36

2. வேற்றுமை உருபுகள் எட்டும் ஐம்பால் பெயர்களோடு சேர்வதால் எத்தனையாகப் பெருகி அமைகின்றன ?

விடை

3. பெயர்ச்சொல்லுக்குப் பின்னால் வரும் ஐ உருபு தரும் பொருள் யாது ?

விடை

4. ஏழாம் வேற்றுமைக்கு உரிய உருபு யாது ?

விடை

5. உறி + கண் + பால் – எவ்வாறு புணரும் ?

விடை

6. பழி + கு என்பது புணர்ச்சியில் எவ்வாறு புணரும் ?

அதற்கு விதி யாது ?

சாரியைகள்

ஒரு பதத்தின் ( சொல்லின் ) முன்னர் விகுதியும் , பதமும் வேற்றுமை உருபும் வந்து புணரும்போது அவற்றிற்கு இடையே சில இடைச்சொற்கள் வந்து சார்ந்து பொருந்துதல் உண்டு .

அச்சொற்களுக்குச் சாரியை என்று பெயர் .

விகுதியையோ , பதத்தையோ , வேற்றுமை உருபையோ சார்ந்து வருதலின் சாரியை எனப்பட்டது .

பதத்தின் முன்னர் விகுதி வந்து புணர்வது விகுதிப் புணர்ச்சி என்றும் , பதத்தின் முன்னர் பதம் வந்து புணர்வது பதப்புணர்ச்சி என்றும் , பதத்தின் முன்னர் வேற்றுமை உருபு வந்து புணர்வது உருபு புணர்ச்சி என்றும் கூறப்படும் .

இம்மூவகைப் புணர்ச்சியிலும் சாரியைகள் வரும் முறைமை பற்றியும் , இம்மூவகைப் புணர்ச்சிக்கும் உரிய பொதுச்சாரியைகள் பற்றியும் நன்னூலார் உருபு புணரியலில் கூறுகிறார் .

அவற்றைச் சான்றுடன் காண்போம் .

4.2.1 சாரியைகள் வரும் முறைமை

பதத்தின் முன்னர் விகுதியும் , பதமும் , வேற்றுமை உருபும் வந்து புணரும்போது , அவற்றிற்கு இடையே சாரியை ஒன்றோ பலவோ வருதலும் , வாராதிருத்தலும் , இவ்விரண்டும் ஆகிய விகற்பமாதலும் ஆகும் .

பதம்முன் விகுதியும் பதமும் உருபும்

புணர்வழி ஒன்றும் பலவும் சாரியை

வருதலும் , தவிர்தலும் , விகற்பமும் ஆகும் ( நன்னூல் , 243 )

( விகற்பமாதல் - ஒரே புணர்ச்சியில் சாரியை வருதலும் , வாராது இருத்தலும் ஆகும் . )

நன்னூலார் கூறியவாறு விகுதிப்புணர்ச்சி , பதப்புணர்ச்சி , உருபு புணர்ச்சி என்னும் மூவகைப் புணர்ச்சியிலும் சாரியை வரும் முறையைச் சான்றுடன் காண்போம் .

• விகுதிப் புணர்ச்சி

பதத்தின் முன்னர் விகுதி வந்து புணர்வது விகுதிப்புணர்ச்சி எனப்படும் .

சான்று :

1. நடந்தனன்

நட பகுதி + த் ( ந் ) சந்தி விகாரம் + த் இடை நிலை + அன் சாரியை + அன் விகுதி அன் சாரியை வந்தது

2. நடந்தான்

நட பகுதி + த் ( ந் ) சந்தி விகாரம் + த் இடை நிலை + ஆன் விகுதி சாரியை வரவில்லை

3. நடந்தன

நட பகுதி + த் ( ந் ) சந்தி விகாரம் + த் இடை நிலை + அன் சாரியை + அ விகுதி அன் சாரியை வந்தது விகற்பம்

4. நடந்த

நட பகுதி + த் ( ந் ) சந்தி விகாரம் + த் இடை நிலை + அ விகுதி சாரியை வரவில்லை

• பதப்புணர்ச்சி

பதத்தின் முன்னர்ப் பதம் வந்து புணர்வது பதப்புணர்ச்சி எனப்படும் .

சான்று :

1. புளி + பழம் > புளி + அம் + பழம் = புளியம்பழம் - அம் சாரியை வந்தது

2. புளி + சோறு > புளி + ச் + சோறு = புளிச்சோறு - வல்லினம் மிக்கதே தவிரச் சாரியை வரவில்லை

3. நெல் + குப்பை > நெல் + இன் + குப்பை இன் சாரியை வந்தது விகற்பம்

= நெல்லின்குப்பை

நெல் + குப்பை = நெற்குப்பை - சாரியை வரவில்லை

• உருபு புணர்ச்சி

பதத்தின் முன்னர் வேற்றுமை உருபு வந்து புணர்வது உருபு புணர்ச்சி எனப்படும் .

சான்று :

1. மரம் + ஐ > மர + அத்து + ஐ

= மரத்தை அத்து என்னும் ஒரு சாரியை வந்தது

மரம் + ஐ > மர + அத்து + இன் + ஐ = மரத்தினை அத்து , இன் என்னும் இரு சாரியைகள் வந்தன

மரம் + கு > மர + அத்து + இன் + உ + கு

= மரத்தினுக்கு அத்து , இன் , உ என்னும் மூன்று சாரியைகள் வந்தன

இச்சான்றுகளில் பதத்தின் முன்னர் வேற்றுமை உருபு புணரும்போது இடையில் சாரியை ஒன்றோ பலவோ வந்தமை காணலாம் .

2. நாம் + ஐ = நம்மை

யான் + ஐ = என்னை சாரியை வரவில்லை

3. ஆ + ன் + ஐ = ஆனை – னகரச் சாரியை வந்தது விகற்பம்

ஆ + வ் + ஐ = ஆவை - வகர உடம்படுமெய் வந்ததே தவிரச் சாரியை வரவில்லை

( ஆனை , ஆவை - பசுவை )

உருபு புணரியலில் நன்னூலார் சாரியை வரும் முறைமை பற்றிக் கூறும்போது , பதத்தின் முன்னர் வேற்றுமை உருபு வந்து புணரும் உருபுபுணர்ச்சியில் வரும் சாரியை பற்றிக் கூறுவது மட்டுமே பொருத்தமானது ஆகும் .

ஆனால் அதனோடு , பகுபத உறுப்புகளைப் பற்றிப் பேசும் பதவியலில் கூறவேண்டிய விகுதிப் புணர்ச்சியையும் , உயிர் ஈற்று , மெய்ஈற்றுப் புணரியல்களில் கூறவேண்டிய பதப்புணர்ச்சியையும் ஆண்டுக் கூறாது , உருபு புணரியலில் இந்நூற்பாவில் சேர்த்துக் கூறியதற்குக் காரணம் ஒப்பின் முடித்தல் என்ற உத்தி ஆகும் .

ஓரிடத்தே ஒன்றற்குச் சொல்லும் இலக்கணம் , அவ்விடத்தே சொல்லத் தேவையில்லாத வேறு ஒன்றற்கும் ஒத்து வருமாயின் அதற்கும் அதுவே இலக்கணமாகும் என்று அதனையும் சேர்த்துக் கூறுதல் ஒப்பின் முடித்தல் என்னும் உத்தி ஆகும் .

4.2.2 பொதுச் சாரியைகள்

அன் , ஆன் , இன் , அல் , அற்று , இற்று , அத்து , அம் , தம் , நம் , நும் , ஏ , அ , உ , ஐ , கு , ன என்ற பதினேழும் , இவை போல்வன பிறவும் பொதுச்சாரியைகள் ஆகும் .

அன்ஆன் இன்அல் அற்றுஇற்று அத்துஅம்

தம்நம் நும்ஏ அஉ ஐகுன

இன்ன பிறவும் பொதுச் சாரியையே ( நன்னூல் , 244 )

இச்சாரியைகள் விகுதிப்புணர்ச்சி , பதப்புணர்ச்சி , உருபுபுணர்ச்சி என்ற மூன்று புணர்ச்சிகளிலும் , தனிமொழிகளிலும் வருதலினால் பொதுச்சாரியைகள் என்று வழங்கப்பட்டன .

சான்று :

அன் – ஒன்றன் கூட்டம் ( ஒன்று + அன் + கூட்டம் )

ஆன் – ஒருபாற்கு ( ஒருபது + ஆன் + கு ) ( இப்போது இது வழக்கில் இல்லை )

இன் – வண்டின்கால் ( வண்டு + இன் + கால் )

அல் – தொடையல் ( தொடை + அல் ) – ( = மாலை )

அற்று – பலவற்றை ( பல + அற்று + ஐ )

இற்று – பதிற்றுப்பத்து ( பத்து + இற்று + பத்து )

அத்து – மரத்துக்கிளை ( மரம் + அத்து + கிளை )

அம் – புளியம்பழம் ( புளி + அம் + பழம் )

தம் – எல்லார்தம்மையும் ( எல்லார் + தம் + ஐ + உம் )

நம் – எல்லா நம்மையும் ( எல்லா + நம் + ஐ + உம் )

நும் – எல்லீர் நும்மையும் ( எல்லீர் + நும் + ஐ + உம் )

ஏ – ஒன்றே கால் ( ஒன்று + ஏ + கால் )

அ – புளியமரம் ( புளி + அ + மரம் )

உ – அவனுக்கு ( அவன் + உ + கு )

ஐ – பண்டைக்காலம் ( பண்டு + ஐ + காலம் )

கு – செய்குவாய் ( செய் + கு + ஆய் )

ன் – ஆனை ( ஆ + ன் + ஐ )

( செய்குவாய் – விகுதிப்புணர்ச்சி ; தொடையல் – தனிமொழி ; ஒன்றன்கூட்டம் , வண்டின்கால் , பதிற்றுப்பத்து , மரத்துக்கிளை , புளியம்பழம் , ஒன்றேகால் , புளியமரம் , பண்டைக்காலம் – பதப்புணர்ச்சி ; ஒருபாற்கு , பலவற்றை , எல்லார்தம்மையும் , எல்லா நம்மையும் , எல்லீர் நும்மையும் , அவனுக்கு , ஆனை – உருபு புணர்ச்சி)

தொகுப்புரை

இதுகாறும் வேற்றுமை உருபுகள் நிலைமொழி வருமொழிகளோடு புணரும் உருபு புணர்ச்சி பற்றியும் , புணர்ச்சியில் சாரியைகள் வரும் முறைமை பற்றியும் நன்னூலார் உருபியலில் கூறியனவற்றை விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்தோம் .

அவற்றை ஈண்டுச் சுருக்கமாகக் காண்போம் .

வேற்றுமை எட்டு வகைப்படும் .

அவை : பெயர் , ஐ , ஆல் , கு , இன் , அது , கண் , விளி என்பன ஆகும் .

இவை எட்டுமே உருபுகள் ஆகும் .

பெயர் ஒரு தொடரில் எழுவாயாக வரும் .

அந்த எழுவாயே உருபாக நின்று ஐ , ஆல் , கு , இன் , அது , கண் என்னும் வேற்றுமை உருபுகளை ஏற்றுவரும் .

விளிவேற்றுமையும் பெயரின் திரிபாதலின் உருபே ஆகும் .

வேற்றுமை உருபுகள் பெயருக்குப் பின்னால் வரும் .

பெயர் பால் அடிப்படையில் ஆண்பால் பெயர் , பெண்பால் பெயர் , பலர்பால் பெயர் , ஒன்றன்பால் பெயர் , பலவின்பால் பெயர் என ஐந்து வகைப்படும் .

எனவே ஐம்பால் பெயர்களோடு எட்டு வேற்றுமை உருபுகளையும் பெருக்கிக் கணக்கிட வேற்றுமை உருபுகள் நாற்பது ஆகும் .

வேற்றுமை உருபுகள் தத்தமக்கு உரிய கருத்தாப் பொருள் , செயப்படுபொருள் , கருவிப்பொருள் முதலானவற்றைத் தர , பெயருக்குப் பின்னால் வரும் . ஐ , ஆல் , கு , இன் , அது , கண் என்னும் வேற்றுமை உருபுகள் மெய்யையும் உயிரையும் முதலும் ஈறுமாக உடையவை .

இவை நிலைமொழி , வருமொழிகளோடு புணரும்போது , ஏற்கெனவே உயிர்ஈற்றுப் புணரியலிலும் , மெய் ஈற்றுப் புணரியலிலும் வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சொல்லப்பட்ட புணர்ச்சி விதிகளைப் பெரும்பாலும் பெறும் .

பதத்தின் முன்னர் விகுதி வந்து புணர்வது விகுதிப் புணர்ச்சி எனப்படும் .

பதத்தின் முன்னர் பதம் வந்து புணர்வது பதப்புணர்ச்சி எனப்படும் .

பதத்தின் முன்னர் வேற்றுமை உருபு வந்து புணர்வது உருபு புணர்ச்சி எனப்படும் .

இம்மூவகைப் புணர்ச்சியிலும் சாரியைகள் என்னும் இடைச்சொற்கள் வருவது உண்டு .

இம்மூவகைப் புணர்ச்சியிலும் சாரியைகள் வரும்போது , ஒரு புணர்ச்சியில் ஒன்றாகவோ பலவாகவோ வரும் ; வாராது இருத்தலும் உண்டு - ஒரே புணர்ச்சியில் சாரியை வருதலும் , வாராமையும் ஆகிய விகற்பமும் உண்டு .

‘ அன் , ஆன் , இன் , அல் , அற்று , இற்று , அத்து , அம் , தம் , நம் , நும் , ஏ , அ , உ , ஐ , கு , ன ’ என்னும் பதினேழும் பொதுச்சாரியைகள் ஆகும் .

இவை விகுதிப்புணர்ச்சி , பதப்புணர்ச்சி , உருபுபுணர்ச்சி ஆகிய மூவகைப் புணர்ச்சியிலும் , இவற்றோடு தனிமொழியிலும் வரும் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. பதத்தின் முன்னர் எவை எவை வந்து புணரும்போது இடையே சாரியை வரும் ?

விடை

2. நடந்தனன் – இதில் வரும் சாரியை யாது ?

விடை

3. பலவற்றை – இச்சொல்லைப் பிரித்துக்காட்டி , சாரியை எது எனக் குறிப்பிடுக .

விடை

4. நெல் + குப்பை – எவ்வெவ்வாறு புணரும் ?

விடை

5. மரத்தினுக்கு – இச்சொல்லைப் பிரித்துக்காட்டி , இடையில் வந்துள்ள சாரியைகளைக் குறிப்பிடுக .

விடை

6. நாம் + ஐ – எவ்வாறு புணரும் ?

விடை

7. நன்னூலார் குறிப்பிடும் பொதுச்சாரியைகள் எத்தனை ?

உருபு புணர்ச்சி – II

பாட முன்னுரை

நிலைமொழியாக நிற்கும் பெயர்ச்சொற்களோடு வேற்றுமை உருபுகள் புணரும்போது இடையில் சாரியை பெற்றும் பெறாமலும் புணர்வதையும் , சாரியைகள் வரும் முறைமையையும் சென்ற பாடத்தில் பார்த்தோம் .

இப்பாடத்தில் எல்லாம் , எல்லாரும் , எல்லீரும் என்ற பன்மைப் பெயர்ச்சொற்களோடு வேற்றுமை உருபுகள் புணரும்போது சாரியைகள் எவ்விடத்தில் வரும் என்பது பற்றி நன்னூலார் கூறும் கருத்துகள் விளக்கிக் காட்டப்படுகின்றன .

தான் , தாம் , நாம் முதலான மூவிடப்பெயர்கள் எல்லாம் நெடிலை முதலாகக் கொண்டு தொடங்கும் பெயர்கள் ஆகும் .

இவை வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது தம் நெடு முதல் குறுகப் பெறுகின்றன .

( அதாவது தான் தன் என்றும் , தாம் தம் என்றும் , நாம் நம் என்றும் ஆகி , பிறகு உருபு ஏற்கும்) இதுபற்றி நன்னூலார் கூறும் கருத்துகள் எடுத்துக்காட்டப் படுகின்றன .

அவ் , இவ் , உவ் , அஃது , இஃது என்னும் சுட்டுப்பெயர்கள் வேற்றுமை உருபு ஏற்கும்போது பெறும் சாரியைகள் பற்றி நன்னூலார் கூறும் கருத்துகள் சுட்டிக்காட்டப்படுகின்றன .

அகர ஈற்றுப் பெயர்களின் முன்னர் வரும் அத்துச்சாரியை அடைகின்ற மாற்றம் பற்றிய நன்னூலார் கருத்துக் கூறப்படுகிறது-

உயிர் ஈற்றுப் புணரியல் , மெய் ஈற்றுப் புணரியல் ஆகிய இயல்களில் வேற்றுமைத் தொகைப் புணர்ச்சிக்குச் சொல்லப்பட்ட சில பொதுவிதிகளினின்று இரண்டாம் வேற்றுமை மாறுபட்டு அமைந்திருப்பது பற்றி நன்னூலார் கூறும் கருத்துகள் விளக்கிக் காட்டப்படுகின்றன .

சில பெயர்களோடு வேற்றுமை உருபுகள் புணரும் முறைமை

எல்லாம் என்னும் இருதிணைப் பொதுப்பெயர் , எல்லாரும் என்னும் உயர்திணைப் படர்க்கைப் பெயர் , எல்லீரும் என்னும் இருதிணை முன்னிலைப் பொதுப்பெயர் , தான் , தாம் , நாம் முதலான மூவிடப்பெயர்கள் ஆகியவற்றோடு வேற்றுமை உருபுகள் புணரும் முறையை நன்னூலார் விளக்கிக் கூறுகிறார் .

மேலும் ஆ , மா , கோ என்னும் ஓர் எழுத்துப் பெயர்கள் , அவ் , இவ் , உவ் , என்னும் வகர ஈற்றுச் சுட்டுப்பெயர்கள் , ஆய்தம் இடையே வந்த அஃது , இஃது , உஃது என்னும் சுட்டுப்பெயர்கள் ஆகியவற்றோடு வேற்றுமை உருபுகள் புணரும் முறையையும் அவர் விளக்கிக் கூறுகிறார் .

சாரியைகளில் அத்து என்னும் சாரியை மட்டும் புணர்ச்சியில் விகாரம் அடைவதை அவர் குறிப்பிடுகிறார் .

இவற்றை ஈண்டு ஒன்றன்கீழ் ஒன்றாகக் காண்போம் .

5.1.1 எல்லாம் என்னும் பெயர்

எல்லாம் என்பது அஃறிணைப் பன்மைப் பெயராகவும் , உயர்திணையில் தன்மைப் பன்மைப் பெயராகவும் வரும் .

எனவே இது இருதிணைப் பொதுப்பெயர் எனப்படும் .

இப்பொதுப்பெயர் வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது , அஃறிணைப் பொருளை உணர்த்த ஒரு சாரியையும் , உயர்திணைப் பொருளை உணர்த்த ஒரு சாரியையும் பெறும் .

சாரியையே இன்ன திணைப் பொருள் என்பதை அறிய உதவுகிறது .

இனி இப்பொதுப்பெயரோடு வேற்றுமை உருபுகள் புணரும் முறை பற்றி நன்னூலார் கூறுவதைக் காண்போம் .

1. எல்லாம் என்னும் இருதிணைப் பொதுப்பெயர் அஃறிணையில் வரும்போது , அதனோடு ஆறு வேற்றுமை உருபுகளும் வந்து புணர்ந்தால் , இடையே அற்று என்னும் சாரியையும் , வேற்றுமை உருபின்மேல் உம் என்ற முற்றும்மையும் பெறும் .

சான்று :

எல்லாம் + ஐ > எல்லா + அற்று + ஐ + உம் = எல்லாவற்றையும் .

2. எல்லாம் என்பது உயர்திணையில் வரும்போது , இடையே நம் என்னும் சாரியையும் , வேற்றுமை உருபின்மேல் உம் என்ற முற்றும்மையும் பெறும் .

சான்று :

எல்லாம் + ஐ > எல்லா + நம் + ஐ + உம் = எல்லா நம்மையும் ( எல்லா நம்மையும் – நம் எல்லாரையும் )

எல்லாம் என்பது இழிதிணை ஆயின்

அற்றோடு உருபின் மேல்உம் உறுமே ;

அன்றேல் நம்இடை அடைந்து அற்றாகும் ( நன்னூல் , 245 )

( இழிதிணை - அஃறிணை ; அன்றேல் – அவ்வாறு இல்லாமல் உயர்திணையில் வரும்போது ; அற்றாகும் – அவ்வாறே வேற்றுமை உருபின் மேல் முற்றும்மையும் பெறும் . )

5.1.2. எல்லாரும் , எல்லீரும் என்னும் பெயர்கள்

எல்லாரும் என்பது உயர்திணைப் படர்க்கைப் பன்மைப் பெயர் .

எல்லீரும் என்பது இருதிணைக்கும் பொதுவான முன்னிலைப் பன்மைப் பெயர் .

இவ்விரு பெயர்களோடு வேற்றுமை உருபுகள் புணரும் முறை குறித்து நன்னூலார் திறம்படக் கூறுகிறார் .

அதனை ஈண்டுக் காண்போம் .

எல்லாரும் , எல்லீரும் என்னும் இரு பெயர்களோடு ஆறு வேற்றுமை உருபுகளும் வந்து புணரும்போது , அப்பெயர்களின் இறுதியில் உள்ள முற்றும்மைகளை நீக்கிவிட்டு , அவை இருந்த இடங்களில் முறையே தம் என்னும் சாரியையும் , நும் என்னும் சாரியையும் வந்து பொருந்தும் .

அச்சாரியைகளால் நீக்கப்பட்ட முற்றும்மைகள் வேற்றுமை உருபுகளின் பின்னே வந்து பொருந்தும் .

எல்லாரும் எல்லீரும் என்பவற்று உம்மை

தள்ளி நிரலே தம்நும் சாரப்

புல்லும் உருபின் பின்னர் உம்மே ( நன்னூல் , 246 )

( தள்ளி – நீக்கிவிட்டு ; நிரலே – முறையே ; புல்லும் - பொருந்தும் )

சான்று :

1. எல்லாரும் + ஐ > எல்லார் + ஐ > எல்லார் + தம் + ஐ + உம்

= எல்லார்தம்மையும்

2. எல்லீரும் + ஐ > எல்லீர் + ஐ > எல்லீர் + நும் + ஐ + உம்

= எல்லீர்நும்மையும்

( எல்லீர்நும்மையும் – உங்கள் எல்லாரையும் )

• இக்காலத்தில் எல்லாம் , எல்லாரும் , எல்லீரும் என்னும் சொற்கள்

எல்லாம் , எல்லாரும் , எல்லீரும் எனவும் , அவை வேற்றுமை உருபு ஏற்கும்போது சாரியை பெற்று எல்லாநம்மையும் , எல்லார்தம்மையும் , எல்லீர்நும்மையும் எனவும் நன்னூலார் காலத்தில் வழங்கிய சொற்கள் இன்று எவ்வாறு வழங்குகின்றன என்பதைப் பற்றிச் சிறிது காண்போம் .

நன்னூலார் காலத்தில் எல்லாம் என்ற சொல் அஃறிணைப் பன்மைக்கும் , உயர்திணையில் தன்மைப் பன்மைக்கும் பொதுவாக வழங்கியது .

இக்காலத்தில் எல்லாம் என்ற அச்சொல் அஃறிணைப் பன்மை , உயர்திணைத் தன்மைப் பன்மை , முன்னிலைப் பன்மை , படர்க்கைப் பன்மை ஆகிய எல்லாவற்றிற்கும் பொதுவாக வழங்குகிறது .

சான்று :

மாடுகள் எல்லாம் வந்தன அஃறிணைப் பன்மை

அவை எல்லாம் வந்தன

நாங்கள் எல்லாம் வந்தோம் - உயர்திணைத் தன்மைப் பன்மை

நீங்கள் எல்லாம் வந்தீர்கள் - முன்னிலைப் பன்மை

அவர்கள் எல்லாம் வந்தார்கள் படர்க்கை உயர்திணைப் பன்மை

மாணவர்கள் எல்லாம் வந்தார்கள்

எல்லாம் என்பது வேற்றுமை உருபு ஏற்று , அஃறிணையில் வரும் போது , நன்னூலார் காலத்தைப் போலவே இக்காலத்திலும் அற்றுச் சாரியை பெற்று எல்லாவற்றையும் என்றே வழங்குகிறது .

ஆனால் எல்லாம் என்ற அச்சொல் உயர்திணையில் வரும்போது எல்லா நம்மையும் என்று இக்காலத்தில் வழங்குவது இல்லை .

நம்மை எல்லாம் என்று வழங்குகிறது .

சான்று :

நம்மை எல்லாம் ஆசிரியர் வரச்சொன்னார்

இதில் வரும் நம் என்பது நாம் என்ற தன்மைப்பெயரின் உருபு ஏற்கத் திரிந்த வடிவம் ஆகும் .

எல்லா நம்மையும் என்பதில் வரும் நம் என்பது சாரியை ஆகும் .

நன்னூலார் காலத்தில் எல்லாரும் என்பது படர்க்கைப் பன்மையில் மட்டும் வந்தது .

எல்லாரும் வந்தனர் என்றால் , அதில் உள்ள எல்லாரும் என்பது படர்க்கையாரை மட்டும் குறிக்கும் .

மற்றத் தன்மையாரையோ , முன்னிலையாரையோ குறிக்காது .

இக்காலத்தில் எல்லாரும் என்பது உயர்திணையில் தன்மை , முன்னிலை , படர்க்கை என்னும் மூவிடங்களிலும் உள்ள எல்லாரையும் குறிக்கும் பொதுச் சொல்லாக வழங்குகிறது .

ஆயினும் இச்சொல் அம்மூவருள் யாரைக் குறிக்கிறது என்பதை அச்சொல்லின் முன் வரும் மூவிடப் பன்மைப்பெயர்கள் உணர்த்துகின்றன .

சான்று :

நாங்கள் எல்லாரும் வந்தோம்

நாம் எல்லாரும் வந்தோம்

நீங்கள் எல்லாரும் வந்தீர்கள்

அவர்கள் எல்லாரும் வந்தார்கள் எல்லாரும் என்ற சொல் பொதுச்சொல்லாகி விடவே , முன்னிலைப் பன்மையாரை மட்டும் உணர்த்தி வந்த எல்லீரும் என்ற சிறப்புச்சொல் வழக்கு இழந்துவிட்டது .