43

விடை

2. வாழ்க்கையைச் சிந்தாமணி எப்படி வருணிக்கின்றது ?

விடை

3. இருவினை நீங்கச் சிந்தாமணி கூறும் போர் முறை எப்படிப்பட்டது ?

விடை

4. குண்டலகேசியின் கதையைச் சுருங்கக் கூறுக .

விடை

5. வளையாபதி குண்டலகேசி கற்பிக்கும் தமிழர் பண்பாட்டுக் கூறுகளைப் பற்றி எழுதுக .

கலைகள் வளர்த்த பண்பாடு

பாட முன்னுரை

கலை என்பது பண்பாட்டின் வளர்ச்சியில் தோன்றுவது .

கலையின் அடிப்படை , அழகு உணர்வே .

எனவே கலைகளை அழகுக்கலைகள் என்று கூறினர் .

மனிதன் காட்டில் வாழ்ந்த காலத்திலேயே அவனிடம் பண்பாடு முளைவிடத் தொடங்கிவிட்டது .

அதனால்தான் இலைதழைகளால் உடை உடுத்தக் கற்றுக் கொண்டான் ; குகைகளில் ஓவியங்கள் வரையத் தொடங்கினான் ; கற்களால் செய்யும் கருவிகளில்கூட அழகு உணர்வு புலப்படத் தொழில் திறம் காட்டினான் .

மண்ணால் செய்த பாண்டங்களிலும் அழகிய உருவம் படைக்கச் செய்தான் .

பண்டைக்காலத்திலிருந்தே கலைகள் படிப்படியாக வளர்ந்தன ; கூடவே அவை மனிதனின் பண்பாட்டையும் வளர்த்தன .

வாழும் கலைகள் E

கலைகளை நம் முன்னோர் அறுபத்து நான்கு என எண்ணினர் .

இஃது ஒரு கற்பனையே !

தமிழ் நூல்களில் முதன்முதலில் சிலப்பதிகாரமே கலைகளை அறுபத்து நான்கு என்று குறிப்பிடுகிறது .

சில கலைகள் காலப்போக்கில் அழிந்துவிட்டன .

நிலைபெற்ற கலைகளாக அறிஞர் சிலவற்றைக் குறிக்கின்றனர் .

இசைக்கலை ஆடற்கலை ஓவியக்கலை சிற்பக்கலை கட்டடக்கலை

இசைக்கலை , ஆடற்கலை , ஓவியக்கலை , சிற்பக்கலை , கட்டடக்கலை , ஆகிய ஐந்து கலைகள் உலகம் எங்கும் வாழும் கலைகளாகும் .

பாடலும் இசையும் மனிதரை மட்டுமன்றி , பறவை விலங்கு , மரம்செடி கொடிகளையும் மயங்க வைப்பதாகத் தமிழ் இலக்கியத்திலும் , புராணக் கதைகளிலும் சொல்லப்பட்டிருக்கின்றன .

நடராசர்

இதோ !

காலைத்தூக்கி நின்று ஆடும் நடராசப் பெருமான் தோற்றத்தைப் பாருங்கள் .

உலகம் எல்லாம் இந்தக் காட்சியில் ஒன்றி விடுகிறதே !

ஏன் ?

அதுதான் ஆடற்கலை .

தஞ்சைக் கோபுரத்தின் சுவரோவியம் பார்த்திருக்கிறீர்களா ?

சுந்தரரின் அழகான ஒவியத்தில் மயங்காத மாந்தர் இல்லை .

இதோ !

மாமல்லபுரச் சிற்பம் பாருங்கள் .

குகைக் கோயில்களைக் காணுங்கள் .

சிற்ப , கட்டடக்கலை மாட்சிகளைத் தெரிந்து கொள்ளுங்கள் !

மாமல்லபுரச் சிற்பம்

குகைக் கோயில்

2.1.1 கலையும் வாழ்வும்

கலையைத் தெய்வமாகப் போற்றினர் கலைஞர்கள் .

தமிழ்நாட்டில் இடைக்காலத்தில் கலைகளின் தெய்வம் நாமகள் என்ற கருத்துத் தோன்றியது .

கலைத் தெய்வமாகிய கலைவாணி தங்களுக்கு எதையும் செய்வாள் எனக் கலைஞர்கள் நம்பினர் .

தமிழிலும் ஒரு கதை உண்டு .

இதனை உண்மை நிகழ்ச்சியாகக் கொள்ள வேண்டாம் .

கம்பருக்கு அம்பிகாபதி என்று ஒரு மகன் இருந்தான் .

அவன் சோழ மன்னனின் மகள் அமராவதியைக் காதலித்தான் .

சோழ அரசனுக்கு இந்தச் செய்தி தெரிந்தவுடன் அம்பிகாபதியின் தலையை வெட்டிக் கொன்றுவிட ஆணையிட்டான் . மன்னனிடம் உயிர்ப்பிச்சை வேண்டினார் கம்பர் .

நூறு பாடல்கள் காதல் கலக்காமல் பாடினால் உயிர்ப்பிச்சை தருவதாக மன்னன் கூறினான் .

அம்பிகாபதி பாடத் தொடங்கினான் .

கடவுள் வாழ்த்துப் பாடலையும் சேர்த்து எண்ணிவிட்டதால் 99 பாடல்கள் பாடியவுடன் நூறு பாடல்கள் பாடிவிட்டதாகக் கருதிக் கொண்டு நூறாவது பாடலாக அமராவதியை வருணித்துக் காதல் சுவை ததும்பப் பாடிவிட்டான் .

என்ன பாடினான் அவன் ?

“ சற்றே சரிந்த குழலே அசைய ஒருத்தி வருகிறாள் ; முத்துவடம்

அசையும்

மார்போடு அவள் பொன்னாலாகிய தேர்போல் அசைந்து வருகிறாள் "

என்று பாடினான் .

விடுவானா அரசன் ?

வெகுண்டான் !

ஆனால் கம்பர் தொடர்ந்து பாடினார் .

கொட்டிக்கிழங்கு விற்றுவரும் கிழவி ஒருத்தி மேலே சொன்னவாறு குழல் சரியவும் , முத்துவடம் அசையவும் தெருவில் வருகிறாள் என்று பாடினார் .

அரசன் ஆளை அனுப்பித் தெருவில் பார்த்தால் உண்மையிலேயே அப்படி ஒரு கிழவி கிழங்கு விற்றுக்கொண்டு வருகிறாள் .

யார் அவள் ?

கலைமகள்தான் கம்பரைக் காப்பாற்ற அப்படி வந்தாளாம் !

கதை இருக்கட்டும் நண்பர்களே !

காவியம் படைக்கும் கலைஞன் நினைத்தால் வாழ்வில் எதையும் சாதிக்கலாம் என்பதைத்தான் இந்தக் கதை அறிவுறுத்துகின்றது என்பதை மறுக்க முடியுமா ?

2.1.2 கலைஞர்கள் உள்ளம்

கலையில் தோய்ந்த உள்ளம் பொருளுக்காக அலையாது .

தன் கலையைப் பொருளுக்கு விற்கவும் உடன்படாது .

தன் கலையில் மனதைப் பறிகொடுத்து நிற்கும் ஓர் ஏழைக்குக் கட்டுப்பட்டு நிற்பான் கலைஞன் ; ஆனால் , தன் கலையை மதிக்காத செல்வர்களைப் பொருட்படுத்தமாட்டான் .

புலவரின்பரிசு - அரசருக்கு !

பழங்காலத்தில் புலவர் ஒருவர் அரசனைப் பாடிப் பரிசுபெற எண்ணினார் .

ஆனால் அரசன் அவரைச் சந்திக்க உடன்படவில்லை .

புலவர் கோபமுற்று வேறு ஒரு வள்ளலை நாடிச் சென்றார் .

அங்கு அவ்வள்ளலைப் பாடி யானைகளைப் பரிசாகப் பெற்றுக் கொண்டு வந்தார் .

வரும் வழியில் தன்னைக் காண மறுத்த அரசனின் வாயிலில் தான் பரிசாகப் பெற்றுவந்த யானைகளைக் கட்டிப்போட்டு ' இவற்றை என் பரிசாக ஏற்றுக்கொள் ' என்று கூறிச் சென்றார் .

இவ்வாறு திறம் மிக்க கலைஞரின் உள்ளம் பண்பட்டு விளங்கியதைத் தமிழக வரலாற்றிலும் , இலக்கியத்திலும் காண முடிகிறது .

• தன் தகுதியை மதிப்பவரை மதித்தல் .

• உணர்ச்சி ஒத்த நிலையில் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லாதவர் ஆயினும் அவரிடம் நீங்காமல் பழகுதல் .

• தன் கலைத்திறத்தை விரும்பிப் பாராட்டுவோரிடம் நேயம் கொள்ளுதல் .

• வறுமையை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளுதல் .

• தன் உரிமைகளை எந்த நிலையிலும் இழக்க உடன்படாதிருத்தல் .

ஆகியன கலைஞர்களின் உளப் பண்புகளாக இருந்தன

• தமிழகக் கலைகள்

தமிழகம் கலைகளின் இருப்பிடம் .

ஒவ்வொரு கலைக்கும் இதோ ஒரு உதாரணம் கூறுகிறேன் , கேளுங்கள் !

டி.என்.இராஜரத்தினம்

" காற்றினிலே வரும் கீதம்.. " இந்தத் தேனிசைக் குரல் யாருடையது தெரியுமா ?

இசைப் பேரரசியாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் குரல் இது !

இதோ , இந்தத் தோடிப்பண் ஆலாபனை .

இது நாதசுரச் சக்கரவர்த்தி டி.என்.இராஜரத்தினம் பிள்ளையுடையது .

இதோ , இந்தத் தட்சிணாமூர்த்திச் சிற்பத்தைப் பாருங்கள் !

இதோ திருமலை நாயக்கர் மகாலைக் காணுங்கள் !

216 அடி உயரத் தஞ்சைக் கோபுரத்தைப் பாருங்கள் !

தட்சிணா

மூர்த்தி

திருமலை

நாயக்கர் மகால்

தஞ்சைக்

கோபுரம்

சித்தன்ன

வாசல் ஓவியம்

சித்தன்னவாசல் ஓவியங்களைப் பாருங்கள் !

இவையெல்லாம் தமிழகத்தின் அரிய கருவூலங்கள் ஆகும் .

இசைக்கலை E

இசையால் கட்டுப்பட்ட யானை

கொல்லையில் கம்புக் கதிர்கள் நன்கு காய்த்திருந்தன .

யானை அவற்றைத் தின்பதற்கு வந்து விட்டது .

யானையின் வாய்க்குள் கதிர் புகுவதைவிடக் கால்பட்டு அழிவதல்லவா அதிகமாகி விடும் ?

எனவே அந்தக் கொல்லையைக் காக்கப் பரண்போட்டு அமர்ந்திருந்த பெண் குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள் ; பாடிக்கொண்டே இருந்தாள் .

விடியும்வரை பாடிக்கொண்டே இருந்தாள் .

யானை தலையை அசைத்துக்கொண்டே கேட்டுக்கொண்டு இருந்தது .

பொழுது புலர்ந்துவிட்டது .

மக்கள் சந்தடி தொடங்கிவிட்டது .

யானை கதிர்களை உண்ணாமல் போய்விட்டது .

இவ்வாறு விலங்குகள்கூட இசைக்குக் கட்டுப்படும் என்றால் மனிதர்கள் கட்டுப்பட மாட்டார்களா என்ன ?

2.2.1 பாட்டும் பண்ணும்

பாட்டு என்பது பரந்துபட்ட ஓசை உடையது .

பாட்டுக்குப் பண் உண்டு .

பண்ணை இராகம் என்பர் .

பண்கள் நூற்று மூன்று ஆகும் என்று பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன .

பருந்தும் அதன் நிழலும் போலப் பாட்டும் பண்ணும் இயைந்து செல்ல வேண்டும் என்பர் .

பண்ணுக்குரிய அடிப்படையைச் சுரம் என்றும் கோவை என்றும் கூறுவர் .

இக்காலத்தில் சரிகமபதநி என்ற ஏழு சுரங்கள் உள்ளன .

சுரம் தமிழ்ச்சொல் வடசொல்

ச குரல் சட்ஜமம்

ரி துத்தம் ரிஷபம்

க கைக்கிளை காந்தாரம்

ம உழை மத்திமம்

ப இளி பஞ்சமம்

த விளரி தைவதம்

நி தாரம் நிஷாதம்

ஏழு சுரங்கள்

இந்த ஏழு சுரங்களின் பெயர்கள் பண்டைக்காலத்தில் குரல் , துத்தம் , கைக்கிளை , உழை , இளி , விளரி , தாரம் என அழைக்கப்பட்டன .

இன்று இப்பெயர்கள் சட்ஜமம் , ரிஷபம் , காந்தாரம் , மத்திமம் , பஞ்சமம் , தைவதம் , நிஷாதம் என்ற வடமொழிப் பெயர்களாக வழங்குகின்றன .

தூய தமிழாக இருந்த பண்களின் பெயர்கள் பல இன்று வடமொழிப் பெயர்களாக மாறியுள்ளன .

2.2.2 இசைக் கருவிகள்

பண்டைக்காலத்து இசைக் கருவிகள் புல்லாங்குழலும் யாழும் ஆகும் .

மாடுகளை மேய்த்த ஆயன் காட்டில் மூங்கிலில் வண்டுகள் உண்டாக்கிய துளைகளில் காற்றுப் புகுந்து உண்டாக்கும் ஓசை கேட்டுப் புல்லாங்குழலை உருவாக்கிக் கொண்டான் ; மரக்கிளைகளில் கொடிகள் படர்ந்திருக்க அவற்றின் இடையே காற்றுப் புகுந்து வெளிப்பட்டபோது உண்டான ஓசை கேட்டு ' யாழ் ' என்னும் இசைக் கருவியைப் படைத்துக் கொண்டான் .

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்

( குறள் : 66 )

என்று வள்ளுவர் இவ்விரண்டு இசைக் கருவிகளையும் குறிப்பிடுகின்றார் .

இசைக் கருவியின் வகைகள்

உடுக்கை

இசைக் கருவிகள் தோற்கருவி , துளைக்கருவி , நரம்புக் கருவி , கஞ்சக் கருவி என நான்கு வகைப்படும் .

மத்தளம் , கிணை , முழவு , பேரிகை , உடுக்கை , முரசு , பறை ஆகியன தோற் கருவிகள் ஆகும் . புல்லாங்குழல் , சங்கு , கொம்பு ஆகியன துளைக் கருவிகள் ஆகும் .

யாழ் , வீணை என்பன நரம்புக் கருவிகள் ஆகும் .

பாண்டில் , தாளம் என்பன கஞ்சக் கருவிகள் ஆகும் .

( கஞ்சக்கருவி = உலோகத்தாலான இசைக்கருவி )

2.2.3 இசை இலக்கணம்

இசைக்கு இலக்கணம் கூறும் நூல்கள் பல பண்டைக்காலத்தில் இருந்தன .

பண்களில் முதலில் தோன்றியது முல்லைப் பண் என்று இசை இலக்கணம் கூறும் .

இந்த முல்லைப் பண் அரிகாம்போதி என இன்று வழங்கப்படுகின்றது .

திரை இசையில் " சந்திரனைத் தொட்டது யார் .. " என்று ஒரு பாடல் வருகிறதல்லவா .

அது , இந்த அரிகாம்போதிதான் !

குறிஞ்சிப் பண் இன்று நடபைரவி என வழங்கப்படுகின்றது .

இன்றைய திரை இசையில் ' பூங்காற்று திரும்புமா ' என்றொரு திரைப் பாடல் வருகிறதல்லவா ?

அது , இந்த நடபைரவிதான் !

மருதப்பண் இன்று கரகரப்ரியா என வழங்கப்படுகின்றது .

இன்றைய திரை இசையில் ' அறியாப் பருவமடா கண்ணா ..' என்ற திரைப்பாடல் இந்தக் கரகரப்ரியாதான் !

நெய்தற் பண் இன்று தோடி என வழங்கப்படுகின்றது .

இன்றைய திரை இசையில் ' கங்கைக் கரை மன்னனடி ' என்று தொடங்கும் பாடல் இந்தப் பண்ணில்தான் ஒலிக்கின்றது .

இந்தப் பண்களைப் பொழுது அறிந்து இசைக்க வேண்டும் என்பர் .

இரவில் நட பைரவி , காலையில் கரகரப்ரியா , மாலையில் அரிகாம்போதி , முன்னிரவில் தோடி என்ற வழக்கம் நடைமுறையில் இருந்திருக்கிறது .

ஒவ்வொரு உணர்ச்சி வெளிப்படும் செயலுக்கும் ஒரு பண் என்ற முறை இருந்திருக்கிறது .

பொழுது பண்டைய

தமிழ்ப் பண் இன்றைய பண்

காலை மருதப்பண் கரகரப்பிரியா

மாலை முல்லைப்பண் அரிகாம்போதி

முன்னிரவு நெய்தற்பண் தோடி

பின்னிரவு குறிஞ்சிப்பண் நடபைரவி

பண்ணும் பொழுதும்

இதோ ஒரு தாலாட்டுப் பாடல் கேளுங்கள் .

பூவே செம்பூவே .

இது நீலாம்பரி .

இதோ , முகாரிப் பண்ணில் ஒரு பாடல் கேளுங்கள் !

கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் ..

இப்படித்தான் பொருளுக்கும் வேளைக்கும் தகுந்தாற் போல் இசை பல பண்களைப் பெற்றுள்ளது .

பண்டைத் தமிழ் இசை பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்தில் விரிவாகக் கிடைக்கின்றன .

சிற்பக்கலை E

அரக்கு , சுதை , மரம் , மெழுகு , தந்தம் , பஞ்சலோகம் , கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செய்யப்படுகின்றன .

உலோகத்தினாலும் கல்லினாலும் அமைக்கப்பட்ட சிற்ப வடிவங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம் .

அவையாவன :

• பிரதிமை உருவங்கள் என்பன சிலரை அப்படியே சிலை வடிவம் போல உருவாக்குவனவாகும் .

• தெய்வ உருவங்கள் என்பன சிவன் , முருகன் , திருமால் முதலிய கடவுள் உருவங்கள் ஆகும்

• கற்பனை உருவங்கள் என்பன காமதேனு , கற்பகமரம் போன்றவை ஆகும் .

• இயற்கை உருவங்கள் என்பன மரம் , செடி , கொடிகளாகும் .

சிற்பக் கலை தொன்மையான கலைகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது

பிரதிமை

உருவங்கள்

தெய்வ

உருவங்கள்

கற்பனை

உருவங்கள்

இயற்கை உருவங்கள்