30

4. பண்டு + காலம் - சேர்த்து எழுதுக .

விடை

5. கிழக்குத் திசையையும் , மேற்குத் திசையையும் குறிக்க வழங்கும் சொற்கள் யாவை ?

விடை

6. நிலைமொழி ஈற்று உயிர்மெய்யும் , கவ்வொற்றும் நீங்கிப் புணரும் திசைப்பெயர்கள் யாவை ?

விடை

7. திசைப்பெயர்களில் றகரமெய் னகரமெய்யாகத் திரியும் திசைப்பெயர் யாது ?

விடை

8. தெற்கு + நாடு - எவ்வாறு புணரும் ?

விடை

9. புணர்ச்சியில் முதல் எழுத்து நீண்டு வரும் திசைப்பெயர் எது ?

விடை

10. தேங்காய் - பிரித்துக் காட்டுக .

எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி

பாடமுன்னுரை

ஒன்று , இரண்டு , மூன்று என்றவாறு எண்ணப்படும் எண்ணைக் குறிக்கும் பெயர்கள் எண்ணுப்பெயர்கள் எனப்படும் .

எந்த ஒரு மொழியிலும் எண்ணுப்பெயர்கள் தொடக்கம் முதல் இன்று வரை பெரும்பாலும் எந்த மாற்றத்திற்கும் உட்படாமல் நிலைபேறு உடையனவாய் வழங்கி வருவதைக் காணலாம் .

தமிழிலும் தொல்காப்பியர் காலத்தில் எண்ணுப்பெயர்கள் எப்படி வழங்கினவோ , பெரும்பாலும் அப்படியே அவர் காலத்திற்குப் பின்னும் காலந்தோறும் வழங்கிவந்து , இன்றும் வழங்கி வருகின்றன .

ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்களும் , நூறு , ஆயிரம் என்னும் எண்ணுப்பெயர்களும் , மற்ற எண்ணுப்பெயர்கள் எல்லாமும் தோன்றுவதற்கு அடிப்படையாக உள்ளன .

இவ்வெண்ணுப் பெயர்களிலிருந்து மற்ற எண்ணுப்பெயர்கள் பெருக்கல் முறையிலும் , கூட்டல் முறையிலும் தோன்றியிருப்பதைக் காணலாம் .

இருபது , முப்பது , நாற்பது போன்றவை 2 x 10 = 20 , 3 x 10 = 30 , 4 x 10 = 40 என்றாற் போலப் பெருக்கல் முறையில் அமைந்துள்ளன .

பதினொன்று , இருபத்திரண்டு , நூற்றுமூன்று போன்றவை 10 + 1 = 11 , 20 + 2 = 22 , 100 + 3 = 103 என்றாற்போலக் கூட்டல் முறையில் அமைந்துள்ளன .

ஒன்பது என்ற அடிப்படை எண்ணுப்பெயர்கூட , பத்திலிருந்து ஒன்று குறைந்தது என்ற கழித்தல் நிலையில் அமைந்துள்ளதாகத் தெரிகிறது .

ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்களில் ஏழு என்பதைத் தவிரப் பிற ஒன்பது எண்ணுப்பெயர்களும் , நூறு என்ற எண்ணுப்பெயரும் குற்றியலுகர ஈற்றுப் பெயர்கள் .

இவற்றில் ஒன்று , இரண்டு , மூன்று , நான்கு , ஐந்து என்பன மென்தொடர்க் குற்றியலுகரங்கள் ; ஆறு , நூறு என்பன நெடில் தொடர்க் குற்றியலுகரங்கள் ; எட்டு , பத்து என்பன வன்தொடர்க் குற்றியலுகரங்கள் ; ஒன்பது என்பது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் .

இவை தவிர அமைந்த ஏழு என்பது முற்றியலுகர ஈற்றுப் பெயர் .

ஆயிரம் என்பது மெய் ஈற்றுப் பெயர் .

ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்களில் குற்றியலுகர ஈற்றினை உடைய ஒன்பது எண்ணுப் பெயர்களும் , ஏழு என்னும் முற்றியலுகர ஈற்று எண்ணுப்பெயரும் வருமொழியில் உள்ள எண்ணுப்பெயர்களோடும் , பிற பெயர்களோடும் புணரும்போது அடையும் விகாரங்களைப் ( மாற்றங்களை ) பற்றிக் கூறுவதே எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி எனப்படும் .

சான்று :

இரண்டு + பத்து = இருபது

ஒன்று + மாடு = ஒரு மாடு

மூன்று + சந்தி = முச்சந்தி

இச்சான்றுகளில் இரண்டு , ஒன்று , மூன்று என்னும் எண்ணுப்பெயர்கள் முறையே பத்து என்ற எண்ணுப்பெயரோடும் , மாடு , சந்தி என்ற பெயர்களோடும் புணரும்போது இரு , ஒரு , மு என விகாரம் அடைந்திருப்பதைக் காணலாம் .

நன்னூலார் ஒன்று முதல் எட்டு வரையிலான எண்ணுப்பெயர்களுக்கான புணர்ச்சி பற்றிய பொதுவிதியை முதலில் கூறுகின்றார் .

அதன்பின்பு ஒன்று , இரண்டு , மூன்று , நான்கு , ஐந்து , எட்டு , ஒன்பது , பத்து ஆகிய எண்ணுப்பெயர்கள் ஒவ்வொன்றிற்குமான புணர்ச்சி பற்றிய சிறப்பு விதிகளைக் கூறுகிறார் .

எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி - பொதுவிதி

வருமொழியில் எண்ணல் அளவைப் பெயர் ( எண்ணுப்பெயர் ) நிறுத்தல் அளவைப் பெயர் , முகத்தல் அளவைப் பெயர் , நீட்டல் அளவைப் பெயர் ஆகிய பெயர்களும் , பிற பெயர்களும் வந்தால் , நிலைமொழியில் உள்ள ஒன்று முதல் எட்டு வரையிலான எண்ணுப்பெயர்களில் சில விகாரங்கள் ஏற்படும் .

அவை வருமாறு :

1. ஒன்று இரண்டு என்னும் எண்ணுப்பெயர்களின் முதலில் உள்ள குறில் நீளும் .

சான்று :

ஒன்று + ஆடு = ஓராடு ( ஒ - ஓ என நீண்டது )

இரண்டு + ஆண்டு = ஈராண்டு ( இ - ஈ என நீண்டது )

2. மூன்று , ஆறு , ஏழு ஆகிய எண்ணுப்பெயர்களின் முதலில் உள்ள நெடில் குறுகும் .

சான்று :

மூன்று + தமிழ் = முத்தமிழ் ( மூ - மு எனக் குறுகியது )

ஆறு + படைவீடு = அறுபடைவீடு ( ஆ - அ எனக் குறுகியது )

ஏழு + பிறப்பு = எழுபிறப்பு ( ஏ - எ எனக் குறுகியது )

3. ஆறு , ஏழு அல்லாத மற்ற ஆறு எண்ணுப்பெயர்கள் ஈற்றுயிர் மெய் கெடும் .

( கெடும் - நீங்கும் ) சான்று :

ஒன்று + ஆடு = ஓராடு ( று - கெட்டது )

இரண்டு + ஆண்டு = ஈராண்டு ( டு - கெட்டது )

மூன்று + தமிழ் = முத்தமிழ் ( று - கெட்டது )

நான்கு + புறம் = நாற்புறம் ( கு - கெட்டது )

ஐந்து + பொறி = ஐம்பொறி ( து - கெட்டது )

எட்டு + குணம் = எண்குணம் ( டு - கெட்டது )

4. ஏழு என்ற எண்ணுப்பெயரின் ஈற்றில் உள்ள உகர உயிர் கெடும் .

சான்று :

ஏழு + கடல் = ஏழ் கடல்

நூற்பா :

எண் , நிறை , அளவும் , பிறவும் எய்தின்

ஒன்று முதல் எட்டு ஈறாம் எண்ணுள்

முதல் ஈர்எண் முதல் நீளும் ; மூன்று ஆறு

ஏழு குறுகும் ; ஆறு ஏழு அல்லவற்றின்

ஈற்றுஉயிர் மெய்யும் , ஏழன் உயிரும்

ஏகும் ஏற்புழி என்மனார் புலவர் ( நன்னூல் , 188 )

( அளவு - முகத்தல் அளவை , நீட்டல் அளவை ; ஏகும் - கெடும் ; ஏற்புழி - ஏற்புடைய இடங்களில் ; என்மனார் - என்று சொல்வர் )

இந்நூற்பாவில் கூறப்படும் முதல் நீளல் , முதல் குறுகல் முதலான விகாரங்களை ஏற்புடைய இடங்களில் ஏற்றவாறு கொள்ள வேண்டும் என்கிறார் நன்னூலார் .

சான்றாக ஒன்று என்பது வருமொழி முதலில் உயிர் வரும் போது ஓராயிரம் என முதல் குறில் நீள்கிறது ; ஆனால் வருமொழி முதலில் மெய்வரும்போது ஒரு கால் என முதல் குறில் விகாரம் எதனையும் கொள்ளாமல் குறிலாகவே உள்ளது .

எனவேதான் நன்னூலார் ஏற்புடைய இடங்களில் கொள்ளவேண்டும் என்று கூறுகிறார் .

நூற்பாவில் வரும் ‘ ஏற்புழி ’ என்பதற்குப் பொருளும் விளக்கமும் இதுவேயாகும் .

எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி : சிறப்பு விதிகள் - 1

ஒன்று , இரண்டு , மூன்று , நான்கு , ஐந்து , எட்டு ஆகிய ஆறு என்ணுப்பெயர்கள் மேலே பொதுவிதியில் கூறப்பட்ட விகாரங்கள் மட்டும் அல்லாமல் , அவை ஒவ்வொன்றும் வேறு சில விகாரங்களையும் பெற்று வரும் .

அவற்றை நன்னூலார் சிறப்பு விதிகளில் குறிப்பிடுகிறார் .

எனவே இந்த ஆறு எண்ணுப்பெயர்களுக்கான புணர்ச்சி பற்றிப் பார்க்கும்போது பொதுவிதியில் கூறப்பட்ட விகாரங்களையும் , சிறப்புவிதிகளில் கூறப்படும் விகாரங்களையும் மனத்திற்கொண்டு , அவற்றுள் ஏற்புடையனவற்றைக் கொள்ளவேண்டும் .

6.2.1 ஒன்று , இரண்டு

ஈற்று உயிர் மெய் கெட்டு நின்ற ஒன்று என்னும் எண்ணுப்பெயரில் உள்ள னகர மெய் ரகர மெய்யாக மாறும் ; அவ்வாறு மாறியபின் அதனோடு உகரம் வந்து சேர்வதும் உண்டு .

ஈற்று உயிர்மெய் கெட்டு நின்ற இரண்டு என்னும் எண்ணுப்பெயரில் உள்ள ணகர மெய்யும் , ரகரமெய்யை ஊர்ந்து நின்ற அகர உயிரும் கெடும் .

அவ்வாறு கெட்டபின் நிற்கும் ரகரமெய்யின் மேல் உகரம் வந்து சேர்வதும் உண்டு .

இரண்டு எண்களிலும் ரகரமெய்யுடன் உகரம் வந்து சேர்வது ஏற்புடைய இடங்களில் கொள்ளப்படும் .

ரகர மெய்யானது , வருமொழி முதலில் மெய்வரின் உகரம் பெறும் ; வருமொழி முதலில் உயிர்வரின் உகரம் பெறாது .

சான்று :

ஒன்று + ஆயிரம் > ஒன் + ஆயிரம் > ஓன் + ஆயிரம் >

ஓர் + ஆயிரம் = ஓராயிரம்

பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் று என்பது கெட்டு , முதல் குறில் ஒ என்பது ஓ என நீண்டு , சிறப்பு விதிப்படி னகர மெய் ரகர மெய்யாக மாறியது .

ஒன்று + கால் > ஒன் + கால் > ஒர் + கால் >

ஒரு + கால் = ஒருகால்

பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் று என்பது கெட்டு , சிறப்பு விதியின்படி னகரமெய் ரகரமெய்யாக மாறி உகரம் பெற்றது .

இரண்டு + ஆயிரம் > இரண் + ஆயிரம் > இர் + ஆயிரம் >

ஈர் + ஆயிரம் = ஈராயிரம்

பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் டு என்பது கெட்டு , முதல்குறில் இ என்பது ஈ என நீண்டு , சிறப்பு விதிப்படி ணகரமெய் கெட்டு , ரகரமெய் மேல் நின்ற அகர உயிரும் கெட்டது .

இரண்டு + கால் > இரண் + கால் > இர் + கால் >

இரு + கால் = இருகால்

பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் டு என்பது கெட்டு , சிறப்பு விதிப்படி ணகரமெய் கெட்டு , ரகரமெய் மேல் நின்ற அகர உயிரும் கெட , ரகரமெய் மீது உகரம் ஏறி வந்தது .

6.2.2 மூன்று

இறுதி உயிர்மெய் கெட்டு நின்ற , மூன்று என்னும் எண்ணுப்பெயரில் உள்ள னகரமெய் , வருமொழி முதலில் உயிர் வந்தால் கெடுதலும் , மெய் வந்தால் வருகின்ற மெய்யாகத் திரிதலும் ஆகும் .

சான்று :

மூன்று + ஆயிரம் > மூன் + ஆயிரம் >

மூ + ஆயிரம் = மூவாயிரம் மூன்று + உலகு > மூன் + உலகு > மூ + உலகு = மூவுலகு

பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் று என்பது கெட்டது .

சிறப்பு விதிப்படி வருமொழி முதலில் உயிர் வந்ததால் னகர மெய் கெட்டது .

இடையில் வந்த வகரமெய் உடம்படுமெய் .

மூன்று + சந்தி > மூன் + சந்தி > முன் + சந்தி >

மு + சந்தி = முச்சந்தி

மூன்று + தமிழ் > மூன் + தமிழ் + முன் + தமிழ் >

மு + தமிழ் = முத்தமிழ்

பொதுவிதிப்படி ஈற்று உயிர் மெய் கெட்டு , மொழி முதல் நெடில் மூ என்பது மு எனக் குறுகியது .

சிறப்பு விதிப்படி வருமொழி முதலில் மெய் வந்ததால் , னகரமெய் வருகின்ற மெய்யாகத் திரிந்தது .

6.2.3 நான்கு

ஈற்று உயிர்மெய் கெட்டு நின்ற நான்கு என்னும் எண்ணுப் பெயரில் உள்ள னகரமெய் , வருமொழி முதலில் உயிரும் , இடையினமும் வரும்போது லகர மெய்யாகத் திரியும் .

வல்லினம் வரும்போது றகர மெய்யாகத் திரியும் ; மெல்லினம் வரும்போது திரியாமல் இயல்பாய் நிற்கும் .

சான்று :

நான்கு + ஆயிரம் > நான் + ஆயிரம் >

நால் + ஆயிரம் = நாலாயிரம்

நான்கு + வகை > நான் + வகை > நால் + வகை = நால்வகை

பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் கு என்பது கெட்டு , சிறப்பு விதிப்படி உயிரும் இடையினமும் வர னகரமெய் லகர மெய்யாகத் திரிந்தது .

நான்கு + படை > நான் + படை > நாற் + படை = நாற்படை

பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் கெட்டு , சிறப்பு விதிப்படி வல்லினம் வர னகரமெய் றகர மெய்யாகத் திரிந்தது .

நான்கு + மணி > நான் + மணி = நான்மணி

பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் மட்டும் கெட்டது .

னகரமெய் இயல்பாக வந்தது .

பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நான்மணிக்கடிகை என்ற நூலினது பெயரை நினைவுகூர்க .

6.2.4 ஐந்து

ஈற்று உயிர்மெய் கெட்டு நின்ற , ஐந்து என்னும் எண்ணுப்பெயரில் உள்ள நகர மெய் , வருமொழி முதலில் மெல்லினம் வரும்போது வருகின்ற மெய்யாகத் திரியும் ; வல்லினம் வரும்போது அதற்கு இனமாகத் திரியும் ; உயிரும் இடையினமும் வந்தால் கெடும் .

சான்று :

ஐந்து + மூன்று > ஐந் + மூன்று > ஐம் + மூன்று = ஐம்மூன்று

பொதுவிதிப்படி ஈற்று உயிர் மெய் து என்பது கெட்டு , சிறப்பு விதிப்படி நகரமெய் , வருகின்ற மகரமெய்யாகத் திரிந்தது .

ஐந்து + பொறி > ஐந் + பொறி > ஐம் + பொறி = ஐம்பொறி

பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் கெட்டு , சிறப்பு விதிப்படி நகரமெய் வல்லினம் வர அதற்கு இன மெல்லினமாகத் திரிந்தது .

ஐந்து + ஆயிரம் > ஐந் + ஆயிரம் > ஐ + ஆயிரம் = ஐயாயிரம்

ஐந்து + வகை > ஐந் + வகை > ஐ + வகை = ஐ வகை

பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் கெட்டு , சிறப்பு விதிப்படி உயிரும் இடையினமும் வர நகரமெய் கெட்டது .

ஐயாயிரம் என்பதில் இடையில் வந்த யகரமெய் உடம்படுமெய் .

( ஐ + ய் + ஆயிரம் = ஐயாயிரம் )

6.2.5 எட்டு

ஈற்று உயிர்மெய் கெட்டு நின்ற எட்டு என்னும் எண்ணுப்பெயரில் உள்ள டகர மெய் ணகர மெய்யாகத் திரியும் .

சான்று :

எட்டு + ஆயிரம் > எட் + ஆயிரம் > எண் + ஆயிரம் = எண்ணாயிரம்

எட்டு + வகை > எட் + வகை > எண் + வகை = எண்வகை

பொதுவிதிப்படி ஈற்று உயிர்மெய் கெட்டு , சிறப்பு விதிப்படி டகர மெய் ணகர மெய்யாகத் திரிந்தது .

• ஆறு , ஏழு

ஆறு , ஏழு என்னும் எண்ணுப்பெயர்கள் புணர்ச்சியில் பொதுவிதியில் கூறப்பட்ட விகாரங்களை மட்டுமே பெற்றுவரும் .

இவற்றிற்குச் சிறப்பு விதி இல்லை .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. தமிழில் உள்ள அடிப்படையான எண்ணுப்பெயர்கள் யாவை ?

விடை

2. எண்ணுப்பெயர்களில் முற்றியலுகர ஈற்றில் அமைந்தது எது ?

விடை 3. புணர்ச்சியில் முதல் குறில் நெடிலாக நீளும் எண்ணுப்பெயர்கள் யாவை ?

விடை

4. மூன்று + தமிழ் - புணர்த்து எழுதுக .

விடை

5. ஈற்று உயிர்மெய் கெடும் எண்ணுப்பெயர்கள் எத்தனை ?

அவை யாவை ?

விடை

6. புணர்ச்சியில் ஒன்று என்பதில் உள்ள னகரமெய் எவ்வாறு மாறும் ?

விடை

7. நான்கு என்பதில் உள்ள னகரமெய் வல்லினம் வரும்போது எவ்வாறு திரியும் ?

விடை

8. இருகால் , நான்மணி - இவற்றைப் பிரித்து எழுதுக .

விடை

9. ஐந்து என்பதில் உள்ள நகரமெய் புணர்ச்சியில் கெடுதல் எப்போது ?

விடை

10. எட்டு + ஆயிரம் - சேர்த்து எழுதுக .

எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி : சிறப்பு விதிகள் - II

பொதுப்புணர்ச்சி விதியில் கூறப்படாத ஒன்பது , பத்து ஆகிய எண்ணுப்பெயர்கள் முன்னர் மற்ற எண்ணுப்பெயர்கள் வந்து புணர்தல் பற்றியும் , ஒன்று முதல் எட்டு வரையிலான எண்ணுப்பெயர்கள் முன்னர்ப் பத்து வந்து புணர்தல் பற்றியும் , எண்ணுப்பெயர்கள் தம்முன் தாமே வந்து புணர்தல் பற்றியும் சில சிறப்பு விதிகளை நன்னூலார் கூறியுள்ளார் .

அவற்றை ஈண்டுக் காண்போம் .

6.3.1 ஒன்பது முன்னர்ப் பத்து , நூறு வருதல் ( தொண்ணூறு , தொள்ளாயிரம் அமையும் முறை )

ஒன்பது என்னும் நிலைமொழியின் முன்னர்ப் பத்து , நூறு என்னும் எண்ணுப்பெயர்கள் வருமொழியில் வந்து புணரும்போது ,

1. வருமொழியில் உள்ள பத்து , நூறு என்பனவற்றை முறையே நூறு எனவும் , ஆயிரம் எனவும் திரித்து ,

2. நிலைமொழியின் முதலில் உள்ள ஒகர உயிரோடு தகரமெய்யை அதற்கு ஆதாரமாக நிறுத்தி ,

3. நிலைமொழியின் இறுதியில் உள்ள பது என்பதை நீக்கி ,

4. பது என்பதற்கு அயலே நின்ற னகர மெய்யை முறையே ணகர மெய்யாகவும் , ளகர மெய்யாகவும் திரித்துக் கொள்வதால் முறையே தொண்ணூறு , தொள்ளாயிரம் என்னும் எண்ணுப்பெயர்கள் அமைகின்றன .

ஒன்பா னொடுபத்தும் நூறும் ஒன்றின்

முன்னதின் ஏனைய முரணி , ஒவ்வொடு

தகரம் நிறீஇ , பஃது அகற்றி , னவ்வை

நிரலே ண , ளவாத் திரிப்பது நெறியே ( நன்னூல் , 194 )

( ஒன்பான் - ஒன்பது ; பஃது - பது ; னவ்வை - னகரமெய்யை ; நிரலே - முறையே )

இனி இவ்விதிப்படி தொண்ணூறு , தொள்ளாயிரம் என்பன எவ்வாறு அமைந்தன என்பதைக் காண்போம் .

1 ) தொண்ணூறு அமையும் முறை

ஒன்பது + பத்து

ஒன்பது + நூறு ( பத்தை நூறாகத் திரித்தல் )

தொன்பது + நூறு ( நிலைமொழி முதலில் தகரத்தை நிறுத்தல் )

தொன் + நூறு ( பது என்பதை நீக்கல் )

தொண் + நூறு ( னகரத்தை ணகரமாகத் திரித்தல் )

= தொண்ணூறு

2 ) தொள்ளாயிரம் அமையும் முறை

ஒன்பது + நூறு

ஒன்பது + ஆயிரம் ( நூற்றை ஆயிரமாகத் திரித்தல் )

தொன்பது + ஆயிரம் ( நிலைமொழி முதலில் தகரத்தை நிறுத்தல் )

தொன் + ஆயிரம் ( பது என்பதை நீக்கல் )

தொள் + ஆயிரம் ( னகரத்தை ளகரமாகத் திரித்தல் )

= தொள்ளாயிரம்

6.3.2 ஒன்று முதல் எட்டு முன்னர்ப் பத்து வருதல்

ஒன்று முதல் எட்டு வரையிலான எண்ணுப்பெயர்கள் நிலைமொழியில் நின்று வருமொழியாக வரும் பத்து என்னும் எண்ணுப்பெயரோடு புணரும்போது , பத்து என்னும் சொல்லின் நடுவில் உள்ள தகரமெய் கெடும் .

அஃதாவது தகரமெய் கெட்டுப் பத்து ‘ பது ’ என்றாகும் .

நிலைமொழியில் உள்ள எட்டுவரையிலான எண்ணுப்பெயர்கள் பொதுவிதியிலும் , சிறப்பு விதியிலும் தமக்குச் சொல்லப்பட்ட விகாரங்களை ஏற்புடையவாறு பெற்று வரும் .

சான்று : ஒன்று + பத்து = ஒருபது