54

அவனை வீதியில் கண்ட ஏழு மகளிர் , அவன்மீது காதல் கொண்டு புலம்புவார்கள் .

இவர்கள் கணிகையர் குலத்தைச் சார்ந்தவர்கள் ; பொதுமகளிர் .

உலா நூல்களில் இத்தகு காட்சியைக் காணலாம் .

பெண்கள் காமுற்றதாகப் பாடுவது ஓர் உத்தியே .

உண்மையில் பெண்கள் இத்தகைய மன விருப்பத்திற்கு உள்ளாகவில்லை .

தமிழ்நாட்டுப் பெண்களின் பண்பாடு எந்தக் கால நிலையிலும் உயர்ந்ததாகவே இருந்திருக்கிறது .

நாணம் , அச்சம் , மடம் , பயிர்ப்பு என்னும் நான்கு பண்புகளும் அவர்களின் நான்கு படைகள் .

பெண்கள் மடலேறுவது என்பது நிகழ்வது இல்லை .

ஆண்களே மடலேறுவர் .

மடலேறுதல் என்பது காதல் மிகுந்த தலைவன் தன்னுடைய காதலியைத் தான் அடைய முடியாத சூழலில் மேற்கொள்ளும் செயலாகும் .

பெண்ணைப் பெற்றோர் காதலுக்குத் தடையானபோது தலைவன் பனை மடலால் செய்த குதிரை ஊர்ந்து , தன் காதலியின் உருவம் தீட்டிய ஓவியத்தைக் கையில் பற்றி , ஊர்மக்கள் அறிய , இவள் என்னால் காதலிக்கப்பட்டவள் என்று அறிவிப்பான் .

இதுவே மடலேறுதல் ஆகும் .

இப்படிப்பட்ட செயலைப் பெண்கள் செய்ய இயலுமா ?

கடல்அன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணிற் பெருந்தக்கது இல் ( குறள் , 1137 )

என்று கூறுகிறார் வள்ளுவர் .

உள்ளத்தில் கடல் போலக் காம உணர்ச்சி இருந்தாலும் பெண்கள் மடலேற மாட்டார் .

அவ்வாறு ஏறாமையே பெண்ணின் பெருமையாகும் .

ஆயினும் பக்தி உலகில் பெண்களும் மடலேறுவதாகப் பாடுவதாக இருக்கின்ற ஓர் இலக்கிய உத்தியை இறையன்பர்கள் மேற்கொண்டனர் .

திருமங்கை ஆழ்வார் நாராயணனை மோகித்த பெண் மடலேறுவதாகப் பெரிய திருமடல் , சிறிய திருமடல் என்ற இரண்டு இலக்கியங்களைப் படைத்துள்ளார் .

2.3.3 பெண்களைக் கவர்ச்சிப் பொருள் ஆக்கிய நூல்கள்

தூது நூல்களில் பெண் காற்று , வண்டு , மயில் , கிளி , மேகம் , குயில் ஆகிய பொருள்களைத் தலைவனிடத்துத் தூதாக அனுப்புவாள் .

விலங்கு , பறவை , மேகம் , தென்றல் காற்று போன்ற ஒன்றிடம் உரைப்பதாகவே புலவர் பாடுவர் .

கோவை நூல்களிலும் காதலே பாடுபொருளாய் விளங்கினும் , வள்ளல் ஒருவரைப் பாடல்தோறும் பெயர் விளங்கப் புனைய வேண்டும் என்ற விருப்பமே , நூல் தோன்றக் காரணமாகும் .

எனவே பெண்களும் , பெண்கள் பங்கு பெறும் அகப்பொருளும் கவர்ச்சிப் பொருள்களாய்ப் புலவர்களால் இலக்கியப் படைப்பிற்குக் கொள்ளப் பெற்றமையினை நாம் அறியலாம் .

பெண்ணைப் புனைந்து புனைந்து பாடும் பாங்கிலேயே கவிதையின் செழிப்பு விளங்கியது .

புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன்

கயலே மணந்த கமலம் மலர்ந்து ஒரு கற்பகத்தின்

அயலே பசும்பொன் கொடிநின்றது

ஓர் உருவகக் காட்சியைக் காட்டுகின்றார் .

கூந்தலைச் சுமந்து பிறைபோன்ற நெற்றியைக் கொண்டு , வில் போன்ற புருவங்களோடு , மீன் போன்ற கண்களையும் , தாமரை போன்ற முகத்தையும் , கொண்ட கொடி போன்ற பெண் என்பது இவ்வுருவகத்தால் பெறப்படும் பொருள் ஆகும் .

2.3.4 சிற்றின்ப நோக்கம்

அழகு கனிந்த பொருள்களையும் , ஆக்கம் தரும் பொருள்களையும் பெண்ணாய்க் காண்பது தமிழ்மரபு .

நிலம் , ஆறு , நிலவு ஆகியவற்றைப் பெண்ணாகச் சித்திரிப்பது தமிழ்ப் பண்பாடு .

அந்நிலையில் இடைக்காலத்தில் பெண்டிரைக் குறித்த வருணனை மிகுதியாகி இருக்கின்றது .

இந்த நிலை மாறி நொண்டி நாடகங்கள் , விறலிவிடுதூது நூல்கள் , கூளப்ப நாயக்கன் காதல் போன்றவை சிற்றின்ப வருணனை மிக்க நூல்களாகப் பிறந்தன .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. சிற்றிலக்கியம் என்பது யாது ?

விடை

2. சிற்றிலக்கியங்களின் பண்புகள் யாவை ?

விடை

3. வலங்கை , இடங்கைப் பிரிவுகளில் இடம்பெற்ற சாதிகள் எத்தனை ?

விடை

4. தீட்டு உடையோராய்க் கருதப்பட்டோர் யார் ?

விடை

5. திருக்கோயில்களில் தமிழ் எந்த நிலையில் இருந்தது ?

மடங்களின் தமிழ்த் தொண்டு

துறவு நிறுவனங்களாகிய மடங்கள் நிறுவப்பட்டு வளர்ந்தன .

இந்த மடங்கள் தொடக்கக் காலத்தில் , சமய நெறி பேணுதல் , சமயம் பரப்புதல் , அறம் செய்தல் , கோயில்களைப் பாதுகாத்தல் போன்ற செயல்களில் நாட்டம் செலுத்தின . இவற்றின் தலைவர்களான துறவியரும் கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையராகவும் இருந்தனர் .

நாளடைவில் இந்த மடங்களின் நோக்கமும் செயற்பாடும் தளர்ச்சியுற்றன .

எனினும் சமயத் திருமடங்கள் தமிழுக்கும் , சமயங்களுக்கும் ஆற்றிய பணி , வரலாற்றில் இடம்பெறத் தக்கதாகவே அமைந்தது .

குமரகுருபரர் , சிவப்பிரகாசர் , சிவஞான முனிவர் , கச்சியப்பர் , மாசிலாமணி தேசிகர் , சுப்பிரமணிய தேசிகர் போன்ற புலமைச் சான்றோரும் , மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை , உ.வே.சாமிநாதையர் , வித்துவான் தியாகராசச் செட்டியார் போன்ற பெருங்கல்வியாளர்களும் திருமடங்களோடு தொடர்புடையவர்களாயிருந்து , தமிழுக்கு ஆற்றிய பணிகள் பலப்பல .

திருமடங்களின் சார்பினால் சிற்றிலக்கியங்கள் பலப்பல தோன்றின .

இச்சிற்றிலக்கியங்கள் , சமய அடிப்படையிலான பண்பாட்டையே பெரிதும் சித்தரிக்கின்றன .

2.4.1 குமரகுருபரரின் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்

குமரகுருபரர் என்னும் புலவர் தென்பாண்டி நாட்டில் தோன்றியவர் .

ஊமையாகப் பிறந்தவர் .

இறையருளால் பேசும் வல்லமை பெற்றவர் .

பெரும் காப்பியங்கள் இயற்றும் ஆற்றல் பெற்றவர் இவர் ; இருந்தும் காலச் சூழலால் சிற்றிலக்கியங்களையே பாடினார் .

மதுரை மீனாட்சியைச் சிறு குழந்தையாக உருவகித்துக் குமரகுருபரர் மிக அழகாகப் பாடுகிறார் .

மீனாட்சி அம்மையைப் பழந்தமிழ்ப் பாடலின் பயன் ; தமிழ்த் தேனின் சுவை ; அகந்தை கொண்டவர் மனத்தில் அவ்வகந்தையை அழித்து ஏற்றப்படும் விளக்கு ; இமயமலையில் விளையாடும் பெண்யானை ; உலகம் கடந்து நிற்கும் இறைவனின் உள்ளத்தில் அழகாய் எழுதப்பெற்ற உயிரோவியம் , என்றெல்லாம் மீனாட்சியம்மையைப் பிள்ளைத்தமிழில் மனமுருகிப் பாடுகிறார் குமரகுருபரர் .

அக்காலத்தில் இது போன்ற இலக்கியங்களில் பக்தி வளர்த்த பண்பாடு நன்கு புலனாகின்றது .

2.4.2 திருக்கோயில் வழிபாடுகளில் தமிழ்

கோயில் விழாக்களில் ஊர்வலங்கள் நிகழும் .

அந்த ஊர்வலங்களில் தமிழ்ப் பாடல்களை , முன்னர்ப் பாடிக்கொண்டு செல்வர் .

பின்பு தெய்வம் ஊர்வலமாகச் செல்லும் .

அதன்பின்னர் வைதிகர் வேதம் பாடி நடப்பர் .

குமரகுருபரர் ‘ இறைவன் தமிழின் பின்செல்ல , மறைகள் அவனைத் தேடி நடந்தன ’ என்று கூறுகிறார் .

உண்மைநிலையை மாற்றி மனத்திற்கு உகந்ததாக ஆக்கிக் கொள்கிறார் குருபரர் .

திருக்கோயில் வழிபாடுகளில் தமிழ் இரண்டாந்தரமான இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டதை , அக்கால நிகழ்வுகள் காட்டுகின்றன .

சமயப்பூசல்

இக்காலத்தில் சமயங்களுக்குள் வேறுபாடும் , சமயச் சண்டைகளும் தோன்றிவிட்டன .

சைவ சமயமும் வைணவ சமயமும் கடுமையாக ஒன்றையொன்று எதிர்த்தன .

சைவ வைணவப் போராட்டம் மட்டுமன்றி , வைணவ சமய உட்பிரிவுகளான தென்கலை , வடகலை ஆகிய இரண்டையும் சார்ந்தவர்கள் தங்களுக்குள் கடுமையாக மோதிக் கொண்டனர் .

சமய நிலையில் உயர்ந்த கோட்பாடுகள் மறைந்து , என் தெய்வம் பெரியதா , உன் தெய்வம் பெரியதா என்ற சண்டை தொடங்கிவிட்டது .

சிறு தெய்வ எண்ணிக்கைகள் பெருகின .

தத்துவ ஆராய்ச்சி மறைந்தது .

பண்பாடு ஓரளவுக்குத் தேய்வுற்றது .

2.5.1 சிறு தெய்வ வழிபாடு

இக்காலத்தில் சக்தி , மாரி , காளி , மதுரை வீரன் , இருளன் , முனி போன்ற தெய்வங்களின் வழிபாடு , ஊருக்கு ஊர் பெருகியது .

ஒவ்வொரு கோயிலிலும் , அவ்வத்தெய்வம் சார்ந்த பூசவிழா , பூரவிழா , பாவை விழா , ஆனித் திருமஞ்சனம் , சித்திரை விழா , மகம் , பங்குனி விழா , கார்த்திகை விழா ஆகியன கொண்டாடப்பட்டன .

பதினாறாம் நூற்றாண்டிலிருந்து , நாயக்கர்களால் தமிழகத்தில் புகுத்தப்பட்ட தீபாவளி விழா , வரவர வலிமை பெற்றது .

தெய்வங்களின் எண்ணிக்கையும் , சடங்குகளின் எண்ணிக்கையும் , திருவிழாக்களின் எண்ணிக்கையும் பெருகின .

காளி , மாரி போன்ற தெய்வங்கள் கொடூரமானவை , தண்டிக்கும் சக்தி உடையவை என்ற கருத்துப் பரப்பப்பட்டது .

2.5.2 தத்துவ வீழ்ச்சி

ஆத்மா , பரம்பொருள் , நல்வினை , தீவினை போன்றவற்றைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்த நிலை மாறியது .

எந்தத் தெய்வம் அருள் செய்யும் ?

எந்தத் தெய்வம் எதைச் செய்தால் மகிழ்ச்சி அடையும் என்ற கருத்துத் தோன்றியது .

மொட்டை அடித்துக் கொள்ளுதல் , தீ மிதித்தல் , அலகுக் குத்தி காவடி சுமத்தல் , உடம்பைத் தரையில் கிடத்திக் கோயிலைச் சுற்றிப் புரண்டு வருதல் போன்ற பல நோன்புகள் பெருகின .

தெய்வத்திற்குக் கள் , சுருட்டு , சாராயம் ஆகியவற்றை மக்கள் படைத்தனர் .

கோயில் உண்டியல்களில் காணிக்கை பெருகியது .

தத்துவ ஆராய்ச்சி மறைந்து மூடநம்பிக்கைகள் பெருகின .

இதனால் தத்துவங்களுக்குத் கொடுத்த முக்கியத்துவம் குறைந்தது .

தொகுப்புரை

தமிழர் அல்லாத பிறர் , தமிழகத்திற்குள் புகுந்து ஆட்சி செய்யத் தொடங்கிவிட்ட நிலையில் , அவர்தம் பண்பாட்டுக் கூறுகளும் , மொழி வழக்குகளும் , தமிழர் வாழ்விலும் தாக்கங்களை ஏற்படுத்திவிட்டன .

தெலுங்குச் சொற்களும் , உருதுச் சொற்களும் , தமிழ்ச் செய்யுட்களிலேயே இடம்பெற்று விட்டன .

கடவுள் வழிபாட்டு நெறிகளில் பல புதிய வழக்கங்கள் தோன்றின .

பண்பாட்டு நிலையில் , உயர் பண்புகள் என்று போற்றப்பட்டவை மதிப்பு இழந்து சடங்குகள் மதிப்புப் பெறத் தொடங்கிவிட்டன . இவற்றைச் சிற்றிலக்கியங்கள் காட்டுகின்றன .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. திருமடங்கள் செய்த பணிகள் யாவை ?

விடை

2. சிற்றிலக்கியங்கள் யார் மீது எதற்காகப் பாடப் பெற்றன ?

விடை

3. மதுரை நாட்டு மக்கள் குறித்து மார்ட்டின் பாதிரியார் கூறுவது யாது ?

விடை

4. சிறு தெய்வங்கள் பற்றிக் கூறுக .

விடை

5. சிற்றிலக்கியங்கள் காட்டும் பண்பாட்டுக் குறைபாடுகளை எழுதுக .

ஐரோப்பியர் காலப் பண்பாடு

பாட முன்னுரை

அலெக்சாண்டர் என்ற கிரேக்கப் பேரரசன் உலகின் பெரும்பகுதியைத் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தான் என்று மிகப் பழைய வரலாறு கூறும் .

அவனைப் போலவே ஆங்கிலேயரும் உலகின் பல பகுதிகளில் ஆட்சி செலுத்தினர் .

ஆங்கிலேயர் பல நூற்றாண்டுகள் உலகின் பல நாடுகளில் தங்கள் கொடியைப் பறக்க விட்டனர் .

சின்னஞ்சிறு நாடான இங்கிலாந்து தன் அறிவாலும் முயற்சியாலும் இந்தியா போன்ற பெருநாடுகளை வளைத்துத் தன் ஆட்சியின் கீழே கொண்டு வந்தது .

ஐரோப்பியர் தம்மைக் கற்றவர் , நாகரிகம் மிக்கவர் என்று கூறிக் கொண்டனர் ; எனினும் பிறரை அடிமைப்படுத்துவதில் அவர்கள் மகிழ்ச்சி கண்டனர் .

இங்கிலாந்து ஒரு ' கடைக்காரர்களின் நாடு ' என்று நெப்போலியன் கூறினான் .

அவர்களின் வாணிகமே அவர்களுக்கு நாடு பிடித்துத் தந்தது .

ஐரோப்பாக் கண்டத்தில் இங்கிலாந்தே வலிமையுடையதாகத் திகழ்ந்தது .

இதன் குடியேற்றம் இந்தியாவைப் பல நூற்றாண்டுகள் பாதித்தது .

ஐரோப்பியர் வருகை

மேலை நாட்டுத் தொடர்பு இந்தியாவிற்கு ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது .

மேற்கிலிருந்து இந்தியாவிற்கு முதல் முதல் வந்தவர் போர்ச்சுக்கீசியர் .

அவருக்குப்பின் வந்தவர் டச்சுக்காரர் .

டச்சுக்காரருக்குப் பின்னர் ஆங்கிலேயரும் இறுதியில் பிரெஞ்சுக்காரரும் வந்தனர் .

இவர்கள் எல்லாரும் தங்கள் உற்பத்திப் பொருள்களுக்குரிய சந்தையாக இந்தியாவைக் கருதி வந்தனர் .

போர்ச்சுக்கீசியர் வாணிகம் செய்யத் தொடங்கி இறுதியில் கோவா , டையூ , டாமன் என்ற மூன்று இந்தியப் பகுதிகளை உடைமையாகக் கொண்டனர் .

டச்சுக்காரர் எந்த இடத்தையும் தம்வசம் வைத்துக் கொள்ளாமல் அகன்றனர் .

பிரெஞ்சுக்காரர் இந்தியாவை வெல்லும் முயற்சியில் ஆங்கிலேயரோடு போட்டியிட்டு இறுதியில் சந்திரநாகூர் , ஏனம் , மாகி , காரைக்கால் , புதுச்சேரி என்ற பகுதிகளை மட்டும் கைக்கொண்ட அளவில் நின்றனர் .

ஆங்கிலேயரோ இந்தியாவில் பெரும்பகுதியைத் தம் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தனர் .

1639இல் சென்னை அவர்களுக்குக் கிடைத்தது .

படிப்படியாகத் தமிழகம் முழுதும் ஆங்கிலேயர் வசப்பட்டது .

உழவு , நெசவு , இரும்பு , சர்க்கரைத் தொழில்கள் ஆங்கிலேயர் வரவால் இந்தியாவில் நசிவடைந்தன .

தமிழகமே நலிவுற்றது .

கோயம்புத்தூர்ப் பருத்தி இங்கிலாந்தில் ஆடையாகித் தமிழகக் கடைத் தெருவில் கொள்ளை விலைக்கு விற்கப்பட்டது .

3.1.1 தமிழகத்தில் ஐரோப்பியர்

இராபர்ட் கிளைவ்

தமிழகத்தில் சென்னப்பட்டினம் என அன்று பெயர் பெற்றிருந்த சென்னையை விலைக்கு வாங்கிய ஆங்கிலேயர் தமிழ்நாடு முழுவதும் தம் ஆட்சியைப் பரப்பினர் .

ஆர்க்காட்டு நவாபாகிய ராஜா சாகேப்பைத் தோல்வியுறச் செய்ய ஆங்கிலேயர் தமிழரை மதத்தின் பேரால் பிரித்தனர் ; சந்தா சாகேப் , மகமது அலி என்ற உறவினர் தம்முள் பகை கொள்ளச் செய்தனர் .

சூழ்ச்சிப் போர்களாலேயே ஆங்கிலேயர் தமிழகத்தை வென்று கைக்கொண்டனர் .

தமிழர்களிடையே இருந்த ஒற்றுமை இல்லாமையை இராபர்ட் கிளைவ் என்ற ஆங்கிலத் தளபதி சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் .

இன ஒற்றுமை இல்லாமை , மதச்சண்டை , சாதிப் பிரிவினை , தீண்டாமை ஆகியனவே நம் நாடு ஆங்கிலேயர்க்கு அடிமைப்படக் காரணமாயின .

கட்டபொம்மன்

வெள்ளையரை எதிர்த்து வீரமுழக்கம் செய்த வீரபாண்டியக் கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கில் இடப்பட்டான் ; மருது சகோதரர்களும் கொல்லப்பட்டனர் .

புலித்தேவர் மறைந்தார் .

வெள்ளை ஆதிக்கம் தமிழகத்தில் வலுப்பெற்றது .

3.1.2 ஐரோப்பிய ஆட்சிக்கு எதிர்ப்பு

மருது சகோதரர்கள் தமிழகத்தின் குறுநிலப் பகுதிகள் பலவும் வெள்ளையர்க்கு அடிமைப்பட்டன .

வழிவழி வந்த வீரப்பண்பாடு , துப்பாக்கி பீரங்கிப் படைகளின் முன் நிற்க முடியாமல் முனை மழுங்கியது .

வீரபாண்டியக் கட்டபொம்மன் , புலித்தேவன் , மருது சகோதரர்கள் ஆகியோரின் விடுதலை முயற்சிகள் தோல்வி கண்டன .

சேதுபதி மன்னர்களில் ஒருவரான முத்துராமலிங்க சேதுபதி வெள்ளையர்களின் சிறையில் கிடந்து நலிந்து துயருற்று இறந்தார் .

தமிழகத்தின் இந்திய விடுதலைப் போர் வேர் கொண்டு வலுவான அமைப்பைப் பெற்றது .

அயல் நாட்டினர் நம்மை ஆள்வதா என்ற உணர்ச்சி அழுத்தம் பெற்றது .

துறவிகள் , தவசிகள் , ஞானியர் , கற்ற அறிஞர்கள் ஆகியோர் இந்திய விடுதலை உணர்வை வளர்த்தனர் .

அவர்களில் சிலர் பணி குறிப்பிடத்தக்கது .

திருப்பூர்க் குமரனின் தியாகம் தமிழர்களின் விடுதலைப் போர்வேட்கையை வெளிப்படுத்தியது .

ஒட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் அந்நிய ஆட்சியை எதிர்த்துக் கப்பலோட்டினார் .

வெள்ளையர்களால் நாற்பது ஆண்டுச் சிறைவாசம் அளிக்கப் பெற்றார் .

சிறையில் சிதம்பரனார் செக்கிழுத்தார் , கல் உடைத்தார் .

இராமலிங்க சுவாமிகள்

வடலூர் இராமலிங்க சுவாமிகள் வள்ளலார் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் .

சாதி மதம் கடந்த சமரச வாழ்வை உலகுக்கு உரியதாக அறிவுறுத்தியவர் .

வடநாட்டில் விவேகானந்தரைப் போலவே தமிழகத்தில் இராமலிங்க வள்ளலாரும் ' கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக ' எனப் பாடி அந்நிய ஆட்சியை வெறுத்தார் .

தமிழ்க்கல்வி , தமிழர் பண்பாடு ஆகியவற்றின் வலிமையை எடுத்துரைக்கும் வண்ணம் அவர் எழுத்து அமைந்தது .

இந்தியப் பண்பாடு

காசுமீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் வாழும் இந்திய மக்கள் பல்வேறு மொழியினர் ; பல்வேறு மதத்தினர் ; பல்வேறு பழக்க வழக்கங்கள் கொண்டவர் .

எனினும் அவர்களின் பண்பாட்டில் ஒரு பொதுமை இருந்தது ; இருக்கிறது .

கணவன் மனைவி என்ற பிணைப்பும் , பிள்ளைகளைக் பேணிக் காக்கும் குடும்ப உறவும் , திருமணத்தை முறிக்க முடியாத விதியின் விளைவாகக் காணும் கருத்தும் , பிறவிகளில் நம்பிக்கையும் , அறம் தழுவிய வாழ்க்கைப் போக்கும் இப்பண்பாட்டின் அச்சாணிகள் .

இந்தப் பண்பாடு பல சிறப்புக் கூறுகளைக் கொண்டது .

3.2.1 இந்தியப் பண்பாட்டின் சிறப்பு இயல்புகள்

வேற்றுமைகளுக்கிடையில் ஓர் ஒற்றுமை என்ற நிலையில் பல மொழிகளும் , பல இனங்களும் , பல மதங்களும் , பல வாழ்க்கைப் போக்குகளும் நிறைந்த இந்தியா ஒரு பொதுப் பண்பாட்டைக் கொண்டிருந்தது .

இந்தியப் பண்பாட்டின் கூறுகளை இன , மத , மொழி , கால , இட வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட பொதுவான நம்பிக்கைகள் , பொதுப்படையான வாழ்க்கை நெறிகள் என்ற இரண்டு பகுதிகளாகப் பார்க்கலாம் .

வாழ்க்கை நெறிகளுக்கு உட்பட்ட கூறுகளை நம் வசதிக்காகச் சிறு உட்கூறுகளாகக் கொள்ளலாம் .

பொதுவான நம்பிக்கைகள்

• நல்வினை , தீவினைகளில் நம்பிக்கை

• மறுபிறப்புப் பற்றிய எண்ணம்

வாழ்க்கை நெறிகள்

குடும்பம்

• வரையறுக்கப்பட்ட உரிமைகளும் , இல்லறக் கடமைகளும் கொண்ட பெண் .

• தன் விருப்புரிமையுடைய ஆண் .

• குடும்ப அமைப்பில் பிடிப்பு .

• கணவன் மனைவி உறவு நிலையானது , பிறவிதோறும் தொடர்வது என்ற கருத்து .

• பொருள் ஈட்டுவதோடு , பிறர்க்கு உதவுதல் , ஒப்புரவு , ஈகை போன்ற பண்புகளுக்கும் வாழ்க்கை இடமளிக்க வேண்டும் என்ற கோட்பாடு .

சடங்குகளும் நம்பிக்கைகளும்

• சமயம் சார்ந்த வாழ்க்கைச் சடங்குகளில் பற்றும் விடாப்பிடியும்

• விதியின் தீர்ப்பு என வருவதை ஏற்றுக் கொள்ளுதல் .

• காரணத்தை ஆராயாமல் சிலவற்றைப் பாரம்பரிய உணர்வுடன் பின்பற்றும் நெறி .

சாதியப் பாகுபாடு

• சாதியப் பாகுபாடுகளைத் தள்ளிவிடாமலும் அவற்றிலேயே மீண்டு விடாத அளவுக்கு அழுந்திவிடாமலும் அமைந்த ஒரு நடுவுநிலை .

• திருமணம் , மகப்பேறு , தெய்வ வழிபாடு , நோன்பு , இழவு , இறந்தார் , நினைவு ஆகியவற்றில் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு சாதிக்குள்ளும் சில கட்டுப்பாடுகளைப் பின்பற்றல் .

பிணி தீர்த்தல்

• பேய் , ஆவி நம்பிக்கை

• செய்வினை , மந்திரித்தல் , பில்லிசூனியம் வைத்தல் ஆகியவற்றில் நம்பிக்கை

• இலை தழை , பட்டை வேர் பிற இயற்கை மூலங்களிலிருந்து மருந்து ஆக்கிக் கொள்ளும் அறிவு .

சமயம் போற்றல்

• கோயில்களைச் சார்ந்த வாழ்க்கைப் போக்கு

• புண்ணியத் தலப்பயணம் , புண்ணிய நதிகளில் ஆடுதல் . • பெரியோரைப் போற்றுதல் , மரியாதை வழக்கங்களைப் பேணுதல் .