35

மழ + களிறு = மழக்களிறு

என வல்லினம் மிகுந்து வரவேண்டும் .

ஆனால் நனி என்பது மிகுதி என்னும் பொருளையும் , மழ என்பது இளமை என்னும் பொருளையும் உணர்த்தும் உரிச்சொற்கள் ஆதலால் , இவை இவ்விதியைக் கொள்ளாது ,

நனிபேதை , மழகளிறு

என வல்லினம் மிகாது இயல்பாகப் புணர்ந்தன .

• வடசொற்கள்

சான்று :

இதயம் + கமலம் = இதய கமலம்

உதயம் + தாரகை = உதய தாரகை

( இதயம் – உள்ளம் ; கமலம் – தாமரை ; உதயம் – விடிதல் ; தாரகை – வெள்ளி நட்சத்திரம் ; உதயதாரகை – விடிவெள்ளி )

இவை மவ்வீறு ஒற்று அழிந்து உயிர் ஈறு ஒப்பவும் ( நன்னூல் , 219 ) என்ற விதிப்படி , இதயக் கமலம் , உதயத் தாரகை என வரவேண்டும் .

ஆனால் மகர ஈறு கெட்டாலும் , இவை வடசொற்கள் ஆதலால் இவ்விதியைக் கொள்ளாமல் இயல்பாகப் புணர்ந்தன .

ஆதிபகவன் , உதய சூரியன் போன்றவற்றிலும் வடசொற்கள் இயல்பாகப் புணர்ந்தமை காணலாம் .

• இலக்கணப் போலிச் சொற்கள்

இலக்கணம் இல்லாதனவாயினும் , இலக்கணம் உடையது போலச் சான்றோர்களால் தொன்றுதொட்டு வழங்கப்பட்டுவரும் சொற்கள் இலக்கணப் போலிச் சொற்கள் எனப்படும் .

சான்று : இல்முன் என்பதை முன்றில் எனக் கூறுதல் .

இல்முன் > முன் + இல் = முன்றில்

இதில் சொற்கள் முன்பின்னாக மாறிப் புணர்ந்துள்ளதால் இலக்கணப்போலி என்றனர் .

முன் + இல் என்பது ,

தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும் ( நன்னூல் , 205 )

என்ற விதிப்படி முன்னில் என வரவேண்டும் .

ஆனால் இது இலக்கணப்போலி ஆதலால் இவ்விதியைக் கொள்ளாமல் இடையில் றகரமெய் பெற்று முன்றில் என முடிந்தது .

• மரூஉச் சொற்கள்

தொன்றுதொட்டு வருதலின்றி இடையில் சில எழுத்துகள் தோன்றியும் திரிந்தும் கெட்டும் இலக்கணம் சிதைந்து தானே மருவி வழங்கும் சொற்கள் மரூஉச் சொற்கள் எனப்படும் .

சான்றாக அருமருந்தன்ன என்பதை அருமந்த என்று கூறுதலைச் சொல்லலாம் .

அருமை + மருந்து + அன்ன = அருமருந்தன்ன

என வரவேண்டும் .

ஆனால் இது அருமந்த எனவருகிறது .

மருந்து + அன்ன என்பது உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் ( நன்னூல் , 164 ) என்ற விதிப்படி மருந்தன்ன என்று வாராமல் , சில எழுத்துகள் கெட்டு ( நீங்கி ) மந்த என்று அமைந்து வழங்குகிறது .

மேலே கூறியவற்றைப் போல , கூறப்பட்ட புணர்ச்சி விதிகளுக்கு மாறாக ஒரு காரணம் பற்றி வேறொரு புணர்ச்சியுடன் அமைவனவற்றை ஏற்றுக்கொள்ளலாம் என்பது நன்னூலார் கருத்து .

இதனை அடியொற்றியே இன்று கற்றறிந்த அறிஞர்கள் கூட , எழுத்துத் தமிழில் , வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்துக் ‘ கள் ’ என்னும் விகுதியைச் சேர்த்து எழுதும்போது , ‘ வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன்வரும் வல்லினம் மிகும் ’ என்ற நன்னூல் விதிப்படி ,

கருத்து + கள் = கருத்துக்கள்

எழுத்து + கள் = எழுத்துக்கள்

என்று வல்லினம் மிகுமாறு எழுதாமல் ,

கருத்து + கள் = கருத்துகள்

எழுத்து + கள் = எழுத்துகள்

என வல்லினம் மிகாமல் எழுதி வருகின்றனர் .

வன்தொடர்க் குற்றியலுகரச் சொல்லின் முன்னர் வரும் ‘ கள் ’ என்னும் பன்மை விகுதி இடைச்சொல்லாதலால் நன்னூலார் கூறிய புறனடை நூற்பாவின்படி , கருத்துகள் என வல்லினம் மிகாமல் இயல்பாக எழுதுவது ஏற்புடையதே ஆகும் .

தொகுப்புரை

இதுவரை லகர , ளகர ஈற்றுப் புணர்ச்சி பற்றியும் , வருமொழி தகர , நகரத் திரிபுகள் பற்றியும் நன்னூலார் கூறியனவற்றை அறிந்து கொண்டோம் .

உயிர் ஈற்றுப் புணரியல் , மெய் ஈற்றுப் புணரியல் ஆகியவற்றில் சொல்லப்பட்ட புணர்ச்சி விதிகளுக்கு மாறுபட்டு இடைச்சொற்கள் , உரிச்சொற்கள் , வடசொற்கள் ஆகியவையும் , இலக்கணப் போலிச் சொற்களும் , மரூஉச் சொற்களும் , வேறுபட்ட சில புணர்ச்சியைப் பெற்று வருதலை ஏற்றுக் கொள்ளலாம் என்று நன்னூலார் குறிப்பிடும் விதிவிலக்கினை அறிந்து கொள்ளலாம் .

நன்னூலார் குறிப்பிடும் விதிவிலக்கின் வழிநின்று , புணர்ச்சி இலக்கணப்படி வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் கள் விகுதி சேர்த்து எழுதும் போது , கருத்துக்கள் , எழுத்துக்கள் என வல்லினம் மிகுமாறு எழுதாமல் கருத்துகள் , எழுத்துகள் என வல்லினம் மிகாமல் எழுதுவது இன்று கற்றறிந்த அறிஞர்களிடமும் நிலைத்துவிட்டது என்பதை அறிந்துகொள்ளலாம் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. நிலைமொழியின் இறுதியில் உள்ள னகர , லகர மெய்களுக்கு முன் வரும் தகர மெய் எவ்வாறு திரியும் ?

விடை

2. பொற்றாமரை , கற்றாழை – பிரித்து எழுதுக .

விடை

3. பொன் + நாடு , பல் + நலம் – இவற்றைச் சேர்த்து எழுதுக .

விடை 4. நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகர , ளகர மெய்களுக்கு முன் வரும் நகர மெய் எவ்வாறு திரியும் ?

விடை

5. முள் + தாமரை – சேர்த்து எழுதுக .

விடை

6. கண்ணோய் – பிரித்து எழுதுக .

உருபு புணர்ச்சி – I

பாட முன்னுரை

வேற்றுமை உருபுகள் நிலைமொழியோடும் வருமொழியோடும் புணரும் புணர்ச்சி உருபு புணர்ச்சி எனப்படும் .

‘ ஐ , ஆல் , கு , இன் , அது , கண் ’ என்பன வேற்றுமை உருபுகள் ஆகும் .

இவை பெயர்ச்சொல்லுக்கு இறுதியில் வந்து , அப்பெயர்ச்சொற்களின் பொருளை வேற்றுமை செய்யும் காரணத்தால் வேற்றுமை உருபுகள் எனப்பட்டன என்பதைப் புணர்ச்சியும் அதன் பாகுபாடும் என்ற பாடத்தில் ஏற்கெனவே பார்த்தோம் .

வேற்றுமை உருபுகள் வருமொழியாக நின்று , நிலைமொழியில் உள்ள பெயர்ச்சொல்லோடு புணரும் .

சான்று : கல் + ஐ = கல்லை .

பெயர்ச்சொல்லோடு சேர்ந்து நிலைமொழியின் இறுதியில் நின்று வருமொழியில் உள்ள சொற்களோடும் புணரும் .

சான்று : கல்லை + கண்டான் = கல்லைக் கண்டான் .

இவ்வாறு புணரும்போது அவ்வேற்றுமை உருபுகள் உயிர் ஈற்றுப் புணர்ச்சியிலும் , மெய்ஈற்றுப் புணர்ச்சியிலும் வேற்றுமைக்குச் சொல்லப்பட்ட புணர்ச்சி விதிகளைப் பெறும் .

பெயர்ச்சொல்லோடு வேற்றுமை உருபுகள் வந்து புணரும்போது , அவை இரண்டனுக்கும் இடையே சாரியைகள் என்று சொல்லப்படும் இடைச்சொற்கள் வருதலும் உண்டு .

சான்றாக மரம் என்ற பெயர்ச்சொல்லோடு , ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு வருமொழியில் வந்து புணரும்போது , மரமை என்று புணராது ; மரத்தை என்று புணரும் .

மரம் + அத்து + ஐ என்பதே மரத்தை என்றாகியது .

இங்கே மரம் என்பதற்கும் , ஐ என்பதற்கும் இடையில் வந்துள்ள அத்து என்பது சாரியை ஆகும் .

நிலைமொழியில் உள்ள பெயர்ச்சொல்லையும் , வருமொழியில் வரும் வேற்றுமை உருபுகளையும் சேர்த்து எளிதாக உச்சரிப்பதற்குச் சாரியை வருகின்றது .

நன்னூலார் எழுத்ததிகாரத்தில் இறுதியாக அமைந்த உருபு புணரியலில் உருபு புணர்ச்சி பற்றியும் , உருபு புணர்ச்சியில் சாரியைகள் வருவது பற்றியும் கூறுகிறார் .

எல்லாம் , எல்லாரும் , எல்லீரும் , ஆ , மா , கோ என்னும் பெயர்களும் , தான் , தாம் , நாம் , யான் , யாம் , நீ , நீர் என்னும் மூவிடப் பெயர்களும் வேற்றுமை உருபுகளோடு புணரும் முறை பற்றியும் கூறுகிறார் .

உருபு புணரியலில் அவர் கூறும் கருத்துகளை இப்பாடத்திலும் , இதனை அடுத்து வரும் பாடத்திலும் விளக்கமாகவும் விரிவாகவும் காண்போம் .

இப்பாடத்தில் வேற்றுமை உருபுகளும் , அவை வரும் இடமும் , வருவதற்குக் காரணமும் பற்றி நன்னூலார் கூறும் கருத்துகள் விளக்கிக் காட்டப்படுகின்றன .

வேற்றுமை உருபுகள் நிலைமொழி வருமொழிகளோடு புணரும் உருபு புணர்ச்சி பற்றி அவர் கருத்துகள் சான்றுடன் விளக்கப்படுகின்றன .

சாரியைகள் என்று கூறப்படும் இடைச்சொற்கள் விகுதிப் புணர்ச்சி , பதப்புணர்ச்சி , உருபு புணர்ச்சி என்னும் மூவகைப் புணர்ச்சியிலும் வருமென நன்னூலார் குறிப்பிடுகிறார் .

இம் மூவகைப் புணர்ச்சியிலும் வரும் பொதுச்சாரியைகளைத் தொகுத்து அவர் தருகிறார் , இவையும் இப்பாடத்தில் சான்றுகளுடன் விளக்கிக் காட்டப்படுகின்றன .

வேற்றுமை உருபுகள்

வேற்றுமை எட்டு வகைப்படும் .

அவற்றுள் முதல் வேற்றுமை பெயர் வேற்றுமை எனப்படும் .

இவ்வேற்றுமை உருபு எதுவும் ஏற்காது .

பெயர் மட்டுமே நிற்றலால் , பெயர் வேற்றுமை எனப்பட்டது .

இப்பெயர் ஒரு தொடரில் எழுவாயாக வருவதால் எழுவாய் வேற்றுமை என்றும் கூறப்படும் .

எட்டாம் வேற்றுமை விளித்தல் ( அழைத்தல் ) பொருளில் வருவதால் விளிவேற்றுமை என்று கூறப்படும் .

இவை இரண்டும் நீங்கலான பிற ஆறு வேற்றுமைகளுக்கு மட்டுமே தனித்தனி உருபுகள் உண்டு .

அவை ஐ , ஆல் , கு , இன் , அது , கண் என்பன ஆகும் .

இவ்வேற்றுமைகள் ஒவ்வொன்றும் அவற்றிற்கு உரிய உருபினைக் கொண்டு ஐ வேற்றுமை , ஆல் வேற்றுமை என்றவாறு பெயரிட்டும் அழைக்கப்படும் .

நன்னூலார் சொல்லதிகாரத்தில் அமைந்த முதல் இயலாகிய பெயரியலில் வேற்றுமையின் இலக்கணத்தை விளக்குகிறார் .

( நன்னூல் , 291-293 ) அதில் வேற்றுமையில் எழுவாயாக வரும் பெயரையும் உருபு என்றே குறிப்பிடுகிறார் .

எழுவாயாக வரும் அப்பெயர் உருபே , ஐ முதலாகிய ஆறு வேற்றுமை உருபுகளையும் ஏற்கும் என்கிறார் .

இதனை ,

ஆறன் உருபும் ஏற்கும் அவ்வுருபே ( நன்னூல் , 293 )

என்ற பெயரியல் நூற்பாவில் குறிப்பிடுகிறார் .

( அவ்வுருபே - எழுவாய் உருபே )

விளிவேற்றுமையும் பெயரின் திரிபாதலால் அதனையும் நன்னூலார் உருபு என்றே கொள்கிறார் .

பெயர்ச்சொல்லோடு விளியுருபுகள் சேர்ந்தே எட்டாம் வேற்றுமை விளித்தல் பொருளில் வரும் .

சான்று :

இராமன் > இராமா

அரசன் > அரசே

இங்கு ஆ , ஏ என்பன விளியுருபுகளாக வருகின்றன . எனவே நன்னூலார் கருத்துப்படி எட்டு வேற்றுமைகளுமே உருபுகள் என்பதாம் .

அவை பெயர் , ஐ , ஆல் , கு , இன் , அது , கண் , விளி என்பன ஆகும் .

இந்த எட்டு வேற்றுமை உருபுகளும் நாற்பது ஆகின்றன என்று நன்னூலார் உருபு புணரியலில் கூறுகிறார் .

4.1.1 வேற்றுமை உருபுகள் எட்டும் நாற்பது ஆதல்

ஒருவன் , ஒருத்தி , பலர் , ஒன்று , பல என்னும் வாய்பாடுகளில் அமைந்துவரும் ஐம்பால் பெயர்களோடு , பெயர் வேற்றுமை முதல் விளிவேற்றுமை வரையிலான எட்டு வேற்றுமை உருபுகளையும் பெருக்கிக் கணக்கிட , வேற்றுமை உருபுகள் நாற்பது ஆகும் .

ஒருவன் ஒருத்தி பலர்ஒன்று பல என

வருபெயர் ஐந்தொடு பெயர்முதல் இருநான்கு

உருபும் உறழ்தர நாற்பதாம் உருபே ( நன்னூல் , 240 )

( உறழ்தர – பெருக்கிக் கணக்கிட )

சான்று :

நம்பி – முதல் வேற்றுமை ( பெயர் வேற்றுமை )

நம்பியை – இரண்டாம் வேற்றுமை ( ஐ வேற்றுமை )

நம்பியால் – மூன்றாம் வேற்றுமை ( ஆல் வேற்றுமை )

நம்பிக்கு – நான்காம் வேற்றுமை ( கு வேற்றுமை )

நம்பியின் – ஐந்தாம் வேற்றுமை ( இன் வேற்றுமை )

நம்பியது – ஆறாம் வேற்றுமை ( அது வேற்றுமை )

நம்பி கண் – ஏழாம் வேற்றுமை ( கண் வேற்றுமை )

நம்பீ – எட்டாம் வேற்றுமை ( விளி வேற்றுமை )

இவ்வாறே நங்கை , மக்கள் , மரம் , மரங்கள் என்னும் ஏனைய நான்கு வாய்பாட்டுப் பெயர்களோடு எட்டு வேற்றுமை உருபுகளையும் கூட்டினால் வேற்றுமை உருபுகள் மொத்தம் நாற்பது ஆகும் .

4.1.2 வேற்றுமை உருபுகள் வருதற்குக் காரணமும் வரும் இடமும்

வேற்றுமை உருபுகள் தமது பொருளைக் கொடுக்க , பெயர்க்குப் பின்னால் வரும் .

பெயர்வழித் தம்பொருள் தரவரும் உருபே ( நன்னூல் , 241 )

தம்பொருள் தரவரும் என்றது பெயர் வேற்றுமை உருபு கருத்தாப் பொருளையும் , ஐ உருபு செயப்படுபொருளையும் , இதுபோல மற்ற வேற்றுமை உருபுகள் தத்தமக்கு உரிய பொருளையும் பெயர்க்குப் பின்னால் வந்து தரும் என்பதைக் குறிக்கும் .

சான்று

நம்பி கண்டான் - பெயர் - கருத்தாப்பொருள்

நம்பியைக் கண்டான் - ஐ - செயப்படுபொருள்

நம்பியால் பெற்றான் - ஆல் - கருவிப்பொருள்

நம்பிக்குக் கொடுத்தான் - கு - கொடைப்பொருள்

நம்பியின் பிரிந்தான் - இன் - நீங்கல்பொருள்

நம்பியது வீடு - அது - கிழமைப்பொருள்

நம்பிகண் செல்வம் - கண் - இடப்பொருள்

நம்பீ !

வா - விளி - விளிப்பொருள்

( கிழமைப்பொருள் – உடைமைப்பொருள் )

4.1.3 வேற்றுமை உருபுகள் நிலைமொழி வருமொழிகளோடு புணரும் முறை

வேற்றுமை உருபுகள் மெய்யையும் உயிரையும் முதலிலும் ஈற்றிலும் பெற்று வரும் .

வேற்றுமை உருபுகள் வருமொழியாக வரும்போது நிலைமொழியில் சேர்ந்து நிற்கும் போது

ஐ ஐ – உயிர்முதல் ஐ – உயிர் ஈறு

ஆல் ஆ – உயிர்முதல் ல் – மெய் ஈறு

கு க் – மெய்முதல் உ – உயிர் ஈறு

இன் இ – உயிர்முதல் ன் – மெய் ஈறு

அது அ – உயிர்முதல் உ – உயிர் ஈறு

கண் க் – மெய் முதல் ண் – மெய் ஈறு

இனி நன்னூலார் வேற்றுமை உருபுகள் நிலைமொழி வருமொழிகளோடு புணரும் உருபு புணர்ச்சி பற்றிக் கூறுவனவற்றைக் காண்போம் .

மெய்யையும் உயிரையும் முதலும் ஈறுமாக உடைய ‘ ஐ , ஆல் , கு , இன் , அது , கண் ’ என்னும் ஆறு வேற்றுமை உருபுகளும் நிலைமொழி வருமொழிகளோடு புணரும்போது , ஏற்கெனவே உயிர்ஈற்றுப் புணரியல் , மெய் ஈற்றுப் புணரியல் ஆகிய இரண்டு இயல்களுள்ளும் , வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சொல்லப்பட்ட இயல்பாதல் , விகாரமாதல் ( தோன்றல் , திரிதல் , கெடுதல் ) என்னும் புணர்ச்சி விதிகளைப் பெரும்பாலும் ஒத்து நடக்கும் .

ஒற்றுஉயிர் முதல்ஈற்று உருபுகள் புணர்ச்சியின்

ஒக்கும்மன் அப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே ( நன்னூல் , 242 )

( வேற்றுமைப் புணர்ப்பு – வேற்றுமைப் புணர்ச்சி )

சான்று : 1

உயிர் எழுத்தை . ........மிகாது .

நம்பி + கண் = நம்பிகண்

உயிர் எழுத்தை ஈறாகக் கொண்ட உயர்திணைப் பெயர் முன் வரும் வல்லினம் மிகாது .

பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்கள் ஈற்றுமெய்

வலிவரின் இயல்பாம் ஆவி யரமுன்

வன்மை மிகா ( நன்னூல் , 159 )

என்ற விதிப்படி நம்பி என்ற இகர உயிர் ஈற்று உயர்திணைப் பெயர்முன் , வருமொழி முதலில் வந்துள்ள க் என்ற வல்லினம் மிகாமல் நம்பிகண் என்று இயல்பாயிற்று .

நம்பிகண் + வாழ்வு = நம்பிகண் வாழ்வு

கண் என்ற ஏழாம் வேற்றுமை உருபு , நம்பி என்ற நிலைமொழியோடு இயல்பாய்ப் புணர்ந்து , நம்பிகண் என்று நிலைமொழியாக நிற்க , அந்தக் கண் உருபின் இறுதியில் உள்ள ணகரமெய் , வருமொழி முதலில் வ் என்ற இடையின மெய் வர ,

ணன வல்லினம் வரட்டறவும் பிறவரின்

இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு ( நன்னூல் , 209 )

( ணன என்னும் மெய்கள் , வல்லினம் அல்லாத பிறமெல்லின , இடையின மெய்கள் வருமொழி முதலில் வரின் வேற்றுமையில் இயல்பாகும் ) என்ற விதிப்படி இயல்பாகி , நம்பிகண் வாழ்வு என வந்தது .

சான்று : 2

உறி + கண் + பால்

உறி + கண் = உறிக்கண்

இயல்பு ஈறாகவும் , விதி ஈறாகவும் நிலைமொழியின் இறுதியில் நின்ற உயிர்முன் வரும் க , ச , த , ப என்னும் வல்லின மெய்கள் மிகும் .

இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்

கசதப மிகும் ( நன்னூல் , 165 )

என்ற விதிப்படி , உறி என்னும் நிலைமொழியின் இறுதியில் இயல்பு ஈறாக நின்ற இ என்ற உயிர்முன் வருமொழி முதலில் வந்துள்ள க் என்ற வல்லினமெய் மிக்கு , உறிக்கண் என்றாயிற்று .

உறிக்கண் + பால் = உறிக்கட்பால்

கண் என்ற ஏழாம் வேற்றுமை உருபு , உறி என்னும் நிலைமொழியோடு மிக்குப் புணர்ந்த பின்னர் , உறிக்கண் என்று நிலைமொழியாக நிற்க , அவ்வுருபின் இறுதியில் உள்ள ணகர மெய் , வருமொழி முதலில் ப் என்ற வல்லினமெய் வர ,

ணன வல்லினம் வரட் டறவும் .

வேற்றுமைக்கு

( நன்னூல் , 209 )

என்ற விதிப்படி டகர மெய்யாகத் திரிந்து உறிக்கட்பால் என்றாயிற்று .

சான்று : 3

பழி + கு + அஞ்சி

பழி + கு = பழிக்கு

இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்

கசதப மிகும்

என்ற விதிப்படி , பழி என்னும் நிலைமொழியின் இறுதியில் நின்ற இ என்னும் இயல்பு உயிர்முன் , வருமொழியின் முதலில் வந்த க் என்ற வல்லின மெய் மிக்கு , பழிக்கு என்றாயிற்று .

பழிக்கு + அஞ்சி = பழிக்கஞ்சி

பழி என்ற நிலைமொழியோடு கு என்ற நான்காம் வேற்றுமை உருபு வல்லினம் மிக்குப் புணர்ந்து , பழிக்கு என்று நிலைமொழியாக நிற்கிறது .

அதன் இறுதியில் உள்ள கு என்பது வேற்றுமை உருபாகவே கொள்ளப்படுகிறது .

அதிலுள்ள உகரமானது முற்றியலுகரம் ஆகும் .

அம் முற்றியலுகரமானது ( உகர உயிரானது ) ,

உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்

யவ்வரின் இய்யாம் முற்றும்அற்று ஒரோவழி ( நன்னூல் , 164 )

( வருமொழியின் முதலில் உயிர் வரின் , நிலைமொழி இறுதியில் உள்ள முற்றியலுகரம் , குற்றியலுகரத்தைப் போலத் தான் ஏறியிருக்கும் மெய்யை விட்டு ஒரு சில இடங்களில் நீங்கும் என்பது இந்நூற்பாவின் பொருள்)

என்ற விதிப்படி , தான் ஏறியிருக்கும் ககரமெய்யை விட்டு நீங்கி , பழிக்க் என நிற்கிறது ; அதனோடு வருமொழி முதலில் உள்ள அகர உயிரானது ,

உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே ( நன்னூல் , 204 )

என்ற விதிப்படி , இறுதியில் நின்ற ககர மெய்யோடு பொருந்தி , பழிக்கஞ்சி என்றாயிற்று .

நூற்பாவில் ஒக்கும்மன் ( பெரும்பாலும் ஒத்து நடக்கும் ) என்றமையால் , சிறுபான்மை ஒவ்வாது வருவதும் உண்டு என்பது பெறப்படும் .

சான்று :

நம்பி + கு = நம்பிக்கு

இங்கே “ உயர்திணைப் பெயர்கள் ஈற்று .

ஆவி யரமுன் வன்மை மிகா ” ( நன்னூல் , 159 ) என்ற விதியை ஒவ்வாது , “ இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் க , ச , த , ப மிகும் ” ( நன்னூல் , 165 ) என்ற விதிப்படி , நம்பி என்ற இகர உயிர் ஈற்று உயர்திணைப் பெயர்முன் , வந்துள்ள கு என்னும் நான்காம் வேற்றுமை உருபின் முதலில் உள்ள க் என்ற வல்லினம் மிக்கு , நம்பிக்கு என்றாயிற்று .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. எழுவாயாக வரும் பெயர் உருபு ஏற்கும் வேற்றுமை உருபுகள் எத்தனை ?

அவை யாவை ? விடை