5

நாலசைச் சீர்களுக்கு வாய்பாடு கூறும்போது இறுதியில் நேர் வந்தால் தண் பூ , நறும் பூ என்றும் இறுதியில் நிரைவந்தால் தண்ணிழல் , நறு நிழல் என்றும் வாய்பாடு கூறுவர் .

நேர் நேர் நேர் நேர் தேமாந் தண்பூ

நிரை நேர் நிரை நேர் புளிமா நறும்பூ

நேர் நிரை நேர் நிரை கூவிளந் தண்ணிழல்

நிரை நிரை நிரை நிரை கருவிள நறுநிழல்

சீர்களை எளிதில் நினைவில் வைத்திருக்க உதவியாக இருக்கும் என்பதால் வாய்பாடு கூறப்படுகிறது .

தளை

இரண்டு சீர்கள் இணையும் விதம் தளை என்று கூறப்படுகிறது .

தளை என்பதற்குக் கட்டு என்பது பொருள் .

சீர்கள் எவ்வாறு இணைந்து தளையாக வருகிறது என்பது கீழே காட்டப்படுகிறது .

கற் க கச டறக் கற் பவை கற் றபின்

நேர் நேர் நிரை நிரை நேர் நிரை நேர் நிரை

தேமா கருவிளம் கூவிளம் கூவிளம்

இந்த அடியில் நான்கு சீர்கள் உள்ளன .

நான்கு சீர்களுமேஈரசைச் சீர்கள் ஆகும் .

கற்க என்ற சீர் நேர் அசையில் முடிகிறது .

இதற்குப் பின் வரும் கசடறக் என்ற சீரில் முதல் அசை நிரை அசையாக உள்ளது .

நேர் அசைக்குப் பின் நிரை அசை வந்துள்ளது .

இதற்குப் பின் வரும் கற்பவை என்ற சீரில் முதல் அசை நேர் அசையாக உள்ளது .

கற்றபின் என்ற சீரிலும் முதல்அசை நேர் அசையாக உள்ளது .

இந்த அடியில் நேர் அசைக்குப்பின் நிரை அசையும் , நிரை அசைக்குப் பின் நேர் அசையும் வந்து தளை கொண்டுள்ளன .

முரண்பட்ட இந்தத்தளைக்கு இயற்சீர் வெண்டளை என்று பெயர் ஆகும் .

இந்தத்தளை வெண்பாவில் மிகுதியும் வரும் .

இதேபோல வெவ்வேறு அமைப்புகளில் ஏழுவகைத் தளைகள் உள்ளன .

அடி

செய்யுளின் அடுத்த உறுப்பு அடி என்பதாகும் .

அடிஎன்பது செய்யுளில் இடம்பெறும் ஒரு வரியைக் குறிக்கும் .

பல அடிகள் சேர்ந்து ஒரு செய்யுளாக வரும் .

அடிகளே செய்யுளை வகைப்படுத்துவதில் முக்கிய இடம் வகிக்கின்றன .

அடியில் வரும்சீரின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிகள் பல வகைப்படும் .

இரண்டு சீர் அடி - குறள் அடி

மூன்று சீர் அடி - சிந்து அடி

நான்கு சீர் அடி - அளவு அடி

ஐந்து சீர் அடி - நெடில் அடி

ஆறு சீர் அடி - கழிநெடில் அடி

ஆறு சீர்களுக்கு மேலும் ஓர் அடியில் வருவது உண்டு .

அவையும் கழிநெடில் அடி என்றே கூறப்படும் .

தொடை

தொடுக்கப்படுவது தொடை எனப்படும் .

இரண்டு அடிகள் தொடர்ந்து வரும்போது அவற்றில் முதல் எழுத்து இரண்டாம் எழுத்து முதலியவை ஒத்து வரும்படி இருப்பது தொடை என்று கூறப்படும் .

முதல் எழுத்து ஒத்து வருவது மோனை எனப்படும் .

இரண்டாம் எழுத்து ஒத்து வருவது எதுகை எனப்படும் .

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை ( திருக்குறள் -411 )

இந்தச் செய்யுளில் முதல் அடியிலும் இரண்டாம் அடியிலும் முதல் எழுத்து செ என்றே வந்துள்ளது .

இதுவே மோனைத் தொடை எனப்படும் .

கற்க கசடறக் கற்பவை

கற்றபின் நிற்க அதற்குத் தக ( திருக்குறள்-391 )

இந்தச் செய்யுளில் இரண்டு அடிகளிலும் இரண்டாம் எழுத்தாக ற் என்ற மெய் எழுத்து வந்துள்ளது . இதுவே எதுகை எனப்படும் .

இவைபோலவே வேறுபல தொடைகளும் உள்ளன .

பா

பா என்பது செய்யுளின் வகை ஆகும் .

பாக்கள் ஆசிரியப்பா , வெண்பா , கலிப்பா , வஞ்சிப்பா என நான்கு வகைப்படும் .

ஒவ்வொரு பாவிலும் வரும் சீர் , தளை , அடி ஆகியவை கூறப்பட்டுள்ளன .

நான்கு பாக்களுக்கும் தனித்தனி ஓசை உண்டு .

ஓசையை அடிப்படையாகக் கொண்டே பாக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன .

ஒவ்வொரு பாவிலும் பல வகைகள் உள்ளன .

எடுத்துக்காட்டாக , வெண்பாவின் வகைகள் பின்வருமாறு .

குறள் வெண்பா - இரண்டு அடிகள் கொண்டது .

சிந்தியல் வெண்பா - மூன்று அடிகள் கொண்டது .

இன்னிசை வெண்பா - நான்கு அடிகள் கொண்டது .

( தனிச்சொல் வராது )

நேரிசை வெண்பா - நான்கு அடிகள் கொண்டது .

( தனிச்சொல் வரும் )

பஃறொடை வெண்பா - ஐந்து அடிகளும் அதற்கு மேலும் வருவது .

ஒவ்வொரு பாவிற்கும் தனி ஓசை உண்டு .

வெண்பாவின் ஓசை செப்பல் ஓசை எப்படும் .

இவ்வாறே மற்ற பாக்களுக்கும் ஓசைகளும் வகைகளும் உள்ளன .

பாவினம்

பாவினம் என்பது பாக்களை ஒட்டி வருவதாகும் .

பாக்களின் ஓசையை ஒட்டி வருவதால் இவற்றைப் பாவினம் என்று கூறுகின்றனர் .

தாழிசை , துறை , விருத்தம் ஆகிய மூன்றும் பாவினம் என்று கூறப்படும் .

இந்தப் பாவினங்கள் நான்கு பாக்களுக்கும் உள்ளன .

ஆசிரியப் பாவிற்குரிய பாவினங்கள் பின்வருமாறு .

ஆசிரியத் துறை

ஆசிரியத் தாழிசை

ஆசிரிய விருத்தம்

இந்தப் பாவினங்களுக்குத் தனியே இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது .

இதைப் போலவே மற்ற பாக்களுக்கும் பாவினங்கள் உள்ளன .

2.2.1 பாட்டியல் இலக்கணம்

இலக்கியங்கள் பலவகைப்படும் .

அவை பிள்ளைத்தமிழ் , மாலை , அந்தாதி , உலா , தூது , பரணி , கலம்பகம் , குறவஞ்சி , பள்ளு முதலியனவாகும் .

இவை பிற்காலத்தில் தோன்றிய இலக்கிய வகைகள் ஆகும் .

இத்தகைய இலக்கியங்களின் இலக்கணத்தைக் கூறுவது பாட்டியல் இலக்கணம் எனப்படும் .

பாட்டியல் நூல்கள் இலக்கியங்களுக்கு இலக்கணம் கூறுவதுடன் பொருத்த இலக்கணமும் கூறுகின்றன .

செய்யுளில் அமைய வேண்டிய பொருத்தங்கள் பத்து என்று பாட்டியல்கள் கூறுகின்றன .

ஒருநூலின் தொடக்கம் நன்றாக இருந்தால்தான் நூல் நன்றாக அமையும் என்பது அக்கால நம்பிக்கை .

இந்த நம்பிக்கையை ஒட்டியே பொருத்தங்கள் அமைகின்றன .

பொருத்தங்கள்

1 மங்கலம் 2 எழுத்து 3 சொல் 4 தானம் 5 பால் 6 உண்டி 7 வருணம் 8 கதி 9 நாள் 10 கணம்

எடுத்துக்காட்டாக செய்யுளின் முதல் சொல் மங்கலமாக இருக்க வேண்டும் என்பது மங்கலப் பொருத்தம் ஆகும் .

பாட்டியல் நூல்கள் இதை வற்புறுத்திக் கூறுகின்றன .

மங்கலச் சொற்கள் இவை என்ற ஒரு பட்டியலும் பாட்டியல் நூல்களில் தரப்பட்டுள்ளன .

சீர் , உலகம் , மணி , பொன் , பூ , திங்கள் , கடல் , மலை முதலியன மங்கலச் சொற்கள் ஆகும் .

இவற்றை முதல் சொல்லாகக் கொண்டே நூல் இயற்ற வேண்டும் என்று பாட்டியல் நூல்கள் கூறுகின்றன .

அணி இலக்கணம்

அணி என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள் .

செய்யுள்களில் உள்ள அழகுகளைப் பற்றிக் கூறுவது அணி இலக்கணம் ஆகும் . அணிகளில் முக்கியமானது உவமை அணி ஆகும் .

மற்ற அணிகள் உவமையில் இருந்து கிளைத்தவையாகவே உள்ளன .

மலர் போன்ற முகம்

என்ற தொடரில் முகத்துக்கு மலர் உவமையாகக் கூறப்படுகிறது .

இதில்

முகம் - பொருள்

மலர் - உவமை

போன்ற - உவம உருபு

இவ்வாறு கூறும்போது புரிந்து கொள்வது எளிதாக இருக்கும் என்பதால் நூல் இயற்றும் ஆசிரியர்கள் உவமையைக் கையாள்கிறார்கள் .

பொருள் அணி , சொல் அணி என்று அணி இரண்டு வகைப்படும் .

உவமை அணி , உருவக அணி , வேற்றுமை அணி , நிரல்நிறை அணி , வேற்றுப் பொருள் வைப்பு அணி , பிறிது மொழிதல் அணி முதலியவை பொருள் அணி வகையைச் சார்ந்தவை ஆகும் .

மடக்கும் சித்திர கவிகளும் சொல் அணி வகையைச் சார்ந்தவை ஆகும் .

சித்திர கவி என்பது சில சித்திரங்களை வரைந்து அவற்றில் உள்ள கட்டங்களில் பொருந்தும்படி இயற்றப்படும் செய்யுள் ஆகும் .

எழுகூற்றிருக்கை , காதை கரப்பு , மாலைமாற்று , சுழிகுளம் , சக்கரம் , நாகபந்தம் முதலியன சித்திர கவியின் வகைகள் ஆகும் .

அணிகளில் முதன்மையானது உவமை அணி என்று முன்பு பார்த்தோம் .

உவமை அணி என்பது கவிஞர் , தாம் சிறப்பிக்க வந்த ஒரு பொருளை மக்களால் உயர்வாக மதிக்கப்படும் வேறு ஒன்றுடன் ஒப்பிடுவது ஆகும் .

பண்பு , தொழில் , பயன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஒப்புமை அமையும் .

உவமை அணியில் உவமை கூறப்படும் பொருள் , உவமை , உவம உருபு ஆகிய மூன்றும் இருக்கும் .

பொதுவாகப் பொருளை விட உவமை உயர்ந்ததாக இருக்கும் .

எ.டு .

மலை போன்ற தோள் - பண்பு

புலி போலப் பாய்ந்தான் - தொழில்

மழை போன்ற வள்ளன்மை - பயன்

உவமை அணியில் பல உவம உருபுகள் வரும் .

அவை பின்வருமாறு :

போல உறழ

மான எதிர

புரைய சிவண

கடுப்ப கேழ்

அன்ன ஏற்ப

ஒப்ப இயைய

மலைய நேர

நிகர்ப்ப என்ன

எடுத்துக்காட்டாக உவமை அணி உள்ள ஒரு செய்யுளை இப்பொழுது காணலாம் .

“ இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று ” ( திருக்குறள் 100 )

இனிய சொற்கள் இருக்கும் போது கடுமையான சொற்களைப் பேசுவது , இனிமையான பழங்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் காய்களை உண்பது போல் ஆகும் என்பது இதன் பொருள் .

இதில் இனிய சொற்களை விட்டுக் கடுமையான சொற்களைப் பேசுதல் என்பது பொருள் ஆகும் .

இதற்குப் பழங்கள் இருக்கக் காய்களை உண்பது உவமை ஆகும் .

இப்படி உவமை மூலமாகச் சொல்லுவதால் எளிமையாக இருக்கிறது ; தெளிவாகவும் புரிகிறது .

தொகுப்புரை

உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பாகத் தமிழ்மொழியில் பொருள் இலக்கணம் அமைந்துள்ளது .

பொருள் இலக்கணத்தை இரண்டாகப் பகுத்து அகப்பொருள் இலக்கணம் என்றும் புறப்பொருள் இலக்கணம் என்றும் தமிழில் இலக்கணம் வழங்கியுள்ளார்கள் .

அகத்திணைகள் ஐந்து .

புறத்திணைகள் பன்னிரண்டு .

யாப்பு இலக்கணத்தில் அசை வரையறை , சொல் வரையறை , அடி வரையறை முதலியவை விளக்கப்பட்டுள்ளன .

மேலும் அணி என்றால் என்ன என்றும் அவை செய்யுளில் இடம் பெறுவதால் ஏற்படும் சிறப்புப் பற்றியும் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. யாப்பு இலக்கணத்தின் உறுப்புகள் யாவை ?

விடை 2. சீர்கள் எத்தனை வகைப்படும் ?

விடை

3. தளை என்றால் என்ன ?

விடை

4. பாட்டியல் இலக்கணம் எதைப் பற்றிக் கூறுகிறது ?

விடை

5. அணி இலக்கணம் என்றால் என்ன ?

விடை

6. ஐந்து உவம உருபுகளைத் தருக .

எழுத்து இலக்கணத்தின் அமைப்பு

பாட முன்னுரை

மக்கள் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு உதவுவது மொழி .

மொழி சொற்களால் ஆனது .

சொற்கள் எழுத்துகளால் ஆனவை .

எழுத்து என்பது மொழியின் சிறிய அலகு ஆகும் .

ஆகவே , ஒரு மொழியின் இலக்கணத்தைக் கற்பதற்கு அடிப்படையாக அமைவது எழுத்து இலக்கணமே ஆகும் .

எழுத்துகளின் வரிவடிவம் .

ஒலிவடிவம் , எழுத்துகளின் வகைகள் , மாத்திரை , போலி முதலியவற்றைப் பற்றி இந்தப்பாடத்தில் காணலாம் .

ஒலிவடிவம் , வரிவடிவம்

எழுத்துகளுக்கு ஒலிவடிவம் , வரிவடிவம் என்று இருவகை வடிவங்கள் உண்டு .

எழுத்துகளை இந்த இரண்டு வடிவங்களிலும் காணலாம் .

இவற்றில் ஒலி வடிவம் முதன்மையானது .

எழுத்துகளை ஒலிப்பதே ஒலி வடிவம் எனப்படுகிறது , எழுத்துகளை எழுதிக்காட்டுவது வரி வடிவம் எனப்படும் ,

அ , இ , உ , க் , ச் , ப்

எழுத்து இலக்கணத்தில் வரி வடிவத்தைவிட , ஒலி வடிவம் முதன்மையானது , ஒலியை அடிப்படையாகக் கொண்டே , எழுத்துகளின் இலக்கணம் சொல்லப்படுகிறது ,

எழுத்தின் வகைகள்

எழுத்துகளை முதல் எழுத்து என்றும் சார்பு எழுத்து என்றும் இருவகையாகப் பிரிக்கலாம் .

மொழிக்கு முதற்காரணமாகவும் பிற எழுத்துகள் தோன்றவும் ஒலிக்கவும் காரணமாக இருக்கும் எழுத்துகள் முதல் எழுத்துகள் எனப்படும் .

முதல் எழுத்துகளைச் சார்ந்து வரக்கூடிய எழுத்துகளைச் சார்பு எழுத்துகள் என்கிறோம் .

இதைப் பின் வரும் விளக்கப்படம் எடுத்துக்காட்டுகிறது .

3.1.1 முதல் எழுத்துகள்

பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பதினெட்டு மெய் எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும் .

சொற்களை உருவாக்க இவையே அடிப்படையாக இருக்கின்றன .

எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்கிறோம் .

• உயிர் எழுத்துகளும் அமைப்பு முறையும்

தமிழில் , அடிப்படை ஒலிகளான அ முதல் ஒள வரை உள்ள ஒலிகளை - எழுத்துகளை உயிர் எழுத்துகள் என்கிறோம் .

இவை அமைந்துள்ள முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

இந்தப் பன்னிரண்டு எழுத்துகளும் இயல்பாகவும் எளிதாகவும் ஒலிக்கக் கூடியனவாக உள்ளன .

உயிர் எழுத்தை ஆவி எழுத்து என்றும் குறிப்பிடுவர் .

ஆவி என்றால் உயிர் என்று பொருள் .

• மெய் எழுத்துகளும் அமைப்பு முறையும்

உயிர் எழுத்துகளைப் போலவே மொழிக்கு அடிப்படையாக உள்ள மற்றொரு வகை எழுத்துகள் மெய் எழுத்துகள் ஆகும் .

க் , ங் , ச் முதலியன மெய் எழுத்துகள் ஆகும் .

மெய் எழுத்துகளும் அவை வரிசையில் அமைந்துள்ள முறையும் கீழே தரப்பட்டுள்ளன .

க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

இந்த எழுத்துகளை ஒலிப்பது சற்றுக் கடினம் .

உயிர் இல்லாமல் உடல் இயங்காது . அதுபோல இந்த எழுத்துகள் உயிர் எழுத்துகளுடன் சேர்ந்தே இயங்கும் , அதனால் இவற்றை மெய் எழுத்துகள் என்று கூறுவர் .