56

கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை

யவற்றிலும் சிறந்தன ஆதலின் அவற்றை

முழுதுமே தழுவி மூழ்கிடின் அல்லால்

தமிழச்சாதி தரணிமீ திராது

என்று ஒருசாராரும் , வேற்று நாகரிகம் , வேற்றவர் பொருள் எதனையும் ஏற்கலாகாது என ஒருசாராரும் போரிட்டு நாட்டைக் கெடுத்தனர் என்பர் பாரதியார் .

நன்மையும் அறிவும் எந்தத் திசையிலிருந்துவரினும் அவற்றை ஏற்றுக் கொள்ளலே தருமமென்பர் அவர் .

இதுவே தமிழ்ப் பண்பாடாக இருந்தது .

தன் விழுமிய நாகரிகக் கூறுகளை அயலவர்களுக்குக் கொடுத்தும் , பிறரிடமிருந்து கொள்வன கொண்டும் உயிர்ப்பு அறாமல் தழைத்தது தமிழ்ப் பண்பாடு .

3.4.2 புதிய இலக்கிய வடிவங்கள்

ஐரோப்பியர்களின் வரவால் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் சிறுகதை , நாவல் , உரைநடை , நாடகம் , மேடைநாடகம் எனப் பல புதிய இலக்கிய வடிவங்கள் தோன்றின .

மாயூரம் வேதநாயகம் பிள்ளை , இராஜமய்யர் , மாதவையா போன்றோர் தமிழர் வாழ்வியலை இந்த இலக்கிய வடிவங்களில் சித்திரித்தனர் .

இவற்றின்வழி

1. பெண் அறிவும் ஆற்றலும் உடையவள் .

2. குடும்பப் பண்பையும் தமிழினப் பண்பையும் கட்டிக் காப்பவள் பெண் .

3. நீதிநெறிகளை யாரும் மறந்துவிடக்கூடாது .

4. நல்லோர் துன்பப்பட்டாலும் இறுதியில் இன்பம் எய்துவர் .

5. தெய்வம் நல்லோரைக் காக்கும் .

என்பன போன்ற கருத்துகள் சித்திரிக்கப்பட்டன .

சமூகக் கேடுகளாக அக்காலத்திலிருந்த தீண்டாமை , மது அருந்துதல் , சாதிக் கட்டுப்பாடு ஆகியவற்றை எதிர்த்துச் சிறுகதைகள் தீட்டப்பெற்றன .

இந்திய விடுதலைக் கருத்தையொட்டிப் பல நாடகங்கள் எழுதவும் நடிக்கவும் பெற்றன .

சமூகச் சீர்திருத்த உணர்வும் நாட்டு விடுதலை உணர்வும் வெள்ளமெனப் பொங்கிப் பரவின .

3.4.3 சமூகச் சீர்திருத்தங்கள்

ஐரோப்பியர் வரவால் பெருகிய கல்வியின் காரணமாகத் தமிழக இளைஞர்களிடையே கட்டுக்களிலிருந்து விடுபடும் ஒரு மனநிலை உருவாகிற்று .

வருணாசிரமம் அறிவுக்குப் பொருத்தமற்றது என்பதை உணர்ந்தனர் .

சாதிக் கலப்புமணங்கள் , கைம்பெண் மணம் ஆகியன மேற்கொள்ளப்பட்டன .

அக்கால உலகிருட்டைத் தலைகீழாக்கி

அழகியதாய் வசதியதாய்ச் செய்து தந்தார்

இக்கால நால்வருணம் அன்றி ருந்தால்

இருட்டுக்கு முன்னேற்றம் ஆவதன்றிப்

புக்கபயன் உண்டாமோ ?

என்று பாரதிதாசன் குறிப்பது போல் வருணாசிரமத்தை எதிர்த்துக் கொடி தூக்கப்பட்டது .

இந்தியாவிற்கு விடுதலை வேண்டுமெனில் எல்லோரும் வேற்றுமை துறந்து ஒன்றுபட வேண்டுமென்பது வற்புறுத்தப்பட்டது .

தாழ்த்தப்பட்டவர்கள் அடைந்த கொடுமை ஒவ்வொன்றும் சமூக வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டது .

இதன் உச்சநிலையைச் சித்திரிப்பதாக வைக்கம் போராட்டம் அமைந்தது .

தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழையும் உரிமை வேண்டி இப்போராட்டத்தை முன்னின்று நடத்தினார் பெரியார் ஈ.வே.இராமசாமி. தமிழ்நாட்டில் சோழவந்தான் காந்தி ஆசிரமத்தில் பயின்ற பார்ப்பன மாணவர்களுக்கும் , ஏனைய மாணவர்க்கும் தனித்தனித் தண்ணீர்ப் பானைகள் வைப்பதைக் கண்டிப்பதில் பெரியார் முன்நின்றார் .

பின்னர் இவர் காங்கிரசிலிருந்து விலகி நீதிக்கட்சியைச் சார்ந்து , பின் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கித் திராவிடர் கழகம் என்ற இயக்கத்தைக் கண்டார் .

ஓமகுண்டம் , தாலிக்கயிறு , வடமொழி மந்திரம் , சடங்குகள் இல்லாமல் மாலை மாற்றிக்கொள்ளும் சீர்திருத்தத் திருமணத்தை இவர் வழக்கத்திற்குக் கொண்டு வந்தார் .

3.4.4 பொது வாழ்வில் பெண்களின் பங்கு

ஐரோப்பியப் பண்பாட்டின் தாக்கம் பெண்ணிய வளர்ச்சிக்கு வித்திட்டது .

ஆங்கிலக் கல்வியின் பயனைப் பெறுவதில் பெண்களும் பங்கு கொண்டனர் .

ஆணுக்குப் பெண் நிகர் என்ற உணர்வு பிறந்தது .

விடுதலைப் போராட்ட இயக்கங்கள் பலவற்றில் பெண்களும் கலந்து கொண்டனர் ; முன்னின்று இயக்கங்களை நடத்தியும் சென்றனர் .

தென்னாப்பிரிக்காவில் இந்திய மக்களின் குடியுரிமைப் போரைக் காந்தியடிகள் தலைமை ஏற்று நடத்தினார் .

தில்லையாடி வள்ளியம்மாள்

தில்லையாடி வள்ளியம்மாள் என்ற தமிழ்ப்பெண் அப்போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார் .

அவரின் தியாகமும் நெஞ்சுரமும் அண்ணலைப் பெரிதும் கவர்ந்தன .

அவரைத் தம் பொதுவாழ்க்கையின் வழிகாட்டி என அண்ணல் பின்னர் குறிப்பிட்டார் .

தமிழ்நாட்டில் ஈரோடு நாகம்மை என்ற அம்மையார் விடுதலைப் போராட்டத்தில் ஒரு பெண் தலைவியாகப் பெரும்பங்கு ஆற்றினார் .

தென்னாட்டில் போராட்டம் நிகழ்த்த வேண்டும் என்றால் நாகம்மையாரைக் கேட்டுத்தான் கூறவேண்டும் என்று காந்தியடிகள் அவரின் தலைமையைப் பாராட்டியுள்ளார் . தொகுப்புரை

ஐரோப்பியர் வரவு தமிழ்நாட்டின் புறக்கோலத்தை மாற்றியது .

ஆயினும் , தமிழகத்தின் அகப்பண்பாட்டை ஐரோப்பிய நாகரிகம் மாற்றிவிடவில்லை .

உணவு உடையில் எளிமை , பற்று மிகுந்த இல்லறம் , மனிதநேயம் , வலிய வந்து நன்மை செய்யும் மனித உறவு ஆகியன தமிழர் பண்பாட்டுக் கூறுகளாக அமைந்து அயலவரைக் கவர்ந்தன .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. போப்பையரைக் கவர்ந்த நெறிகள் யாவை ?

விடை

2. புதிய இலக்கிய வடிவங்கள் சித்திரித்த தமிழர் வாழ்வியற் பண்புகள் யாவை ?

விடை

3. வ.உ.சி. அந்நிய ஆட்சியை எதிர்க்க என்ன செய்தார் ?

விடை

4. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் நடத்திய போராட்டத்தில் பங்கு பெற்ற தமிழ்ப் பெண்மணி யார் ?

விடுதலை இயக்கம் வளர்த்த பண்பாடு

பாட முன்னுரை

மதத்தாலும் , மொழியாலும் , இனத்தாலும் , சாதியாலும் வெள்ளையர் இந்திய நாட்டைப் பிரித்தாள முயன்றனர் .

பல மதங்கள் , பல பண்பாடுகள் , பல மொழிகள் எனப் பாகுபட்டிருந்த இப் பெருநாட்டை ஓரணியில் யார் காண முடியும் என்ற வினா எழுந்தது .

ஆங்கில ஆட்சியை எதிர்க்கவும் , அகற்றவும் வலிவின்றி இந்திய நாடு இருந்தது .

ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின்

வாராது போல் வந்த மாமணியைத் தோற்போமோ ?

என்று பாரதி வருந்திப் பாடுவது போல , இந்தியா என்ற பாரதம் தான் வளர்த்துக் கொண்ட பண்பாடு தேய்ந்து போகுமோ என்ற கவலை கொண்டது .

நாட்டைப் பற்றிய கவலை , அதைக் காத்துப் பேண வேண்டும் என்று ஆர்வத்திற்கு வித்திட்டது .

ஆர்வம் அந்நியரை எதிர்க்கின்ற வீரத்தையும் அனைவரையும் ஓரணியில் கொண்டு வருகின்ற சாதனையையும் நிகழ்த்தியது .

அடிமைப் பிடியில் தமிழகம்

இந்தியா வெள்ளையர்க்கு ஏன் அடிமைப்பட்டது ?

வெள்ளையர்கள் அவ்வளவு வலிமை உடையவர்களா ?

இல்லை !

ஆர்க்காட்டு நவாபு தளர்ந்திருந்த வேளையில் ஐந்நூறு பேரைக் கொண்டு பிரிட்டிஷ் கம்பெனி அவரைத் தோல்வியுறச் செய்து அப்பகுதியைப் பிடித்துக் கொண்டது .

அந்த ஐந்நூறு பேரில் இருநூறு பேர் ஆங்கிலேயர் ; முந்நூறு பேர் இந்தியர் .

இதோ திரு.வி .

கல்யாணசுந்தரனார் கூறுவதைக் கேளுங்கள் .

“ இந்தியாவை வீழ்த்தியது எது , பிரிட்டிஷ் வாளா ?

அன்று பின்னை எது ?

இந்திய வாளே .

சாதிமதவெறி , சம்பிரதாயச் சிறுமை , கண்மூடி வழக்க ஒழுக்கம் , தீண்டாமை , பெண்ணடிமை , இந்து முஸ்லீம் வேற்றுமை முதலிய இரும்பு எஃகுத்துண்டங்கள் வாளாக வடிந்தன .

அவ்வாள் - அவ்விந்திய வாள் இந்தியாவை வீழ்த்தியது "

இந்தக் கருத்தே தமிழர்களுக்கும் பொருந்தும் .

கல்வியறிவு இல்லாமையால் எதற்கும் பயம் .

சிப்பியைக் கண்டால் அஞ்சும் அச்சம் , மந்திரம் பில்லி சூனியம் இவற்றில் நம்பிக்கை ஆகியவற்றால் தமிழகமும் வெள்ளையர்க்கு அடிமைப்பட்டது .

4.1.1 முதல் விடுதலைக் குரல்

வெள்ளையரின் ஆதிக்கத்தை எதிர்த்து முதல் விடுதலைக் குரலை எழுப்பியவன் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையப்பட்டின் சிற்றரசன் வீரபாண்டியக் கட்டபொம்மனேயாவான் .

வானம் பொழியுது பூமி விளையுது

மன்னன் கும்பினிக்கு ஏன் கொடுப்பேன் ?

சீனிச்சம்பா நெல்லு ஏன் கொடுப்பேன் ?

அந்தச்

சீரகச்சம்பா நெல்லு ஏன் கொடுப்பேன் ?

என்னைப் போல் வெள்ளாண்மை இட்டானோ துரை

இங்கிலீசு வெள்ளைக் காரனுந்தான் ?

என்று நாட்டுப்புறப் பாடலில் கட்டபொம்மனின் வீரத்தை மக்கள் பாடுகின்றனர் .

கட்டபொம்மன் , ஊமைத்துரை , மருது சகோதரர்கள் , புலித்தேவர் ஆகியோர் வெள்ளையரை எதிர்த்து வீரமுரசு அறைந்தனர் .

எல்லாப் பாளையக்காரரும் அன்று ஒன்றுபட்டிருந்தால் தமிழகம் வெள்ளையர்க்கு ஆட்பட்டிராது . ஒற்றுமை இல்லாமை , தமிழர்களின் பெரிய குறைகளில் ஒன்றாகும் .

4.1.2 தீவிரவாத ஆதரவு

வட இந்தியாவில் கோபால கிருஷ்ண கோகலே தலைமையில் மிதவாத இயக்கமும் பாலகங்காதர் திலகர் தலைமையில் தீவிரவாத இயக்கமும் தோன்றின .

பாரதியார் , வ.உ.சிதம்பரம் பிள்ளை , சுப்பிரமணிய சிவா போன்றோர் திலகர் ஆதரவாளர்களாக இருந்தனர் .

சூரத் நகரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் மோதிக் கொண்டனர் .

வன்முறை நிகழ்ச்சிகளால் மாநாடு குலைந்தது .

தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களே மிகவும் தீவிரம் காட்டினர் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது .

வ.ரா. என்ற விடுதலை வீரர் தமிழகத்தில் தீவிரவாதம் பின்பற்றப்பட்டது குறித்து எழுதுகையில் ,

திலகர் பாரதியார் வ .

உ.சிதம்பரம்

“ மிதவாத வழியைப் பின்பற்றத் திலகர் உடன்பட வில்லை என்பது சரித்திரம் .

திலகரின் இந்தத் தீர்மானம் மனமறிந்து கஷ்டங்களை வருவித்துக் கொண்ட தீர்மானமாகும் .

தீர்மானத்துக்கு மனம் உவந்து ஆதரவு அளித்த பெரியார்களில் பாரதியார் ஒருவர் "

என்று கூறுகிறார் .

படிப்படியாகத் தீவிரவாதம் தமிழகத்தில் காந்தியடிகளின் வழிக்கு வந்து விட்டது .

மிதவாதம் , தீவிரவாதம் என்ற இரண்டும் காந்திய நெறியில் இயங்கும் பரிணாமம் ஏற்பட்டது .

4.1.3 காந்தியடிகளின் தலைமை

தமிழகத்தில் காந்தியடிகளுக்கு முன்பே விடுதலை இயக்கம் தொடங்கி விட்டது .

வ.உ.சிதம்பரம் பிள்ளை , பாரதியார் , சுப்பிரமணிய சிவா , சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர் , வ.வே.சு. ஐயர் போன்றோர் இந்திய விடுதலை இயக்கம் தோன்றப் பெரும்பணி ஆற்றினர் .

1905-இல் , வங்காளத்திலிருந்து விபின் சந்திரபிரபு சென்னை வந்தார் .

சென்னைக் கடற்கரையில் விபினசந்திர பிரபுவின் கூட்டம் நிகழ்ந்தது .

கூட்டத்தின் முடிவில் அந்நியத் துணி எரிப்பு இயக்கம் நிகழ்ந்தது .

பெருந்தீ மூட்டப்பட்டு அந்நியத் துணிகள் எரிக்கப்பட்டன .

ஆனால் இதற்குப்பின் இந்தியா முழுதும் காந்தியடிகளின் தலைமையும் வழிகாட்டலும் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில் , தமிழகத் தீவிரவாதமும் காந்தியடிகளோடு ஒன்றியது .

இந்த நிலையிலேயே பாரதியார்

வாழ்கநீ எம்மான் !

இந்த

வையத்து நாட்டில் எல்லாம்

தாழ்வுற்று வறுமை மிஞ்சி

விடுதலை தவறிக் கெட்டுப்

பாழ்பட்டு நின்ற தாமோர்

பாரத தேசம் தன்னை

வாழ்விக்க வந்த காந்தி

மகாத்மா நீ வாழ்க !

வாழ்க !

என்று போற்றும் நிலை உருவாகியது .

ஆனால் இதற்குப் பல ஆண்டுகள் முன்னரே தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் காந்தியடிகள் நிகழ்த்திய உரிமைக் கிளர்ச்சியில் பங்கேற்று அவர் மனத்தைக் கவர்ந்திருந்தனர் .

தென்னாப்பிரிக்காவில் அண்ணல் புரிந்த கிளர்ச்சியில் பெருமளவு தமிழர் பங்கேற்றனர் ; நாகப்பன் , வள்ளியம்மை என்ற இருவர் போராட்டத்தில் உயிரிழந்தனர் .

காந்தியடிகள் பின்னாளில்

“...இப்போரில் தமிழ்மக்கள் புரிந்த துணையைப் போல வேறு எவ்விந்தியரும் புரியவில்லை .

அவர்களுக்கு நன்றியறிதல் காட்ட அவர்கள் நூல்களைப் பயில வேண்டுமென்று நினைத்தேன் .

அப்படியே அவர்கள் மொழியைப் பயில்வதில் மிக ஊக்கமாக ஒரு திங்கள் கழித்தேன் .

அம்மொழியைப் பயிலப் பயில அதன் அழகை உணரலானேன்.. "

என்று தம் பத்திரிகையில் எழுதியுள்ளார் .

போராட்ட நெறிகள்

தமிழகத்தில் தொன்று தொட்டு வந்தது அகிம்சை நெறி .

சமண பௌத்த சமயங்களின் வரவாலும் , சைவ சமயப் போதனையாலும் , கொல்லாமை , புலால் உண்ணாமை ஆகியன பரவியிருந்தன .

இன்னா செய்தார்க்கும் இனிய செய்யுமாறு திருக்குறள் அறிவுறுத்தியது .

இந்தக் கொள்கைகளை உயிராகக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்குக் காந்தியடிகள் போதித்த அகிம்சை நெறி மிகவும் ஏற்புடையதாக இருந்தது .

அது என்ன அகிம்சை என்று கேட்கின்றீர்களா ? இதோ கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை கூறுகின்றார் பாருங்கள் !

குத்தீட்டி ஒருபுறத்தில் குத்த வேண்டும்

கோடாரி ஒருபுறத்தைப் பிளக்க வேண்டும்

ரத்தம்வரத் தடியால் ரணமுண் டாக்கி

நாற்புறமும் பலர்உதைத்து நலியத் திட்ட

அத்தனையும் நான் பொறுத்தே அகிம்சை காத்தும்

அனைவரையும் அதைப் போல நடக்கச் சொல்லி

ஒத்துமுகம் மலர்ந்து உதட்டில் சிரிப்பி னோடும்

உயிர்துறந்தால் அதுவேஎன் உயர்ந்த ஆசை

என்று கூறுகிறார் .

தன்னை வருத்திக் கொண்டு பிறரைத் திருத்துவதே அகிம்சை நெறி .

அன்னி ஞிமிலி என்ற சங்ககாலப் பெண் அரசரின் கொடுமைகளை எதிர்த்து உண்ணா நோன்பால் அரசர் மனத்தை மாற்றினார் .

இந்த உண்ணா நோன்பு அறமே காந்தியடிகளால் ஒரு பெரிய ஆயுதமாகக் கொள்ளப்பட்டது .

4.2.1 அந்நியத் துணி மறுப்பு

இந்தியத் துணி தமிழகத்திலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் 17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது .

' லெக்கி ' என்ற இங்கிலாந்து வரலாற்று ஆசிரியர் என்ன சொல்கிறார் தெரியுமா ?

“ பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் பலவித இந்தியத் துணிகளும் சிறப்பாக மஸ்லின்களும் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன .

அவை அந்நாட்டில் கம்பளமும் பட்டும் நெய்வோரைக் கதிகலங்கச் செய்தன .

1700-இலும் 1721-இலும் பார்லிமெண்ட்டில் சட்டங்கள் இயற்றப்பட்டு இந்தியத் துணிகள் தடுக்கப்பட்டன "

இந்த நிலை மாறி இந்தியாவிலிருந்து பருத்தியைக் கொண்டுபோய் மான்செஸ்டர் நகரில் ஆடையாக்கி இந்தியச் சந்தைக்குக் கொண்டுவரும் நிலை தோன்றியது .

கிளைவ் இந்தியா வந்தபோது இங்கிலாந்து 74,575,000 டாலர் கடனில் இருந்தது .

இந்தியச் சந்தையில் , இந்தக் கடன் நீங்கி இங்கிலாந்தில் செல்வம் கொழித்தது .

இந்த நிலையை மாற்றவே கதர் இயக்கம் தோன்றியது .

கையால் நூற்றுக் கையால் நெய்த ஆடையைப் பலரும் ஏற்றனர் .

அந்நியத்துணியை மக்கள் வெறுத்து ஒதுக்கினர் .

இதனால் இங்கிலாந்தின் பொருளாதாரம் நலிந்தது .

4.2.2 ஒத்துழையாமை

ஆங்கிலேயரின் சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துப் போவதில்லை என்ற இயக்கம் தோன்றியது .

தமிழகத்தில் இந்த ஒத்துழைப்பு மறுப்பு நன்கு நடைபெற்றது .

1919 ஏப்ரலில் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது .

நெருங்கிய பயன்சேர் ஒத்துழையாமை

நெறியினால் இந்தியாவிற்கு

வரும் கதி கண்டு பகைத்தொழில் மறந்து

வையகம் வாழ்க நல்லறத்தே !

என்று இந்த ஒத்துழையாமை இயக்கத்தை பாரதியார் வாழ்த்துகிறார் .

இளைஞர்களே !

கல்லூரிகளை விட்டு வெளியேறுங்கள் !

வழக்கறிஞர்களே !

நீதிமன்றங்களை விட்டுவிலகுங்கள் !

மக்கள் பிரதிநிதிகளே !

சட்டசபைகளைப் புறக்கணியுங்கள் என்று காந்தியடிகள் கூறியதை ஏற்றுத் தமிழகத்தில் பலர் ஒத்துழையாமைப் பணியில் ஈடுபட்டனர் .

பலர் தாம்பெற்ற பட்டங்களைத் துறந்தனர் .

இந்நிலையில் காங்கிரசிலிருந்து சிலர் பிரிந்து சட்டசபைக்குள் நுழைந்து போராடலாம் என்று முயன்றனர் .

அம்முயற்சி தோல்வியுற்றது .

வெள்ளையர் ஆட்சி தந்த பல நன்மைகளைத் தமிழக இளைஞர்கள் வெறுத்து ஒதுக்கினர் .

4.2.3 உப்பு அறப்போர்

உப்புச் சத்தியாக்கிரகம்

உப்புச் சத்தியாக்கிரகம் என்ற புகழ்பெற்ற அறப்போரைக் காந்தியடிகள் வட இந்தியாவில் ' தண்டி ' என்ற இடத்தில் நடத்தினார் .

உப்புக்கு வரிவிதித்ததைக் கண்டித்து எழுந்த இந்தப் போராட்டம் தமிழகத்திலும் நிகழ்ந்தது .

போராட்டத்திற்குத் தலைமை தாங்கி மூதறிஞர் ராஜாஜி நடைப்பயணத்தைத் தொடங்கினார் . வேதாரணியத்தில் உப்புக் காய்ச்ச முயன்று கைதாயினர் பலர் .