31

இரண்டு + பத்து = இருபது

மூன்று + பத்து = முப்பது

நான்கு + பத்து = நாற்பது

ஐந்து + பத்து = ஐம்பது

ஆறு + பத்து = அறுபது

ஏழு + பத்து = எழுபது

எட்டு + பத்து = எண்பது

6.3.3 பத்து , ஒன்பது முன்னர்ப் பிற எண்ணுப்பெயர்கள் வருதல்

வருமொழியில் ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்களும் , ஆயிரம் , கோடி என்னும் எண்ணுப்பெயர்களும் , பிறபெயர்களும் வந்து புணரும்போது , நிலைமொழியாக நின்ற பத்து என்னும் எண்ணுப்பெயர் , தன் இறுதி உயிர்மெய்யாகிய ‘ து ’ என்பதைப் போக்கி , இன் , இற்று என்னும் சாரியைகளுள் பொருந்தும் ஒன்றை ஏற்று நிற்கும் .

ஒன்பது என்னும் நிலைமொழியும் , வருமொழியில் எண்ணுப்பெயர்கள் முதலானவை வந்து புணரும்போது , இவ்விரண்டு சாரியைகளுள் பொருந்தும் ஒன்றை ஏற்று நிற்கும் .

சான்று :

பத்து + ஒன்று > பத் + இன் + ஒன்று = பதினொன்று

பத்து + மூன்று > பத் + இன் + மூன்று = பதின்மூன்று

பத்து + பத்து > பத் + இற்று + பத்து = பதிற்றுப்பத்து

பத்து + மடங்கு > பத் + இன் + மடங்கு = பதின்மடங்கு

ஒன்பது + ஆயிரம் > ஒன்பது + இன் + ஆயிரம் = ஒன்பதினாயிரம்

6.3.4 பத்து முன்னர் இரண்டு வருதல்

வருமொழியில் இரண்டு என்னும் எண்ணுப்பெயர் வந்து புணரும்போது , நிலைமொழியாக நின்ற பத்து என்னும் எண்ணுப்பெயரின் இறுதியில் உள்ள ‘ து ’ என்னும் உயிர்மெய் கெட , நடுவில் நின்ற தகரமெய் னகரமெய்யாகத் திரியும் .

சான்று :

பத்து + இரண்டு > பத் + இரண்டு > பன் + இரண்டு = பன்னிரண்டு

6.3.5 எண்ணுப்பெயர்கள் தம்முன் தாம் வருதல்

ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்களில் , ஒன்பது என்ற எண்ணுப்பெயர் மட்டும் தவிர்ந்த ஏனைய ஒன்பது எண்ணுப்பெயர்களும் தமக்கு முன்னர்த் தாமே வந்து இரட்டிக்கும்போது பின்வருமாறு புணரும் .

1. நிலைமொழியில் முதல் எழுத்தைத் தவிர ஏனைய எழுத்துகள் கெடும் .

2. அவ்வாறு கெட்டபின் வருமொழி முதலில் உயிர் வந்தால் வகர மெய் மிகும் ; வருமொழி முதலில் மெய்வந்தால் வந்த மெய் மிகும் .

சான்று :

ஒன்று + ஒன்று > ஒ + ஒன்று > ஒ + வ் + ஒன்று = ஒவ்வொன்று

எட்டு + எட்டு > எ + எட்டு > எ + வ் + எட்டு = எவ்வெட்டு

இச்சான்றுகளில் நிலைமொழியில் வரும் ஒன்று , எட்டு என்னும் எண்ணுப்பெயர்களில் முதல் எழுத்துத் தவிர ஏனைய எழுத்துகள் கெட்டு , வருமொழி முதலில் உயிர் வந்ததால் வகர மெய் மிக்கது .

மெய் வந்ததால் , வந்த அந்த மெய்யே மிக்கது .

மூன்று + மூன்று > மூ + மூன்று > மூ + ம் + மூன்று = மும்மூன்று

பத்து + பத்து > ப + பத்து > ப + ப் + பத்து = பப்பத்து

இச்சான்றுகளில் நிலைமொழியில் வரும் மூன்று , பத்து என்னும் எண்ணுப்பெயர்களில் முதல் எழுத்துத் தவிர ஏனைய எழுத்துகள் கெட்டு , வருமொழி முதலில் மெய்வந்ததால் , வந்த அந்த மெய்யே மிக்கது .

தொகுப்புரை

இதுகாறும் எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி பற்றி நன்னூலார் கூறியவற்றை விரிவாகப் பார்த்தோம் .

அவற்றை இங்குச் சுருக்கமாகத் தொகுத்துக் காண்போம் .

பத்து வரையிலான எண்ணுப்பெயர்களும் , நூறு , ஆயிரம் என்னும் எண்ணுப்பெயர்களும் , பிற எல்லா எண்ணுப்பெயர்களும் தோன்றுவதற்கு அடிப்படையாக உள்ளன .

அளவைப் பெயர்களும் , பிற பெயர்களும் வருமொழியில் வந்தால் ஒன்று , இரண்டு என்னும் எண்ணுப்பெயர்கள் முதல் குறில் நீளும் .

மூன்று , ஆறு , ஏழு என்பன முதல் நெடில் குறுகும் .

ஒன்று , இரண்டு , மூன்று , நான்கு , ஐந்து , எட்டு என்பன ஈற்று உயிர்மெய் கெடும் .

ஏழு என்பதில் ஈற்றில் உள்ள உகர உயிர் கெடும் .

இது எண்ணுப்பெயர்ப் புணர்ச்சிக்குப் பொதுவிதியாகும் .

ஒன்று , இரண்டு என்பன வருமொழி முதலில் உயிர் வரும்போது முறையே ஓர் , ஈர் எனவும் , வருமொழி முதலில் மெய்வரும்போது முறையே ஒரு , இரு எனவும் மாறும் .

மூன்று என்பதில் உள்ள னகரமெய் உயிர்வந்தால் கெடும் ; மெய்வந்தால் வருகின்ற மெய்யாகத் திரியும் .

நான்கு என்பதில் உள்ள னகரமெய் உயிரும் இடையினமும் வரும்போது லகர மெய்யாகவும் , வல்லினம் வரும்போது றகர மெய்யாகவும் திரியும் .

ஐந்து என்பதில் உள்ள நகரமெய் மெல்லினம் வரும்போது வருகின்ற மெய்யாகவும் , வல்லினம் வரும்போது அதற்கு இனமெய்யாகவும் திரியும் ; பிறவரின் கெடும் .

எட்டு என்பதில் உள்ள டகரமெய் ணகர மெய்யாகத் திரியும் .

ஒன்பதின் முன்னர்ப் பத்தும் நூறும் வந்து புணர்வதால் முறையே தொண்ணூறு , தொள்ளாயிரம் என்னும் எண்ணுப்பெயர்கள் அமைகின்றன .

எட்டு வரையிலான எண்ணுப்பெயர்களோடு வருமொழியில் பத்து என்பது வந்து புணரும்போது , அதன் இடையில் உள்ள தகரமெய் கெடும் .

பத்து , ஒன்பது என்னும் எண்ணுப்பெயர்கள் மற்ற எண்ணுப்பெயர்களோடும் பிறபெயர்களோடும் புணரும்போது இன் , இற்று ஆகிய சாரியைகளில் ஏதேனும் ஒன்றை ஏற்கும் . அப்போது பத்து என்பதன் இடையில் உள்ள தகர மெய் கெடும் .

இவையாவும் எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி பற்றிய சிறப்பு விதிகளாகும் .

இவற்றையெல்லாம் இப்பாடத்தின் வாயிலாக விரிவாக அறிந்து கொண்டோம் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. புணர்ச்சியில் இரண்டு என்ற எண்ணுப்பெயரின் முன் வரும் பத்து என்ன மாற்றம் பெறும் ?

விடை

2. எட்டு + பத்து - சேர்த்து எழுதுக .

விடை

3. பதின்மடங்கு - பிரித்து எழுதுக .

விடை

4. வருமொழியில் உள்ள எண்ணுப்பெயர் முதலானவற்றோடு புணரும்போது ஒன்பது ஏற்று நிற்கும் சாரியைகள் யாவை ?

விடை

5. பத்து + இரண்டு - சேர்த்து எழுதுக .

விடை

6. ஒன்று என்பது தன்னோடு தானே இரட்டிக்கும்போது எவ்வாறு புணரும் ?

புணர்ச்சி - 2

மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகள் - I

பாட முன்னுரை

நன்னூலார் எழுத்திலக்கணத்தைப் பன்னிரு வகையாகப் பிரித்துக் கொண்டார் .

அவற்றுள் இறுதி வகையாகிய புணர்ச்சியை உயிர் ஈற்றுப் புணரியல் , மெய் ஈற்றுப் புணரியல் , உருபு புணரியல் என்னும் மூன்று இயல்களாகப் பிரித்து விளக்குகிறார் .

உயிர் ஈற்றுப் புணரியலில் அவர் கூறியுள்ள புணர்ச்சி விதிகளை இதற்கு முந்தைய பாடங்களில் பார்த்தோம் .

இனி , மெய் ஈற்றுப் புணரியலில் அவர் கூறும் புணர்ச்சி விதிகளைப் பார்ப்போம் .

மொழிக்கு இறுதியில் வல்லின மெய்கள் வாரா .

மெல்லின மெய்களுள் ஙகரம் நீங்கிய ஏனைய ஐந்தும் , இடையின மெய்கள் ஆறுமாக மொத்தம் பதினொரு மெய்கள் மொழிக்கு இறுதியில் வரும் .

இப்பதினொரு மெய்களும் நிலைமொழியின் இறுதியில் நின்று , வருமொழி முதலில் வரும் உயிர்களோடு புணரும் முறையைப் பொது விதிகள் கொண்டு நன்னூலார் விளக்குகிறார் ; பின்னர் , வருமொழி முதலில் வரும் மெய்களோடு புணரும் முறையைச் சிறப்பு விதிகள் கொண்டு மெய் ஈற்றுப் புணரியலில் விளக்கிக் காட்டுகிறார் .

அவற்றை இப்பாடத்திலும் , இதனைத் தொடர்ந்து வரும் இரண்டு பாடங்களிலும் காண்போம் .

இப்பாடத்தில் மெய்யின் முன்னர் உயிர்வந்து புணர்வது பற்றி நன்னூலார் குறிப்பிடும் பொதுவிதிகள் முதலில் விளக்கிக் காட்டப்படுகின்றன .

அதனை அடுத்து ணகர , னகர ஈறுகளுக்கு அவர் கூறும் சிறப்பு விதிகள் விளக்கிக் காட்டப்படுகின்றன .

மெய் ஈற்றின் முன் உயிர்வந்து புணர்தல்

நிலைமொழியின் இறுதியில் நிற்கும் எல்லா மெய்களின் முன்னும் உயிர்வந்து புணர்தல் பற்றி நன்னூலார் இரண்டு பொதுவிதிகளைக் கூறுகிறார் .

அவை மெய்யின் மேல் உயிர் வந்து ஒன்றுதல் , தனிக்குறில் முன் நின்ற மெய் , உயிர்வரின் இரட்டுதல் என்பனவாம் .

1.1.1 மெய்யின் மேல் உயிர் வந்து ஒன்றுதல்

நிலைமொழியின் இறுதியில் நிற்கும் மெய்யின்மேல் , வருமொழியின் முதலில் உள்ள உயிர் வந்து கூடி உயிர்மெய்யாக மாறும் .

இவ்வாறு மாறுவது விகாரப் புணர்ச்சி அன்று ; இயல்பு புணர்ச்சி ஆகும் .

உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே ( நன்னூல் , 204 )

( உடல் – மெய் எழுத்து ; உயிர் – உயிர் எழுத்து ; ஒன்றுவது – கூடுவது )

சான்று :

உயிர் + எழுத்து = உயிரெழுத்து

வேல் + எறிந்தான் = வேலெறிந்தான்

( உயிரெழுத்து – உயிராகிய எழுத்து .

இருபெயரொட்டுப் பண்புத்தொகை .

அல்வழிப் புணர்ச்சி ; வேலெறிந்தான் – வேலை எறிந்தான் .

இரண்டாம் வேற்றுமைத் தொகை .

வேற்றுமைப் புணர்ச்சி )

இச்சான்றுகளில் நிலைமொழியின் இறுதியில் நிற்கும் ர் , ல் என்னும் மெய்களோடு , வருமொழியின் முதலில் உள்ள எ என்னும் உயிர் வந்து கூடி , முறையே ரெ , லெ என்று உயிர்மெய்களாக மாறியிருப்பதைக் காணலாம் .

இம்மாற்றம் இயல்பாக நிகழ்ந்திருப்பதால் நன்னூலார் நூற்பாவில் ‘ இயல்பே ’ என்று கூறினார் .

1.1.2 தனிக்குறில் முன் நின்ற மெய் உயிர்வரின் இரட்டுதல்

நிலைமொழி தனிக்குறிலை அடுத்துவரும் ஒரு மெய்யைக் கொண்டதாக இருந்து , வருமொழி முதலில் உயிர்வந்தால் , நிலைமொழி இறுதியில் நிற்கும் அம்மெய்யானது இரட்டிக்கும் .

தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும் ( நன்னூல் , 205 )

( ஒற்று – மெய் ) சான்று :

மெய் + எழுத்து = மெய்யெழுத்து

பல் + உடைந்தது = பல்லுடைந்தது

முள் + இலை = முள்ளிலை

பொன் + ஆரம் = பொன்னாரம்

( மெய்யெழுத்து – மெய் ஆகிய எழுத்து .

இருபெயரொட்டுப் பண்புத்தொகை ; பல்லுடைந்தது – எழுவாய்த் தொடர் .

இவை இரண்டும் அல்வழி .

முள்ளிலை – முள்ளை உடைய இலை. இரண்டாம் வேற்றுமைத் தொகை ; பொன்னாரம் – பொன்னாலாகிய ஆரம் .

மூன்றாம் வேற்றுமைத் தொகை .

இவை இரண்டும் வேற்றுமை )

இச்சான்றுகளில் தனிக்குறிலை அடுத்துவந்த ய் , ல் , ள் , ன் என்னும் மெய்கள் வருமொழி முதலில் உயிர் வரும்போது அவை முறையே ய்ய் , ல்ல் , ள்ள் , ன்ன் என இரட்டித்தமையைக் காணலாம் .

கண் , மண் , கல் , பல் , முள் , எள் , தின் , பொன் போன்ற சொற்கள் தனிக்குறிலை அடுத்த மெய்யை உடையனவாய் வழங்குகின்றன .

ஆனால் பேச்சுத் தமிழில் இச்சொற்களை எவரும் மெய் ஈறாக ஒலிப்பதில்லை .

மெய் ஈறாக ஒலிப்பது அருகிக் காணப்படுகிறது .

இச்சொற்களின் இறுதியில் உள்ள மெய்யோடு உகரம் சேர்த்துப் பேச்சுத்தமிழில் எல்லோருமே கண்ணு , மண்ணு , கல்லு , பல்லு , முள்ளு , எள்ளு , தின்னு , பொன்னு என ஒலிக்கின்றனர் .

உகர உயிர் சேரும்போது இச்சொற்களில் தனிக்குறிலை அடுத்து வரும் மெய்கள் இரட்டிப்பதைக் காணலாம் .

இவ்வாறு உகரம் சேர்த்து ஒலிப்பதில் எளிமை காணப்படுகிறது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. மொழிக்கு இறுதியில் வரும் மெய்யெழுத்துகள் எத்தனை ?

விடை

2. மெல்லின மெய்களில் மொழிக்கு இறுதியில் வாராதது எது ?

விடை

3. மெய்யின் முன் உயிர்வந்து புணரும்போது எவ்வாறு மாறும் ?

விடை

4. தனிக்குறில் முன்வரும் மெய் உயிர்வரின் எவ்வாறு ஆகும் ?

விடை

5. உயிரெழுத்து – பிரித்து எழுதுக .

விடை

6. வேல் + எறிந்தான் – சேர்த்து எழுதுக .

விடை

7. முள்ளிலை – பிரித்து எழுதுக .

விடை

8. பொன் + ஆரம் = சேர்த்து எழுதுக .

விடை

9. கண் , கல் , முள் , பல் – இச்சொற்கள் பேச்சுத்தமிழில் எவ்வாறு ஒலிக்கப்படுகின்றன ?

ணகர , னகர ஈற்றுப் புணர்ச்சி விதிகள்

இதுவரை மெய் ஈறுகளுக்கு உரிய பொதுவான புணர்ச்சி விதிகள் பற்றி நன்னூலார் கூறியனவற்றைப் பார்த்தோம் .

இனி நன்னூலார் மெய் ஈறுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துக்கொண்டு அவை வருமொழி முதலில் வரும் மெய்களோடு புணரும்போது அடைகின்ற மாற்றங்களைக் குறிப்பிட்டு விளக்குகிறார் .

மொழிக்கு இறுதியில் வரும் மெய்கள் ‘ ஞ் , ண் , ந் , ம் , ன் , ய் , ர் , ல் , வ் , ழ் , ள் ’ என்னும் பதினொன்றாகும் .

இவற்றுள் ஞ் என்பது உரிஞ் ( தேய்த்தல் ) என்னும் ஒரு சொல்லிலும் , ந் என்பது பொருந் ( பொருநுதல் = ஒத்திருத்தல் ; போல இருத்தல் ) வெரிந் ( முதுகு ) என்னும் இரு சொற்களிலும் , வ் என்பது அவ் , இவ் , உவ் , தெவ் ( பகை ) என்னும் நான்கு சொற்களிலும் மட்டுமே ஈறாகும் .

ஆனால் இச்சொற்கள் காலப்போக்கில் வழக்கிழந்து மறைந்து போயின .

ஏனைய ண் , ம் , ன் , ய் , ர் , ல் , ழ் , ள் என்னும் எட்டு மெய்களே காலந்தோறும் பெருவாரியான சொற்களில் இறுதியாக இருந்து வருபவை ஆகும் .

எனவே இந்த எட்டு மெய் ஈறுகள் பற்றி நன்னூலார் கூறும் புணர்ச்சி விதிகள் மட்டுமே இங்கே விளக்கிக் காட்டப்படுகின்றன .

முதற்கண் , ணகர , னகர மெய் ஈறுகள் , வருமொழி முதலில் வரும் வல்லினம் , மெல்லினம் , இடையினம் என்னும் மூவின மெய்களோடு புணரும்போது அடைகின்ற மாற்றங்கள் பற்றி நன்னூலார் குறிப்பிடும் புணர்ச்சி விதிகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சான்றுடன் காண்போம் .

1.2.1 ணகர , னகர ஈறுகள் இயல்பாதலும் திரிதலும்

1. நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகர , னகரங்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் முறையே டகரமாகவும் , றகரமாகவும் திரியும் .

சான்று :

மண் + குடம் = மட்குடம்

சிறுகண் + களிறு = சிறுகட்களிறு பொன் + காசு = பொற்காசு

பொன் + குடம் = பொற்குடம்

( மட்குடம் – மண்ணால் ஆகிய குடம் .

மூன்றாம் வேற்றுமைத் தொகை ; சிறுகட்களிறு – சிறிய கண்ணை உடைய களிறு .

இரண்டாம் வேற்றுமைத் தொகை ; பொற்காசு – பொன்னால் ஆகிய காசு ; பொற்குடம் – பொன்னால் ஆகிய குடம் .

இவை மூன்றாம் வேற்றுமைத் தொகை)

இச்சான்றுகளில் வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர ணகரம் டகரமாகவும் , னகரம் றகரமாகவும் திரிந்தன .

2. வேற்றுமைப் புணர்ச்சியில் ணகர , னகரங்கள் மெல்லினமும் , இடையினமும் வந்தால் இயல்பாகும் .

சான்று :

மண் + மேடை = மண்மேடை

பொன் + முடி = பொன்முடி

கண் + வலி = கண்வலி

பொன் + வளையல் = பொன்வளையல்

( மண்மேடை – மண்ணால் ஆகிய மேடை ; பொன்முடி – பொன்னால் ஆகிய முடி ; முடி – கிரீடம் ; இவை இரண்டும் மூன்றாம் வேற்றுமைத் தொகை .

கண்வலி – கண்ணில் வலி. ஏழாம் வேற்றுமைத் தொகை ; பொன்வளையல் – பொன்னால் ஆகிய வளையல் .

மூன்றாம் வேற்றுமைத் தொகை)

இச்சான்றுகளில் வேற்றுமைப் புணர்ச்சியில் ணகர னகரங்கள் மெல்லினமும் , இடையினமும் வர இயல்பாயின .

3. அல்வழிப் புணர்ச்சியில் ணகர , னகரங்கள் வல்லினம் , மெல்லினம் , இடையினம் என்னும் மூவினமெய்கள் வந்தாலும் இயல்பாகும் .

சான்று :

மண் + சரிந்தது = மண் சரிந்தது

பொன் + பெரிது = பொன் பெரிது

கண் + மங்கியது = கண் மங்கியது

பொன் + மலிந்தது = பொன் மலிந்தது

கண் + வலிக்கிறது = கண் வலிக்கிறது

பொன் + வலிது = பொன் வலிது

( இவையாவும் எழுவாய்த் தொடர் )

இச்சான்றுகளில் அல்வழிப்புணர்ச்சியில் ணகர , னகரங்கள் மூவின மெய்களும் வர இயல்பாயின .

மேலே சொல்லப்பட்ட மூன்று விதிகளையும் நன்னூலார் பின்வரும் நூற்பாவில் தொகுத்துக் கூறுகிறார் .

ணன வல்லினம் வரட் டறவும் , பிறவரின்

இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு ; அல்வழிக்கு

அனைத்துமெய் வரினும் இயல்பு ஆகும்மே ( நன்னூல் , 209 )

1.2.2 சில ணகர ஈற்றுப் பெயர்களுக்குச் சிறப்பு விதி

1. சாதி பற்றி வரும் பாண் , உமண் என்ற பெயர்களுக்கும் , கூட்டம் பற்றி வரும் அமண் என்ற பெயர்க்கும் , பரண் , கவண் என்ற பெயர்களுக்கும் இறுதியில் உள்ள ணகர மெய் , வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் இயல்பாகும் .

( பாண் – இசை பாடுவதில் வல்ல சாதியார் ; உமண் – உப்பு விற்கும் சாதியார் ; அமண் – சமண சமயத்தைச் சார்ந்த கூட்டத்தார் .

இவர்கள் ஆடையில்லாமல் திரிவதால் அமண் எனப்பட்டனர் ; பரண் – தினைப்புனம் காப்பதற்கு அதன் நடுவில் போட்டிருக்கும் மேடை ; கவண் – கல் எறியும் கருவி)

சான்று :

பாண் + சேரி = பாண்சேரி

உமண் + குடி = உமண்குடி

அமண் + சேரி = அமண்சேரி

பரண் + கால் = பரண்கால்

கவண் + கல் = கவண்கல்

( கவண்கல் – கவணில் வைத்து எறியப்படும் கல். ஏழாம் வேற்றுமைத் தொகை .

மற்றவை ஆறாம் வேற்றுமைத் தொகை )

2. உணவுப்பொருளாகிய எள் என்பதைக் குறிக்கும் எண் என்ற பெயர்க்கும் , ஒன்பது அங்குல அளவுள்ள சாண் என்ற நீட்டல் அளவைப் பெயர்க்கும் இறுதியில் உள்ள ணகர மெய் , அல்வழிப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் டகரமாகத் திரியும் .

சான்று :

எண் + சிறிது = எட்சிறிது

சாண் + கோல் = சாட்கோல்

3. சாதிபற்றி வரும் பெயர்க்கும் , கூட்டம் பற்றி வரும் பெயர்க்கும் இறுதியில் வரும் ணகர மெய் வேற்றுமையில் அகரச் சாரியை பெற்று வருவதும் உண்டு .

( இவ்விதி நூற்பாவில் பிற என்று கூறப்படுவதால் பெறப்படுகிறது)

சான்று : பாண் + குடி = பாணக்குடி