59

இந்து , இசுலாம் , கிறித்துவம் என்ற மூன்று சமயங்கள் தமிழகத்தில் ஒருமைப்பாட்டுணர்வைப் பேணி வருகின்றன .

தமிழகக் கல்வி நிலையங்களில் அனைத்துச் சமய இலக்கியங்களும் பாடமாக அமைந்துள்ளன .

தாயுமானவரையும் , மஸ்தான் சாகிபையும் , வீரமாமுனிவரையும் , குமரகுருபரரையும் , வேதநாயகரையும் , இராஜமையரையும் ஒப்பிட்டு ஆராயும் உள்ளங்களை இங்குக் காணலாம் .

பலப்பல முன்னேற்றமான விளைவுகளும் விளைச்சல்களும் தமிழ்ச் சமூகத்தில் இக்காலத்தில் தோன்றியுள்ளன .

அவற்றுள் சிலவற்றை இங்குக் காணலாம் .

5.3.2 முன்னேறும் பெண்ணியம்

தமிழகப் பெண்களின் போக்கில் பெரிய மாறுதல்களை இக்காலக் கல்வியும் , வேலைவாய்ப்புகளும் உருவாக்கியுள்ளன .

முத்துலட்சுமிரெட்டி முதன் முதல் மருத்துவக்கல்வி பயிலும் பெண்ணாகக் கல்லூரிக்குள் நுழைந்தபோது இருந்த வியப்பும் , எதிர்ப்பும் மறைந்து பெண்களே பெரும்பான்மையவராகத் தொழிற்கல்வித் துறைகளில் இடம்பெறும் நிலை வளர்ந்துள்ளது .

பெண்கள் பணி வாய்ப்புப் பெறக்கூடிய சூழலை உருவாக்கும் வகையில் தமிழக அரசு 33 விழுக்காட்டுப் பணியிடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கியுள்ளது .

தற்குறியாய் , உலகியல் அறியா மூடமாய் , அடுப்பங்கரை ஒன்றே அறிந்தவளாய் , நகைகளின் சுமைதாங்கியாய் , அலங்காரப் பதுமையாய் , ஆணுக்கு அடிமையாய் , மண்ணெண்ணெய்க்குப் பலிப்பொருளாய் , வரதட்சணையால் முடிவு செய்யப்படும் வாழ்க்கைப் பொருளாய்ப் பெண் இருந்த காலம் மாறிவிட்டது .

எனினும் தமிழ்ச் சமூகம் முழுமையும் பெண்ணைப் போற்றுவதாகவும் ஆணுக்குச் சமமாகக் கருதுவதாகவும் கூறமுடியவில்லை .

பெண் குழந்தையைக் கருவில் அழிப்பது , பிறந்தபின் எருக்கம்பால் ஊட்டிக் கொல்வது போன்ற இரக்கமற்ற செயல்கள் சமூகத்தின் சில பகுதிகளில் நிகழாமலில்லை .

குன்றக்குறவன் ஒருவன் கடவுளை வேண்டிப் பெண் பெற்றான் என்று ஐங்குறுநூறு கூறுகின்றது .

இக்கருத்தும்

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல

மாதவம் செய்திட வேண்டு மம்மா

என்று கவிமணி கூறிய கருத்தும் இன்று சில பகுதிகளில் போற்றப் பெறவில்லை .

பெண்ணென்று பூமிதனிற் பிறந்துவிட்டால் - மிகப்

பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்

என்று பாரதி கூறுவது போலப் பெண்கள் துன்பப் பிறவிகளாக அல்லற்படுவதும் நம் பண்பாட்டின் ஒரு கூறுதான் .

இன்று பெண்ணியக்கம் வலிமை பெற்றுள்ளது .

பெண் போராடும் உள்ளம் பெற்றுள்ளாள் .

தமிழர் பண்பாட்டில் கண்ணகியும் கண்ணம்மாவும் உயிர்ப்புற்று உலா வருகின்றனர் .

காவல்துறையில் , ஆட்சித் துறையில் , வான்படை , கப்பல் துறைகளில் , பொறியியல் , மருத்துவ அறிவியல் துறைகளில் பெண்கள் பங்கேற்கும் மறுமலர்ச்சி தமிழகத்திலும் தோன்றியுள்ளது .

திரைகடல் ஓடி திரவியம் தேடியவரின்

இன்றைய நிலை

தமிழர் பொருளீட்டும் முயற்சியில் திரைகடல் கடந்தனர் .

கால்டுவெல் கூறுவது போல எங்கெங்கெல்லாம் பிழைக்க வாய்ப்பு உண்டோ அங்கெல்லாம் எறும்புச் சாரிகளாகத் தமிழர் ஏகினர் .

கரும்புத் தோட்டங்களிலும் , தேயிலைக் காடுகளிலும் , காப்பி , ரப்பர் விளையுமிடங்களிலும் , வணிகச் சந்தைகளிலும் , அலுவலகங்களிலும் , செல்வர் இல்லங்களிலும் பற்பல பணி செய்தனர் .

சில நாடுகளில் மதிக்கப்பட்டனர் ; சில இடங்களில் துன்புறுத்தப்பட்டனர் .

இலங்கை , சிங்கப்பூர் , மலேசியா , பர்மா , மொரீசியசு , ரீயூனியன் , தென் ஆப்பிரிக்கா , பிரான்சு , பிஜித்தீவு , மேற்கிந்தியத் தீவுகள் , தென் அமெரிக்கா , வட அமெரிக்கா , கனடா ஆகிய நாடுகளுக்கெல்லாம் சென்று குடியேறினர் தமிழர் .

இலங்கையில் தமிழர் அடைந்த இன்னல்கள் எண்ணிலவாகப் பெருகிவிட்டதை இன்றைய வரலாறு காட்டுகின்றது .

அகதிகளாகத் தமிழகம் நோக்கிக் கண்ணீர் வற்றி உலர்ந்த கண்களோடு பல்லாயிரவர் தமிழகத்திற்குள் நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது .

வளைகுடா நாடுகளிலும் , அமெரிக்காவிலும் சென்று பொருள் தேடிவரும் தமிழர் தாயகம் திரும்பி வசதியான வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர் .

இந்நாடுகளைத் தவிர இந்தியாவின் வடபகுதியில் பல நகரங்களிலும் சென்று பிழைப்பு மேற்கொண்ட தமிழர் பலர் .

அமெரிக்கா , ஆப்பிரிக்கா , மொரீசியசு போன்ற நாடுகளில் சென்ற தலைமுறைகளில் சென்று தங்கிவிட்ட தமிழர்கள் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் மறந்துவிட்டனர் .

தங்கள் மூதாதையர் தமிழ்நாட்டுக்காரர்கள் என்பதைத் தவிர இவர்களுக்கு வேறு ஏதும் தெரியவில்லை .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. தமிழக எல்லைகள் பெற்ற மாற்றங்கள் யாவை ?

விடை

2. தணிப்பரிதாம் துன்பமிது எனக் கவிஞர் எதைக் கூறுகிறார் ?

விடை

3. சாதி உணர்வை ஒழிக்க அரசு ( தமிழ்நாட்டில் ) மேற்கொள்ளும் முயற்சிகள் யாவை ?

விடை

4. திரைப்படத்தைக் குறித்துப் பாமரத் தமிழன் என்ன கருதுகிறான் ?

விடை

5. தமிழக அரசு பணி வாய்ப்பில் பெண்களுக்கு என்ன நன்மை செய்துள்ளது ?

விடை

6. தமிழர் குடியேறிய நாடுகள் சிலவற்றைக் கூறுக . இன்றைய தமிழர் நாகரிகம் : சில காட்சிகள்

தமிழ்நாட்டிலும் நகரங்களில் இன்று தூய தமிழ்ப் பண்பாடு முழுமையாக உள்ளது என்று கூறுவதற்கில்லை .

பண்பாட்டின் அடிநிலைகளில் பெரும் மாறுதல்கள் இல்லாவிட்டாலும் பண்பாட்டுக் கூறுகள் சிதைவுறவே செய்திருக்கின்றன .

கீழே உள்ள காட்சிகளே பண்பாட்டுச் சிதைவுக்குச் சான்று :

வீட்டு அமைப்பு

வாசலில் குரோட்டன்ஸ் வளர்க்கும் நாகரிகம் .

கதவுகள் அடைக்கப்பட்டு ' நாய் ஜாக்கிரதை ' அறிவிப்பு .

‘ உத்திரவின்றி உள்ளே வரக்கூடாது ’ அறிவிப்பு .

திண்ணைகள் இல்லாத வீட்டமைப்பு .

பக்கத்து வீட்டுக்காரர்களைப் பற்றி ஏதும் தெரியாத அடுக்கு வீட்டமைப்பு .

சில அன்றாட சமூகக் காட்சிகள்

‘ இன்று ரொக்கம் நாளை கடன் ’ என்று கடைகளில் ஏமாற்றும் அறிவிப்பு .

‘ இங்கு விற்கப்படும் பலகாரங்கள் நெய்யில் செய்யப்பட்டவை அல்ல ’ - உணவுவிடுதிகளில் நயமான அறிவிப்பு .

‘ மதுபானம் உடலைக் கெடுக்கும் ’ ‘ மது அருந்தாதீர்கள் ’ என மதுப்புட்டிகளில் அறிவிப்பு .

‘ எச்சில் துப்பாதீர் , சுவரொட்டி ஒட்டக்கூடாது ’ போன்ற எச்சரிக்கைகள் .

ஆண் - பெண் படங்களோடு கழிப்பறைகள் .

பொதுவிடங்களில் நீர் பருகச் சங்கிலி கட்டிய குவளைகள் .

‘ இலஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ கூடாது ’ என்று அலுவலகங்களில் அறிவிப்புகள் .

‘ ஒரு ரூபாய்க்கு ஒரு கோடி - நாளை குலுக்கல் ’ பேருந்து நிலையங்களில் இந்நாட்டு மன்னர்களின் கூவல்கள் .

இவையெல்லாம் நம் பண்பாட்டில் விளைந்துள்ள மாற்றங்களைக் காட்டுவன .

மக்கட் தொகை மிகுதியாக இருக்கக்கூடிய சூழல் , நுகர்வுப் பொருள்களைப் பெறுவதில் ஒரு பெரும் துன்பத்தை உருவாக்கியிருக்கிறது .

இந்த நிலையில் விருந்தோம்பல் என்பது மறக்கப்பட்ட ஒரு பண்பாக இருக்கிறது .

வரவேற்பறை , முகமன் பேச்சு , அதிகப்படியான நிலையில் ஒரு தேநீர் என்ற அளவில் நெருக்கமான உறவுகள் கூடக் கத்தரிக்கப்படுகின்றன .

தாய் பிள்ளை உறவுக்கிடையிலும் கூட வேற்றுமை உருவாகியுள்ளது .

மருமகள் வருகை , சொத்துப்பிரிவினை போன்றவை பேதங்களை உண்டாக்கியிருக்கின்றன .

கருச்சிதைவு , வரதட்சிணை , பெண் வெறுப்பு , குறுக்கு வழியில் பொருள் ஈட்டும் முயற்சி , விளம்பரப் புகழ் பெற்றுவிடும் ஆர்வம் ஆகியன பண்பாட்டைப் பெரிதும் சிதைத்திருக்கின்றன .

இந்நிலையில் நகரங்களும் சிற்றூர்களும் எந்த நிலையில் உள்ளன எனக் காணலாம் .

5.5.1 நகரப் பண்பாடு

வேகமாகத் தொழில்மயமாகிக் கொண்டிருக்கும் நகரங்களில் புதிய புதிய குடியிருப்புகள் , வேலைக்குப் போகும் ஆண் பெண் சிறார்கள் , ஆங்கிலப் பள்ளிகளில் சீருடைகளில் வந்திறங்கும் அரும்புகள் , இரவைப் பகலாகக் காட்டும் சோடியம் விளக்குகள் ஒளிவெள்ளம் பரப்பும் கடைத் தெருக்கள் , ஆடை அணிகலன்களை விற்கும் பெரிய மாளிகைகள் போன்ற கடைகள் , நடைபாதைகளில் மலிவுவிலைப் பொருட்களைக் கூவி விற்கும் சிறு வணிகர்கள் , பல துறைகளிலும் தேர்ந்த மருத்துவர்களால் நடத்தப்பெறும் தனியார் மருத்துவ மனைகள் , ஐந்து நட்சத்திர உணவகத் தங்கும் விடுதிகள் , சாலைகளில் ஓயாது போய்க் கொண்டிருக்கும் பேருந்துகள் , கடற்கரைகளில் காற்று வாங்க மாலையில் மொய்க்கும் மக்கள் திரள் , மக்கள் பார்வை படரும் இடங்களில் மிகப்பெரிய விளம்பரப் பலகைகள் , பாராட்டுக்குரிய செயல் புரிந்தோர்க்குச் சிலைகள் , சிறிய பெரிய கோயில்கள் , காதைத் துளைக்கும் ஒலிபெருக்கிகள் , எவ்வளவு திட்டங்களை வகுத்தும் மாற்றமுடியாத நடைபாதைக் குடிசைகள் , தெருவோரக் குழாயிலிருந்து ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீர் , விழியற்றவரைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்று ஓரமாய்விடும் சமூகத் தொண்டர் , கோடையில் குலைகுலையாய்க் கட்டி விற்கப்படும் இளநீர் , தர்பூஸ் பழங்கள் , வெள்ளரிப் பிஞ்சுகள் இப்படிப் பலப்பல காட்சிகள் நம் கண்களை நகர்ப்பகுதிகளில் வந்து தழுவும் .

நகரப் பண்பாடு புறநிலையில் மேற்கு நாடுகளின் தாக்கத்தைப் பெற்றிருப்பது உண்மைதான் .

ஆனால் புதைநிலையில் தமிழர் உள்ளப்பாங்கு அங்கும் குலையாமல் இருக்கிறது .

5.5.2 சிற்றூர்ப் பண்பாடு

சிற்றூர்களே நம் பண்பாட்டின் கூறு ஒவ்வொன்றையும் போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றன .

இரண்டு மா அளவுள்ள நிலத்தைப் பல தலைமுறைகளுக்குப் பின்னும் தானே உழுது நட்டுக் களையெடுத்து ' உழந்தும் ( துன்பம் அடைந்தாலும் ) உழவே தலை ' என்று வாழும் எளிய உழவர் குடிமகன்தான் இப்பண்பாட்டின் முதுகெலும்பு .

அறிவியல் விந்தைகள் இவனைத் தீண்டவில்லை .

இன்னும் ஏர்க்கலப்பை நாகரிகத்திலிருந்து இவன் மாறவில்லை .

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது என்ற பழமொழி இவன் அறிந்ததுதான் .

ஆனால் இவன் இந்த மண்ணின் காதலன் .

பெரிய வருவாய் வேண்டி இவன் பிற தொழில்களுக்குப் போக மாட்டான் .

“ வறியவன் ஓம்புமோர் செய் " என்று இப்படிப்பட்டவனைப் பார்த்துத்தான் கம்பன் பாடினான் .

கம்பன் கூறியதன் பொருள் , “ மிக வறுமைப்பட்டவன் தனக்குக் கிடைத்த சிறிய அளவு நிலத்தை மிக அக்கறையோடு பாதுகாப்பது போல் நாட்டை அரசன் பாதுகாத்தான் ” என்பதாகும் .

கம்பன் காலத்திலிருந்தே உழவன் நிலத்தின் மீது கொண்டிருந்த அக்கறை இதனால் புலப்படும் .

5.5.3 கிராமத்து வரலாற்றாசிரியன்

புதுமைப்பித்தன் கூறுவது போலக் கிராமத்தான் ஒவ்வொருவனும் வரலாற்றாசிரியனாக விளங்குகிறான் .

போன தையிலே வந்த வெள்ளம் , உடைப்பெடுத்த ஏரி , சின்னான் மகன் வீரன் ஏரி உடையாமல் ஊரைப் பாதுகாத்தது , கண்ணாத்தா காட்டில் விறகெடுக்கச் சென்றபோது பாய்ந்து வந்த புலி , ஐயனார் கோயில் புற்றில் யார் கண்ணிலும் படாமல் இருக்கும் அஞ்சுதலை நாகம் என்று பலப்பல உண்மையும் கற்பனையும் கலந்து தான் வாழும் ஊரோடு தனக்கிருக்கும் பிணைப்பைக் காட்டுவான் சிற்றூர்க் குடிமகன் .

ஒவ்வொரு வீட்டைப் பற்றியும் , வீட்டிலுள்ளவர் பற்றியும் அவன் தெரிந்து வைத்திருக்கிறான் .

அந்தரங்கம் என்பது அவனிடம் இல்லை .

ஒப்புரவு , ஒட்டுறவு ஆகியவற்றைக் கொஞ்சமும் பின்னடையாது பாதுகாத்து வைத்துள்ளன தமிழகச் சிற்றூர்கள் .

கிராமங்கள் : தமிழ்ப் பண்பாட்டின் நிலைக்களன்கள்

வாசலில் கோலமிடுதல் அடுப்பு , மண்பாண்டங்கள்

வாசலில் கோலமிடுதல் , கோலத்தின் நடுவே பரங்கிப்பூவை வைத்தல் , திண்ணையையும் தெருவையும் சாணமிட்டு மெழுகுதல் , தரையோடு போடப்பட்ட அடுப்பு , பெரும்பாலும் மண்பாண்டங்கள் , புளியிட்டுத் துலக்கிய பித்தளைக் குடம் தவலைகள் , சுரைக்கொடி படர்ந்த கூரைவீடுகளுக்கு இடையே ஒன்றிரண்டு ஓட்டு வீடுகள் , மாலையில் திண்ணை மாடத்தில் விளக்கேற்றுதல் , பெண்கள் தலையைப் பின்னலிட்டுப் பூச்சூடிக் கொள்ளுதல் , மகளிர் வெள்ளி செவ்வாய்க் கிழமைகளிலும் ஆடவர் புதன் சனிக்கிழமைகளிலும் எண்ணெய் முழுக்கு ஆடல் , மகளிர் காது மூக்குக் குத்திக் கொள்ளுதல் , உடம்பிற்குச் சீயக்காய் , ஆவாரந்தூள் , செம்பருத்தி இலை ஆகியவற்றைத் தேய்த்து நீராடல் , மணமான மகளிர் காலில் மெட்டி அணிதல் , கழுத்தில் தாலிக்கயிறு , காலில் கொலுசு , கையில் வளையல் அணிதல் , மாமன் , மாமன் மகன் , அத்தை மகன் என உறவுமுறையில் திருமணம் செய்தல் , திருமணத்திற்குமுன் பரிசம் போடுதல் , திருமணத்தில் மாலை மாற்றிக் கொள்ளுதல் , தாலி கட்டுதல் , மெட்டியிடுதல் , அம்மி மிதித்தல் , நலுங்கு வைத்தல் ஆகிய சடங்குகள் நடைபெறும் .

இவையெல்லாம் இன்றைக்கும் மிக உள்ளொடுங்கிய சிறிய கிராமங்களில் தவறாது காணப்படும் பண்பாட்டுக் களங்களாகும் .

5.6.1 கிராமியப் பழக்கங்கள்

கிராமத்திற்கென்று அமைந்த சில பழக்கங்கள் இவைதாம் தமிழர் பண்பாடு என்று நமக்குக் காட்டுகின்றன .

இங்கே திருமணத்தின்போது கூறைப்புடைவை சட்டை அணிந்து பெண் நெற்றியில் திலகம் தீட்டிக் கொள்வாள் .

ஆடவன் எட்டு முழத்தில் கரையிட்ட வேட்டியும் சட்டையும் அணிவான் .

திருமணத்தில் உறவினர்களும் நண்பர்களும் பணத்தை அன்பளிப்பாக வழங்குவர் .

அதை மொய் எழுதுதல் என்பர் .

திருமண விருந்தில் பெரும்பாலும் சைவ உணவே இடம்பெறும் .

சில இடங்களில் இறைச்சி உணவும் உண்டு .

இசுலாமியர் திருமணத்தின் போது இறைச்சி கலந்த சோற்று விருந்து படைப்பர் .

பின்னால் மகப்பேறு தாய்வீட்டில் ஊர் மருத்துவச்சி துணையோடு நிகழும் .

குழந்தைக்கு அரைஞாண் பூட்டும் வழக்கம் உண்டு .

பூப்பெய்துதல் சடங்கு , வளைகாப்புச் சடங்கு , தாலி பெருக்கிக் கட்டும் சடங்கு ஆகியன இன்றும் மாற்றமின்றி நடைபெறுகின்றன .

( அரைஞாண் பூட்டுதல் என்பது பச்சிளம் குழந்தைக்குத் தெய்வப் பாதுகாப்பு கருதித் தெய்வத்தின் படைக்கலன்களைப் பொன்னால் உருவாக்கிக் கயிற்றில் கோர்த்து அணிவித்தல் ஆகும் .

பூப்பெய்துதல் ஆவது பெண் பருவம் அடைகின்ற நிகழ்ச்சியைக் கொண்டாடும் சடங்கு ஆகும் .

வளைகாப்பு என்பது கருவுற்ற பெண்ணுக்குத் தெய்வம் பாதுகாப்புத் தர வேண்டி , தெய்வத்தை வாழ்த்தி வணங்கி , வளையல் இடுவதாகும் .

தாலி பெருக்கிக் கட்டுதல் ஆவது புது மணப்பெண் ஆடி மாதத்தில் தாலியைப் புது மஞ்சள் கயிற்றில் சேர்த்துக் கட்டிக் கொள்வதாகும்)

மகளிர் எட்டுமுழம் , பதினாறுமுழம் கொண்ட நூற்சேலைகளை உடுத்துவர் ; சிறப்பு நாட்களில் பட்டுச்சேலை உடுத்துவர் .

திருமணம் போன்ற நாட்களிலும் , சிறப்பு விருந்துகளிலும் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொள்ளுதலும் உண்டு .

இதுபோலப் பல பழக்கங்கள் கிராமத்திலிருந்து இன்றும் விடைபெறவே இல்லை .

5.6.2 கிராமியச் சடங்குகள்

வழிவழியாகக் கிராமத்தில் வரும் சடங்குகள் பலப்பல இருக்கின்றன .

பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான சடங்குகளில் கடைப்பிடிக்கப்பெறும் சில பழக்கங்களுக்குக் காரண காரியம் இன்று அறியப்படவில்லை .

கணவன் இறந்தபின் கிராமங்களில் மகளிர் பூச்சூட்டுதலோ பொட்டிட்டுக் கொள்வதோ இல்லை .

பிணத்தைப் பெரும்பான்மை எரித்தலும் , சிறுபான்மை புதைத்தலும் மேற்கொள்ளப்படும் .

இறந்த மறுநாள் பால் தெளிப்பு , பதினாறாம் நாள் காடாற்று கருமாதி ஆகியன நிகழும் .

பிணத்திற்கு மூத்த மகனே தீயிடுவான் .

நீர்க்குடம் உடைத்தல் , எலும்புகளை ஆற்றில் கரைத்தல் ஆகியன குறிக்கத்தக்க இறப்புச் சடங்குகளாகும் .

இறந்தவரின் நினைவு நாளைப் போற்றுதல் , அவர்களுக்குப் படையலிடுதல் ஆகியன இன்றும் வழக்கிலிருக்கும் சடங்குகளாகும் .

தொகுப்புரை

தமிழ்ப் பண்பாட்டில் உயிர்ப்புள்ள ஒருபகுதி கிராமமேயாகும் .

தமிழர் பண்பாட்டை மறுபடியும் படம் பிடித்துக் காட்ட வேண்டுமென்று கருதுபவர்கள் இன்றும் கிராமத்திற்கே செல்லவேண்டும் .

இன்று எந்த நகரக் கலப்பும் இல்லாமல் கிராமத்து மனிதனே ஓர் அசலான தமிழனாகக் காட்சி தருகிறான் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. நகரப் பண்பாட்டின் அடையாளங்கள் இரண்டைக் கூறுக .

விடை

2. சிற்றூர்ப் பண்பாட்டைக் காப்பாற்றி வருபவர் யார் ?

விடை

3. கிராமத்தில் இருப்பவன் வரலாற்று ஆசிரியனாகத் திகழ்வதைக் காட்டுக .

விடை

4. கிராம ஓவியம் எனக் கூறப்பெறும் பழக்கங்கள் சிலவற்றைக் கூறுக .

விடை

5. கிராமச் சடங்குகள் இரண்டினைக் குறிப்பிடுக .

தமிழர் பண்பாட்டின் மொத்த உரு -

கூட்டல்கள் , கழித்தல்கள் , மாற்றங்கள் ,

நிலைபேறுகள்

பாட முன்னுரை

மூவாயிரம் ஆண்டுகள் . காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது .

“ போனால் வராது பொழுது விடிந்தால் கிடைக்காது " என்று சந்தையில் கூவுகிறானே !

அது கத்தரிக்காய் புடலங்காய்க்குப் பொருந்துகிறதோ இல்லையோ காலத்துக்குப் பொருந்தும் .

காலம் போனால் வருமா ?

இன்று என்பது கழிந்து நேற்றாகி விடுகிறது .

பொழுது விடிந்தபின் ' நேற்று ' இறந்து விடுகிறது .

இனிமேல் நம் வாழ்நாளில் கழிந்து போன அந்த நாள் வருமா ?

இல்லை , நிகழ்கின்ற காலத்தைத்தான் நிறுத்த முடியுமா ?

அது முடியாத மாயவேலை .

காலம் எத்தனைச் சுவடுகளை , தழும்புகளைப் பூமியின் மேனியில் ஏற்படுத்தி இருக்கிறது ?

சங்க காலக் கோயில்கள் , கோட்டைகள் , கொத்தளங்கள் எங்கே ?

இருந்ததற்கான சுவடுகளே இல்லை !

கச்சியும் ( காஞ்சிபுரம் ) கடல் மல்லையும் ( மகாபலிபுரம் ) பல்லவர் நினைவாகக் காட்சி தருகின்றன .

தஞ்சைக் கோயிலும் பிற கோயில்களும் சோழர் நினைவாக , மாமதுரைப் பெருநகரம் பாண்டியர் நினைவாக இன்றும் பார்க்கிறோம் .

சேர நாட்டின் சுவடுகளைக் காணோம் .

இடிந்து சிதைந்து கிடக்கும் பல கோயில்கள் , கோட்டைகள் நம் பழம்பண்பாட்டின் உருவங்கள் இல்லையா ?

பண்டைக் காலந் தொட்டு .

பாய்மரங்களோடு அணிவகுத்து நின்ற கப்பல்களில் ஏராளமான சரக்குகள் ஏலம் , இலவங்கம் , மிளகு , யானைத் தந்தம் , அரிசி , இஞ்சி , மயில்தோகை , அகில் , இரும்பு , ஆட்டுத் தோல் , நெய் , மரப்பெட்டிகள் , மேசைக் கால்கள் , பறவைக் கூண்டுகள் , சீப்புகள் , முத்துக்கள் , மஸ்லின் ஆடைகள் ஆகியவைகளெல்லாம் பாரசீகம் , ஆப்பிரிக்கா , பிலிப்பைன்ஸ் , ரோம் , சீனா , பர்மா , மலேயா போன்ற பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன .

ரோமாபுரி மட்டும் ஆண்டு ஒன்றுக்கு ஆறு இலட்சம் பொன் மதிப்புள்ள பொருள்களைத் தமிழகத்திடமிருந்து பெற்றது .

தொண்டி , முசிறி , கொற்கை , காவிரிப் பூம்பட்டினம் ஆகிய துறைமுகங்கள் இரவு பகலாகச் செயல்பட்டன .

தாலமி போன்ற யவன ஆசிரியர்கள் இந்தத் துறைமுகங்களைக் குறிப்பிடுகின்றனர் .

“ பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி " என்று தமிழ் இலக்கியம் பேசுகின்றது .

பொன்னொடு வந்து மிளகைக் கொண்டு போகும் கப்பல்களைக் கொண்ட முசிறி என்பது இதன் பொருள் .

இவ்வாறு பெரிய அளவு வணிகம் செய்யக் கூடிய வளமான பொருளாதாரம் படைத்திருந்த தமிழகம் பிற்காலத்தில் வளம் இழக்கக் காரணம் யாது ?

பண்டைக் காலந்தொட்டு வணிக வளம் மிக்க தமிழகம் , பிற்காலத்தில் நலிவுற்றதற்கு யார் காரணம் ?

காணலாமா ?

6.1.1 தமிழர் பண்பாடு உருவான நிலை

தமிழர் பண்பாடு எப்படி உருவாயிற்று ?

ஆண்டுக்கு மூன்று போகம் நெல் விளையும் வயல்கள் ; கரும்புக் கழனிகள் ; சோளம் , கம்பு , தினை முதலான புன்செய்ப் பயிர்கள் ; மா , பலா , வாழை எனும் கனிமரங்களின் சோலை ; ஆண்டு முழுவதும் ஓடிக் கொண்டிருந்த ஆறுகள் ; தென்னந் தோப்புகள் ; இயற்கை வளம் செறிந்த குறிஞ்சிக் காடுகள் இவ்வாறு வளம் மிக்க தமிழகமாயிருந்தது .

வறுமை உடையோர் எண்ணிக்கை குறைவாயிருந்தது .

அவர்களின் வறுமையைத் துடைக்கும் கைகள் பலவாக இருந்தன .

அவர்களுக்கு வாழ்க்கையின் தலையாய குறிக்கோள் எது தெரியுமா ?

பழி வந்துவிடக் கூடாது .

வாழ்வில் கடுகளவுகூடக் கறை படிந்து விடக் கூடாது .

அப்படி வருமுன் உயிர் போய்விட வேண்டும் .

புகழ் , பலராலும் பாராட்டப் பெறும் புகழ் வேண்டும் .

எப்படிப் புகழ வேண்டும் ?

' சான்றோர் ' என்று வையகம் சொல்ல வேண்டும் .

அக்காலத்தின் மிக உயர்ந்த பட்டம் அதுதான் .

சான்றோர் ஆதல் , சான்றோரால் எண்ணப்படுதல் என்பவையே தலையாய பெருமைகள் .

இந்த அடிப்படையில்தான் பழந்தமிழ்ப் பண்பாடு உருவாயிற்று .

6.1.2 மாற்றங்கள் எதனால் விளைந்தன ?

• புதிய கண்டுபிடிப்புகள்

புகழ் பெற வேண்டுமென்று விரும்பியவன் , தன் வீட்டில் அளவில்லாது கிடக்கும் உணவுப் பொருளைப் பிறர்க்கு வாரி வழங்கினான் .

வயல் விளைத்துக் கொடுத்தது .

வீடு முழுவதும் நெல் , பிற தானியங்கள் .

அவனுக்கு உரிய பல வீடுகளிலும் கொட்டிக் குவித்து வைக்கப்பட்ட கூலங்கள் ( தானியங்கள் )

அடுத்த அறுவடை வருவதற்குள் செலவிட்டாக வேண்டும் .

வறியவர்க்கும் புலவர்களுக்கும் வழங்கினால் வாழ்த்துவார்களே !

வழங்கினான் ; இவ்வாறு வழங்குதல் வழக்கமாயிற்று ; அடுத்த தலைமுறையில் இவ்வழக்கம் தொடர்ந்தது ; இரத்தத்தில் ஊறிய பண்பாயிற்று . இந்தப் பண்பு எப்போது மெலிவடைந்தது ?