63

என்ற பாடல் பகுதியால் அறியலாம் .

• கல்வெட்டில் பழமொழி

இளமைக் காலத்தில் கல்வி கற்கத் தொடங்குகிறோம் .

ஒருவர் இளமைக் காலத்தில் கற்கும் கல்வி உள்ளத்தில் ஆழப் பதிந்து என்றும் நிலைத்திருக்கும் .

அது கல்லின் மேல் எழுதிய எழுத்துகள் போல அழியாமல் இருக்கும் என்பதை ஒரு பழமொழியால் விளக்கினர் .

அந்தப் பழமொழி ,

இளமையில் கல்வி சிலையில் எழுத்து

என்பதாகும் ( சிலை - கல் ) .

• சங்கப் பெயர்கள்

இவையன்றி நாணயம் , முத்திரை , மோதிரம் , பதக்கம் ஆகியவற்றிலும் தமிழ் எழுத்துப் பொறிப்புகள் பல கிடைத்திருக்கின்றன .

அதியமான் , நெடுஞ்செழியன் , மாக்கோதை , குட்டுவன் கோதை , பெருவழுதி , கொல்லிரும்பொறை , கொல்லிப் பொறை , பெருங்கடுங்கோ , இளங்கடுங்கோ போன்ற சங்க கால அரசர் பெயர்கள் தமிழ் எழுத்துகளில் பொறிக்கப்பட்டுக் கிடைத்துள்ளன .

• எழுத்துப் பொறிப்பு

பானை ஓடுகளில் தமிழ் எழுத்துப் பொறிப்புகள் பல சொற்களாகக் கிடைத்துள்ளன .

அவற்றில் பண்ணன் , கண்ணன் , அந்தை , ஆதன் , பிட்டன் , கொற்றன் , அந்துவன் , நள்ளி , சாத்தன் என்பன சங்க இலக்கியத்தோடு தொடர்புடைய சொற்களாக உள்ளன .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1 ) கல் எழுத்தைப் பற்றிப் பாடிய புலவர் யார் ?

( விடை )

2 ) வீரர்களைப் புதைத்த இடத்திற்குப் பெயர் என்ன ?

( விடை )

3 ) தமிழில் பொறிக்கப்பட்ட சங்ககால அரசர் ஒருவர் பெயரைக் குறிப்பிடுக .

( விடை )

4 ) கல்வெட்டின் பகுதிகளில் எவையேனும் இரண்டினைக் குறிப்பிடுக .

( விடை )

5 ) எந்த மன்னன் காலத்தில் வட்டெழுத்துகள் தமிழ் வடிவத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டன ?

அரசும் அரசனும்

மன்னர்களைப் பற்றியும் , அவர்கள் நாட்டை ஆண்டபொழுது இயற்றிய ஆணைகளைப் பற்றியும் கல்வெட்டுச் செய்திகள் பல கிடைத்துள்ளன .

1.3.1 அரசு ஆணைகள்

கோயில்களில் அக்கோயில்கட்குக் கொடுத்த கொடைகளை மட்டும் அன்றி , அரசனுடைய ஆணைகளையும் , ஊர்ச்சபையும் நாட்டுச் சபையும் அவ்வப்போது நிறைவேற்றும் முக்கிய தீர்மானங்களையும் வெட்டி வைத்தனர் .

• கல்வெட்டில் காணும் அரசு ஆணைகள்

ஆண்டுதோறும் ஊர்க் குளத்தைத் தூர் வார வேண்டும் ; குறிப்பிட்ட பகுதிகளில் ‘ உயிர் ’ உள்ள மரத்தை வெட்டக் கூடாது , தாழ் குடிகள் என்று கூறப்படுவோர் ஊருக்குள் செருப்பு அணிந்து வரலாம் ; அவர்கள் வீடுகட்குக் காரை பூசிக் கொள்ளலாம் .

நன்மை தீமைக்குப் பேரிகை உள்ளிட்டன கொட்டுவித்துக் கொள்ளலாம் ; அநியாயம் அழிபிழை செய்தாரை வெட்டியோ குத்தியோ கொன்றால் தூக்குத் தண்டனை ( தலை விலை ) கிடையாது ; வரியோ வட்டியோ கோயிலுக்குக் கொடுக்காதவர்கள் வீட்டில் வெண்கலத்தைப் பறிக்கலாம் ; ஆனால் வெண்கலம் பறிக்கும்போது மண்கலம் தந்து வெண்கலம் பறிக்க வேண்டும் ; தவறுதலாக அம்பு அல்லது ஆயுதம் எறிந்து கொலை செய்தால் தலைவிலை ( தூக்குத்தண்டனை ) கிடையாது ; குளத்தில் தண்ணீர் இல்லாதபோது நெல்லுக்குப் பதிலாகப் புன்செய்த் தானியங்கள் கொடுக்கலாம் என்பன போன்ற பல ஆணைகளைக் கோயில் சுவர்களில் வெட்டி வைத்துள்ளனர் .

• கோயிலில் காணும் அரசு ஆணைகள்

கோயிலுக்கும் , இந்த ஆணைகட்கும் தொடர்பு இல்லாவிடினும் கோயிலில் அவை கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டால் அழியாமல் இருக்கும் ; எல்லோர் பார்வையிலும் படும் ; அதைப் படித்துப் பார்த்தவர்கள் அந்த ஆணைகளின் மூலம் நாட்டில் செயல்கள் நடைபெறுகின்றனவா என்று அறிந்து , நடைபெறாவிடில் அவைகளை ‘ விசாரித்து ’ நடைமுறைப்படுத்தலாம் என்பதற்காகவுமே அவை கோயில்களில் கல்வெட்டாக வெட்டப்பட்டன .

1.3.2 அரசன்

நாட்டை ஆண்ட அரசனைப் பற்றியே பல செய்திகள் கல்வெட்டில் இடம் பெற்றன .

அவனது பெருமைகளையும் புகழையும் பற்றியும் , அவன் பெயரைப் பற்றியும் , ஆண்ட காலம் பற்றியும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன .

• மெய்க்கீர்த்தி

அரசன் பெயருக்கு முன்னர் உள்ள அவனது பெருமை , புகழ் பற்றிக் கூறும் பகுதி மெய்க்கீர்த்தி எனப்படும் .

முதலாம் இராசராசன் பெயருக்கு முன்பு சிறு தொடராக இம் மெய்க்கீர்த்தி எழுதப்பட்டது .

மதுரை கொண்ட

மதுரையும் ஈழமும் கொண்ட

கச்சியும் தஞ்சையும் கொண்ட

வீரபாண்டியன் தலை கொண்ட

தொண்டை நாடு பாவின

என்று சிறு தொடராகக் காணப்பட்ட இம்மெய்க்கீர்த்தி முதலாம் இராசராசன் காலத்தில் பெரிய வடிவம் பெற்றது .

முதல் இராசராசன் மெய்க்கீர்த்தி ‘ திருமகள்போல ’ என்று தொடங்கும் .

ஒவ்வொரு அரசருக்கும் தனித்தனித் தொடராக மெய்க்கீர்த்தி தொடங்குவதால் மெய்க்கீர்த்தித் தொடக்கத்தைப் பார்த்து இந்தக் கல்வெட்டு எந்த அரசனுக்குரியது எனக் கண்டு கொள்ளலாம் .

• அரசன் பெயர்

அரசன் பெயர் கோ என்று சில கல்வெட்டுகளில் தொடங்கும் . பிற்காலச் சோழர் கல்வெட்டுகளில் திரிபுவனச் சக்ரவர்த்திகள் என்ற தொடர் அரசன் பெயருக்கு முன்னர் இருக்கும் .

பல்லவர்கள் கல்வெட்டு பல்லவ குல திலக என்றும் , சேரர் கல்வெட்டுகள் சந்திராதித்ய குல திலக என்றும் அரசன் பெயருக்கு முன்னர் வெட்டப்பட்டிருக்கும் .

பிற்காலச் சோழர் கல்வெட்டுகளில் இராசகேசரி , பரகேசரி என்ற பட்டப் பெயர்களும் , பாண்டியர் கல்வெட்டுகளில் மாறவர்மன் , சடையவர்மன் என்ற பட்டப் பெயர்களும் மாறி மாறி அரசர் பெயர்களுக்கு முன்பு காணப்படும் .

குலோத்துங்க சோழ தேவர் என்பது போல , பெயருக்குப் பின் தேவர் என்ற சொல் வரும் .

• ஆண்டுக் குறிப்பு

ஓர் அரசன் எந்த ஆண்டு அரசனாக முடி சூடிக் கொண்டானோ அந்த ஆண்டு முதல் அவன் ஆட்சியாண்டு தொடங்குவதாகப் பெரும்பாலும் எழுதுவர் .

ஓர் அரசன் ஐந்தாம் ஆண்டு ஒரு கட்டளை பிறப்பித்து அவனுடைய ஆறாம் ஆண்டில் கல்லில் கல்வெட்டாக வெட்டப்பட்டால் ‘ ஐந்தாவதுக்கு எதிராமாண்டு ’ என்று எழுதப்படும் .

சில கல்வெட்டுகளில் சாலிவாகன சக ஆண்டு , கலியுக ஆண்டு , கொல்லம் ஆண்டு ஆகியவற்றுள் ஒன்று வெட்டப்பட்டிருக்கும் .

சில கல்வெட்டுகளில் வருடப் பெயர் , மாதம் , தேதி , நட்சத்திரம் , நாள் ( கிழமை ) முதலியனவும் வெட்டப்பட்டிருக்கும் .

குகைக் கல்வெட்டும் கோயில் கல்வெட்டும்

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சமண முனிவர் பலர் , மகத நாட்டிலிருந்து பத்திரபாகு என்பார் தலைமையில் சந்திரகுப்த மௌரியனுடன் கருநாடக மாநிலம் வந்தனர் .

அங்கிருந்து விசாகாச்சாரியார் என்பவர் தலைமையில் சமண முனிவர்கள் பலர் தமிழகம் வந்தனர் .

கொடுமணல் அகழாய்வுப் பானை ஓட்டிலும் , இலங்கைப் பிராமி கல்வெட்டிலும் ‘ விசாகா ’ என்ற சொல் காணப்படுகிறது .

1.4.1 குகைக் கல்வெட்டு

தமிழகத்திற்கு வந்த சமண முனிவர்கள் இயற்கையான தமிழக மலைக்குகைகளில் தங்கித் தம் சீடர்களுக்கும் , மக்களுக்கும் அற உபதேசம் செய்தனர் .

அம்மலைகளில் அவர்களுக்குரிய கல் படுக்கைகளைத் தமிழக அரசர்களும் , வணிகர்களும் , பொதுமக்களும் அமைத்துத் தந்தனர் .

அவை பாழி , பள்ளி , அதிட்டானம் , கல்கஞ்சனம் , இருக்கை என்று கூறப்பட்டன .

மேற்குறிப்பிட்ட செய்திகளை அக் கல்படுக்கைகளின் அருகே கல்வெட்டெழுத்துகளாகவும் பொறித்தனர் .

இந்த அமைப்புடைய குகைகள் மாங்குளம் , அறச்சலூர் , சித்தன்னவாசல் , புகலூர் , அரிட்டாபட்டி , அய்யர்மலை , அம்மன் கோயில்பட்டி , ஆனைமலை , ஜம்பை , கருங்காலக்குடி , கீழவளவு , கொங்கர் புளியங்குளம் , குடுமியான்மலை , குன்னக்குடி , மாமண்டூர் , மன்னார் கோயில் , மறுகால்தலை , மேட்டுப்பட்டி , முதலைக்குளம் , முத்துப்பட்டி , நெகனூர்ப்பட்டி , திருச்சி , திருப்பரங்குன்றம் , திருவாதவூர் , தொண்டூர் , வரிச்சியூர் , விக்கிரமங்கலம் போன்ற பல இடங்களில் உள்ளன .

இங்கெல்லாம் தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன .

• பிராமி

இந்தக் கல்வெட்டு எழுத்துகள் பிராமி என முன்பு அழைக்கப்பட்டன .

வடநாட்டு பிராமியிலிருந்து இவற்றின் வரி வடிவத்தில் பல வேறுபாடுகள் காணப்படுவதால் இவை தென்பிராமி எனக் குறிக்கப்பட்டன .

• பிராமியும் தமிழும்

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சமணர் நூலான பன்னவன சூத்திரம் என்னும் நூல் இந்திய எழுத்துகளில் பிராமியுடன் ‘ தமிழ் ’ என்ற எழுத்து வகையையும் ஒன்றாகக் கூறுகிறது .

எனவே 1965இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதல் கல்வெட்டுக் கருத்தரங்கில் ‘ தென்பிராமி ’ என அழைக்கப்பட்ட எழுத்துகளைத் ‘ தமிழ் ’ என்றே அழைக்க வேண்டும் என்று அறிஞர் சா. கணேசன் கூறினார் .

பலரும் இன்று அவ்வாறே அழைக்கின்றர் .

தமிழுக்கு உரிய எழுத்து தமிழ் ஆயிற்று .

தமிழ் பிராமி

தமிழகக் குகை எழுத்துகள் என்னவென்றே புரியாமல் இருந்தபோது முதலில் 1924ஆம் ஆண்டு தமிழாகப் படித்தவர் , கோவை கே.வி.சுப்பிரமணியம் அவர்கள் .

பெரும்பான்மையான தமிழ்க் கல்வெட்டுகளைப் பொருள் பொருத்தமுறப் படித்தவர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் .

1.4.2 கோயில் கல்வெட்டு

கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை கோயில்கள் மரம் , செங்கல் , சுண்ணாம்பு , காரை ஆகியவற்றால் மட்டும் கட்டப்பட்டன .

இதனைச் ‘ சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு ’ எனச் சங்க இலக்கியமும் கூறும் .

• மகேந்திரனும் கற்கோயிலும்

பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் மேற்கண்ட பொருள்கள் இல்லாமல் கற்களால் கோயில் கட்டினான் .

அவனுக்குப் பின்னர் கற்கோயில்கள் பல தோன்றின .

அவை கற்றளிகள் எனப்பட்டன .

பல கோயில் கட்டிய ஒருவன் கற்றளிப்பிச்சன் எனப்பட்டான் .

• தனிக்கற்கள்

செங்கற் கோயில் சுவர்களில் தனிக்கற்களில் கல்வெட்டுகளைப் பொறித்துக் கோயில் சுவர்களில் பதித்திருந்தனர் .

கற்கோயில்களாக அவை மாற்றப்பட்டபோது தனிக்கல்லில் பொறிக்கப்பட்ட அக்கல்வெட்டுகள் கற்கோயில்களில் மீண்டும் பொறித்து வைக்கப்பட்டன .

அக்கல்வெட்டுகளின் தொடக்கத்தில் ‘ இதுவும் ஒரு பழங்கல்படி ’ என்ற தொடர் வெட்டப்பட்டது .

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இக்கல் கிடைத்துள்ளது .

• இடங்கள்

கற்கோயில்களில் சுவர்களிலும் , தூண்களிலும் , வாயில் நிலைகளிலும் , மேல் விதானங்களிலும் , தனிக்குத்துக் கற்களிலும் கல்வெட்டுகளைப் பொறித்தனர் .

சில கோயில்களில் , சுவாமி சிலைகளின் பீடங்களில்கூடக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன .

• கோயில் கொடைகள்

கோயில்களுக்கு நாள் வழிபாட்டுக்காகவும் , சிறப்பு விழாக்களுக்காகவும் , கோயில் பகுதிகளைப் புதிதாகக் கட்டும் திருப்பணிக்காகவும் , பழுதுபார்க்கவும் , சுவாமிகள் திருவீதிகளில் உலா வரவும் , பாடல்களைப் பாடவும் , ஆடல் நிகழ்ச்சிகளை நடத்தவும் , விளக்குகள் எரிக்கவும் , மலர்மாலைகள் அணிவிக்கவும் , அடியார்கட்கு அன்னமிடவும் , கோயில் பணியாளர்களை நியமிக்கவும் , இசைக் கருவிகள் இசைக்கவும் பலர் கொடைகள் அளித்தனர் .

அவற்றைக் கல்வெட்டாக வெட்டினர் . அளித்த கொடைகள் காசு , பொன் , நெல் , விளைநிலம் முதலிய பொருள்களாக இருந்தன .

தொகுப்புரை

இதுவரை நீங்கள் படித்ததை மீண்டும் சிந்தித்துப் பாருங்கள் .

உங்கள் கண்முன் தமிழகத்தின் நாணயமும் , கல்வெட்டும் பசுமையாக நிற்கின்றன அல்லவா ?

பழங்காலத்தில் செய்திகளைக் கல்லில் பொறித்தனர் என்பதையும் , நாணயம் அச்சுக் கருவி மூலம் வார்க்கப்பட்டது என்பதையும் அறிந்தீர்கள் .

கல்வெட்டுகள் சமண முனிவர் தங்கிய மலைக் குகைகளில் காணப்பட்டன .

தென்பிராமி எழுத்துகளே தமிழ் என்று கூறப்பட்டது .

கே.வி. சுப்பிரமணியம் அவர்களின் முயற்சியால்தான் கல்வெட்டெழுத்துகள் முதலில் படிக்கப்பட்டன .

அகழாய்வு நடந்த இடங்களில் பல்வேறு தொல்பொருள்கள் கிடைத்தன .

அவற்றில் சங்ககால மன்னர் பெயர்கள் காணப்பட்டன .

தனிக் கல்லில் கல்வெட்டுகளைப் பொறித்துக் கோயில் சுவர்களில் பதித்தனர் .

கல்வெட்டுக் காணப்படும் இடங்கள் , அவை கூறும் செய்திகள் , அரசு ஆணைகள் , கல்வெட்டின் தொடக்கம் , அதில் இடம்பெறும் செய்திகளின் வைப்புமுறை , மெய்க்கீர்த்தி , கல்வெட்டைப் படி எடுப்போர் அதில் காணப்படும் அரும் சொற்கள் முதலியவையும் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1 ) மெய்க்கீர்த்தி என்றால் என்ன ?

( விடை )

2 ) மலைகளில் தங்கிய சமணர்களுக்குக் கல்படுக்கைகளை அமைத்துக் கொடுத்தவர்கள் யாவர் ?

( விடை )

3 ) அரசு ஆணைகள் கோயில்களில் கல்வெட்டாகப் பொறிப்பதற்குரிய இரண்டு காரணங்களைக் குறிப்பிடுக .

( விடை )

4 ) முதற் கற்கோயிலைக் கட்டிய பல்லவ மன்னன் யார் ?

( விடை )

5 ) கற்கோயில்களில் எந்த எந்த இடங்களில் கல்வெட்டுகளைப் பொறித்தனர் ?

அரசியலும் ஆட்சியும்

பாட முன்னுரை

பழந்தமிழ் நாட்டில் மக்கள் நல்வாழ்வுக்காகப் பேரரசர்கள் ஆட்சி புரிந்தனர் .

சிற்றரசர்களும் நல்லாட்சிக்குத் துணை புரிந்தனர் .

அவர்கள் பரம்பரை பரம்பரையாக ஆளும் உரிமை பெற்றிருந்தார்கள் .

தமிழக மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்களைப் படைப்புக் காலம் தொட்டு இருந்து வரும் குடிகள் என்று பழைய உரையாசிரியர்கள் பாராட்டுவர் .

கால வெள்ளத்தில் பழைய அரச மரபுகள் சில மறைந்து புதிய அரச மரபுகள் தோன்றின .

சில அரசர்கள் தங்களுக்குள் போரில் ஈடுபட்டனர் , சிலர் நட்புடன் வாழ்ந்தனர் .

அவர்கள் அனைவரும் மக்கள் நல்வாழ்வின் பொருட்டே இணைந்து ஆட்சி புரிந்தனர் .

அவர்களைப் பற்றிய ஏராளமான கல்வெட்டுகள் கிடைக்கின்றன .

அவற்றின் வாயிலாக அவர்கள் ஆட்சி பற்றியும் , அவர்கள் வரலாறு பற்றியும் பல செய்திகளை நாம் அறிகின்றோம் .

அரசர்கள்

அரசர்கள் திருமாலின் அம்சமாகப் பிறந்தனர் என்பர் .

காமன் போல் அழகுடையவர் என்றும் கல்வெட்டுகள் கூறும் .

அவர்கள் பிறந்ததை , ‘ திரு அவதாரம் செய்த ’தாகக் கல்வெட்டுகள் குறிப்பிட்டன .

தமிழக அரசர்கள் பலர் தம் தந்தை காலத்தில் இளவரசர்களாக நியமிக்கப் பெற்றிருந்தனர் .

பிள்ளையார் என்று கூறப்பட்ட அவர்கள் இளங்கோ அல்லது யுவராஜா என்றும் அழைக்கப்பட்டனர் .

2.1.1 அரசர்கள் குலமும் சிறப்பும்

சக்கரவர்த்தி , சகலலோகச் சக்கரவர்த்தி , திரிபுவனச் சக்கரவர்த்தி , மகாராசா , கோனேரின்மை கொண்டான் என்றும் அரசர்கள் அழைக்கப்பட்டனர் .

பல்லவ அரசர்கள் கோவிசைய என்ற அடைமொழியைப் பெயருக்கு முன்னர்ச் சேர்த்துக் கொண்டனர் .

வர்மன் என்ற பட்டத்தைப் பெயருக்குப் பின்னரும் சேர்த்துக் கொண்டனர் .

இவ்வாறு சேர்த்துக் கொண்டதைக் கல்வெட்டுகள் கூறுகின்றன .

விசய நகர மன்னர்கள் இராயர் , மகாராயர் எனக் கூறப்பட்டனர் .

பெருமானடிகள் என்றும் இவர்கள் அழைக்கப்பட்டனர் .

• குலமும் சிறப்புப் பட்டமும்

சோழ மன்னர்களுக்கு உரியது சூரிய குலம் .

பாண்டிய மன்னர்கள் தங்கள் குலம் சந்திர குலம் என்றனர் .

சேர மன்னர்கள் சந்திராதித்ய குலத்தவர் என்று குறிக்கப்பட்டனர் . பல்லவர்கள் சிலர் தங்களைப் பாரத்வாஜகுலம் என்றும் கூறிக் கொண்டனர் .

அதியமான் மரபினர் அஞ்சி , எழினி என்ற பட்டப் பெயர்களை மாறி மாறி வைத்துக் கொண்டனர் .

சோழ அரசர்கள் இராசகேசரி , பரகேசரி என்ற பட்டப் பெயர்களை மாறி மாறிப் பெற்றனர் .

பாண்டிய அரசர்கள் மாறவர்மன் , சடையவர்மன் என்ற பட்டப் பெயர்களையும் , முற்காலச் சேரர்கள் வானவரம்பன் , இமயவரம்பன் என்ற பட்டப் பெயர்களையும் மாறி மாறிப் புனைந்து கொண்டனர் .

• மெய்க்கீர்த்திகள்

பல அரசர்கள் தங்களின் முக்கிய வெற்றிச் சிறப்பைக் குறிக்கும் தொடர்களைத் தங்கள் பெயருக்கு முன்னர்ச் சேர்த்துக் கொண்டனர் .

அவை மெய்க்கீர்த்திகள் எனப்பட்டன .

பொதுவாக அவை அரசனின் வெற்றிச் சிறப்பையும் ஆட்சிச் சிறப்பையும் கூறும் .

பாட்டியல் இலக்கண நூல்கள் மெய்க்கீர்த்திகட்கு இலக்கணம் கூறுகின்றன .

‘ தஞ்சை கொண்ட பரகேசரி ’ , ‘ தொண்டை நாடு பாவின ஆதித்தன் ’ , ‘ ஈழமும் மதுரையும் கொண்ட பராந்தகன் ’ , ‘ கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னரதேவன் ’ , ‘ கங்கையும் கடாரமும் கொண்ட இராசேந்திரன் ’ , ‘ வீரபாண்டியன் தலைகொண்ட ஆதித்தன் ’ , ‘ சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டியன் ’ என்பன சில அரசர்களின் சிறப்பு அடைமொழிகளாக விளங்கின .

இச்சுருக்கமான தொடர்களே பின்னர் மெய்க்கீர்த்திகளாக மாறிப் பெரும்பான்மையான கல்வெட்டுகளில் அவர்கள் பெயருக்கு முன்னர்ச் சேர்க்கப் பெற்றன .

ஒவ்வொரு அரசருக்கும் தனியாகத் தொடங்கும் மெய்க்கீர்த்திகள் உண்டு .

இராசராசன் மெய்க்கீர்த்தி ‘ திருமகள்போல ’ என்று தொடங்கும் .

இராசேந்திரசோழன் மெய்க்கீர்த்தி ‘ திருமன்னிவளர ’ என்று தொடங்கும் .

ஒரே அரசருக்குப் பலவகைத் தொடக்கங்களைக் கொண்ட பல மெய்க்கீர்த்திகளும் உண்டு .

நாடு அரசனுக்கு உரிமை உடையது .

‘ பெருநிலச் செல்வியைத் தனக்கேயுரிமை பூண்டு ’ இராசராசன் வாழ்ந்ததாக அவன் மெய்க்கீர்த்தி கூறுகிறது .

‘ இருநில மடந்தையைத் தன்பெரும் தேவியாகக் கொண்டான் ’ என்று இராசேந்திரன் மெய்க்கீர்த்தி கூறுகிறது .

உடையார் , தேவர் , நாயனார் , பெருமாள் , ஐயன் என்ற அடைமொழிகள் அரசர்களின் பெயருக்கு முன்பும் , பின்பும் சேர்த்துக் குறிப்பிடுவார்கள் .

• அரசிருக்கையும் சின்னமும்

அரசர்கள் அமர்ந்து ஆட்சிபுரிந்த சிம்மாசனம் ஆகிய இருக்கைகளும் பெயர் சூட்டப் பெற்றிருந்தன .

சிம்மாசனம் அரியணை எனப்பட்டது .

பாண்டியராசன் , மழவராயன் , முனையதரையன் , காலிங்கராயன் என அரியணைகள் தனிப் பெயரிட்டு அழைக்கப்பட்டன .

அவை பள்ளிப்பீடம் , பள்ளிக்கட்டில் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படும் .

சோழர் புலிக்கொடியும் , சேரர் வில்கொடியும் , பல்லவர் நந்திக்கொடியும் , விசயநகர மன்னர்கள் பன்றிக் கொடியும் , வாணர்கள் கருடக் கொடியும் பெற்றிருந்தனர் .

பாண்டியர் கொடியில் இரட்டை மீன் இருக்கும் .

வாளார்ந்த பொற்கிரிமேல் வரிக்கயல்கள் விளையாட என்பது கல்வெட்டுத் தொடர் .

இணைக்கயல்கள் என்றும் இதனைக் கூறுவர் .

• உயர்வு நவிற்சி

பிற்காலத்தில் சிறு நிலப்பகுதியை ஆட்சிபுரிந்த குறுநிலத் தலைவர்கள் பேரரசர்கட்கு ஒப்பாகத் தங்களைப் புகழ்ந்து கல்வெட்டுகளைப் பொறித்துக் கொண்டனர் .

கிழக்கு , தெற்கு , மேற்கு , வடக்கு ஆகிய எல்லாத் திசைகளிலும் ஆட்சி புரிந்தவராகப் ‘ பூருவ தட்சிண பச்சிம உத்தராதிபதி ’ என்று அவர்கள் தம்மைக் குறித்துக் கொண்டனர் .

எல்லா நாடுகளையும் வென்று கைப்பற்றியவர்கள் என்பது தோன்றுமாறு ‘ எம்மண்டலமும் கொண்டான் ’ என்றும் , ‘ கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் ’ என்றும் தங்களைக் கூறிக் கொண்டனர் .

ஏழுகடலையும் அதிபதியாக உடையவர் என்ற பொருளில் சத்த சமுத்திராதிபதி எனக் கூறிக் கொண்டனர் .

‘ திக்கு அனைத்தும் சக்கரம் நடாத்தி ’ அரசு புரிந்ததாகவும் கூறிக் கொண்டனர் .

இவை , உயர்வு மொழியாகப் படைத்துக் கூறப்பட்டவை ஆகும் .

மூன்று உலகிற்கு அரசர் என்ற பொருளில் திரிபுவனச் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்டனர் .

சம்புவராயர்கள் தம்மை , சகலலோகச் சக்கரவர்த்தி என அழைத்துக் கொண்டனர் .

2.1.2 வாரிசுகள்

பெரும்பாலும் அரசுரிமை மூத்த புதல்வருக்கே உரியதாக இருந்தது .

இம்முறை மக்கள் தாயம் என்று அழைக்கப்பட்டது .

மூத்த புதல்வன் மரணமடைந்தால் இளைய புதல்வன் அரசனானான் .

அரசனின் மகன் இளவயதினனாக இருந்தால் , அரசனின் தம்பி பட்ட மேற்பதும் உண்டு .

முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பின்னர் ( 1012 - 1044 ) அவன் மக்கள் மூவர் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்தனர் .

அவர்கள் முதலாம் இராசாதிராசன் ( 1018 - 1054 ) , இரண்டாம் இராசேந்திரன் ( 1051 - 1063 ) , வீரராசேந்திரன் ( 1063 - 1070 ) ஆகியோர் ஆவர் .

சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்தகரிகாலன் இளவரசனாகப் பட்டமேற்றிருந்தபோது இறக்கவே , இளைய மகன் முதலாம் இராசராசன் பட்டம் ஏற்றிருக்க வேண்டும் .

ஆனால் இராசராசன் இளையவனாக இருக்கவே , அவனின் சிறிய தந்தை உத்தம சோழன் பட்டம் ஏற்றதாக அறிகின்றோம் .

• நேர் வாரிசு இல்லாதவரும் முடிசூடல்

கி.பி. 1070ஆம் ஆண்டு , முதலாம் இராசேந்திரன் பேரனும் , வீரராசேந்திரன் மகனுமான அதிராசேந்திரன் மரணமடையவே , முதலாம் இராசேந்திரன் மகள் அம்மங்கைதேவியின் மகன் ( கீழைச்சாளுக்கிய இராசராச நரேந்திரன் மகன் ) இராசேந்திரன் கீழைச்சாளுக்கிய மரபினனாக இருந்தும் சோழ அரசனாக குலோத்துங்கன் என்ற பெயரில் முடிசூட்டப் பெற்றான் .

பல்லவ மன்னன் இரண்டாம் பரமேசுவரவர்மன் ( 705-710 ) ஆட்சிக்குப் பின் அரசன் இல்லாதபோது பல்லவர் மரபில் வந்த இரணியவர்மன் மகன் பல்லவ மல்லனை ( 12 வயது உடையவன் ) அரசனாகத் தேர்ந்தெடுத்து நந்திவர்மன் என்று பெயர் சூட்டினர் .

சேரமான் பெருமாள் தனக்கு வாரிசு இல்லாமையால் , பூந்துறை இளைஞர்கள் மானீச்சன் , விக்கிரமன் ஆகியோரை அரசராக்கினார் என்று வரலாற்று ஆவணங்களும் , இலக்கியங்களும் கூறுகின்றன . 2.1.3 இளவரசர்கள்