52

சிலர் மாறுபட்டபோது போர் உண்டாயிற்று .

போர்க்காலத்தில் நாயக்க மன்னருக்குப் பாளையக்காரர்கள் படைகளைக் கொடுத்து உதவினர் .

கி.பி. 1611-இல் நிகழ்ந்த போரில் எருமைக்கட்டிப் பாளையம் நாயக்க மன்னருக்கு 3000 காலாட்கள் , 200 குதிரைகள் , 50 யானைகள் தந்து உதவியதாக வைக்கோ பாதிரியார் கூறியுள்ளார் .

இப்படி ஒவ்வொரு பாளையமும் உதவி புரிந்ததால் மத்திய அரசு விரிவுடையதாகத் திகழ்ந்தது .

பாஞ்சாலங்குறிச்சி , எட்டையபுரம் , மணியாச்சி , ஊற்றுமலை , சேற்றூர் , சிவகிரி , சிங்கம்பட்டி , கோட்டையூர் , நிலக்கோட்டை , ஆய்குடி , போடிநாயக்கனூர் , பெரியகுளம் ஆகியன சில பாளையப்பட்டுகளாகும் .

இப்பாளையக்காரர்களுள் சிலர் கன்னடர் , சிலர் தெலுங்கர் .

நாயக்கர் ஆட்சி நிர்வாக அமைப்பு

1.3.2 தலைநகர் மாற்றம்

நாயக்கர் ஆட்சியின் தொடக்கத்தில் மதுரையே தலைநகராக இருந்தது .

திருச்சிராப்பள்ளி மதுரை நாட்டின் எல்லை நகராக இருந்தது .

தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினால் , தஞ்சை நாயக்கரோடு போர் புரிய வசதியாக இருக்கும் என்று கருதி கி.பி.1616-இல் முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் இம்மாற்றத்தைச் செய்தார் .

இவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர் , தன் ஆட்சியின் ஏழாம் ஆண்டில் கி.பி.1630-இல் தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார் .

திருச்சி அடிக்கடிப் போர்த் தாக்குதலுக்கு உட்பட்டதாலும் , தென்பகுதியைத் திருச்சியிலிருந்து கவனிக்க இயலாமையாலும் , திருமலை நாயக்கர் மதுரையைத் தலைநகராக்கினார் .

மீண்டும் 1665-இல் சொக்கநாத நாயக்கர் தஞ்சை மீது படையெடுக்க வசதியாகத் தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினார் .

இவர் மதுரையில் கட்டப்பட்ட திருமலை மகாலின் பெரும்பகுதிகளை இடித்து , அதிலிருந்த சிற்பங்களையும் சித்திர வேலைப்பாடமைந்த பகுதிகளையும் திருச்சிக்குக் கொண்டு வந்தார் .

மகாலை இடித்துக்கொண்டு வந்த பகுதிகளைக் கொண்டு ஏதும் கட்டவில்லை .

1.3.3 சிற்றூர் ஆட்சி

தமிழகச் சிற்றூர்களின் பெயர்கள் நாயக்கர் காலத்தில் மாறி விட்டன .

பாடி , சேரி , பள்ளி , சிறுகுடி , ஊர் , பட்டினம் , பாக்கம் , குறிச்சி என்றெல்லாம் பெயர் இறுதியில் இடம்பெற்ற சொற்கள் மறைந்தன .

இவற்றிற்குப் பதிலாகக் கோட்டை , மங்கலம் , சமுத்திரம் , புரம் , குளம் போன்ற சொற்கள் ஊர்ப்பெயர்களின் பின்னால் சேர்ந்தன .

எடுத்துக்காட்டாக நிலக்கோட்டை , திருமங்கலம் , அம்பாசமுத்திரம் , சமயபுரம் , பெரியகுளம் போன்ற ஊர்ப் பெயர்களைக் குறிப்பிடலாம் .

சோழர் காலத்தில் கிராம ஆட்சி , கிராம சபையால் மேற்கொள்ளப்பட்டது .

கிராம சபை உரிமையோடு பல செயல்களைச் செய்தது .

கோயில்களைப் பாதுகாத்தது .

அறநிலையங்களைப் பேணியது ; மக்களுக்குக் கடன் உதவி செய்தது .

விஜயநகர ஆட்சியில் கிராம ஆட்சி இந்நிலையில் இல்லை .

பாளையப்பட்டு ஆட்சி முறையில் கிராம சபைகள் மறைந்தன .

கிராம மணியக்காரர் , கணக்கர் , தலையாரி ஆகியோரைக் கொண்ட ஆயக்கார நிர்வாகம் தோற்றுவிக்கப்பட்டது .

கள்ளர் , மறவர் ஆகிய சாதியினர் குடியிருந்த ஊரில் வரிவசூல் செய்த அலுவலர் அம்பலக்காரர் எனப்பட்டார் ; மற்ற பகுதிகளில் வரிவசூல் செய்தவர் மணியக்காரர் எனப்பட்டார் .

இவர்கள் வரிப்பணத்தை மாகாண அதிகாரிகளிடம் செலுத்த , அதனை அவ்வதிகாரிகள் பிரதானியிடம் செலுத்துவர் .

வண்ணார் , தட்டார் , தச்சர் , கருமார் போன்ற கிராமத் தொழிலாளர்களுக்கு அரசு மானியம் வழங்கியது .

அரச வருவாய் வழி

நாயக்கர் காலச் சமயம்

நாயக்கர்கள் , வழிவழி வைணவர்களாயிருந்தாலும் , மற்ற சமயங்களில் வெறுப்புக் காட்டவில்லை .

மதுரை மீனாட்சி கோயிலுக்கு இவர்கள் மிகுதியாகச் செலவிட்டனர் .

அதை ஒரு சைவக் கோயில் என்று புறக்கணிக்கவில்லை .

தில்லையில் பெருமாள் திருவுருவத்தை அகற்ற வேண்டும் என்று சைவர்கள் அறப்போராட்டத்தில் இறங்கியபோது , கிருஷ்ணப்ப நாயக்கர் தளராமல் நடவடிக்கை எடுத்துப் போராட்டத்தை ஒடுக்கினார் .

மதுரை நாயக்கர் காலத்தில் , தென்கலை , வடகலை என்ற இரு வைணவப் பிரிவுகள் தங்களுக்குள் ஓயாது சண்டையிட்டுக் கொண்டன .

நாயக்க மன்னர் இப்பிரிவுகளை வேறுபாடு கருதாமல் நடத்தினார் .

நாயக்கர் காலத்திலேயே , மதுரைவீரன் வழிபாடு தோன்றியது .

திருமலை நாயக்கருக்குப் பின்பு , தமிழகத்தில் சக்தி வழிபாடு வலிமை பெற்றது .

மீனாட்சியம்மனுக்குத் தனிச்சிறப்பு ஏற்பட்டது .

மதுரையிலும் , திருச்சியிலும் இசுலாமியர் அமைதியாக வாழ்ந்தனர் .

இசுலாமிய சுல்தான்களின் ஆட்சியில் இந்துக்கள் கொடுமைப்படுத்தப்பட்டபோதிலும் , நாயக்கர் ஆட்சியில் இசுலாமியர் நன்கு பாதுகாக்கப்பட்டனர் .

நாயக்கர் காலத்தில் , கிறித்துவர் சமயப் பிரசாரம் செய்யத் தடையில்லாமல் இருந்தது .

பெர்னாண்டஸ் என்ற போர்த்துக்கீசியப் பாதிரியார் , 1592-இல் மதுரையில் நாயக்க மன்னர் இசைவு பெற்று , முதல் மாதா கோயிலைக் கட்டினார் .

இராபர்ட்-டி - நொபிலி பாதிரியார் , நாயக்கர் காலத்தில் பெரும் அளவில் இந்துக்களைக் கிறித்துவராக்கினார் .

கி.பி.1630இல் பாதிரிமார்கள் மதமாற்ற முயற்சியில் இறங்கியதற்காக மதுரையிலும் மறவர் சீமையிலும் மிகுதியும் துன்புறுத்தப்பட்டார்கள் .

திருமலை நாயக்கர் தலையிட்டுப் பாதிரிமார்களைக் காப்பாற்றினார் . 1.4.1 மதுரை மீனாட்சி கோயில்

கோபுரம்

இதோ , கம்பீரமான மதுரைக் கோபுரத்தைக் காணுங்கள் !

தென்னிந்தியக் கட்டடக் கலைக்கும் , சிற்ப ஓவியச் சிறப்புகளுக்கும் , தெய்வீக அழகுக்கும் இடமான இந்தக் கோயிலின் பகுதிகளைக் காணுங்கள் !

மீனாட்சி , சொக்கநாதர் சன்னதிகளில் பெரிய துவாரபாலகர் உருவங்களை திருமலை மன்னர் அமைத்தார் .

கொடிக்கம்பங்கள் , பலிபீடங்கள் ஆகியன இவரால் அமைக்கப்பட்டன .

கொடிக்கம்பம்

நன்னுதல் அங்கயற்கண்ணி

தனக்கு நலம்பெ றவே

உன்னதமாகும் கொடிக்கம்பம்

மாபலி பீடமுடன்

சொன்னம் அளித்துப் பொன் பூசுவித்தான்

சுகபோகன் எங்கள்

மன்னன் திருமலை பூபன்

மதுரை வரோதயனே

மீனாட்சி

திருமலை

மன்னர்

துவாரபாலகர்

என்று திருப்பணிமாலை என்ற நூல் திருமலை மன்னரின் கோயில் திருப்பணிகளைக் குறிக்கின்றது .

( நன்னுதல் = நல் நுதல் ( நெற்றி ) , சொன்னம் = சுவர்ணம் ( தங்கம் ) , வரோதயன் = வர + உதயன் ( வரத்தின் பயனாகத் தோன்றியவன் ) , அங்கயற்கண்ணி = அம் கயல் கண்ணி ( அழகிய கயல் மீனை ஒத்த கண்களையுடையவளாகிய மீனாட்சி )

கோயில் ஆட்சி , அபிடேக பண்டாரம் என்பவரிடம் இருந்தது .

நிர்வாகம் சீர்கேடு அடைந்த நிலையில் இருந்தது .

மீனாட்சி அம்மை ' திருமலை !

என்னை ஒருவரும் கவனிக்கவில்லையே ’ என நாயக்கர் கனவில் தோன்றிக் கூறினாராம் .

உடனே , மன்னர் தாமே கோயில் நிர்வாகத்தை ஏற்றுப் பல அறக்கட்டளைகளை ஏற்படுத்திக் கோயில் நிர்வாகத்தை ஒழுங்கு செய்தார் .

இதோ தருமிக்குப் பொற்கிழி அளித்த சோமசுந்தரர் திருக்கோயிலைக் காணுங்கள் !

மாணிக்க மூக்குத்தி ஒளிவீசக் கிளியுடன் கொஞ்சும் எழில்மிகு மீனாட்சி அம்மையைக் காணுங்கள் !

தெப்பக்குளம் , ஆயிரங்கால் மண்டபம் , முக்குறுணிப் பிள்ளையார் , 124 சிற்பத் தூண்களைக் கொண்ட வசந்த மண்டபம் ஆகியன திருமலை மன்னரின் கோயிற்பணிகளுக்குச் சான்றுகளாகும் .

முக்குறுணிப்

பிள்ளையார்

ஆயிரங்கால்

மண்டபம்

தெப்பக்குளம்

1.4.2 திருவரங்கம்

ஸ்ரீரங்கம் , திருச்சிராப்பள்ளிக்குப் பக்கத்தே உள்ள வைணவத் தலமாகும் .

இத்தலமே தமிழில் திருவரங்கம் எனப்படும் .

ஆழ்வார்களால் பாடப்பெற்ற இத் திருத்தலத்தில் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார் .

ஏன் பள்ளி கொண்டீர் ஸ்ரீரங்க நாதரே ?

என்ற பாட்டு இறைவனை எண்ணித் துதிப்பார்க்கு இன்பம் தருவதாகும் .

திருமலை நாயக்கர் , சொக்கநாத நாயக்கர் , இராணி மங்கம்மாள் , விஜயரங்க சொக்கநாதர் எனப் பலரும் திருவரங்கம் திருக்கோயிலுக்குப் பணி செய்துள்ளனர் .

நாயக்க மன்னர்களின் தலைநகரமாகத் திருச்சிராப்பள்ளி விளங்கியமையால் , அதன் பக்கத்தில் இருந்த திருவரங்கம் அவர்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கியது .

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளின் வரலாற்றை , விஜயநகர வேந்தரான கிருஷ்ண தேவராயர் ஆமுக்தமாலியதா என்ற தெலுங்கு நூலாகப் படைத்துள்ளார் .

இன்றும் திருவரங்கத் திருக்கோயிலில் , விஜயரங்க சொக்கநாதர் மற்றும் அவருடைய மனைவி மீனாட்சி திருவுருவங்கள் உள்ளன .

1.4.3 கிறித்துவ சமயம்

நாயக்கர் காலத்தில் கிறித்துவ சமயம் நன்கு பரவியது .

கடற்கரை ஓரப் பகுதிகளில் டச்சுக்காரரும் , போர்த்துக்கீசியரும் , ஆங்கிலேயரும் ஆதிக்கம் செலுத்தியதை நாயக்க மன்னர்கள் தடுக்கவில்லை .

இராபர்ட் டி நொபிலி பாதிரியாரும் , வேறு சில பாதிரியார்களும் , மதமாற்றம் செய்ததற்காகத் திருச்சிராப்பள்ளியில் சிறையில் அடைக்கப்பட்டனர் ; துன்புறுத்தப்பட்டனர் .

அப்போது , திருமலை மன்னர் தலையிட்டுப் பாதிரியார்களைக் காப்பாற்றினார் .

மதமாற்றம் செய்வதைத் தடுக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டார் . பாதிரிமார்களுக்குப் பரிசுப் பொருட்களை அளித்தார் .

சொக்கநாத நாயக்கர் காலத்திலும் , இந்த ஆதரவு நீடித்தது .

மாறாக மறவர் சீமையில் பிரிட்டோ பாதிரியார் கொடுமையாகத் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார் .

மதுரையை விட்டுக் கிறித்துவர்களை வெளியேற்ற வேண்டுமென்று , இராணி மங்கம்மாளுக்குத் தஞ்சை அரசர் கடிதம் எழுதினார் .

அதற்கு மங்கம்மாள் “ எப்படிச் சிலரை அரிசிச் சோறு உண்ணவும் , வேறு சிலரை இறைச்சி தின்னவும் விடுகிறோமோ , அப்படி ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் மதத்தை ஏற்றுக்கொண்டு வாழ விடுவதே அறமாகும் ” என்று பதில் எழுதினார் .

நாயக்கர் காலத்தில் கிறித்துவ சமயம் மற்ற சமயங்களைப் போன்றே சமநிலையில் நோக்கப் பெற்றது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. விசுவநாத நாயக்கர் நாட்டில் செய்த ஆட்சி முறை பற்றி எழுதுக .

விடை

2. திருமலை நாயக்கர் தலைநகரை எங்கிருந்து எங்கு மாற்றினார் ?

ஏன் ?

விடை

3. திருமலை மன்னர் செய்த கோயில் பணிகளை எழுதுக .

விடை

4. சொக்கநாத நாயக்கரிடம் காணப்பெற்ற குறைபாடுகள் யாவை ?

விடை

5. மங்கம்மாள் பெற்ற வெற்றிகள் யாவை ?

விடை

6. நாயக்கர் காலச் சமய நிலை எத்தகையது ?

நாயக்கர் காலக் கலை வளர்ச்சி

சிவனின் ஊர்த்துவ தாண்டவச்சிலை

நாயக்க மன்னர்கள் , கலைகளில் ஈடுபாடு உள்ளவர்கள் .

தமிழ்நாட்டுக்கு அவர்களால் அருமையான கட்டடங்களும் , சிற்பங்களும் , ஓவியங்களும் கிடைத்தன .

மிகப்பெரிய கோயில் மண்டபங்களும் , துவாரபாலகர் சிலைகளும் இவர்களால் உருவாக்கப்பட்டன .

தமிழகத்தில் திருமலை நாயக்கர் காலத்தில் 64 கோயில்களில் கோபுரங்கள் எழுப்ப முயன்று பணக்குறையாலோ வேறு காரணத்தாலோ திருப்பணிகள் நின்றுவிட்டன .

மதுரை இராய கோபுரமும் அவற்றில் ஒன்றாகும் .

ஒரு சமயம் கல்லில் உருவம் செதுக்கிக் கொண்டிருந்த சிற்பி , தன் உதவியாளரிடம் வெற்றிலைச் சுருளுக்குக் கை நீட்டினான் .

உதவியாள் எங்கோ போயிருந்தான் .

சிற்பத்தைப் பார்த்துக் கொண்டே பின்புறம் கையை நீட்டியபடி வெற்றிலை பாக்குக் கேட்டதை , அங்கு வந்த மன்னர் திருமலை கண்டு அவரே வெற்றிலைச் சுருள் மடித்துக் கொடுத்தார் .

அரசரே தனக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்ததை அறிந்த சிற்பி , தன் விரல்களை வெட்டிக்கொண்டான் .

மன்னர் அவ்விரல்களுக்கு மாற்றாகப் பொன்னால் விரல்கள் செய்து அளித்தார் .

இஃது உண்மையோ கதையோ , மன்னரின் கலை ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக இச்செய்தி விளங்கக் காணலாம் .

மீனாட்சி கோயிலில் உள்ள பிட்சாடனர் சிலை , மோகினி வடிவம் , காளியின் நடனம் , சிவனின் ஊர்த்துவ தாண்டவச்சிலை போன்றவற்றை வேறு எங்கும் காண இயலாது .

ஆயிரங்கால் மண்டபத்தில் இருக்கும் அரிச்சந்திரன் , குறவன் , குறத்தி சிலைகள் அற்புதமானவை .

கலைகள் வளர்ந்தன .

கட்டடம் , சிற்பம் , ஓவியம் , இசை ஆகிய கலைகளில் பலர் வல்லவராய் இருந்தனர் .

தெலுங்கு இசை , நாட்டில் பரவியது .

தெலுங்குப் பண்பாட்டுக் கூறுகள் தமிழர்க்கு அறிமுகமாயின .

கோயில்கள் , பண்பாட்டின் கருவூலங்களாகத் திகழ்ந்தன .

நாயக்கர் காலச் சிற்பங்கள் , திராவிடச் சிற்ப இலக்கணம் பொருந்தியவை .

இவை அளவில் பெரியன .

மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டவை .

குறத்தி குறவன் அரிச்சந்திரன்

1.5.1 திருமலை நாயக்கர் மகால்

சொர்க்க விலாசம்

ஓ !

எவ்வளவு பெரிய மகால் என்று பார்த்து அதிசயப்படுகின்றீர்களா ?

வேண்டாம் !

திருமலை மன்னர் கட்டியதில் நான்கில் ஒருபகுதிதான் இப்போது உள்ளது .

எஞ்சிய பகுதிகள் இடிக்கப்பட்டுவிட்டன . இது இத்தாலிய நாட்டுச் சிற்பியால் வரைபடம் வரைந்து அமைக்கப்பட்டது .

இதோ இந்த மகாலில் இன்று எஞ்சியுள்ள சொர்க்க விலாசம் என்ற பகுதியைப் பாருங்கள் !

40 அடி உயரமுள்ள வழுவழுப்பான சுதைத்தூண்கள் தாங்கும் மண்டபத்தைக் காணுங்கள் .

இதுதான் அரசர் அரியணையில் இருந்து ஆட்சி செய்த இடம் .

இரண்டு குதிரைச் சிற்பங்கள் அழகு செய்யும் படிகளைக் கடந்து இந்த இடத்தை அடையலாம் .

ஆண்டுதோறும் அங்கயற்கண்ணி அம்மையிடம் செங்கோலைப் பெற்றுவந்து மன்னர் , இந்த மண்டபத்தில் உள்ள அரியணையில் அமர்வது வழக்கம் .

நவராத்திரி விழாவின்போது , ஒன்பது நாள்களிலும் இந்தச் சொர்க்க விலாசத்தில் மன்னர் கொலு இருப்பார் .

பழுதடைந்த இந்தப் பளிங்கு வண்ண மாளிகையை கி.பி. 1868இல் நேப்பியர் பிரபு , மூன்று இலட்ச ரூபாய் செலவு செய்து பாதுகாத்தார் .

மகால் முகப்பு தூண்கள்

1.5.2 இலக்கியம்

நாயக்கர்கள் காலத்தில் சிற்றிலக்கியங்கள் பெருகின .

திருமலை மன்னர் , தெலுங்கையே ஆதரித்தார் .

எனினும் இவருடைய அவையில் குமரகுருபரர் பாடிய போது , மீனாட்சியம்மையே குழந்தை வடிவாக வந்து கேட்டதாக ஒரு கதை உண்டு .

குமரகுருபரர் மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் , மீனாட்சியம்மை குறம் ஆகிய இரு நூல்களை மீனாட்சியின் மீது பாடினார் .

அதிவீரராம பாண்டியர் , வரதுங்கராம பாண்டியர் என்ற சிற்றரசச் சகோதரர்கள் , திருக்குருகைப்பெருமாள் கவிராயர் , இராபர்ட் டி நொபிலி பாதிரியார் , பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் , சுப்பிரதீபக் கவிராயர் , வீரமாமுனிவர் , உமறுப்புலவர் , திரிகூடராசப்பக் கவிராயர் ஆகியோர் நாயக்கர் காலத்தில் வாழ்ந்து இலக்கியம் படைத்த புலவர்களாவர் .

நாயக்கர் கால வாழ்க்கை முறை

சாதிப் பெருக்கம் , பலதார மணம் ( Polygamy ) , சமய மாற்றம் , சமய , அரசியல் சார்புடைய விழாக்கள் ஆகியவை நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மக்கள் வாழ்க்கை முறையில் காணும் சிறப்பு நிகழ்வுகளாகும் .

1.6.1 சாதிப் பிரிவுகள்

நாயக்கர் காலத்தில் வலங்கைச் சாதிகள் , இடங்கைச் சாதிகள் என்று இரு பிரிவுகளாகச் சாதிகள் பிரிந்து பூசல் விளைவித்தன .

எனினும் நாயக்க மன்னர்கள் இவற்றை வளரவிடவில்லை .

நாயக்கர்கள் தெலுங்கு நாட்டிலிருந்து இக்காலத்தில் தமிழகம் வந்து குடியேறினர் .

கம்மவார் , ரெட்டியார் , நாயக்கர் , தேவாங்கர் , கோமுட்டி , சாலியர் , நாவிதர் , சக்கிலியர் , வண்ணார் , ஒட்டர் , பிராமணர் ஆகியோர் தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்து இங்குக் குடியேறினர் .

இக்குடியேற்றங்கள் தமிழர்களால் எதிர்க்கப் படவில்லை .

நாயக்கர் ஆட்சிக் காலத்தில் சௌராட்டிரப் பகுதியிலிருந்து சௌராட்டிரர்கள் தமிழகத்தில் குடியேறினர் .

இவர்களைப் பட்டுநூல்காரர் எனத் தமிழர் குறிப்பிட்டனர் .

இவர்கள் , மங்கம்மாள் காலத்தில் , பிராமணரைப்போலத் தமக்கும் பூணூல் போட்டுக் கொள்ளும் உரிமை வேண்டிப் பெற்றனர் என்பர் .

1.6.2 ஆடவர் மகளிர் நிலை

ஆண்மக்கள் , பெண்களைவிடக் கல்வியில் மேலோங்கி இருந்தனர் .

மகளிர் உரிமைக்காகப் போராடவில்லை .

ஆடவர் , மகளிர் பலரை மணந்தனர் .

திருமலை மன்னருக்கு 200 மனைவியரும் , மறவர் நாட்டை ஆண்ட கிழவன் சேதுபதிக்கு 47 மனைவியரும் இருந்தனர் .

கணவன் இறந்ததால் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் சில இடங்களில் இருந்தது .

இராணி மங்கம்மாள் அறிவும் துணிவும் மிக்க மங்கையாகத் திகழ்ந்தார் .

அவருக்குப் பின்னால் ஆட்சிக்கு வந்த இராணி மீனாட்சிக்கு அத்தகைய ஆற்றல் இல்லை .

ஆடவர் மகளிர் ஆகிய இருபாலாரும் சமயம் மாறுகின்ற வழக்கம் இக்காலத்தில் ஏற்பட்டது .

கலை ஈடுபாடு மிகுந்திருந்த இக்காலத்தில் , பெருஞ்செல்வர்களும் , உயர் அதிகாரிகளும் , மகளிர் பலரை மணக்கும் வழக்கம் இருந்தது .

மகளிர் பலர் இசை , நடனம் முதலான கலைகளில் சிறந்து விளங்கினர் .

கோயிலுக்குப் பொட்டுக்கட்டும் வழக்கம் என்ற பெயரில் பெண்களைத் தாழ்குடிப் பெற்றோர் கோயிற் பணிக்காக விட்டனர் .

ஆனால் உயர்குடிச் செல்வர் இம்மகளிரைத் தம் உடல் வேட்கைக்கு ஆளாக்கிக் கொண்டனர் .

1.6.3 கல்வி

திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து பிள்ளைகள் படிக்கும் வழக்கம் இருந்தது .

அரசாங்கங்கள் , கல்விக்கூடங்களை வளர்க்கவில்லை .

பிராமணர்கள் வேதபாடசாலைகளில் சேர்ந்து வேதம் பயின்றனர் என்றும் , இவர்களுக்குரிய செலவை அரசு ஏற்றிருந்ததென்றும் நொபிலி பாதிரியார் தெரிவிக்கின்றார் .

மடங்கள் சமயக் கல்வியைக் கற்பித்தன .

பெண்கல்வி மிகுதியாக வளரவில்லை .

1.6.4 திருவிழாக்கள்

திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை விழாக்களின் இருப்பிடம் ஆயிற்று .

ஆண்டுதோறும் நான்கு பெருவிழாக்கள் நடந்தன .

திருமலை மன்னர் , மாசி மாதத்தில் நிகழ்ந்து வந்த திருக்கலியாண விழாவையும் , தேரோட்டத்தையும் மக்கள் கலந்து கொள்ள வசதியாகச் சித்திரை மாதத்திற்கு மாற்றினார் .

இந்தத் திருவிழாவில் , எட்டாம் நாளில் மீனாட்சி அம்மைக்கு முடிசூட்டி , அவரிடமிருந்து மன்னர் செங்கோல் வாங்கும் நிகழ்ச்சி சேர்க்கப்பட்டது . இதுவே மதுரையில் பெரிய திருவிழா ஆகும் .