42

( இம்மை - இப்பிறவி ; உம்மை - முன்பிறவி ) .

மணிமேகலை E

மாதவியின் மகள் மணிமேகலை .

அழகும் இளமையும் உடைய மணிமேகலை இந்திர விழாவில் ஆடவருவாள் என்று பூம்புகார் மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர் .

ஆனால் மாதவியோ தானும் துறவு பூண்டு தன் மகள் மணிமேகலையையும் துறவு நெறிப்படுத்துகிறாள் .

மணிமேகலையைக் காணும் உதயகுமரன் என்ற சோழ இளவரசன் அவள் அழகில் மயங்கிப் பின்தொடர்கிறான் .

மணிமேகலா தெய்வம் மணிமேகலையை உதயகுமரனிடமிருந்து காப்பாற்றுவதற்காக மணிபல்லவம் என்ற தீவிற்குத் தூக்கிச் சென்று விடுகிறது .

அமுத சுரபி

அங்கு மணிமேகலை ' அமுதசுரபி ' என்ற பாத்திரத்தைப் பெறுகிறாள் .

அள்ள அள்ளக் குறையாமல் சோறு வந்து கொண்டே இருக்கும் அதிசயமான பாத்திரம் அது. மணிமேகலை அந்தப் பாத்திரத்துடன் வந்து பூம்புகாரில் அறம் செய்கிறாள் .

உதயகுமரன் மணிமேகலையைத் தொடர்ந்து வருகிறான் .

அவனிடமிருந்து தப்ப மணிமேகலை காயசண்டிகை என்ற கந்தருவப் பெண் வடிவம் கொள்கிறாள் .

இந்நிலையில் காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் என்பான் தன் மனைவியைத் தேடி வருகிறான் .

அவன் உதயகுமரன் மேல் சந்தேகம் கொண்டு அவனை வாளால் வெட்டி விடுகின்றான் .

உதயகுமரன் இறந்தவுடன் அவன் தாய் மணிமேகலைக்குக் கொடுமை பல செய்கிறாள் .

மணிமேகலை அவளைத் திருத்தி அறநெறியைப் பின்பற்றச் செய்கிறாள் .

மணிமேகலை நாடெங்கும் பௌத்த தருமத்தைப் பரப்புகிறாள் .

இதுவே மணிமேகலை நூல் கூறும் கதை. மணிமேகலை வலியுறுத்திக் கூறும் தலைமையான அறம் எது எனத் தெரியுமா ?

மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

( மணி , மர்ரே பதிப்பு , 11 : 95 )

என்பதுதான் .

இதன் பொருள் என்ன ?

உலகில் வாழ்கின்றவர்களுக்கெல்லாம் உணவு கொடுத்தவர்கள் உயிர் கொடுத்தோராவர் என்பதாகும் .

1.3.1 மணிமேகலை காட்டும் அறம்

மணிமேகலை பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்கத்துடன் எழுதப் பெற்ற நூல் .

சங்க காலத்தில் ஆளுமை பெறாத சமய உணர்வு படிப்படியாக வளர்ந்திருப்பதை மணிமேகலை காட்டுகிறது .

சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் சமணத் துறவியாகக் காட்சி தருகிறார் ; அவரும்கூடக் கண்ணகியின் ஆற்றலுக்குக் குறைந்தவராகவே காட்டப் பெறுகிறார் .

மணிமேகலையின் கதைத் தலைவியே பௌத்த சமயத்தைப் பரப்புகின்றாள் .

தமிழகப் பண்பாட்டு வரலாற்றில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சமயம் மனித வாழ்வில் பேரிடம் பெற்றதை மணிமேகலை வெளிப்படுத்துகிறது .

மணிமேகலை பத்தினிப் பெண்களை மூவகைப்படுத்திக் கூறுகின்றது .

( அ ) கணவன் இறந்தவுடன் எரி மூழ்கி இறப்பவர்

( ஆ ) தனியே எரி வளர்த்து இறப்பவர்

( இ ) கணவனை நினைந்து கைம்மை நோன்பேற்பவர்

என மணிமேகலை இவர்களை வகைப்படுத்துகின்றது .

மணிமேகலை மனிதர் உடம்பை இழிவானதாகக் கருதி உரைக்கின்றது .

உடம்பு புலால் நிறைந்தது ; மூத்துத் தளர்வது ; பிணி கூடுவது ; குற்றம் புரிவது ; கவலையின் கொள்கலம் என்று கூறி இதனைப் புறக்கணிப்பதே சரியானது என்கின்றது .

1.3.2 மணிமேகலை கூறும் பண்பாட்டு நெறிகள்

மணிமேகலை ஆரியர்தம் பண்பாட்டையும் , தமிழர் பண்பாட்டையும் ஒப்பிடும் வகையில் உரைக்கின்றது .

ஆபுத்திரன் என்பவன் வேள்வியில் பலி கொடுப்பதற்கெனப் பார்ப்பனர் கட்டி வைத்திருந்த பசுவை அவிழ்த்து விடுகிறான் .

அதைக் கண்ட பார்ப்பனர்கள் அவன் பிறவி இழிந்தது என்று தூற்றுகின்றனர் .

அவன் அமைதியாக " உங்கள் முனிவர்கள் , பசு வயிற்றிலும் மான் வயிற்றிலும் நரி வயிற்றிலும் பிறந்தவர்களாயிற்றே " என்று மறுமொழி கூறுகிறான் .

ஆபுத்திரன் ஊரை விட்டு விரட்டப்படுகிறான் .

ஆபுத்திரனுக்குத் தெய்வம் அமுதசுரபியை அளிக்கிறது .

அமுதசுரபி கொண்டு ஆபுத்திரன் அறம் செய்கிறான் .

பிறர் பசி தீர்க்க அதனைப் பயன்படுத்த முடியாத நிலையில் கோமுகி என்ற பொய்கையிலே அதனை விட்டெறிந்து விட்டு உண்ணா நோன்பிருந்து உயிர் விடுகிறான் .

அப்பாத்திரமே பிறகு மணிமேகலையின் கையை அடைகிறது .

மணிமேகலை சிறைச்சாலையை அறச்சாலை ஆக்குகின்றாள் .

பெண்களின் கற்பு , தவசிகளின் நோன்பு ஆகியவற்றை அரசன் பாதுகாக்காவிட்டால் அவை இடர்ப்படும் என இந்நூல் கூறுகின்றது . எது பெரிய அறம் என்ற வினாவிற்கு மணிமேகலை கூறுவது கேளுங்கள் !

அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்

மறவாது இதுகேள் !

மன்னுயிர்க் கெல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் இல்லது கண்டதில்

( மணி , மர்ரே பதிப்பு - 25:228 )

என மொழிகின்றது .

வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் இவை என அறிந்து அவற்றை எல்லார்க்கும் வழங்குவதே பண்பாடு எனத் தெரிவித்துள்ளது அக்காலச் சமூகம் .

1.3.3 மணிமேகலை காட்டும் பல சமயங்கள்

மணிமேகலையின் காலத்தில் பல சமயங்களும் சமயப் பிரிவுகளும் தோன்றிவிட்டன .

சமய நெறியடிப்படையிலான பண்பாடு அக்காலத்திலிருந்தே தொடங்கி விட்டது .

வைதிகவாதி , சைவவாதி , பிரமவாதி , ஆசீவகவாதி , நிகண்டவாதி , சாங்கியவாதி , வைசேடிகவாதி , பூதவாதி , பௌத்தவாதி எனப் பல நெறியினர் தமக்குள் போரிட்டுக் கொண்டனர் என அறியலாம் .

சமய அடிப்படையில் நல்வினை , தீவினை ஆகிய இருவினை பற்றிய நம்பிக்கை சமுதாயத்தில் அழுத்தமாக ஏற்பட்டது .

அறத்தின் பயனாகவே எல்லாச் சிறப்பும் வரும் என்று சாத்தனார்

கூறுகின்றார் .

இந்தியச் சமயங்கள் பலவற்றினும் நல்வினை தீவினை பற்றிய கருத்துகள் வளரத் தொடங்கிவிட்டன .

உடம்பு , செல்வம் , இளமை , இன்பம் ஆகியன நிலையாக இருக்கமாட்டா என்றும் , செய்யும் வினையின் பயனை நுகர்ந்தே ஆக வேண்டுமென்றும் மணிமேகலை மொழிகின்றது .

மறுபிறப்பைப் பற்றிய கருத்தும் வலிமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது .

பௌத்த சமயம் வைதிக சமயத்துக்கு மாறானது என்றும் , தமிழகத்தில் வைதிகம் , பௌத்தம் ஆகிய இரு நெறிகளும் பரவின என்றும் மணிமேகலைவழி அறியலாம் .

சமயச் சார்பற்ற தமிழ்ப் பண்பாட்டில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் சமயம் தன் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது .

வசிட்டர் , அகத்தியர் ஆகியோரின் பிறப்புப் பற்றிய கதைகள் , உதயணன் கதை , அகலிகை கதை , தீக்கடவுளின் மனைவி கதை , பரசுராமன் அசுரர்களை அடக்கிய கதை , வடநாட்டில் பிறந்து இறந்தவர்கள் அடுத்த பிறவியில் தென்னாட்டில் பிறந்த கதை , திருமால் உலகு அளந்த கதை , கண்ணன் , பலராமன் நப்பின்னையோடு நடனமாடிய கதை , திருமாலின் வயிற்றிலிருந்து பிரமன் தோன்றிய கதை ஆகியன மணிமேகலையில் இடம்பெறுகின்றன .

பௌத்த சமயம் இக்கதைகளையெல்லாம் தமிழகத்தில் சேர்த்தது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களைக் கூறுக .

விடை

2. ஐம்பெருங்காப்பியங்களின் காலத்தைக் குறிப்பிடுக .

விடை

3. கண்ணகி மதுரையில் யாரிடம் அடைக்கலம் ஆக்கப்படுகிறாள் ?

விடை

4. சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று நீதிகள் யாவை ?

விடை

5. காயசண்டிகை யார் ?

சிந்தாமணி E

சிந்தாமணி கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியம் .

முழுவதும் விருத்தம் என்ற பாட்டு இனத்தால் எழுதப் பெற்றது .

இந்நூல் 13 இலம்பகங்களையும் 3145 செய்யுட்களையும் கொண்டது .

இலம்பகம் என்றால் உட்பிரிவு என்பது பொருள் .

இந்நூலில் வரும் கதைத் தலைவன் சீவகன் எட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறான் .

எனவே இது மணநூல் எனப் பெயர் பெற்றது .

என்றாலும் மக்களின் உடம்பும் , உடம்பால் அடையப் பெறும் இன்பமும் , தேடும் பொருளும் , இளமையும் , உலகமும் நிலையாக இல்லாமல் அழிவன என்றும் அதனால் முத்தி பெறும் முயற்சியை நாடுங்கள் என்றும் இந்நூல் ஆசிரியர் கூறுகிறார் .

1.4.1 சிந்தாமணி கூறும் கதை

சச்சந்தன் என்ற அரசன் விசயை என்ற தன் மனைவியின் அழகில் மயங்கி ஆட்சி செய்வதை மறந்து அந்தப்புரத்திலேயே இருக்கிறான் .

கட்டியங்காரன் என்ற தீய அமைச்சன் சச்சந்தனைக் கொன்றுவிட்டு நாட்டைக் கைப்பற்றிக் கொள்கிறான் .

விசயை ஒரு மயிற் பொறியில் ஏறித் தப்புகிறாள் ; சுடுகாட்டில் ஒரு மகனைப் பெற்றெடுக்கிறாள் .

அம்மகனைக் கந்துக்கடன் என்ற வணிகன் எடுத்துச் சென்று சீவகன் என்று பெயரிட்டு வளர்க்கிறான் .

சீவகன் இளைஞனாய் வளர்ந்து அரிய செயல்களால் பெண்களின் உள்ளத்தைக் கவர்ந்து எட்டுப் பேரைத் திருமணம் செய்து கொள்கிறான் ; கட்டியங்காரனை வென்று அரசைக் கைப்பற்றுகிறான் .

பின்பு உலகில் அனைத்தும் அழியக் கூடியன என்பதை உணர்ந்து துறவு கொள்கிறான் .

இதுவே சிந்தாமணி கூறும் கதையாகும் .

1.4.2 சிந்தாமணி காட்டும் அறங்கள்

புலால் உண்ணுதல் தீயது . அச்செயல் ஒருவரை நரகத்திற்கு அனுப்பும் .

கள் அருந்துதல் தவறானது .

தீவினைகள் செய்யாமல் ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல் கடமையாகும் .

வாழ்க்கை என்பது எப்படிப்பட்டது தெரியுமா ?

பேதைமை என்னும் வித்திற்

பிறந்துபின் வினைகள் என்னும்

வேதனை மரங்கள் நாறி

வேட்கைவேர் வீழ்த்து முற்றிக்

காதலும் களிப்பும் என்னும்

கவடுவிட்டு அவலம் பூத்து

மாதுயர் இடும்பை காய்த்து

மரணமே கனிந்து நிற்கும்

( சீவக , மர்ரே பதிப்பு : 1389 )

என்கிறார் .

அறியாமை ( பேதைமை ) என்ற விதை வேதனை என்னும் மரத்தை உண்டாக்கியது .

ஆசைகள் ( வேட்கை ) என்ற வேர்கள் ஓடின .

காதல் , மகிழ்ச்சி என்ற கிளைகளை ( கவடு ) அம்மரம் உண்டாக்கியது .

துன்பம் ( அவலம் ) என்ற பூப் பூத்தது .

துயரம் ( இடும்பை ) என்ற காய் காய்த்தது .

மரணம் என்ற பழத்தைத் தந்தது என்பது இப்பாட்டுக் கூறும் செய்தியாகும் .

இதனால் நல்வினைகளைச் செய்ய வேண்டும் என்பதும் , ஆசைகளை நீக்க வேண்டும் என்பதும் அறியப்படுகின்றன .

எளியவர்க்கு உதவுதல் , பெண்களின் கற்பைப் பாதுகாத்தல் , காமம் என்ற வலையில் சிக்காமல் இருத்தல் , நண்பர்களுக்குத் தக்க சமயத்தில் உதவுதல் , செய்ந்நன்றியைப் போற்றுதல் , பிறர் செய்யும் தீமையைப் பொறுத்துக் கொள்ளுதல் போன்ற அறங்கள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன .

1.4.3 சிந்தாமணியும் சமண நெறிகளும்

சிந்தாமணி ஒரு சமண சமய நூல் .

வினைகளின் விளைவாகவே பிறவிகள் உண்டாகின்றன என்ற சமண சமயக் கருத்தை இந்நூலிற் காணலாம் .

சாதலும் பிறத்தல் தானும்

தம்வினைப் பயத்தின் ஆகும்

( சீவக , மர்ரே பதிப்பு : 269 )

என்று கூறும் இந்நூல் .

சாவுக்கு வருந்துதலும் , பிறத்தலுக்கு மகிழ்தலும் அறிவில்லாச் செயல்களாகும் .

நம் பிறவிகள் ஆற்றுமணல் போல் எண்ண முடியாதவை .

நல்ல காட்சி , நல்ல ஞானம் , நல்ல ஒழுக்கம் போன்ற உயர்ந்த நெறிகளை ஒருவர் கடைப்பிடித்தால் பிறவித் துன்பம் வந்து சேராது .

ஒவ்வொரு மனிதனும் ஒரு போர் செய்ய வேண்டும் .

எப்படிப்பட்ட போர் ?

மெய்ஞ் ஞானம் எனும் தேர்

உயிரைப் பாதுகாக்கும் உணர்வு எனும் குதிரை

சன்மார்க்க அறிவு எனும் யானை

கருணை எனும் படைவீரர்

நல்லொழுக்கம் எனும் உடம்புக்கு இடும் கவசம்

மெய்ப் பொருள்கள் எனும் வாளும் கேடயமும்

என்று கொண்டு போர் செய்தால் இருவினை ( நல்வினை , தீவினை ) யால் வரும் தீமை நீங்கும் .

சமண சமயத்திற்கு உரிய இத்தகைய நெறிகளை இந்நூல் கூறுகின்றது .

வளையாபதியும் குண்டலகேசியும் E

வளையாபதி ஒரு சமண நூல் .

குண்டலகேசி ஒரு பௌத்த நூல் .

இரு சமயங்களும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக் கொண்டு இந்நூல்களைப் படைத்தன .

“ மனமே !

நல்ல நெறியில் நின்றால் வீடுபேறு பெறலாம் " என்று வளையாபதி கூறுகின்றது .

“ குழந்தைப் பருவம் செத்துப் போகின்றது .

இளமைப் பருவம் இறந்து போகின்றது . காளைப்பருவம் நீங்கிப் போகின்றது ; மூப்பு வருகின்றது .

எனவே ஒவ்வொரு நாளும் நாம் செத்துக் கொண்டிருக்கின்றோம் .

நாம் இந்த நிலை நினைத்து அழ வேண்டாமா ?

என்று குண்டலகேசி கேட்கின்றது .

வளையாபதியும் குண்டலகேசியும் நிலையாமையினை எடுத்துரைக்கும் நூல்களாகும் .

1.5.1 வளையாபதி கதை

நவகோடி நாராயணன் என்பவன் ஒரு வைர வாணிகன் .

அவன் தன் குலத்தில் ஒரு பெண்ணையும் வேறு குலத்தில் ஒரு பெண்ணையும் மணந்து வாழ்கிறான் .

வணிகர்கள் இவன் வேறு குலத்துப் பெண்ணை மணந்ததற்காக இவனைத் தங்கள் குலத்தை விட்டு ஒதுக்குகின்றனர் .

இதனால் நாராயணன் தன் வேறு குல மனைவியைத் தள்ளி வைத்து விடுகிறான் .

அவள் காளியை வேண்டித் தனக்கு வாழ்வு தருமாறு கேட்டுக் கொள்கிறாள் .

அப்பெண்ணுக்கு ஒரு மகன் பிறந்து வளர்ந்து இளைஞன் ஆகிறான் .

இவன் தன் தந்தையைப் பற்றி அறிந்து புகார் நகரம் சென்று வணிகர்கள் கூடிய அவையில் தன் தந்தை நாராயணனே என்று கூறுகிறான் .

காளிதேவியும் சாட்சி கூறுகிறாள் .

குடும்பம் ஒன்றுபடுகிறது .

இதுவே வளையாபதியின் கதையென்பர் .

இக்கதை வளையாபதிக் காப்பியத்திற்கு உரியதில்லை என்பாரும் உள்ளனர் .

1.5.2 குண்டலகேசி கதை

குண்டலகேசி - காளன் சந்திப்பு

பத்திரை என்பவள் ஒரு வணிகர் குலப் பெண் .

இவள் ஒருநாள் தன் மாளிகையின் மேல் தளத்தில் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள் .

பந்து தெருவிற்குச் சென்று விடுகிறது .

அதை எடுக்கப்போகும் போது தெருவில் அரண்மனைச் சேவகர்கள் காளன் என்ற குற்றவாளியைக் கொலைத் தண்டனை நிறைவேற்றுவதற்காக இழுத்துச் செல்கின்றனர் .

காளன் தீயவன் ; என்றாலும் அழகன் .

காளனைக் கண்டவுடன் பத்திரை அவனிடம் காதல் கொள்கிறாள் .

பத்திரையின் தந்தை அரசனிடம் கூறிக் காளனை மீட்டு அவனுக்குப் பத்திரையை மணம் செய்து கொடுக்கிறான் .

பத்திரையும் காளனும் இனிது வாழ்ந்து வரும்போது ஒருநாள் பத்திரை தன் கணவனை விளையாட்டாக “ நீ கள்வன் அல்லவா ? " என்று கூறுகிறாள் .

இதனால் கோபம் கொண்ட காளன் கோபத்தை மறைத்துக் கொண்டு அவளை மலைக்கு அழைத்துப் போகிறான் .

மலை உச்சிக்குச் சென்றவுடன் அவளைக் கொல்லப் போவதாகச் சொல்கிறான் .

உடனே அவள் இறக்குமுன் ' உங்களை வலம் வந்து வணங்கிப் பின் இறக்கிறேன் ' என்று கூறி வலம் வருவது போல் நடித்து அவனை மலை உச்சியிலிருந்து தள்ளிக் கொன்று விடுகின்றாள் .

பத்திரை பல சமய நீதிகளையும் கற்றுத் துறவு பூண்டு பௌத்த சமயம் சேர்கிறாள் .

மழிக்கப்பட்ட அவள் கூந்தல் குண்டலம் போலச் சுருண்டு வளர்ந்தது .

எனவே அவள் குண்டலகேசி எனப்பட்டாள் .

இதுவே குண்டலகேசி கூறும் கதை .

1.5.3 இரு நூல்களும் உணர்த்தும் பண்பாடு

சமயங்கள் தமிழர் வாழ்வில் மதிப்புப் பெற்ற நிலையை இவ்விரண்டு நூல்களும் காட்டுகின்றன .

புண்ணியம் பாவம் பற்றிய கருத்துகள் தமிழர்களிடம் ஆழமாக வேர் கொண்டன .

தருக்க முறையால் .

அதாவது வாதப் பிரதி வாதங்களின் வழியாக , கருத்துகளை நிறுவும் நிலை வளர்ந்தது .

மனித வாழ்க்கை நிலையற்றது என்ற கருத்து வலிமை கொண்டது .

அரசர் குலத்தையே கதைக்குக் கருப் பொருளாய்க் கொண்டிருந்த நிலை மாறியது .

பெண்களும் துறவேற்பது என்ற நெறி வளர்ந்தது .

இவை இவ்விருநூல்களும் காட்டும் பண்பாட்டுச் செய்திகளாகும் .

தொகுப்புரை

தமிழர் பண்பாட்டு வரலாற்றில் காப்பியங்கள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன .

பெண்களின் ஏற்றத்தைக் காப்பியங்கள் பேசுகின்றன .

சமயக் கருத்துகளைக் காப்பியங்கள் அடித்தளங்களாகக் கொண்டுள்ளன .

நீதிகளைக் கதைகள் வழியாகக் கற்பிக்கும் நெறியைக் காப்பியங்கள் வளர்த்தன .

இவற்றை இந்தப் பாடம் விளக்கியிருக்கிறது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II 1. சச்சந்தனைக் கொன்றவன் யார் ?