51

சிலப்பதிகாரம் , மணிமேகலை என்ற இரு காப்பியங்களுக்குப்பின் மூன்று பெருங்காப்பியங்கள் தோன்றின .

வாழ்வில் சமயம் புகுந்து தனியிடம் பெற்ற பாங்கைக் காப்பியங்கள் காட்டுகின்றன .

முதல்பாடம் ‘ காப்பியங்கள் காட்டும் தமிழர் பண்பாட்டை ’ விளக்குகின்றது .

கலைகள் பண்பாட்டைத் தெரிவிக்கும் கருவிகள் அல்லவா ?

பண்பாட்டின் முதிர்ச்சியில் கலைகள் விளைகின்றன .

தமிழர் பண்பாட்டில் இசை , ஆடல் , ஓவியம் , சிற்பம் , கட்டடம் முதலான பல்வேறு கலைகள் காலந்தோறும் வளர்ந்து பெருகிய வரலாற்றைத் தமிழ் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன .

இசையால் யானையை மெய்ம்மறக்கச் செய்தமையும் , நூற்றுமூன்று பண்பெருக்கி மெய்ப்பாடுகள் புலப்பட இசை தழுவி ஆடிய ஆடல் முறைமை பேணியதும் , கண்டாரைப் புறம் போக்காது நிறுத்திய கண்ணுள் வினைஞர் சமைத்த ஓவியங்களின் வழியே கலைத்திறம் வளர்த்ததும் , உயிர்கொண்டு எழுந்தனவோ என ஐயுறும் வகையில் அமைந்த சிற்பக் கலைமாட்சி காத்ததுவும் , குன்றைக் குடைந்து சமைத்தது போன்று வானளாவக் கட்டடங்கள் புனைகலை மரபைப் போற்றியதும் குறித்த செய்திகளையெல்லாம் ‘ கலைகள் வளர்த்த பண்பாடு ’ என்னும் இரண்டாம் பாடம் கட்டுரைக்கின்றது .

தமிழர் அறம் தழுவிய வாழ்க்கை நெறியினர் .

போர்த்தொழிலிலும் அறம் பிழையாத மாட்சிமை மிக்கவர் .

அறநெறி போற்றி வாழும் பண்பாடு மிகச் சிறந்த மனப்பக்குவம் காட்டுவதன்றோ ?

நம் அறநூல்களில் தலையாய திருக்குறள் இன்று உலகக் காற்றில் கரைந்து உலாவுகிறது .

ஓ !

வள்ளுவரைத் தந்த தமிழகம் என்ற வியப்புக்குரல் நம் இமயச் சுவர்களில் எதிரொலிக்கின்றது .

மூன்றாவது பாடமாகிய ‘ அறநூல்கள் வளர்த்த பண்பாடு ’ தமிழ் மக்களின் அறநெறி வழுவாத வாழ்க்கைப் பண்பை எடுத்துரைக்கின்றது .

இந்தியா முழுதும் பரவியிருந்த பக்தி இயக்கத்திற்குத் தமிழகமே முன்னோடியாக இருந்தது என்பர் அறிஞர் .

நாயன்மார்களும் ஆழ்வார்களும் தமிழகத்தில் ஊர்தோறும் நடந்து சென்று பக்திப் பெயர் வளர்த்த அருளாளர்கள் கல்லையும் கனிவிக்கும் இசைவெள்ளத்தில் திருமுறைகளும் பிரபந்தமும் மக்கள் வாழ்வில் பலமாற்றங்களை விளைவித்தன .

சாதி கருதாத சமரசம் வளர்ந்தது .

செல்வர் ஏழை என்ற பாகுபாடு நீங்கியது .

இத்தகைய பண்பாட்டை உருவாக்கிய நிலையை நான்காம் பாடமாகிய ‘ சைவ வைணவச் சமயங்கள் வளர்த்த பண்பாடு ’ என்பது காட்டுகின்றது .

இந்தியாவின் வடபகுதியில் தோன்றிய சமண பௌத்த சமயங்கள் தமிழகம் புகுந்தன .

தமிழர் இச்சமயங்களை ஏற்றனர் .

இச்சமயக் கோட்பாடுகளைக் கூறும் இலக்கியங்கள் தமிழில் எழுந்தன .

தமிழர் பண்பாட்டில் சமண பௌத்த நெறிகள் தடம் பதித்தன .

தமிழகம் முழுதும் கொண்டாடப்பெறும் தீபாவளிப் பண்டிகை சமணர் தந்ததுதானே !

சமண பௌத்தங்கள் உண்டாக்கிய பண்பாட்டு மாற்றங்களைச் ‘ சமண பௌத்த சமயங்கள் வளர்த்த பண்பாடு ’ என்ற ஐந்தாம் பாடம் எடுத்துரைக்கும் .

இந்தியாவிற்கு வெளியே இருந்து வந்த சமயங்கள் இசுலாமும் கிறித்துவமும் ஆகும் .

இவ்விரு சமயங்களையும் தமிழர் தழுவினர் .

மொழியாலும் இனத்தாலும் தமிழராகவே இருந்த நிலையில் மாற்றமில்லை ; வழிபாட்டு நெறிகள் , வாழ்க்கைச் சடங்குகளிலேயே மாற்றங்கள் விளைந்தன .

இசுலாமும் கிறித்துவமும் தமிழ் இலக்கியங்கள் வளர உதவின .

இவ்விரு சமயங்களால் தோன்றிய பண்பாட்டுப் புதுவரவுகளைத் தமிழகம் பற்றுவைத்துக் கொண்டது .

சமயநல்லிணக்கம் மலர்ந்து மணம் பரப்பும் நிலமாகத் தமிழகம் விளங்குகிறது .

ஆறாம் பாடமாகிய ‘ இசுலாம் கிறித்துவம் வளர்த்த பண்பாடு ’ மேற்குறித்த செய்திகளை விளக்கும் .

வாருங்கள் நண்பர்களே !

தமிழர் பண்பாட்டுப் பூங்காவில் ஆயிரம் ஆயிரமாய்ப் பூத்து மணம்பரப்பும் பண்பு மலர்களில் உங்கள் சிந்தை கவர்ந்த மலர் எதுவென்று சொல்ல மாட்டீர்களா ?

நாயக்கர் காலப் பண்பாடு

பாட முன்னுரை

தமிழக வரலாற்றில் நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குச் சிறப்பான இடம் உண்டு .

மதுரை , தஞ்சை , செஞ்சி ஆகிய இடங்களில் நாயக்கர்களின் ஆட்சி அமைந்தது .

சமயப்பற்றும் , கலையார்வமும் கொண்ட நாயக்க மன்னர்கள் கோயில் கட்டுவதிலும் , அரச மாளிகைகள் அமைப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தனர் .

சமயப் பிணக்குகளையும் , சாதிப் பிரிவினைகளையும் கட்டுக்குள் வைத்திருந்தனர் .

தெலுங்கு மொழி அரசவையிலும் இசையிலும் சிறப்பிடம் பெற்றிருந்த போதும் , இவர்கள் காலத்தில் தமிழில் சிற்றிலக்கியங்கள் பெருகின .

இனி இவர்கள் காலத்திய ஆட்சி முறை , கலை வளர்ச்சி , சமய நல்லிணக்கம் ஆகியவற்றை இப்பாடத்தில் காண்க .

நாயக்கர் வரலாறு

மதுரையில் பாண்டியப் பேரரசு மறைந்தபின் , மதுரை டில்லி சுல்தானின் ஆட்சிக்கு உட்பட்டது .

டில்லி சுல்தானின் பிரதிநிதியாய் மதுரையில் இருந்து அரசாண்ட சுல்தான் , டில்லியின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி , முழுஉரிமை பெற்ற மன்னர் ஆனார் .

மதுரையில் முஸ்லீம் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது .

விஜயநகரத்தில் நாயக்கராட்சி ஏற்பட்ட பின் இரண்டாம் கம்பணர் என்ற நாயக்க அரசர் , மதுரையின் மீது படையெடுத்துக் கைப்பற்றிச் சுல்தான் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார் .

கம்பணருக்குப் பின் இரண்டாம் ஹரிஹரர் காலத்தில் ( 1377-1404 ) மதுரையில் முஸ்லீம் ஆட்சி அறவே அகன்று நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது .

நாயக்கர் என்ற சொல் தலைவன் , படைத்தலைவன் என்ற பொருளுடையது . விஜயநகரத்தின் அரசப்பிரதிநிதியைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டது .

பின்னாளில் இஃது ஒரு சாதிப் பெயராக மாறிவிட்டது .

நாயக்கர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் .

தமிழகத்தில் நாயக்கர் அரசு

விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தில் , தஞ்சை , செஞ்சி , மதுரை ஆகிய தமிழ்நாட்டு நகரங்களில் , நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது .

தஞ்சையில் கி.பி. 1532-இல் நாயக்கர் ஆட்சி தொடங்கியது ; செஞ்சியில் கி.பி. 1526-இல் தொடங்கியது ; மதுரையில் கி.பி. 1529-இல் தொடங்கியது .

தொடக்க காலத்தில் இப்பகுதிகள் விஜயநகரப் பேரரசுக்கு அடங்கியிருந்து , பின்னர் முழு உரிமை பெற்ற அரசுகளாக மாறின .

மதுரை நாயக்கர்களே நீண்ட காலம் அரசு செய்தவர்கள் .

1529-ஆம் ஆண்டு தொடங்கி கி.பி. 1736-ஆம் ஆண்டு வரை இவர்கள் ஆட்சி நிலவியது .

1.2.1 மதுரை நாயக்கர்கள்

கம்பணர் காலத்தில் மதுரையில் நாயக்கர் ஆட்சி தொடங்கியது .

எனினும் விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தில்தான் மதுரையில் நாயக்கர் ஆட்சி வலிவுபெற்றது .

விசுவநாத நாயக்கர் கி.பி. 1529இல் மதுரை ஆட்சியை ஏற்றார் .

அது முதற்கொண்டு நாயக்கராட்சி மதுரையில் வளம் பெற்றது .

இவரே பாளையப்பட்டு ஆட்சிமுறையை வலிவு கொண்டதாக மாற்றி அமைத்தார் .

72 பாளையப்பட்டுகளின் பொறுப்பில் நாட்டின் பகுதிகள் ஆட்சி செய்ய அனுமதிக்கப் பெற்றன .

பாளையக்காரர்கள் தாங்கள் ஆளும் பகுதிகளில் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியைத் தங்கள் செலவுகளுக்கும் , இன்னொரு பகுதியைப் படைவீரர்களுக்கும் , மற்றொரு பகுதியை மதுரை நாயக்கர்க்கும் என ஒதுக்க வேண்டி இருந்தது .

மதுரை அரசு வேண்டும் போது படையுதவி செய்ய வேண்டி இருந்தது .

இதுவே பாளையப்பட்டு ஆட்சி முறையாகும் .

விசுவநாதருக்குப் பின் நாயக்க மன்னர் பலர் மதுரையை ஆண்டனர் .

அவர்களில் புகழ்மிக்கவர்கள் திருமலை நாயக்கர் , சொக்கநாத நாயக்கர் , இராணி மங்கம்மாள் என்ற மூவராவர் .

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் வம்சவழி

ஆட்சிக் காலம் ஆண்ட நாயக்க மன்னர்கள்

1529 - 1564 விசுவநாத நாயக்கர்

1564 - 1572 கிருஷ்ணப்ப நாயக்கர் I

1572 - 1595 வீரப்ப நாயக்கர்

1595 - 1601 கிருஷ்ணப்ப நாயக்கர் II

1601 - 1609 முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் ( கிருஷ்ணப்ப நாயக்கரின் ( II ) உடன் பிறந்த சகோதரர் விசுவப்ப நாயக்கரின் மகன் )

1609 - 1623 முத்து வீரப்பர் I ( முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் மூத்த மகன் )

1623 - 1659 திருமலை நாயக்கர் ( முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் இளைய மகன் )

1659 முத்து வீரப்ப நாயக்கர் II

1659 - 1682 சொக்கநாத நாயக்கர் ( இராணி மங்கம்மாள் கணவர் )

1682 - 1689 முத்து வீரப்பர் III

1689 - 1706 இராணி மங்கம்மாள் ( சொக்கநாதரின் மனைவி )

1706 - 1732 விஜயரங்க சொக்கநாதர் ( சொக்கநாதரின் மகன் )

1732 - 1736 மீனாட்சி ( விஜயரங்கநாதரின் மனைவி )

1.2.2 திருமலை நாயக்கர்

திருமலை நாயக்கர்

இதோ முறுக்கிய மீசையும் உருட்டி வழிக்கும் விழிகளும் கொண்ட திருமலை நாயக்கர் சிலையைக் காணுங்கள் !

இது மதுரைக் கோயிலில் உள்ளது .

இவர் 1623 முதல் கி.பி. 1659 வரை மதுரை நாட்டை ஆட்சி செய்த புகழ் மிக்க பெருமன்னர் .

தன் ஒப்பற்ற கலை ஆர்வத்தால் மதுரை நகரைக் கலையழகு கொஞ்சும் ஏதன்ஸ் நகரம் ஆக்கினார் .

திருமலை மன்னர் தம் முன்னோர்கள் வழியில் திருச்சியைத் தலைநகராகக் கொண்டிருந்தார் .

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையைத் தலைநகராக மாற்றினார் .

மைசூர் , திருவனந்தபுரம் ஆகிய அரசுகளை இவர் வென்றார் .

விஜயநகரத்தோடு போரிட்டு வென்று முழுஉரிமை படைத்த மன்னரானார் .

இவர் 75 ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தார் .

இவர் காலத்தில் மறவர் சீமை எனப்பட்ட இராமநாதபுரம் , சிவகங்கை , திருவாடானைப் பகுதிகளில் அமைதி நிலவியது .

சேதுபதி அரசரான இரகுநாததேவர் திருமலை மன்னருக்கு உறுதுணையாக இருந்தார் .

1.2.3 சொக்கநாத நாயக்கர் , இராணி மங்கம்மாள் நாயக்க மன்னர்களின் வரிசையில் மற்றொரு குறிப்பிடத்தக்க மன்னர் சொக்கநாத நாயக்கர் .

இவர் 23 ஆண்டுகள் மதுரை நாட்டை ஆண்டார் .

இவருக்குப் பல சோதனைகளும் தோல்விகளும் ஏற்பட்டன .

செஞ்சிப் பகுதி முன்னரே பிஜப்பூர் சுல்தான் வசப்பட்டுவிட்டது .

தஞ்சையும் இம்மன்னர் காலத்தில் சுல்தானால் கைப்பற்றப்பட்டது .

சுல்தானின் பிரதிநிதியாக இருந்த ஏகோஜி இந்தப் பகுதிகளை அரசாண்டான் .

இந்த ஏகோஜி மராட்டிய சிவாஜியின் தம்பியாவான் .

சுல்தானின் மறைவுக்குப் பிறகு ஏகோஜி தஞ்சையில் உரிமைமிக்க மராட்டிய ஆட்சியை நிறுவினான் .

தமிழகத்தின் ஒரு பகுதியில் மராட்டியர் ஆட்சி ஏற்பட்டு , அதன் பண்பாட்டுக் கூறுகளும் தமிழகத்தில் பரவின .

சொக்கநாதர் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது ; பசியால் துன்புற்று ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர் .

ஏகோஜி தஞ்சையைக் கைப்பற்றுவதற்கு முன்னர் , தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்கர் , தமக்குப் பெண் கொடுக்க மறுத்தமையால் சொக்கநாதர் அவர் மீது போர் தொடுத்தார் .

விஜயராகவர் குடும்பத்தையே சொக்கநாதர் அழித்தார் .

சொக்கநாதர் இறுதிக்காலத்தில் அவருக்கு வேண்டியவர்களாலேயே சிறையில் அடைக்கப்பட்டார் .

பின்பு அவருடைய குதிரைப் படைத் தலைவரால் விடுவிக்கப் பெற்று மறுபடியும் நாட்டை ஆண்டார் .

சொக்கநாதர் அவசரபுத்தி உடையவர் ; பழிவாங்கும் குணம் படைத்தவர் .

பிடிவாதம் கொண்டவர் .

எனவே அவர் காலத்தில் நாயக்கர் ஆட்சி நிலை தாழ்ந்தது .

சொக்கநாத நாயக்கரின் மனைவியே இராணி மங்கம்மாள் .

இவர்களின் மகன் , முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சி செய்த போது , அவுரங்கசீப் என்ற மொகலாய மன்னர் , தம் செருப்பை , நாடெங்கும் ஊர்வலமாக அனுப்பினார் .

அச்செருப்புக்கு எல்லாரும் மரியாதை செய்ய வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது .

ஆனால் வீரமிக்க முத்துவீரப்பர் அந்தச் செருப்பைத் தன் காலில் அணிந்து கொண்டு “ உங்கள் மன்னர் இன்னொரு செருப்பை அனுப்பவில்லையா ? ” எனக் கேட்டார் .

ஏழே ஆண்டுகள் வாழ்ந்த முத்து வீரப்பர் இறந்த போது அவர் மனைவி கருவுற்றிருந்தாள் .

பிள்ளையைப் பெற்றுவிட்டு அவ்வரசியும் உயிர் விட்டாள் .

இதனால் சொக்கநாத நாயக்கரின் மனைவி மங்கம்மாள் அரசப் பொறுப்பை ஏற்றார் .

இராணி மங்கம்மாள் வீரமிக்கவர் .

அவர் தன் தளபதி நரசப்பய்யாவின் துணையால் தஞ்சை , மைசூர் , திருவனந்தபுரப் படைகளை வென்றார் .

தம் கணவர் காலத்தில் இழந்த பகுதிகளை மீட்டார் .

மங்கம்மாள் செய்த அறச் செயல்கள் பலப்பல .

சாலைகள் , தண்ணீர்ப் பந்தல்கள் , வாய்க்கால் சீரமைப்பு , சாலை ஓரம் மரம் நடுதல் , அன்ன சத்திரங்கள் ஆகியன மங்கம்மாள் ஆட்சியில் சிறப்புநிலை அடைந்தன .

நாயக்கர் கால அரசியல்

நாயக்கர் தெலுங்கு நாட்டிலிருந்து வந்திருந்தாலும் பெரும்பாலும் பழைய தமிழரசர்களின் ஆட்சிமுறையையே பின்பற்றினர் .

மாலிக்காபூர் , குஸ்ருகான் , உலூகான் என்ற இசுலாமியத் தளபதிகளின் படையெடுப்பு , கம்பணரின் படையெடுப்பு , பாண்டிய அரசர்களின் தாயாதிப்போர் ஆகியவற்றால் அமைதி இழந்த தென்னாட்டை நாயக்கர் அரசியல் , அமைதி நெறிக்குத் திரும்பச் செய்தது .

அரசருக்கு அடுத்தபடி தளவாய் என்ற பதவியில் இருப்பவரே அதிக அதிகாரமுடையவர் .

தலைமை அமைச்சர் , படைத்தலைவர் என்ற இருவரின் அதிகாரமும் பெற்றவர் இவர் .

பெரும்பாலான தளவாய்கள் தெலுங்கு பிராமணர்களே .

பிரதானி என்ற பதவி நிதியமைச்சர் பொறுப்புடையது .

இவர் அரசின் வரவு செலவுகளைக் கவனிப்பவர் .

பிரதானிக்கு அடுத்தவர் இராயசம் .

இவர் அரசின் தலைமைச் செயலாளர் ஆவார் .

இந்த மூவருமே அரசியல் நடத்திய முக்கிய அதிகாரிகள் ஆவர் .

இந்த முன்று பதவிகளும் விஜயநகர அரசமைப்பைத் தழுவியவை .

என்றாலும் அமைச்சர்களின் கருத்தைக் கேட்டு நடத்தல் , குடிமக்கள் தேவையை அறிந்து ஒழுகுதல் ஆகிய பண்புகள் தமிழரசர் பாரம்பரியத்துக்கே உரிய வகையில் நாயக்கர் காலத்திலும் பின்பற்றப் பட்டன .

பாளையப்பட்டுகளுக்குச் சுயாட்சி உரிமை அளிக்கப்பட்டிருந்தது .

1.3.1 பாளையப்பட்டு ஆட்சி முறை

மதுரை நாட்டைச் சுற்றிலும் அமைந்த பகுதிகள் 72 பாளையப்பட்டுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன .

கி.பி. 1535-இல் இந்தப் பாளையப்பட்டு முறை நடைமுறைப் படுத்தப்பட்டது .

பாளையக்காரர்கள் , தங்கள் பகுதிக்குரிய ஆட்சியை முழு உரிமையோடு செய்து வந்தனர் .

மத்திய அரசுக்கும் உதவினர் .

மதுரை நாயக்க மன்னர்களுக்குப் பாளையக்காரர்கள் உண்மை உடையோராய் இருந்தனர் .

சிலர் மாறுபட்டபோது போர் உண்டாயிற்று . போர்க்காலத்தில் நாயக்க மன்னருக்குப் பாளையக்காரர்கள் படைகளைக் கொடுத்து உதவினர் .

கி.பி. 1611-இல் நிகழ்ந்த போரில் எருமைக்கட்டிப் பாளையம் நாயக்க மன்னருக்கு 3000 காலாட்கள் , 200 குதிரைகள் , 50 யானைகள் தந்து உதவியதாக வைக்கோ பாதிரியார் கூறியுள்ளார் .

இப்படி ஒவ்வொரு பாளையமும் உதவி புரிந்ததால் மத்திய அரசு விரிவுடையதாகத் திகழ்ந்தது .

பாஞ்சாலங்குறிச்சி , எட்டையபுரம் , மணியாச்சி , ஊற்றுமலை , சேற்றூர் , சிவகிரி , சிங்கம்பட்டி , கோட்டையூர் , நிலக்கோட்டை , ஆய்குடி , போடிநாயக்கனூர் , பெரியகுளம் ஆகியன சில பாளையப்பட்டுகளாகும் .

இப்பாளையக்காரர்களுள் சிலர் கன்னடர் , சிலர் தெலுங்கர் .

நாயக்கர் ஆட்சி நிர்வாக அமைப்பு

1.3.2 தலைநகர் மாற்றம்

நாயக்கர் ஆட்சியின் தொடக்கத்தில் மதுரையே தலைநகராக இருந்தது .

திருச்சிராப்பள்ளி மதுரை நாட்டின் எல்லை நகராக இருந்தது .

தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினால் , தஞ்சை நாயக்கரோடு போர் புரிய வசதியாக இருக்கும் என்று கருதி கி.பி.1616-இல் முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் இம்மாற்றத்தைச் செய்தார் .

இவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர் , தன் ஆட்சியின் ஏழாம் ஆண்டில் கி.பி.1630-இல் தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார் .

திருச்சி அடிக்கடிப் போர்த் தாக்குதலுக்கு உட்பட்டதாலும் , தென்பகுதியைத் திருச்சியிலிருந்து கவனிக்க இயலாமையாலும் , திருமலை நாயக்கர் மதுரையைத் தலைநகராக்கினார் .

மீண்டும் 1665-இல் சொக்கநாத நாயக்கர் தஞ்சை மீது படையெடுக்க வசதியாகத் தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினார் .

இவர் மதுரையில் கட்டப்பட்ட திருமலை மகாலின் பெரும்பகுதிகளை இடித்து , அதிலிருந்த சிற்பங்களையும் சித்திர வேலைப்பாடமைந்த பகுதிகளையும் திருச்சிக்குக் கொண்டு வந்தார் .

மகாலை இடித்துக்கொண்டு வந்த பகுதிகளைக் கொண்டு ஏதும் கட்டவில்லை .

1.3.3 சிற்றூர் ஆட்சி

தமிழகச் சிற்றூர்களின் பெயர்கள் நாயக்கர் காலத்தில் மாறி விட்டன .

பாடி , சேரி , பள்ளி , சிறுகுடி , ஊர் , பட்டினம் , பாக்கம் , குறிச்சி என்றெல்லாம் பெயர் இறுதியில் இடம்பெற்ற சொற்கள் மறைந்தன .

இவற்றிற்குப் பதிலாகக் கோட்டை , மங்கலம் , சமுத்திரம் , புரம் , குளம் போன்ற சொற்கள் ஊர்ப்பெயர்களின் பின்னால் சேர்ந்தன .

எடுத்துக்காட்டாக நிலக்கோட்டை , திருமங்கலம் , அம்பாசமுத்திரம் , சமயபுரம் , பெரியகுளம் போன்ற ஊர்ப் பெயர்களைக் குறிப்பிடலாம் .

சோழர் காலத்தில் கிராம ஆட்சி , கிராம சபையால் மேற்கொள்ளப்பட்டது .

கிராம சபை உரிமையோடு பல செயல்களைச் செய்தது .

கோயில்களைப் பாதுகாத்தது .

அறநிலையங்களைப் பேணியது ; மக்களுக்குக் கடன் உதவி செய்தது .

விஜயநகர ஆட்சியில் கிராம ஆட்சி இந்நிலையில் இல்லை .

பாளையப்பட்டு ஆட்சி முறையில் கிராம சபைகள் மறைந்தன .

கிராம மணியக்காரர் , கணக்கர் , தலையாரி ஆகியோரைக் கொண்ட ஆயக்கார நிர்வாகம் தோற்றுவிக்கப்பட்டது .

கள்ளர் , மறவர் ஆகிய சாதியினர் குடியிருந்த ஊரில் வரிவசூல் செய்த அலுவலர் அம்பலக்காரர் எனப்பட்டார் ; மற்ற பகுதிகளில் வரிவசூல் செய்தவர் மணியக்காரர் எனப்பட்டார் .

இவர்கள் வரிப்பணத்தை மாகாண அதிகாரிகளிடம் செலுத்த , அதனை அவ்வதிகாரிகள் பிரதானியிடம் செலுத்துவர் .

வண்ணார் , தட்டார் , தச்சர் , கருமார் போன்ற கிராமத் தொழிலாளர்களுக்கு அரசு மானியம் வழங்கியது .

அரச வருவாய் வழி

நாயக்கர் கால அரசியல்

நாயக்கர் தெலுங்கு நாட்டிலிருந்து வந்திருந்தாலும் பெரும்பாலும் பழைய தமிழரசர்களின் ஆட்சிமுறையையே பின்பற்றினர் .

மாலிக்காபூர் , குஸ்ருகான் , உலூகான் என்ற இசுலாமியத் தளபதிகளின் படையெடுப்பு , கம்பணரின் படையெடுப்பு , பாண்டிய அரசர்களின் தாயாதிப்போர் ஆகியவற்றால் அமைதி இழந்த தென்னாட்டை நாயக்கர் அரசியல் , அமைதி நெறிக்குத் திரும்பச் செய்தது .

அரசருக்கு அடுத்தபடி தளவாய் என்ற பதவியில் இருப்பவரே அதிக அதிகாரமுடையவர் .

தலைமை அமைச்சர் , படைத்தலைவர் என்ற இருவரின் அதிகாரமும் பெற்றவர் இவர் .

பெரும்பாலான தளவாய்கள் தெலுங்கு பிராமணர்களே .

பிரதானி என்ற பதவி நிதியமைச்சர் பொறுப்புடையது .

இவர் அரசின் வரவு செலவுகளைக் கவனிப்பவர் .

பிரதானிக்கு அடுத்தவர் இராயசம் .

இவர் அரசின் தலைமைச் செயலாளர் ஆவார் .

இந்த மூவருமே அரசியல் நடத்திய முக்கிய அதிகாரிகள் ஆவர் .

இந்த முன்று பதவிகளும் விஜயநகர அரசமைப்பைத் தழுவியவை .

என்றாலும் அமைச்சர்களின் கருத்தைக் கேட்டு நடத்தல் , குடிமக்கள் தேவையை அறிந்து ஒழுகுதல் ஆகிய பண்புகள் தமிழரசர் பாரம்பரியத்துக்கே உரிய வகையில் நாயக்கர் காலத்திலும் பின்பற்றப் பட்டன .

பாளையப்பட்டுகளுக்குச் சுயாட்சி உரிமை அளிக்கப்பட்டிருந்தது .

1.3.1 பாளையப்பட்டு ஆட்சி முறை

மதுரை நாட்டைச் சுற்றிலும் அமைந்த பகுதிகள் 72 பாளையப்பட்டுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன .

கி.பி. 1535-இல் இந்தப் பாளையப்பட்டு முறை நடைமுறைப் படுத்தப்பட்டது .

பாளையக்காரர்கள் , தங்கள் பகுதிக்குரிய ஆட்சியை முழு உரிமையோடு செய்து வந்தனர் .

மத்திய அரசுக்கும் உதவினர் . மதுரை நாயக்க மன்னர்களுக்குப் பாளையக்காரர்கள் உண்மை உடையோராய் இருந்தனர் .