60

நாணயம் என்ற ஒன்று வழக்கத்திற்கு வந்தபிறகு இந்த வழக்கம் படிப்படியே குறைந்தது .

விளைச்சலைப் பணமாக்கி , பணத்தை வங்கியில் செலுத்தி வைப்பாக்கி , அதற்கு வட்டி கண்டு , செல்வம் பெருக்கி வாழும் நிலையில் ஈகை , ஒப்புரவு ஆகியன நலிவுற்றன .

பண்பாட்டில் ஒரு மாற்றம் தோன்றியது .

வீட்டில் வடித்து வைத்த சோறும் குழம்பும் வீணாகுமுன் யாருக்காவது கொடுத்து மகிழும் வழக்கம் பதனப் பெட்டி ( Fridge ) வந்தவுடன் மாறிவிடவில்லையா - அதுபோலத்தான் பணப் புழக்கம் தோன்றிப் பண்டங்களின் புழக்கம் குறைந்தவுடன் பண்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது .

பொருளாதார மாற்றங்களாலும் , அறிவியல் வளர்ச்சியாலும் பண்பாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் பல மாற்றங்கள் தோன்றிவிட்டன .

• அயலவர் தொடர்பு

தமிழன் வடவேங்கடம் தென்குமரிக்கு இடையில் உள்ளடங்கிய சிற்றூர்களில் வாழ்ந்தபோது அவனுடைய புற நாகரிகத்திலும் மாற்றமில்லை .

வேற்றவர்கள் வந்து புகுந்து ஆட்சியைப் பிடித்து அவனை அடிமையாய் ஆக்கினர் .

ஆண்ட மக்களோடு ஏற்பட்ட பழக்கம் சில புதிய அலைகளைத் தமிழனின் வாழ்க்கைக் கரைகளில் மோதச் செய்தது .

பிறகு தமிழன் பிழைப்புக்காகப் பல நாடுகளுக்கும் சென்றான் .

அங்கங்கே கண்ட நாகரிகக் கூறுகளில் சிலவற்றுக்குத் தன் வாழ்விலும் இடம் கொடுத்தான் .

தன் பண்பாட்டுக் கூறுகளை அயலவர்க்குக் கொடுத்து அயலவரின் பண்பாட்டுக் கூறுகளை இவன் தழுவிக் கொண்டான் .

பண்பாட்டு மாற்றங்கள் இவ்வண்ணமே நிகழ்ந்தன .

பண்டைக் காலந் தொட்டு .

பாய்மரங்களோடு அணிவகுத்து நின்ற கப்பல்களில் ஏராளமான சரக்குகள் ஏலம் , இலவங்கம் , மிளகு , யானைத் தந்தம் , அரிசி , இஞ்சி , மயில்தோகை , அகில் , இரும்பு , ஆட்டுத் தோல் , நெய் , மரப்பெட்டிகள் , மேசைக் கால்கள் , பறவைக் கூண்டுகள் , சீப்புகள் , முத்துக்கள் , மஸ்லின் ஆடைகள் ஆகியவைகளெல்லாம் பாரசீகம் , ஆப்பிரிக்கா , பிலிப்பைன்ஸ் , ரோம் , சீனா , பர்மா , மலேயா போன்ற பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன .

ரோமாபுரி மட்டும் ஆண்டு ஒன்றுக்கு ஆறு இலட்சம் பொன் மதிப்புள்ள பொருள்களைத் தமிழகத்திடமிருந்து பெற்றது .

தொண்டி , முசிறி , கொற்கை , காவிரிப் பூம்பட்டினம் ஆகிய துறைமுகங்கள் இரவு பகலாகச் செயல்பட்டன .

தாலமி போன்ற யவன ஆசிரியர்கள் இந்தத் துறைமுகங்களைக் குறிப்பிடுகின்றனர் .

“ பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி " என்று தமிழ் இலக்கியம் பேசுகின்றது .

பொன்னொடு வந்து மிளகைக் கொண்டு போகும் கப்பல்களைக் கொண்ட முசிறி என்பது இதன் பொருள் .

இவ்வாறு பெரிய அளவு வணிகம் செய்யக் கூடிய வளமான பொருளாதாரம் படைத்திருந்த தமிழகம் பிற்காலத்தில் வளம் இழக்கக் காரணம் யாது ?

பண்டைக் காலந்தொட்டு வணிக வளம் மிக்க தமிழகம் , பிற்காலத்தில் நலிவுற்றதற்கு யார் காரணம் ?

காணலாமா ?

6.1.1 தமிழர் பண்பாடு உருவான நிலை

தமிழர் பண்பாடு எப்படி உருவாயிற்று ?

ஆண்டுக்கு மூன்று போகம் நெல் விளையும் வயல்கள் ; கரும்புக் கழனிகள் ; சோளம் , கம்பு , தினை முதலான புன்செய்ப் பயிர்கள் ; மா , பலா , வாழை எனும் கனிமரங்களின் சோலை ; ஆண்டு முழுவதும் ஓடிக் கொண்டிருந்த ஆறுகள் ; தென்னந் தோப்புகள் ; இயற்கை வளம் செறிந்த குறிஞ்சிக் காடுகள் இவ்வாறு வளம் மிக்க தமிழகமாயிருந்தது .

வறுமை உடையோர் எண்ணிக்கை குறைவாயிருந்தது .

அவர்களின் வறுமையைத் துடைக்கும் கைகள் பலவாக இருந்தன .

அவர்களுக்கு வாழ்க்கையின் தலையாய குறிக்கோள் எது தெரியுமா ?

பழி வந்துவிடக் கூடாது .

வாழ்வில் கடுகளவுகூடக் கறை படிந்து விடக் கூடாது .

அப்படி வருமுன் உயிர் போய்விட வேண்டும் .

புகழ் , பலராலும் பாராட்டப் பெறும் புகழ் வேண்டும் .

எப்படிப் புகழ வேண்டும் ?

' சான்றோர் ' என்று வையகம் சொல்ல வேண்டும் .

அக்காலத்தின் மிக உயர்ந்த பட்டம் அதுதான் .

சான்றோர் ஆதல் , சான்றோரால் எண்ணப்படுதல் என்பவையே தலையாய பெருமைகள் .

இந்த அடிப்படையில்தான் பழந்தமிழ்ப் பண்பாடு உருவாயிற்று .

6.1.2 மாற்றங்கள் எதனால் விளைந்தன ?

• புதிய கண்டுபிடிப்புகள்

புகழ் பெற வேண்டுமென்று விரும்பியவன் , தன் வீட்டில் அளவில்லாது கிடக்கும் உணவுப் பொருளைப் பிறர்க்கு வாரி வழங்கினான் .

வயல் விளைத்துக் கொடுத்தது .

வீடு முழுவதும் நெல் , பிற தானியங்கள் .

அவனுக்கு உரிய பல வீடுகளிலும் கொட்டிக் குவித்து வைக்கப்பட்ட கூலங்கள் ( தானியங்கள் )

அடுத்த அறுவடை வருவதற்குள் செலவிட்டாக வேண்டும் .

வறியவர்க்கும் புலவர்களுக்கும் வழங்கினால் வாழ்த்துவார்களே !

வழங்கினான் ; இவ்வாறு வழங்குதல் வழக்கமாயிற்று ; அடுத்த தலைமுறையில் இவ்வழக்கம் தொடர்ந்தது ; இரத்தத்தில் ஊறிய பண்பாயிற்று .

இந்தப் பண்பு எப்போது மெலிவடைந்தது ?

நாணயம் என்ற ஒன்று வழக்கத்திற்கு வந்தபிறகு இந்த வழக்கம் படிப்படியே குறைந்தது . விளைச்சலைப் பணமாக்கி , பணத்தை வங்கியில் செலுத்தி வைப்பாக்கி , அதற்கு வட்டி கண்டு , செல்வம் பெருக்கி வாழும் நிலையில் ஈகை , ஒப்புரவு ஆகியன நலிவுற்றன .

பண்பாட்டில் ஒரு மாற்றம் தோன்றியது .

வீட்டில் வடித்து வைத்த சோறும் குழம்பும் வீணாகுமுன் யாருக்காவது கொடுத்து மகிழும் வழக்கம் பதனப் பெட்டி ( Fridge ) வந்தவுடன் மாறிவிடவில்லையா - அதுபோலத்தான் பணப் புழக்கம் தோன்றிப் பண்டங்களின் புழக்கம் குறைந்தவுடன் பண்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது .

பொருளாதார மாற்றங்களாலும் , அறிவியல் வளர்ச்சியாலும் பண்பாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் பல மாற்றங்கள் தோன்றிவிட்டன .

• அயலவர் தொடர்பு

தமிழன் வடவேங்கடம் தென்குமரிக்கு இடையில் உள்ளடங்கிய சிற்றூர்களில் வாழ்ந்தபோது அவனுடைய புற நாகரிகத்திலும் மாற்றமில்லை .

வேற்றவர்கள் வந்து புகுந்து ஆட்சியைப் பிடித்து அவனை அடிமையாய் ஆக்கினர் .

ஆண்ட மக்களோடு ஏற்பட்ட பழக்கம் சில புதிய அலைகளைத் தமிழனின் வாழ்க்கைக் கரைகளில் மோதச் செய்தது .

பிறகு தமிழன் பிழைப்புக்காகப் பல நாடுகளுக்கும் சென்றான் .

அங்கங்கே கண்ட நாகரிகக் கூறுகளில் சிலவற்றுக்குத் தன் வாழ்விலும் இடம் கொடுத்தான் .

தன் பண்பாட்டுக் கூறுகளை அயலவர்க்குக் கொடுத்து அயலவரின் பண்பாட்டுக் கூறுகளை இவன் தழுவிக் கொண்டான் .

பண்பாட்டு மாற்றங்கள் இவ்வண்ணமே நிகழ்ந்தன .

படையெடுப்புகள்

தமிழகம் முந்நீர் என்று கூறப்படும் கடல் சூழ்ந்த நில அமைப்பைப் பெற்றது .

கடலைப் பழந்தமிழர் முந்நீர் என்றனர் .

ஒரு தீபகற்பமாய் ( Peninsula ) விளங்கும் நிலம் இது. இந்த நிலத்தின் மீது அயலவர் படையெடுப்பு என்பது அரிதாகவே நிகழ்ந்திருக்கிறது .

• களப்பிரர்

• பல்லவர்

• மாலிக்காபூர்

• விஜய நகர நாயக்கர்

• மராட்டியர்

• ஆங்கிலேயர்

• பிரெஞ்சுக்காரர்

ஆகியோர் வெவ்வேறு காலங்களில் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்தனர் .

தமிழரசர்கள் வலிமை குன்றியபோதும் , தங்களுக்குள் பகைகொண்ட போதும் , திறமையில்லாத அரசர்கள் ஆண்டபோதுமே இந்தப் படையெடுப்புகள் நிகழ்ந்திருக்கின்றன .

மேலே கண்ட அயலவர்களைக் குறித்துச் சிறிது காணலாமா ?

6.2.1 களப்பிரர்

களப்பிரர் என்பவர் கருநாடகத்தைச் சேர்ந்த குறுநில மன்னர் .

கருநாடகத்தில் சந்திரகிரி மலை உள்ள பகுதி பழங்காலத்தில் களப்பு நாடு எனப்பட்டது .

இதுவே களப்பிரர்களின் ஆதி இடமாகும் .

இந்தக் களப்பிரர் குடியைச் சார்ந்த புல்லி என்ற குறுநில மன்னன் வேங்கட மலைப் பகுதியை ஆண்டு வந்தான் .

இவனே தகடூர்ப் பகுதியின் மீது படையெடுத்துக் கைப்பற்றியவன் .

தகடூர் என்பது இன்றைய தருமபுரியாகும் .

இப்பகுதி இப்படையெடுப்புக்கு முன்பு சங்க கால வள்ளலான அதியமான் பரம்பரையினரால் ஆளப்பட்டது .

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் அச்சுத விக்கந்தன் என்ற களப்பிர அரசன் சேர சோழ பாண்டியர்களை வென்று தமிழ்நாட்டின் பெரும் பகுதியைக் கைப்பற்றினான் .

இக்காலம் வரலாற்றில் இருண்ட காலம் எனப்பட்டது .

தமிழர் பண்பாடு சற்றுச் சிதைந்த காலமாக இதனைக் குறிக்கலாம் .

6.2.2 பல்லவர்

பல்லவர்கள் வேங்கட மலைக்கு அப்பாலிருந்து வந்தவர்கள் என்பர் அறிஞர் .

தொடக்க காலப் பல்லவர்கள் தமிழ் மொழியைப் போற்றவில்லை .

கிரந்த எழுத்துக்களிலேயே தம் கல்வெட்டுக்களை வெளியிட்டனர் .

சிம்ம விஷ்ணு , மகேந்திர வர்மன் , நரசிம்மவர்மன் ஆகிய பல்லவ அரசர்கள் காலத்தில் வடமொழி செல்வாக்குப் பெற்று விளங்கியது .

தொடக்க காலத்தில் சமண சமயத்தைச் சார்ந்திருந்த பல்லவர்கள் பின்பு சைவர்களாக மாறினர் .

மாமல்லபுரம் , திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை , சித்தன்னவாசல் , நாமக்கல் போன்ற இடங்களில் அமைந்த குகைக் கட்டிடங்கள் தமிழ்நாட்டில் நிகழ்ந்த கட்டடக் கலை மாற்றத்தைக் காட்டுவன .

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலைப் பாருங்கள் !

இது பல்லவர் காலச் சமய , கலைத் தொண்டுகளுக்கு நல்ல எடுத்துக்காட்டாகும் .

6.2.3 ஆங்கிலேயர் உட்பட்ட பிறர்

பாண்டியர்களில் உடன் பிறந்தோர் தம்முள் பகைத்துக் கொண்டு மாலிக்காபூரை அழைத்து மொகலாயர் ஆட்சி ஏற்பட வழி வகுத்தனர் .

குறுநில மன்னர்கள் இடையே ஒற்றுமை இல்லாத நிலையைப் பயன்படுத்திக் கொண்டு விஜயநகர நாயக்கர் தமிழகத்திற்குள்ளே புகுந்தனர் .

நாயக்கர் தஞ்சையில் தளர்ந்த போது மராட்டியர் நுழைந்தனர் . ஆர்க்காட்டு நவாபிடம் உரிமையைப் பெற்று ஆங்கிலேயர் இடம் பிடித்தனர் .

பிரெஞ்சுக்காரர் கடல் வழியாக வந்து புதுவை காரைக்கால் பகுதிகளைக் கைப்பற்றினர் .

தமிழ்ப் பேரரசு நிலை குலைந்த பின்பே வேற்றவர்கள் உள்ளே நுழையும் நிலை ஏற்பட்டது .

கங்கை கொண்டான் , கடாரம் கொண்டான் , ஈழம் வென்றான் என்றெல்லாம் சிறப்புப் பெயர் பெற்றனரே !

ஏன் அவர்கள் நாடே கொள்ளை போயிற்று ?

கவனிக்க வேண்டிய கேள்வி அல்லவா இது ?

தமிழர்கள் வட இந்தியாவை , இலங்கையை , மாலத்தீவுகளை எல்லாம் வென்றார்களே , அப்பகுதிகளை நிலையாகத் தம் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டு வந்தனரா ?

தம் கொடியும் படையும் நிறுவித் தம் ஆட்சி அங்கு நடக்க வழி கண்டனரா ?

இல்லை .

தோற்ற அரசர்கள் தம் காலில் விழுந்து வணங்கியவுடன் அவர்களிடமே நாட்டைக் கொடுத்துவிட்டுத் திரும்பிவிட்டனர் .

ஆண்டுக் கணக்கில் தமிழ் அரசர்கள் தாம் வென்ற நாட்டில் இருப்பதில்லை .

ஆனால் ஆங்கிலேயர்களைப் பாருங்கள் !

தாம் வென்ற நாடுகளில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆட்சி நடத்துவர் ; தம் மக்களைக் குடியேற்றுவர் ; தம் பண்பாட்டை அயல் மண்ணில் வேர் ஊன்றச் செய்வர் .

தமிழ் அரசர்களின் பெருந்தன்மையும் , சொந்த ஊருக்குத் திரும்பிவிட வேண்டுமென்ற ஊர்ப் பற்றும் அவரது ஆட்சியும் பண்பாடும் அயல் நிலங்களில் பரவாமல் தடுத்து விட்டன .

பண்பாட்டில் கூட்டல்கள்

• புலால் மறுப்பு

இன்றுள்ள தமிழர் பண்பாட்டில் என்னவெல்லாம் வந்து சேர்ந்திருக்கின்றன ?

தொடக்க காலத்தில் தமிழர் பண்பாட்டில் புலால் உண்ணுதல் பெருமளவு இருந்தது .

ஆடு , கோழி ஆகியவற்றைக் கடவுளுக்குப் படையல் என்ற பெயரில் அறுத்தனர் .

கொழுத்த பசுவை அடித்து உண்டனர் .

இந்த நிலையில் மாற்றம் வந்தது .

சைவம் என்ற ஒரு நெறி பலர் வாழ்வில் இடம் பெற்றது .

புலால் உண்பவர்கள் கூட மாதத்தில் சில நாள் சைவமாக விளங்கக் காணலாம் .

திருவள்ளுவர் புலால் உண்ணுதலைக் கண்டித்திருக்கிறார் .

• பெண்ணிய வளர்ச்சி

பெண்கள் பெரும்பாலும் வீட்டோடு அடங்கியிருந்த நிலையிலிருந்து அலுவலகம் செல்பவர்களாகவும் , மருத்துவம் , பொறியியல் போன்ற துறைகளிலிருந்து பல்வேறு தொழில்நுட்பத் துறைகளிலும் பங்காற்றுபவராகவும் மாறியுள்ளனர் .

பெண்கள் உரிமை வேண்டிப் போராடும் நிலை உருவாகியுள்ளது .

ஆண் பெண் சமம் என்ற உணர்வு தோன்றியுள்ளது .

ஆணாதிக்கச் சமூகம் என்ற நிலை மாறியுள்ளது .

அச்சம் , நாணம் , மடம் , பயிர்ப்பு ஆகிய குணங்களைக் கொண்டிருந்த பெண் இன்று தேவைக்கேற்ப அக்குணங்களைத் தள்ளிவைக்கப் பழகியிருக்கிறாள் .

• தனிக்குடித்தன முறை

கூட்டுக் குடித்தன முறை மாறித் தனிக் குடித்தன முறை வளர்ந்திருக்கின்றது .

திருமணம் ஆன பின் கணவனும் மனைவியும் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்துசெல்வது இயல்பாகிவிட்டது .

• புறத்தோற்றங்களில் மாற்றம்

புறத் தோற்றத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன .

மேலே துண்டு மட்டும் போட்டிருந்த ஆடவன் சட்டை அணிகிறான் ; அலுவலக உடை என்று ஐரோப்பியர் அணியும் உடை மாதிரியைப் பின்பற்றுகிறான் .

குடுமி வைத்திருந்த நிலையிலிருந்து ' கிராப் ' வெட்டிக் கொள்ளும் நிலைக்கு மாறியிருக்கிறான் .

18 முழப் புடைவையிலிருந்து பெண் 11 முழத்துக்கு மாறியிருக்கிறாள் .

கைம்பெண் வெள்ளை உடை உடுத்தும் நிலை மாறியிருக்கிறது ; நகர நாகரிகத்தில் கைம்பெண் பொட்டு வைத்துக் கொள்கிறாள் .

• திருமணச் சடங்குகளில் மாற்றம்

திருமணச் சடங்குகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன .

திருமணத்திற்கு முன்னரே வரவேற்பு நிகழ்கின்றது .

அம்மி மிதித்தல் , அருந்ததி பார்த்தல் ஆகியன விடை பெற்றுக் கொண்டிருக்கின்றன .

பதிவுத் திருமண எண்ணிக்கை பெருகியுள்ளது .

• திருமண உறவு

உறவு முறைக்குள் திருமணம் என்பது மாறிக் காதல் மணங்களும் கலப்பு மணங்களும் பெருகியுள்ளன .

திருமண விளம்பர எண்ணிக்கை செய்தித்தாள்களில் பெருகியுள்ளது .

• வாழ்க்கைத் தரம்

பெண்ணும் பொருளீட்டுவதால் வீட்டு வருவாயும் வாழ்க்கைத் தரமும் கூடியுள்ளன .

குடிசைகளின் எண்ணிக்கை குறைந்து சிமெண்ட்டால் கட்டப் பெற்ற அழகிய வீடுகள் தோன்றியுள்ளன . குழந்தைகளின் எண்ணிக்கையைப் பெற்றோர் முடிவு செய்து கொள்கின்றனர் .

அயல் நாடுகளுக்குப் பெண்கள் போவதில்லை என்ற நிலை மாறி ஏராளமான பேர் குடிபெயர்ந்து போகும் நிலை தோன்றியுள்ளது .

6.3.1 நல்லன தீயன

இன்று தமிழர் வாழ்வில் அயல் நாகரிகப் பண்புகள் பலவும் புகுந்துள்ளன .

அவற்றில் நல்லனவும் உண்டு ; தீயனவும் உண்டு .

• நல்லன

ஒரு கிராமத்து இளைஞன் ஏர் கலப்பையோடு , இரண்டு மா வயலில் உழுது , தன் தேவைகளைப் பெருக்கிக் கொள்ளாமல் , சுருக்கமாக வாழ்ந்து கொண்டிருந்தான் .

உண்பது நாழி உடுப்பவை இரண்டே

என்பது அவனது தேவையைக் கூறும் கூற்றாகும் .

இன்று அதே கிராமத்து இளைஞன் டிராக்டர் ஓட்டுகிறான் ; வீரிய விதை பற்றியும் , நீலப் பச்சைப் பாசி பற்றியும் , செயற்கை உரம் பற்றியும் பேசும் அளவு அறிவியல் முறையில் அவனது தொழிற்கல்வி விரிவடைந்துள்ளது .

நோய்களுக்கு விரைவான வலிமைமிக்க மருத்துவம் கிடைக்கிறது .

சாவு எண்ணிக்கை குறைந்துள்ளது .

பிறப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .

பொருள் முதலீடு , தொழில்மயமாதல் போன்றவற்றால் வாழ்க்கை வசதிகள் கூடியுள்ளன .

விரைவு வண்டிகளில் மனிதன் ஏறிச் சென்று பொழுதை மிச்சப்படுத்துகிறான் .

இவையெல்லாம் நல்லன .

• தீயன

மேற்கூறியவற்றுக்கு மாறாகச் சில தீயனவும் தமிழர் பண்பாட்டில் புகுந்துவிட்டன .

இன்று மனிதனுக்கு மனிதன் இடைவெளி பெருகிவிட்டது .

உடம்பால் மிக நெருங்கி வாழும் வாழ்க்கையில் உள்ளக் காப்பு இல்லை .

அடுக்கு வீடுகளில் வாழ்பவர்களுக்கு அடுத்த வீட்டுக்காரர் யார் என்று தெரியாமல் ஆண்டுக்கணக்காக வாழும் நாகரிகம் தோன்றியுள்ளது .

பொருள் தேடுவதற்காக விரைந்து இயங்கும் முயற்சியில் வாழ்க்கையின் உயர் பண்புகள் கரைந்துவிட்டன .

பொருள் தேடும் அவாவால் குற்றங்கள் மலிந்து விட்டன ; சிறைக் கூடங்களில் குற்றவாளிகள் பலராக உள்ளனர் .

மதுப் பழக்கம் சமூகத்தின் மேல் தட்டிலும் கீழ்த் தட்டிலும் விலக்க முடியாததாக ஆகியிருக்கிறது .

இரவு விடுதிகள் , பாலியல் குற்றங்கள் பெருகியுள்ளன .

எது அறம் என்பதில் நெகிழ்ச்சி தோன்றியிருக்கிறது .

இவ்வாறு தீயனவும் தமிழர் பண்பில் இடம் பெற்று விட்டன .

• எப்படிப் புகுந்தன ?

புதுமைக் கவர்ச்சி , புறத் தோற்ற மாறுபாடுகளில் நாட்டம் , அறத்தில் நாட்டக்குறைவு , பொறி புலன்களின் மீது எல்லையற்ற நுகர்வு விருப்பம் , செயற்கையை விரும்பி ஏற்கும் மனம் , ஆடம்பர உணர்வு , போலி மதிப்பு ஆகியன தீய பண்புகளைப் பிற நாடுகளிலிருந்து தமிழர் தழுவக் காரணமாகும் .

மணவிலக்கு இன்று தமிழர் வாழ்வில் மெல்லத் தலை நீட்டியிருக்கிறது .

பிரிந்து போவது இயலாது என்றும் , திருமணம் என்பது உயிரோடு ஏற்பட்ட பிணைப்பு என்றும் எண்ணிக் கொண்டிருந்த எண்ணம் தகர்ந்து விட்டது .

மணவிலக்கு பெற்ற பெண் விளம்பரம் செய்து மாப்பிள்ளை தேடுகிறாள் .

இது எப்படி நிகழ்கிறது ?

திருமணத்தைப் பற்றித் தமிழர் கொண்டிருந்த அடிப்படைக் கோட்பாடு மாறிவிட்டது .

மேலை நாட்டுக் கலாச்சாரத் தாக்கம் தமிழர் வாழ்வுப் பிணைப்பை மாற்றி யிருக்கிறது .

தமிழர் உணவு , உடை , பழக்கவழக்கம் ஆகியவற்றில் உலகம் முழுவதும் பரவியுள்ள ஐரோப்பியத் தன்மை குடியேறியிருக்கிறது .

நாட்டைப் பிடித்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஆண்டவர்களோடு நாமும் பழகியதால் நாம் அவர்களைப் பார்த்து வாழப் பழகியதன் விளைவு இது .

6.3.2 பண்பாட்டில் கழிந்தன

பெருமைக்குரியன என்று எவரும் கருதும் சில பண்புகள் இன்று தமிழர்களில் பலரை விட்டு நீங்கியிருக்கின்றன .

அவையாவன :

1. பழியென்றால் உயிரை விட்டு விடும் மான உணர்வு .

2. பொது நலத்திற்காகத் தன்னை அழித்துக் கொள்ளும் மாண்பு .

3. செல்வம் என்பது பிறர்க்குக் கொடுத்து மகிழ என நினைத்த பெருந்தகவு ( Value )

4. செல்வர்க்கும் அதிகாரத்திற்கும் அஞ்சாத தறுகண்மை ( பேராண்மை )

5. எளிமை வாழ்வில் செம்மை நெறிகள் .

6. நாணத்தையும் அச்சத்தையும் அணிகலனாகக் கொண்ட பெண்மை .

7. பெண்மைக்கு அரணாக நின்ற ஆண்மை .

8. மொழி , நாடு என்பவற்றிற்காக உழைக்கும் நோக்கம் .

9. உலகோர் எல்லோரையும் தழுவிக் கொள்ளும் மனித நேயம் .

இந்தப் பண்புகளை இன்று அரிதாகப் பார்க்கிறோம் . இன்றைய தமிழ்ச் செய்திதாளில் வந்த செய்திகளை நாம் எழுதுகிறோம் ; படியுங்கள் .