33

நம் + ஞாண் = நஞ்ஞாண் ( ஞாண் = கயிறு )

நும் + நூல் = நுந்நூல்

தம் + நூல் = தந்நூல்

எம் + நூல் = எந்நூல்

நம் + நூல் = நந்நூல்

2.1.4 அகம் என்னும் சொல்லுக்குச் சிறப்பு விதி

அகம் என்னும் இடப் பெயரின் முன் செவி , கை என்னும் சினைப்பெயர்கள் வந்தால் , அச்சொல்லின் இறுதியில் உள்ள மகரமெய் , வருமொழியின் முதலில் உள்ள வல்லினத்திற்கு இனமாகிய மெல்லெழுத்தாகத் திரிதலேயன்றி , அதன் நடுவில் நிற்கும் ககரமெய்யும் அதன் மேல் ஏறிய அகர உயிரும் கெடும் .

அகம்முனர்ச் செவி , கை வரின் இடையன கெடும் ( நன்னூல் , 222 )

( முனர் – முன்னர் ; இடையன – இடையில் உள்ள ‘ க ’ என்னும் உயிர்மெய் )

சான்று :

அகம் + கை > அகங் + கை > அங் + கை = அங்கை

அகம் + செவி > அகஞ் + செவி > அஞ் + செவி = அஞ்செவி

‘ அங்கைப் புண்ணிற்கு ஆடியும் வேண்டுமோ ?

என்பது ஒரு பழமொழி .

இதில் அகம் + கை என்பது அங்கை என வந்துள்ளது .

( அங்கை – உள்ளங்கை)

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. மகர மெய் ஈற்றுச் சொற்கள் , ஈற்று மெய் கெட்டு வருமொழியில் உள்ள உயிரோடு எவ்வாறு புணரும் ?

விடை

2. கமலக்கண் – பிரித்துக் காட்டுக .

விடை

3. வட்டம் + முகம் – சேர்த்து எழுதுக .

விடை

4. மரம் + வேர் – சேர்த்து எழுதுக .

விடை

5. குளம் முன் வரும் கரை என்னும் சொல் எவ்வாறு புணரும் ?

விடை

6. தாம் , யாம் , நாம் – இச்சொற்கள் வேற்றுமை உருபு ஏற்கும்போது எவ்வாறு அமையும் ?

விடை

7. நந்நூல் – பிரித்துக் காட்டுக .

விடை

8. அகம் முனர்ச் செவிகை வரின் இடையன கெடும் – இந்நூற்பாவில் வரும் இடையன என்பது எதைக் குறிக்கும் ?

விடை

9. அகம் + கை = சேர்த்து எழுதுக .

யகர , ரகர , ழகர ஈற்றுப் புணர்ச்சி விதிகள்

யகர , ரகர , ழகர மெய்களை ஈற்றிலே கொண்ட சொற்கள் நிலைமொழியில் இருக்கும்போது அவற்றோடு , வருமொழி முதலில் வரும் க , ச , த , ப என்னும் வல்லின மெய்கள் அல்வழியிலும் , வேற்றுமையிலும் புணரும் முறையை நன்னூலார் பொதுவிதி கொண்டு விளக்கிக் காட்டுகிறார் .

மேலும் தமிழ் , தாழ் ( தாழ்ப்பாள் ) , கீழ் என்னும் ழகர ஈற்றுச் சொற்கள் நிலைமொழியில் இருந்து வருமொழிகளோடு அவை புணரும் முறையை அவர் சிறப்பு விதிகள் கொண்டு விளக்கிக் காட்டுகிறார் .

2.2.1 யகர , ரகர , ழகர ஈற்றுப் புணர்ச்சி – பொதுவிதி

யகர , ரகர , ழகர , ஈற்றுப் புணர்ச்சிக்குப் பொது விதியாக நன்னூலார் இரண்டனைக் குறிப்பிடுகிறார் .

1. யகர , ரகர , ழகர மெய் ஈறுகளின் முன்னர் வரும் க , ச , த , ப என்னும் வல்லினமெய்கள் அல்வழியில் இயல்பாதலும் , மிகுதலும் பெறும் .

நன்னூலார் இங்கே ய , ர , ழ முன்னர் வரும் வல்லினம் அல்வழியில் இயல்பாகும் அல்லது மிகும் எனப் பொதுப்படக் கூறினாலும் , வல்லினம் இயல்பாதல் எழுவாய்த் தொடர் , உம்மைத் தொகை , வினைத்தொகை ஆகிய மூன்றில் மட்டுமே ஆகும் ; வல்லினம் மிகுதல் வினையெச்சத் தொடர் , பண்புத்தொகை , உவமைத்தொகை ஆகிய மூன்றில் மட்டுமே ஆகும் .

• அல்வழியில் வல்லினம் இயல்பாதல்

சான்று :

வேய் + கடிது = வேய்கடிது எழுவாய்த் தொடர்

வேர் + சிறிது = வேர்சிறிது

வீழ் + பெரிது = வீழ் பெரிது

( வேய் – மூங்கில் ; வீழ் – மர விழுது )

பேய் + பூதம் = பேய்பூதம் உம்மைத் தொகை

நீர் + கனல் = நீர்கனல் இகழ் + புகழ் = இகழ்புகழ்

( பேய்பூதம் – பேயும்பூதமும் ; நீர்கனல் – நீரும் கனலும் ; கனல் – நெருப்பு ; இகழ் புகழ் – இகழும் புகழும் )

செய் + தொழில் = செய்தொழில் வினைத்தொகை

தேர் + பொருள் = தேர்பொருள்

வீழ் + புனல் = வீழ்புனல்

( தேர் – ஆராய்தல் ; புனல் – நீர் )

• அல்வழியில் வல்லினம் மிகுதல்

சான்று :

போய் + பார்த்தான் = போய்ப்பார்த்தான் ( வினையெச்சத் தொடர் )

மெய் + கீர்த்தி = மெய்க்கீர்த்தி இருபெயரொட்டுப் பண்புத்தொகை

கார் + பருவம் = கார்ப்பருவம்

பூழ் + பறவை = பூழ்ப்பறவை

( மெய் – உண்மை ; கீர்த்தி – புகழ் ; மெய்க்கீர்த்தி – உண்மை ஆகிய புகழ் ; கார்ப்பருவம் – கார் ஆகிய பருவம் ; பூழ் – காடை ; பூழ்ப் பறவை – காடை ஆகிய பறவை )

வேய் + தோள் = வேய்த்தோள் உவமைத்தொகை

கார் + குழல் = கார்க்குழல்

( வேய் – மூங்கில் ; கார் – மேகம் ; குழல் , கூந்தல் ; வேய்த்தோள் – மூங்கில் போன்ற வழுவழுப்பான தோள் ; கார்க்குழல் – மேகம் போன்ற கரிய கூந்தல் )

2. யகர , ரகர , ழகர மெய் ஈறுகளின் முன்னர் வரும் க , ச , த , ப என்னும் வல்லின மெய்கள் வேற்றுமையில் மிகுதலும் , இனத்தோடு உறழ்தலும் பெறும் .

( இனத்தோடு உறழ்தலாவது ஒரே புணர்ச்சியில் வல்லினமும் மெல்லினமும் மிகுந்து வருதல் ஆகும்)

• வேற்றுமையில் வல்லினம் மிகுதல்

சான்று :

நாய் + கால் = நாய்க்கால்

தேர் + கால் = தேர்க்கால்

ஊழ் + பயன் = ஊழ்ப்பயன்

( நாய்க்கால் – நாயினது கால் ; தேர்க்கால் – தேரினது கால் ; கால் – சக்கரம் ; ஊழ்ப்பயன் – ஊழினது பயன் ; ஊழ் - விதி .

இவை மூன்றும் ஆறாம் வேற்றுமைத் தொகை )

• வேற்றுமையில் வல்லினம் இனத்தோடு உறழ்தல்

சான்று :

வேய் + குழல் = வேய்க்குழல் , வேய்ங்குழல்

ஆர் + கோடு = ஆர்க்கோடு , ஆர்ங்கோடு

குமிழ் + கோடு = குமிழ்க்கோடு , குமிழ்ங்கோடு

( வேய் – மூங்கில் ; வேய்க்குழல் – மூங்கிலால் ஆகிய குழல் , புல்லாங்குழல் ; ஆர் – ஆத்திமரம் ; கோடு – கிளை ; குமிழ் – குமிழ்மரம் ; ஆர்க்கோடு – ஆத்திமரத்தினது கிளை ; குமிழ்க்கோடு – குமிழமரத்தினது கிளை .

இவை இரண்டும் ஆறாம் வேற்றுமைத் தொகை )

யகர , ரகர , ழகர ஈறுகளுக்குரிய இவ்விரு புணர்ச்சி விதிகளை நன்னூலார் பின்வரும் நூற்பாவில் தருகிறார் .

யரழ முன்னர்க் கசதப அல்வழி

இயல்பும் மிகலும் ஆகும் ; வேற்றுமை

மிகலும் , இனத்தோடு உறழ்தலும் விதிமேல் ( நன்னூல் , 224 )

( இனத்தோடு உறழ்தல் – வல்லினமாகவும் , அதற்கு இனமாகவும் மிகுந்து வருதல் .

இதை வல்லினம் விகற்பித்தல் என்றும் கூறுவர்)

2.2.2 தமிழ் , தாழ் என்னும் சொற்களுக்குச் சிறப்பு விதி

1. தமிழ் என்னும் ழகர மெய் ஈற்றுச் சொல் வேற்றுமைப் புணர்ச்சியில் நாற்கணங்களும் வர அகரச் சாரியை பொருந்தவும் பெறும் .

சான்று :

தமிழ் + அரசன் > தமிழ் + அ + அரசன் = தமிழவரசன்

தமிழ் + பிள்ளை > தமிழ் + அ + பிள்ளை = தமிழப்பிள்ளை

தமிழ் + நாகன் > தமிழ் + அ + நாகன் = தமிழநாகன்

தமிழ் + வளவன் > தமிழ் + அ + வளவன் = தமிழவளவன்

( தமிழப்பிள்ளை – தமிழை உடைய பிள்ளை ; இரண்டாம் வேற்றுமைத் தொகை .

மற்றவற்றிற்கும் இவ்வாறே வேற்றுமைப் பொருள் விரித்துக் கொள்க)

2. தாழ் என்ற ழகர ஈற்றுச் சொல்லும் , கோல் என்னும் சொல் வருமொழியில் வரும்போது அகரச்சாரியை பெறும் .

சான்று :

தாழ் + கோல் > தாழ் + அ + கோல் = தாழக்கோல் ( தாழக்கோல் – திறவுகோல் )

தமிழ் அவ்வுறவும் பெறும் வேற்றுமைக்கே ;

தாழும் கோல்வந்து உறுமேல் அற்றே ( நன்னூல் , 226 )

2.2.3 கீழ் என்னும் சொல்லுக்குச் சிறப்பு விதி

கீழ் என்னும் சொல்லின் முன்னர் வரும் வல்லினம் விகற்பம் ஆகும் .

அதாவது ஒரே புணர்ச்சியில் வல்லினம் இயல்பாதல் , மிகுதல் ஆகிய இரண்டையும் பெறும் .

கீழின்முன் வன்மை விகற்பமும் ஆகும் ( நன்னூல் , 226 )

சான்று :

கீழ் + குலம் = கீழ்குலம் , கீழ்க்குலம்

கீழ் + தெரு = கீழ்தெரு , கீழ்த்தெரு

தொகுப்புரை

இதுகாறும் மகர ஈற்றுப் புணர்ச்சி பற்றியும் , யகர , ரகர , ழகர ஈற்றுப்புணர்ச்சி பற்றியும் நன்னூலார் கூறியனவற்றை விரிவாகப் பார்த்தோம் .

ஈண்டு அவற்றைச் சுருக்கமாகத் தொகுத்துக் காண்போம் .

மகர ஈற்றுச் சொற்கள் , ஈற்றில் உள்ள மகரமெய் கெட்டு உயிர் ஈறாய் நின்று நாற்கணங்களை முதலாகக் கொண்ட வருமொழிகளோடு புணரும் .

அவ்வாறு உயிர்ஈறாய் நிற்கும் சொற்களின் முன்னர் வருமொழி முதலில் உயிர்கள் வந்தால் அவை உடம்படுமெய் பெறும் ; வல்லினம் வந்தால் வருகின்ற வல்லினம் மிகும் ; மெல்லினமும் இடையினமும் வந்தால் அவை இயல்பாகும் .

நீர் , தாம் , யாம் , நாம் என்னும் மூவிடப் பன்மைப் பெயர்கள் புணர்ச்சியில் நும் , தம் , எம் , நம் என நெடுமுதல் குறுகிய பெயர்களாக நின்று , வருமொழி முதலில் உள்ள ஞகர , நகர மெய்களோடு புணரும் .

அகம் என்ற சொல் , செவி , கை என்னும் சொற்களுடன் புணரும்போது அச்சொல்லின் இடையில் உள்ள ‘ க ’ என்ற உயிர்மெய் கெடும் .

ய , ர , ழ என்னும் மெய் ஈறுகளில் முன் வரும் க , ச , த , ப என்னும் வல்லின மெய்கள் அல்வழியில் இயல்பாதலும் , மிகுதலும் பெறும் ; வேற்றுமையில் மிகுதலும் , இனத்தோடு உறழ்தலும் பெறும் .

வேற்றுமைப் புணர்ச்சியில் தமிழ் என்ற சொல் அகரச் சாரியை பெற்றுப் புணரும் .

கீழ் என்னும் சொல்லின் முன் வரும் வல்லினம் இயல்பாகவும் வரும் ; மிக்கும் வரும் .

இவற்றை எல்லாம் இப்பாடத்தின் வாயிலாக அறிந்து கொண்டோம் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. ய , ர , ழ ஈறுகளின் முன்வரும் வல்லினம் அல்வழியில் எவ்வெவ்வாறு புணரும் ?

விடை

2. பேய் + பூதம் = சேர்த்து எழுதுக .

விடை

3. அல்வழியில் யகர ஈற்று வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகுமா ?

சான்று தருக .

விடை

4. வேற்றுமையில் ய , ர , ழ ஈறுகளின் முன் வரும் வல்லினம் மிகுதலுக்குச் சான்று தருக .

விடை

5. வேற்றுமைப் புணர்ச்சியில் தமிழ் என்னும் சொல் பெறும் சாரியை யாது ?

விடை

6. தாழ் + கோல் – எவ்வாறு புணரும் ?

விடை

7. கீழ் என்ற சொல்லின் முன் வல்லினம் எவ்வாறு வரும் ?

மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகள் – III

பாட முன்னுரை

சென்ற இருபாடங்களில் ண் , ன் , ம் , ய் , ர் , ழ் ஆகிய ஆறு மெய் ஈறுகளுக்கான புணர்ச்சி பற்றி நன்னூலார் கூறியனவற்றைப் பார்த்தோம் .

இப்பாடத்தில் லகர , ளகர மெய் ஈற்றுப் புணர்ச்சி பற்றி அவர் மெய் ஈற்றுப் புணரியலில் கூறுவனவற்றைப் பார்ப்போம் .

மெய் ஈற்றுப் புணரியலில் எல்லா மெய் ஈறுகளுக்கான புணர்ச்சியையும் தனித்தனியே ஒன்றன்பின் ஒன்றாகக் கூறி முடித்த பின்னர் , நன்னூலார் வருமொழியின் முதலில் வரும் தகர மெய்யும் நகர மெய்யும் நிலைமொழியின் இறுதியில் வரும் ன் , ண் , ல் , ள் ஆகிய மெய்களோடு புணரும்போது , வேறு மெய்களாகத் திரிகின்ற முறையைக் குறிப்பிட்டு விளக்குகிறார் .

உயிர் ஈற்றுப் புணரியலிலும் மெய் ஈற்றுப் புணரியலிலும் கூறிய புணர்ச்சி விதிகளுக்கு மாறுபட்ட சொற்புணர்ச்சிகள் சில செய்யுள் வழக்கிலும் , பேச்சு வழக்கிலும் இருப்பதைக் கண்ட நன்னூலார் அவையும் ஒரு காரணம் கருதி அமைந்திருப்பதால் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மெய் ஈற்றுப் புணரியலில் உள்ள இறுதி நூற்பாவில் குறிப்பிடுகிறார் .

இவற்றையும் இப்பாடத்தில் விளக்கமாகக் காண்போம் .

லகர , ளகர ஈற்றுப் புணர்ச்சி விதிகள்

லகர , ளகர மெய்களை ஈற்றிலே கொண்ட சொற்கள் , வல்லினம் , மெல்லினம் , இடையினம் என்னும் மூவின மெய்களை முதலாகக் கொண்ட வருமொழிகளோடு புணரும் முறையைப் பொது விதி கொண்டும் , சிறப்பு விதி கொண்டும் நன்னூலார் விளக்குகிறார் .

மேலும் நெல் , செல் , கொல் , சொல் , இல் என்னும் லகர ஈற்றுச் சொற்கள் வல்லினத்தை முதலாகக் கொண்ட வருமொழிகளோடு புணரும் முறையைச் சிறப்பு விதிகள் கொண்டு விளக்குகிறார் .

அவற்றை ஈண்டுக் காண்போம் .

3.1.1 லகர , ளகர ஈற்றுப் புணர்ச்சி – பொதுவிதி

லகர , ளகர மெய் ஈற்றுப் புணர்ச்சிக்குப் பொதுவிதியாக நன்னூலார் நான்கனைக் குறிப்பிடுகிறார் .

அவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சான்றுடன் காண்போம் . 1. நிலைமொழி இறுதியில் உள்ள லகர , ளகர மெய்கள் , வேற்றுமைப் புணர்ச்சியில் , வருமொழி முதலில் வல்லினம் ( க , ச , த , ப ) வந்தால் முறையே றகர மெய்யாகவும் , டகர மெய்யாகவும் திரியும் .

அதாவது லகர மெய் றகர மெய்யாகவும் , ளகரமெய் டகர மெய்யாகவும் திரியும் .

சான்று :

கல் + கோயில் = கற்கோயில்

முள் + செடி = முட்செடி

( கற்கோயில் – கல்லால் ஆகிய கோயில் .

மூன்றாம் வேற்றுமைத் தொகை ; முட்செடி – முள்ளை உடைய செடி .

இரண்டாம் வேற்றுமைத் தொகை )

2. அல்வழிப் புணர்ச்சியில் , வருமொழி முதலில் வல்லினம் வந்தால் , லகர ளகர மெய்கள் முறையே றகர மெய்யாகவும் , டகர மெய்யாகவும் திரிந்தும் வரும் ; திரியாமல் இயல்பாயும் வரும் .

சான்று :

கால் + பெரிது = காற்பெரிது , கால்பெரிது

முள் + சிறிது = முட்சிறிது , முள்சிறிது

( இவை அல்வழியில் எழுவாய்த் தொடர் )

இச்சான்றுகளில் ஒரே புணர்ச்சியில் லகரம் றகரமாய்த் திரிந்தும் , திரியாமல் இயல்பாயும் வந்துள்ளதையும் , ளகரம் டகரமாய்த் திரிந்தும் , திரியாமல் இயல்பாயும் வந்துள்ளதையும் காணலாம் .

3. அல்வழி , வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழி முதலில் மெல்லினம் வந்தால் லகர மெய் னகர மெய்யாகவும் , ளகர மெய் ணகர மெய்யாகவும் திரியும் .

சான்று :

கல் + மனம் = கன்மனம் அல்வழி

வாள் + மாண்டது = வாண்மாண்டது

( கன்மனம் – கல் போன்ற மனம் .

உவமைத் தொகை ; வாண் மாண்டது – வாள் மாட்சிமைப்பட்டது .

எழுவாய்த்தொடர் )

தோல் + முரசு = தோன்முரசு வேற்றுமை

முள் + மலர் = முண்மலர்

( தோன்முரசு – தோலால் கட்டப்பட்ட முரசு .

மூன்றாம் வேற்றுமைத் தொகை ; முண் மலர் – முள்ளை உடைய மலர் .

இரண்டாம் வேற்றுமைத் தொகை )

4. அல்வழி , வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழி முதலில் இடையினம் வந்தால் லகர , ளகர மெய்கள் இயல்பாகும் .

சான்று :

கொல் + யானை = கொல்யானை அல்வழி

கள் + வழிந்தது = கள்வழிந்தது

( கொல் யானை – வினைத்தொகை ; கள் வழிந்தது – எழுவாய்த் தொடர் )

வில் + வளைத்தான் = வில் வளைத்தான் வேற்றுமை

தோள் + வலிமை = தோள் வலிமை

( வில் வளைத்தான் – வில்லை வளைத்தான் .

இரண்டாம் வேற்றுமைத் தொகை ; தோள் வலிமை – தோளினது வலிமை – ஆறாம் வேற்றுமைத் தொகை)

லகர ளகர ஈற்றுப் புணர்ச்சிக்குரிய இந்நான்கு பொதுவிதியையும் நன்னூலார் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார் .

லள வேற்றுமையில் றடவும் , அல்வழி

அவற்றோடு உறழ்வும் வலிவரின் ஆம் , மெலி

மேவின் னணவும் , இடைவரின் இயல்பும் ,

ஆகும் இருவழி யானும் என்ப ( நன்னூல் , 227 )

( உறழ்வும் – ஒரே புணர்ச்சியில் லகர , ளகர மெய்கள் றகர , டகர மெய்களாகத் திரிந்தும் , திரியாமல் இயல்பாய் வருதலும் உண்டு ; வலி – வல்லினம் ; மெலி – மெல்லினம் ; மேவின் - வந்தால் ; இடை – இடையினம் ; இருவழி – அல்வழி , வேற்றுமை )

3.1.2 லகர , ளகர ஈற்றுப் புணர்ச்சி – சிறப்பு விதி

நன்னூலார் லகர , ளகர ஈற்றுப் புணர்ச்சிக்கு உரிய சிறப்பு விதிகள் சிலவற்றைக் குறிப்பிடுகிறார் .

• தனிக்குறிலைச் சார்ந்த லகர , ளகர ஈற்றுப் புணர்ச்சி

அல்வழிப் புணர்ச்சியில் , தனிக்குறிலின் பின் நின்ற லகர , ளகர மெய்கள் வருமொழி முதலில் தகர மெய் வருமானால் முறையே றகர , டகர மெய்களாகத் திரிவதோடு அல்லாமல் ஆய்தமாகவும் திரியும் .

குறில்வழி லளத் தவ்வணையின் ஆய்தம்

ஆகவும் பெறும் அல்வழி யானே ( நன்னூல் , 228 )

( தவ்வணையின் – த அணையின் ; அணையின் – வருமானால் )

சான்று :

கல் + தீது = கற்றீது , கஃறீது முள் + தீது = முட்டீது , முஃடீது