38

இத்தொடர்களில் ஆறாம் வேற்றுமைக்கு உரிய அது என்னும் உருபை விரித்து ,

நம்பியது பெருமை

மகனது பெருமை

சாத்தனது செவி

ஆணினது கை

எனச் சொன்னாலும் ஒரே பொருள் .

எனவே மற்ற வேற்றுமைகளில் உருபு தொக்கும் , விரிந்தும் வரும் .

ஆனால் இரண்டாம் வேற்றுமை மட்டும் உருபு விரிந்து மட்டுமே வருதல் , தொக்கும் விரிந்தும் வருதல் என்ற இருவேறு நிலைகளை உடையது .

மேலே கூறிய நான்கு விதிகளையும் நன்னூலார் பின்வரும் நூற்பாவில் தொகுத்துக் கூறுகிறார் .

இயல்பின் விகாரமும் , விகாரத்து இயல்பும் ,

உயர்திணை இடத்து விரிந்தும் தொக்கும் ,

விரவுப் பெயரின் விரிந்தும் நின்றும் ,

அன்ன பிறவும் ஆகும் ஐ உருபே ( நன்னூல் , 255 )

( நின்றும் – உருபு மறைந்தும் )

தொகுப்புரை

இதுகாறும் நன்னூலார் உருபு புணரியலில் எல்லாம் , எல்லாரும் , எல்லீரும் என்பன போன்ற சில பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபுகளோடு புணரும் முறைமை பற்றியும் , இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிகளுக்கான சிறப்புவிதி பற்றியும் கூறியனவற்றை விரிவாகவும் , விளக்கமாகவும் பார்த்தோம் .

அவற்றை ஈண்டுச் சுருக்கமாகத் தொகுத்துக் காண்போம் .

வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது எல்லாம் என்ற பொதுப்பெயர் அஃறிணைப் பொருளை உணர்த்த அற்றுச் சாரியையும் , உயர்திணைப் பொருளை உணர்த்த நம் சாரியையும் பெறும் ; எல்லாரும் என்ற பெயர் தம் சாரியை பெறும் ; எல்லீரும் என்ற பெயர் நும் சாரியை பெறும் .

தான் , தாம் , நாம் , யான் , யாம் , நீ , நீர் என்னும் மூவிடப் பெயர்கள் வேற்றுமை உருபு ஏற்கும்போது தமது நெடுமுதல் குறுகும் .

ஆ , மா , கோ என்னும் ஓர் எழுத்துப் பெயர்கள் வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது னகரச் சாரியை பெறும் ; பெறாமல் வருவதும் உண்டு .

வேற்றுமை உருபுகளோடு புணரும்போது , அவ் , இவ் , உவ் என்னும் சுட்டுப்பெயர்கள் அற்றுச் சாரியை பெறும் ; அஃது , இஃது , உஃது என்னும் சுட்டுப்பெயர்கள் அன் சாரியை பெறும் .

அகர ஈற்றுப் பெயர்களின் முன் அத்துச் சாரியை வந்து புணரும்போது , அதன் முதலில் உள்ள அகர உயிர் கெடும் .

உயிர் ஈற்றுப் புணரியல் , மெய் ஈற்றுப் புணரியல் ஆகிய இயல்களில் கூறப்பட்ட பொதுவிதிகள் சிலவற்றினின்று இரண்டாம் வேற்றுமையும் மூன்றாம் வேற்றுமையும் மாறுபட்டு அமைந்துள்ளன .

இவற்றை எல்லாம் இப்பாடத்தின் வாயிலாகப் பார்த்தோம் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. பொதுவிதிப்படி இயல்பாக வரவேண்டிய இடத்தில் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி எவ்வாறு வரும் ?

விடை

2. நின் + பகை , நின் + புறங்காப்ப – இவை எவ்வாறு சேர்ந்து வரும் ?

விடை

3. பொதுவிதிப்படி விகாரப்பட்டு வர வேண்டிய இடத்தில் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி எவ்வாறு வரும் ?

விடை

4. மண் + கொணர்ந்தான் , பொன் + கொடுத்தான் – சேர்த்து எழுதுக .

விடை

5. நம்பி என்ற உயர்திணைப் பெயர் வல்லினத்தை முதலாகக் கொண்ட சொற்களோடு புணரும்போது , வேற்றுமை உருபு எவ்வாறு வரும் ?

விடை

6. மகற்பெற்றான் – இதில் தொக்கு வந்துள்ள வேற்றுமை உருபு யாது ?

இக்காலத் தமிழில் வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

பாடமுன்னுரை

நிலைமொழியில் உள்ள ஒரு சொல் , வருமொழியில் உள்ள மற்றொரு சொல்லோடு வேற்றுமைப் பொருளிலும் , அல்வழிப் பொருளிலும் புணரும் புணர்ச்சி பற்றி நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியல் , மெய் ஈற்றுப் புணரியல் , உருபு புணரியல் என்னும் மூன்று இயல்களில் கூறியனவற்றை இதற்கு முந்தைய பதினொரு பாடங்களில் விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்தோம் .

நன்னூலார் புணர்ச்சி பற்றிக் கூறியுள்ள விதிகள் இக்காலத்தில் நாம் தமிழைப் பிழையின்றி எழுதவும் , திருத்தமுறப் பேசவும் உதவுகின்றன .

அவற்றுள் குறிப்பிடத்தக்கவை வல்லினம் மிகும் இடங்கள் , வல்லினம் மிகா இடங்கள் ஆகிய இரண்டும் ஆகும் .

நன்னூலார் , நிலைமொழியின் இறுதியில் உள்ள உயிர்களின் முன்னர் , வருமொழி முதலில் வருகின்ற க , ச , த , ப என்னும் வல்லினமெய்கள் பெரும்பாலும் மிகும் என்கிறார் .

இதனைப் பின்வரும் உயிர் ஈற்றுப் புணரியல் நூற்பாவில் குறிப்பிடுகிறார் .

இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்

க ச த ப மிகும் விதவாதன மன்னே ( நன்னூல் , 165 )

( விதவாதன – சிறப்பு விதிகளில் சொல்லாதவை ; மன் – பெரும்பாலும் )

நன்னூலார் இந்நூற்பாவில் , நிலைமொழியின் இறுதியில் நிற்கும் உயிர்களின் முன்னர் , வருமொழி முதலில் வரும் வல்லினம் பெரும்பாலும் மிகும் என்று பொதுவாகக் கூறியுள்ளாரே தவிர , எந்தெந்த இடங்களில் மிகும் என்பதைத் தனித்தனியே எடுத்துக் கூறவில்லை .

ஆனால் உயிர் ஈற்றுப் புணரியலில் ஒவ்வோர் உயிர் ஈற்றுச் சிறப்பு விதியிலும் எந்தெந்த இடங்களில் உயிர்முன் வரும் வல்லினம் மிகாது என்பதைத் தனித்தனியே எடுத்துக் கூறுகிறார் .

சான்றாக , அகர ஈற்றுச் சிறப்பு விதியில் , 1. செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களின் முன்னரும் ,

2. பல்வகைப் பெயரெச்சங்களுக்கு முன்னரும்

3. பல்வகை வினைமுற்றுகளுக்கு முன்னரும்

4. ஆறாம் வேற்றுமை அ உருபிற்கு முன்னரும்

5. பல சில என்னும் அஃறிணைப் பன்மைப் பெயர்களுக்கு முன்னரும்

6. அம்ம என்னும் இடைச்சொல்லுக்கு முன்னரும்

வரும் வல்லினம் மிகாது இயல்பாகும் என்கிறார் .

இதனை ,

செய்யிய என்னும் வினையெச்சம் , பல்வகைப்

பெயரின் எச்சம் , முற்று , ஆறன் உருபே ,

அஃறிணைப் பன்மை , அம்ம முன் இயல்பே ( நன்னூல் , 167 )

என்ற நூற்பாவில் உணர்த்துகிறார் .

இதுபோல் ஒவ்வோர் உயிர் ஈற்றின் முன்னரும் வரும் வல்லினம் எந்தெந்த இடங்களில் மிகாது என்பதை எடுத்துக் கூறுகிறார் .

சிறப்பு விதிகளில் வல்லினம் மிகாது என்று கூறப்படும் இடங்களைத் தவிர , பிற எல்லா இடங்களிலும் உயிர் முன் வரும் வல்லினம் மிகும் என்பது நன்னூலார் கருத்து , இதையே ‘ இயல்பினும் விதியினும் ’ என்ற நூற்பாவில் விதவாதன மிகும் ( சிறப்பு விதிகளில் சொல்லாதவை மிகும் ) என்று குறிப்பிட்டார் .

மெய் ஈற்றுப் புணரியலில் மெய் எழுத்துகளில் ய , ர , ழ என்னும் மெய்களின் முன்னர் வரும் வல்லினம் எந்தெந்த இடங்களில் மிகும் என்பதையும் , மிகாது இயல்பாகும் என்பதையும் ,

யரழ முன்னர்க் கசதப அல்வழி

இயல்பும் மிகலும் ஆகும் ; வேற்றுமை

மிகலும் இனத்தோடு உறழ்தலும் விதிமேல் ( நன்னூல் , 224 )

என்ற நூற்பாவில் நன்னூலார் குறிப்பிட்டுள்ளார் .

ஆனால் அவர் இதுபோல உயிர்களின் முன்னர் வரும் வல்லினம் அல்வழியிலும் வேற்றுமையிலும் எந்தெந்த இடங்களில் மிகும் , மிகாது என ஒரு சேரக் கூறவில்லை .

உயிர்களின் முன்னர் வரும் வல்லினம் மிகாத இடங்களை மட்டும் கூறி , வல்லினம் மிகாத அவ்விடங்களைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் வல்லினம் மிகும் என்று பொதுப்படக் கூறுவதோடு அமைந்தார் .

எனவே உயிர் ஈற்றின் முன்னரும் , ய , ர , ழ என்னும் மெய் ஈறுகளின் முன்னரும் வருகின்ற வல்லினம் எந்தெந்த இடங்களில் மிகும் என்பதையும் , மிகாது இயல்பாகும் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் தேவையானதும் இன்றியமையாததும் ஆகும் .

இப்பாடத்தில் வல்லினம் மிகும் இடங்களும் , வல்லினம் மிகா இடங்களும் இக்காலத் தமிழ்வழிநின்று தக்க சான்றுகளுடன் விளக்கிக் காட்டப்படுகின்றன .

வல்லினம் மிகும் இடங்கள்

நிலைமொழியின் இறுதியில் உள்ள உயிர்களின் முன்னரும் , ய , ர , ழ என்னும் மெய்களின் முன்னரும் வருமொழி முதலில் வருகின்ற க , ச , த , ப என்னும் வல்லின மெய்கள் எந்தெந்த இடங்களில் மிகும் என்பதைச் சான்றுடன் காணலாம் .

6.1.1 சுட்டு , வினா அடியாகத் தோன்றிய சொற்கள் முன் வல்லினம் மிகல்

அ , இ என்பன சுட்டு எழுத்துகள் ; எ , யா என்பன வினா எழுத்துகள் .

இவற்றின் முன்னும் , இவற்றின் அடியாகத் தோன்றிய அந்த , இந்த , எந்த ; அங்கு , இங்கு , எங்கு ; ஆங்கு , ஈங்கு , யாங்கு ; அப்படி , இப்படி , எப்படி ; ஆண்டு , ஈண்டு , யாண்டு ; அவ்வகை , இவ்வகை , எவ்வகை , அத்துணை , இத்துணை , எத்துணை என்னும் சொற்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும் .

சான்று :

அ + காலம் = அக்காலம்

எ + திசை = எத்திசை

அந்த + பையன் = அந்தப் பையன்

எந்த + பொருள் = எந்தப் பொருள்

அங்கு + கண்டான் = அங்குக் கண்டான்

எங்கு + போனான் = எங்குப் போனான்

யாங்கு + சென்றான் = யாங்குச் சென்றான்

அப்படி + சொல் = அப்படிச் சொல்

எப்படி + சொல்வான் = எப்படிச் சொல்வான்

ஈண்டு + காண்போம் = ஈண்டுக் காண்போம்

யாண்டு + காண்பேன் = யாண்டுக் காண்பேன்

அவ்வகை + செய்யுள் = அவ்வகைச் செய்யுள்

எத்துணை + பெரியது = எத்துணைப் பெரியது

6.1.2 ஓர் எழுத்துச் சொற்களின் முன் வல்லினம் மிகல்

கை , தீ , தை , பூ , மை என்னும் ஓர் எழுத்துச் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும் .

சான்று :

கை + குழந்தை = கைக்குழந்தை

கை + பிடி = கைப்பிடி

தீ + பிடித்தது = தீப்பிடித்தது

தீ + பெட்டி = தீப்பெட்டி

தீ + புண் = தீப்புண் தை + பொங்கல் = தைப்பொங்கல்

தை + திருநாள் = தைத்திருநாள்

பூ + பறித்தாள் = பூப்பறித்தாள்

பூ + பல்லக்கு = பூப்பல்லக்கு

மை + கூடு = மைக்கூடு

மை + பேனா = மைப்பேனா

6.1.3 குற்றியலுகரச் சொற்கள் முன் வல்லினம் மிகல்

வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் முன்னும் , சில மென்தொடர் மற்றும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் முன்னும் , உயிர்த்தொடர் போன்ற அமைப்பை உடைய சில முற்றியலுகரச் சொற்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும் .

• வன்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகல்

சான்று :

பாக்கு + தோப்பு = பாக்குத்தோப்பு

அச்சு + புத்தகம் = அச்சுப்புத்தகம்

எட்டு + தொகை = எட்டுத்தொகை

பத்து + பாட்டு = பத்துப்பாட்டு

இனிப்பு + சுவை = இனிப்புச்சுவை

கற்று + கொடுத்தான் = கற்றுக்கொடுத்தான்

• சில மென்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகல்

சான்று :

குரங்கு + குட்டி = குரங்குக் குட்டி

பஞ்சு + பொதி = பஞ்சுப்பொதி

துண்டு + கடிதம் = துண்டுக்கடிதம்

மருந்து + சீட்டு = மருந்துச் சீட்டு

பாம்பு + தோல் = பாம்புத்தோல்

கன்று + குட்டி = கன்றுக்குட்டி

இவற்றை வல்லினம் மிகாமல் குரங்கு குட்டி , மருந்து சீட்டு என்று எழுதினால் குரங்கும் குட்டியும் , மருந்தும் சீட்டும் என்று பொருள்பட்டு உம்மைத் தொகைகள் ஆகிவிடும் .

• சில உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகல்

சான்று :

முதுகு + தண்டு = முதுகுத்தண்டு

விறகு + கடை = விறகுக்கடை

படகு + போட்டி = படகுப்போட்டி

பரிசு + புத்தகம் = பரிசுப்புத்தகம்

மரபு + கவிதை = மரபுக்கவிதை

6.1.4 முற்றியலுகரச் சொற்கள் முன் வல்லினம் மிகல்

தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின மெய்யின் மேலும் , பிற மெய்களின் மேலும் ஏறிவருகின்ற உகரம் முற்றியலுகரம் எனப்படும் .

நடு , புது , பொது , பசு , திரு , தெரு , முழு , விழு என்னும் முற்றியலுகரச் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும் .

சான்று :

நடு + கடல் = நடுக்கடல்

புது + புத்தகம் = புதுப்புத்தகம்

பொது + பணி = பொதுப்பணி

பசு + தோல் = பசுத்தோல்

திரு + கோயில் = திருக்கோயில்

தெரு + பக்கம் = தெருப்பக்கம்

முழு + பேச்சு = முழுப்பேச்சு

விழு + பொருள் = விழுப்பொருள்

தனி நெட்டெழுத்தை அடுத்தோ , பல எழுத்துகளைத் தொடர்ந்தோ ஒரு சொல்லின் இறுதியில் வல்லினமெய் அல்லாத பிற மெய்களின் மேல் ஏறி வருகின்ற உகரமும் முற்றியலுகரம் ஆகும் .

இத்தகைய முற்றியலுகரச் சொற்கள் பெரும்பாலும் ‘ வு ’ என முடியும் .

இவற்றின் முன் வரும் வல்லினமும் மிகும் .

சான்று :

சாவு + செய்தி = சாவுச்செய்தி

உணவு + பொருள் = உணவுப்பொருள் உழவு + தொழில் = உழவுத்தொழில்

நெசவு + தொழிலாளி = நெசவுத்தொழிலாளி

தேர்வு + கட்டணம் = தேர்வுக்கட்டணம்

கூட்டுறவு + சங்கம் = கூட்டுறவுச் சங்கம்

பதிவு + தபால் = பதிவுத்தபால்

இரவு + காட்சி = இரவுக்காட்சி

6.1.5 வேற்றுமைப் புணர்ச்சியில் வரும் வல்லினம் மிகல்

இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரையிலான ஆறு வேற்றுமைகள் ஒவ்வொன்றும் புணர்ச்சியில் மூன்று வகையாக வருகின்றன .

1. வேற்றுமை உருபு தொக்கு ( மறைந்து ) வருவது .

இது வேற்றுமைத்தொகை எனப்படும் .

சான்று :

கனி + தின்றான் = கனிதின்றான்

இத்தொடருக்குக் கனியைத் தின்றான் என்று பொருள் .

கனி தின்றான் என்பதில் இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ தொக்கு வந்துள்ளது .

எனவே இது இரண்டாம் வேற்றுமைத் தொகை .

2. வேற்றுமை உருபும் , அதனோடு சேர்ந்து வரும் சில சொற்களும் தொக்கு வருவது .

இது வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை எனப்படும் .

சான்று :

தயிர் + குடம் = தயிர்க்குடம்

இத்தொடருக்குத் தயிரை உடைய குடம் என்று பொருள் .

தயிர்க்குடம் என்பதில் இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ என்பதும் , அதனோடு சேர்ந்து வந்துள்ள உடைய என்பதும் தொக்கு வந்துள்ளன .

எனவே இது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை .

3. வேற்றுமை உருபு விரிந்து வருவது .

இது வேற்றுமை விரி எனப்படும் .

சான்று :

கனியை + தின்றான் = கனியைத் தின்றான்

மேலே கூறிய சான்றுகளை நோக்குவோம் .

வல்லினம் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் மிகாமலும் , மற்ற இரண்டிலும் மிக்கும் வந்துள்ளது புலனாகும் .

இதுபோல ஒவ்வொரு வேற்றுமையும் மூவகைப் புணர்ச்சியில் வல்லினம் மிக்கும் , மிகாமலும் வரும் .

இனி வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் மிகும் இடங்களைப் பார்ப்போம் .

( i ) இரண்டாம் வேற்றுமை விரியின் ( ஐ உருபின் ) முன் வரும் வல்லினம் மிகும் .

சான்று :

ஒலியை + குறை = ஒலியைக் குறை

பாயை + சுருட்டு = பாயைச் சுருட்டு

கதவை + தட்டு = கதவைத் தட்டு

மலரை + பறி = மலரைப் பறி

( ii ) நான்காம் வேற்றுமை விரியின் ( கு உருபின் ) முன்வரும் வல்லினம் மிகும் .

சான்று :

எனக்கு + கொடு = எனக்குக் கொடு

வீட்டுக்கு + தலைவி = வீட்டுக்குத் தலைவி

ஊருக்கு + போனான் = ஊருக்குப் போனான்

( iii ) நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாயின் அதன்முன் வரும் வல்லினம் மிகும் .

சான்று :

குறிஞ்சி + தலைவன் = குறிஞ்சித் தலைவன்

( குறிஞ்சிக்குத் தலைவன் )

படை + தளபதி = படைத்தளபதி ( படைக்குத் தளபதி )

கூலி + படை = கூலிப்படை ( கூலிக்குப் படை )

( iv ) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும் .

சான்று :

நகை + கடை = நகைக்கடை ( நகையை விற்கும் கடை ) தயிர் + குடம் = தயிர்க்குடம் ( தயிரை உடைய குடம் )