50

நாமா என்பது இறைவனின் பெருமையைப் பலபடப் பாடுவதாகும் .

6.2.4 பண்பாட்டு நெறிகள்

கொள்ளை , களவு , பாலியல் கேடு , கையூட்டு , பொய் , புறங்கூறுதல் , பொறாமை , செருக்கு , பிறர் உள்ளத்தைப் புண்படுத்துதல் , முறைகேடாகப் பொருள் ஈட்டுதல் , பிறர் பொருளைக் கவர்தல் , அளவுகளில் குறைத்து விற்றல் , பண்டங்களைப் பதுக்குதல் ஆகியவற்றைத் தீய ஒழுக்கங்களாக இசுலாம் கருதுகின்றது .

தமிழ் அற நூல்களும் இவற்றையெல்லாம் கடிந்து கூறி இருக்கின்றன .

பெற்றோரைப் பேணிக் காத்தல் , குடும்பப் பொறுப்பை மனைவியே ஏற்றல் , ஆணுக்குச் சமமாகப் பெண்ணைக் கருதுதல் போன்றவை நற்குணங்களாக இசுலாம் மதத்தில் எடுத்துரைக்கப்படுகின்றன .

இவை பழந்தமிழ் நெறிக்கும் ஒத்தனவாகும் .

இசுலாம் தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு தமிழ்நாட்டிற்குரிய சடங்குகள் , பழக்கவழக்கங்கள் பல இசுலாமிய சமயத்தாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டன .

திருமணத்தில் தாலி கட்டுதல் , குத்து விளக்கு ஏற்றுதல் , பாட்டன் பெயரைப் பேரனுக்கு இடுதல் , சகுனம் பார்த்தல் , நல்ல நேரம் பார்த்தல் , வாண வேடிக்கை ஆகியன இசுலாமியத் தமிழர்களின் வாழ்வியல் நிகழ்ச்சிகளிலும் இடம் பெற்றன .

நல்லவை யார் கூறினும் , நல்லவை எத்திக்கிலிருந்து வரினும் அவற்றின் மெய்யுணர்ந்து ஏற்கும் பரந்த நோக்கும் விரிந்த பார்வையும் தமிழ்ப் பண்பாட்டுக்கு உரியது .

இப்பண்பு இருந்திராவிட்டால் வேற்று நில , வேற்றுநாட்டுச் சமயங்கள் இம்மண்ணில் காலூன்றி இருக்க முடியாது .

இச்சமயங்கள் இம்மண்ணில் நிலை கொள்ளவிட்டது மட்டுமன்றி , தம் சமயக் கருத்துகளைப் பற்றியும் , தம் சமயப் பெரியோர்களைப் பற்றியும் இம்மண்ணின் மொழியிலேயே இலக்கியங்களைப் படைக்கும் அளவிற்கு , அவற்றிற்கு உரிமையும் வளமையும் சேர்த்துப் பேணியது தமிழ்ப் பண்பாடு .

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு குறள் ; 365 )

என்று வள்ளுவர் கூறிய அறிவு இலக்கணத்தைப் பின்பற்றி வாழ்ந்த தமிழர் மெய்ப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் , அதன் வெளிப்பாடு எத்தன்மைத்து ஆயினும் , ஏற்றுப் போற்றியவர் என்பது தெளிவு .

கிறித்துவம் E

வணிகத்திற்காகத் தமிழகம் வந்த ஐரோப்பியர்கள் இந்தியாவில் தங்கள் மதத்தைப் பரப்பினர் .

பாதிரிமார் பலர் ஐரோப்பியாவில் இருந்து தமிழகம் வந்தனர் .

மதத்தைப் பரப்புவதற்குத் தமிழறிவு தேவையாக இருந்தது .

பாதிரிமார்கள் தமிழைக் கற்றுப் பேசவும் , எழுதவும் , நூல்கள் இயற்றவும் தொடங்கினார்கள் .

தமிழகத்தில் நிலவிய சாதிக் கொடுமையும் , வருணாச்சிரமத்தின் கொடும்பிடியும் , கீழ்த்தட்டு மக்கள் கிறித்துவராகக் காரணமாயின .

கல்வி , மருத்துவம் ஆகிய இரண்டும் வேறுபாடின்றி எல்லாருக்கும் வழங்கப்பட்ட நிலையைக் கண்டு தமிழர் பலர் கிறித்துவ சமயத்தைச் சார்ந்தனர் .

கிறித்துவம் தமிழகம் புகுந்த பிறகு பல கிறித்துவ சமய நூல்கள் அச்சிடப்பட்டன .

படிப்பறிவு வளர்ந்தது .

உணவு உடை போன்றவற்றில் சில மாற்றங்களைக் கிறித்துவப் பாதிரிமார் செய்து கொண்டது போலவே கிறித்துவம் தழுவிய தமிழரும் தங்கள் உணவிலும் உடையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டனர் .

பல இடங்களில் கிறித்துவக் கோயில்கள் கட்டப்பட்டன .

பள்ளிகள் , கல்லூரிகள் பல இச்சமயத்தினரால் உருவாக்கப்பட்டன .

6.3.1 தமிழகத்தில் கிறித்துவம்

தமிழ்நாட்டில் நுழைந்த கிறித்துவம் தமிழில் பலப்பல புதுமைகளைக் கொணர்ந்தது .

தமிழ் நூல்களை அச்சிடுதல் , செய்தித்தாள் வெளியிடுதல் , ஒப்பிலக்கண ஆராய்ச்சி , அறிவியல் நூல்களைத் தமிழில் ஆக்குதல் , பயண நூல்கள் படைத்தல் போன்ற பல புதுமைகளுக்குக் கிறித்துவர்களே அடிப்படை வகுத்தனர் .

ராபர்ட் டி நொபிலி என்ற இத்தாலியப் பாதிரியார் தம்முடைய பெயரைத் தத்துவ போதக சுவாமி என்று மாற்றிக் கொண்டார் .

இவர் சந்தனம் அணிதல் , பூணூல் போட்டுக் கொள்ளுதல் , குடுமி வைத்துக் கொள்ளுதல் போன்ற இந்து ஐயர்களுக்கு உள்ள பழக்கங்களை எல்லாம் கடைப்பிடித்தார் .

இவர் எழுதிய நூல்களில் தமிழ் - போர்ச்சுகீச அகராதி என்ற நூல் ஒன்று ஆகும் .

வீரமாமுனிவர்

இத்தாலியில் பிறந்த மற்றொருவர் சி.ஜெ. பெஸ்கி என்பவர் .

இவர் தமிழகம் வந்து வீரமாமுனிவர் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார் .

இவரே தேம்பாவணி என்ற புகழ்மிக்க கிறித்துவத் தமிழ்க் காப்பியத்தைப் படைத்துத் தந்தவர் .

இவர்களைப் போன்ற பலரால் தமிழகத்தில் கிறித்துவம் தழைக்கத் தொடங்கியது .

இரண்டு நூற்றாண்டுக் காலத்தில் பல கிறித்துவத் திருத்தலங்கள் தமிழ்நாட்டில் நிலை பெற்றன .

இதோ நாகைக் கடற்கரையில் அமைந்துள்ள வேளாங்கண்ணித் திருக்கோயிலைக் காணுங்கள் !

வேளாங்கண்ணி

திருக்கோயில்

பல சமயத்தவரும் வந்து வழிபடும் இதன் திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும் .

இதே போல் பூண்டி மாதா கோயில் விழாக் கோலம் கொண்டு விளங்கும் காட்சியும் பலரைக் கவர்வது ஆகும் .

தமிழகத்தில் வேளாங்கண்ணி , பூண்டி , தரங்கம்பாடி ஆகிய வழிபாட்டிடங்கள் இன்று கிறித்துவ சமயப் பண்பாட்டின் சின்னங்களாகத் திகழ்கின்றன .

6.3.2 கிறித்துவத் தமிழர்

தமிழ்நாட்டுக் கிறித்துவர்களில் அந்தோணிக் குட்டி அண்ணாவியார் , அரிகிருஷ்ண பிள்ளை , கனகசபைப்புலவர் , குமாரகுலசிங்க முதலியார் , சாமிநாத பிள்ளை , மாயூரம் வேதநாயகம் பிள்ளை , தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர் .

இவர்களில் வேதநாயகம் பிள்ளை தமிழில் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியவர் .

தமிழ் உரைநடையின் வளர்ச்சிக்கு இவர் செய்த தொண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது .

இவர் எழுதிய சர்வ சமய சமரசக் கீர்த்தனை சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகும் . ஜான் பனியன் எழுதிய Pilgrims Progress என்னும் நூலைத் தழுவி , கிருஷ்ண பிள்ளை இரட்சணிய யாத்திரிகம் என்ற சிறந்த காப்பியத்தைப் படைத்தார் .

குறிப்பிடத்தக்க மற்றொருவர் வேதநாயக சாஸ்திரி ஆவார் .

இவர் பாடிய நூல்களில் பெத்தலேகம் குறவஞ்சி மிகச் சிறந்த குறவஞ்சி நூலாகும் .

தமிழ்நாட்டுக் கிறித்துவர்கள் பல வகையிலும் தமிழ் வளர்த்த பெருமைக்குரியவர்கள் ஆவர் .

நாவல் , சிறுகதை , நாடகம் என்ற மூன்று துறைகளிலும் இவர்களின் பணிகள் தொடர்கின்றன .

6.3.3 மிகச் சிறந்த பணிகள்

தமிழில் எ , ஏ என்ற இரு எழுத்துகளுக்கும் ஒ , ஓ என்ற இரு எழுத்துகளுக்கும் வரிவடிவில் பெரிய வேறுபாடு இல்லாமல் இருந்தது .

பல நேரங்களில் அவற்றைப் படிப்பதில் குழப்பம் ஏற்பட்டது .

இதனை நீக்க வீரமாமுனிவரே முதலில் வழிவகுத்தார் .

ஏ , ஓ என்ற புதிய எழுத்து வடிவங்களை இவர் உருவாக்கினார் .

போப் ஐயர்

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த போப் ஐயர் திருக்குறளையும் , திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலக மக்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்தினார் .

அயர்லாந்தில் இருந்து வந்த கால்டுவெல் தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் முதலிய திராவிட மொழிகளை ஆராய்ந்து அவற்றை ஓர் இன மொழிகள் என உலகத்திற்கு முதலில் அறிவித்தார் .

ஐரோப்பிய அறிஞர்களாலேயே தமிழ் அகராதிகள் முதலில் உருவாகத் தொடங்கின .

நாட்டுப் பாடல்களையும் பழமொழிகளையும் தொகுத்த பணியும் ஐரோப்பியர் ஆற்றியதே ஆகும் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. தமிழகம் வந்த புதிய இரு மார்க்கங்கள் எவை ?

விடை

2. இசுலாம் என்பதன் பொருள் யாது ?

விடை

3. தமிழகத்தில் இசுலாம் எப்போது நுழைந்தது ?

விடை

4. இசுலாமியக் காப்பியங்களில் குறிப்பிடத்தக்கது எது ?

விடை

5. இசுலாமியச் சிற்றிலக்கியக்களில் புதிய வகைச் சிற்றிலக்கியங்கள் யாவை ?

இசுலாம் மதத்தின் தாக்கம் E

முன்பே பல மதங்கள் நிலவிய தமிழகத்தில் இசுலாம் என்ற சமயமும் புகுந்தது .

ஒவ்வொரு மதமும் பல புதிய கூறுகளைத் தமிழகத்தின் பழைய பண்பாட்டில் கலக்கச் செய்தது ; பல புதிய கூறுகளைத் தமிழர் பண்பாட்டிலிருந்து இம்மதங்களும் பெற்றன .

இப்படிக் கொள்ளவும் கொடுக்கவும் ஆக அமைந்த ஒரு பண்பாடாக அமைந்தது தமிழர் பண்பாடு .

இந்து அரசர்கள் இசுலாமிய சமயத்தைப் புறக்கணிக்கவில்லை .

திப்புசுல்தான் இந்துக் கோயில்களுக்கு வழங்கிய மானியங்களைக் காந்தியடிகள் பாராட்டி உள்ளார் .

அதே போலத் தமிழக அரசர்களும் இசுலாமியப் பள்ளி வாசல்களைப் பாதுகாத்துள்ளனர் .

பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து இசுலாம் மதத்தின் ஈர்ப்பு தமிழகத்தில் ஏற்பட்டது .

கடிகை முத்துப்புலவர் என்பவரிடம் கல்வி பயின்று உமறுப் புலவர் சீறாப்புராணம் பாடினார் .

பழந்தமிழ்க் காப்பிய நிலையிலேயே சீறாப்புராணத்தின் நாடு , நகர்ப் படலங்கள் இயற்றப் பெற்றுள்ளன .

படிக்காசுத் தம்பிரான் , நமச்சிவாயப் புலவர் போன்றோர் கீழக்கரையில் வாழ்ந்த மெய்ஞ்ஞானி சதக்கத்துல்லா அப்பாவிடம் நெருக்கமான அன்பு கொண்டிருந்தனர் .

இவ்வாறு தமிழக வரலாற்றில் இசுலாம் ஒரு நீக்க முடியாத இடத்தைப் பெற்றிருந்தது .

6.4.1 வியக்கத்தக்க ஒற்றுமைகள்

இசுலாம் மதத்தின் நுழைவால் தமிழகப் பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன .

கடுமையான சாதிப்பிரிவுகளின் கட்டு , வருணாச்சிரமத்தில் ஏற்பட்ட இறுக்கம் ஆகியவை இசுலாம் மதத்தின் நுழைவால் தமிழகத்தில் தளர்ந்தன .

இசுலாமிய ஞானிகளாகிய சூஃபிகளுக்கும் தமிழ்ச் சித்தர்களுக்கும் இடையே ஒரு நெருக்கமான ஒற்றுமை காணப்படுகிறது .

ஞான நூல்கள் என்ற வகையில் தாயுமானவர் , பட்டினத்தார் , சிவவாக்கியர் ஆகியோருடைய பாடல்களுக்கும் , பீரப்பா , பீர் முகம்மது வலியுல்லா , சின்ன ஆலிம் அப்பா ஆகியோருடைய பாடல்களுக்கும் நிரம்ப வேறுபாடு இல்லை .

இராமலிங்கர் போதித்த சமரச ஞான நெறி அவர்களுடைய பாடல்களில் எதிரொலிக்கக் காணலாம் .

" மஸ்தான் சாகிபின் பாடல்களில் காணப்படும் இந்து சமயக் கோட்பாடுகள் , கொள்கைகள் , தத்துவங்கள் இவற்றைக் கொண்டு பார்த்தால் மஸ்தான் சாகிபு இசுலாமிய வழி செல்லும் ஒரு சூஃபியா ?

அல்லது இந்து யோக நெறி செல்லும் ஒரு சித்தரா ?

அதுவுமின்றேல் சமய சமரசத்தை விரும்பும் சன்மார்க்க வாதியா ?

என அறிய வேண்டியுள்ளது "

என அறிஞர் அ.ச. அப்துல் சமது குறிப்பிடுவது நோக்கத்தக்கதாகும் .

" அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய்

ஆனந்த பூர்த்தியாய் " எனத் தாயுமானவர் பாடுகிறார் .

இதனையும் ,

" அங்கு இங்கு என ஒண்ணா அகண்ட பரிபூரணமாய்

எங்கும் நிறைந்த இறையே "

என்று மஸ்தான் சாகிபு பாடுவதையும் நாம் கருத்தில் கொண்டால் இரு சமய ஞானிகளின் அணுகுமுறையிலும் உள்ள ஒற்றுமை புலனாகும் .

6.4.2 நல்லிணக்கம்

செய்குத் தம்பிப் பாவலர்

இசுலாமும் சைவ வைதிக சமயங்களும் நல்லிணக்கம் பூண்டு தமிழ்ப் பண்பாட்டை வளமைப்படுத்தியுள்ளன .

கோட்டாற்றுச் செய்குத் தம்பிப் பாவலர் இராமாயண மகாபாரதங்களை நுணுகிக் கற்றவராக விளங்கியிருக்கிறார் .

வெள்ளிக்கிழமையில் இசுலாமியர் ஒரு சிறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம் .

அப்போது குத்பா என்ற சிறப்புச் சொற்பொழிவு நடத்தப்படும் .

அதனைத் தமிழில் நடத்தலாமா எனக் கேட்டபோது கல்வத்துநாயகம் அவர்கள் ஏழாவது வானத்திலும் தமிழ் மொழியிலேயேதான் பேசுகிறார்கள் என்று கூறினார்கள் .

திருமால் துருக்க நாச்சியாரை மணந்து கொண்டார் என்ற கதையும் , இந்துக்கள் பலர் நாகூர் தர்க்காவில் நேர்த்திக் கடன் நேர்ந்து கொள்வதும் , பள்ளி வாசல்கள் கட்டுவதற்கு இந்துக்கள் நிலம் உதவியதும் , தமிழகச் சிற்றூர்களில் மாமன் மைத்துனன் உறவோடு இந்துக்களும் இசுலாமியரும் பழகிக் கொள்வதும் , இரு சமயங்களுக்கு இடையே இருந்த நல்லிணக்கத்தைக் காட்டும் எடுத்துக்காட்டுகளாகும் .

6.4.3 இசுலாமும் இன்பத் தமிழும்

பழந்தமிழ் மரபுகளை இசுலாம் புறக்கணிக்காமல் பேணியது .

காப்பியங்கள் கலம்பகம் , அந்தாதி , உலா , பிள்ளைத்தமிழ் , திருப்புகழ் , மாலை போன்ற நூல்களை எல்லாம் மரபு பிறழாமல் பாடிய பெருமை இசுலாமியரையே சாரும் .

காசிப்புலவர் , திருப்புகழ் ஒன்று பாடியுள்ளார் .

" சித்தர் தடர் துட்டக் குபிரரை

வெட்டிச்சிறை யிட்டுப் புவிமகள்

தக்கத்து நெளிக்கர் தகுதகு - திகுதாதோ

தித்தித்திமி தித்தித் திமிதிமி

தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு வெனவாடி

திக்குத்திகு திக்குத் திகுதிகு "

என்று போர்க்கள வருணனையை அருணகிரிநாதரைப் போலவே பாடக் காணலாம் .

" அரசியல் இயற்கை நீத்தான் ; அன்னையைப் பிதாவை நீத்தான் ;

சரதநண் பினரை நீத்தான் ; தன்குலத் தினரை நீத்தான் ;

பரிசனம் எவையும் நீத்தான் ; பரிகரி சிவிகை நீத்தான் ;

விரைசெறி குழலி னாள்தன் வேட்கையை நீத்தி லானே ; "

என்று ராஜநாயகக் காப்பியத்தில் வரும் பாடல் , கம்பராமாயணத்தில் சீதையிடத்து மட்டும் ஆசையை விட்டுவிடாமல் துன்புற்ற இராவணனைக் குறித்துக் கம்பர் பாடும் பாடலோடு அப்படியே ஒத்துச் செல்வதைப் பார்க்கலாம் .

பல புதிய வருணனைகள் , உவமைகள் , அணிநலன்கள் ஆகியன தமிழில் தோன்றுவதற்கு இசுலாம் வழிவகுத்தது .

கிறித்துவத் தாக்கம் E

கிறித்துவம் தமிழுக்குச் சேர்த்த வளம் பற்றிப் பார்க்கலாம் .

6.5.1 புதுமைகள்

தமிழகத்தில் கிறித்துவம் பல புதுமைகளைக் கொண்டு வந்தது .

அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன .

பாதிரியார் குடுமி வைத்துக் கொண்டு மத போதனை செய்ய , தமிழ் மக்கள் குடுமி நீக்கிக் ' கிராப் ' வெட்டிக் கொண்டனர் .

ஐரோப்பிய உடை பலரை அணி செய்தது .

நகரப் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொண்டு உதட்டுச் சாயம் பூசிக் கொண்டனர் .

மதுப்பழக்கம் பலரைத் தொற்றிக் கொண்டது .

சிகரட் புகைக்கும் பழக்கம் பரவியது .

கிளாரினெட் , பாண்டு வாத்தியம் ஆகியவை பல இடங்களில் ஒலித்தன .

மேல்நாட்டுக் காய்கறிகள் நம் உணவுப் பட்டியலில் சேர்ந்தன .

ஆங்கில ஆண்டு எல்லோருக்கும் பழக்கமாகிவிட்டது .

ஆங்கில மொழியமைப்பில் தமிழில் உரைநடை எழுதுவோர் பெருகினர் .

ஆங்கிலத் திறனாய்வு நெறி தமிழ்நூல்களில் புகுந்து அலசியது .

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற நிலை பரவலாகியது .

ஆங்கிலம் கலந்து பேசுதல் இயல்பாகியது .

இயேசுநாதரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் பலர்க்கு அறிமுகமாயின .

ஆண் பெண் சமம் என்ற கருத்துநிலை பரவலாகியது .

6.5.2 நல்லிணக்கம் இந்துக்களும் கிறித்துவர்களும் நல்லிணக்கமாய்த் தமிழ்நாட்டில் வாழ்ந்தனர் .

கிறித்துவப் பாதிரியார் தங்களை ' ஐயர் ' என்று கூறிக் கொண்டனர் .

எளிய மக்கள் பலர்க்கு அலுவலக வேலை கிடைத்தது .

' மாதா ' வின் வழிபாடு பொதுவானதாகக் கருதப்பட்டது .

வேளாங்கண்ணி மாதாவுக்கு வேண்டுதல்கள் இந்துக்களாலும் செய்யப்பட்டன .

கிறித்துவக் கல்வி நிலையங்களில் இந்துக்கள் பாகுபாடின்றிச் சேர்ந்து படித்தனர் .

கிறித்துவத் தொண்டு நிறுவனங்கள் தமிழகத்தில் துன்பப்பட்ட பலரை அரவணைத்தன .

மிஷின் ஆஸ்பத்திரிகள் செய்த தொண்டு பலரை அடைந்தது .

அந்தோணி , மேரியம்மா , சூசை , பாத்திமா போன்ற பெயர்கள் வேறுபாடின்றிப் பலர்க்குத் தெரிந்தவை ஆகின .

துரை என்ற பெயர் பெருவழக்குப் பெற்றது .

கிறித்துவப் பாதிரியாரும் , தமிழ்த் துறவியரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தைப் போதித்தனர் .

6.5.3 கிறித்துவர் வளர்த்த தமிழ்

தமிழ் வளர்ச்சியில் கிறித்துவர் பங்கு அளவற்றது .

உரைநடை வளர்ச்சியில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டது கிறித்துவர்களாலேயே ஆகும் .

பைபிள் , தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது .

திருக்குறள் , புறநானூறு , நாலடியார் ஆகிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலக அரங்கில் அறிமுகமாயின .

திராவிட மொழிகளைக் குறித்துச் சிந்தனைகள் தொடங்கின .

அறிவியல் ஆராய்ச்சி முறை தமிழில் கால் கொண்டது .

அகராதிகளைக் கொண்டு மொழியை அணுகும் முறை தமிழ்நாட்டில் பரவியது .

ஒப்பிலக்கிய முயற்சிகள் உருவாயின .

தேம்பாவணி போன்ற காப்பியங்களும் , திருக்காவலூர்க் கலம்பகம் , சுகுணசுந்தரி கதை போன்ற கதைகளும் , கீர்த்தனை நூல்களும் , பெத்லேகம் குறவஞ்சி போன்ற நூல்களும் , இரட்சணிய யாத்ரிகம் போன்ற செய்யுள் படைப்புகளும் தமிழுக்குப் பெருமை சேர்த்தன .

மேலை இலக்கியப் பாங்கு தமிழில் குடியேறியது .

தமிழ் , பல துறைகளில் வளர்வதற்குக் கிறித்துவர் அடித்தளம் அமைத்தனர் .

தொகுப்புரை

இசுலாம் , கிறித்துவம் என்ற இரு புது நெறிகள் தமிழகத்தில் தோன்றித் தமிழர்களைக் கவர்ந்தன .

இசுலாமியரும் கிறித்துவரும் எங்கிருந்தோ மொத்தமாக யவனரைப் போலவும் மங்கோலியரைப் போலவும் குடியேறியவர்கள் இல்லை .

இங்கு வாழ்ந்த தமிழரே அச்சமயங்களைத் தழுவினர் .

எனவே பண்பாட்டு நெறிகளில் அடிப்படை மாற்றங்கள் நிகழவில்லை .

இச்சமயம் சார்ந்தவர்களால் தமிழ் நல்ல வளர்ச்சியடைந்தது .

புதிய புதிய இலக்கிய வடிவங்களும் , கற்பனைகளும் வளர்ந்திருக்கின்றன என்று கூறலாம் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. இசுலாத்திற்கும் ஏனைத் தமிழகச் சமயங்களுக்கும் இடையே அமைந்த ஒற்றுமைகளை எழுதுக .

விடை

2. இசுலாம் இந்து சமயமும் நல்லிணக்கமாய் வாழ்ந்த நிலையைக் காட்டுக .

விடை

3. தமிழை இசுலாமியர் வளர்த்த பாங்கை எடுத்துரைக்க .

விடை

4. கிறித்துவர்களின் பண்பாடு தமிழரிடையே உண்டாக்கிய புதுமைகளை எழுதுக .

விடை

5. சமய நல்லிணக்கத்தைக் கிறித்துவர்களும் மற்றவர்களும் வளர்த்த நெறியைப் புலப்படுத்துக .

பண்பாட்டு வரலாறு ’ என்ற தாளின் இரண்டாம் தொகுப்பு ஆறு பாடங்களைப் பெற்றுள்ளது .

அந்த ஆறு பாடங்கள் வருமாறு :

1. காப்பியங்கள் காட்டும் பண்பாடு

2. கலைகள் வளர்த்த பண்பாடு

3. அறநூல்கள் வளர்த்த பண்பாடு

4. சைவ வைணவச் சமயங்கள் வளர்த்த பண்பாடு

5. சமண பௌத்த சமயங்கள் வளர்த்த பண்பாடு

6. இசுலாம் கிறித்துவம் வளர்த்த பண்பாடு

என்பன .

தமிழர் வரலாற்றில் சங்க காலத்தை அடுத்து ஒரு காப்பியக்காலம் தோன்றியது . அக்காப்பியங்கள் தமிழர் வாழ்வியல் கூறின ; சமயநெறி காட்டின ; கலைக் கோட்பாடுகள் இயம்பின .