48

ஒருமகள் தன்னை உடையேன்

உலகம் நிறைந்த புகழால்

திருமகள் போல வளர்த்தேன்

செங்கண்மால் தான்கொண்டு போனான்

( நாலா , மர்ரே : 299 )

என்று பாடுகிறார் .

ஆண்டாளின் திருப்பாவை , தமிழகத்து வீதிகளில் , மார்கழி மாதத்தில் பாடப்பெறுகின்றது .

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் !

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் !

( நாலா , மர்ரே : 273 )

4.5.2 குலசேகரர்

பன்னிரண்டு ஆழ்வார்களில் மற்றொருவர் குலசேகரர் .

இவர் சேரமன்னர் .

திருமாலிடம் பேரன்பு கொண்டவர் .

திருப்பதி மலைமீது மீனாகவும் வண்டாகவும் குருகுப் பறவையாகவும் நடந்து செல்லும் படியாகவும் விளங்க வேண்டுமென்று நெஞ்சுருகப் பாடும் அவர் ,

" எம்பெருமான் பொன்மலையில் ஏதேனும் ஆவேனே "

( நாலா , மர்ரே : 1440 )

என்று கூறுகிறார் .

குலசேகரர் ஒருமுறை இராமாயணக் கதை கேட்டுக் கொண்டிருந்தார் .

காட்டில் இருந்த இராமனோடு போரிடக் கரன் முதலான 14000 வீரர்கள் திரண்டனர் என்று கதை சொல்லும் பாகவதர் சொல்லிக் கொண்டிருந்தார் .

குலசேகரர் நடப்பது கதை என்பதை மறந்தார் .

அப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கப் போவதாக நினைத்தார் ; இராமனைக் காப்பாற்ற வேண்டுமென்றும் கருதினார் .

எனவே தம் அமைச்சரை அழைத்து ' நம் படைகளை உடனே புறப்படச் செய்யுங்கள் .

இராமனைக் காக்க வேண்டும் ' என்று கூறினார் .

அந்த அளவு பெருமாள்மீது குலசேகரருக்கு அன்பு இருந்தது .

தானே தசரதனாக இருந்து அவர் பாடியுள்ள பாடல்கள் கல்லையும் உருக்கிவிடும் .

இது மட்டுமா ?

இந்த அரசர் தன்னையே தசரதனாக நினைத்துக் கொண்டு , இராமன் காட்டுக்குப் போவது பற்றிக் கருதினார் , அவர் உள்ளம் அழுதது .

4.5.3 இராமானுஜர்

வைணவ சமயத்தைப் பிற்காலத்தில் வளர்த்த பெருமை இராமானுஜரையே சாரும் .

இவர் பெரிய சீர்திருத்தவாதி .

இவர் எம்பெருமானார் என்றும் யதிராஜர் என்றும் அழைக்கப்பட்டார் .

திருக்கோஷ்டியூர் நம்பி என்ற பெரியவர் “ யாருக்கும் சொல்லக்கூடாது , நீ மட்டும் கேட்டுக்கொள் " என்று கூறிய நாராயண மகா மந்திரத்தை இராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோயில் மதிலேறி நின்று ஊரார் எல்லாரும் கேட்க உரைத்தார் .

“ குருவாகிய நான் சொன்னதை விட்டு விட்டுத் தவறு செய்த உனக்கு நரகம் கிடைக்கும் என்பது தெரியுமா ? " என்று கேட்டார் திருக்கோஷ்டியூர் நம்பி .

அதற்கு இராமானுஜர் " தெரியும் .

நான் ஒருவன் நரகத்துக்குப் போனாலும் மகாமந்திரம் கேட்ட எல்லாரும் வைகுந்தமாகிய சொர்க்கத்துக்குப் போவார்களே என்றுதான் அப்படிச் செய்தேன் " என்றார் .

இராமானுஜர் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பூணூல் அணிவித்து அவர்களைத் திருக்குலத்தார் என்று அழைத்தார் .

சமய உலகில் இராமானுஜர் வளர்த்த பண்பாடு மிகவும் போற்றத்தக்கது .

தொகுப்புரை

சைவமும் வைணவமும் தமிழ்நாட்டில் பக்தி இயக்கத்தை வலிமை மிக்கதாக வளர்த்தன .

கோயில்கள் பெருக இந்தச் சமயங்கள் ஆற்றியுள்ள தொண்டு மிகவும் பெரியது .

சாதி பேதமற்ற சமரசத்தை இந்தச் சமயங்கள் வளர்த்தன ; தமிழை வளர்த்தன ; மக்களிடையே கலந்து பழகும் ஒரு சமுதாய உணர்வையும் இவை உருவாக்கின .

திருஞானசம்பந்தரும் , திருநாவுக்கரசரும் , குலசேகரரும் , இராமானுஜரும் பேணிவளர்த்தது நம் தமிழ்ப் பண்பாடு . வேறுபட்ட சமயங்களுக்கிடையில் ஒரு பண்பாட்டுக் கயிறு ஊடாடிக்கிடப்பதை நாம் காணலாம் .

இதுவே தமிழகத்தின் மிகப் பெரிய வலிமை .

இச்செய்திகள் இப்பாடத்தின் வழியே கூறப்பட்டன .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலின் திருவடிகள் எதனைவிடச் சிறந்தது என்கிறார் ?

விடை

2. பிரபத்தி என்பது யாது ?

விடை

3. திருவாய்மொழியைப் பாடியவர் யார் ?

விடை

4. பெரியாழ்வார் கனவில் திருமால் என்ன கூறினார் ?

விடை

5. குலசேகரர் திருமலையில் எவ்வாறு இடம்பெற எண்ணினார் ?

விடை

6. இராமானுஜர் தவறு செய்துவிட்டதாகத் திருக்கோஷ்டியூர் நம்பி கூறியபோது இராமானுஜர் யாது கூறினார் ?

சமண பௌத்த சமயங்கள் வளர்த்த

பண்பாடு

பாட முன்னுரை

இந்தியாவின் வடபகுதியில் வழங்கிய வேதங்களின் அடிப்படையான வாழ்க்கை நெறியைத் தழுவிய சமயம் வைதிக சமயம் எனப்பட்டது .

இந்த வைதிக சமயத்திற்கு மறுப்பாக எழுந்தவை சமணம் , பௌத்தம் எனும் இருபெரும் சமயங்களாகும் .

சமண சமயக் கொள்கைகளை உலகத்தில் பரப்பியவர் தீர்த்தங்கரர்கள் எனப்பட்டனர் .

இதுவரையில் தோன்றிய தீர்த்தங்கரர்கள் இருபத்து நால்வராவர் .

முதல் தீர்த்தங்கரர் விருஷபதேவர் என்றும் ஆதிநாதர் என்றும் வழங்கப்படுகிறார் .

இந்த விருஷபதேவரே ஆதிபகவன் என்றும் சிலர் கூறுவர் .

இருபத்து நான்காவது தீர்த்தங்கரர் மகாவீரர் ஆவார் .

தென்னாட்டில் சமண சமயம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் புகுந்ததாக அறிஞர்கள் கூறுகின்றனர் .

தமிழ்நாட்டில் சமண சமயத்தை விசாக முனிவர் என்பவரே பரப்பியதாகக் கூறுகின்றனர் .

பௌத்த சமயம் கௌதம புத்தரால் உருவாக்கப் பெற்றது .

அரச குலத்தில் பிறந்த சித்தார்த்தர் உலகத் துன்பங்களைக் கண்டு அவற்றிலிருந்து மனித குலம் விடுதலை பெறவேண்டுமென்று கருதினார் .

அதன்பொருட்டுத் தோற்றுவிக்கப் பெற்றதே பௌத்த சமயமாகும் .

தமிழகத்தில் பௌத்த சமயம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே புகுந்து விட்டதாக அறிஞர்கள் கூறுகின்றனர் .

இவ்விரண்டு சமயங்களைக் குறித்தும் அவை தமிழர்கள் பண்பாட்டில் விளைவித்த மாற்றங்கள் குறித்தும் இங்குக் காணலாம் .

வட இந்தியச் சமயங்கள் E

வட இந்தியாவில் ஆரிய நெறியினரால் உண்டாக்கப் பெற்ற நான்கு வேதங்கள் வைதிக சமயம் உருவாக அடித்தளமாக அமைந்தன .

வேத நெறியைக் கூறுவதே வைதிக சமயமாகும் .

அக்னி , வாயு , வருணன் , இந்திரன் , எமன் முதலான பல தெய்வங்களை வழிபாடு செய்து கொண்டிருந்த வைதிக சமயம் ஒரு தெய்வக் கொள்கை உடையதாக உருப்பெற்றது .

அச்சமயத்தால் குறிப்பிடப்பெற்ற ஒரு தெய்வம் பிரஜாபதியாகும் .

மனிதன் செய்யும் கருமங்களுக்குத் தகுந்தாற்போலப் பிறவிகள் அமையும் என்ற கருத்தை வேதங்கள் கூறுகின்றன .

உயிரானது பிறப்பதும் இல்லை ; இறப்பதும் இல்லை ; புதிதாக உண்டாகிவிடுவதும் இல்லை ; உண்டாகி இல்லாமல் போவதும் இல்லை ; உயிர் மரணம் அடைவதும் இல்லை .

இறப்பை அடைவது உடல் மட்டுமே என்று வைதிக சமயத்தின் முக்கியமான நூலாகிய பகவத்கீதை கூறுகின்றது .

வைதிக சமயத்திற்கு எதிராக வடநாட்டில் தோன்றிய சமயங்கள் லோகாயதம் , சமணம் , பௌத்தம் ஆகியனவாகும் .

இவற்றில் சமணமும் , பௌத்தமும் மக்களிடையே மிகப்பெரிய ஆதரவைப் பெற்றன .

இதற்குக் காரணமானவர்கள் மகாவீரரும் புத்தரும் ஆவார்கள் .

5.1.1 வைதிக மறுப்பு

வைதிக சமயம் கூறிய ஆத்மாவைப் பற்றிய கொள்கையில் சமண பௌத்த சமயங்கள் மாறுபாடு கொண்டிருந்தன .

ஆத்மாக்கள் பல என்பது சமணர்களுடைய கருத்தாகும் .

உலகத் தோற்றத்திற்கு மூலப்பொருள் ஒன்றில்லை .

அவை பலவாகும் .

அவற்றை ஜீவன் , அஜீவன் என்று இரண்டு வகைப்படுத்தலாம் என்பது சமணர்களுடைய கொள்கையாகும் .

பௌத்த சமயம் கடவுளைப் பற்றியோ ஆத்மாவைப் பற்றியோ ஒன்றும் கருத்துத் தெரிவிக்கவில்லை . ஒரு பொருளைக் காணுதல் அதனைப் பற்றிக் கருதுதல் ஆகியவற்றின் வழியாகவே உண்மையை அறியமுடியும் என்று கூறும் பௌத்தம் , வேத விளக்கங்களை ஏற்றுக் கொள்ளவில்லை .

இவ்வாறு வைதிக சமயத்தை மறுத்த இருபெரும் சமயங்களாகச் சமணமும் பௌத்தமும் திகழ்கின்றன .

5.1.2 கடவுள் சிந்தனையில் மாறுபாடு

வைதிக சமயம் பல்வேறு தெய்வங்களை வழிபட்ட நிலையிலிருந்து பிரஜாபதி அல்லது விசுவகர்மன் எனும் ஒரு தெய்வம் உள்ளதென்ற கருத்துக்கு வந்தது .

நானே கடவுள் என்று ஒவ்வொரு ஆத்மாவும் உணரவேண்டுமென்பதே வைதிக சமயத்தின் கருத்தாகும் .

சமண சமயம் இந்த உலகத்தைப் படைக்க ஒரு கடவுள் வேண்டியதில்லை என்று கூறுகின்றது .

உலகம் படைக்கப்பட்டது என்றும் சமணர் கூறுவதில்லை .

கடவுள் இல்லை என்ற வாதத்தைத் தோற்றுவித்தவர் சமணர்களே ஆவர் .

சமணம் அறிவு பக்குவம் அடைந்த மனிதனைக் கடவுள் நிலைக்கு உயர்த்தி வழிகாட்டச் செய்கின்றது .

பௌத்தர் கடவுளைப் பற்றிய எக்கருத்தும் கொண்டவர்களாக இல்லை .

வினையைத் தனக்கு உரியவர்களோடு சேர்க்க ஒரு கடவுள் வேண்டியதில்லை என்பது பௌத்தக் கொள்கையாகும் .

இவ்வாறு கடவுளைப் பற்றிய கருத்தில் சமணம் , பௌத்தம் வைதிகத்தோடு மாறுபடுகின்றன .

5.1.3 புதிய அறநெறிகள்

சமண , பௌத்த சமயங்கள் தமிழர்கள் பண்பாட்டில் பல புதிய அறநெறிகளை வகுத்தளித்தன .

அவற்றில் , கொல்லாமை ஒன்று .

வைதிக சமயத்தில் உயிர்ப் பலிகள் அனுமதிக்கப்பட்டிருந்தன .

பழந்தமிழர் வாழ்விலும் வழிபாட்டிலும் பலியிடுதல் இடம் பெற்றிருந்தது .

சமண , பௌத்த சமயங்களின் நுழைவிற்குப் பிறகு தமிழ்நாட்டில் கொல்லாமை ஒரு பெரிய அறமாகக் கருதப்பட்டது .

அதேபோலக் கள்ளுண்ணுதலும் புறக்கணிக்கத்தக்க ஒரு செயலாகச் சமண , பௌத்த சமயங்களால் கூறப்பட்டது .

தமிழ்நாட்டிலே பண்டை இலக்கியங்கள் கள்ளுண்ணுதலைத் தவறானதாகக் கூறவில்லை .

திருக்குறள் போன்ற அறநூல்கள் கள்ளுண்ணுதலைக் கண்டிக்கின்றன .

அதற்குக் காரணம் சமண , பௌத்த சமயங்களின் பரவலே என்று அறிஞர் கூறுகின்றனர் .

உயிர் , உடம்பு , பொருள் , இளமை ஆகியன நிலையாக நில்லாமல் மறைந்துவிடக் கூடியன .

அவற்றை உணர்ந்து ஒரு மனிதன் அறத்தைச் செய்பவனாக மாறவேண்டுமென்று சமண , பௌத்த சமயங்கள் வற்புறுத்தின .

துறவுநெறி , பணிவு , மனித நேயம் என்று சமண , பௌத்த சமயங்கள் கற்பித்தன .

இந்நெறிகள் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தின .

சமணம் E

துறவு கொண்டவர்களே வீடுபேறு பெறலாம் என்று சமண மதம் கூறுகின்றது .

உயிர் , உடம்பு முழுதும் பரவி நிற்கிறது .

உடம்பின் உருவத்திற்கேற்றபடி உயிரின் அளவு அமையும் .

எறும்பின் உயிரும் , யானையின் உயிரும் ஓர் அளவுடையனவல்ல .

உயிர்கள் நல்ல அறிவும் , நல்ல ஞானமும் பெற்று வினைகள் நீங்கி வீடுபேறு அடையலாம் என்பன சமணர்களின் கொள்கையாகும் .

இந்தச் சமயம் தமிழ்நாட்டில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி மக்களிடையே நல்ல மதிப்பைப் பெற்றது .

5.2.1 தமிழ்நாட்டில் சமணர்

சந்திரகுப்த அரசருடைய சமய குரு பத்திரபாகு முனிவர் என்பவர் .

சந்திரகுப்தருடைய நாடாகிய மகத நாட்டில் பஞ்சம் பரவுவதை அறிந்து பத்திரபாகு முனிவர் பன்னிரண்டாயிரம் முனிவர்களோடு தென்னாட்டிற்கு வந்தார் .

அவர்களோடு சந்திரகுப்த அரசரும் வந்ததாகக் கூறுகின்றனர் .

பத்திரபாகு முனிவருடன் வந்த அவருடைய சீடர் விசாக முனிவர் என்பவரே தமிழ்நாட்டில் சமண சமயத்தைப் பரப்பியவர் ஆவார் .

தமிழ் நாட்டு மக்களுள் பலர் சமண சமயத்தைத் தழுவினர் .

சங்ககாலப் புலவர்களுள் சமண சமயத்தைத் தழுவியவர்கள் இருந்தனர் .

5.2.2 சமண நெறிகள்

வாழ்க்கையை இல்லறம் , துறவறம் என இரண்டாகச் சமணர் பார்த்தனர் .

உலகத்தைத் துறந்து வீடுபேற்றைக் கருதித் தவம் செய்வதைச் சமண முனிவர் வற்புறுத்தினர் .

மெய் , வாய் , கண் , மூக்கு , செவி ஆகியவற்றை ஆசையிலிருந்து விலக்கி அடக்குதல் , கொல்லாமை , வாய்மை , பிறர் பொருளைத் திருடாமை , பற்று இல்லாமை ஆகியவற்றை இந்தத் துறவு நெறி வற்புறுத்தியது .

சமண முனிவர்கள் புழு பூச்சிகளுக்குக்கூடத் துன்பம் செய்யாமல் வாழும் நெறியை வற்புறுத்தினர் .

கடுமையான நோன்புகளை இந்த முனிவர்கள் கடைப்பிடித்தனர் .

நீராடுதல் , பல் தேய்த்தல் போன்ற செயல்கள்கூடப் பிற உயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் என்று கருதிச் சமண முனிவர் அவற்றைச் செய்வதில்லை .

இல்லறத்தில் இருந்த சமணர் கொல்லாமை , வாய்மை , பிறர் பொருளைத் திருடாமை , பிறர் மனைவியை விரும்பாமை , பொருள்மீது அளவற்ற ஆசை இல்லாமை ஆகிய ஐந்து நெறிகளைக் கடைப்பிடித்தனர் .

இவைகளே சமணர்கள் தம் வாழ்வில் மேற்கொண்ட நெறிகளாகும் .

5.2.3 சமணர் பண்பாடு மனிதர்கள் அனைவரையும் சமமாக நோக்கும் பண்பைச் சமணர் வளர்த்தனர் .

உயர்வு தாழ்வு இல்லை என்பது அவர்கள் கருத்தாகும் .

துன்பப்படுபவர்களுக்கு உணவு , அடைக்கலம் , மருந்து , கல்வி என்ற நான்கு தானங்களைச் செய்வதையே சமணர் பெரிய அறமாகக் கொண்டனர் .

தமிழர்கள் பண்பாட்டிலும் இத்தகைய கருத்துகளுக்கு இடமிருந்ததால் , சமண சமயம் தமிழ்நாட்டில் பெருமதிப்புப் பெற்றது .

தாய் மொழியை வளர்க்கும் ஆர்வம் உடையவர்களாகச் சமணர் இருந்தனர் .

மக்கள் அறியாத மொழிகளில் எழுதுவதை அவர்கள் தவிர்த்தார்கள் .

மீன் பிடித்தல் , வேட்டையாடுதல் போன்ற உயிர்க்கொலை செய்யும் தொழில்களைச் சமணர்கள் போற்றவில்லை .

அன்பு , அருள் ஆகியன சமணர்களின் அடிப்படைக் கொள்கையாய் இருந்தன .

தமிழர்கள் பண்பாட்டில் அன்பும் அருளும் பெறுவதற்குச் சமணர்கள் காரணமாக இருந்தனர் .

பௌத்தம் E

புத்தரால் தோற்றுவிக்கப் பெற்றதால் இந்தச் சமயம் பௌத்தம் எனப்பட்டது .

உலக வாழ்க்கையை வெறுத்த சித்தார்த்தர் கடுமையான தவம் மேற்கொண்டு புத்தர் ஆனார் .

ஆசையே துன்பங்களுக்குக் காரணம் என்று அவர் உணர்ந்த உண்மையை உலகத்திற்கு அளித்தார் .

புத்தரான பிறகு ஒருநாள் அவர் அரச மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்தபோது சுஜாதை என்பவள் அவருக்குப் பால் உணவு ஒன்றை அளித்தாள் .

பசுக்களில் சிறந்த பசுவைத் தேர்ந்தெடுத்து , அதன் பாலைக் கறந்து அதைப் பலமுறை பக்குவம் செய்து சுவை சேர்த்து உலகத்தில் எங்கும் கிடைக்காத உணவாக அதை உருவாக்கியிருந்தாள் .

புத்தர் அதனை அருந்தினார் .

அவரிடம் உணவின் சுவையைப் பற்றிக் கேட்டார் .

புத்தர் புலன்களுக்கு அடிமையாகாதவராக இருந்ததனால் அந்த உணவு அவரைப் பெரிதும் கவரவில்லை .

எனினும் , நன்றாக இருந்தது என்று கூறினார் .

பல ஆண்டுகளுக்குப் பிறகு புத்தரை சுந்தன் என்ற வேடன் விருந்துக்கு அழைத்தான் .

வருவதாகப் புத்தரும் வாக்குறுதி கொடுத்துவிட்டார் .

விருந்தின் போது என்ன உணவு செய்திருக்கிறாய் ?

என்று கேட்டார் .

நல்ல பன்றியை நான் உணவாக்கி வைத்திருக்கிறேன் என்று சுந்தன் கூறினான் .

வாக்குறுதி கொடுத்துவிட்ட புத்தரால் அதனை மீற முடியவில்லை .

பற்று இல்லாமல் , சுவைக்கு அடிமை ஆகாமல் அந்த உணவை உட்கொண்டார் .

இரவில் வயிற்றுவலியால் புத்தர் துடித்தார் .

இறப்பு அவரை நெருங்கியது .

அப்போது தனக்குப் பக்கத்திலிருந்த ஆனந்தர் என்ற சீடரிடம் “ புத்தருக்கு சுஜாதை அளித்த பாலுணவும் , சுந்தன் கொடுத்த இறைச்சி உணவும் ஒன்றுதான் .

புத்தரின் இறப்புக்கு சுந்தன் அளித்த உணவு காரணமில்லை என்று கூறுங்கள் ” என்று கூறினார் .

இவ்வாறு எதையும் ஒரு பற்றில்லாமல் அணுகும் வாழ்க்கை முறையைப் பௌத்தம் வகுத்துத் தந்தது .

5.3.1 தமிழ்நாட்டில் பௌத்தர்

அசோகச் சக்கரவர்த்தி வடநாட்டு மௌரிய மன்னர்களுள் குறிப்பிடத்தக்கவர் .

அவர் வெட்டி வைத்த கல்வெட்டுக்களில் தமிழ் நாட்டில் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் மருத்துவ நிலையங்கள் அமைத்தது குறித்துக் குறிப்புகள் உள்ளன .

தர்ம வெற்றி என்ற அகிம்சை நெறியைத் தமிழ்நாட்டில் பரப்புவதை அம்மன்னர் தம் குறிக்கோளாகக் கொண்டார் .

இச் செய்திகளிலிருந்து அசோகர் காலத்திலேயே பௌத்தம் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டது என்பதை அறியலாம் .

தமிழ்நாட்டின் வழியாக இலங்கைக்கும் பௌத்தம் சென்றது .

5.3.2 பௌத்த நெறிகள்

பற்றின் காரணமாகவே பிறப்பும் இறப்பும் உண்டாகின்றன .

பற்றைத் துறந்தால் பிறப்பு இறப்பு நீங்கி வீடுபேறு அடையலாம் என்று பௌத்தம் கூறுகின்றது .

வீடுபேறு அடைவதைப் பௌத்தம் , நிர்வாணம் எனக் குறிப்பிடுகிறது .

இந்த நிலையை அடைவதற்கு நான்கு உண்மைகளை அடையவேண்டும் என்று பௌத்தம் கூறுகிறது .

அவையாவன :

1. துக்கம்

2. துக்க உணர்வுக்குக் காரணம்

3. துக்கத்தை நீக்கும் வழி

4. துக்கத்தை நீக்குவதற்குரிய மருந்து

பௌத்தம் ஐந்து வகையான நெறிகளைக் கடைப்பிடிக்குமாறு வற்புறுத்தியது .

அவற்றைப் பஞ்சசீலம் என்று அவர்கள் கூறுவர் .

அவையாவன : 1. கொல்லாமை