46

மனித உடம்பையும் பெண்ணையும் சமயங்கள் இழிவாகக் கருதின .

எனினும் தமிழர் பண்பாடு இவற்றுக்கு முழுமையாக இடம் கொடுத்துவிடவில்லை .

3.3.1 தமிழர் கண்ட பொதுமைக் கண்ணோட்டம்

எதனையும் நடுவுநிலைமையோடு சிந்திக்கும் முதிர்ச்சி பெற்றிருந்த தமிழ்ச் சமூகம் , சமயங்கள்பால் ஒரு பொதுமைக் கண்ணோட்டத்தையும் , பொறை நோக்கையும் கடைப்பிடிக்கத் தலைப்பட்டது .

சமயங்கள் கற்பித்த நன்னெறிகளைத் தமிழ்ச் சமூகம் ஏற்றுத் தன் பண்பாட்டுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டது .

கல்வி ஒன்றே வேறுபாடுகளைக் களைந்து மனிதனை உயர்த்தவல்லது என்பதை அற நூல்கள் தெளிவுபட உரைக்கின்றன .

அறிவுடையோனுக்குக் குலம் என்பது இல்லை என்ற தமிழ்ச் சமூகக் கருத்து அதன் பண்பாட்டு உயர்ச்சியைக் காட்டும் .

தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்

காணின் கடைப்பட்டான் என்று இகழார் - காணாய்

அவன் துணையா ஆறு போயற்றே , நூல் கற்ற

மகன் துணையா நல்ல கொளல் .

( நாலடி , மர்ரே : 14.6 )

என்று சாதி வேறுபாட்டைக் கருதாமல் , அவரவர் செயல்கண்டு மனிதனை மதிக்கும் பண்பைச் சில சமயங்கள் உருவாக்கின .

தோணி ஓட்டுகிறவன் எந்த வருணத்தினன் என்று பார்த்தா பயணம் செய்வர் ?

அதுபோலக் கல்வியாளன் எக்குலத்தவனாக இருந்தால் என்ன என்ற கருத்து வருணாசிரம நெறியைத் தவிடுபொடி செய்துவிட்டது .

பழமொழி காட்டும் பண்பாடு E

மக்கள் உணரும் வகையில் எளிய மொழிகளிலும் தெரிந்த மொழிகளிலும் அறத்தைக் கூறவேண்டுமென்று சான்றோர் விரும்பினர் .

சமூகம் அறநெறியில் தவறாது இருக்க வேண்டும் எனக் கருதிய பெரியோர் அவ்வப்போது தாம் உணர்ந்தவற்றை எடுத்துக் கூறினர் .

ஒரு மொழியில் இஃது அறம் , இஃது அறமில்லை எனக் கூறும் நூல்கள் அம்மொழி வழங்கும்

சமுதாயத்தின் பண்பாட்டைக் காட்டும் .

தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டை உணர நீதி நூல்கள் சான்றாகும் .

நட்பு இருவரைப் பிணைப்பது .

தீ நட்பு , கூடா நட்பு ஆகியவற்றைக் கொள்ளாது நல்ல நட்பைத் தேர்ந்து கொள்ள வேண்டும் .

நட்பில் பிழை பொறுத்தல் வேண்டும் .

நண்பனிடம் குறை கண்டால் அதற்காகச் சினம் கொள்ளக் கூடாது .

இதனைப் பழமொழி நானூறு எவ்வாறு கூறுகின்றது ?

நண்பு ஒன்றித் தம்மாலே நாட்டப் பட்டார்களைக்

கண் கண்ட குற்றம் உள எனினும் காய்ந்து ஈயார்

பண் கொண்ட தீஞ்சொல் பணைத் தோளாய் - யார் உளரோ

தம்கன்று சாக்கறப் பார் .

( பழ , மர்ரே : 16 )

கன்று சாகுமாறு பால் கறக்கலாமா ?

கூடாது .

அதுபோல நட்பு தீய்ந்து போகுமாறு சினந்து கொள்ளலாமா ?

கூடாது .

இதுபோல அழகிய பழமொழிகள் பலவற்றை உரிய நீதிகளோடு விளக்குவது பழமொழி நானூறு .

ஒருவனுக்கு ஒரு பொருள் கிடைக்க வேண்டும் என்று இருந்தால் அதை யாராலும் தடுத்தல் இயலாது .

இதனைப் பழமொழி எப்படிக் கூறுகின்றது தெரியுமா ?

கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்

விழுமியோன் மேற்சென்றதனால் விழுமிய

வேண்டினும் வேண்டாவிடினும் உறற்பால

தீண்டா விடுதல் அரிது .

( பழ , மர்ரே : 62 )

( கழுமலம் - சீர்காழி எனப்படும் ஊர். விழுமியோன் - கரிகாலன் என்ற பெயருடைய சோழன் .

உறற்பால - வந்து அடைய வேண்டியவை )

கரிகாலன் சிறுவனாக இருந்தபோது அரசுரிமை இழந்து எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தான் .

அப்போது பட்டத்து யானை அரசனைத் தேர்ந்தெடுப்பதற்காக அனுப்பப் பெற்றது .

அந்த யானை வேறு எவரையும் நாடாமல் கரிகாலனைத் தேடி வந்து அரசனாகத் தேர்ந்தெடுத்தது .

வரவேண்டுமென்ற விதி இருந்தால் வராமல் போகுமா ? இவ்வாறு பல நீதிகளை உணர்த்தி மக்களை வழிப்படுத்துகிறது பழமொழி .

பண்பாட்டு நெறிகள் பலவற்றைப் பழமொழி கற்பிக்கின்றது .

அவற்றுள் சில :

• கன்றை விட்டுத்தான் பசுவிடம் பால் கறக்கலாம் .

அம்பு விட்டுக் கறக்க முடியுமா ?

• ஏர்க்காலில் ஆணி போன்ற நடுவு நிலைமையோடு எந்த நிலையிலும் பணி செய்ய வேண்டும் .

• பெரியவர்களைத் தகுதி அற்ற சொற்களால் குறை கூறுவது நிலாவைப் பார்த்து நாய் குரைப்பது போன்றது .

நிலாவைப் பார்த்து நாய் குரைத்தல்

மருந்து நூல்கள் காட்டும் பண்பாடு

சில நூல்களுக்கு மருந்துகளின் பெயர்களைப் புலவர்கள் வைத்துள்ளார்கள் .

ஏன் தெரியுமா ?

மருந்து நோயைத் தீர்ப்பது போல இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள நீதியும் மனத்தின் குறையைப் போக்கும் என்பதற்காக ஆகும் .

ஏலாதி என்பது ஒரு நூல் .

ஏலக்காய் , இலவங்கப்பட்டை , நாககேசரம் , மிளகு , திப்பிலி , சுக்கு என்ற ஆறு மருந்துச் சரக்குகள் சேர்த்துச் செய்தது ஏலாதி எனப்படும் .

இது போல ஆறு பொருள்களைக் கூறுவது இந்நூல் .

நிறை உடைமை , நீர்மை உடைமை கொடையே

பொறை உடைமை , பொய்ம்மை புலாற்கண் மறை உடைமை

வேய் அன்ன தோளாய் இவை உடையான் பல் உயிர்க்கும்

தாய் அன்னன் என்னத் தகும் .

( ஏலாதி , மர்ரே : 6 )

இதன் பொருள் : ' மூங்கில் போன்ற தோளை உடையவளே !

நிறைந்த பண்பு , அன்பு , கொடைக் குணம் , பொறுமை , பொய் கூறாமை , புலால் உண்ணாமை என்ற ஆறு பண்புகள் கொண்டவன் எல்லா உயிர்க்கும் தாய் போன்றவன் ' என்பதாகும் .

இவ்வாறே திரிகடுகம் என்ற நூலும் , சிறுபஞ்சமூலம் என்ற நூலும் மருந்துப் பெயர்களைக் கொண்டு நீதிக் கருத்துகளைக் கற்பிக்கின்றன .

பிற்கால நீதி நூல்களும் பண்பாடும்

பிற்காலத்தும் பல நீதி நூல்கள் தோன்றியுள்ளன .

ஒவ்வொரு காலத்திலும் பெரியோர்கள் மற்றவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் பண்பாட்டைக் காக்கும் நீதிகளைக் கூறியுள்ளனர் .

ஒளவையார் , குமரகுருபரர் , அதிவீரராம பாண்டியர் , சுப்பிரமணிய பாரதியார் போன்ற புலவர் பெருமக்கள் இவ்வாறு நீதி நூல்கள் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் .

இவர்கள் இயற்றியவற்றில் சிலவற்றை இங்கே காணலாம் .

3.6.1 நீதி நெறி விளக்கம் காட்டும் பண்பாடு

நீதி நெறி விளக்கம் என்ற நூல் குமரகுருபரர் என்ற புலவரால் இயற்றப்பட்டது .

இவர் துறவியாகிச் சைவ மடம் ஒன்றைத் திருப்பனந்தாள் என்ற ஊரில் தோற்றுவித்தார் .

கற்றார்க்குக் கல்வி நலனே கலனல்லால்

மற்றோர் அணிகலம் வேண்டாவாம் - முற்ற

முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா ; யாரே

அழகுக்கு அழகு செய்வார் .

கற்றவர்களுக்கு ஆபரணம் என்பது கல்விதான் .

அதுவே பெரிய அழகு .

அந்த அழகுக்கு மேல் அழகு செய்ய வேண்டுவதில்லை .

இது போன்ற நீதிக் கருத்துகளை இந்நூல் கூறுகின்றது .

பிறரை இகழாதீர்கள் .

ஒழுக்கத்தைப் போற்றுங்கள் , எல்லோருக்கும் வழங்கி உண்ணுங்கள் என்பன போன்றவை இந்நூலில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளன .

3.6.2 சதகங்கள் காட்டும் பண்பாடு

சதம் என்றால் நூறு என்று பொருள் .

சதகம் என்பது நீதி கூறும் நூறு பாடல்கள் கொண்ட நூல் என்பது பொருள் .

பல சதக நூல்கள் தமிழில் உள்ளன .

உயர்ந்த பண்பாட்டு நெறிகளைக் கூறுவன இந்நூல்கள் .

தாம் அழிந்தாலும் தம் குணம் அழியாதவை எவை என்று குமரேச சதகம் கூறுவதைக் கேளுங்கள் .

தங்கமானது தழலில் நின்று உருகி மறுகினும்

தன்னொளி மழுங்கிடாது

சந்தனக் குறடுதான் மெலிந்து தேய்ந்தாலுமே தன்மணம் குன்றிடாது .

பொங்குமிகு சங்குசெந் தழலில்வெந் தாலுமே

பொலிவெண்மை குறைவுறாது .

போதவே காய்ந்துநன் பால் குறுகினாலும்

பொருந்துசுவை போய்விடாது

துங்கமணி சாணையிற் தேய்ந்துவிட்டாலும்

துலங்குகுணம் ஒழியாதுபின்

தொன்மைதரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது

தூயநிறை தவறாகுமோ

மங்கள கல்யாணி குறமங்கை சுரகுஞ்சரியை

மருவுதிண் புயவாசனே

மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு

மலைமேவு குமரேசனே .

பெரியோர் இறந்தாலும் அவர்கள் பெருமை மறையாது என்பதற்குப் பல உதாரணங்கள் இதில் தரப்பட்டுள்ளன .

3.6.3 சிறுவர்களுக்கான நீதி நூல்கள்

ஒளவையார் பாடிய ஆத்திசூடி இரண்டு அல்லது மூன்று சொற்கள் கொண்டது .

அறம் செய விரும்பு

ஆறுவது சினம்

இயல்வது கரவேல்

ஈவது விலக்கேல்

போன்ற தொடர்களைக் கொண்ட எளிமையான நூல் இது. இதனை அடுத்துப் பலப்பல ஆத்திசூடிகள் தோன்றின .

முனை முகத்து நில்லேல் என்று ஒளவையார் கூறினார் .

இதன் பொருள் போர் முனைகளில் போய் நிற்காதே என்பதாகும் .

பாரதியார் இதனை மாற்றி முனை முகத்து நில் என்று தன் ஆத்திசூடியில் கூறினார் .

ஒளவையார் பாடிய கொன்றை வேந்தன் , மூதுரை , நல்வழி , சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி , அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை போன்றவையும் சிறுவர் கற்பதற்குரிய நல்ல அறநூல்களாகும் .

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

என்பன கொன்றை வேந்தன் எனும் நூலில் காணப்படும் செய்திகள் ஆகும் .

தொகுப்புரை

சமூகம் நன்கு விளங்க அறநூல்கள் தேவை .

தனி மனிதன் ஒழுக்கமுடையவனாக இருக்க அறநூல்கள் அடிப்படையாகும் .

இவ்வகையில் பலப்பல நூல்கள் தமிழகத்தில் தோன்றி தமிழர் பண்பாட்டைக் காத்துவந்துள்ளன .

கள் மனிதனின் அறிவைக் கெடுப்பது .

அதனைக் குறித்துப் பத்துக் குறள்பாக்களில் திருவள்ளுவர் கூறியிருப்பதைக் கண்டீர்கள் .

திருவள்ளுவர்தான் கள்ளுண்ணுதலை முதன் முதலாகக் கண்டித்த அறநூல் ஆசான் .

ஒருவன் - ஒருத்தி என்ற நிலையில் வாழும் இல்லறமே உயர்ந்தது என்பதையும் திருவள்ளுவர் வற்புறுத்தியுள்ளார் .

எல்லா உயிர்க்கும் அருள் உணர்வு பூண்டு வாழ்வதே துறவறம் .

திருக்குறளுக்குப் பின்வந்த அறநூல்கள் பலவும் பண்பாடு மிக்க வாழ்க்கை நடத்தத் தேவையான நீதிகளை வற்புறுத்தியுள்ளன .

இவற்றையெல்லாம் நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. நாலடியார் போன்ற அறநூல்கள் எந்தக் கண்ணோட்டத்துடன் அறம் கூறுகின்றன ?

விடை

2. பழமொழி என்ற அறநூல் கூறும் செய்திகளில் இரண்டைக் கூறுக .

விடை

3. மருந்து நூல்கள் எனப்படுபவை யாவை ?

விடை

4. பிற்கால நீதிநூல்கள் இரண்டைக் குறிப்பிடுக .

விடை 5. நீதி நெறி விளக்கம் ஆசிரியர் யார் ?

சைவ வைணவச் சமயங்கள் வளர்த்த

பண்பாடு

பாட முன்னுரை

சிவம் என்ற சொல்லிலிருந்து சைவம் என்ற சொல் தோன்றியது .

விஷ்ணு என்ற சொல்லிலிருந்து வைணவம் என்ற சொல் தோன்றியது .

இவை இரண்டும் தமிழகத்தின் பழைமையான சமயங்கள் .

இவற்றின் கொள்கைகள் , இச்சமயங்களை வளர்த்த பெரியவர்கள் பற்றி இங்குக் காணலாம் .

இறைவன் ஒரு பெரிய கடல் .

கடலை யாராவது அளக்க முடியுமா ?

அதற்குக் கரைகள்தாம் உண்டா ?

இறைவனும் அப்படித்தான் !

அந்தப் பெருங்கடலை நோக்கிச் சமயங்கள் என்ற ஆறுகள் ஓடுகின்றன .

சைவம் ஓர் ஆறு ; வைணவம் ஓர் ஆறு ; பௌத்தம் ஓர் ஆறு ; சமணம் ஓர் ஆறு ; இசுலாம் ஓர் ஆறு ; கிறித்தவம் ஓர் ஆறு. இன்னும் இப்படி எத்தனை எத்தனையோ !

மதங்கள் எல்லாம் இறைவனை வழிபடும் மார்க்கங்களே .

வழிகள் வேறுபடலாம் .

ஆனால் குறிக்கோள் ஒன்றுதான் .

அதனால்தான் இராமலிங்க அடிகள் இறைவனைக் குறிப்பிடுகையில் ,

பொங்குபல சமயம்எனும் நதிகளெலாம்

புகுந்து கலந்து இடநிறைவாய்ப் பொங்கிஓங்கும்

கங்குகரை காணாத கடலே !

என்று பாடுகிறார் .

சமயங்கள் என்ற ஆறுகள் மனிதர்களின் மனஅழுக்கைப் போக்கித் தூய்மை செய்வன ஆகும் .

4.1.1 சமயங்கள் தோன்று முன்பு

சமயங்கள் தோன்று முன்பே கடவுள் நம்பிக்கையும் வழிபாட்டு நெறிகளும் வழக்கத்தில் இருந்தன .

அவரவர்களுக்கு விருப்பமான முறையில் , வாழ்க்கை நெறிகளுக்கு ஏற்ற வகையில் வழிபாடு இருந்தது .

கண்ணப்ப நாயனாருடைய வழிபாடு இதற்கு எடுத்துக்காட்டாகும் .

சிவபெருமானுக்கு இறைச்சியை அவர் படைத்தார் .

ஏன் ?

அவருக்குச் சைவ சமய நெறிகள் தெரியாது .

அன்பு நிறைந்த அவர் செயல்களில் இறைவன் குறை காணவில்லை .

குறவர்கள் ஆட்டை அறுத்துத் தினையரிசி பரப்பி முருகனை வழிபட்டனர் ; முனிவர்கள் நீராடித் துவராடை ( காவி வண்ண உடை ) உடுத்து உச்சிக் கைகூப்பி முருகனை வழிபட்டனர் .

முருகன் இவ் இரண்டையும் ஒருநோக்கோடு கண்டதாக இலக்கியம் கூறுகின்றது .

அவரவர் குடும்பமும் குலமும் அறிந்திருந்த வகையில் வழிபாடு இருந்தது .

4.1.2 தமிழரின் கடவுட்கொள்கை

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் வாழ்வில் கடவுள் நம்பிக்கை மற்றும் கடவுளைப் பற்றிய சில கோட்பாடுகள் இருந்தன .

இறந்தவரைப் புதைத்தல் , புதைத்த இடத்தில் மரங்களை நட்டு வளர்த்தல் , மரங்களைக் கடவுளாகக் கருதி வழிபடுதல் ஆகிய பழக்கங்கள் பழந்தமிழர் வாழ்வில் இடம்பெற்றிருந்தன .

மரத்தைக் கடவுள் மரம் என்று குறிப்பிட்டுள்ள நிலை அறியப்படுகின்றது .

மரத்தின் அடிப்பகுதி , நீர்த்துறை , மன்றம் எனப்படும் பலர் கூடுமிடம் , தெருக்கள் சந்திக்கும் இடம் ஆகிய இடங்களில் கடவுட் படிமங்களை வைத்து வழிபட்டனர் .

மரத்தை நட்டுக் கடவுளாக வழிபட்ட நிலையிலிருந்தே லிங்க வழிபாடு தோன்றியிருக்க வேண்டுமென்று அறிஞர் கருதுகின்றனர் .

இன்றும் தமிழ்நாட்டுக் கோயில்கள் சிலவற்றில் மரங்களும் கல்லால் உருவாக்கப் பெற்ற கம்பங்களும் தெய்வங்களாக வழிபடப்படுகின்றன .

சைவநெறி வளர்த்த பண்புகள் E

சைவ சமயத்தினர் கொல்லாமையைப் பெரிதும் போற்றினர் .

புலால் உணவை மறுத்தவர் சைவர் என இன்றும் கூறப்பெறுவதைக் காணலாம் .

சைவம் , சாதி வேற்றுமை , தீண்டாமை ஆகியவற்றுக்கு இடம் தரவில்லை .

இவற்றைச் சைவர் தீமைகள் எனக் கருதி ஒதுக்கவும் செய்தனர் .

சிவபெருமான்மீது அன்பு செலுத்தும் அடியவர்களிடையே எந்தப் பாகுபாடும்

இல்லை என்பது சைவர் கொள்கையாக இருந்தது .

வைதிக நெறி பரப்பிய கோத்திரம் , வருணம் ஆகியவற்றுக்குச் சைவ சமயம் இடம் கொடுக்கவில்லை .

இறைவன் ஒருவன் . அவனை அன்பு நெறியால் அடையலாம் ; இறைவன் அருளால் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என்பது சைவ சமயத்தின் மெய்ப்பொருளாகும் .