65

வாரியத்திற்கென்று தனி இடம் கிடையாது .

ஏரி , குளக்கரைகளிலும் , மரத்தின் அடியிலும் , கோயில் கோபுரத்தின் கீழும் , கோயில் மண்டபங்களிலும் அவை கூடிற்று .

உறுப்பினர்களுக்குச் சம்பளம் எதுவும் கிடையாது .

வாரியத்தின் பதவிக் காலம் ஓராண்டாகும் .

வாரியத் தேர்தலின்போது அரசு அலுவலர் உடன் இருப்பார் .

முதல் பராந்தக சோழன் காலத்தில் உத்தரமேரூர்ச் சபைத் தேர்தல் நடைபெற்றபோது , இரு முறை அரசு அலுவலர்களான தத்தனூர் மூவேந்த வேளானும் , சோமாசிப் பெருமாளும் உடன் இருந்தனர் என்பதை உத்திரமேரூர்க் கல்வெட்டு கூறுகின்றது .

2.5.2 குடவோலை முறை

ஒவ்வொரு ஊரும் அதன் பெருமை சிறுமைகட்கு ஏற்பப் பல குடும்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது .

தொண்டை நாட்டு உத்தரமேரூர் முப்பது குடும்புகளையும் , சோழ நாட்டுச் செந்தலை அறுபது குடும்புகளையும் கொண்டிருந்தது .

தகுதியும் விருப்பமும் உடையவர் பெயர்களை ஓலை நறுக்கில் எழுதிக் குடத்தில் இடுவர் .

அதனைக் கட்டி முத்திரையிடுவர் .

எல்லாக் குடும்புகளில் இருந்தும் வந்த குடங்களை ஊர்ப் பொது மன்றத்திற்குக் கொண்டு வருவர் .

ஊரில் உள்ள எல்லோரும் கூடியுள்ள சபையில் குடத்தை எல்லோருக்கும் எடுத்துக் காட்டி முத்திரை அழித்துக் கட்டவிழ்த்து சிறு குழந்தையை விட்டு ஓலையை எடுக்கச் செய்வர் .

அதைப் பெரியவர் ஒருவர் ஐந்து விரலும் விரிய வாங்கிப் படிப்பார் .

சபையில் உள்ள எல்லோரும் படிப்பர் .

பின் உறுப்பினராக ஓலையில் உள்ளவர் பெயர் எழுதப் பெறும் .

இந்தப் பழங்காலத் தேர்தல் முறைக்குக் குடவோலை முறை என்று பெயர் வழங்கியது .

இம்முறை தமிழ்நாட்டில் சங்க காலத்திலேயே இருந்தது .

‘ கயிறு பிணிக்குழிசி ஓலை கொண்மார் பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்கள் ’ என்ற சங்க இலக்கியத் தொடரால் இதனை அறிகின்றோம் .

2.5.3 மண்டலப் பேரவை

கி.பி. 13ஆம் நூற்றாண்டில் செயங்கொண்ட சோழமண்டலத்துள் உள்ள எல்லா நாட்டுப் பிரதிநிதிகளும் கூடி எல்லா நாடுகளிலும் உள்ள தேவதானம் , திருவிடையாட்டம் , திருநாமத்துக்காணி , பள்ளிச்சந்தம் , அகரப்பற்று , மடப்புறம் , சீவிதப்பற்று , படைப்பற்று , வன்னியப்பற்று ஆகிய எல்லா நிலங்களிலும் வேலி ஒன்றுக்கு ஆறுகல நெல் தள்ளிவிட வேண்டும் என்று தீர்மானித்தனர் .

இதனை மன்னன் மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் ஒப்புக் கொண்டு ஆணை பிறப்பித்ததைக் காஞ்சிபுரம் கல்வெட்டு ஒன்று கூறுகிறது .

இதன் மூலம் மண்டலம் எல்லாவற்றிற்கும் ஒரு பேரவை இருந்தது என்பதை அறிகிறோம் .

( இங்குச் சுட்டப்பட்டுள்ள மண்டலங்கள் பற்றிய விளக்கங்கள் பாட இறுதியிலுள்ள கலைச் சொற்கள் பகுதியில் கூறப்பட்டுள்ளன)

வரி விதித்தல்

அரசாங்கம் பொருள் வருவாய் இல்லாமல் நடைபெற முடியாது .

ஆட்சி இனிது நடைபெற வேண்டியும் , பொது மக்களுக்குப் பலவகை நலங்கள் புரிந்து அவர்களைப் பாதுகாத்தல் பொருட்டும் அரசன் தன் நாட்டு மக்களிடம் வரி வாங்குவது இன்றியமையாததாகிறது .

நில உரிமையாளராகிய காணியாளர்களும் , வணிகர்களும் , பல்வேறு வகையான தொழிலை மேற்கொண்டவர்களும் அரசனோ நாட்டுச் சபையோ ஊராரோ வசூலித்த வரிகளைத் தவறாமல் செலுத்தினர் என்பதைக் கல்வெட்டுகள் கூறுகின்றன .

2.6.1 பலவகை வரிகள்

அரசின் வருவாயில் நிலவரியே முதன்மை பெற்று நிலவியது .

அவ்வரி , கடமை அல்லது காணிக்கடன் என்று கூறப்படும் .

நிலவரி நீங்கிய பிறவரிகள் குடிமை என்று கூறப்பட்டன .

நிலத்தின் விளைச்சலுக்கேற்ப நெல்லாகவும் , பொன் அல்லது காசு ஆகவும் வசூல் செய்தனர் .

பெரும்பாலும் ஆறில் ஒரு பங்கு வரியாக வசூல் செய்யப்பட்டது .

நிலவரி இல்லாமல் தறியிறை , செக்கு இறை , மனை இறை , அங்காடிப் பாட்டம் , தட்டாரப் பாட்டம் , ஈழம்பூட்சி , வண்ணாரப் பாறை , குசக்காணம் , ஓடக்கூலி , நீர்க்கூலி , நாடுகாவல் , சுங்கம் , தரகு , மரஇறை , இலைக்கூலம் முதலான பல வரிகள் வாங்கப் பெற்றமையைக் கல்வெட்டுகள் கூறுகின்றன .

‘ நிலம் கடமையும் அந்தராயமும் வினியோகமும் தருவதான அச்சும் காரிய ஆராய்ச்சியும் வெட்டிப்பாட்டமும் பஞ்சுபீலியும் சந்துவிக்கிரகப் பேறும் வாசற்பேறும் இலாஞ்சினைப்பேறும் தறியிறையும் செக்கிறையும் தட்டொலிப்பாட்டமும் இடையர்வரியும் மீன்வரியும் பொன்வரியும் மற்றும் எப்பேற்பட்ட வரியும் ’

என்பது கல்வெட்டுத் தொடர் .

2.6.2 சலுகைகள்

தவறாமல் வரிகொடுக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப் பட்டிருந்தாலும் வெள்ளம் , பஞ்சம் , விளைவு இன்மை ஆகிய பல காரணங்களுக்காகப் பல இடங்களில் வரி குறைத்து சலுகை காட்டப்பட்டது .

புதிய ஊர்களில் உழவர்களையும் , தொழிலாளர்களையும் குடியேற்றும்போதும் , விளையாத தரிசு நிலங்களைப் பண்படுத்தி உழவு செய்யும்போதும் சில ஆண்டுகட்கு வரி இல்லை என்றும் , பின்னர் சில ஆண்டுகட்குக் குறைந்த வரி என்றும் நிர்ணயிக்கப்பட்டது .

முதல் குலோத்துங்க சோழன் வணிகர்கட்கு இருந்த சுங்கவரியை நீக்கிச் சுங்கந்தவிர்த்த சோழன் என்று பெயர் பெற்றான் .

சுங்கம் இல்லாச் சோழநாடு என்று கூறப்பட்டது .

வரி செலுத்தாதோர் நிலமும் , பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டன .

அதனால் வந்த பொருளைக் கருவூலம் ஆகிய பண்டாரத்தில் சேர்த்தனர் .

தொகுப்புரை

இதுவரை , சேர சோழ பாண்டிய மன்னர்கள் நாட்டை ஆண்ட முறைகளுடன் பல்லவர் , விசயநகர மன்னர்கள் நாட்டை ஆண்ட முறைகளையும் அவர்கள் வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொண்டீர்கள் .

அவர்களுடைய சிறப்புப் பெயர்கள் , குலப்பெயர்கள் என்னவென்று கூறப்பட்டன .

மன்னர்களின் வெற்றிச் சிறப்பு மெய்க்கீர்த்தி என வழங்கப்பட்டது .

அரசியர் கோயில் திருப்பணிகள் செய்துள்ளனர் . பெண் அதிகாரிகள் இருந்த செய்தி பெண்கள் சமூகத்தில் ஏற்றம் பெற்று வாழ்ந்த நிலையைக் காட்டுகிறது .

நாடுகள் , மண்டலங்களாக , வளநாடுகளாக , நாடுகளாக , ஊர்களாகப் பிரிக்கப்பட்டு நல்லாட்சி நடந்ததைக் காணமுடிகிறது .

குடஓலை முறையில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

வாரியத் தலைவர்கள் குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது .

வரிகள் முறையாக வசூலிக்கப்பட்டன .

கல்வெட்டில் காணப்படும் கலைச் சொற்களும் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன .

கல்வெட்டுக் கலைச் சொற்கள்

வாரியங்களும் குழுக்களும்

ஆட்டை வாரியம் இது ஆண்டு வாரியம் , சம்வத்சர வாரியம் என்றும் கூறப்பெறும் .

ஊர்ச் சபையின் குழுக்களில் ஒன்று .

இதுவே குழுவில் தலைமையான வாரியம் .

குடும்பு வாரியம் ஊர்ச்சபை அமைந்துள்ள ஊரின் ஒரு பகுதி குடும்பு .

இன்றைய நகராட்சி நிர்வாகத்தில் ‘ வார்டு ’ அமைப்பைப் போன்றது .

பெரும்பாலும் இது விளைநிலத்தையொட்டி அமையும் .

அதை நிர்வகிக்கும் குழு குடும்பு வாரியம் .

தடிவழி வாரியம் ஊர்ச் சபையில் வயலையும் வயல் பற்றிய கணக்கையும் நிர்வகிக்கும் குழு .

மூலபருடையார் கோயில் நிருவாக சபையார் .

சாத்தகணத்தார் சாத்தகணத்தார்னார் கோயிலை நிர்வகிக்கும் குழுவினர் .

ஐகாளிகணத்தார் காளி கோயிலை நிர்வகிக்கும் குழுவினர் .

குமாரகணத்தார் முருகன் கோயிலை நிர்வகிக்கும் குழுவினர் .

சங்கரப்பாடியார் எண்ணெய் வணிகர்கள் கொண்ட குழுவினர் .

பன்மாகேஸ்வரர் சிவனடியார் கூட்டம் ( பன்மாகேஸ்வரன் என ஒருமையில் வராது .

பன்மாகேஸ்வரர் எனப் பன்மையிலேயே வரும்)

மண்டலப் பேரவை

திருவிடையாட்டம் விஷ்ணு கோயில்கட்கு அளிக்கப் பெற்ற மானிய நிலம் .

திருநாமத்துக்காணி சிவன் கோயில்கட்கு அளிக்கப் பெற்ற மானிய நிலம் .

பள்ளிச்சந்தம் பௌத்தப் பள்ளிகட்கும் சமணப் பள்ளிகட்கும் அளிக்கப் பெற்ற மானிய நிலம் ( சமண , பௌத்தக் கோயில்கள் பள்ளிகள் எனப்படும்)

அகரப்பற்று பிராமணர்களின் ஊராகிய அக்கிரகாரங்களுக்கு உரிய நிலம் ( அகரம் என்பது அக்கிரகாரம் என்பதன் சுருக்கப் பெயர்)

மடப்புறம் மடங்களுக்கு விடப்பட்ட மானிய நிலம் .

சீவிதப்பற்று வாழ்நாள் வரை அனுபவிக்கும் உரிமையோடு உள்ள நிலம் .

படைப்பற்று படையில் உள்ளவர்கட்குப் பொதுவாக அளிக்கப் பெற்ற நிலம் அல்லது ஊர் .

வன்னியப்பற்று படையில் பணிபுரியும் வீரர்கட்கு அளிக்கப் பெற்ற நிலம் அல்லது ஊர். ( வன்னியர் - படை வீரர் )

பலவகை வரிகள்

தட்டாரப்பாட்டம் பொற்கொல்லர்கள் செலுத்தும் வரி .

ஈழம்பூட்சி ஈழவர் மீதான வரி ( ஈழவர் - கள் இறக்குவோர் )

வண்ணாரப்பாறை துணி வெளுப்போர் மீதான வரி

இலைக்கூலம் வெற்றிலை வணிகர் மீதான வரி .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1 ) ‘ சாவடி ’ என்ற பகுதியின் பெயர் யார் காலத்தில் ஏற்பட்டது ?

( விடை )

2 ) சோழர் காலத்தில் தொண்டைநாடு எவ்வாறு அழைக்கப்பட்டது ?

( விடை )

3 ) சோழநாட்டில் முதலில் இருந்த வளநாடுகள் எத்தனை ?

( விடை )

4 ) பழங்காலத் தேர்தல் முறைக்குப் பெயர் என்ன ?

( விடை )

5 ) ‘ சுங்கந் தவிர்த்த சோழன் ’ என்று சிறப்பிக்கப்படுபவன் யார் ?

கலையும் இலக்கியமும்

பாட முன்னுரை

ஒரு சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சிக்குக் கலையும் , இலக்கியமும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும் . கலையைக் கவின்கலை , பயன்கலை என்று இரண்டு பிரிவாகக் கூறுவர் .

இசை போன்றவற்றைக் கவின்கலை அல்லது அழகுக்கலை என்றும் , கட்டடக்கலை போன்றவைகளைப் பயன்கலை என்றும் கூறுவர் .

கலை மனத்திற்கு இன்பம் தரவல்லது ; மகிழ்ச்சியூட்டக்கூடியது .

கலை வெறும் பொழுதுபோக்குக்கு மட்டும் உரியது அல்ல ; தமிழ்நாட்டில் கலை சமயத்தோடு தொடர்புடைய தெய்வீகக் கலையாக விளங்குகிறது .

சமுதாய நிகழ்ச்சிகளின் பதிவாகப் பண்பாட்டை எடுத்துக்காட்டுவது இலக்கியம் .

இலக்கியம் கடந்த காலத்தைக் காட்டும் கண்ணாடியாகவும் பயன்படுகிறது .

கலை பற்றியும் இலக்கியம் பற்றியும் இப்பாடத்தில் பார்க்கலாம் .

கலையும் கலைவல்லவர்களும்

பாடலிலும் , ஆடலிலும் வல்லவர்களான ஆண்களும் பெண்களும் , இசைக்கருவிகளை இயக்கும் இருபாலாரும் தமிழ்நாட்டில் பலர் வாழ்ந்தனர் .

அவர்கள் சமுதாயத்தில் பெரும் சிறப்புப் பெற்று வாழ்ந்தனர் .

நாட்டு மக்களால் நன்கு மதிக்கப் பெற்றிருந்தனர் .

அரசரால் சிறப்புப் பட்டங்கள் பெற்றும் பலர் வாழ்ந்தனர் .

செல்வச் செழிப்புடனும் பெயரும் புகழும் பெற்ற அக்கலை வல்லவர்கள் கலை ஈடுபாட்டுடன் நில்லாமல் பல சமூகப் பணிகளிலும் , சமயப் பணிகளிலும் ஈடுபட்டு விளங்கினர் .

அவர்களைப் பற்றிய செய்திகள் பல கல்வெட்டுகளில் காணப்படுகின்றன .

• கூத்துக்கலை

கோயிலில் ஆடிய ஆட்டங்கள் பல்வேறு வகைப்பட்டன .

சாந்திக்கூத்து , விநோதக்கூத்து , தமிழ்க்கூத்து , ஆரியக்கூத்து , சாக்கைக் கூத்து என்பன அவற்றுள் சில. சாந்திக் கூத்து 108 கரணங்கள் கொண்ட கூத்த நிருத்தம் எனப்படும் .

அது சொக்கம் , அகமார்க்கம் என்னும் மெய்க்கூத்து , கை கால் அசைத்தாடும் அவிநயம் , கதை தழுவிய நாடகம் என நால்வகையாகப் பிரிந்தது .

அப்பிரிவில் ஒன்றான அகமார்க்கம் தேசி , வடுகு , சிங்களம் என்று மூன்றாக அழைக்கப்பட்டது .

கூத்துகள் மூன்று அல்லது ஏழு அங்கங்களாக ஆடப்பட்டன .

வரிக்கோலம் என்பதும் , சாந்திக் குனிப்பம் என்பதும் சில ஆட்டங்களுக்குப் பெயர்கள் ஆகும் .

இயல் , இசை , நாடகம் எனத் தமிழ் மூவகையாகப் பிரிக்கப்பட்டது .

நாடகமே கூத்து எனப்பட்டது .

• கருவிகளும் இசைக்கும் முறையும்

கல்வெட்டுகளில் குறிக்கப் பெறும் பல்வேறு இசைக் கருவிகளைத் தோல்கருவி , துளைக்கருவி , கஞ்சக்கருவி , மிடற்றுக்கருவி என நான்காகப் பிரிப்பர் .

அவைகளை இயக்குவதைக் கொட்டுதல் , ஊதுதல் , வாசித்தல் , அறைதல் , ஏற்றுதல் , பாடுதல் , தடவல் என அழைப்பர் .

கல்வெட்டுகளில் உடுக்கை வாசித்தல் , காகளம் ஏற்றுதல் , சேகண்டிகை கொட்டுதல் , சங்கு ஊதுதல் , பறை அறைதல் , வீணை தடவுதல் , பதிகம் பாடுதல் எனக் குறிக்கப் பெறும் .

கருவிகட்கு ஏற்ப இசைக்கும் முறை வேறுபட்டதை இத்தொடர்கள் விளக்குகின்றன .

3.1.1 இசை

சில கல்வெட்டுகள் இசை பற்றிய தனிக் குறிப்புகள் கொண்டு விளங்குகின்றன .

அவற்றுள் பழமையான அறச்சலூர் இசைக்கல்வெட்டு மிக முக்கியமானது .

சமண முனிவர்கள் தங்கியிருந்த இயற்கைக் குகைத்தளத்தில் கற்படுக்கைகளின் அருகில் இசை , தாள எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன .

மணிய வண்ணக்கன் தேவன் சாத்தன் என்பவன் அங்கு இசை எழுத்துகளைப் ‘ புணருத்தான் ’ என்று கூறப்பட்டுள்ளது .

சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் கூறும் ‘ எழுத்துப் புணர்ப்பு ’ என்ற தொடர் அங்கு எழுதப்பட்டுள்ளது .

( புணருத்தான் - சேர்த்தான் )

• இசைக்கருவி

கல்வெட்டுகளில் உடுக்கை , கறடிகை , காளம் , காகளம் , காசை , குடமுழா , குழல் , கொட்டிமத்தளம் , சகடை , சங்கு , செண்டை , சேகண்டிகை , சேமக்கலம் , டமருகம் , தட்டழி , தவில் , தாரணி படகம் , தாளம் , திருச்சின்னம் , திமிலை , நகரா , பறை , பஞ்சமுறை , பாரி நாயனம் , மல்லாரி , மணி , முகராசு , மேளம் , யாழ் , வங்கியம் , வீரமத்தளம் , வீணை போன்ற பல கருவிகள் குறிக்கப்பட்டுள்ளன .

‘ இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ’ என்ற திருவாசகப் பாடல் மூலம் வீணைக்கும் யாழிற்கும் வேறுபாடு உண்டு என்பதை அறிகிறோம் .

• இசை அடைவு எழுத்துகள்

அதன் அருகில் இரண்டு தொகுதிகளாக அடவு எனப்படும் இசை , தாள எழுத்துகள் ஐந்து ஐந்து வரிசையாகப் பொறிக்கப்பட்டுள்ளன .

தா தி தா தி த

தி தா தே தா தி

தா தே தி தே தா

தி தா தே தா தி

தா தி தா தி தா

என்பன ஒரு தொகுதி எழுத்துகள் ஆகும் .

இவை 1800 ஆண்டுகட்கு முற்பட்டவை .

இவைகளைப் பொறித்தவன்தான் மணியன் வண்ணக்கன் தேவன் சாத்தன் என்பவன் .

3.1.2 கலைப்பிரிவினரும் பெற்ற சிறப்பும்

பாடுவான் , நடம்புரிவான் , கூத்தாடி , கொம்பூதி , பண்பாடி , தக்கைகொட்டி எனத் தொழிலின் அடிப்படையில் அழைக்கப் பெற்ற அவர்கள் பெருமை , அவர்களின் பெயர்கள் அமைந்துள்ள தன்மையிலேயே விளங்கும் . அரையன் சுந்தர சோழனான மும்முடிசோழ நிருத்த மாராயன் , அரையன் அபிமான துங்கனான அருமொழி நிருத்தப் பேரரையன் , சாந்திக் கூத்தன் திருவாளன் திருமுது குன்றன் ஆன விசயராசேந்திர ஆச்சார்யன் , உடுக்கை வீரசோழன் விடங்கனான ராஜராஜஸ்ரீஉறஸ்தன் , பாடவ்யம் கூத்தன் வீதிவிடங்கன் , குரவன் வீரசோழனான பஞ்சவன்மாதேவி நாடகமய்யன் , மறைக்காட்டுக் கணவதியான திருவெள்ளறைச் சாக்கை , சாக்கை மாராயன் விக்கிரம சோழன் என்பன சில கலைவல்லவர்கள் பெயர்கள் ஆகும் .

வாணகோவரையர் பெண்டிர் கூத்தாடும் நாச்சியார் உமையான ஊர்க்கு நல்லார் என்பது ஒரு நடனமாதின் பெயர் .

• கலைவல்லார் நியமனம்

ஏற்கெனவே கலைவல்லவர்கள் இல்லாத கோயிலில் புதியதாகக் கலைவல்லவர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு கொடைகள் அளிக்கப் பட்டதையும் பற்றிக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன .

‘ திருவிடைமருதூர் உடையார் கோயிலில் பாடவ்யத்துக்கு

முன்பு நிவந்தம் இல்லாமையால் இத்தேவர்க்குப் பாடவ்யம்

வாசித்து நிற்க நெல்லு இரு தூணி ’

( திருவிடை மருதூர்க் கல்வெட்டு )

‘ குழைஞ்சானான பிரகடகண்ட மாராயனுக்கும் , இவன்

தம்பி சோறநுக்கும் , பூமனுக்கும் உவைச்சக் காணியாகக்

கல்வெட்டிக் கொடுத்தபரிசாவது இக்கோயிலுக்கும் ஊருக்கும்

நெடுநாள் முதல் இந்நாள் வரையாக காணியாளரென்று

ஒருவரையும் காணாதபடியாலே காணியாகக் கொடுத்த நிலம் ’

( திருச்சி மாவட்டம் - பூவாலைக்குடிக் கல்வெட்டு )

போன்ற கல்வெட்டுப் பகுதிகளில் புதுக் கலைவல்லவர்கள் நியமனம் பெற்றுக் கொடையளிக்கப் பெற்றதைக் காணுகிறோம் .

• சிறப்பு பெற்றமை

அரையன் , மாராயன் , பேரரையன் என்பன அவர்கள் பெற்ற சிறப்புப் பட்டங்களாகும் .

அருள்மொழி , வீரசோழன் , விக்கிரமசோழன் போன்ற அரசர் பெயர்களை அவர்கள் பெற்றிருப்பது அவர்களின் அரசுத் தொடர்பையும் , உயர்வையும் , சிறப்பையும் காட்டுகின்றது .

அரசருடைய படைகளில் பணிபுரிந்தோரும் , உயர் அலுவலர் சிலரும் கூடக் கலைகளில் வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர் .

‘ பக்கவாத்யம் அழகிய சோழத் தெரிந்த வேளைக்காரர் ஐயாறன் சுந்தரன் , வங்கியம் நிகரிலி சோழன் தெரிந்த உடனிலை குதிரைச் சேவகரினின்றும் புகுந்த தஞ்சை கணவதி ’ என்ற பெயர்களால் அதனை அறியலாம் .

( தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயில் கல்வெட்டு )

• கொடை பெற்றமை

கோயிலில் பணிபுரிந்த கலைவல்லவர்களுக்குப் பொன்னும் நெல்லும் சம்பளமாக அளிக்கப் பெற்றன .

பலருடைய பணிக்காகக் கொடை நிலம் அளிக்கப்பட்டது .

நிலம் பெற்ற பலர் பரம்பரை பரம்பரையாகத் தங்கள் பணியைச் செய்து வந்தனர் .

அவர்களைக் கல்வெட்டு ‘ அடுத்த முறைகடவார் ’ என்று கூறுகிறது .

கொடுத்த நிலங்கள் கூத்துக்காணி , நட்டுவக்காணி , நிருத்தியபோகம் , உவச்சக்காணி , நிருத்தியக்காணி , சாக்கைக்காணி என அந்த அந்தக் கலையின் தொடர்போடு அழைக்கப்பட்டன .

( கண்டியூர் , மேலப் பழூர் , திருச்சோற்றுத்துறை , சித்தலிங்க மடம் , திருக்கடவூர்க் கல்வெட்டுக்கள் )

• நிலம் பெற்றமை

நட்டுவக்காணி நிலங்கள் ஆயிரத்தளி , மேலப்பழூர் , திருச்சோற்றுத்துறை , திருவிடைமருதூர் , ஆற்றூர் , சித்தலிங்கமடம் , திருக்கடவூர் போன்ற பல ஊர்களில் இருந்தன என்பதைக் கல்வெட்டுக்கள் காட்டுகின்றன .

‘ திருப்புலிப் பகவர்க்குத் திருவிழா எழுந்தருளும்போது

முன்னின்று நிருத்தம் செய்ய நிருத்தபோகமாக திருப்புலிப்

பகவர் நிருத்த விடங்கிக்கும் இவன் அன்வயத்தார்க்கும்

குடுத்த நிலமான கால்செய் இறையிலி ’

( சிதம்பரம் கல்வெட்டு )

‘ சித்திரைத் திருநாளுக்குக் கூத்தாடுகைக்குச் சாந்திக்

கூத்தாடுகிற எழுநாட்டு நங்கைக்குக் கூத்தாடுகைக்கு விட்ட

இந்நிலம் கொண்டு இத்திருநாளுக்கு ஆடக் கடவ கூத்து

ஒன்பது ஆடுவாளாகவும் ’

( புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் - 128 )

‘ பெருந்தனத்துக் காந்தர்ப்பன் அரையன் திருவிடைமருதூர்

உடையார் ஆன மும்முடிச்சோழ நிருத்தப் பேரரையனுக்கு

விட்ட நிலம் ’

( திருவிடை மருதூர்க் கல்வெட்டு )

என்ற கல்வெட்டுத் தொடர்களால் அவர்கள் பெற்ற மானிய நிலங்கள் பற்றி அறிகிறோம் .

3.1.3 கலைவல்ல அரசர்

தமிழக அரசர்கள் கலைகளைப் போற்றிப் பாதுகாத்து வளர்த்ததுடன் அவர்களும் சிறந்த கலைவல்லவர்களாகத் திகழ்ந்தனர் என்பதைப் பல கல்வெட்டுகள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன .

கலையில் வல்லவர்களாக மட்டும் இல்லாமல் புதுக் கலைகளை , குறிப்பாக இசைக்கலையில் பல்வேறு கண்டுபிடிப்புக்களையும் அவர்கள் செய்துள்ளனர் .

• பல்லவ மன்னன்

பல்லவப் பேரரசரான மகேந்திரவர்மன் சங்கீரண ஜாதி என்ற பட்டப் பெயரைப் பெற்றிருந்தான் . சங்கீரணம் என்பது தாளவகை ஐந்தில் ஒன்று .