57

1930இல் திருச்சியிலிருந்து வேதாரணியத்திற்குப் புறப்பட்ட நடைப்பயணத்தில் பாடப்பெற்ற பாட்டை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை எழுதியிருந்தார் .

கத்தியின்றி ரத்தமின்றி

யுத்த மொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை

நம்பும் யாரும் சேருவீர் !

என்று தொடங்கும் அந்தப் பாட்டு வரலாற்றுப் புகழ் பெற்றதாக விளங்கியது .

தமிழகத்தில் நல்லிணக்கம்

இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள் இந்து , முஸ்லீம்களிடையே பிரிவினையை உண்டாக்கித் தாம் தொடர்ந்து இடையூறு இல்லாமல் நாட்டை ஆளலாம் எனக் கருதினர் .

ஆனால் இரு சமயத்தைச் சார்ந்த பெரியோரும் இதற்கு இடம் ஏற்படாதவாறு நடந்து கொண்டனர் .

இந்துக்களின் மனம் புண்படக் கூடாது என்பதற்காக முஸ்லீம்கள் பசுவதை செய்வதைக் கைவிடுவதென்று முடிவு கட்டினர் .

தமிழ்நாட்டில் இந்த நல்லிணக்கம் முழுமையானதாகவே இருந்தது .

இந்து முஸ்லீம் கலவரங்கள் இங்கு நிகழவில்லை .

1936 , 1937ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்த இசுலாமிய மாநாடுகளில் திரு.வி .

கலியாணசுந்தரனார் தலைமை தாங்கி இசுலாமிய சமயச் சிறப்பையும் , இசுலாமிய இந்து சமயங்கள் ஒத்துப்போக வேண்டிய தேவையையும் சிறப்பாக வலியுறுத்தியிருக்கிறார் .

தமிழர் பண்பாட்டில் என்றும் மதவெறி ஊடுருவியதில்லை ; எனவே இங்கே ஒரு ‘ நவகாளி ’ நிகழவில்லை .

( இசுலாமியரும் இந்துக்களும் தாம் சகோதரர் என்ற உண்மையை மறந்து , ஒருவரோடு ஒருவர் மோதி , இரத்த ஆற்றைப் பெருக்கெடுக்க வைத்த இடம் வங்காளத்தில் உள்ள நவகாளி ஆகும்)

4.3.1 போராட்டத்தில் ஒருமைப்பாடு

இந்தியா விடுதலைக்காகப் போராடியபோது அதன் மக்களிடையே வியக்கத்தக்க ஒற்றுமை உருவாகியது .

சாதிபேதங்கள் , மதவேறுபாடுகள் ஆகியன மறைந்து இந்தியர் எல்லோரும் ஒரு நிறை என்ற நிலை உருவாகியது .

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்

அந்நியர் புகல்என்ன நீதி

என்று பாரதி பாடியதற்கேற்ப ஓர் ஒருமை உணர்வு பிறந்தது .

தமிழகத்தில் இந்த ஒருமைப்பண்பு நன்கு வெளிப்பட்டது .

காங்கிரஸ் மேடையிலே ஐயர் , ஐயங்கார் , ஆச்சாரியார் , முதலியார் , செட்டியார் எனத் தலைவர்கள் பலர் வேறுபாடின்றி உட்கார்ந்திருந்தனர் .

இமயமலையில் ஒருவன் இருமினால் குமரியிலிருந்து மருந்துகொண்டு ஓடுவோம் என்று பாரதிதாசன் கூறுவது போல ஓர் உணர்ச்சியடிப்படையிலான ஒற்றுமை உருவாகியது .

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்

எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு

சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்

தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே !

-பொய்யும்

ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே ! - இனி

நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே !

-கெட்ட

நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே !

என்று பாரதியார் பாடும் பாட்டு இந்த ஒருமைப்பாட்டைக் காட்டும் .

வேறுபாடுகளை மறந்து கடலெனத் திரண்ட சமூகத்தின் ஆன்ம வலிமையை வெள்ளை அரசு எதிர்த்து நிற்க முடியவில்லை

.4.3.2 வேற்றுமையில் ஒற்றுமை

இந்திய விடுதலையை நோக்கமாகக் கொண்டு போராடிய காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடுகள் மலிந்தன .

தமிழ்நாட்டின் மிகப்பெரிய தேசியத் தலைவராக விளங்கிய பெரியார் ஈ.வெ.இராமசாமி காங்கிரஸை விட்டு விலகினார் .

திரு.வி .

க. தொழிற்சங்க இயக்கங்களை வளர்த்தார் ; இராஜாஜியின் தலைமையோடு கருத்து வேறுபாடு கொண்டார் .

அன்னி பெசன்ட் அம்மையார் அயல்நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர் .

இவர் இந்தியாவிற்கு சுய ஆட்சி வேண்டும் என்று கிளர்ச்சி செய்தார் .

இவரைத் தமிழகத்தில் ஆதரித்தவர்களும் எதிர்த்தவர்களும் இருந்தனர் .

திலகர் தமிழ்நாடு வந்தபோது ,

“ அன்னி பெசண்ட் நிகழ்த்திவரும் கிளர்ச்சியால் நாட்டில் சுயராஜ்ய வேட்கை வளர்ந்திருப்பது கண்கூடு .

பெசண்ட் அம்மையார் கிளர்ச்சியால் நலம் விளைகிறதா தீமை விளைகிறதா என்று பார்த்தேன் .

நலம் விளைதல் கண்டேன் ; துணை போகிறேன். " என்று மேடையில் பேசினார் .

பெசண்ட் அம்மையாரைத் திரு.வி .

க. ஆதரித்தார் ; கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம்பிள்ளை எதிர்த்தார் .

காங்கிரசிலேயே இவ்வளவு வேறுபாடுகள் இருக்கவும் , ' ஜஸ்டிஸ் ' கட்சி என்ற நீதிக்கட்சி சுய ஆட்சிக் கிளர்ச்சியை எதிர்த்தது .

ஜஸ்டிஸ் கட்சி பிராமணர் அல்லாதார் நலத்திற்காகப் போரிட்டது .

இவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் தமிழகத்தில் அமைதி நிலவும் வகையில் தலைவர்களிடையே நேசம் இருந்தது .

கொள்கைகளில் மாறுபட்டவர்களாயிருந்தாலும் தமிழகத் தலைவர்கள் மனித நேயத்தையும் சான்றாண்மையையும் விட்டுக் கொடுக்கவில்லை .

எடுத்துக்காட்டுக்கு ஒன்று காணலாம் .

பெரியார் ஈ.வெ.இராமசாமி நாத்திகர் .

திரு.வி .

க. ஒருமுறை பெரியார் இல்லத்தில் தங்கினார் ; காலையில் ஆற்றுக்குச் சென்று குளித்துக் கரை ஏறினார் .

நாத்திகரான பெரியார் அவர்க்குத் திருநீறு ( விபூதி ) அளித்தார் .

திரு.வி .

க. வியப்படைந்தார் .

பெரியார் விருந்தினர் கடமை என்றார் .

இந்தப் பண்பாடு தமிழரின் சகிப்புத்தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு இல்லையா ?

4.3.3 தொழிற்சங்கம் கண்ட தமிழகம்

1918-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27-ஆம் நாளில்தான் தமிழ்நாட்டில் முதன் முதலில் தொழிற்சங்கம் தோன்றியது .

திவான்பகதூர் கேசவப் பிள்ளை , திரு.வி .

க , பி.பி. வாடியா , செல்வபதி செட்டியார் , இராமாஞ்சலு நாயுடு ஆகியோர் முயற்சியில் பிறந்த இந்தச் சங்கம் தொழிலாளர் நலன்களுக்காகப் போராடியது .

“ கதவடைப்பும் வேலை நிறுத்தமும் அடிக்கடி நிகழ்ந்தன .

ஒவ்வொரு வேலை நிறுத்தமும் சமதர்ம வேதத்தின் ஒருபடலம் என்பது என் கருத்து "

என்று திரு.வி .

க. கூறுகிறார் .

மார்க்சியம் என்ற பொதுவுடைமைக் கொள்கை இத்தொழிற்சங்க அமைப்பால் தமிழ்நாட்டில் வேர் ஊன்றியது .

திரு.வி .

க. கூறுகிறார் :

“ மகம்மதுவின் தெய்வ ஒருமையும் கிறிஸ்துவின் அன்பும் புத்தர் தர்மமும் அருகர் ( சமணர் ) அகிம்சையும் கிருஷ்ணன் நிஷ்காமியமும் குமரன் அழகும் தட்சிணாமூர்த்தியின் சாந்தமும் பொதுமை அறத்தை வேராகக் கொண்டவை .

அப்பொதுமை அறம் ஏன் ஓங்கவில்லை ?

சில தடைகள் மறிக்கின்றன .

அவை யாவை ?

சாம்ராஜ்யங்கள் , மடங்கள் , சம்பிரதாயங்கள் , கட்டுப்பாடுகள் , கண்மூடி வழக்க ஒழுக்கங்கள் முதலியன .

இவற்றைப் படைத்து வளர்ப்பது எது ?

முதலாளி தொழிலாளி வேற்றுமை .

இவ்வேற்றுமையை ஒழிக்கவல்லது பொருட் பொதுமை .

பொருட்பொதுமை மகம்மதுவின் தெய்வ ஒருமையும் கிறிஸ்துவின் அன்பும் பிறவும் மன்பதையில் கால் கொள்வதற்குத் துணை செய்யும் ஆற்றல் வாய்ந்தது என்னும் நுட்பம் எனக்குப் புலப்பட்டது .

அதனால் மார்க்சியம் என் உள்ளத்தைக் கவர்ந்தது "

எளியோரின் வாழ்க்கை நலம் கருதிய நோக்கில் தொழிலாளர் இயக்கம் தோன்றி வளர்ந்தமை இக்கூற்றின் வழியாக அறியலாம் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. அந்நியத் துணி எதிர்ப்புத் தமிழகத்தில் எப்போது தோன்றியது ?

விடை

2. கதர் என்பது யாது ?

விடை

3. ஒத்துழையாமை இயக்கம் பற்றிக் கூறுக .

விடை

4. தமிழகத்தில் உப்புச் சத்தியாக்கிரகம் யார் தலைமையில் நிகழ்ந்தது ?

விடை

5. அன்னி பெசண்ட் பற்றித் திலகர் யாது கூறினார் ?

தமிழகத்தில் விடுதலை இயக்க விடிவெள்ளிகள் - I

தமிழ்நாட்டில் இந்திய விடுதலை உணர்வை விதைத்து வளர்த்த பெருமைக்குரியவர்கள் பலர் ; அவர்களில் சிலரைக் குறித்து இங்குக் காணலாம் . இப்பெரியோர்கள் நாட்டுத் தொண்டிற்குத் தம்மை முழுதும் ஒப்படைத்துக் கொண்டவர்கள் .

தமிழர் பண்பாட்டு வரலாற்றில் இவர்களுக்குப் பேரிடம் உண்டு .

எழுத்து , பேச்சு , செயல் ஆகிய மூன்றாலும் இவர்கள் செய்த பணிகள் அளவிடற்கரியன .

இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழர் பங்கு கணிசமானது என்பதை இவர்கள் வரலாறு காட்டும் .

துன்பப் பழஞ்சுமையைத் - தூக்கித்

தூளாக்கி யிட்டுச் சுதந்தர பூமியில்

இன்பப் பயிர்வளர்ப்போம் - மாந்தர்

எல்லோரும் சேர்ந்து புதுமைக்கனி உண்போம்

என்று ச.து.சு.யோகியார் என்ற விடுதலைக் கவிஞர் பாடுகிறார் .

தமிழகத்தில் விடுதலை இயக்கக் கிளர்ச்சியில் நூற்றுக்கணக்கானவர் மடிந்தனர் .

பல்லாயிரவர் சிறைபுகுந்தனர் .

ஓர் ஒருமை உள்ளம் உருவாகிய காலமாக அக்காலம் திகழ்ந்தது

4.4.1 வ.உ.சிதம்பரமும் சுப்பிரமணிய பாரதியும்

மாமன் மைத்துனன் என்று உறவு சொல்லிப் பழகியவர்கள் வ.உ.சிதம்பரம் பிள்ளையும் சுப்பிரமணிய பாரதியும் .

“ சொந்த நாட்டில் பரர்க்கடிமை செய்தே துஞ்சிடோம் " என்று முழங்கியவர் வ.உ.சி .

வ.உ.சிதம்பரம்

பாரதி

விஞ்ச் துரையோடு அவர் நிகழ்த்திய வீர உரையைப் பாரதியார் கவிதையாகப் படைத்துள்ளார் .

சிறையில் கிடந்து நலிந்த சிதம்பரம் பிள்ளைக்குச் சிலநாள் உணவு அனுப்பிய ஒருவரும் சிறைக்குள் தள்ளப்பட்டார் .

கொடுத்தனன் உணவு கொஞ்சநாள் ; அதனைத்

தடுத்திட அவனைத் தள்ளினன் சிறையுள்

என்று வ.உ.சி. எழுதுகிறார் .

சாக்குத்துணியில் கால்சட்டை , கைச்சட்டை , குல்லா அணிந்து சிறையில் சிதம்பரம் பல தொழில் புரிந்தார் .

அவன் என்னைச் சணல்கிழி யந்திரம் சுற்றெனச்

சுற்றினேன் .

என்கைத் தோல் உரிந்து ரத்தம்

கசிந்தது .

என்னருங் கண்ணீர் பெருகவே

திங்கட் கிழமை ஜெயிலர் என் கைத்தோல்

உரிந்ததைப் பார்த்தான் .

உடன் அவன் எண்ணெய்

ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாய்ப்

பகலெல்லாம் வெயிலில் நடந்து தள்ளிட

அனுப்பினன் .

அவனுடைய அன்புதான் என்னே !

என்று சுயசரிதையில் கூறுகிறார் .

விடுதலை இயக்க மென்ற வேள்விக்குச் சிதம்பரனார் தம் இரத்தத்தை நெய்யாக ஊற்றினார் எனக் கூறின் மிகை ஆகாது .

சுப்பிரமணிய பாரதி கவிதைகளால் விடுதலை உணர்வை எழுப்பியவர் .

தாகூரைக் காட்டிலும் பாரதியே இந்திய தேசியத்தின் குரலைக் கவிதையில் உணர்வுற எழுப்பியவர் .

மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்

மாண்பினை இழப்பரோ

என்று எல்லா இன்பங்களையும் இழந்து துன்பப்பட்டவர் பாரதி .

பாரதி ஒரு பெரிய சீர்திருத்தவாதி .

தீண்டாமையைக் கடுமையாக அவர் எதிர்த்தார் .

சாதியில் தாழ்த்தப்பட்ட தம்போலா என்பவர் வீட்டில் போய் உட்கார்ந்து அவர் உணவு உண்டார் .

கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்டவர்க்குப் பூணூல் அணிவித்து இன்று முதல் நீ பிராமணன் என்று கூறினார் .

இதோ பாரதியார் பாட்டை இசைத்தட்டிலிருந்து கேளுங்கள் .

“ சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் ”

4.4.2 திரு.வி . க.வும் பெரியார் ஈ. வெ.ராவும்

திரு .

வி.கலியாணசுந்தர முதலியார் தமிழ்நாட்டுக் காங்கிரசில் குறிப்பிடத்தக்க தலைவர் .

மேடைதோறும் பேசித் தம் நாவன்மையால் தேசிய விடுதலை உணர்வை வளர்த்தவர் .

தமிழ்த்தென்றல் என்று இவரைச் சிறப்புப் பெயரால் குறிப்பிடுவர் .

திரு.வி .

க. அரசியலில் சமரசத்தையும் சன்மார்க்கத்தையும் வளர்த்தவர் .

தமிழகத்தில் முதன் முதல் தொழிற்சங்கம் தோன்ற விதையிட்டவர் .

தொழிலாளர்களிடையே பண்பாட்டை வளர்த்தவர் .

இவர் நடத்திய தேசபக்தன் , நவசக்தி என்ற இரு பத்திரிகைகளும் அக்கால விடுதலை இயக்க நிகழ்ச்சிகளைச் சித்திரிப்பன .

தமிழ்நாட்டில் வகுப்பு வேற்றுமை வளராமல் தடுத்த தொண்டு திரு.வி .

க.வைச் சாரும் .

வன்முறை இல்லாத அரசியலை , தொழிலாளர் இயக்கத்தை நடத்திய பெருமையும் திரு.வி .

க. அவர்களுக்கு உண்டு .

ஆயிரக்கணக்கான தொழிலாளர் வன்முறையில் இறங்க முயன்றபோது ,

திரு .

வி.க .

“ உங்களை நோக்கி விண்ணப்பம் செய்கிறேன் .

கூட்டத்தை அமைதியாக நடத்தப் போகிறீர்களா ?

குழப்பத்தில் முடிக்கப் போகிறீர்களா ?

கூட்டம் அமைதியாக நடந்தால் நான் உயிருடன் வீட்டுக்குத் திரும்புவேன் .

இல்லையேல் இக்கடலில் பாய்ந்து உயிர் துறப்பேன் .

என்ன செய்யப் போகின்றீர்கள் ?

என்னை வீட்டுக்கு அனுப்பப் போகிறீர்களா ?

கடலுக்கு அனுப்பப் போகிறீர்களா ? "

என்று கேட்டார் .

கூட்டம் அலை அடங்கிய கடலானது .

இத்தகைய பண்பாட்டை வளர்த்தவர் திரு.வி .

க திரு.வி .

க. அவர்களின் இல்லறம் தமிழ்ப் பண்பாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டு .

ஆறே ஆண்டுகள்தாம் அவர் மனைவி வாழ்ந்தார் .

அக்காலத்தில் திரு.வி .

க. அவருக்கு திருக்குறளைக் கற்பித்தார் .

பொருளின் மீது நாட்டமில்லாத அறவாழ்வு இவர்களுடையது .

பெரியார் ஈ.வெ.இராமசாமி தமிழகக் காங்கிரசின் பெருந்தலைவர்களில் ஒருவராக இருந்தவர் .

பெரியார் காந்தியடிகளிடம் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார் .

திரு.வி .

க. பெரியாரைப் பற்றிக் கூறுகையில் ,

பெரியார் ஈ.வே.இராமசாமி

“ முன்னாளில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தொண்டு செய்தவர் என்ற முறையில் எவர்க்கேனும் பரிசில் வழங்கப் புகுந்தால் முதற்பரிசில் நாயக்கருக்கே செல்வதாகும் .

தமிழ்நாட்டுக் காங்கிரஸ் நாயக்கர் உழைப்பை நன்றாக உண்டு கொழுத்தது .

அவர் காங்கிரஸ் வெறி கொண்டு நாலாபக்கமும் பறந்து பறந்து உழைத்ததை யான் நன்கு அறிவேன் "

என்கிறார் .

காங்கிரசிடம் மனம் மாறுபட்டுப் பிரிய வேண்டிய சூழலில் பெரியார் ஜஸ்டிஸ் கட்சியைச் சார்ந்தார் .

பின் சுயமரியாதை இயக்கத்தை வளர்த்தார் .

பின் திராவிடர் கழகத்தை உருவாக்கினார் .

அவரது 70 ஆண்டுக்கால வாழ்க்கை தமிழக அரசியல் வரலாற்றில் புறக்கணிக்க இயலாத ஒன்று .

தமிழர் பண்பாட்டில் சீர்திருத்தம் என்ற பகுதியில் பெரியாரே பேரிடம் பெறுவார் .

வைக்கம் நகரில் பெரியாரே மாபெரும் போரில் ஈடுபட்டுத் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துச் சிறை சென்றார் .

வைக்கம் வீரர் என்ற சிறப்புப் பெயர் பெரியாருக்கு உரியது . 4.4.3 சுப்பிரமணிய சிவாவும் வ.வே.சு ஐயரும்