61

• பாங்கில் கொள்ளையடித்த கும்பல் கைது .

• மனைவியைக் கணவனே வெட்டிக் கொன்றான் !

கள்ளக் காதலே காரணம் !

• வரப்புத் தகராறில் மூவருக்கு அரிவாள் வெட்டு .

• பேருந்தில் சக பிரயாணியிடம் கொள்ளை .

• நிலம் வாங்குவதில் தகராறு .

போலிக் கையெழுத்திட்டு மோசடி .

• நிறுவனத்தில் இரண்டு கோடி ஊழல் .

குற்றப்பத்திரிகை தாக்கல் .

• இளம் பெண்ணைக் கடத்திக் கற்பழிப்பு .

சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி ஏமாற்றினார் !

• கள்ள நோட்டுக் கும்பல் பிடிபட்டது .

• மூன்று லட்ச ரூபாய் பெறுமான சாராயம் அழிப்பு .

போலீஸ் தீவிரம் !

• வரதட்சணைக் கொடுமையில் பெண் எரிப்பு !

மாமனார் மாமியார் கணவருக்குச் சிறை .

இவையெல்லாம் எங்கே நிகழ்கின்றன ?

திருவள்ளுவரும் , இளங்கோவடிகளும் , கம்பரும் , நாலடியார் பாடிய சமண முனிவர்களும் தோன்றிய தமிழ்நாட்டில்தான் .

நல்ல பண்புகள் கழிந்தன ; தீய பண்புகள் மிகுந்தன .

ஏன் என்று காண்போமா ?

• ஏன் கழிந்தன ?

பழங்காலத்தில் மூன்று கேடுகளைக் கூறுவார்கள் .

மண்ணாசை , பொன்னாசை , பெண்ணாசை என்பன அவை. இவற்றை ஒரு வரையறையோடு அளவாகத் துய்த்து நிறைவடையும் உள்ளத்தை மனிதன் - தமிழன் இழந்துவிட்டான் .

உலகெங்கும் மேற்கூறிய தவறுகள் நிகழ்கின்றன .

ஆனால் இவை தமிழ்நாட்டில் நடக்கலாமா ?

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

எனப் புகழ் பெற்றதாயிற்றே .

ஒரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளில்

48 விழுக்காடு ( சதவீதம் ) - பெண் காரணமாகக் குற்றம் செய்தவர்கள்

29 விழுக்காடு ( சதவீதம் ) - பணம் , நகை திருட்டுக் குற்றம் செய்தவர்கள்

11 விழுக்காடு ( சதவீதம் ) - நிலத் தகராறு , பாகப் பிரிவினை , சொத்து இவை

காரணமாகக் குற்றம் செய்தவர்கள் .

12 விழுக்காடு ( சதவீதம் ) - பிற குற்றம் புரிந்தவர்கள்

இன்று பாலியல் குற்றங்கள் பெருகி விட்டன .

மறைவாகவும் , வரையறையோடும் , கணவன் மனைவி என்ற உறவுக்குள்ளும் நிகழவேண்டிய பாலுறவு இன்று எல்லா மறைவுகளையும் வேலிகளையும் தாண்டிப் பொது வீதிக்கு வந்துவிட்டது .

ஒழுக்கக்கேடு இன்று சமூகத்தில் இழிவாக எண்ணப்படவில்லை .

அறநெறியின்றிப் பொருள் சேர்ப்பது குற்றம் என்ற நோக்குக் குறைந்து வருகிறது .

தண்டனையிலிருந்தும் சட்டத்தின் கிடுக்கிப் பிடியிலிருந்தும் தப்பித்துக் கொள்ளும் வழிகளை மனிதனின் அறிவு கண்டுள்ளது .

இந்த நிலையில் நற்பண்புகள் விலகித் தானே போகும் !

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. தமிழகம் அயல்நாட்டோடு செய்த வணிகம் பற்றி எழுதுக .

விடை

2. தமிழர்களின் வாழ்க்கையில் தலையாய குறிக்கோள் எது ?

விடை

3. தமிழர் பண்பாட்டில் மாற்றம் விளைத்த காரணங்களில் ஒன்றைக் கூறுக .

விடை

4. தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தவர்கள் யாவர் ?

விடை 5. தமிழ்ப் பண்பாடு அயல்நாடுகளில் பரவாமைக்குரிய காரணம் யாது ?

இழப்பும் ஆக்கமும்

கோவலன் மனைவியை விட்டுப் பிரிந்து திரிந்தான் ; ஊரெங்கும் உலாவினான் .

மாதவியைச் சார்ந்து மயங்கினான் .

உதயகுமரன் மணிமேகலையைக் கவர்ந்து கொள்ள அலைந்தான் .

சாதுவன் சூதாடிப் பொருளையெல்லாம் தோற்றான் .

இவையெல்லாம் பழந்தமிழ் நாட்டில் நடக்கவில்லையா ?

நடந்தன .

ஆனால் இவர்கள் ஒரு நிலையில் திருந்தினர் .

இனி இவ்வாறு வாழக் கூடாது எனக் கருதினர் .

இன்றைய சமூகத்தில் திருந்துதல் குறைவு ; திருத்தும் சாதனங்களும் குறைவு .

மேலே கழிந்தன என்று சொன்னோமே ; அவையெல்லாம் இழப்புகள் .

தமிழன் இழந்தவற்றுள் பெரும் வருத்தம் தருவது எது ?

அவன் மெல்ல மெல்லத் தமிழன் என்ற அடையாளத்தை மறந்ததுதான் !

அவனுடைய வாழ்க்கையிலிருந்து பல கட்டங்களில் தமிழ் விலக்கி வைக்கப்பட்டிருப்பதுதான் .

பல மொழிப் பண்டிதனாக அவன் மாறிவிட்டானா ?

அப்படி ஒன்றும் இல்லை !

வணக்கம் பலமுறை சொன்னேன் தமிழ்மகள் கண்ணே !

என்ற திரைப்படப் பாடல் நீங்கள் கேட்க வில்லையா ?

எத்தனை பேர் வணக்கம் கூறக் கேட்கிறோம் .

குட் மார்னிங் என்பது எவ்வளவு இயல்பாக வருகின்றது !

சீனர்கள் தங்கள் மொழியை இழக்கவில்லை ; பிரெஞ்சுக்காரர் தம் மொழியை இழக்கவில்லை .

தமிழன் தன் மொழியை இழந்து நிற்கிறான் .

பண்பாட்டில் ஏற்பட்ட மாபெரும் இழப்பு இது .

ஆக்கங்களே இல்லையா எனக் கேட்கலாம் .

ஏன் இல்லை ?

இதோ , நோக்குங்கள் !

1. கல்வி நீரோடை போல எல்லார்க்கும் உரியதாகிவிட்டது .

நூற்றுக்கு நூறு விழுக்காடு கற்ற சமூகம் உருவாகிவிட்டது .

2. புதுமைகள் பலப்பல வீட்டிலும் நாட்டிலும் தோன்றியுள்ளன .

3. மருத்துவம் , பொறியியல் போன்ற தொழில்நுட்பத் துறைகள் பெருக வளர்ந்து நாட்டு மக்களின் வாழ்க்கை நலன்களைக் கூட்டியிருக்கிறது .

4. தமிழ்நாடு உலகனைத்தையும் உற்றுப் பார்க்கிறது ; உலகெங்கினும் தமிழர்கள் பரந்துள்ளனர் ; உலகம் தமிழ்நாட்டை உற்றுப் பார்க்கிறது .

திருக்குறளை இசையோடு படிக்கிறது .

திருவாசகம் கேட்டு அழுகிறது .

5. தமிழன் அமெரிக்கப் பெண்ணை மணந்து கொண்டு ஆஸ்திரேலியாவில் குடியேறி ஆங்கிலத்தைத் தாய்மொழி போல் ஆங்கிலேயர் வியக்கப் பேசி , ஜப்பானில் கருவிகள் வாங்கி உலகச் சந்தையில் வணிகம் செய்து , வீட்டுக்கு வந்து தன் அம்மா இறந்த செய்தி கேட்டு அழுது கலங்கிக் குழந்தை போலாகிச் சடங்குகளிலும் , பழக்கவழக்கங்களிலும்தான் தமிழன் என்பதை நினைந்து வாழ்கிறான் .

6. குடும்பம் மனைவி , குழந்தை , தாத்தா , பாட்டி , அம்மா , அப்பா , தாய்மாமன் , மைத்துனன் எனத் தலைமுறைகளுக்கு உறவு வலை பின்னிக்கொண்டு வாழ்கிறான் .

7. விமானத்தில் பறக்கும்போது வயது மிகுந்து வருதல் உணர்ந்து பட்டினத்தார் பாடலை மெல்ல மனம் அசை போட மூதாதையர்கள் வாழ்ந்த சுவட்டை மறக்காமல் பற்றிக் கொள்கிறான் .

இப்படி எத்தனையோ ?

தமிழனுடைய தாய் பாசத்தையும் , தங்கை பாசத்தையும் மையமாக வைத்து எத்தனையோ திரைப்படங்கள் காசு பண்ணிவிட வில்லையா ?

வாழும் பண்பாடு : சில காட்சிகள்

தமிழ்ப் பண்பாடு என்றும் அழியாது !

ஏன் ?

உலகில் எங்கெல்லாம் மனிதநேயம் நிலவுகிறதோ அங்கெல்லாம் தமிழ்ப் பண்பாடு நிலவும் .

எங்கெல்லாம் பகைவனுக்கு அருள்வாய் என்ற உணர்வு பிறக்கிறதோ அங்கெல்லாம் தமிழர் பண்பாடு இருக்கும் .

தனக்கு இருக்கும் ஒரு கவள உணவைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டுத் தான் பசியாற நினைக்கும் நினைவு எங்கு இருக்கிறதோ அங்கே தமிழன் குணம் இருக்கும் .

புகழோடு இறக்கவேண்டுமென்ற துடிப்பு எங்கே வாழ்கிறதோ அங்கே தமிழ்ப்பண்பு வாழும் .

எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக மலர்ந்து மணம் வீசிய பண்பு மாறிவிடுமா ?

மாறாது !

அப்பண்பாடு தமிழர் குருதிக்குள் புதை நினைவில் புலப்படாமல் இருக்கும் .

அப்பண்பாட்டு மரபில் பிறந்தவன் சூழ்நிலையால் திருடனாக மாறினாலும் ஏழை வீட்டில் திருட மாட்டான் ; செல்வனிடம் கவர்ந்த பொருளைத் தன்னைப் போன்ற ஏழைகளுக்குப் பங்கிடுவான் . அவன் போரிலே ஈடுபட்ட போதும் கண்டவர் மார்பில் எல்லாம் வாளைச் செருக மாட்டான் .

தன்னைவிட மூத்தவர் அல்லது இளையவர் மார்பை அவன் வாள் தீண்டாது .

புத்தரின் எளிமை , மகாவீரரின் உறுதி , இயேசுவின் இரக்கம் , முகமதுவின் தோழமை , நாயன்மார்களின் மனிதநேயம் , ஆழ்வார்களின் இயற்கை அன்பு ஆகியன எல்லாம் தமிழனின் பண்புகளே .

அவை எங்கெங்கே இருந்தாலும் அவை அடிப்படையில் தமிழர் பண்பாட்டின் உயிர்ப்புகளே ஆகும் .

• உன்னதக் காதல்

எவ்வளவு வெட்கம் இந்தப் பெண்ணுக்கு !

தன்னோடு வாழ்ந்து பிள்ளைகளைப் பெற்று வயதான இந்தக் கணவனை இந்த வயதான பெண் பிறர் முன்னிலையில் அத்தான் என்று உறவு முறை சொல்லி அழைப்பதற்கும் கூசுகின்றாளே !

இதோ சிலந்திக் கூடு கட்டியது போல் முகம் சுருங்கிக் கண் பார்வை மழுங்கிக் கூனல் விழுந்த கிழவி கொல்லைப் பக்கம் உட்கார்ந்திருக்கிறாள் .

இவளுடைய கணவன் , காதலன் , உயிர்த் தலைவன் தெருத் திண்ணையில் .

என்ன சொல்கிறான் இந்தக் கிழவன் ?

புதுமலர் அல்ல ; காய்ந்த

புற்கட்டே அவள் உடம்பு

சதிராடும் நடையாள் அல்லள்

தளர்ந்து விழும் மூதாட்டி !

மதியல்ல முகம் அவட்கு !

வறள்நிலம் ; குழிகள் கண்கள்

எதுஎனக்கு இன்பம் நல்கும் ?

இருக்கின்றாள் என்ப தொன்றே !

இருக்கின்றாள் என்றாலே போதுமாம் .

உடம்பைத் தாண்டி , ஐம்புலன்களைத் தாண்டி , ஆன்மாக்களின் சங்கமமாய் விளங்கும் இந்த உன்னதக் காதல்தான் தமிழ்ப் பண்பாட்டின் வேர் !

• மாற்றங்களின் ஊடே ஒரு நிலைபேறு

வேட்டியும் துண்டும் விடை பெற்றுக்கொண்டிருக்கின்றன .

சேலையும் மேற்சட்டையும் அளவு குறைந்து ' சுடிதார் ' கவுனாய் , குட்டைப் பாவாடையாய் , வண்ணச் சராயாக மாறிக்கொண்டிருக்கின்றன .

தாம்பூலச் சிவப்பை ' லிப்ஸ்டிக் ' பிடித்துக் கொண்டது .

குதி உயர்ந்த செருப்பால் நடைமாறிக் கொண்டிருக்கிறது .

வேர்க்கின்ற கோடையிலும் இறுக்கும் ' டை ' யை அவிழ்க்க மனம் இடம் கொடுக்கவில்லை .

தொலைபேசியில் ஒரு ஹலோ ; அம்மாவை மம்மியாக்கும் அன்பு ; ஆசையாய்ப் படிக்க ஒரு ' இங்கிலீஷ் மீடியம் ' ; கொச்சையாய்ப் பிழையாய்க் கொஞ்சம் தமிழ் .

இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டபோதும் , இந்தப் போர்வைகளுக்கெல்லாம் உள்ளே உள்ளத்தின் அடித்தளத்தில் தமிழ்ப் பண்பாடு கொலுவிருக்கத்தான் செய்கிறது .

இதோ இந்த உள்ளத்தை அசைக்க

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே !

அன்பினில் விளைந்த ஆரமுதே !

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

புழுத்தலைப் புலையனேன் தனக்குச்

செம்மையே ஆய சிவபதம் அளித்த

செல்வமே சிவபெரு மானே !

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவது இனியே !

என்ற ஒரு பாட்டுப் போதாதா ?

இப்பாட்டில் உள்ள சமயக் கருத்து உலகின் பல மூலையிலும் உள்ள தமிழனை உலுக்கவில்லையா ?

அன்பினுக்கு இரங்கும் ஒரு எளிய தமிழ் உள்ளம் கசிந்து நிற்கும் அந்த உருக்கம் எந்த மனிதனையும் அசைக்குமே !

மாற்றங்களுக்கு நடுவில் தமிழ்ப் பண்பாடு அடித்தளத்தில் பெரிய மாற்றமின்றி இருக்கிறது .

• பண்பாட்டு வங்கியில் புதிய ஆக்கங்கள்

தமிழன் இன்று உலக மனிதனாக உருவெடுத்திருக்கிறான் .

அவனுடைய அறிவு அகன்றுள்ளது .

பல்துறை வித்தகத்தை எல்லாம் அவன் தமிழில் கொண்டுவர முயல்கின்றான் .

அமெரிக்கா , ஆஸ்திரேலியா , இங்கிலாந்து , கனடா நாடுகளில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் குடியேறி அந்தந்த நாடுகளின் பொருளாதார அச்சாணியாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் .

அவனுடைய வாழும் எல்லை மிகப் பெரிதாகி இருக்கிறது ; அவனது சிந்தனை வீச்சு துருவங்களை அசைக்கிறது .

இவ்வாறு தமிழன் தன் பண்பாட்டு வங்கிக்குப் பல ஆக்கங்களைச் சேர்த்து வருகிறான் .

நிலைபேறானவை

சுமைதாங்கிக் கல் ' ஆ உரிஞ்சு கல் '

தமிழர் பண்பாட்டில் நிலை பேறானவை எவை ?

தமிழர் வாழ்க்கை ஒரு மையத்தைவிட்டு அதிகம் விலகவில்லை .

அது எந்த மையம் ?

இதோ ஒரு சுமைதாங்கிக் கல் நிற்கிறது பாருங்கள் !

எதற்கு ?

யாராவது சுமையோடு வருபவர்கள் இறக்கி வைத்து ஓய்வு கொள்ளவாம் .

இதோ ஒரு கல் நட்டு வைக்கப்பட்டுள்ளதே ஏன் ?

பசு மாடுகள் உடம்பில் தினவு ஏற்படும்போது உராய்ந்து கொள்ளவாம் .

இதற்கு ஆ உரிஞ்சு கல் என்று பெயராம் .

இதோ ஒருவர் கீற்றுப் பந்தலிட்டு நீரும் மோரும் வைத்துக் கொண்டு கோடை வெயிலில் உட்கார்ந்திருக்கிறாரே யாருக்காக ?

வழிப் போவோர்களுக்காகவாம் .

எறும்புகளின் புற்றில் ஒரு பெண் அரிசியைத் தூவுகிறாள் பாருங்கள் !

உண்ணுமுன் ஒருத்தி காக்கையை ஏன் அழைக்கிறாள் ?

காக்கை உண்ட பிறகே உண்ண வேண்டுமாம் .

இப்படி அஃறிணை உயிர்களிலிருந்து உயர்திணை மனிதர்கள் வரையில் எல்லா உயிர்க்கும் ' தருமம் ' செய்து வாழும் உள்ளம் , வாழ்க்கையின் நிகழ்ச்சிகளில் அறம் அடிப்படையாகி உள்ள நிலை இதுவே தமிழ்ப் பண்பாட்டின் நிலைபேற்றுக்குக் காரணம் .

எல்லார்க்கும் நல்லன செய்யவேண்டும் .

தீயவற்றை மறந்தும் செய்யக் கூடாது .

தீமை பிறர் செய்து வருவதில்லை .

அதற்கு நம் விதியே காரணம் .

நம் துன்பம் , நம் நோய் , நம் வறுமை இவற்றுக்கெல்லாம் யாரும் காரணமில்லை .

நாமே , நம் விதியே , நம் முன்னை வினையே காரணம் என்று கருதும் மனம் யாருக்கு என்ன தீங்கு செய்ய முடியும் ?

இதுவும் பண்பாட்டின் நிலைபேற்றுக்கான காரணமே !

பாலைப் பொழிந்துதரும் பாப்பா - அந்தப்

பசுமிக நல்லதடி பாப்பா ;

வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது

மனிதர்க்குத் தோழனடி பாப்பா

வண்டி இழுக்கும் நல்ல குதிரை - நெல்லு

வயலில் உழுதுவரும் மாடு

அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு - இவை

ஆதரிக்க வேணுமடி பாப்பா .

என்று எளிய உயிர்களையும் சுற்றமாக்கி வாழும் பண்பாடு என்றும் நிலைபெற்ற பண்பாடாக இருப்பதில் என்ன வியப்பு ?

தொகுப்புரை

தமிழ் நெஞ்சங்களே !

சான்றோர்களே !

இரண்டாயிரம் ஆண்டுக் காலத் தமிழர் பண்பாட்டை இங்கே கண்டீர்கள் .

காலம் அழிந்தாலும் , வானும் நதியும் மாறினாலும் , தமிழனின் பண்பாட்டுக் கூறுகள் சில மாறாமல் நிலைபேறு உடையனவாய்த் திகழ்கின்றன .

மனித நல்லிணக்கமும் , உயிரிரக்கமும் , உடன்பிறப்புப் பண்பும் , மாசற்ற தூய உள்ளமும் , உயிரோடு பிணைந்த காதலும் , எந்த நிலையிலும் உடையாத குடும்ப உறவும் அப்பண்பாட்டின் நிலைபேற்றுக்கு வழிவகுத்தவை எனலாம் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. தமிழர் பண்பாட்டில் கழிந்துவிட்ட கூறுகளில் இரண்டைக் கூறுக .

விடை

2. தமிழர் பண்பாட்டின் வீழ்ச்சிக்குரிய மூன்று ஆசைகள் எவை ?

விடை

3. தமிழர் பண்பாட்டில் புதிதாக வந்த ஆக்கங்களில் இரண்டைக் கூறுக .

விடை

4. பண்பாட்டில் ஏற்பட்ட மாபெரும் இழப்பு எது ?

விடை

5. அஃறிணை உயிர்களிடம் தமிழன் காட்டும் அன்புக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக .

காசும் கல்வெட்டும் - ஓர் அறிமுகம்

பாட முன்னுரை ஒரு நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளின் தொகுப்பை நாம் வரலாறு என்று கூறுகிறோம் .