66

இதைக் கண்டுபிடித்தவன் மகேந்திரவர்மன் .

புதிய 8 நரம்புகளோடு பரிவாதினி யாழை உருவாக்கியவன் மகேந்திரன் .

இராசசிம்ம பல்லவன் வாத்ய வித்யாதரன் , ஆதோத்ய தும்புரு , வீணா நாரதன் என்று பெயர் பெற்றிருந்தான் .

பிற்காலப் பல்லவ மன்னனான கோப்பெருஞ் சிங்கனுக்குரிய பட்டப் பெயர்களில் ஒன்று பரதம் வல்ல பெருமாள் என்பது .

• சோழரும் சேதுபதியும்

குலோத்துங்க சோழன் இசை வகுத்தான் என்பர் .

அவன் வகுத்த இசையை அவன் முன்னரே பாடிக் காட்டினர் சிலர் .

‘ தான் வகுத்தவை தன் எதிர்பாடி ’ என்ற தொடர் அதனை விளக்கும் .

குலோத்துங்கன் மனைவியருள் ஒருவர் பெயர் ஏழிசை வல்லபி .

அவரும் இசையில் சிறந்தவராக இருந்திருக்க வேண்டும் .

பிற்காலச் சேதுபதி அரசர்கள் இயலிசை நாடக முத்தமிழ் அறிவாளன் , சகலகலாப் பிரவீணன் , பரதநாடகப் பிரவீணன் என்ற பெயர்களைப் பெற்றிருந்தனர் .

3.1.4 கலைவல்லார் அளித்த கொடை

கலைவல்ல ஆடவரும் , பெண்டிரும் கோயில்களுக்கும் , ஊர்ப் பொதுக் காரியங்களுக்கும் தாராளமாக நன்கொடை அளித்துள்ளதைக் கல்வெட்டுகள் கூறுகின்றன .

விளக்கு எரிக்கவும் , சமய அடியார்களுக்கு உதவவும் , உணவிடவும் , மடம் அமைக்கவும் , உடைந்த குளத்தைப் பழுது பார்க்கவும் நிலமும் , பொன்னும் அளித்துள்ளனர் .

‘ இத்திருவீதி வடசிறகில் பதியிலார் உமையாழ்வியான அழகினும்

அழகியதேவித் தலைக்கோலி பக்கம் இவர்கள் கொண்டு

கற்பித்த மடம் ’

என்ற கல்வெட்டு தேவரடியார் மடம் அமைத்தமையைத் தெரிவிக்கிறது .

( திருவாரூர்க் கல்வெட்டு )

ஈரோடு மாவட்டம் ஊதியூர் வானவராய நல்லூர் கரிய காளியம்மன் கோயில் தீபத்தம்பத்தை நிறுவியவர் செம்பூத்தகுல மாணிக்கி தெய்வானை என்பவர் என்பதை அங்குள்ள கல்வெட்டால் அறிகிறோம் .

• தேவரடியாரின் கொடை

பதியிலார் கூத்தன் நம்பிராட்டி ஆன செய்ய பெருமாள் திருநெல்வேலிக் கோயிலில் சிறுகாலைச் சந்திக்கு தாளிப்பூப் பறிக்கும் தொண்டர்களின் ஜீவனத்துக்குக் கொடை கொடுத்ததையும் , மன்னார்குடி திருவிராமேசுவரர் கோயிலுக்கு விளக்கெரிக்கத் தேவரடியார் உழுதன்தேவி இரண்டு பொற்காசு கொடுத்ததையும் பற்றி இரண்டு கல்வெட்டுகள் கூறுகின்றன .

வேதாரண்யம் கோயிலில் சாந்திக் கூத்தாடும் தேமாங்குடி பெருந்திருவாட்டி கயிலைக்கிழத்தி என்பவள் அக்கோயிலுக்கு 30 வேலி நிலம் அளித்தாள் .

மேற்கண்ட செய்திகள் மூலம் கலைவல்ல மகளிர் வாழ்ந்த செல்வச் சிறப்பும் அவர்கள் பக்தித் தன்மையும் , பொதுநல எண்ணமும் நன்கு தெரிகிறது .

• தேவரடியாரின் பொதுப்பணி

பாண்டிய நாட்டில் ஓரூரில் குளம் ஒன்று உடைந்து கரைகள் அழிந்து நாடும் பாழாய்க் கிடந்தது .

அந்தக் குளத்தை வெட்டித் திருத்தி ஆக்கிக் கொள்ள , தளியிலாள் நக்கன் நாச்சியார் ஆன தனியாணைவிட்ட பெருமாள் தலைக்கோலி என்பவள் பொன் கொடுத்துத் திருப்பணி செய்தார் என்பதை ஒரு கல்வெட்டுக் கூறுகிறது .

தளிச்சேரிப் பெண்கள்

தளி என்பது கோயிலைக் குறிக்கும் சொல் .

சேரி என்பது சேர்ந்து வாழும் இடம் ஆகும் .

கோயிலில் ஆடல் , பாடல் , பணிகளைச் செய்த மக்கள் பெரும்பாலும் பெண்கள் தங்கிய இடம் தளிச்சேரியாகும் .

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராசராசன் 402 தளிச்சேரிப் பெண்களை நியமித்துக் கோயில் அருகே தளிச்சேரி ஏற்படுத்தி நான்கு வரிசை வீதிகளில் அவர்களைத் தங்க வைத்ததைக் கல்வெட்டுகள் கூறுகின்றன .

அவர்கள் சோழ நாடெங்குமுள்ள கோயில்களில் பணிபுரிந்தவர்கள் ஆவர் .

3.2.1 பணிநிலையும் பட்டமும்

• பணிநிலை

இவர்கள் நக்கன் , மாணிக்கம் , மாணிக்கி , சதுரி , தளியிலார் , பதியிலார் , தேவரடியார் , இஷபத் தளியிலார் , கூத்திகள் , கணிகையார் , அடிகள்மார் என்று பல்வேறு கோயில்களில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டார்கள் .

இவர்கள் நிலையான பணியில் நியமிக்கப்பட்டனர் .

இவர்களுக்குப் பின் இவர்கள் வாரிசுதாரர்கள் பணி செய்யலாம் .

வாரிசுதாரர் கலைவல்லாராக இல்லாவிடில் கலைவல்ல பிறரை நியமித்து , இவர்கள் உரிய சம்பளம் - நெல் பெறலாம் .

வாரிசுதாரர் இன்றி யாராவது இறந்தாலோ அல்லது பணிபுரிந்த கலைவல்லவராய் வேறு ஊர் போய்விட்டாலோ அக்கோயில் ஆளும் குழுவினரே தக்கவர்களை நியமிக்கலாம் என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது .

• தலைக்கோல் பட்டம்

இவர்களில் பெண்கள் சிலர் நல்ல நாட்டியப் பயிற்சி பெற்று அரசு அவையில் அல்லது கோயிலில் அரங்கேற்றம் என்னும் தலையரங்கு ஏறித் தலைக்கோல் பட்டம் பெற்றனர் .

அவர்கள் தலைக்கோலி என்று அழைக்கப்பட்டனர் .

( திருவிடை மருதூர்க் கல்வெட்டு - முதல் பராந்தகன் காலம் )

‘ ஆரூர் தேவனார் மகள் நக்கன் பிரமதேவியாகிய

மும்முடிசோழத் தலைக்கோலி ’

‘ உறவாக்கின தலைக்கோலி ’

‘ புங்கத்துறை வல்லவத் தலைக்கோலி ’

‘ பதியிலார் தியாகவிநோதத் தலைக்கோலி ’ ( திருவாரூர்க்கோயில் கல்வெட்டுகள் )

என்னும் கல்வெட்டுகள் தலைக்கோல் பட்டம் பெற்ற கலைவல்ல மகளிர் சிலரைக் குறிப்பிடுகின்றன .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1 ) கலைவல்லார் பெற்ற சிறப்புப் பட்டங்கள் யாவை ?

( விடை )

2 ) தளி என்பதன் பொருள் என்ன ?

( விடை )

3 ) தலைக்கோல் என்றால் என்ன ?

( விடை )

4 ) சாந்திக்கூத்து என்றால் என்ன ?

( விடை )

5 ) பழமையான இசைக் கல்வெட்டு எங்கே உள்ளது ?

புலவர்களும் உரையாசிரியர்களும்

ஒட்டக்கூத்தர் , அருணகிரிநாதர் , காளமேகம் ஆகியோர் தமிழ் இலக்கிய உலகில் மிகச் சிறந்த புலவர்கள் .

ஒட்டக்கூத்தர் உலா , பரணி போன்ற இலக்கியங்களையும் , அருணகிரிநாதர் சந்தப் பாடல்களையும் , காளமேகம் பற்பல தனிப் பாடல்களையும் பாடிப் புகழ்கொண்டனர் .

அவர்களைப் பற்றிச் சில கல்வெட்டுக் குறிப்புகள் கிடைத்துள்ளன .

3.3.1 இலக்கியப் புலவர்கள்

புகழ்வாய்ந்த தமிழ் இலக்கியப் புலவர்கள் பற்றிய செய்திகள் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன .

• ஒட்டக்கூத்தர்

ஒட்டக்கூத்தர் கவிச்சக்கரவர்த்தி என்று புகழப்பட்டவர் .

அவர் ஊர் மலரி என்பதாகும் .

நன்னிலத்தை அடுத்துள்ள பூந்தோட்டம் என்னும் ஊரை அடுத்துள்ள காவிரிக் கரையில் உள்ள கூத்தனூரில் ‘ காணி உடைய மலரி உடையார் கவிச் சக்கரவர்த்திகள் பேரனார் கவிப்பெருமாளான ஓவாத கூத்தனார் ’ என்ற கல்வெட்டுக் காணப்படுகிறது .

இங்குக் குறிக்கப்பட்ட கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரே ஆவார் .

• அருணகிரிநாதர்

அருணகிரிநாதர் தம் பாடலில் பிரபுடதேவமகாராயரையும் , சோமநாதன் மடத்தையும் குறிக்கின்றார் .

திருவண்ணாமலையில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்றில் சோமநாத ஜீயர் என்னும் சைவப் பெரியாருக்கு அளித்த கொடை குறிக்கப்பட்டுள்ளது .

அக்கல்வெட்டில் ‘ இத்திருக்கோயில் மாடாபத்யக் காணியாட்சியுடைய அம்மையப்பரான சோமநாத ஜீயர் ’ என்று காணப்படுகிறது .

அவருக்குப் பிரபுடராயர் தன் பெயரால் பிரபுடராயபுரம் என்ற ஊரைத் தானமாக அளித்துள்ளார் .

திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் என்ற பெயர் பொறித்த கல்வெட்டும் காணப்படுகிறது .

இக்கல்வெட்டின் காலம் கி.பி. 1370 ஆகும் .

• காளமேகம்

விசயநகர மன்னர் விருபாட்சராயர் காலத்தில் ( 1466 - 1485 ) தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக நிருவாகம் செய்தவர் திருமலைராயர் .

திருமலைராயரைக் குறிக்கும் கல்வெட்டு திருச்சி அருகில் உள்ள திருவானைக்காவிலும் , திருவரங்கத்திலும் காணப்படுகிறது .

அவர் காலத்தில் எண்ணாயிரம் என்ற ஊரில் கவி காளமேகம் வாழ்ந்தார் என்று கல்வெட்டுப் பாடல் ஒன்று கூறுகிறது .

3.3.2 இலக்கணப் புலவர்கள்

இலக்கியத்திலிருந்து தோன்றுவது இலக்கணம் .

தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும் .

அவற்றை எழுத்து , சொல் , பொருள் , யாப்பு , அணி என்பர் .

அகத்தியர் இயற்றிய அகத்தியம் தொன்மையான தமிழ் இலக்கணம் .

அதற்குப் பின் அதன் வழிநூலாகத் தொல்காப்பியம் தோன்றியது .

பின்னர் ஐந்து இலக்கணங்கட்கும் தனித்தனி நூல்கள் உருவாகின .

• அகத்தியர்

தமிழுக்கு முதல் இலக்கண நூல் எழுதியவர் அகத்தியர் .

அவர் எழுதிய அகத்தியம் இன்று கிடைக்கவில்லை .

சில நூற்பாக்களே கிடைத்துள்ளன .

அவற்றைப் பண்டைய உரையாசிரியர்கள் சில இடங்களில் மேற்கோள் காட்டியுள்ளனர் .

அகத்தியரைப் பற்றியும் , பாண்டியர்கட்கும் அகத்தியருக்கும் உள்ள தொடர்பு பற்றியும் பாண்டியர் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் சில குறிப்புகள் வருகின்றன .

‘ அகத்தியனொடு தமிழாய்ந்தும் ’ , ‘ பொருவருஞ்சீர் அகத்தியனைப் புரோகிதனாகப் பெற்றது ’ என்பன தளவாய்புரம் , சின்னமனூர்ச் செப்பேட்டு வரிகள் .

• பவணந்தி முனிவர்

எழுத்து , சொல் என்ற இரண்டிற்கு இலக்கணம் கூறுவது நன்னூல் . அதன் ஆசிரியர் பவணந்தி முனிவர் .

அவர் கொங்குநாட்டுச் சீனாபுரத்தில் சன்மதி முனிவர் என்பவரின் சீடராகத் தோன்றியவர் .

நன்னூல் சிறப்புப் பாயிரம் கங்கமன்னன் அமராபரணன் சீயகங்கன் என்னும் குறுநில மன்னன் கேட்க பவணந்தி நன்னூலை இயற்றினார் என்று கூறுகிறது .

சீயகங்கன் , மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் ( 1178 - 1218 ) வாழ்ந்தவர் .

சீகாளத்திக் கல்வெட்டில் கங்க குலோத்பவன் சூரநாயகன் திருவேகம்பமுடையான் சீயகங்கன் என்ற கல்வெட்டு உள்ளது .

வட ஆர்க்காடு மாவட்டத்தில் ‘ பவணந்திபட்டாரகர் ’ என்ற பெயர் பொறித்த மூன்று கல்வெட்டுகள் உள்ளன .

பவணந்தி , சமண முனிவருள் நந்தி கணத்தைச் சேர்ந்தவர் .

( கணம் - குழு அல்லது கூட்டம் ) .

• குணவீர பண்டிதர்

குணவீர பண்டிதர் நேமிநாதம் , வச்சணந்திமாலை ஆகிய இரு இலக்கண நூல்களை எழுதினார் .

அவர் வச்சணந்தி முனிவரின் மாணாக்கர் .

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐவர்மலையில் வச்சணந்தி முனிவர் சீடர் ‘ குணவீரக் குரவடிகள் ’ பெயர் பொறித்த கல்வெட்டு உள்ளது .

அக்கல்வெட்டு கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது .

• அமிதசாகரர்

யாப்பு என்னும் தமிழ்க்கவிதை பற்றிய இலக்கண நூல்கள் யாப்பருங்கலம் , யாப்பருங்கலக் காரிகை என்பவை .

அவற்றை முதல் குலோத்துங்க சோழன் காலத்தில் ( 1070 - 1122 ) இயற்றியவர் அமிதசாகரர் என்பவர் .

‘ தண்டமிழ் அமித சாகர முனியை , செயங்கொண்ட சோழ மண்டலத்துத் தண்சிறு குன்றக நாட்டகத்து இருத்தி , காரிகை பாடுவித்தவன் கண்டன்மாதவன் ’ என்று சோழநாட்டு நீடூர்க் கல்வெட்டுக் கூறுகிறது .

காரிகைக் குளத்தூர் என்று புலவர் அமிதசாகரர் ஊர்க்குப் பெயர் ஏற்பட்டது .

3.3.3 உரையாசிரியர்கள்

ஒரு காலத்துத் தோன்றிய நூலைப் பிற்காலத்து மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் தக்க எடுத்துக்காட்டுகளுடன் உரை எழுதியவர்கள் உரையாசிரியர்கள் .

இலக்கியங்கட்கும் இலக்கணங்கட்கும் உரை எழுதியவர்கள் பெயர்களைத் தமிழ் இலக்கிய உலகில் விரிவாகக் காணுகிறோம் .

உரையாசிரியர்கள் உரைகளே தனி நூல்கள் போல் சிறப்புடன் விளங்குகின்றன .

• சேனாவரையர்

தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதியவர் சேனாவரையர் .

‘ வடநூல் கடலை நிலைகண்டு உணர்ந்தவர் ’ என்றும் , ‘ ஆனாமரபின் சேனாவரையர் ’ என்றும் புகழப்பட்டவர் .

‘ புவனேக சுந்தரநல்லூர் அரையன் ஆண்டானான சேனாவரையன் ’ எனக் கல்வெட்டில் அவர் பெயரைக் காணுகின்றோம் .

இக்கல்வெட்டு கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது .

• நச்சினார்க்கினியர்

நச்சினார்க்கினியர் , தொல்காப்பியத்தில் உள்ள எழுத்து , சொல் , பொருள் என்னும் மூன்று அதிகாரங்களுக்கும் உரை எழுதியவர் .

‘ கண்டியதேவரான நச்சினார்க்கினியன் ’ என்ற கல்வெட்டுத் தொடரைக் காணுகின்றோம் .

கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள இக்கல்வெட்டு கி.பி. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது .

• தெய்வச்சிலையார்

தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய மற்றொரு ஆசிரியர் தெய்வச்சிலையார் .

அவரும் சேனாவரையர்போல , சொல் அதிகாரத்திற்கு மட்டும் உரை எழுதியுள்ளார் .

கல்வெட்டுக்களில் ‘ தெய்வச்சிலை பட்டன் ’ , ‘ அரையன் தெய்வச்சிலையான் எடுத்தகை அழகியான் ’ என்பன போன்ற தொடர்கள் காணப்படுகின்றன .

இக்கல்வெட்டுகள் 13 , 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை .

• பரிமேலழகர்

திருக்குறளுக்குப் பலர் உரை எழுதியிருப்பினும் பரிமேலழகர் உரையே மிகச் சிறந்தது என்பர் .

காஞ்சிபுரம் வரதராசப்பெருமாள் என வழங்கும் அருளாளப் பெருமாள் கோயில் கல்வெட்டில் ‘ வண்டுவரைப் பெருமாளான பரிமேலழகிய பெருமாள் தாதன் ’ என்ற பெயர் காணப்படுகிறது .

இக் கல்வெட்டு கி.பி. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது .

• சாமுண்டிதேவர்

புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலை இயற்றியவர் ஐயன் ஆரிதனார் என்பவர் .

அதற்கு உரை எழுதியவர் மாகறல் சாமுண்டிதேவர் என்பவர் .

சீவைகுண்டம் பெருமாள் கோயில் கல்வெட்டில் ‘ மாகறல் திருமேற்கோயில் பெருமாளுக்கு இவ்வூர் ஊரங்கிழான் சாமுண்டிதேவன் திருவேகம்பம் உடையான் விளக்கு ஏற்ற ஒரு கழஞ்சு பொன் ’ கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது .

தமிழின் பெருமை

தமிழ்மொழிமீதும் , தமிழ்நாட்டின்மீதும் மிகுந்த பற்றுக்கொண்ட மக்கள் பலர் தங்கள் பெயர்களிலேயே தமிழைத் தாங்கித் தமிழ்நாட்டில் வாழ்ந்தனர் என்பதைக் கல்வெட்டுகளிலும் , செப்பேடுகளிலும் காணுகின்றோம் .

தமிழுக்குச் சிறப்புமிக்க அடைமொழிகளைக் கொடுத்தே அவர்கள் தமிழ்மொழியைக் குறித்துள்ளனர் என்ற செய்திகளையும் காணுகின்றோம் .

3.4.1 அடைமொழிகளும் பெயர்களும்

பராந்தக வீரநாராயணன் என்ற பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேட்டில் பல இடங்களில் தமிழ் , சிறப்பு அடையுடன் குறிக்கப்பட்டுள்ளது .

‘ அருந்தமிழின் பாத்தொகுப்பின் பயன் உணர்வோன் ’ ‘ திருமலி சாசனம் இதற்குச் செழுந்தமிழ் பாடினோன் ’

‘ சீர்மிகு செப்பேட்டினுக்குச் செந்தமிழில் பாத்தொடை தொடுத்தோன் ’

‘ வண்டமிழ்க்கோன் அதிகாரி ’

( தளவாய்புரச் செப்பேடு )

என்பன தளவாய்புரச் செப்பேட்டில் காணும் தொடர்கள் .

இச்செப்பேடு ஆரியம் விராய்த் தமிழ் கொடுத்ததாகக் கூறப்படுகிறது .

( ஆரியம் விராய் - வடமொழி கலந்து ) இதன் தமிழ்ப் பகுதியைப் பாடியவன் பெயர் ‘ பாண்டித் தமிழாபரணன்‘ என்பதாகும் .

பிற்காலப் பல்லவ மரபினன் கோப்பெருஞ்சிங்கனைக் கல்வெட்டுப் பாடல் ஒன்று ‘ பேணு செந்தமிழ் வாழப் பிறந்தவன் ’ என்று புகழ்கிறது .

தமிழின் பெருமையும் சிறப்பும் இதன்மூலம் தெரிகிறது .

சங்க காலச் செய்திகள்

மதுரையிலிருந்து தமிழ் வளர்த்த சங்கம் பற்றியும் , சங்ககால இலக்கியங்கள் பற்றியும் , மன்னர்கள் பற்றியும் , மக்கள் பற்றியும் சில குறிப்புகள் கல்வெட்டுக்களிலும் , அவற்றை ஒத்த செப்பேடுகளிலும் காணப்படுகின்றன .

இராமநாதபுரம் மாவட்டம் எருக்கங்குடிக் கல்வெட்டில் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எட்டி சாத்தன் என்பவன் ‘ தமிழ்கெழு கூடல் சங்கப் பலகையில் ஏறி வீற்றிருந்த புலவர் ’ வழிவந்தவன் என்று புகழப்படுகின்றான் .

தளவாய்புரச் செப்பேட்டில் ‘ தென் மதுராபுரம் செய்து அங்கதனில் அருந்தமிழ் நற்சங்கம் இரீஇத் தமிழ் வளர்த்தும் ’ என்றும் , வேள்விக்குடிச் செப்பேட்டில் ‘ மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் ’ என்றும் கூறப்படுகின்றன .

பாண்டியர்கள் தமிழ்ச்சங்கம் நிறுவியதுடன் மகாபாரதத்தையும் மொழிபெயர்த்துள்ளனர் என்பதை இதன்மூலம் அறிகின்றோம் .

3.5.1 இலக்கியங்கள்

திருச்சி மாவட்டம் திருவெள்ளறைக் கல்வெட்டில் ‘ கண்ணன் செய் பட்டினப்பாலை ’ எனக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலை பாடிய நிகழ்ச்சி குறிக்கப்படுகிறது .

திருவண்ணாமலைக் கல்வெட்டொன்றில் ‘ நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பு ’ என்ற தொடர் குறிக்கப்படுகிறது .

செங்கம் ரிசபேசுவரர் கோயில் கல்வெட்டில் ‘ பண்டே மலைகடாம் பாண்டுண்ட மால்வரை ’ என்ற தொடர் குறிக்கப்படுகிறது .

இவ்விரு தொடர்களிலும் பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாம் பற்றியும் , அதன் பாட்டுடைத் தலைவன் நன்னன் சேய் நன்னன் பற்றியும் குறிப்புகள் வருகின்றன .

திருச்சி மாவட்டப் புகலூர் அருகில் உள்ள ஆறுநாட்டார் மலை தமிழ்க் கல்வெட்டில் செல்வக்கடுங்கோ வாழியாதன் , பாலைபாடிய பெருங்கடுங்கோ , மருதம்பாடிய இளங்கடுங்கோ ஆகிய மூவரின் பெயர்கள் வரிசையாகக் குறிக்கப்பட்டுள்ளன .

அவர்கள் மூவரும் பதிற்றுப்பத்தினுடைய 7 , 8 , 9ஆம் பத்துக்குரிய மன்னர்கள் ஆவர் .

‘ மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்ய

கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்

பெருங்கடுங்கோன் மகன் இளங்

கடுங்கோ இளங்கோ ஆக அறுத்த கல் ’

என்பது கல்வெட்டு .

3.5.2 பாரி மகளிர்

திருக்கோவிலூர் கீழூர் வீரட்டானேசுவரர் கோயில் கல்வெட்டில் பாரியின் பெண்களை மலையமானுக்கு அளித்தபின் கபிலர் தீப்பாய்ந்து இறந்த விபரம் கூறப்படுகிறது .

அக்கல்வெட்டு உள்ள கல் ‘ கபிலக்கல் ’ என்று அழைக்கப்பட்டுள்ளது .

‘ முத்தமிழ் நான்மைத்

தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன்

மூரிவண் தடக்கைப் பாரிதன் அடைக்கலப்

பெண்ணை மலையர்க் குதவிப் பெண்ணை

அலைபுனல் அழுவத்து அந்தரிட் சஞ்செல

மினல்புகும் விசும்பின் வீடுபேறு எண்ணிக்

கனல்புகும் கபிலக்கல் ’

என்பது அக்கல்வெட்டாகும் .

3.5.3 மன்னர்கள்

சங்ககாலத்திலுள்ள மன்னர்களும் பாண்டிய மன்னர்களைப் பற்றியச் செய்திகள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன .

• சங்ககாலப் பாண்டியர்

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி , தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்பான பாண்டிய அரசர்கள் .

இவர்கள் இருவர் பெயரும் கல்வெட்டுகளிலும் , பண்டைய எழுத்துப் பொறிப்புக்களிலும் காணப்படுகின்றன .

• வழுதியும் செழியனும்

வழுதி பெருவழுதி என எழுதப்பட்ட சங்ககாலக் காசு ஒன்று கிடைத்துள்ளது .

மாங்குளம் பழந்தமிழ்க் கல்வெட்டில் நெடுஞ்செழியன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது .

வேள்விக்குடிச் செப்பேட்டில் ‘ பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியாதிராசன் ’ என்றும் , தளவாய்புரச் செப்பேட்டில் ‘ ஆலங்கானத்து அமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்திடவும் ’ என்றும் இவ்விரு அரசர்களும் குறிக்கப்பட்டுள்ளனர் .

தொகுப்புரை

சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சிக்குக் கலையும் இலக்கியமும் எடுத்துக்காட்டுகள் , சாந்திக்கூத்து , விநோதக்கூத்து போன்ற பல கூத்துகள் ஆடப்பட்டன .

தோல்கருவி , துளைக்கருவி எனப் பல்வேறு இசைக்கருவிகள் பற்றி இசைக் கல்வெட்டுகள் கூறுகின்றன .

கலைவல்லுநர்கள் , தளிச்சேரிப்பெண்கள் ஆகியோர் சிறப்பும் , பெருமையும் பெற்றிருந்தனர் . தேவரடியார்கள் பொதுப்பணி செய்ததும் கோயிலுக்கு நிலம் அளித்த செய்தியும் தெரிய வருகின்றன .