45

இந்நூல்கள் காட்டும் பண்பாட்டை இங்குக் காணலாம் .

தமிழில் அற நூல்கள் E

சங்க இலக்கியங்களிலேயே ஆங்காங்கு உரிய அறக் கருத்துகளைக் கூறுவதற்குப் புலவர்கள் தவறவில்லை .

சமூகப் போக்கில் மாறுதல்கள் விளைய வேண்டும் என விரும்பிய சான்றோர்கள் அவ்வப்போது அறநூல்களை வரைந்தனர் .

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பதினொரு நூல்கள் அறநூல்கள் .

இவை அக்காலப் பண்பாட்டை உருவாக்கப் பெரிதும் காரணமாயிருந்தன .

அவையாவன :

• திருக்குறள்

• நாலடியார்

• நான்மணிக்கடிகை

• இன்னா நாற்பது

• இனியவை நாற்பது

• திரிகடுகம்

• ஆசாரக் கோவை

• பழமொழி

• சிறுபஞ்சமூலம்

• முதுமொழிக்காஞ்சி

• ஏலாதி

மேற்கூறிய பதினொரு நூல்கள் தமிழரின் அறவாழ்வைக் காட்டுவன .

இவை தவிர , பிற்காலத்தில் ஒளவையார் , குமரகுருபரர் , அதிவீரராம பாண்டியர் , சுப்பிரமணிய பாரதியார் போன்ற புலவர் பெருமக்கள் நீதிநூல்களை இயற்றியுள்ளனர் .

சிறுவர்க்கெனவே ஆத்திசூடி , மூதுரை , நல்வழி , கொன்றைவேந்தன் ( இயற்றியவர் : ஒளவையார் ) , வெற்றிவேற்கை ( இயற்றியவர் : அதிவீரராம பாண்டியன் ) , நன்னெறி ( இயற்றியவர் : சிவப்பிரகாசர் ) போன்ற நீதிநூல்கள் எழுதப்பட்டன .

சதகம் எனப்படும் நூறு பாடல்கள் கொண்ட நீதி நெறித் தொகுப்புகளும் தோன்றின .

திருக்குறள் போற்றும் அறவாழ்வு E

தமிழரின் அறவாழ்வைக் காட்டும் நூல்களில் திருக்குறளின் பங்கு மிகவும் உயரியது .

திருக்குறள் ஒரு சமூகத்தளத்தில் நின்று பாடப்பட்டது எனினும் , உலகனைத்திற்கும் பொதுவான தன்மைகள் அந்நூலில் மிகுதியாயுள்ளன .

கடுமையான குறிக்கோள்களை நடைமுறைக்கு ஒவ்வாத நிலையிலிருந்து பேசாமல் , வாழ்க்கையை உயர்ந்ததாகவும் , இனியதாகவும் ஆக்கிக் கொள்வதற்குப் பயன்படும் ஒரு பண்பாட்டு வழிகாட்டியாகத் திருக்குறள் விளங்குகின்றது .

திருக்குறள் காட்டும் அறநெறிக் கோட்பாடுகள் பிறிதொரு பாடத்தொகுப்பில் ( ' வள்ளுவரின் வாழ்வியல் தத்துவம் ' ) விரிவாகக் கூறப்பெற்றுள்ளன .

இப்பாடத்தில் ஒழுக்கம் , கள் உண்ணாமை , ஊன் உண்ணாமை , வரைவின் மகளிர் - இவை பற்றிய கருத்துகளை மட்டும் காண்போம் .

3.2.1 திருவள்ளுவர் கூறும் கள் உண்ணாமை

சங்க காலச் சமூகம் கள் குடிப்பதைத் தவறென்று குறிக்கவில்லை .

விருந்தோம்புவதில் கள் ஒரு தகுதியான இடத்தைப் பெற்றிருந்தது .

ஆனால் திருவள்ளுவர் கள் குடித்தல் தீய பழக்கமென்பதை அறிவுறுத்தத் தயங்கவில்லை .

கள் குடிப்பதால் வரும் கேடுகளைத் திருவள்ளுவர் கள் உண்ணாமை என்ற அதிகாரத்தில் கீழ்க்காணும் வகைகளில் கூறுகின்றார் :

கள் மயக்கம்

• கள் குடிப்பவரைக் கண்டு பகைவர் அஞ்சமாட்டார் .

• கள் குடிப்பவர் புகழை இழந்துவிடுவர் .

• கள் குடிப்பவர் சான்றோரால் மதிக்கப்படமாட்டார் .

• கள் குடிப்பவரைத் தாயும் வெறுப்பாள் .

• கள் குடிப்பவரை நாணம் என்னும் உணர்ச்சி நீங்கிவிடும் .

• கள் குடித்தல் அறியாமையின் விளைவாகும் .

• கள் குடித்தலும் இறப்பும் வேறுபட்டவை அல்ல .

• கள் குடிப்பவரைக் கண்டு பிறர் நகைப்பர் .

• கள் குடிப்பதனால் பிறர் அறியாமல் இருந்த குற்றங்கள் எல்லாம் வெளிப்படும் .

• கள் உண்பவனைத் திருத்துதல் இயலாது .

• கள் உண்ணும் பழக்கத்திற்கு அடிமையாகிய ஒருவன் , சுய நினைவில் இருக்கும் போது , கள் உண்டு மயங்கிய ஒருவனைக் கண்டால் திருந்தக் கூடும் .

ஒரு மனிதனைப் பண்பாட்டு உயர்நிலையிலிருந்து கீழே தள்ளிவிடும் இக்கொடிய பழக்கத்தைத் திருவள்ளுவரே முதன்முதலில் இந்த அளவுக்குக் கண்டித்துள்ளார் .

3.2.2 ஒழுக்கம் விழுப்பம் தரும்

நல்ல நெறியில் வாழ்வது என்பது உடலுக்கும் மனத்திற்கும் நல்லது ; சமூக அமைதிக்கும் இனியது .

இன்று ஒழுக்கமின்மையே ' எய்ட்ஸ் ' நோயை உருவாக்கியுள்ளது . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று கூறியுள்ளார் .

சங்க காலத்தில் பெரிதும் கடியப்படாத பரத்தைமையினையும் வள்ளுவர் கண்டிக்கின்றார் .

பொருள் கொடுத்து பெண் ஒருத்தியைத் தழுவுவது பிணத்தைத் தழுவுவதைப் போன்றது என்கிறார் .

சங்ககாலப் பண்பாடு பரத்தைமையைக் கண்டித்து மொழியவில்லை .

ஆணின் ஒழுங்கைச் சங்கச் சமூகம் பெரிதும் வற்புறுத்தவில்லை .

பரத்தை என்ற பெண்பாற் சொல் மட்டுமே சங்க இலக்கியத்தில் உண்டு .

அதற்கு நிகராக ஆண்பாலுக்கும் பொருந்தப் பரத்தன் என்ற சொல்லைத் திருவள்ளுவரே ஆளக் காண்கிறோம் ( குறள் , 1311 )

விலைமாதரின் தோளைச் சேர்வோர் கீழ்மக்கள் என்றும் , அவ்வுறவு நரகத்தை ஒத்தது என்றும் வள்ளுவர் கூறுகின்றார் .

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்

பூரியர்கள் ஆழும் அளறு .

குறள் - 919 )

ஒழுக்க வரையறை இல்லாத பெண்களின் தோள்களைச் சேர்தல் இழிந்த மக்களுக்கு உரிய செயலாகும் ; அச்செயல் சேற்றில் விழுந்து புரள்வது போலக் கீழானதாகும் என்பது மேற்சொன்ன குறளின் பொருளாகும் .

3.2.3 ஊன் உண்ணாமை

திருவள்ளுவர் அருள் உணர்வின் அடிப்படையில் புலால் உணவையும் மறுக்குமாறு அறிவுறுத்துகின்றார் .

சங்க காலத்தில் கபிலர் , ஒளவையார் போன்ற பெரும் புலவர்களும் ஊன் உணவின் பெருமை பேசக் காண்கின்றோம் .

ஆனால் திருவள்ளுவர் ,

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிதுஊன் உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள் .

( குறள் - 251 )

புலால் மறுப்பு

என்கின்றார் .

தன் உடம்பைப் பெருக்க வைத்துக்கொள்ள வேறொன்றின் ஊனை உண்பவன் எங்ஙனம் அருள் உணர்வைக் காட்ட முடியும் எனக் கேட்கிறார் .

சமண பௌத்த சமயங்களும் புலால் உண்ணுதலைக் கண்டித்திருக்கின்றன .

தமிழகத்தில் அதைக் கண்டிக்கும் முதல் குரல் திருவள்ளுவருடையதாக இருந்திருக்கிறது .

தமிழர் அருள் உணர்வு மிக்கவர் .

ஒரு பூங்கொடி , ஒரு மயில் பறவை என அஃறிணை உயிர்களும் துயருறுதல் கூடாது என நினைத்த சமூகத்தில் ஊன் உணவைச் சரியானதென்று கருத முடியாத நிலை தோன்றியதில் வியப்பில்லை .

வைதிக சமயம் வேள்வியில் உயிர்க்கொலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது .

பசுவைப் புனிதமாகக் கருதுவதாகக் கூறும் வைதிக சமயம் முற்காலத்தில் வேள்வியின் பொருட்டுக் கொலைப்படுத்தப் பசுவைக் கட்டி வைத்திருந்ததனை மணிமேகலை குறிப்பிடுகின்றது .

ஆயிரம் வேள்விகள் கூடப் பெரிதில்லை ; ஓர் உயிரைக் கொல்லாத நோன்பே பெரியது என்கிறார் திருவள்ளுவர் .

புண்ணை யாராவது உண்பார்களா என அவ்வுணவில் ஓர் அருவருப்பை ஏற்படுத்துகிறார் .

திருவள்ளுவர் கண்ட இப்பண்பாடே அருளாளர்களின் சமயமாக வளர்ந்து இராமலிங்க வள்ளலாரின் உயிரிரக்கம் எனப்படும் சீவகாருணிய அறமாக ஓங்கியது .

தமிழர்களில் பலர் சைவ உணவினராகவும் , புலால் உண்பவர்களில் பலர் மாதத்தில் சில நாட்களேனும் நோன்பு மேற்கொள்வோராகவும் அமைவது இப்பண்பாட்டின் வளர்ச்சியால்தான் என அறியலாம் .

3.2.4 வாழ்க்கையில் இருநிலைகள்

தமிழர் பண்பாட்டில் மிகக் குறிப்பிடத்தக்க இரண்டு நிலைகள் இல்லறமும் துறவறமும் ஆகும் .

பிரம்மசரியம் , சந்நியாசம் , கிரகஸ்தம் , வானப் பிரஸ்தம் என்ற நான்கு நிலைகளை வடமொழி கூறுகின்றது .

வடமொழி இதிகாசங்களில் இடம்பெறும் முனிவர்கள் காடுகளில் வாழ்ந்தாலும் மனைவி மக்களோடு வாழ்ந்தனர் .

அரசியல் துறையிலும் அவர்களுக்குப் பங்கு இருந்தது .

மேனகை போன்ற பெண்களிடம் அவர்கள் மனத்தைப் பறிகொடுத்ததும் உண்டு .

துருவாசர் , விசுவாமித்திரர் போன்றோர் அடங்காச்சினம் கொண்டவர்களாகவும் இருந்திருக்கின்றனர் .

அம்முனிவர்கள் நீங்காத சாபங்களை இடுவோராகவும் இருந்துள்ளனர் .

தமிழர் பண்பாடு கண்ட இல்லறம் துறவறம் இவற்றினின்றும் வேறானவை .

• இல்லறம் எதற்கு ?

இல்லறம் எதற்கு என்ற வினாவிற்குச் சங்க இலக்கியமான குறிஞ்சிப் பாட்டு விளக்கம் கூறுவதைக் கேளுங்கள் !

விருந்து உபசரித்தல்

“ பலரும் உண்ணும்படி அகலமாகக் கதவு திறந்து கிடக்கும் வாசலையுடைய பெரிய வீட்டில் , சோற்றை வருகின்றவர்களுக்கெல்லாம் இல்லையென்னாமல் இட வேண்டும் .

அதனால் வீடு பொலிவு பெற வேண்டும் .

விருந்தினர் உண்டது போக மிஞ்சியிருக்கும் உணவை மனைவியாகிய நீ இட நான் உண்ண வேண்டும் .

அவ்வுயர்ந்த இல்லறம் நம்மைக் கரையேற்றும் "

என்று தலைவன் தன் காதலியிடம் கூறுகின்றான் .

ஒருவன் திருமணம் செய்து கொள்வதே விருந்தோம்பல் என்னும் கடமையைச் செய்ய என்று கூறும் பண்பாடு தமிழருடையதாக இருந்திருக்கின்றது . வேளாண் சமூகத்தின் அடிப்படைப் பண்பாடு இதுதான் .

வீடு முழுவதும் நிறைந்திருக்கும் தானியத்தை அடுத்த விளைச்சல் வந்து சேருமுன் செலவழிக்க வேண்டும் .

விருந்து செய்யவும் விழாக் கொண்டாடவும் வேண்டும் .

பொருளாதார உலகில் ' பணம் ' வந்துவிட்ட பிறகே , விளைச்சல் பொருள் பணமாக மாற்றப்பட்ட பிறகே இந்த விருந்திடும் உள்ளம் சுருங்கியிருக்கிறது .

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு ( குறள் - 86 )

என்று விருந்து செய்தலை இடைவிடாத கடமையாகத் திருவள்ளுவர் கூறுகின்றார் .

எனவே இல்லறத்தின் தலையாய கடன் விருந்தோம்பலாகும் .

• எது துறவறம் ?

மனைவி , மக்கள் , சுற்றத்தார் என நெருங்கிய உறவு வட்டத்தில் அன்பு காட்டி வாழ்ந்த ஒருவன் இல்லறத்தின் தேவைகளை நிறைவு செய்த நிலையில் , தன்னை அடுத்த அயலார்க்கும் , ஊரார்க்கும் , பிறர்க்கும் , பிற பிற உயிர்களுக்கும் நல்லன ஆற்றும் வகையில் அருள் உணர்ச்சி பெற வேண்டும் .

இதுவே துறவு .

துறவு என்பது பற்று நீக்கி வாழ்வதன்று ; பற்றின் விரிவு .

துறவு நிலை அடையும் ஒருவன் தன் வீட்டிலுள்ளவர்களுக்காக வாழ்ந்து கொண்டிருந்த நிலை மாறி எல்லா உயிர்க்கும் அன்பு செய்வோராக மாறுகிறான் .

இதுவே துறவறம் எனப்பட்டது .

அருள் என்பது அன்பின் குழந்தை என்கிறார் திருவள்ளுவர் .

எனவே திருவள்ளுவர் கூறும் துறவறம் நாட்டில் ஒவ்வொருவர்க்கும் உரியது என அறியலாம் .

3.2.5 சில நம்பிக்கைகள்

தமிழர் பண்பாட்டில் , நல்வினை , தீவினை , ஊழ் , மறுபிறப்பு ஆகியவற்றுக்குப் பேரிடமுண்டு .

வினைகளின் பயன் தொடர்ந்து அடுத்தடுத்த பிறப்புகளைத் தரும் எனத் தமிழர் நம்பினர் .

திருவள்ளுவரும் இக்கருத்துக்களைக் கொண்டிருந்தார் .

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும் ( குறள்-371 )

என்று ஊழின் வலிமையைத் திருவள்ளுவர் கூறுகின்றார் .

எனினும் ஊழையும் விலக்க முடியும் என்பதே வள்ளுவரின் புரட்சி நோக்கமாகும் .

ஊழையும் உப்பக்கம் காண்பர்

ஆள்வினையோடு தொடர்ந்து முயல்பவர் ஊழின்

தாக்குதலை வென்றுவிட முடியும் என்கிறார்

வள்ளுவர் .

விதி வலியது மாற்ற முடியாதது என்று கூறி அழியும்

குருட்டு நம்பிக்கை கொண்ட சமூகங்களைப் போல

அல்லாமல் முயற்சியின் வலிமையை வற்புறுத்திய

சமூகமாகத் தமிழ்ச் சமூகம் காட்சி தருகின்றது .

3.2.6 வாழ்க்கைக் கடமைகள்

பொருள் ஈட்டுதல் , குடும்பத்தைப் பாதுகாத்தல் , பிள்ளைகளை வளர்த்தல் , சமூகத் தொண்டு செய்தல் போன்ற பல கடமைகள் மனிதர்களுக்கு உள்ளன .

தனி மனிதனாயினும் அவனும் சமூகத்தில் ஓர் உறுப்பினன் .

அவ்வகையில் வீட்டுக்கும் நாட்டுக்கும் ஆற்றவேண்டிய கடமைகளைத் தமிழ் அறநூல்கள் எடுத்துரைக்கின்றன .

• பொருள் ஈட்டுதல்

வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதது என்பதைத் தமிழினம் உணர்ந்திருந்தது .

பொருள் உடையவரே அறத்தைச் செய்யும் இன்பத்தைத் துய்க்கவும் முடியும் என்பதைத் திருவள்ளுவர் வலியுறுத்துகின்றார் .

இரண்டு யானைகள் போரிடும் போது அக்காட்சியை மலை மேலிருந்து பார்ப்பதைப் போலப் பாதுகாப்புடையது பொருள் உடையவன் நிலை என்கிறார் .

அன்பு பெற்றெடுத்த குழந்தை அருள் .

அது பொருள் என்னும் செவிலித் தாயால் வளர்க்கப்படும் என்று கூறுகின்றார் .

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு ( குறள் - 752 )

என்பது உலக நடைமுறையை உணர்ந்து கூறும் குறளாகும் .

பொருளை முயற்சியால் அறவழிகளில் தேடி நற்செயல்களுக்காக அதனைச் செலவிட வேண்டுமென்பது தமிழர் வாழ்க்கை நோக்கமாகும் .

பழியஞ்சிப் பிறரோடு பகுத்துண்டு , ஒப்புரவும் ஈகையும் கொண்டு பண்போடு வாழ்வோர் சான்றாண்மை உடையவர் ஆவர் .

இத்தகையோர் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் ஆவர் .

இவர்கள் மறைந்த பின்னும் தெய்வமென்று போற்றப்படுவர் என வள்ளுவர் கூறுகின்றார் .

• பலர்க்கும் உரிய கடமைகள் வாழ்க்கையில் ஒவ்வொருவர்க்கும் கடமை இருக்கிறது .

தந்தை , தன் மகனைக் கற்றவனாகவும் அவையில் முன்நிற்பவனாகவும் ஆக்க வேண்டும் .

மகன் , ' இவனுடைய தந்தை நோன்பு நோற்று இவனைப் பெற்றிருக்கின்றான் ' என்று கூறுமாறு சிறந்து விளங்க வேண்டும் .

மனைவி , தற்காத்துத் தற்கொண்டானைப் பேணி , புகழை நீங்காமல் காத்து நற்பண்புகளில் சோர்வற்றவள் ஆதல் வேண்டும் .

அரசர் , தன்கீழ் வாழும் குடிமக்களை உயிரெனக் கருதிக் காத்துக் காட்சிக்கு எளியனாகவும் கடுஞ்சொல்லன் அல்லனாகவும் விளங்க வேண்டும் .

அமைச்சர் , வேந்தனுக்கு உறுதுணையாய்ச் சொல்வன்மை , வினைத்தூய்மை உடையவராதல் வேண்டும் .

உழவர் , விளைநிலத்தை நாள்தோறும் சென்று கண்டு , அதனைக் காவல் செய்து பயிர்களுக்குச் செய்யத்தகுவன செய்தல் வேண்டும் .

ஆசிரியன் , மெய்ப்பொருளை எல்லாரும் அறிந்து கொள்ள உரைப்பவனாக ஆதல் வேண்டும் .

மாணவன் , செல்வர் முன் வறியவர் போல ஆசிரியர் முன் தாழ்ந்து நின்று கற்றல் வேண்டும் .

கணவன் , தென் புலத்தார் தெய்வம் விருந்து சுற்றத்தார் தான் எனப்படும் ஐவர்க்கும் உரியன செய்ய வேண்டும் .

வணிகர் , வாணிகத்தை நடுவுநிலைமை தவறாமல் செய்ய வேண்டும் .

சான்றோர் , அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை ஆகிய ஐந்து பண்புகளைக் கொள்ளவேண்டும் .

இவ்வாறு வாழ்க்கையில் ஒவ்வொருவர்க்கும் உரிய கடமையை வற்புறுத்தும் தமிழரின் அறநூல் சாதி , மதம் ஆகியவற்றைப் போற்றவில்லை .

3.2.7 மனத்தூய்மையே அறம்

தமிழ் அறநூல்கள் புறத்தூய்மையைவிட அகத்தூய்மையையே வற்புறுத்துகின்றன .

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறி மனத்தில் மாசு இன்மையையே அறம் என்று கூறுகின்றது , தமிழ் அறம் .

சடங்குகள் , ஆசாரங்கள் , கழுவாய்கள் ஆகியவற்றுக்குத் தமிழர் வாழ்வில் பேரிடமில்லை .

துறவி என்பவன் மொட்டையடித்துக் கொள்வதா , சடைமுடி கொள்வதா என்பன போன்ற வினாக்களுக்கு இங்கு இடமில்லை .

புறப் புனைவுகள் , வேடங்கள் ஆகியவற்றைத் தமிழர் போற்றவில்லை .

மனத்தின்கண் தூய்மை , எவ்வாறு செயல்படுகின்றார் என்பவற்றைப் பொறுத்தே ஒருவர் சமுதாயத்தில் எத்தகையவர் என்பதை முடிவு செய்தனர் .

உருவு கண்டு போற்றுதலும் தூற்றுதலும் தமிழர்க்குப் பொருந்தாச் செயல்களாகும் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. கீழ்க்கணக்கு நூல்களில் எத்தனை நூல்கள் அறநூல்கள் ?

விடை

2. கள் குடிப்பவனைக் காணும் தாயின் நிலை யாது ?

விடை

3. பரத்தன் என்ற சொல்லை முதலில் ஆள்பவர் யார் ?

விடை

4. புலால் உண்ணுதலைக் குறித்துத் திருவள்ளுவர் கூறுவது யாது ?

விடை

5. இல்லறத்தின் நோக்கமாகக் குறிஞ்சிப்பாட்டுக் கூறுவதை எடுத்துரைக்க .

விடை

6. தமிழர் பண்பாட்டில் பேரிடம் பெறும் நம்பிக்கைகள் யாவை ?

சமய நோக்கும் அறங்களும் E

நாலடியார் போன்ற பிற்கால அறநூல்களும் வாழ்க்கைக்குரிய நெறிகளைக் கூறினும் அவற்றைத் தத்தம் சமயக் கண்ணோட்டத்துடன் கூறுகின்றன .

இவை தோன்றிய காலத்தில் சமயம் வாழ்க்கையில் இன்றியமையாத கூறாகிவிட்டது .

இல்லறத்தை வெறுத்த துறவை இந்நூல்கள் போற்றுகின்றன .

இடைக்காலத் தமிழகத்தில் துறவு மதிப்புக்குரியதாகி விட்டது .

வீட்டில் பலரும் இறக்கக் கண்ட ஒருவனை நிலையாமை உணர்வு பற்றிக் கொண்டது .

வாழ்க்கையை வெறுத்துப் பார்க்கும் நோக்குத் தோன்றிவிட்டது .

கணம் கொண்டு சுற்றத்தார் கல்லென்று அலறப்

பிணம் கொண்டு காட்டு உய்ப்பார்க் கண்டும் - மணம்

கொண்டு ஈண்டு

உண்டு உண்டு உண்டு என்னும் உணர்வினாற் சாற்றுமே

டொண் டொண் டொண் என்னும் பறை

( நாலடி , மர்ரே : 3.5 )

( காட்டு உய்ப்பார் = காட்டிற்குக் கொண்டுபோவார் )

என்கிறது நாலடியார் .

தமிழர் சமூக வாழ்வில் சமண பௌத்த சமயங்கள் மதிப்புப் பெற்றன .

பிற சமயங்களும் தத்தம் நெறிகளை மக்களிடையே பரப்பிச் சமூக அமைப்பில் பல சமய வட்டங்கள் தோன்ற வழி வகுத்தன . மத மாற்றங்கள் , போற்றுதல் தூற்றுதல்கள் , மதப் போராட்டங்கள் ஆகியன இடைக்காலத்தில் தொடங்கிவிட்டன .