58

சுப்பிரமணிய சிவா

தமிழக விடுதலைக்குச் சுப்பிரமணிய சிவா ஆற்றிய தொண்டு மறக்க முடியாதது .

வ.உ.சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் ஆற்றிய அனல் கக்கும் சொற்பொழிவுகள் வெள்ளையரசைக் கதிகலங்கச் செய்தன .

சுப்பிரமணிய சிவா வெள்ளை அடக்கு முறையை எதிர்த்துச் சிறை சென்றார் .

சிறை வாழ்வு அவருக்குத் தொழு நோயைத் தந்தது .

சிவா திலகர் வழி நின்றவர் .

தீவிரத் தேசியவாதம் தமிழகத்தில் வளர வழிசெய்தவர் .

வ.வே.சுப்பிரமணிய ஐயர் இலண்டனில் வழக்கறிஞர் கல்வி பயிலும் போது புரட்சி வீரர் வீரசாவர்க்கரைச் சந்தித்து அவருடைய முயற்சிகளுக்குத் துணை நின்றவர் .

பாரதி நடத்திய இந்தியா பத்திரிகையில் இவர் தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் தேச பக்திக் கனலை வளர்த்தன .

வீரசாவர்க்கர் ஐயரை ' என் அன்பிற்குரிய ரிஷி ' என்று அழைத்துக் கடிதம் எழுதியுள்ளார் .

மணியாச்சியில் ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்ற புரட்சி இளைஞர் வாஞ்சிநாதனுக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது .

வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்தவர் ஐயர்தான் என்று கூறப்படுகிறது .

ஐயர் திருக்குறளை அழகாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் .

திரு.வி .

க.விற்குப் பிறகு தேசபக்தன் நாளிதழ் பொறுப்பை ஏற்றார் .

ஐயரின் விடுதலை இயக்கப் பணிகள் தமிழக விடுதலை வரலாற்றில் முக்கிய பக்கங்களாகத் திகழ்கின்றன .

தமிழக விடுதலை இயக்க விடிவெள்ளிகள் - II

மேற்கூறியவர்களைத் தவிர மேலும் பலர் இந்திய விடுதலை இயக்கப் பணிகளில் குறிப்பிடத்தக்கவர் ஆவர் .

அவர்களைக் குறித்துக் கீழ்வரும் பிரிவுகளில் சில செய்திகளைக் காணலாம் .

4.5.1 வள்ளியம்மையும் நாகம்மையும்

இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் சார்பாகப் பெண்கள் பலர் கலந்து கொண்டனர் .

அவருள் குறிப்பிடத்தக்கவர்கள் தில்லையாடி வள்ளியம்மையும் ஈரோட்டு நாகம்மையும் ஆவர் .

தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் இளமைப் பருவத்திலேயே காந்தியடிகள் நிகழ்த்திய உரிமைப்போரில் கலந்து கொண்டு சிறை சென்றார் .

பதினாறு வயதுப் பெண்ணான வள்ளியம்மை இப்போரில் காட்டிய மனஉறுதி காந்தியடிகளைக் கவர்ந்தது .

இப்பெண் இளம்வயதில் இறந்து விட்டாள் .

பின்னர் காந்தியடிகள் தமிழகம் வந்தபோது தில்லையாடி கிராமத்திற்கு வந்து வள்ளியம்மையை நினைவுகூர்ந்து நெகிழ்ந்தார் .

ஈரோட்டு நாகம்மையார் பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களின் துணைவியார் .

தம் கணவரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டுச் சிறைபுகுந்தார் .

' தென்னாட்டில் போராட்டம் நிகழ்த்த வேண்டுமாயின் ஈரோட்டு நாகம்மையாரைக் கேட்டுத்தான் கூற வேண்டும் ' என்று காந்தியடிகள் ஒரு முறை கூறினார் .

4.5.2 இராஜாஜியும் சத்தியமூர்த்தியும்

‘ இராஜாஜி ’

இராஜாஜி என் மனசாட்சியின் குரல் என்று ஒரு முறை காந்தியடிகள் கூறினார் .

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் என்ற பெயர் இராஜாஜி எனப் பலராலும் மதிப்போடும் அன்போடும் கூறப்பெற்றது .

தீண்டாமை , மது ஆகிய தீமைகளை இராஜாஜி மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடினார் .

“ இராஜகோபாலாச்சாரியாரும் யானும் கதராண்டியானோம் .

( கதர்த் துணியை உடுத்தியமையால் ) அரசராயிருந்த ஆச்சாரியார் ஆண்டியானார் .

சத்தியாக்கிரகப் போர்க்களத்தில் நின்றோம் "

என்று திரு.வி .

க. எழுதுகிறார் .

நீண்ட சிறைவாசத்தை இராஜாஜி மனமுவந்து ஏற்றார் .

உப்பு சத்தியாகிரகத்தில் தமிழகத்தின் தலைவராயிருந்து வேதாரண்யத்தில் இவரே இக்கிளர்ச்சியை நிகழ்த்தினார் .

விடுதலை பெற்ற இந்தியாவில் இராஜாஜி கவர்னர் ஜெனரலாகவும் பின்பு தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் பணியாற்றினார் .

தீரர் என்று போற்றப்பட்ட சத்தியமூர்த்தி தமிழ்நாட்டுக் காங்கிரசை வளர்த்தவர் .

சத்தியமூர்த்தி மேடைப் பேச்சில் வல்லவர் .

சட்டமன்றத்தில் சத்தியமூர்த்தி ஆற்றிய பணி பலரைக் கவர்ந்தது .

பெருமைக்குரிய தமிழக முதல்வராக இருந்த கர்மவீரர் காமராஜ் சத்தியமூர்த்தியால் உருவாக்கப் பெற்றவர் ஆவர் .

4.5.3 பத்திரிகை வளர்த்த பண்பாடு

இந்திய விடுதலை இயக்கத்திற்குப் பல பத்திரிகைகள் பெருந்தொண்டு புரிந்தன .

மகாகவி பாரதியின் இந்தியா பத்திரிகை விடுதலைக் கிளர்ச்சியைக் குறித்துப் பல செய்திகளை மக்களுக்கு வழங்கியது . பாரதியாரே முதன் முதல் அரசியல் கார்ட்டூன் வரைந்தவர் .

இந்தியா பத்திரிகை வெளியிட்ட உணர்ச்சிமிக்க சொற்பொழிவுகள் , கட்டுரைகள் பெருந் தீயெனப் பரவின .

இப்பத்திரிகை ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்டது .

திரு.வி .

க. நடத்திய தேசபக்தன் வெள்ளையரால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது .

நவசக்தி என்ற ஏட்டில் திரு.வி .

க. அரசியல் , சமுதாயம் , தொழிற்சங்கம் குறித்த செய்திகளை வழங்கினார் .

ஜி.சுப்பிரமணிய ஐயர் என்ற தேசபக்தர் பாரதியாரை சுதேசமித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராக்கினார் .

சுதேசமித்திரனில் பாரதியார் தலையங்கம் எழுதியதில்லை .

இதைப் பற்றித் தேச பக்தர் வ.ரா-

“ அய்யர் பாரதியாரைத் தலையங்கம் எழுதும்படி விட்டதில்லையாம் .

அரசியலில் பாரதியார் அதிதீவிரவாதி என்ற சாக்கே தலையங்கம் எழுதாதபடி அவர் தடுக்கப்பட்டதற்குக் காரணமாயினும் , வேறு விஷயங்களைப் பற்றிக் கூடப் பாரதியார் சொந்தமாகக் கட்டுரைகள் எழுதும்படி விடப்பட்டதில்லையாம் ”

என்று கூறுகிறார் .

இந்தக் கட்டுப்பாட்டாலேயே பாரதி மித்திரனைவிட்டு வெளியேறினார் .

இந்தியா பத்திரிகை அவருடைய வீர சாகசங்களை வெளிப்படுத்தியது .

ஆனந்தவிகடன் , கல்கி பத்திரிகைகளின் வாயிலாகப் பேராசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆற்றிய பணிகள் மிகச் சிறந்தவை .

நையாண்டி செய்யும் போக்கில் வெள்ளையர்களின் நிர்வாகத்தைக் குத்திக் காட்டிய அவருடைய எழுத்தாற்றல் பலரால் சுவைக்கப்பட்டது .

வ.வே.சு.ஐயர் , டி.எஸ்.சொக்கலிங்கம் , இந்து பத்திரிகை ஆசிரியர் கஸ்தூரிரங்க ஐயங்கார் ஆகியோர் பத்திரிகை ஆசிரியர்களாக ஆற்றிய பணிகள் மிகவும் குறிப்பிடத்தக்கன .

தமிழ்நாட்டுப் பத்திரிகை உலகம் பல தடைகளையும் அடக்கு முறைகளையும் தாண்டி விடுதலை உணர்வை மக்களிடையே எழுப்பியது .

அடிமை என்ற நிலை மாறி உரிமை மிக்க வாழ்வு மலர இவை செய்த பண்பாட்டுப் புரட்சி வரலாற்றில் என்றும் நின்று நிலவுவதாகும் .

தொகுப்புரை

இருநூற்றாண்டுக் கால அடிமை வாழ்வு ஒரு பேரிருளை இந்தியாவில் உண்டாக்கிவிட்டது ; தமிழகமும் இச்சிக்கலில் தவித்தது .

இதனை அகற்ற நிகழ்ந்த நிகழ்ச்சிகள் , இவ்விருளை அகற்றப் போராடினோர் ஆகியோரைப் பற்றி அறிமுக நிலையில் சில செய்திகள் கூறப்பட்டன .

விடுதலை இயக்க வரலாறு மிகப் பெரியது ; பல பரிமாணங்கள் கொண்டது .

இவற்றைப் பல நூல்கள் வழியாக அறியலாம் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. வ.உ.சிதம்பரனாரின் சிறை வாழ்வு பற்றிக் கூறுக .

விடை

2. திரு.வி .

க. நடத்திய பத்திரிகைகள் யாவை ?

விடை

3. வ.வே.சு. ஐயர் பற்றிக் குறிப்பு எழுதுக .

விடை

4. பெரியார் காங்கிரசுக்கு ஆற்றிய பணி குறித்துத் திரு.வி .

க. கூறுவன யாவை ?

விடை

5. சுதேசமித்திரனிலிருந்து பாரதி விலகக் காரணம் யாது ?

நிகழ்காலப் பண்பாடு

பாட முன்னுரை

நீண்ட கால அடிமை இருளிலிருந்து இந்தியா விடுதலை பெற்றது .

கி.பி.1947ஆம் ஆண்டு ஆகஸ்டு பதினைந்தில் தன் விடுதலைப்பாட்டை இந்தியா வானவெளியெலாம் ஒலிக்க முழங்கியது .

' இரவில் வாங்குகின்றனர் என்று விடியுமோ ' என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அன்றே பாடியதை இன்றும் புதுக்கவிதை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் .

மாநிலங்கள் மத்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்பில் புதிய இந்தியாவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டன .

மொழிவழி மாநிலங்கள் தவிர்க்க முடியாத தேவையாகி மாநிலங்கள் பிரிவுபட்டன .

இன்றுவரை மாநிலங்களின் பிரிவுகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன .

மாநிலங்களின் எல்லைகள் சிக்கலுக்குள்ளாயின .

இவ்வாறு ஒரு பெரிய கூட்டமைப்பிலிருந்து துண்டு துண்டாக மொழி அடிப்படையிலான பிரிவுகள் பிறக்கும் ஒரு நிலை தவிர்க்க முடியாத ஒன்றாக உருவாகிவிட்டது .

அவ்வாறு உருவான பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான பண்பாடு அமைந்திருப்பது தெளிவாகப் புலனாகியது .

பண்பாட்டு வளர்ச்சியில் இடர்ப்பாடுகள்

மொழி சார்ந்த பண்பாடுகளை வளர்க்க உதவும் என்ற பெருநோக்கில்தான் மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப் பெற்றன . ஆனால் தமிழ்நாட்டில் மாறாகப் பண்பாட்டு வளர்ச்சியைத் தடுக்கும் இடர்ப்பாடுகள் தாம் இன்று மிகுந்துள்ளன .

தமிழ் மொழி புழங்க வேண்டிய துறைதோறும் மாற்று மொழிகளின் ஆதிக்கம் , தமிழ்ப் பயன்பாட்டில் வேற்றுமொழிச் சொல்லாட்சி , சாதிய அரசியல் , கட்சிப் பூசல் என மொழியின் ஆக்கத்தையும் பண்பாட்டின் தரத்தையும் சிதைக்கும் பழக்கங்கள் தமிழ்நாட்டில் நிலை கொள்ளத் தொடங்கின .

5.1.1 ‘ தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை ’

“ வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் " என்று காலம் காலமாகச் சொல்லிக் கொண்டிருந்த நிலை மாறியது .

வேங்கடம் ஆந்திர மாநிலத்திற்கு உரியதாயிற்று .

மாலவன் குன்றம் ( திருப்பதி ) வடஎல்லை என்ற நிலை மாறி வேலவன் குன்றமாகிய திருத்தணி வடஎல்லையாயிற்று .

தேவிகுளம் பீர்மேடு கேரள மாநிலத்திற்கு உரியவை ஆயின .

எல்லைகள் குறுகுதல் பற்றிய கவலை தமிழர்க்கு இருந்தது .

ஆனால் அதனைவிடப் பெரிய இடர்ப்பாடு தமிழர்க்கு ஏற்பட்டது .

தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் ஆங்கிலம் ; அலுவலகங்களில் ஆங்கிலம் ; மத்திய அரசுத் துறைகளில் இந்தி ; இசையில் தெலுங்கு ; வழிபாட்டில் , மணவினைகளில் இழவுச்சடங்குகளில் சமஸ்கிருதம் என்று அயல்மொழிகள் தமிழர் வாழ்வின் மூச்சுக்குழலை நெருக்கின .

மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை ?

தோப்பில் நிழலா இல்லை ?

தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த்தெருவில்

தமிழ்தான் இல்லை

( தணிப்பரிதாம் = தணிப்பு அரிதாம் , தணிப்பது ( நீக்குவது ) அரிதானதாகும்)

என்று பாரதிதாசன் கூறுமாறு ஆயிற்று .

நிலப்பரப்பில் தமிழ்நாடு சில பகுதிகளை இழந்தது .

தமிழ் மொழி வழங்கும் இடங்களும் சுருங்கியமையால் பலவகையான நெருக்கடிகளுக்கு ஆளாகித் தமிழர் தம் அடையாளத்தை இழந்துகொண்டு இருக்கும் நிலை நிகழ்காலத்திற்குச் சொந்தமாயிற்று .

பெரும்பான்மையான தமிழர்கள் நிலம் , மொழி ஆகியவற்றில் ஏற்பட்ட இழப்புகள் குறித்துக் கவலைப்படவில்லை .

5.1.2 ‘ தமிங்கிலம் ’

எல்லை குறுகிய தமிழகத்தில் பேச்சிலும் எழுத்திலும் தமிழ் பல திரிபுகளைப் பெற்றது .

தூய தமிழ் என்பது மிக அரிதாக ஆயிற்று .

ஆங்கிலம் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் அளவற்றதாகி விட்டது .

பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசவும் எழுதவும் பெரும்பான்மையான தமிழர்கள் எந்தவிதமான மறுப்பும் காட்டவில்லை .

தமிழும் ஆங்கிலமும் கலந்த ஒரு பேச்சு வழக்கு உருவாயிற்று .

காசி ஆனந்தன் கூறுவது போலத் தமிங்கிலம் என்ற புதிய மொழியும் உருவாகிவிடும் சூழல் இன்றைய தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது .

இந்தி எதிர்ப்பு , தமிழ்வழிக் கல்வி முனைப்பு , தமிழிசை மன்றப் பணிகள் , தமிழ் மக்கள் இசைவிழா , தமிழ் வழிபாட்டியக்கப் போர் , தமிழ் ஆட்சிமொழி அறிவிப்பு , தமிழ்த் திருமணங்கள் , சுயமரியாதைத் திருமணங்களும் குடும்ப நிகழ்வுகளும் எனப் பெருகிய முயற்சிகளெல்லாம் முழுதுமாகப் பயன் தந்தன எனக் கூற இயலவில்லை .

தன் பண்பாட்டின் மீது நிகழ்ந்த படையெடுப்புகளைத் தமிழன் எதிர்ப்பேயின்றி ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டான் .

5.1.3 சாதிய உணர்வு

தமிழரிடையே சாதியம் அழுத்தமாக வேரூன்றிக் குருதியின் பண்பென நிலைபெற்றுவிட்டது .

சாதிச் சங்கங்கள் அரசியலிலும் சமூக வாழ்விலும் பெரும்பங்கு பெற்றுவிட்டன .

மெல்ல மெல்ல அரசியல் சக்கரத்தின் அச்சாணியே சாதிதான் என்று கூறும் நிலை உருவாகியிருக்கிறது .

சாதியைக் கண்டறிந்து கொள்வதில் தமிழன் அதிக நாட்டமுடையவனாக இருக்கிறான் .

அறிவியல் வளர்ந்த இருபதாம் நூற்றாண்டில் சாதிக் கலவரங்கள் ஆங்காங்குத் தோன்றி விடுகின்றன .

அரசு சாதிய உணர்வை அழிக்கப் பல முயற்சிகளைச் செய்து வருகின்றது .

கலப்பு மணங்கள் , சமபந்தி விருந்துகள் , சமத்துவபுரங்கள் , பொதுச் சுடுகாடுகள் எனப் பல திட்டங்கள் உருவாக்கப் பெற்றுள்ளன .

எனினும் இவற்றை மீறிச் சாதி உணர்ச்சி பெருகி உள்ளது .

படிக்காதவர்களைவிடப் படித்தவர்களிடையே சாதி உணர்ச்சி வலிமையாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது .

சாதியம் என்ற இந்தப் பண்பாட்டுக் குறையைக் களைந்து கொள்ளத் தமிழர்களால் முடியும் .

' யாதும் ஊரே யாவரும் கேளிர் ' என வாழ்ந்தவர்கள் அவர்கள் .

' கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர் ' எனக் கேட்டவர்கள் அவர்கள் .

' சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் ' என அறிவுறுத்தியவர்கள் அவர்கள் .

' சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே ' என வருந்தியவர்கள் அவர்கள் .

இன்று சாதிக் கலப்பு மணங்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது .

சாதி பார்க்காமல் ஏனைத் தகுதிகளைப் பார்த்து மணம் செய்து கொள்வோர் எண்ணிக்கை மிகுதியாயுள்ளது .

பெரியாரின் நீண்ட காலப் பேருழைப்பின் பயன் இது எனக் கூறவேண்டும் .

5.1.4 கட்சிப் பூசல்கள்

ஒரு காலத்தில் தமிழன் மதத்தால் வேறுபட்டுப் பகையும் வெறுப்பும் தம்முள் வளர்த்து மடிந்தான் எனில் , இன்று அரசியல் கட்சி பேதங்களால்தான் சமுதாய வீதியில் குருதியாற்றை உருவாக்கி யிருக்கிறான் .

கட்சிப் போர்களால் சமூக ஒழுக்கமும் , தமிழர் பண்பாடும் சிதைந்திருக்கின்றன .

பொதுத் தொண்டு என்ற நிலையிலிருந்து அரசியல் நீண்ட தொலைவு விலகிவிட்டது . பதவிக்காக எதையும் இழக்கவும் , எதையும் செய்யவும் துணிந்த சமூகநிலை இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருப்பது போலவே தமிழகத்திலும் இருக்கிறது .

அரசியல் காரணமாகப் படுகொலைகள் நிகழ்கின்றன .

' கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்ய முடியும் ’ என்ற நிலை மாறிவிட்டது .

தேர்தல்களில் பணம் , சாதி , வன்முறை ஆகியவற்றின் செல்வாக்கு தவிர்க்க இயலாமல் மிகுந்து கொண்டிருக்கின்றது .

அரசியலில் அவ்வப்போது தவறு செய்பவர்களைக் குறித்து ஆய்வு செய்து தீர்ப்பு வழங்குவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் வழக்கம் நாடெங்கும் இப்போது உள்ளது அல்லவா ?

இதனால் அரசியல்வாதிகளின் ஊழல்கள் ஓய்வுபெற்ற நீதிபதிகளை யெல்லாம் மீண்டும் பணிக்குக் கொண்டு வந்திருக்கின்றன .

கலவரத்தை ஏற்றுக்கொள்ளாத உள்ளங்கள் தேர்தல் வாக்குச் சாவடிகளைப் புறக்கணித்த நிலையில் பெட்டியில் விழும் வாக்குச் சீட்டுகளின் விழுக்காடு கணிசமாகக் குறைந்துள்ளது .

அடிக்கடித் தேர்தல் என்பதை மக்கள் ஏற்காத நிலை உருவாகியிருக்கிறது .

தமிழர் பண்பாட்டில் நலிவு சேர்த்தவை

தமிழர் பண்பாட்டில் மிகப்பெரிய அளவில் நலிவுகளை உண்டாக்கியவை திரைப்படங்கள் , அரசியல் கட்சிகள் , வன்முறைக் கருத்தில் நம்பிக்கை கொண்ட கூட்டங்கள் , மது அருந்துவதைத் தவிர்க்க முடியாத பழக்கமாகப் பழகிவிட்ட சமூகம் ஆகியன தமிழர்கள் சமூகத்திற்கு இன்று மிகப்பெரும் நலிவு சேர்த்து வருகின்றன .

பொருள் தேடுதலில் பல குறுக்கு வழிகளை இன்றைய சமூகம் நாடியிருக்கிறது .

குற்றம் செய்வதில் ஓர் உறுத்தலை இன்றைய மனச்சாட்சி இழந்திருக்கிறது .

தன் நெஞ்சு தன்னைச் சுடும் என்பது எல்லோருக்கும் அமைந்த பொது இலக்கணமாக இல்லை .

பொது நிலையில் தனி மனித ஒழுக்கம் பெரிதும் இறங்கிய நிலை எய்தியிருக்கிறது .

5.2.1 திரைப்படம்

மிகப்பெரிய அறிவியல் சாதனங்களாகப் பயன்படக்கூடும் எனக் கருதப்பெற்ற திரைப்படம் , தொலைக்காட்சி ஆகியன இன்று தமிழனுக்கு பொழுதுபோக்குக் கருவிகளாகி அவனுடைய உண்ணும் நேரம் உறங்கும் நேரத்தையும் பறித்துக் கொண்டுவிட்டன .

திரைப்படமே தமிழனின் பண்பாட்டு முதுகெலும்பாகிவிட்டது .

திரைப்படத்தில் வருவன எல்லாம் உண்மையாக நிகழக்கூடுமென அப்பாவிப் பாமரத் தமிழன் நம்புகிறான் .

திரைப்பட நடிகர்களைத் தமிழன் வழிபாடு செய்கிறான் .

திரைப்பட நடிகைகளின் அழகை ஆராதிக்கிறான் ; நடிகைக்குக் கோயிலே கட்டியவன் தமிழன் என்ற ' பெருமை ' யை அறுவடை செய்திருக்கிறான் .

தொலைக்காட்சியை ஓர் அறிவூட்டும் கருவியாக மாற்றிக் கொள்ளத் தமிழன் எண்ணவில்லை .

5.2.2 வன்முறைப் பண்பு

தமிழனிடத்தில் முன் எப்போதுமில்லாத அளவுக்கு வன்முறைப் பண்பில் நம்பிக்கை வளர்ந்துள்ளது .

மறியல்கள் , வேலை நிறுத்தங்கள் , பணி செய்வாரைச் செய்யவிடாது தடுக்கும் செயல்கள் , கதவடைப்புகள் , வழக்குகள் எனப் பிணக்கு மனப்பாங்கு பெருகியுள்ளது .

உலக முழுவதும் இவை இருந்தாலும் , வழிவழியாக அறநெறிவழி ஒழுகும் மனச்சான்றுடைய தமிழினமும் காலவயப்படவேண்டுமா என்பதே நம்முன் தோன்றும் வினா .

புரட்சி என்பது மனமாற்றத்தால் விளைவது ; குறிப்பிட்ட மாற்றத்தைச் சமூகத்தில் உண்டாக்க முனைவது .

ஆழ்ந்த சிந்தனை உடையவர்களே சமூகத்தின் நன்மை கருதிப் புரட்சிகளைக் கொண்டுவரமுடியும் .

உடல் வலிமையாலும் , கலவரம் செய்யும் நோக்கத்தாலும் நன்மைகளை அடைந்துவிடக் கருதுபவர்கள் புரட்சியாளராக ஆக மாட்டார்கள் .

இவர்கள் செய்வது கலகம் ஆகும் .

இத்தகைய கலக மனப்பாங்கு தமிழகத்தில் பல இடங்களில் உருவாகியிருக்கிறது .

இதன் விளைவாகத் துப்பாக்கிச் சூடுகள் , நீதி விசாரணைகள் , உயிரிழப்புகள் போன்றவை நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன .

உடல் வலிமை மிக்க சிலருக்குச் சான்றோர்களின் கூட்டம் அஞ்சி நடுங்கி ஒடுங்கிப் போகும் நிலை உருவாகியிருக்கிறது .

5.2.3 மது , போதை , பாலுணர்ச்சி

இந்தியாவில் பல மாநிலங்களில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்த இயலாது போனது போலவே தமிழகத்திலும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த இயலவில்லை .

சமயங்கள் , அறநிறுவனங்களெல்லாம் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து , இளங்கோவும் சாத்தனாரும் எண்ணியது போல இன்று எண்ணவில்லை .

விதை நெல்லாகவும் நாற்றாகவும் அமையும் இளைஞர் கூட்டம் போதை மருந்துக்கு இரையாகி வருகிறது .

பாலுணர்ச்சிக் குற்றங்கள் எண்ணிக்கையில் கூடி வருகின்றன .

இவையெல்லாம் தமிழர் பண்பாட்டில் இன்று படிந்துள்ள கறைகள் ; குறைகள் .

இவற்றைக் கழுவித் துடைக்கவும் நீக்கவும் தமிழர்களால் முடியும் .

தமிழகம் சிற்சில போது தவிர ஏனைய காலங்களில் எல்லாம் அமைதிப் பூங்காவாகவே இருந்திருக்கின்றது .

நம்பிக்கை தரும் சில நிகழ்வுகள்

மேற்காட்டிய சிலவற்றை நீக்கிக் கண்டால் தமிழர் பண்பாட்டில் இன்று ஒளிமிகுந்த பக்கங்கள் பலப்பல உருவாகியுள்ளன .

வழிமாறிச் செல்லும் சமூக சிந்தனைகளை நெறிப்படுத்த அரசும் , சமூக உணர்வு கொண்ட அமைப்புகளும் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளால் நம்பிக்கை தரும் மாற்றங்கள் தொடங்கியுள்ளன .

ஒருங்கிணைந்த சமூக முன்னேற்றம் , மனிதநேயம் , சமய நல்லிணக்கம் , பெண்ணிய வளர்ச்சி போன்றவை குறிப்பிடத்தக்கன .

5.3.1 சமூக ஒருமை உணர்வு

தமிழர் பண்பாட்டில் இன்று ஒளி மிகுந்த பக்கங்கள் பலப்பல உருவாகியுள்ளன என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும் .

தாழ்த்தப் பட்டவர்களாகவும் , பிற்படுத்தப்பட்டவர்களாகவும் சமுதாய வீதியில் புறக்கணிக்கப்பட்டவர்கள் இன்று கணிசமாக முன்னேறியுள்ளனர் .

தீண்டாமையை இன்று தமிழகம் போற்றவில்லை .

நிறபேத உணர்வுகளும் , பிறப்பால் கற்பிக்கப்பட்ட உயர்வு தாழ்வுகளும் இன்று நாகரிகமற்றவை என்ற கருத்து வலிமை பெற்றுவிட்டது .

சமய சாதிச் சண்டைகளைப் பெரும்பான்மையான மக்கள் ஒப்பவில்லை . பொது வாழ்வில் சமய நல்லிணக்கம் போற்றப்பட்டு வருகின்றது .