32

அமண் + சேரி = அமணச்சேரி

இம்மூன்று , விதிகளையும் நன்னூலார் பின்வரும் நூற்பாவில் தொகுத்துத் தருகிறார் .

சாதி , குழூஉ , பரண் , கவண்பெயர் இறுதி

இயல்பாம் வேற்றுமைக்கு ; உணவு எண் , சாண் பிற

டவ்வா கலுமாம் அல்வழி யும்மே ( நன்னூல் , 211 )

( குழூஉ - கூட்டம் ; எண் - எள் என்னும் உணவு )

1.2.3 னகர ஈற்றுச் சாதிப்பெயர்க்குச் சிறப்பு விதி

னகரத்தை இறுதியில் உடைய சாதிப்பெயர் , வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர , ஈறு திரியாமல் இயல்பாதலும் , அகரச் சாரியை பெறுதலும் ஆகிய புணர்ச்சியைப் பெறும் .

னஃகான் கிளைப்பெயர் இயல்பும் , அஃகான்

அடைவும் ஆகும் வேற்றுமைப் பொருட்கே ( நன்னூல் , 212 )

( கிளைப்பெயர் – சாதிப்பெயர் ; அஃகான் – அகரச் சாரியை ; அடைவும் - பெறுதலும் )

சான்று :

எயின் + குடி = எயின்குடி

எயின் + குடி > எயின் + அ + குடி = எயினக்குடி

( எயினக்குடி – எயினரது குடி .

ஆறாம் வேற்றுமைத் தொகை )

எயின் என்பது பாலை நிலத்தில் வாழும் வேட்டுவச் சாதியைக் குறிக்கும் .

இச்சாதிப்பெயரின் ஈற்று னகரமெய் வல்லினம் வர இயல்பானதுடன் , அகரச் சாரியையும் பெற்று வந்தது .

1.2.4. மீன் என்னும் சொல்லுக்குச் சிறப்பு விதி

மீன் என்னும் சொல்லின் இறுதியில் உள்ள னகரமெய் , வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர , இயல்பாவதோடு , றகர மெய்யாகவும் திரியும் .

மீன் றவ்வொடு பொரூஉம் வேற்றுமை வழியே ( நன்னூல் , 213 )

( பொரூஉம் – விகற்பமாகும் )

சான்று :

மீன் + கண் = மீன்கண் ( னகரம் இயல்பானது )

மீன் + கண் = மீற்கண் ( னகரம் றகரமாகத் திரிந்தது )

( மீன்கண் – மீனினதுகண் .

ஆறாம் வேற்றுமைத் தொகை )

1.2.5 தேன் என்னும் சொல்லுக்குச் சிறப்பு விதி

தேன் என்னும் சொல் , அல்வழி , வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழிகளோடு பின் வருமாறு புணரும் .

1. வருமொழி முதலில் வல்லினம் , மெல்லினம் , இடையினம் என்ற மூவின மெய்கள் வந்தால் தேன் என்ற சொல்லின் இறுதியில் உள்ள னகர மெய் இயல்பாகும் .

சான்று :

அல்வழி

தேன் + சிறிது = தேன் சிறிது

தேன் + மாண்டது = தேன் மாண்டது னகரம் இயல்பானது

தேன் + யாது = தேன் யாது

( இவை மூன்றும் எழுவாய்த் தொடர் )

வேற்றுமை

தேன் + குடித்தான் = தேன் குடித்தான்

தேன் + மாட்சி = தேன் மாட்சி னகரம் இயல்பானது

தேன் + வாங்கினான் = தேன் வாங்கினான்

( தேன் குடித்தான் – தேனைக் குடித்தான் ; தேன் வாங்கினான் – தேனை வாங்கினான் ; இவை இரண்டும் இரண்டாம் வேற்றுமைத் தொகை .

தேன்மாட்சி – தேனினது மாட்சி ; இது ஆறாம் வேற்றுமைத் தொகை)

2. வருமொழி முதலில் மெல்லினம் வந்தால் , தேன் என்ற சொல்லின் இறுதியில் உள்ள னகர மெய் இயல்பாதலே அன்றிக் கெடுதலும் உண்டு .

சான்று :

அல்வழி

தேன் + மொழி = தேன்மொழி ( னகரம் இயல்பானது )

தேன் + மொழி = தேமொழி ( னகரம் கெட்டது )

( தேன்மொழி – தேன் போன்ற இனிய மொழி .

உவமைத்தொகை ; மொழி – சொல் ) வேற்றுமை

தேன் + மலர் = தேன்மலர் ( னகரம் இயல்பானது )

தேன் + மலர் = தேமலர் ( னகரம் கெட்டது )

( தேன்மலர் – தேனை உடைய மலர் ; இரண்டாம் வேற்றுமைத்தொகை )

3. வருமொழி முதலில் வல்லினம் வந்தால் , தேன் என்ற சொல்லின் இறுதியில் உள்ள னகரமெய் இயல்பாதலே அன்றிக் கெட்டு , வருமொழி முதலில் உள்ள வல்லினமோ அதற்கு இனமான மெல்லினமோ மிகுவதும் உண்டு .

சான்று :

அல்வழி

தேன் + குழம்பு = தேன்குழம்பு ( னகரம் இயல்பானது )

தேன் + குழம்பு = தேக்குழம்பு ( னகரம் கெட்டு , வல்லினம் மிக்கது )

தேன் + குழம்பு = தேங்குழம்பு ( னகரம் கெட்டு , மெல்லினம் மிகுந்தது )

( தேன்குழம்பு – தேன் ஆகிய குழம்பு .

இருபெயரொட்டுப் பண்புத்தொகை )

வேற்றுமை

தேன் + குடம் = தேன்குடம் ( னகரம் இயல்பானது )

தேன் + குடம் = தேக்குடம் ( னகரம் கெட்டு வல்லினம் மிக்கது )

தேன் + குடம் = தேங்குடம் ( னகரம் கெட்டு மெல்லினம் மிகுந்தது )

( தேன்குடம் – தேனை உடைய குடம் .

இரண்டாம் வேற்றுமைத் தொகை )

மேலே கூறிய மூன்று விதிகளையும் நன்னூலார் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார் .

தேன்மொழி மெய்வரின் இயல்பும் , மென்மை

மேவின் இறுதி அழிவும் , வலிவரின்

ஈறுபோய் வலிமெலி மிகலுமாம் இருவழி ( நன்னூலார் , 214 )

1.2.6 தன் , என் , நின் என்னும் சொற்களுக்குச் சிறப்பு விதி

தான் என்பது படர்க்கை ஒருமை இடப்பெயர் .

நான் என்பது தன்மை ஒருமை இடப்பெயர் .

நீ என்பது முன்னிலை ஒருமை இடப்பெயர் .

இம்மூன்று பெயர்களும் வேற்றுமை உருபு ஏற்கும்போது , அவற்றின் முதலில் உள்ள நெடிலானது குறிலாகக் குறுகும் .

எனவே , இவற்றை நெடுமுதல் குறுகும் பெயர்கள் என்பர் .

தான் + ஐ = தன்னை

நான் + ஐ = என்னை

நீ + ஐ = நின்னை

தன் , என் எனும் நெடுமுதல் குறுகிய இடப்பெயர்களின் ஈற்றில் உள்ள னகரம் , வல்லினம் வந்தால் ‘ ணன வல்லினம் வரட் டறவும் ’ என்ற விதிப்படி றகரமாகத் திரிதலும் , அவ்விதியை ஏற்காது இயல்பாதலும் உண்டு .

சான்று :

தன் + பகை = தற்பகை , தன்பகை

என் + பகை = எற்பகை , என்பகை

( தற்பகை , தன்பகை – தனது பகை ; எற்பகை , என்பகை – எனது பகை ; இவை ஆறாம் வேற்றுமைத் தொகை )

நின் என்னும் நெடுமுதல் குறுகிய இடப்பெயரின் ஈற்றில் உள்ள னகரம் , வல்லினம் வந்தால் திரியாமல் இயல்பாகும் .

சான்று :

நின் + பகை = நின்பகை

( நின்பகை – நினது பகை. ஆறாம் வேற்றுமைத் தொகை )

தொகுப்புரை

இதுகாறும் மெய்ஈற்றின் முன் உயிர் வந்து புணரும் பொதுவிதிகள் பற்றியும் , ணகர னகர ஈற்றுச் சிறப்பு விதிகள் பற்றியும் நன்னூலார் கூறியனவற்றைப் பார்த்தோம் .

ஈண்டு அவற்றைச் சுருக்கமாகத் தொகுத்துக் காண்போம் .

நிலைமொழியின் இறுதியில் நிற்கும் மெய்யின்மேல் , வருமொழியின் முதலில் உள்ள உயிர் வந்து கூடி உயிர்மெய்யாக மாறும் .

தனிக்குறிலை அடுத்து வரும் மெய் , வருமொழி முதலில் உயிர்வந்தால் இரட்டிக்கும் .

நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகர , னகரங்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் முறையே டகரமாகவும் , றகரமாகவும் திரியும் ; மெல்லினமும் , இடையினமும் வந்தால் இயல்பாகும் .

அல்வழிப் புணர்ச்சியில் அனைத்து மெய்களும் வந்தாலும் இயல்பாகும் .

பாண் , உமண் , அமண் , பரண் , கவண் போன்ற பெயர்ச்சொற்களின் இறுதியில் உள்ள ணகரமெய் வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் இயல்பாகும் ; சிலவிடங்களில் அகரச் சாரியை பெறும் .

அல்வழி , வேற்றுமை என்னும் இருவகைப் புணர்ச்சியிலும் தேன் என்ற சொல் , வருமொழி முதலில் மூவினமெய்கள் வந்தால் , அதன் இறுதியில் உள்ள னகர மெய் இயல்பாகும் ; வருமொழி முதலில் மெல்லினம் வந்தால் , அதன் இறுதியில் உள்ள னகரமெய் இயல்பாதலே அன்றிக் கெடுதலும் உண்டு ; வருமொழி முதலில் வல்லினம் வந்தால் , அதன் இறுதியில் உள்ள னகரமெய் இயல்பாதலே அன்றிக் கெட்டு , அவ்விடத்தே வருமொழி முதலில் உள்ள வல்லினமோ அல்லது அதற்கு இனமான மெல்லினமோ மிகுவதும் உண்டு .

இவற்றையெல்லாம் இப்பாடத்தின் வாயிலாக அறிந்து கொண்டோம் . தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் , ணகர னகரங்கள் எவ்வாறு திரியும் ?

விடை

2. சிறுகட்களிறு – பிரித்து எழுதுக .

விடை

3. அல்வழிப் புணர்ச்சியில் ணகர , னகரங்கள் வருமொழி முதலில் மூவின மெய்கள் வந்தால் இயல்பாகுமா ?

திரியுமா ?

விடை

4. பாணக்குடி – பிரித்து எழுதுக .

விடை

5. மீன் என்னும் சொல்லின் இறுதியில் உள்ள னகரமெய் வல்லினம் வர வேற்றுமைப் புணர்ச்சியில் எவ்வாறு புணரும் ?

சான்று தருக .

விடை

6. தேன் + மொழி – எவ்வெவ்வாறு புணரும் ?

விடை

7. தற்பகை , எற்பகை – இவற்றைப் பிரித்து எழுதுக .

மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகள் – II

பாட முன்னுரை

சென்ற பாடத்தில் ணகர , னகர ஈற்றுப் புணர்ச்சி பற்றி நன்னூலார் கூறியனவற்றைப் பார்த்தோம் .

இப்பாடத்தில் மகர ஈற்றுப் புணர்ச்சி பற்றியும் , யகர , ரகர , ழகர ஈற்றுப் புணர்ச்சி பற்றியும் அவர் மெய் ஈற்றுப் புணரியலில் கூறுவனவற்றைப் பார்ப்போம் .

மகர மெய்யை இறுதியாகக் கொண்ட சொற்கள் , வருமொழி முதலில் வரும் உயிரோடும் , வல்லினம் , மெல்லினம் , இடையினம் என்னும் மூவினமெய்களோடும் புணரும் முறையைப் பொதுவிதியும் , சிறப்பு விதியும் கொண்டு விளக்கிக் காட்டுகிறார் .

மேலும் நும் , தம் , எம் , நம் என்னும் மகர ஈற்று மூவிடப்பெயர்கள் , அகம் என்ற உள்ளிடப்பெயர் ஆகியன வருமொழிகளோடு புணரும் முறையைச் சிறப்பு விதிகள் தந்து விளக்குகிறார் .

யகர , ரகர , ழகர மெய்களை இறுதியாகக் கொண்ட சொற்கள் வருமொழி முதலில் வரும் வல்லின மெய்களோடு புணரும் முறையைப் பொது விதி கொண்டு விளக்கிக் காட்டுகிறார் .

மேலும் , தமிழ் , தாழ் , கீழ் என்னும் ழகர ஈற்றுச் சொற்கள் வருமொழிகளோடு புணரும் முறையைச் சிறப்பு விதிகள் கொண்டு விளக்கிக் காட்டுகிறார் .

இவற்றை எல்லாம் இப்பாடத்தில் ஒன்றன்பின் ஒன்றாகக் காண்போம் .

மகர ஈற்றுப் புணர்ச்சி விதிகள்

மகர மெய்யை ஈற்றிலே கொண்ட சொற்கள் , ஈற்றிலே உள்ள மகரமெய் கெட்டு உயிர் ஈறாய் நின்றும் , ஈற்றிலே உள்ள மகர மெய் கெடாமல் நின்றும் வருமொழிகளோடு புணரும் முறையைப் பொது விதி கொண்டும் , சிறப்பு விதி கொண்டும் நன்னூலார் விளக்கிக் காட்டுகிறார் .

மேலும் , நும் , தம் , எம் , நம் என்னும் மூவிடப் பெயர்கள் , அகம் என்னும் இடப்பெயர் ஆகியவை வருமொழிகளோடு புணரும் முறையைச் சிறப்பு விதிகள் கொண்டு விளக்கிக் காட்டுகிறார் .

அவற்றை ஈண்டுக் காண்போம் .

2.1.1 மகர ஈற்றுப் புணர்ச்சி - பொதுவிதி

மகர மெய் ஈற்றுப் புணர்ச்சிக்குரிய பொது விதியாக நன்னூலார் இரண்டனைக் குறிப்பிடுகிறார் .

அவை வருமாறு :

1. நிலைமொழியில் உள்ள மகர மெய் ஈற்றுச் சொற்கள் , வருமொழியின் முதலில் வரும் உயிர் , வல்லினம் , மெல்லினம் , இடையினம் என்னும் நாற்கணங்களோடு புணரும்போது , இறுதியில் உள்ள மகர மெய் கெட்டு ( நீங்கி ) , உயிர் ஈறாய் நிற்கும் .

அவ்வாறு நிற்கும் உயிர் ஈற்றின் முன்னர் , வருமொழி முதலில் உயிர்கள் வந்தால் அவை உடம்படுமெய் பெறும் ; வல்லினம் வந்தால் வருகின்ற அவ்வல்லின எழுத்து மிகும் ; மெல்லினமும் இடையினமும் வந்தால் அவை இயல்பாகும் .

சான்று :

அல்வழி

இச்சான்றில் நிலைமொழியாக உள்ள பவளம் என்பது மகர மெய் ஈற்றுச்சொல் .

இச்சொல் வருமொழியில் இகர உயிரை முதலாகக் கொண்டு வரும் இதழ் என்ற சொல்லோடு புணரும்போது , இறுதியில் உள்ள மகர மெய் கெட்டுப் பவள என அகர உயிர் ஈறாக நின்றது .

இவ்வாறு நிற்கும் அகர உயிர் ஈற்றின் முன்னர் , இதழ் என்னும் வருமொழி முதலில் வந்த இகர உயிர் வகர உடம்படுமெய் பெற்றுப் பவளவிதழ் என்றாயிற்று .

( பவளவிதழ் – பவளம் போன்ற சிவந்த இதழ் .

உவமைத் தொகை ; கமலக்கண் – கமலம் போன்ற சிவந்த கண். உவமைத்தொகை ; கமலம் – தாமரை ; வட்டமுகம் – வட்டமாகிய முகம் .

பண்புத்தொகை ; பவளவாய் – பவளம் போன்ற சிவந்தவாய் .

உவமைத்தொகை )

வேற்றுமை

( மரவடி – மரத்தினது அடி ; மரக்கிளை – மரத்தினது கிளை ; மரநார் – மரத்தினது நார் ; மரவேர் – மரத்தினது வேர் .

இவை நான்கும் ஆறாம் வேற்றுமைத் தொகை)

2. வருமொழி முதலில் வல்லினம் வந்தால் , ஈற்று மகரமெய் கெடாமல் , வருகின்ற வல்லினத்திற்கு இனமான மெல்லெழுத்தாகத் திரியும் .

சான்று :

அல்வழி

நாம் + சிறியேம் = நாஞ்சிறியேம் நிலம் + தீ = நிலந்தீ

உண்ணும் + சோறு = உண்ணுஞ்சோறு

( நாஞ்சிறியேம் – எழுவாய்த்தொடர் ; நிலந்தீ – நிலமும் தீயும் .

உம்மைத் தொகை ; உண்ணுஞ்சோறு – செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் )

இச்சான்றுகளில் நிலைமொழி ஈற்றில் உள்ள மகரமெய் அல்வழிப் புணர்ச்சியில் கெடாமல் , வருமொழி முதலில் உள்ள வல்லினத்திற்கு இனமான மெல்லெழுத்தாகத் திரிந்தது காணலாம் .

சகரத்திற்கு இனமெல்லெழுத்து ஞகரம் ஆகும் ; தகரத்திற்கு இனமெல்லெழுத்து நகரம் ஆகும் .

வேற்றுமை

மரம் + கண்டார் = மரங்கண்டார்

அறம் + கூறவையம் = அறங்கூறவையம்

( மரங்கண்டார் – மரத்தைக் கண்டார் ; அறங்கூறவையம் – அறத்தைக் கூறும் அவையம் ; பழங்காலத்தில் வழக்காடும் நீதிமன்றத்திற்குரிய பெயர் ; இவை இரண்டும் இரண்டாம் வேற்றுமைத் தொகை )

இச்சான்றுகளில் நிலைமொழி ஈற்றில் உள்ள மகரமெய் , வேற்றுமைப் புணர்ச்சியில் கெடாமல் , வருமொழி முதலில் உள்ள வல்லினத்திற்கு இனமான மெல்லெழுத்தாகத் திரிந்தது காணலாம் .

ககரத்திற்கு இனமெல்லெழுத்து ஙகரம் ஆகும் .

மகர ஈற்றுப் புணர்ச்சிக்குரிய இவ்விரண்டு பொது விதிகளையும் நன்னூலார் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார் .

மவ்வீறு ஒற்றுஅழிந்து உயிர்ஈறு ஒப்பவும் ,

வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும் ( நன்னூல் , 219 )

( மவ்வீறு – மகரமெய் ஈறு ; ஒற்று – மகரமெய் ; அழிந்து – கெட்டு ; உயிர்ஈறு ஒப்பவும் - உயிர் ஈற்றுச் சொற்களைப் போலப் புணர்வனவும் )

2.1.2 மகர ஈற்றுப் புணர்ச்சி – சிறப்பு விதி

வேற்றுமைப் புணர்ச்சியில் , வருமொழி முதலில் வல்லினம் வந்தால் , நிலைமொழியின் இறுதியில் உள்ள மகர மெய் கெட்டு , வருகின்ற வல்லினமோ , அவ்வல்லினத்திற்கு இனமான மெல்லினமோ மிகும் .

அல்வழிப் புணர்ச்சியில் உயிரும் இடையினமும் வந்தால் இறுதியில் உள்ள மகரமெய் கெடாமல் இயல்பாகும் .

இதனை நன்னூலார் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார் .

வேற்றுமை மப்போய் வலிமெலி உறழ்வும் ,

அல்வழி உயிர் இடை வரின் இயல்பும் உள ( நன்னூல் , 220 )

சான்று :

வேற்றுமை

குளம் + கரை > குள + கரை > குள + க் + கரை = குளக்கரை

குளம் + கரை > குள + கரை > குள + ங் + கரை = குளங்கரை

( குளக்கரை , குளங்கரை – குளத்தினது கரை ; ஆறாம் வேற்றுமைத் தொகை )

இச்சான்றுகளில் குளம் என்ற சொல் குள என மகரம் கெட்டு நின்று , கரை என்னும் வல்லின முதல் வருமொழியோடு புணரும்போது , குளக்கரை என வல்லினம் மிக்கும் , குளங்கரை என வல்லினத்துக்கு இனமான மெல்லினம் மிக்கும் புணர்ந்தமை காணலாம் .

அல்வழி

குளம் + அழகியது = குளமழகியது

ஆளும் + அரசன் = ஆளுமரசன்

மரம் + வளர்ந்தது = மரம் வளர்ந்தது

கொல்லும் + யானை = கொல்லும் யானை

( குளமழகியது , மரம் வளர்ந்தது – எழுவாய்த் தொடர் ; ஆளுமரசன் , கொல்லும் யானை – செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் )

இச்சான்றுகளில் உயிரும் , இடையினமும் வர , ஈற்று மகரமெய் கெடாமல் இயல்பாயிற்று .

2.1.3 நும் , தம் , எம் , நம் என்னும் சொற்களுக்குச் சிறப்பு விதி

நீர் என்பது முன்னிலைப் பன்மை இடப்பெயர் ; தாம் என்பது படர்க்கைப் பன்மை இடப்பெயர் ; யாம் , நாம் என்பன தன்மைப் பன்மை இடப்பெயர் .

இந்நான்கு பெயர்களும் வேற்றுமை உருபு ஏற்கும்போது , அவற்றின் முதலில் உள்ள நெடிலானது குறுகும் .

எனவே இவற்றை நெடுமுதல் குறுகும் பெயர்கள் என்பர் .

நீர் + ஐ = நும்மை

தாம் + ஐ = தம்மை

யாம் + ஐ = எம்மை

நாம் + ஐ = நம்மை

எனவே வேற்றுமை உருபு ஏற்கும் போது நீர் , தாம் , யாம் , நாம் என்பன முறையே நும் , தம் , எம் , நம் என நெடுமுதல் குறுகும் பெயர்களாக மாறும் என்பது பெறப்படும்

நும் , தம் , எம் , நம் என்னும் நான்கு சொற்களின் இறுதியில் உள்ள மகர மெய்யானது , வருமொழி முதலில் வருகின்ற ஞகர மெய்யாகவும் , நகர மெய்யாகவும் திரியும் .

நும் , தம்

எம் , நம் ஈறாம் மவ்வரு ஞநவே ( நன்னூல் , 221 )

சான்று :

நும் + ஞாண் = நுஞ்ஞாண்

தம் + ஞாண் = தஞ்ஞாண் எம் + ஞாண் = எஞ்ஞாண்