள்ளார்.
காட்சி
மதத்தின் பொய்ம்மையைப் பற்றி யாருக்கு எடுத்துக் கூறுவது என்று எண்ணிப்பார்த்தார் பாரதிதாசன். வளர்ந்தவர்களுக்குக் கூறிப் பயனில்லை. அவர்கள் தம்போக்கை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். எனவே குழந்தைக்குப் பாடும் தாலாட்டில் வலிமைமிக்க சீர்திருத்தக் கருத்துகளைச் சேர்த்துப் பாடியுள்ளார். அதுவும் பெண் குழந்தைக்குப் பாடும் தாலாட்டில் இக்கருத்தைக் கூறியுள்ளார்.
புண்ணில் சரம்விடுக்கும் பொய்ம்மதத்தின் கூட்டத்தைக்
கண்ணில் கனல் சிந்திக் கட்டழிக்க வந்தவளே
(பாரதிதாசன் கவிதைகள்,42 பெண்குழந்தைத்தாலாட்டு – 10)
என்று ‘மதத்தின் பேரால் கூட்டம் சேர்ப்போரைத் தம் கண்ணில் சிந்தும் கோபக்கனலால் கட்டழிக்க வந்த பெண்ணே’ என்று பெண் குழந்தையைப் பாராட்டுகிறார் பாரதிதாசன்.
வாதனை சொல்லி வணங்கி நின்றால் தெய்வ
சோதனை என்று அவர் சொல்லுவார் – பணச்
சாதனையால் உம்மை வெல்லுவார் – கெட்ட
போதனையால் தினம் கொல்லுவார்
(பாரதிதாசன் கவிதைகள், 59 பலிபீடம் – 5)
என்று பாடியுள்ளார். இந்த மதவாதிகள் ஏமாளிகளை ஏமாற்றுவார்கள்; இளைத்தவர்களை மிரட்டுவார்கள் என்னும் உண்மையை அறிந்தவர் பாரதிதாசன். எனவே,
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே
(பாண்டியன் பரிசு இயல் 56)
(மருட்டுகின்ற = மயக்குகின்ற)
என்று வருத்தப்பட்டுப் பாடியுள்ளார். இத்தகைய மதவாதிகள் உண்மையைப் பொய் என்று கூறுவார்கள்; திருடரைச் சாமி என்று கூறுவார்கள்; மூடத்தனத்தைப் பரப்புபவர்களைப் பாவலர் என்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
விழித்திருக்கும் போதிலேயே – நாட்டில்
விளையாடும் திருடரை ‘சாமி’ என்கின்றார்.
அழியாத மூடத்தனத்தை – ஏட்டில்
அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை
முழுது ஆய்ந்த பாவலர் என்பார் – இவர்
முதல் எழுத்து ஓதினும் மதி இருட்டாகும்
(பாரதிதாசன் கவிதைகள், 49 மாண்டவன் மீண்டான் – 5)
இத்தகைய மதவாதிகளிடம் தமிழர்கள் விழிப்பாய் இருக்கவேண்டும் என்று பாரதிதாசன் உணர்த்தியுள்ளார்.
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே
(பாரதிதாசன் கவிதைகள், 42 பெண்குழந்தைத் தாலாட்டு – 8)
மூடத்தனம் மக்களிடம் தொடர்ந்து வந்து தேங்கியுள்ளது. எனவே அது முடைநாற்றம் வீசுகிறது என்று இந்தப் பாடலில் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். இந்த முடைநாற்றம் போகவேண்டும் என்றால் நம்மை விட்டு மூடத்தனம் அகலவேண்டும். அதன் பின்னர் அங்கே பகுத்தறிவு தோன்றும். இதைப் பெண் குழந்தைத் தாலாட்டில் பாரதிதாசன் பாடியுள்ளார். பெண்களிடம் காணப்படுகின்ற மூடத்தனத்தைப் பெண்களே போக்க முன்வர வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று பெண்குழந்தையை நோக்கிப் பாடியுள்ளார் பாரதிதாசன்.
பேடி வழக்கங்கள் மூடத்தனம் – இந்தப்
பீடைகளே இங்குச் சாத்திரங்கள்
(பாரதிதாசன் கவிதைகள் 11, மாந்தோப்பில் மணம் – 9)
(பீடை = (மூடத்தனமாகிய) தீமை)
என்று மூடத்தனத்தைப் பீடைகள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மூட வழக்கங்களையே நாம் சாத்திரம் என்று போற்றுகிறோம். இவற்றைப் பின்பற்றும் சமுதாயம் எவ்வாறு புதுமைகளை ஏற்றுக் கொள்ளும்? எனவே தான், விதவைகள் மறுமணத்தைப் பெண்களே எதிர்க்கிறார்கள் என்கிறார் பாரதிதாசன்.
புற்றரவு ஒத்தது தாயர் உள்ளம் – அங்கு,
புன்னகை கொண்டது மூடத்தனம்
(பாரதிதாசன் கவிதைகள், 13 காதல் குற்றவாளிகள் – 6)
கணவனை இழந்த மகள், மறுமணம் செய்து கொள்ள விரும்புவதைத் தடுக்கும் தாயின் உள்ளத்தைப் புற்றில் குடிகொண்ட பாம்பைப் போல் கொடியது என்கிறார் பாரதிதாசன்.
காதல் என்னும் மாமலையில் ஏறிநின்றீர்
கடுமூட வழக்கத்துக்கு அஞ்சலாமோ?
(காதல் நினைவுகள். பக். 21)
என்று காதலர்களைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார். அச்சத்துக்கு எது காரணமாக இருக்கிறது? என்ற கேள்வியை எழுப்பி, மடமைதான் அச்சத்தின் வேர் என்கிறார் பாரதிதாசன். அறியாமை உடையவர்களே அச்சத்தில் துன்பப்படுகிறார்கள் என்ற கருத்தை,
மடமைதான் அச்சத்தின் வேராம் – அந்த
மடமையால் விளைவதே போராம்
(இசையமுது பக். 54)
என்று பாடியுள்ளார்.
மானிடம் என்றொரு வாளும் – அதை
வசத்தில் அடைந்திட்ட உன்னிரு தோளும்
வானும் வசப்பட வைக்கும் – இதில்
வைத்திடும் நம்பிக்கை வாழ்வைப் பெருக்கும்
(பாரதிதாசன் கவிதைகள், 51 மானிடசக்தி – 1)
என்று மானிட வாழ்வின் பெருமையையும் தோள் வலிமையையும் எடுத்துக் காட்டியுள்ளார் பாரதிதாசன்.
உலகில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழ்கின்றன. இவை எவற்றிற்கும் இல்லாத சிறப்பாகிய பகுத்தறிவை மனிதன் மட்டுமே பெற்றுள்ளான். அந்தப் பகுத்தறிவைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நம்பிக்கை ஊட்டுகிறார் பாரதிதாசன்.
மானிடருக்கு இனிதாக – இங்கு
வாய்ந்த பகுத்தறிவாம் விழியாலே
வான்திசை எங்கணும் நீபார் – வாழ்வின்
வல்லமை ‘மானிடத்தன்மை’ என்றே தேர்
(பாரதிதாசன் கவிதைகள் 51, மானிடசக்தி -3)
(தேர் = அறிந்துகொள்)
என்று நமது வாழ்க்கைக்கு மானிடத் தன்மைதான் வலிமை சேர்க்கும் என்பதை விளக்கியுள்ளார். மனிதர்களில் சிலர் தங்களை அடிமைகளாய் நினைத்துக் கொண்டு கூனிக் குறுகி வாழ்வதைக் கண்ட பாரதிதாசன் அவர்களுக்கும் நம்பிக்கை ஊட்டியுள்ளார்.
காட்சி
மனிதரில் நீயும்ஓர் மனிதன்; மண்அன்று
இமைதிற எழுந்து நன்றாய் எண்ணுவாய்
தோளை உயர்த்துச் சுடர்முகம் தூக்கு
மீசையை முறுக்கி மேலே ஏற்று
(பாரதிதாசன் கவிதைகள் 54, உலகம் உன்னுடையது)
என்னும் பாடல் வரிகளைப் படிக்கும் ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் பகுத்தறிவுப் பாதையில் செல்வார்கள். அந்த அளவிற்கு வீரத்தைக் கலந்து பாடியுள்ளார் பாரதிதாசன்.
பச்சை விளக்காகும் – உன்
பகுத்தறிவு தம்பி!
பச்சை விளக்காலே – நல்ல
பாதைபிடி தம்பி
(பாரதிதாசன் கவிதைகள் – 3, ஏற்றப்பாட்டு, 77,78)
என்று இளைஞர்களுக்கு வழிகாட்டியுள்ளார். இளைஞர்கள் நடந்து செல்லும் பாதையில் மதம் என்னும் முள் படர்ந்திருக்கும். இந்த மதமாகிய முள்ளை அகற்றுவதற்குப் பகுத்தறிவுதான் துணை என்பதை,
மதமெனும் முள்ளுப் படர்ந்திருக்கும்
வழிக்கெல்லாம் பகுத்தறிவே துணை ஆகும்
(தேனருவி – 103)
என்று பாரதிதாசன் பாடியுள்ளார். இவ்வாறு பாரதிதாசன் தெரிவித்த பிறகும் பகுத்தறிவைப் பின்பற்றாத மக்களைப் பார்த்து,
பாழ்படும் பழமை சூழ்வது திறமா?
பகுத்தறிவால் நலம் வகுப்பது திறமா?
(பாரதிதாசன் கவிதைகள் 50, ஆய்ந்துபார் – 9)
என்று கேள்வி கேட்டு, சிந்தனையைத் தூண்டியுள்ளார். மனித சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால் நாளிதழ்களும் வார இதழ்களும், மாத இதழ்களும் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புதல் வேண்டும். அவ்வாறு பரப்பாமல் மூடநம்பிக்கையைப் பரப்பும் இதழ்களால் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த இயலாது.
பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஏடுகளால்
எள்ளை அசைக்க இயலாது
(பாரதிதாசன் கவிதைகள் 1, சஞ்சீவி பர்வதத்தின் சாரல். பக்.14)
(எள் = எள் என்னும் சிறிய தானியம்)
என்று ஆணித்தரமாகப் பாரதிதாசன் பாடியுள்ளார்.
சாதிமத பேதங்கள் மூடவழக்கங்கள்
தாங்கி நடைபெற்றுவரும் சண்டை உலகிதனை
ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்; பின்னர்
ஒழித்திடுவோம், புதியதோர் உலகம் செய்வோம்
பேதமிலா அறிவுடைய அவ்வுலகத்திற்குப்
பேசு சுயமரியாதை உலகுஎனப் பேர்வைப்போம்
ஈதேகாண் சமூகமே யாம் சொன்னவகையில்
ஏறு நீ! ஏறு நீ! ஏறு நீ! ஏறே
(பாரதிதாசன் கவிதைகள், 52 முன்னேறு – 1)
(ஊதை = வாடைக்காற்று)
என்னும் பாடலில் சுயமரியாதை உடையவர்கள் சாதியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; மதத்தை ஒதுக்கி விடுவார்கள்; மூடநம்பிக்கையில் வீழமாட்டார்கள் என்று பாரதிதாசன் பாடியுள்ளார். மேலும் இத்தகைய சுயமரியாதை கொண்டவர்கள் நிறைந்ததுதான் சமூகம் என்று இளைஞர்களுக்குச் சுட்டிக் காட்டியுள்ளார்.
சுயமரியாதை கொள் தோழா – நீ
துயர் கெடுப்பாய் வாழ்வில் உயர்வு அடைவாயே
(பாரதிதாசன் கவிதைகள், 48. வாழ்வில் உயர்வு கொள் – 1)
என்னும் வரிகளில் சுயமரியாதை கொண்டவனால் தனது துன்பங்களை வெல்லமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு பிரிவுகளை மனிதர்களிடையே வளர்த்துக் கொண்டு நாம் வாழ்கிறோம். இந்தப் பிரிவுகளால் நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள் பல எழுகின்றன. இக்கருத்து வேறுபாடுகளுடன் வாழும் வாழ்க்கை என்பது வாழ்வு ஆகாது. வேறு எதுதான் உயர்ந்த வாழ்க்கை? என்ற கேள்விக்கு விடையை எதிர்பார்த்து, பாரதிதாசன் நம்மிடம் கேட்கிறார்.
சூழும் நாற்பேதம் தொடர்வது வாழ்வோ?
சுயமரியாதையால் உயர்வது வாழ்வோ?
(பாரதிதாசன் கவிதைகள், 50 ஆய்ந்து பார் – 10)
(நாற்பேதம் = நால்வகைச் சாதிபேதம்)
என்று தான் எதிர்பார்க்கும் பதிலைக் கூறச் செய்கிறார். சுயமரியாதையால் உயரமுடியும் என்று தெளிவுபடுத்துகிறார்.
எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான
இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்
(பாண்டியன் பரிசு, இயல் – 56)
என்று பாடியுள்ளார்.
இந்த உலகில் உள்ள பொருள்கள் எல்லாம் எல்லார்க்கும் பொது என்ற எண்ணம் எல்லாரிடமும் தோன்ற வேண்டும். அவ்வாறு தோன்றினால் ஒருவருக்கு ஒருவர் சுரண்டும் எண்ணம் தோன்றாது.
நல்லவர் நாட்டினை வல்லவர் தாழ்த்திடும்
நச்சு மனப்பான்மை
தொல்புவி மேல் விழும் பேரிடியாம்; அது
தூய்மைதனைப் போக்கும்!
. . . . . . . . . . . . . . . . .
செல்வங்கள் யாவர்க்கும் என்றே சொல்லிப் பேரிகை
திக்கில் முழக்கிடுவாய்
(பாரதிதாசன் கவிதைகள், 44, பேரிகை – 3)
என்னும் பாடலில் வல்லவர்களால் நல்லவர் நாடு அடிமைப்படுத்தப்படக் கூடாது; அவ்வாறு அடிமைப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றால் செல்வம் எல்லாருக்கும் பொது என்று இருக்க வேண்டும் என்கிறார்.
புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்
புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம்
இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனது என்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்
(பாரதிதாசன் கவிதைகள் 58, புதிய உலகு செய்வோம்)
என்று புதிய உலகு படைக்கப் பாடியுள்ளார் பாரதிதாசன்.
புதிய புதிய பொருள்கள் பல படைக்க வேண்டும். அந்தப் பொருள்கள் அனைத்தும் பொதுநலத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற உயர்ந்த கருத்தைப் பாரதிதாசன்,
புதுவினை செய்க அஃது
பொதுநலம் ஆதல் வேண்டும்
இதுசெய்க போர்கள் இல்லை
இன்ப நல்லுலகைக் காண்பாய்
(நாள்மலர்கள், பக். 134)
என்று பாடியுள்ளார். இப்படிப்பட்ட தன்மை உலகில் மலர வேண்டும். அவ்வாறு மலர்ந்தால் இன்ப உலகமாக இருக்கும் என்று தெளியலாம்.
தலையாகிய அறமேபுரி
சரிநீதி உதவுவாய்
சமமே பொருள் ஜனநாயகம்
எனவே முரசு அறைவாய்
இலையே உணவு இலையே கதி
இலையே எனும் எளிமை
இனிமேல் இலை எனவே முரசு
அறைவாய் முரசு அறைவாய்
(பாரதிதாசன் கவிதைகள், 64, வாளினை எடடா)
என்று பாடியுள்ளார். இந்தக் கருத்தை முரசு அறைந்து எல்லாருக்கும் தெரிவிக்கும்படியாகவும் பாரதிதாசன் தெரிவித்துள்ளார். பகுத்தறிவாளர்கள் நிறைந்த சமுதாயம்தான் பொதுஉடைமையை நோக்கிச் செல்லும் என்னும் சிந்தனை கொண்ட பாரதிதாசன்,
எல்லார்க்கும் தேசம்; எல்லார்க்கும் உடைமை எலாம்
எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே
எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்த்திடுக
எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக
(பாரதிதாசன் கவிதைகள், வீரத்தாய் காட்சி – 10)
என்று நாட்டு மக்கள் யாவர்க்கும் இந்தத் தேசம் பொதுவானது என்று தெரிவித்துள்ளார். இந்த நாட்டின் உரிமையும் உடைமையும் எல்லார்க்கும் பொதுவானது ஆகும். எல்லார்க்கும் கல்வி, சுகாதாரம் வாய்க்க வேண்டும் என்றும் எல்லாருக்கும் நல்ல இதயம் பொருந்திட வேண்டும் என்றும் பாடியுள்ளார்.
கடவுள் கடவுள் என்று எதற்கும்
கதறுகின்ற மனிதர்காள்
கடவுள் என்ற நாமதேயம்
கழறிடாத நாளிலும்
உடைமை யாவும் பொதுமையாக
உலக நன்று வாழ்ந்ததாம்
கடையர் செல்வர் என்ற தொல்லை
கடவுள் பேர் இழைத்ததே!
(பாரதிதாசன் கவிதைகள், 45 தளை அறு – 1)
(நாமதேயம் = பெயர், கழறிடாத = சொல்லிடாத, கடையர் = இழிந்தோர்)
என்று பாடியுள்ளார்.
கடவுள் பேரைச் சொல்லித்தான் மக்களை ஏழை என்றும் செல்வர் என்றும் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார் பாரதிதாசன். மேலும், கடவுள் பேரைச் சொல்லாத பழங்காலத்தில் கூட, செல்வங்கள் எல்லாருக்கும் பொதுவாக இருந்தன. ஆனால், இன்று சமுதாயம் ஏற்றத்தாழ்வு நிறைந்தது ஆகிவிட்டது என்கிறார்.
காட்சி
நடவு செய்த தோழர் கூலி
நாலணாவை ஏற்பதும்
உடல் உழைப்பு இலாத செல்வர்
உலகை ஆண்டு உலாவலும்
கடவுள் ஆணை என்று உரைத்த
கயவர் கூட்டம் மீதிலே
கடவுள் என்ற கட்டறுத்துத்
தொழிலாளரை ஏவுவோம்
(பாரதிதாசன் கவிதைகள், 45 தளை அறு – 5)
என்னும் வரிகளில் கடவுள் என்னும் கருத்துருவை இல்லாமல் ஆக்குவதற்குத் தொழிலாளர்களை ஏவுதல் வேண்டும் என்கிறார் பாரதிதாசன்.
கடவுளை நம்பும் மக்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள். ‘உன் கடவுள் தாழ்ந்தவன்; என் கடவுள் உயர்ந்தவன்’ என்று இல்லாத கடவுளைச் சொல்லிச் சண்டை போடுகிறார்கள். இவ்வாறு தங்களுக்குள் சண்டை ஏற்படுத்தும் கடவுளை ஒழிக்க வேண்டும் என்கிறார் பாரதிதாசன்.
பிணக்கு ஏற்படுத்தும் கடவுளைக்
கணக்குத் தீர்த்தல் மனிதர் தம் கடமையே
(நாள் மலர்கள், பக். 121)
என்று கடவுளுக்குக் கணக்குத் தீர்ப்பது மனிதரின் கடமை என்கிறார்.
தன்னைக் காக்கத் தெரியாக் கடவுள்
தன்னை நம்பிய மக்களைக் காத்ததா?
(நாள் மலர்கள், பக். 121)
என்று கடவுளால் தன்னையே காத்துக் கொள்ள இயலவில்லை. அவரால் எப்படி அவரை நம்பும் மக்களைக் காப்பாற்ற முடியும்? என்று பாரதிதாசன் கேட்கிறார். இதன்மூலம் மக்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக வேண்டும் என்று எண்ணியுள்ளார்.
கடவுள்வெறி சமயவெறி
கன்னல் நிகர் தமிழுக்கு
நோய்! நோய்! நோயே!
(தமிழியக்கம் – 24)
என்று பாடியுள்ளார். கடவுள் நம்பிக்கையும் சமயநெறியும் தமிழ் மொழியில் பிறமொழி கலப்பதற்குக் காரணமாய் அமைந்துவிட்டன என்ற கருத்தைப் பாரதிதாசன் இந்த வரிகளில் தெரிவித்துள்ளார்.
மதவாதிகள் மக்களின் உழைப்பையும் பணத்தையும் கடவுளைக்காட்டி, சுரண்டுவதைப் பாரதிதாசன் தமது கவிதைகளில் கண்டித்துள்ளார்.
மக்கள் பகுத்தறிவை இழந்து வாழ்வதற்கு அடிப்படைக் காரணம் அவர்களின் மூடநம்பிக்கை ஆகும். இந்த மூடநம்பிக்கை மக்களை விட்டு ஓடுவதற்குப் பாரதிதாசன் பாடியுள்ளார்; நல்ல நம்பிக்கையை மக்கள் மனங்களில் விதைத்துள்ளார்.
மக்கள் வாழ்க்கையின் பச்சை விளக்காக விளங்குவது பகுத்தறிவு. இந்தப் பகுத்தறிவின் துணையுடன் வாழ்வில் உயரலாம் என்று அவர் உணர்த்தியுள்ளார்.
மனிதன் தனது மதிப்பை உணர்ந்து வாழவேண்டும் என்று பாரதிதாசன் சுயமரியாதைச் சிந்தனையைத் தூண்டியுள்ளார்.
பகுத்தறிவாளர்கள் நிறைந்த சமுதாயம் பொதுவுடைமைச் சமுதாயமாய் மலரும் என்ற கருத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். பகுத்தறிவுக்குத் தடையாய் விளங்கும் கடவுள் நம்பிக்கையைத் தகர்க்கக் கருதிய பாரதிதாசன் கடவுள் இல்லை என்று பாடியுள்ளார்.
பாடம் - 5
காலை முதல் இரவு வரை ஒரு வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளின் மையமாகத் தலைவி விளங்குகிறாள். அவள் தனது ஒவ்வொரு கடமையையும் சரியாகச் செய்து குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுகிறாள். கணவனுக்கு ஏற்றபடியும் குழந்தைகளுக்கு ஏற்றபடியும் நடந்து கொள்கிறாள் என்பதைப் பாரதிதாசன் அழகாகப் பாடியுள்ளார்.
நான் நல்லவன்; என் மனைவி நனி நல்லள்;
நாங்கள் என்றும் மனநலம் உடையோம்; ஆதலினால் அன்றோ,
எம்மக்கள் நல்லவர்கள்; எம்மக்கள் கொண்ட
பொன்னுறவைப் பெற்றோரும் நல்லர் நனிநல்லர்
பொலியும் இனியும் குடும்பம்
(குடும்ப விளக்கு “முதியோர் காதல்”)
(பொன்னுறவைப் பெற்றோர் = மகளின் கணவனையும் மகனின் மனைவியையும் பெற்றவர்கள்)
என்னும் வரிகளில் பாரதிதாசன் நல்ல குடும்பத்தைக் காட்டியதுடன் எதிர்காலத்திலும் அக்குடும்பம் சிறந்து விளங்கும் என்று குறிப்பிட்டுள்ளதைக் காணமுடிகிறது.
காட்சி
இல்லதுஎன் -இல்லவள் மாண்பானால்! உள்ளதுஎன் -
இல்லவள் மாணாக் கடை
(குறள்: 53)
(இல்லவள் = குடும்பத்தலைவி, மாண்பு = நற்பண்பு, மாணாக்கடை = நற்பண்பு இல்லை என்றால்)
என்னும் திருக்குறளில் நல்ல பண்பு கொண்ட ஒரு பெண், ஒரு குடும்பத்தில் இருந்தால் அந்தக் குடும்பத்தில் இல்லாதது எதுவும் இல்லை; நல்ல பண்பு இல்லாத ஒரு பெண், ஒரு குடும்பத்தில் இருந்தால் அந்தக் குடும்பத்தில் எல்லாச் செல்வமும் இருந்தாலும் அவற்றால் எந்தப் பயனும் இருக்காது என்று திருவள்ளுவர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் காட்டிய நல்ல பெண்மணிக்கு இலக்கணமாகக் குடும்ப விளக்கின் தலைவி அமைந்துள்ளாள். எல்லாக் கடமைகளையும் தலைவி முறையாகச் செய்து வருவதால் அந்த வீட்டில் எல்லோரும் இன்பமாக வாழ்வதைப் பாரதிதாசன் காட்டியுள்ளார்.
குடும்பத் தலைவிக்கு என்று, வீட்டில் பல கடமைகள் உள்ளன. அந்தக் கடமைகளை அவள் சரியாகச் செய்வதற்கு நல்ல பண்புகள் அவளிடம் இருத்தல் வேண்டும். தலைவியின் கடமைகளையும் நல்ல பண்புகளையும் பாரதிதாசன் குடும்ப விளக்கில் தெளிவாக விளக்கியுள்ளார்.
பாவேந்தர் பாரதிதாசன் தமது குடும்ப விளக்கில் கதிரவன் தோன்றும் முன்பே, துயில் எழுந்த தலைவியைக் காட்டுகிறார்.
இந்த உலகத்தை இருளானது போர்வையாகப் போர்த்தியிருக்கிறது. அந்த இருள் போர்வை இன்னும் விலகவில்லை. அதற்கு முன்பாகவே அந்தக் குடும்பத் தலைவி எழுந்து விட்டாள் என்று குறிப்பிட்டு உள்ளார் பாரதிதாசன்.
இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை
இரவுபோர்த்த இருள் நீங்கவில்லை
ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல
நள்ளிரவு மெதுவாய் நடந்து கொண்டிருந்தது
தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த
கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது
புலர்ந்திடப் போகும்பொழுது கட்டிலில்
மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள்
(குடும்ப விளக்கு I, ‘காலை மலர்ந்தது’)
இந்தப் பாடலில் கேள்வியறிவு வளரும்போது மடமை நீங்குவதுபோல் நள்ளிரவு மெதுவாய்க் கழிந்து கொண்டிருந்தது என்று பாரதிதாசன் பாடியுள்ளார். மேலும், அதிகாலையில் கதிரவன் ஒளிபடும்போது இருள் விலகுவதை அழகிய உவமையால் பாரதிதாசன் தெளிவுபடுத்தியுள்ளார்.
தொட்டியில் உள்ள நீலச்சாயத் தண்ணீரில் சுண்ணாம்புத் தண்ணீரை ஊற்றும்போது நீலம் மாறி வெண்மை பளிச்சிடுவதைப் போல் காலை மலர்ந்தது என்று அவர் பாடியுள்ளார்.
இப்படிப்பட்ட அதிகாலையில் துயில் எழுந்தவுடன் பலரிடம் காணப்படும் சோம்பல் அந்தப் பெண்ணிடம் இல்லை. எழுந்த உடனே சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்கினாள் என்பதைப் பாரதிதாசன்,
காட்சி
தூக்கத்தோடு தூங்கியிருந்த
ஊக்கமும் சுறுசுறுப்பு உள்ளமும் மங்கை
எழுந்ததும் எழுந்தன இரு கைவீசி
(குடும்ப விளக்கு I, ‘காலை மலர்ந்தது’)
என்று பாடியுள்ளார்.
அந்தத் தலைவியின் தூக்கத்துடன் ஊக்கமும் சுறுசுறுப்பும் தூங்கியிருந்தனவாம். அந்தத் தூக்கம் கலைந்து, விழிப்பு ஏற்பட்டவுடன், அவளுடன் ஊக்கமும் உற்சாகமும் கைவீசி எழுந்தனவாம்.
இருள் இன்னும் முழுவதும் விலகவில்லை. எனவே அந்தத் தலைவி, விளக்கின் ஒளியைச் சற்றுப் பெரிது ஆக்கினாள். அந்த விளக்கின் ஒளி,
சின்ன மூக்குத் திருகொடு தொங்கும்
பொன்னால் செய்த பொடிமுத்தைப் போல்
(குடும்ப விளக்கு I, ‘கோலமிட்டாள்’)
இருந்தது என்று உவமை நயம் தோன்றுமாறு பாரதிதாசன் பாடியுள்ளார்.
இவ்வாறு அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்புடன் செயல்படும் தலைவியைப் பாரதிதாசன் படைத்துக் காட்டியுள்ளார்.
காட்சி
அரிசி மாக்கோலம் அமைத்தனள்; அவளுக்குப்
பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி
(குடும்ப விளக்கு I, ‘கோலமிட்டாள்’)
என்னும் வரிகளில் பாரதிதாசன் பாடியுள்ளார்.
கதிரவன் யாருக்கும் பரிசாகத் தன் ஒளியை வழங்குவதில்லை. இயற்கையாகத்தான் எல்லாருக்கும் ஒளி வழங்குகிறான். பாரதிதாசன் தனது குடும்ப விளக்கில் தலைவியின் சிறப்பை வெளிப்படுத்துவதற்காகவே கதிரவன் பரிசு வழங்கியதாகக் கற்பனை பொங்கப் பாடியுள்ளார்.
வாழிய வையம் வாழிய என்று
பாவலர் தமிழில் பழச்சுவை சேர்த்தாள்
(குடும்ப விளக்கு I, ‘காலைப்பாட்டு’)
என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு, இனிய இசைபாடி எல்லோரையும் எழுப்பிய அவள் யாழினை உறையில் இட்டாள். வீட்டு வேலைகள் செய்ய எழுந்தாள்.
வீட்டைச் சுத்தம் செய்தாள். பாத்திரங்களைத் துலக்கினாள். மாட்டுத் தொழுவத்திற்குச் சென்று பால் கறந்து கொண்டு வந்து காய்ச்சினாள். அடுப்பைப் பற்ற வைத்து அப்பம் சுட்டாள். குடிப்பதற்குக் கொத்துமல்லி நீர் காய்ச்சி, அதில் காய்ச்சிய பாலையும் சர்க்கரையையும் கலந்தாள்.
காட்சி
அதிகாலையில் இனிய இசைபாடி ஒரு நாளைத் தலைவி தொடங்குவதாகப் பாரதிதாசன் காட்டியுள்ளார். அந்த வேளையிலும் தமிழ் மொழியை மறக்காமல், தலைவி பாடிய பாடல் தமிழ்ப் பாடல் என்பதையும் தெரிவித்துள்ளார்.
கணவன் குளித்ததும், கிளி போன்ற தனது பிள்ளைகளை அழைத்தாள். அவர்களின் பொன்னுடல் நோகாமல் சீயக்காய் தேய்த்துக் குளிப்பாட்டினாள். அங்கே பறந்த சிட்டுக் குருவியைக் காட்டியும் சின்னஞ்சிறு கதைகளைச் சொல்லியும் அவர்களை மகிழ்ச்சியுடன் குளிக்கச் செய்தாள் என்பதை,
சிட்டுக் காட்டியும் சிறுகதை சொல்லியும்
தொட்டுத் தேய்த்துத் துளிருடல் நலுங்காது
நின்ற திருக்கோலப் பொன்னின் சிலைகட்கு
நன்னீராட்டி நலஞ்செய்த …………..
(குடும்ப விளக்கு I, ‘குழந்தைகட்குத் தொண்டு’)
என்னும் வரிகளின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதில் குளித்துக் கொண்டிருந்த குழந்தைகளின் ஒளி பொருந்திய உடலை ‘நின்ற திருக்கோலப் பொன்னின் சிலைகள்’ என்று குறிப்பிட்டுள்ள அருமை கற்போரை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்யும்.
கணவனும் குழந்தைகளும் குளித்து முடித்து ஆடை மாற்றி வருவதற்குள் அவர்களுக்கு வேண்டிய உணவு வகைகளை எடுத்து வைத்தாள். காலைச் சிற்றுண்டியை அனைவருக்கும் பரிமாறினாள்.
அறைவீடு கழகம்;
தவழ்ந்தது சங்கத் தமிழ்ச் சுவை; அள்ளி
விழுங்கினர் பிள்ளைகள்
(குடும்ப விளக்கு I, ‘தாய்தான் வாத்திச்சி’)
என்று பாடியுள்ளார் பாரதிதாசன்.
பள்ளிக்குச் செல்லும் நேரம் வந்ததும் குழந்தைகளின் புத்தகப் பையை எடுத்துக் கொடுத்து, அவர்களின் கையில் சிறிய குடையையும் கொடுத்து, பள்ளிக்கு அனுப்பினாள். தெருமுனை வரை சென்ற தலைவி, குழந்தைகள் சென்ற பின் வீட்டுக்கு வந்து கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தாள்.
கிளைமாறும் பசுங்கிளிபோல் ஓடி
அளவளாவினாள் ஆளனிடத்தில்
(குடும்ப விளக்கு I ‘பள்ளிக்குப் பிள்ளைகள்’)
என்று பாடியுள்ளார்.
பச்சைக் கிளியானது ஒரு கிளையை விட்டுத் தாவி, வேறு ஒரு கிளையில் அமர்வதைப் போல் பிள்ளைகளைக் கவனித்து அனுப்பிய அந்தத் தலைவி, தனது கணவனைக் கவனிக்கத் தொடங்கினாள் என்று தெரிவித்துள்ளார்.
கடைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான் அவளுடைய கணவன். அவனது சட்டை கிழிந்திருப்பதைத் தலைவி கண்டாள். உடனே அந்தச் சட்டையைக் கையில் வாங்கி, அந்தக் கிழிசலைத் தையல் எந்திரத்தில் வைத்துத் தைத்துக் கொடுத்தாள். கணவன் அந்த ஆடையை அணிந்து கொண்டு கடைக்குப் புறப்பட்டுச் சென்றான்.
காட்சி
ஆடிக் கொண்டிருந்த தையல்
பொறியினை அசைக்கும் ஓர்கை;
ஓடிக் கொண்டிருக்கும் தைத்த
உடையினை வாங்கும் ஓர்கை;
பாடிக் கொண்டே இருக்கும்
பாவையின் தாமரை வாய்;
நாடிக் கொண்டே இருக்கும்
குடித்தன நலத்தை நெஞ்சம்
(குடும்ப விளக்கு I, ‘தையல் வேலை’)
என்னும் வரிகளில் அந்தத் தலைவியின் நெஞ்சத்தில் ஆழ்ந்து இருந்த குடும்ப ஆர்வத்தையும் பாரதிதாசன் அழகாகக் காட்டியுள்ளார்.
குடும்ப வேலைகளுக்கு இடையே ஒரு தாய்க்குத் தனது பிள்ளைகள் பற்றிய எண்ணம் வருவது இயல்பு. அந்த இயல்பான தன்மை கெடாமல் தலைவிக்கு எழுந்த பிள்ளைகளின் நினைவை வெளிப்படுத்தியுள்ளதைப் பாரதிதாசன் கவிதையில் காணமுடிகிறது.
தூரத்தில் மாமனாரும் மாமியாரும் வருவதைக் கண்டாள்; ஓடிச் சென்று வரவேற்றாள்.
“எனது நாத்தியார், தங்கள் பேரர் எல்லோரும் நலமா?” என்று அவர்களைப் பார்த்து கேட்டாள்.
மாமனாரும் மாமியாரும் குளிப்பதற்கு வெந்நீரை அண்டாவில் சூடாக்கினாள். பிறகு அவர்களைக் குளிக்க அழைத்தாள். குளித்து முடித்த அவர்களுக்கு உணவைப் பரிமாறினாள். உண்டு முடித்த அவர்கள் ஓய்வு எடுப்பதற்கு மெத்தை விரித்தாள் அந்தத் தலைவி.
குடும்பக் கடமைகளுள் ஒன்றுதான் ஒரு பெண் தனது மாமனார் மாமியாரைக் கவனித்தல். அந்த வேலையையும் பொறுப்பாகத் தலைவி செய்வதைப் பாவேந்தர் தெரிவித்துள்ளார்.
பயணம் செய்த களைப்பால் படுத்திருந்த மாமியார் தலைவலியால் வருந்தினார். உடனே மாமியாரிடம் போய் அவரது நெற்றியில் பற்றுப் போட்டாள் தலைவி. தலைவலி நீங்கி நிம்மதி அடைந்தார் மாமியார்.
கடையில் செலவு செய்த பணத்திற்குக் கணக்கையும் எழுதி வைத்தாள் அந்தத் தலைவி.
கடையில் பலவகைக் காய்கறிகளை வாங்கியிருந்தாள். அவற்றில் தனது கணவனுக்கு எந்தக் காய்கறிகள் பிடிக்கும் என்றும், குழந்தைகள் எவற்றை விரும்பி உண்பார்கள் என்றும் தேர்ந்து எடுத்துச் சமைத்தாள். மாமனார், மாமியார் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாத காய்கறிகளை ஒதுக்கினாள்.
கிழங்கினை நன்கு அவித்துச் சமைத்தாள். கீரையைக் கடைந்து வைத்தாள். பச்சடி செய்து வைத்தாள். கொல்லையில் காய்த்திருந்த முருங்கைக் காயைப் பறித்தாள். அதன் மேல்தோலைச் சீவிப் பக்குவமாகக் கூட்டு வைத்தாள்.
வழிந்தோடும் புதுவெள்ளத்தை
வரவேற்கும் உழவரைப் போல்
எழுந்தோடி மக்கள் தம்மை
ஏந்தினாள் இரு கையாலும்
(குடும்ப விளக்கு – I, ‘அள்ளி அணைத்தாள் பிள்ளைகளை’)
என்னும் வரிகளில், குழந்தைகளைக் கண்ட தலைவியின் மகிழ்ச்சியைப் புது வெள்ளத்தைக் கண்ட உழவரின் மகிழ்ச்சியுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார் பாவேந்தர்.
குழந்தைகளிடம் பாட்டனும் பாட்டியும் வந்திருக்கும் செய்தியைத் தெரிவித்து அவர்கள் உள்ளத்தை மகிழச் செய்தாள். கடையிலிருந்து கணவனும் வீட்டுக்கு வந்தான். அவனிடம் ‘அம்மா, அப்பா’ வந்த செய்தியைத் தெரிவித்தாள் தலைவி. அவனது உள்ளமும் மகிழ்ச்சி அடைந்தது.
குழந்தைகள் உடனிருந்து
கொஞ்சியே உண்ணுகின்றார்
பழந்தமிழ்ப் பொருளை அள்ளிப்
படித்தவர் விழுங்குதல் போல்
(குடும்ப விளக்கு – I, ‘பிள்ளைக்கு அமுது’)
என்னும் வரிகளில் பாரதிதாசனின் கவிநயத்தையும் தமிழ்ப்பற்றையும் காணமுடிகிறது.
குழந்தைகள் உணவு உண்டதும் தலைவி தனது மாமனாரிடம் வந்தாள். அவரிடம், ‘கால் வலி இப்போது எப்படி இருக்கிறது?’ என்று கேட்டாள். உடுப்பதற்கு வேறு உடைகளைக் கொடுத்தாள். அவரது பசி தீர்வதற்கு உணவு படைத்தாள். அவர் உண்டு முடித்ததும், சாய்வு நாற்காலியில் சென்று உட்கார்வதற்கு உதவினாள்.
தலைவியிடம் அனுமதி பெற்றபின் கடையின் கணக்கர், வீட்டுக்கு உணவு உண்ணச் சென்றார்.
கடையில் பொருள் வேண்டி வந்தவர்க்கு எல்லாம் மகிழ்ச்சியுடன் பொருள் கொடுத்தாள். ஒவ்வொரு பொருளுக்கும் உரிய விலையைச் சொன்ன அவள் அந்தப் பொருள்களின் தர உயர்வையும் எடுத்துச் சொல்லிக் கொடுத்தாள் என்பதைப் பாரதிதாசன்,
காட்சி
மிளகுக்கு விலையும் கூறி
மேன்மையும் கூறிச் சற்றும்
புளுகாமல் புகன்ற வண்ணம்
புடைத்துத் தூற்றிக் கொடுப்பாள்
(குடும்ப விளக்கு – I, ‘அவள் வாணிபத் திறமை’)
என்று பாடியுள்ளார்.
சற்றுநேரம் ஓய்வு எடுத்த கணவன், கடைக்கு வந்ததும் அவனிடம் விற்ற பொருள்களின் கணக்கைத் தலைவி ஒப்படைத்தாள்; விரைவாக வீட்டுக்குத் திரும்பினாள்.
வெளியே வெயிலில் காயவைத்திருந்த வடகத்தையும் வற்றலையும் எடுத்துப் பாதுகாப்பாக வைத்தாள். வெளியில் கட்டப்பட்டிருந்த மாடுகளுக்கும் கன்றுகளுக்கும் தீனி வைத்தாள்.
அந்தக் கடற்கரையின் ஓரத்தை அழகிய பாடலால் குறிப்பிட்டுள்ளார் பாரதிதாசன்.
கடலிடைப் புனலில் ஆடிக்
குளிரினில் கனிந்த காற்றை
உடலிடைப் பூசுகின்ற
ஒலிகடல் கரையின் ஓரம்
(குடும்ப விளக்கு – I, ‘கடற்காற்று’)
என்னும் பாடலில் கடல்காற்று உடலில் பட்டதைப் பூசியது என்று பாரதிதாசன் பாடியுள்ளார் பாருங்கள்.
வெள்ளை நிற அன்னப் பறவைகளைப் போல் அழகாக அணிதிரண்டு வந்த கடல்அலைகளைக் குழந்தைகள் கண்டு மகிழ்ந்தார்கள். கடற்கரையில் வீசிய அந்த மாலைக் காற்றில் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
அப்போது, கதிரவன் மேற்கு வானில் மறைந்தான். பூமி நீல ஆடையை மாற்று உடையாய் அணியத் தொடங்கியது.
இவ்வளவு வேலைகளுக்கு இடையிலும் குழந்தைகளுடன் உலாவச் சென்றாள் தலைவி என்ற கருத்து, பாவேந்தரின் குடும்பம் பற்றிய தெளிவைக் காட்டுகிறது. மாலை வேளையில் ஓரிரு மணி நேரம் கடற்கரைக்குச் செல்வது குடும்பத்தில் குழந்தைகளுக்குப் புது உற்சாகம் தரும். அத்துடன் அது தலைவிக்கும் மனமகிழ்ச்சியைத் தரும் என்ற வகையில் கடற்கரைக்குச் சென்ற நிகழ்ச்சியைப் படைத்துள்ளார் பாரதிதாசன்.
கரும்பான இரவு தன்னைத்
திருவிளக் கேந்தி வந்து
தெருவினில் வரவேற்கின்றாள்
(குடும்ப விளக்கு – I, ‘இரவுக்கு வரவேற்பு’)
என்ற வரிகளின் மூலம் இரவுக்கு அளித்த வரவேற்பாகப் பாடியுள்ளார். குழந்தைகளை, அந்த விளக்கு ஒளியில் அமர்ந்து படிக்கச் செய்தாள். அடுக்களைக்குச் சென்று இரவு உணவைத் தயாரித்தாள் தலைவி.
கடையிலிருந்து கணவன் இரவில் வீட்டுக்குத் திரும்பினான். அவனுக்கும் குழந்தைகளுக்கும் உணவு அளித்தாள். உணவு உண்ட குழந்தைகள் தூங்கி விட்டார்கள். உணவை முடித்த தலைவன் பாடிக் கொண்டிருந்தான். மாமனார்க்கும் மாமியார்க்கும் உணவு படைத்து, தானும் உணவு உண்டாள் தலைவி.
பசுவுக்கும் கன்றுக்கும் வைக்கோல் போட்டாள். வெளிக்கதவைத் தாழிட்டாள். அன்புக் கணவனுடன் உள் அறையில் உட்கார்ந்து உரையாடினாள்.
அதற்குத் தலைவன் சொன்ன பதிலைப் பாரதிதாசனின் பாடல் வழியாகக் காண்போம்.
வரும்படி வீதப்படி நான் தரும்படிக்கு
வாக்களித்தபடி கணக்கர் திங்கள் தோறும்
கரம்படி வீதித் தமிழர் கழகத்தார்கள்
கடைப்படியை மிதித்தவுடன் எண்ணி வைப்பார்!
பெரும்படியாய்ச் செய்ததுண்டு; படிக்கணக்கைப்
பேசிவிட்டாய்க் கண்டபடி
(குடும்ப விளக்கு – I, ‘பெரும்படியான தொண்டு செய்துள்ளோம்’)
என்று தமிழ்க் கழகத்தார்க்குப் பொருள் வழங்கியதை எடுத்துக் கூறினான் தலைவன்.
அப்படியா! அறியாதபடியால் சொன்னேன்
அந்தமிழர் படிப்படியாய் முன்னேற்றத்தை
எப்படியாயினும் பெற்று விட்டால் மக்கள்
இப்படியே கீழ்ப்படியில் இரார்களன்றோ?
மெய்ப்படி நம் அறிஞரின் சொற்படி நடந்தால்
மேற்படியார் செப்படி வித்தை பறக்கும்.
முற்படில் ஆகாததுண்டோ? எப்படிக்கும்
முதற்படியாய்த் தமிழ் படிக்க வேண்டும்
(குடும்ப விளக்கு – I, ‘தமிழ் படிக்க வேண்டும் எல்லோரும்’)
என்னும் வரிகளில் தலைவியின் தமிழ் இன உணர்வையும் மொழி உணர்வையும் பாரதிதாசன் வெளிப்படுத்தியுள்ளார்.
குடும்ப அமைப்பு, கட்டுக் குலையாமல் சிறப்பாகத் திகழ்ந்தால் ஒரு நாடு முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் உள்ளவர்கள் குடும்பத்தைச் சீராக நடத்துவதுடன் பொதுநல எண்ணமும் உடையவர்களாக இருந்தால் எண்ணிய குறிக்கோளை ஒரு நாடு விரைவில் சென்று அடையும் என்பதைப் பாரதிதாசன் குடும்ப விளக்கில் சிறப்பாகக் காட்டியுள்ளார்.
இவ்வாறு சிறந்த புரிதல் கொண்ட குடும்பத்தை அவர் நல்ல குடும்பம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நல்ல குடும்பத்தைப் பல்கலைக் கழகத்துடன் ஒப்புமைப்படுத்தி ஒவ்வொரு குடும்பமும் அறிவின் விளக்கமாக அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
குடும்பத்தில் பலர் இருந்தாலும் பெண்ணே முதன்மை இடத்தைப் பெறுகிறாள் என்ற கருத்தில் குடும்ப விளக்கில் தலைவியைப் படைத்துக் காட்டியுள்ளார் பாரதிதாசன். அதிகாலையில் கதிரவன் தோன்றுவதற்கு முன்பே துயில் எழும் தலைவி ஒருநாள் முழுவதும் குடும்பத்தில் ஆற்றும் கடமைகளை ‘ஒருநாள் நிகழ்ச்சி’ என்ற தலைப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.
காலை முதல் மாலை வரை வீட்டு வேலை, குழந்தைகள் வளர்ப்பு என்று சுழன்று வேலை செய்த பெண், தன் கணவனுக்காகக் கடைக்குச் சென்று உதவியதையும் படைத்துக் காட்டியுள்ளார்.
குடும்பம் என்றால் மாமனார், மாமியார், மருமகள் என்ற மூவருக்குள் கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் ஏற்படும் என்பதை நாம் அறிவோம். அதற்கு மாறாக, கணவனின் பெற்றோரைத் தனது பெற்றோரைப் போல் கருதும் தலைவியையும், மருமகளைத் தனது மகளைப் போல் கருதும் மாமனார் மாமியாரையும் படைத்து, குடும்பச் சிக்கலுக்கு விடை கண்டுள்ளார் பாரதிதாசன்.
குடும்ப நலத்துடன் சமுதாய நலமும் இணைந்துள்ளது என்பதை நன்கு அறிந்தவர் பாரதிதாசன். எனவே, தமது குடும்ப விளக்கில் தலைவியைப் பொதுநல எண்ணம் கொண்டவளாகவும் தமிழ்ப் பற்று மிகுந்தவளாகவும் காட்டியுள்ளார்.
பாடம் - 6
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
(குறள்: 90)
(மோப்ப = முகந்து பார்த்தால், குழையும் = வாடும், அனிச்சம் = அனிச்ச மலர், முகம்திரிந்து = முகம் மலராமல், நோக்க = பார்த்தால், விருந்து = விருந்தினர்)
என்னும் குறளுக்கு ஏற்ப விருந்தோம்பல் பண்பு, குடும்பத்தில் விளங்க வேண்டும் என்கிறார் பாரதிதாசன்.
குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் கல்வி அறிவு பெற்றவர்களாகத் திகழ வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அந்தக் குடும்பம் எவ்வாறு அழிந்து போகும் என்பதைத் தெரிவிக்க ‘இருண்ட வீடு’ என்னும் காவியத்தைப் படைத்துள்ளார் பாரதிதாசன். இவை பற்றிய கருத்துகள் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன.
இக்கருத்துக்கு ஏற்ப, ‘குடும்ப விளக்கி’ல் தலைவன் நேர்மையான வாணிகம் செய்து வாழ்க்கை நடத்துவதைப் பாரதிதாசன் காட்டியுள்ளார்.
காட்சி
கடையிலிருந்து திரும்பிய கணவனிடம் தலைவி, “அம்மாவும் அப்பாவும் வந்திருக்கிறார்கள்” என்று சொன்னாள். அத்துடன் அவர்கள் வழிப்பயணத்தால் துன்பம் அடைந்தார்கள் என்பதையும் தெரிவித்தாள். தனது தந்தையார் நடந்து வந்ததால்தான் இந்தத் துன்பம் அடைந்தார் என்று அறிந்தான் தலைவன். தந்தையிடம் சென்று ஆதரவாக,
தள்ளாத பருவம்தன்னில்
நைந்திடும் வண்ணம் நீங்கள்
நடந்திடலாமா?
(குடும்ப விளக்கு I- ‘தலைவி சொன்ன புதுச் செய்தி’)
என்று கேட்டான். நல்ல மகனையும், மருமகளையும் பெற்ற நீங்கள் ஏன் அங்கும் இங்கும் அலைய வேண்டும்; இங்கேயே இருங்கள் என்று பொறுப்புடன் கூறும் குடும்பத் தலைவனைக் காட்டியுள்ளார் பாரதிதாசன்.
மகனுக்குத் திருமணம் செய்து வைத்த பெற்றோர் மகன் வீட்டிலேயே தங்கி வாழ்கின்றனர். அவ்வாறு வாழ்கின்ற அவர்கள் தங்கள் மகள் வீட்டிற்குச் செல்ல விரும்பிச் செல்கிறார்கள். சில நாள் அங்கே இருந்துவிட்டுத் திரும்பியவர்கள் அங்கே கிடைத்த அரிய பொருள்களைப் பார்த்து வாங்கி வருகிறார்கள். அந்தப் பொருள்களின் பட்டியலைப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார் பாருங்கள்! கும்பகோணத்துக் கூசா, மஞ்சள், குங்குமம், கண்ணாடி, மை வைத்த தகரப் பெட்டி, செஞ்சாந்தின் சீசா, செம்பு, வெற்றிலைச் சீவல் பெட்டி, இஞ்சி மூட்டை ஒன்று, ஒரு கோணிப்பை நிறைய எலுமிச்சை, நான்கு புதிய தவலைகள், பொம்மைகள், இரும்புப் பெட்டி, மிதியடிக் கட்டை, பிள்ளை விளையாட மரச் சாமான்கள், நெல் குத்து மரக்குந்தாணி இரண்டு, தலையணை, மெத்தைக்கட்டு, சல்லடை, புது முறங்கள், எலிப்பொறி, தாழம்பாய்கள், இலுப்பை எண்ணெய், கொடுவாய்க் கத்தி, இட்டலித் தட்டு, குண்டான், கலப்படம் இல்லாத நல்லெண்ணெய், கைத்தடி, செந்தாழம்பூ, முக்காலி, பச்சரிசி மாங்காய், விளக்குமாறு, பாதாளச் சுரடு, தேங்காய், குடை, மூக்குக் கண்ணாடி முதலிய பொருட்களுடன் பெற்றோர் வந்தனர்.
காட்சி
இவைகளின் உச்சி மீதில்
குன்று மேல் குரங்கு போல
என்றனைக் குந்த வைத்தார்!
என் தலை நிமிர, வண்டி
மூடி மேல் பொத்தலிட்டார்
உன் மாமன் நடந்து வந்தார்
(குடும்ப விளக்கு I – ‘மாமி விடை’)
என்று கூறினார். இவ்வாறு கூறும்போது, தான் வண்டியில் பொருள்களின் மேல் அமர்ந்து வந்ததை நினைத்து அவர் கவலைப்படவில்லை. தன் கணவரின் பொறுப்பை உணர்த்துவதாகவே பாரதிதாசன் தெரிவித்து உள்ளார்.
பாரம்மா பழுத்த நல்ல
பச்சை வாழைப் பழங்கள்
நேரிலே இதனையும் பார்
பசுமாட்டு நெய்யின் மொந்தை
வண்டியில் எவ்விடத்தில் வைப்பது?
(குடும்ப விளக்கு I – ‘மாமன் பேச்சு’)
(மொந்தை = பெரிய செம்பு)
என்று கேட்டார். வாழைப்பழம் நைந்து போகாமல் இருக்கவும், நெய் சிந்தாமல் இருக்கவும் அவற்றைக் கையில் வைத்துக் கொண்டு தான் நடந்து வந்ததாகத் தெரிவித்தார். இச்செயலின் வாயிலாக அவர், குடும்பத்தின் மீது கொண்டிருந்த ஆர்வத்தையும் கடமை உணர்வையும் பாரதிதாசன் வெளிப்படுத்தியுள்ளார்.
பொன்துலங்கு மேனி
புதுமெருகு கொள்ள முகம்
அன்றலர்ந்த செந்தா
மரையாக – நன்றே
வரவேற்றாள்
(குடும்ப விளக்கு II – ‘தலைவி விருந்தினரை வரவேற்றாள்’)
என்று குறிப்பிட்டுள்ளார்.
காட்சி
வந்த விருந்தினர்கள் கை, கால் கழுவுவதற்கு அண்டாவிலிருந்த தண்ணீரைக் காட்டினாள். அவர்கள் கை, கால் கழுவிய பிறகு அவர்களை உட்காரச் செய்தாள். அவர்கள் உண்டு மகிழ்வதற்குத் தேன்குழலும், பண்ணியமும் கொடுத்தாள். குடிப்பதற்குப் பால் கொடுத்தாள்; மென்று தின்பதற்கு வெற்றிலை, பாக்கு வைத்தாள். அவர்கள் தனியே இருக்கும்போது படிப்பதற்குப் பண்டைத் தமிழ் இலக்கியங்களையும் செய்தித்தாளும் கொடுத்துவிட்டு, சமையல் செய்வதற்காக உள்ளே சென்றாள். இவ்வாறு நல்ல குடும்பத்தில் காணப்படும் விருந்தோம்பல் பண்பைப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
நற்றமிழர் சேர்த்த புகழ்
ஞாலத்தில் என்னஎனில்
உற்ற விருந்தை
உயிரென்று – பெற்று உவத்தல்
(குடும்ப விளக்கு II – ‘மாமன் மாமி மகிழ்ச்சி’)
என்று மருமகளுக்கு எடுத்துக் கூறினார்கள். இதில் பண்டைக்காலம் முதல் தமிழர்கள் விருந்தோம்பலுக்குக் கொடுத்த சிறப்பிடத்தை அறிய முடிகிறது.
இட்டுப்பார்! உண்டவர்கள்
இன்புற்றிருக் கையிலே
தொட்டுப்பார் உன் நெஞ்சைத்
தோன்றுமின்பம் – கட்டிக்
கரும்பென்பார் பெண்ணைக்
கவிஞர் எலாம் தந்த
விருந்தோம்பும் மேன்மையினால்
அன்றோ? – தெரிந்ததா?
(குடும்ப விளக்கு II – ‘மாமன் மாமி மகிழ்ச்சி’)
என்று மேலும் விருந்தோம்பலின் சிறப்பை மாமனார் வாயிலாகப் பாரதிதாசன் எடுத்துக் கூறியுள்ளார். இப்பாடலில் பெண்களுக்கு உள்ள பெருமைகளில் முதன்மையானது விருந்தோம்பல் பண்பு என்று பாரதிதாசன் தெளிவுபடுத்தியுள்ளார்.
• ஊறுகாய் வகைகள்
இனிமை சொட்டும் எலுமிச்சை ஊறுகாய், வற்றிய வாய் நீர் சுரக்கும் நாரத்தை ஊறுகாய், உந்து சுவை மாங்காய் ஊறுகாய், காடி மிளகாய் ஊறுகாய் என்று ஊறுகாய் வகைகளைக் கண்ணாடிச் சாடியில் இட்டுப் பாதுகாப்பாக வைத்திருப்பதைத் தெரிவித்துள்ளார் பாரதிதாசன்.
மேலே கூறிய ஊறுகாய் வகைகளில் விருந்தினர் விரும்பும் ஊறுகாயை அவர்களுக்குப் பரிமாறி விருந்தோம்பும்படியாக மாமியார் தெரிவிப்பதுபோல் பாரதிதாசன் பாடியுள்ளார்.
கீரை, தயிர் இரண்டும்
கேடு செய்யும் இரவில்
மோரைப் பெருக்கிடு
முப்போதும் நேரிழையே
(குடும்ப விளக்கு II – ‘மாமி மருமகளுக்கு’)
என்று பாடிய அவர்,
சோற்றை அள்ளுங்கால்
துவள்வாழைத் தண்டில் ஊறும்
சாற்றைப் போலே வடியத்
தக்கவண்ணம் – ஊற்று நெய்யை
(குடும்ப விளக்கு II – ‘மாமி மருமகளுக்கு’)
என்று நெய் ஊற்றும் அளவையும் தெரிவித்துள்ளார்.
மேலும், வாழை இலையின் அடி உண்பவர்களின் வலப்பக்கத்தில் இருக்குமாறு இலையைப் போட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அந்த வாழை இலையில் கறி வகைகள் சோற்றைச் சூழ்ந்து இருக்குமாறு வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தண்ணீரையும், வெந்நீரையும் தனித்தனியே வைக்கவேண்டும் என்று குறிப்பிட்ட அவர் முக்கனிகளைத் தேனிலும், நெய்யிலும் ஊறவைத்துப் பரிமாற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கேட்டும் குறிப்பு அறிந்தும்
ஊட்டுதல் வேண்டும் தாய்போல்
(குடும்ப விளக்கு II – ‘மாமி மருமகளுக்கு’)
என்று குறிப்பிட்டுள்ளார்.
உணவு பரிமாறும் இலையில் ஈ அமராமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விருந்தினர்க்கு உணவு படைக்கும் தன்மையைக் கூறும் இடத்தில்,
ஈமுன்கால் சோற்றிலையில்
இட்டாலும் தீமையம்மா
(குடும்ப விளக்கு II – ‘மாமி மருமகளுக்கு’
என்று சுகாதாரக் கண்ணோட்டத்தையும் பாரதிதாசன் வெளிப்படுத்தியுள்ளதைக் காணமுடிகிறது.
பொத்தல் மரத்தின் புழுப்போல் நெளிந்தே
எழுந்தாள். அவளோ பிழிந்து போட்ட
கருப்பஞ்சக்கையின் கற்றைபோல் இருந்தாள்
(இருண்ட வீடு: 4)
என்று குறிப்பிட்டுள்ளார் பாரதிதாசன்.
தாமதமாக எழுந்த அவள், செம்பில் இருந்தததைப் பால் என்று அறியாமல் அதில் சாணியைக் கரைத்து வாசல் தெளித்தாள். அப்போது அவளது கூந்தல் கலைந்திருந்த தன்மையையும் அவள் கோலம் போட்ட அலங்கோலத்தையும் பாரதிதாசன் படம் பிடித்துக்காட்டியுள்ளார்.
காட்சி
அவள் குழல்
முள்ளம் பன்றி முழுதுடல் சிலிர்த்தல் போல்
மேலெழுந்து நின்று விரிந்து கிடந்தது!
வால் இழந்து போன மந்தி முகத்தாள்
கோலமிடவும் குனிந்தாள்; தாமரை
போல எழுதப் போட்ட திட்டம்
சிறிது தவறவே தேய்ந்த துடைப்பம்
அவிழ்ந்து சிதறுமே அப்படி முடிந்தது
(இருண்ட வீடு: 4)
என்று பாடியுள்ளார். பொறுப்புடைய பெண்ணின் செயல்கள் யாவும் சிறப்பாக அமையும். பொறுப்பற்ற பெண்ணின் செயல்கள் யாவும் அலங்கோலமாக அமையும் என்பதற்கு அவள் கோலம் போட்ட தன்மையை எடுத்துக் காட்டியுள்ளார் பாரதிதாசன்.
தங்கை வீட்டுக்கு வந்திருந்தான் தலைவியின் அண்ணன். அவன் வந்து நெடுநேரம் ஆனபிறகும் அவனை உணவு உண்ண அழைக்கவில்லை தங்கை. உணவு உண்ண அழைக்காததை அறிந்த அண்ணன் அவனாகவே,
சமையல் முடிந்ததா தங்கையே என்றான்
(இருண்ட வீடு: 15)
அப்போதுதான் சாப்பிட அழைக்காததை எண்ணிய தலைவி சாப்பிட அழைத்தாள். சாப்பிடுவதற்கு முன் குளிக்க நினைத்தான் தலைவியின் அண்ணன். எனவே,
வெந்நீர் இருக்குமா? என்றான்.
(இருண்ட வீடு: 15)
அதுவரை அது பற்றி நினைக்காத தலைவி வெந்நீர் விரைவில் தருவதாகக் கூறினாள். வெந்நீர் விரைவில் தருவதாகத் தலைவி கூறியதைக் கேட்ட அவளின் அண்ணன், அதுவரை வெற்றிலை போட்டுக் கொண்டிருக்கலாம் என்று எண்ணினான். வெற்றிலை இருந்தால் போட்டுக் கொள்ளலாம் என்று கேட்டான்.
வெற்றிலையைக் கொண்டு வந்து கொடுத்தாள் தலைவி. வெற்றிலை போட்டு முடித்து நெடுநேரம் ஆன பிறகும் குளிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் அழைக்கவில்லை. பசியால் துடித்துப் போனான் தலைவியின் அண்ணன்.
விடிய நாலுக்கு வீட்டை விட்டுக்
கிளம்பினேனா? கிளியனூரில்
சிற்றுணவுக்குச் சுற்றிப் பார்த்தேன்.
அகப்படவில்லை; அதற்குள் வண்டியும்
புறப்பட்டதனால் பொசுக்கும் பசியுடன்
ஏறினேன்; இங்கே இழிந்தேன்
(இருண்ட வீடு: 16)
(இழிந்தேன் = இறங்கினேன்)
என்று, தான் காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை என்பதை எடுத்துக் கூறினான். அப்போதும் அதைப் புரிந்து கொள்ளாத தலைவி, தனது தமையன் ஏறி வந்த வண்டியைப் பற்றிப் பேசி மகிழ்ந்தாள்.
அதற்கு மேலும் பசியைப் பொறுக்க இயலாது என்று எண்ணிய தமையன் உணவு விடுதிக்குச் சென்று உணவு உண்டான்.
விருந்தோம்பும் பண்பு தெரியாத தலைவியால் அவளது அண்ணன் பசியால் வருந்தினான். இதை இருண்ட வீட்டில் காண முடிகிறது.
தலைவரின் வீட்டுக்கு வந்த கடிதத்தைத் தலைவி பார்த்தாள். அவள் கல்வி அறிவு இல்லாதவள். ஆதலால், அந்தக் கடிதத்தைத் திருமண அழைப்பிதழ் என்று எண்ணினாள்; அக்கடிதத்தை ஒரு வாரமாகத் தலைவரிடம் காட்டவில்லை.
கடிதம் கிடைக்காததால் தலைவர், சிற்றம்பலத்திடம் பணம் வசூலிக்க உடனே ஆள் அனுப்பவில்லை. அவன் பணத்தைக் கொடுக்காமல் ஐதராபாத்திற்கு ஓடி விட்டான் என்ற செய்தியை அறிந்து தலைவர் வருந்தினார்.
தலைவி கல்வி அறிவு பெற்றவளாக இருந்திருந்தால் கடிதத்தின் செய்தியைப் படித்துத் தெரிந்திருப்பாள். உடனே தலைவரிடம் அதைத் தெரிவித்திருப்பாள். இருண்ட வீடு காவியத்தில் இடம்பெறும் தலைவி கல்வி அறிவு இல்லாதவள். எனவே, தலைவனுக்குப் பொருள் இழப்பு ஏற்படக் காரணமாகிவிட்டாள்.
குட்டிச் சுவரின் கோடியில் இருக்கும்
இரிசி வீட்டின் எதிர்த்த வீட்டில்
இருப்பேன். நீயோ என்னை அங்கு
வந்து கிந்து வருவாய் கிருவாய்
என்று கூப்பிட எண்ண வேண்டாம்.
அந்த வீட்டு எண் அறுபத்து இரண்டுதான்.
தெருப்பக்கத்தில் இருக்கும் அறையில்
இருப்பேன்; அழைத்தால் வரவே மாட்டேன்.
என்று தலைவர் இரைச்சல் போட்டு
நடைவரைக்கும் போய் இடையில் திரும்பி
அழைப்பார் இல்லை ஆதலால் மீண்டும்
திரும்பிப் பார்த்துத் தெருவோடு சென்றார்
(இருண்ட வீடு: 20)
என்று கூறிவிட்டுச் சென்றதாகப் பாரதிதாசன் பாடியுள்ளார். இந்தப் பகுதியில் தலைவர் தமது கோபத்தை உணர்த்தக் கருதியதால் வீட்டை விட்டு வெளியேற எண்ணினார். தலைவி தன்னை ‘வெளியே போக வேண்டாம்’ என்று சொல்லித் தடுப்பாள் என்று அவர் எதிர்பார்த்தார். கல்வி அறிவும் குடும்பப் பொறுப்பும் சிறிதும் இல்லாத தலைவிக்கு இது எங்கே புரியப் போகிறது. அவள் அதைப் பற்றிக் கவலைப்படாமலேயே இருந்தாள் என்பதை நகைச்சுவை உணர்வுடன் பாரதிதாசன் வெளிப்படுத்தியுள்ளதைக் காண முடிகிறது.
கதவைத் தட்டினார் கையின் விரலால்!
பதியத் தட்டியும் பார்த்தார் பிறகு!
அழுந்தத் தட்டினார் அங்கையாலே!
அடித்தார் இடித்தார் படபடவென்றே!
எட்டி உதைத்தார் இருநூறு தடவை!
முதுகைத் திருப்பி முட்டியும் பார்த்தார்!
(இருண்ட வீடு: 24)
எதுவும் பயன் அளிக்கவில்லை. இவ்வாறாக மணி பன்னிரண்டு ஆனது. தலைவி தூங்கிக் கொண்டிருந்தாள். அந்த வேளையில், அவளின் சிறு விரல் ஒன்றை ஓர் எலி பிடுங்கி விட்டு, பெருவிரல் ஒன்றைப் பிடுங்கியது. அப்போதுதான் தலைவி விழித்தாள். தலைவர் கதவை உடைக்கும் சத்தம் அவளுக்கு எப்படிக் கேட்டது என்று பாரதிதாசன் கூறியுள்ளார் பாருங்கள்!
காதில், வீதியில் தொலைவில்
புழு ஒன்று சருகுமேல் புரள்வது போன்ற
ஓசைதன்னை உற்றுக் கேட்டாள்
(இருண்ட வீடு: 26)
என்று அந்தப் பெருஞ்சத்தமும் அவளது காதுக்குச் சிறு சருகின் சலசலப்புப் போல் கேட்டதைத் தெரிவித்துள்ளார்.
தலைவியுடன் ஏற்பட்ட சண்டையால் வீட்டைவிட்டு வெளியேறிய தலைவர் திரும்பி வந்திருப்பதைப் பற்றி அவள் சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை. மீண்டும் போய்ப் படுத்துக் கொண்டாள்.
வீட்டில் வெளிச்சம் இல்லாததால் இருட்டாய் இருந்தது. தலைவர் விளக்கை ஏற்றினார். மகனைப் பார்த்துக் கேட்பது போல்,
ஏனடா தம்பி சாப்பாடு
உண்டா, இல்லையா, உரையடா!
(இருண்ட வீடு: 26)
என்று மனைவியிடம் கேட்டார்.
தலைவி பதில் எதுவும் சொல்லவில்லை. தலைவர் தாமாகவே சமையல் அறைக்குள் சென்று பார்த்தார். சாப்பாடு இல்லை என்பதை அறிந்தார். பசி வயிற்றைக் கிள்ளியது. தலைவி எழுந்து வந்து ஏதாவது சாப்பிடுவதற்குத் தயார் செய்வாள் என்று எதிர்பார்த்து அவர் கூடத்தில் அமர்ந்து பாடினார். எதைப் பற்றியும் தெரியாதவள் போல் தலைவி படுத்திருந்தாள்.
சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கை தலைவருக்கு இல்லை. வேறு வழியில்லாமல் படுக்கப் போனார். அவ்வாறு படுக்கப் போகும்போது,
தலைவர் ஓர் உறுதி சாற்றலானார்:
சாப்பிட மாட்டேன் சத்தியம் !
(இருண்ட வீடு: 27)
என்று சொல்லிவிட்டு அவர் போய்ப் படுத்துக் கொண்டார். இரவு மணி பன்னிரண்டு. வீட்டில் சாப்பாடு இல்லை. வெளியில் போயும் சாப்பிட இயலாது. தலைவி எழுந்து சமைத்துத் தருவாள் என்ற எண்ணமும் பொய்த்தபின் தலைவர் ‘சாப்பிட மாட்டேன்’ என்று சத்தியம் செய்ததாகப் பாரதிதாசன் கேலி செய்துள்ளமையை நாம் காண முடிகிறது.
பழி வந்து சேரும் என்பதைப் பாரதிதாசன் தமது ‘இருண்ட வீடு’ காவியத்தில் காட்டியுள்ளார்.
வேண்டும். இந்தச் சிற்றம்பலம் கடனைக் கொடுக்காமல் ஐதராபாத்திற்கு ஓடிவிடத் திட்டம் தீட்டியிருந்தார். இதை
அறிந்த தலைவரின் நண்பர் ஒருவர், இச்செய்தியைக் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்தார்.
தலைவரின் வீட்டுக்கு வந்த கடிதத்தைத் தலைவி பார்த்தாள். அவள் கல்வி அறிவு இல்லாதவள். ஆதலால், அந்தக்
கடிதத்தைத் திருமண அழைப்பிதழ் என்று எண்ணினாள்; அக்கடிதத்தை ஒரு வாரமாகத் தலைவரிடம் காட்டவில்லை.
கடிதம் கிடைக்காததால் தலைவர், சிற்றம்பலத்திடம் பணம் வசூலிக்க உடனே ஆள் அனுப்பவில்லை. அவன் பணத்தைக்
கொடுக்காமல் ஐதராபாத்திற்கு ஓடி விட்டான் என்ற செய்தியை அறிந்து தலைவர் வருந்தினார்.
தலைவி கல்வி அறிவு பெற்றவளாக இருந்திருந்தால் கடிதத்தின் செய்தியைப் படித்துத் தெரிந்திருப்பாள். உடனே
தலைவரிடம் அதைத் தெரிவித்திருப்பாள். இருண்ட வீடு காவியத்தில் இடம்பெறும் தலைவி கல்வி அறிவு இல்லாதவள்.
எனவே, தலைவனுக்குப் பொருள் இழப்பு ஏற்படக் காரணமாகிவிட்டாள்.
இனி இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று கோபித்துக் கொண்டு தலைவர் வெளியேறி விட்டார். அப்போது அவர்,
குட்டிச் சுவரின் கோடியில் இருக்கும்
இரிசி வீட்டின் எதிர்த்த வீட்டில்
இருப்பேன். நீயோ என்னை அங்கு
வந்து கிந்து வருவாய் கிருவாய்
என்று கூப்பிட எண்ண வேண்டாம்.
அந்த வீட்டு எண் அறுபத்து இரண்டுதான்.
தெருப்பக்கத்தில் இருக்கும் அறையில்
இருப்பேன்; அழைத்தால் வரவே மாட்டேன்.
என்று தலைவர் இரைச்சல் போட்டு
நடைவரைக்கும் போய் இடையில் திரும்பி
அழைப்பார் இல்லை ஆதலால் மீண்டும்
திரும்பிப் பார்த்துத் தெருவோடு சென்றார்
(இருண்ட வீடு: 20)
என்று கூறிவிட்டுச் சென்றதாகப் பாரதிதாசன் பாடியுள்ளார். இந்தப் பகுதியில் தலைவர் தமது கோபத்தை உணர்த்தக்
கருதியதால் வீட்டை விட்டு வெளியேற எண்ணினார். தலைவி தன்னை ‘வெளியே போக வேண்டாம்’ என்று சொல்லித்
தடுப்பாள் என்று அவர் எதிர்பார்த்தார். கல்வி அறிவும் குடும்பப் பொறுப்பும் சிறிதும் இல்லாத தலைவிக்கு இது எங்கே
புரியப் போகிறது. அவள் அதைப் பற்றிக் கவலைப்படாமலேயே இருந்தாள் என்பதை நகைச்சுவை உணர்வுடன்
பாரதிதாசன் வெளிப்படுத்தியுள்ளதைக் காண முடிகிறது.
வீடு முழுவதும் இருண்டு கிடந்தது. தலைவரின் நோய் கொண்ட குழந்தையைத் தவிர அனைவரும் தூங்கி விட்டனர்.
தலைவர் கதவைத் தட்டுகிறார்.
கதவைத் தட்டினார் கையின் விரலால்!
பதியத் தட்டியும் பார்த்தார் பிறகு!
அழுந்தத் தட்டினார் அங்கையாலே!
அடித்தார் இடித்தார் படபடவென்றே!
எட்டி உதைத்தார் இருநூறு தடவை!
முதுகைத் திருப்பி முட்டியும் பார்த்தார்!
(இருண்ட வீடு: 24)
எதுவும் பயன் அளிக்கவில்லை. இவ்வாறாக மணி பன்னிரண்டு ஆனது. தலைவி தூங்கிக் கொண்டிருந்தாள். அந்த
வேளையில், அவளின் சிறு விரல் ஒன்றை ஓர் எலி பிடுங்கி விட்டு, பெருவிரல் ஒன்றைப் பிடுங்கியது. அப்போதுதான்
தலைவி விழித்தாள். தலைவர் கதவை உடைக்கும் சத்தம் அவளுக்கு எப்படிக் கேட்டது என்று பாரதிதாசன் கூறியுள்ளார்
பாருங்கள்!
காதில், வீதியில் தொலைவில்
புழு ஒன்று சருகுமேல் புரள்வது போன்ற
ஓசைதன்னை உற்றுக் கேட்டாள்
(இருண்ட வீடு: 26)
என்று அந்தப் பெருஞ்சத்தமும் அவளது காதுக்குச் சிறு சருகின் சலசலப்புப் போல் கேட்டதைத் தெரிவித்துள்ளார்.
தலைவியுடன் ஏற்பட்ட சண்டையால் வீட்டைவிட்டு வெளியேறிய தலைவர் திரும்பி வந்திருப்பதைப் பற்றி அவள்
சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை. மீண்டும் போய்ப் படுத்துக் கொண்டாள்.
வீட்டில் வெளிச்சம் இல்லாததால் இருட்டாய் இருந்தது. தலைவர் விளக்கை ஏற்றினார். மகனைப் பார்த்துக் கேட்பது
போல்,
ஏனடா தம்பி சாப்பாடு
உண்டா, இல்லையா, உரையடா!
(இருண்ட வீடு: 26)
என்று மனைவியிடம் கேட்டார்.
தலைவி பதில் எதுவும் சொல்லவில்லை. தலைவர் தாமாகவே சமையல் அறைக்குள் சென்று பார்த்தார். சாப்பாடு
இல்லை என்பதை அறிந்தார். பசி வயிற்றைக் கிள்ளியது. தலைவி எழுந்து வந்து ஏதாவது சாப்பிடுவதற்குத் தயார்
செய்வாள் என்று எதிர்பார்த்து அவர் கூடத்தில் அமர்ந்து பாடினார். எதைப் பற்றியும் தெரியாதவள் போல் தலைவி
படுத்திருந்தாள்.
சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கை தலைவருக்கு இல்லை. வேறு வழியில்லாமல் படுக்கப் போனார். அவ்வாறு
படுக்கப் போகும்போது,
தலைவர் ஓர் உறுதி சாற்றலானார்:
சாப்பிட மாட்டேன் சத்தியம் !
(இருண்ட வீடு: 27)
என்று சொல்லிவிட்டு அவர் போய்ப் படுத்துக் கொண்டார். இரவு மணி பன்னிரண்டு. வீட்டில் சாப்பாடு இல்லை.
வெளியில் போயும் சாப்பிட இயலாது. தலைவி எழுந்து சமைத்துத் தருவாள் என்ற எண்ணமும் பொய்த்தபின் தலைவர்
‘சாப்பிட மாட்டேன்’ என்று சத்தியம் செய்ததாகப் பாரதிதாசன் கேலி செய்துள்ளமையை நாம் காண முடிகிறது.
குடும்பம் சிறப்பாக இயங்குவதற்கு அந்தக் குடும்பத்தில் உள்ள மாமனார், மாமியார் போன்றவர்களும் நல்ல பண்பு உடையவர்களாக விளங்க வேண்டும் என்பதையும் பாரதிதாசன் தமது குடும்ப விளக்கு நூலின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்.
குடும்ப வாழ்க்கையில் விருந்தினரைப் போற்றுதலும் ஒரு பகுதியாகும். விருந்தோம்பல் சிறப்பையும், விருந்தினர்க்கு விருந்து வழங்கும் தன்மையையும் பாரதிதாசன் அழகாகப் பாடியுள்ளார்.
குடும்ப வாழ்க்கைக்குக் கல்வி இன்றியமையாதது ஆகும். கல்வி அறிவு இல்லாத பெண் நடத்தும் குடும்ப வாழ்க்கையானது இருண்ட வாழ்க்கை என்பதைத் தமது ‘இருண்ட வீடு’ காவியத்தின் வழியாகப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
கோபம் கொண்ட தலைவனின் செயலாலும் அறிவற்ற மகனின் செயலாலும் குடும்பமே அழிந்துவிடும் என்பதையும் இருண்ட வீட்டில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும். கல்வி அறிவு இல்லாத குடும்பம், நரம்பில் துடிப்பு இல்லாத பிணங்கள் நிறைந்த சுடுகாடு என்று குறிப்பிட்டுள்ளார் பாரதிதாசன். அறிவில்லாத குடும்பம் வாழும் வழியை அறியாது வீழும் என்றும் அவர் பாடியுள்ளார்.
பாவேந்தர் ‘இருண்ட வீடு’ காவியத்தில் காட்டியுள்ள குடும்பம் அழிவதற்கு அடிப்படைக் காரணம் கல்வி அறிவு இல்லாமை ஆகும். எனவே, ஒவ்வொருவரும் கல்வியறிவு பெற்று விளங்க வேண்டும். கல்வி பெற்றவர்களே அறிவு பெற்றவர்கள் ஆவர். கல்வி அறிவு இல்லாதவர்கள் கண் இல்லாதவர்கள் ஆவார்கள். எனவே, சொத்தை விற்றாவது கல்வியைப் பெற்றாக வேண்டும் என்கிறார் பாரதிதாசன்.