67

தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டு தங்கள் பெயர்களில் தமிழைச் சேர்த்துக் கொண்டதும் புலப்படுகிறது .

கல்வெட்டுகளில் சங்ககால மன்னர் பெயர்கள் மட்டுமன்றி , புலவர் , உரையாசிரியர் , நூலாசிரியர் ஆகியோரின் பெயர்களும் காணப்படுகின்றன .

இவ்வாறு , கலையும் இலக்கியமும் பற்றிக் கல்வெட்டு வாயிலாக அறியும் உண்மைகள் பல .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1 ) தமிழின் முதல் இலக்கண நூல் எது ?

அதை இயற்றியவர் யார் ?

( விடை )

2 ) குணவீரபண்டிதர் எழுதிய இலக்கண நூல்கள் எவை ?

( விடை )

3 ) யாப்பருங்கலம் எதைப் பற்றிய இலக்கணம் ?

அந்நூலைப் பாடியவர் யார் ?

( விடை )

4 ) புறப்பொருள் வெண்பா மாலையின் ஆசிரியர் யார் ?

( விடை )

5 ) தொல்காப்பியத்தின் எழுத்து , சொல் , பொருள் என்ற மூன்றிற்கும் உரை எழுதியவர் யார் ?

சமயமும் வழிபாடும்

பாட முன்னுரை

சமய நம்பிக்கையும் அதன் பயனாகிய இறை வழிபாடுமே பிற உயிரினங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்துகிறது .

உடல் வளத்துக்கு உணவும் , அறிவு வளத்துக்குக் கல்வியும் எப்படித் தேவைப்படுகிறதோ அதுபோல் உயிர் வளத்திற்குச் சமய நம்பிக்கையும் , வழிபாட்டு நெறிகளும் தேவைப்படுகின்றன .

தெய்வ நம்பிக்கை அல்லது உணர்வு , அதன் செயலான வழிபாடு இவ்விரண்டின் காரணமாகக் கடைப்பிடிக்கப்படும் ஆன்மீகக் கோட்பாடுகளே சமயம் எனப்படுகிறது .

பண்டைய இலக்கியங்கள் சமயம் , வழிபாடு பற்றிய பற்பல செய்திகளைக் கூறுகின்றன .

அரிசி சோறாகச் சமைக்கப்பட்டு உண்ண உணவு ஆவதுபோல் மனித குலத்தைச் சமைப்பது , அதாவது பக்குவப்படுத்துவது சமயம் எனப்படுகிறது .

கல்வெட்டுகளில் சமயம் பற்றிய செய்திகளும் , வழிபாட்டு முறைகளும் எவ்வாறு கூறப்படுகின்றன என்பது பற்றி இப்பாடத்தில் காணலாம் .

கோயில்கள்

' கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் ' என்பது தமிழில் வழங்கும் ஒரு பழமொழி .

தமிழ்ப் பண்பாட்டைக் கோயில் பண்பாடு ( Temple Culture ) என்று குறிப்பிடும் அளவுக்குக் கோயிலும் வழிபாடும் தமிழ் மக்களுடன் மிகவும் நெருக்கமானவை .

இவை பற்றிய பல செய்திகளைக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கூறுகின்றன .

4.1.1 கோயில்களின் தொன்மை

சமய நிறுவனங்களாகக் கோயில்கள் விளங்கின .

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்க காலத்திலேயே கோயில்கள் பல இருந்தன .

புறநானூற்றில் காரிகிழார் என்னும் புலவர் பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி வழிபட்ட முக்கண் செல்வர் நகர் என்னும் சிவாலயத்தைக் குறிக்கின்றார் .

சிலப்பதிகாரத்தில் பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் , பல்வேறு கோட்டங்களும் கூறப்படுகின்றன .

கண்ணகிக்குச் செங்குட்டுவன் பத்தினிக் கோட்டம் அமைத்தான் .

நிலத்தை ஐந்து பிரிவாகப் பிரித்த பழந்தமிழர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு கடவுளை உரிமையாக்கினர் .

( முக்கண் செல்வர் நகர் - மூன்று திருக்கண்களை உடைய சிவபெருமானது கோயில் ; நகர் - கோயில் ; பிறவா யாக்கைப் பெரியோன் - தாய் வயிற்றுப் பிறவாத உடம்பினை உடைய சிவபெருமான் ; யாக்கை - உடம்பு ; கோட்டம் - கோயில் )

• நடுகல்

கல்லே பரவின் அல்லது , நெல்

உகுத்துப் பரவும் கடவுளும் இலவே

( இவ்வடிகளின் பொருள் : போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயரும் சிறப்பும் எழுதிய நடுகல்லையே கடவுளாகக் கருதி வழிபடுவதைத் தவிர , நெல்லைத் தூவி வழிபடும் கடவுள் வேறில்லை)

என்று புறநானூற்றில் சங்கப் புலவர் பாடியதைக் கொண்டு , நடுகல்லே தெய்வமாக மாறியது என்பர் சிலர் .

நடுகல்லுக்குப் பெரும்படை அல்லது இற்கொண்டு புகுதல் செய்யப்பட்டதைக் கோயிலின் தொடக்கம் என்பர் .

பெரும்படை என்பதும் இற்கொண்டு புகுதல் என்பதும் நடுகல்லுக்கு எடுக்கப் பெறும் கோயில் ஆகும் .

• முதல் கற்கோயில்

பழங்கோயில்கள் அக்காலத்தில் கற்களால் கட்டப்பெறவில்லை ; செங்கல் , சுண்ணாம்பு , மரம் , உலோகம் இவைகளால் கட்டப்பட்டன .

பல்லவன் மகேந்திரவர்மன்தான் ( 615 - 630 ) கற்கோயிலை முதலில் அமைத்தான் என்று மண்டகப்பட்டுக் கல்வெட்டுக் கூறுகிறது .

4.1.2 கோயில்களின் வளர்ச்சி

பிற்காலப் பல்லவர்கள் காலத்திலும் , பிற்காலப் பாண்டியர் , சோழர் ஆட்சிக் காலத்திலும் பல்வேறு செங்கல் கோயில்கள் கற்கோயில்களாக மாற்றப்பட்டன ; பல புதுக் கோயில்கள் உருவாகின .

அவை கற்றளி எனப்பட்டன .

கற்களில் பல கோயில்களை விரும்பி உருவாக்கிய ஒருவன் கற்றளிப் பிச்சன் எனப்பட்டான் . • மன்னர்களின் பணி

மாமண்டூர் , மகேந்திரவாடி போன்ற இடங்களில் திருமால் கோயில்களையும் , திருச்சிராப்பள்ளி , சீயமங்கலம் போன்ற இடங்களில் சிவன் கோயில்களையும் , மண்டகப்பட்டில் மும்மூர்த்தி கோயிலையும் பல்லவ மகேந்திரவர்மன் எடுத்தான் .

அவனுக்குப் பின்வந்த நரசிம்மவர்மன் , பரமேசுவரன் போன்றவர்களும் , பாண்டியர்களும் பல குகைக் கோயில்களையும் , கற்கோயில்களையும் எடுத்தனர் .

பாண்டியன் பராந்தகன் கொங்கு நாட்டில் திருமாலுக்குக் குன்றமன்னதோர் கோயில் எடுத்ததாகப் பாண்டியர் செப்பேடு கூறுகிறது .

முதலாம் இராசராசன் , தஞ்சாவூரில் தான் கோயில் கட்டியதைப் ‘ பாண்டி குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராசராசீச்வரம் ’ என்று கல்வெட்டில் கூறிக் கொள்கின்றான் .

முதலாம் இராசேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்திலும் , திரிபுவன தேவனான மூன்றாம் குலோத்துங்கன் திருபுவனத்திலும் , இரண்டாம் இராசராசன் தாராசுரத்திலும் கோயில் எடுத்தனர் .

அந்தந்த அரசர் பெயராலேயே அக்கோயில்கள் இன்னும் வழங்குகின்றன .

பல அரசர்கள் பல்வேறு சமயக் கோயில்கள் கட்டினர் .

4.1.3 கோயில்களில் சமயப் பணிகள்

சமய நிறுவனமான திருக்கோயில்களில் வழிபாடு செய்விப்பதற்கும் , கோயிலில் பல்வேறு சமயப் பணிகளைச் செய்வதற்கும் , கோயிலை நிர்வகிப்பதற்கும் , சமய உபதேசம் செய்வதற்கும் தளி ( கோயில் ) ஆட்களாகவும் , குழுக்களாகவும் பலர் இருந்தனர் .

அவர்களில் சிலர் பரம்பரை பரம்பரையாக அப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர் .

சிலர் சம்பளம் பெற்றும் , பொன் பெற்றும் , நெல் பெற்றும் , குறிப்பிட்ட பணிக்காக நிலங்களை அனுபவித்தும் பணிகள் செய்தனர் .

• பணியாளர்

திருவாராதனை செய்யும் சிவப்பிராமணர் , பரிகாரம் செய்யும் சிவப்பிராமணர் , தளி அர்ச்சிப்பார் , ஆராதனம் பண்ணுவார் , பூசகர் , பூசிக்கும் நம்பிமார் , பதிகம் பாடுவார் , பிடாரர் , ஓதுவார் , தாசர் , பட்டர் , பதியிலார் , தேவரடியார் , குடமும் குச்சியும் கொண்டு கோயில் உள் புகுவார் , உவச்சர் , இசைக்கலைஞர்கள் , இசைக் கருவி இசைப்பார் , அலகிடுவார் , மெழுகிடுவார் , கழுநீர் போகட்டுவான் , கணக்கர் ஆகியோர் இறைப்பணி செய்பவர்களாகக் காணுகின்றோம் .

இவற்றில் ஒரே தொழில் பெயர்கள் பல அமைப்பில் குறிக்கப்பட்டனவும் உள்ளன .

( அலகிடுவார் - துடைப்பம் கொண்டு சுத்தம் செய்வார் ; மெழுகிடுவார் - பூசி வழிப்பவர் ; கழுநீர் போகட்டுவான் - அசுத்தமான கழிவுநீரை எடுத்து அப்புறப்படுத்துபவன் ) .

• நிருவாகிகள்

சமயமுதலி , பன்மகேசுவரர் , ஸ்ரீவைஷ்ணவர் , ருத்ரமகேசுவரர் , ஸ்ரீகார்யம் செய்வார் , தேவகன்மிகள் , காணியுடையார் , தலத்தார் , தானத்தார் , மூலபருடையார் , பதிபாத மூலப்பட்டுடைப் பஞ்சாச்சார்ய தேவகன்மிகள் , கரணாத்தார் , கோயில் அதிகாரம் செய்வார் , பண்டாரி , ஆளும் கணத்தார் ஆகியோர் கோயில் நிருவாகத்தோடு தொடர்பு உடையவர்கள் .

• சமயப் பணிக் குழுக்கள்

சில குறிப்பிட்ட பணிகளை மட்டும் செய்ய காளி கணத்தார் .

சாத்த கணத்தார் , கணபதி கணத்தார் , திருவாதிரைக் கணப் பெருமக்கள் , துவாதசிக் கணப் பெருமக்கள் , திருவோணக் கணப் பெருமக்கள் ஆகியோர் இருந்தனர் .

மேற்கண்ட பணிகளில் ஈடுபட்டோர் பலர் சமய தீட்சை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

( சமய தீட்சை - குருவிடம் சமய உபதேசம் பெறுதல் ) .

4.1.4 கோயில்களில் சமுதாயப் பணிகள்

அக்காலத்தில் சமுதாய மையமாகத் திகழ்ந்த கோயில்களில் பஞ்சம் வந்த காலங்களில் பிழைக்க முடியாத பலர் தங்களைக் கோயிலுக்கு விற்றுக் கொண்டும் , அடிமை புகுந்தும் பிழைத்து வந்தனர் .

கோயிலில் அவர்கட்கு உணவளிக்கப்பட்டது .

• மருத்துவப் பணிகள்

கோயில் நந்தவனங்களில் மருத்துவ மூலிகைகள் பயிர் செய்யப்பட்டதுடன் , சில கோயில்களில் ஆதுலர் சாலை என்னும் மருத்துவமனைகளும் விளங்கின .

மூலிகைகள் பயிர் செய்யப்பட்ட இடம் விஷவிருத்தி எனப்பட்டது .

தஞ்சையில் சுந்தர சோழ விண்ணகர் என்னும் பெருமாள் கோயிலில் சுந்தர சோழன் மகள் ஓர் ஆதுலர் சாலையை ஏற்படுத்தினாள் .

செங்கல்பட்டு மாவட்டம் திருமுக்கூடலில் வெங்கடேசுவரப் பெருமாள் கோயிலில் வீரசோழன் ஆதுலர் சாலை இருந்தது .

திருவாவடுதுறைக் கோயிலில் ஒரு மருத்துவக் கல்லூரி இருந்தது .

மருத்துவர்கள் சுவர்ணன் கோதண்டராமன் அசுவத்தாமபட்டன் , சுவர்ணன் அரையன் மதுராந்தகன் எனப் பெயர் பெற்றிருந்தனர் .

• கல்விப் பணி - தண்ணீர்ப் பந்தல்

கோயில்களில் வேத பாடசாலை இருந்தது .

கோயிலில் பல மாணவர்கள் தங்கி , சமய பாடமும் , மருத்துவமும் கற்றனர் .

பல கோயில்களில் தண்ணீர்ப் பந்தல்கள் இருந்தன .

கோயில்களிலும் , மண்டபங்களிலும் இருந்த அவைகள் , தண்ணீருடன் உப்பு , ஊறுகாய் , நீராகாரம் ஆகியவைகளையும் மக்களுக்கு வழங்கின .

சிவன் கோயில் தண்ணீர்ப் பந்தலில் இவற்றுடன் திருநீறும் , குங்குமமும் இருந்ததாகக் கல்வெட்டொன்று கூறுகிறது .

• அறப்பணிகள்

கோயில் பண்டாரத்தில் உள்ள பொன்னைக் குளம் வெட்டுவதற்கும் , ஏரி , குளம் தூர் வாருவதற்கும் அளித்துள்ளனர் .

கூனரும் , குறளரும் சில இடங்களில் விளக்கேந்தியுள்ளனர் .

குருட்டுப் பெண்களைக் கோயிலுக்கு அளித்து , அவர்களைப் பூமாலை கட்டவும் , நெல்லைக் குத்தி அரிசியாக்கவும் , பாடல்கள் பாடவும் பணி செய்வித்துக் கோயிலிலிருந்து அவர்களுக்கு உணவளித்துள்ளனர் .

அவர்களுக்கு வழிகாட்டக் கண்பார்வையுள்ள கண்காட்டுவார் நியமிக்கப்பட்டனர் .

• கோயிலும் சபைகளும்

நாட்டுச்சபைகளும் , ஊர்ச்சபைகளும் கோயில்களிலும் , கோயில்களைச் சார்ந்த பகுதிகளிலும் கூடித் தங்கள் அலுவல்களைக் கவனித்துள்ளனர் .

அக்காலத்தில் இரவு நேரங்களில் விளக்கேற்றப் பெரும் செலவு பிடித்ததால் சபைகள் பெரும்பாலும் பகல் நேரங்களிலேயே கூடின .

சில ஊர்களில் கோயில் தொடர்பு கொண்ட ஓரிருவர் ஊர்ச்சபையிலும் அங்கம் பெற்றனர் .

கீழ்வரும் கல்வெட்டுத் தொடர்கள் அதனை விளக்குகின்றன .

விக்கிரம சோழ தேவர் திருமருதுடையார் ஸ்ரீகோயிலில் பெரிய திருமுற்றத்து ஏகநாயகன் எடுத்துக்கட்டியில் பள்ளிப்பீடததில் எழுந்தருளியிருந்து எம்மூர் துர்க்கா பரமேசுவரி ஸ்ரீ கோயிலில் கோபுரத்து நாட்டார் கூட்டம் குறைவறக் கூடி

திருவாய்ப்பாடி ஆழ்வார் திருவோலக்க மண்டபத்தே பெருங்குறி சபையோம் தன்மி கொட்டிக் கூட்டம் குறைவறக் கூடியிருந்து

4.1.5 கோயில் வழிபாடு

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றார் அவ்வையார் .

அங்கு உள்ளான் ; இங்கு உள்ளான் என்று சுட்டிக்கூறி உள்ள இடத்தைக் கூற முடியாதவாறு எல்லா இடங்களிலும் இறைவன் நீக்கமற நிறைந்து இருந்தாலும் கோயிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்புடையது .

இறைவன் எழுந்தருளி இருப்பதால் கோயிலையே இறைவனாக எண்ணி வழிவடுவது மக்கள் வழக்கம் .

இறை ஆலயமும் இறையெனப் பணிக என்பது சிவஞானபோதம் .

• வழிபடும் காலம்

கோயில்களில் பெரும்பாலும் மூன்று அல்லது நான்கு நேரங்களில் சிறப்பு இறை வழிபாடு ( பூசை ) நடைபெறும் .

சிறுகாலைச் சந்தி , உச்சியம்போது , சாயரட்சை , அர்த்தசாமம் என அதனை வழங்குவர் .

இறைவழிபாடு நடைபெறும் அந்நேரங்களில் மக்கள் வழிபடச் செல்வர் அல்லது அந்நேரங்களில் சென்று வழிபட இயலாதவர்கள் அவர்களாகவே ஒரு நேரத்தில் கோயிலுக்குச் சென்று வழிபடுவர் .

• பிறந்த நாள் வழிபாடு

மக்கள் , தாம் பிறந்த நாள் அன்று இறைவனை வழிபட ஏற்பாடு செய்தார்கள் .

நந்திவர்மபல்லவன் ரோகிணி அன்றும் , முதலாம் இராசராசன் சதயம் அன்றும் , முதலாம் இராசேந்திரன் திருவாதிரை அன்றும் , முதலாம் குலோத்துங்கள் புனர்பூசம் அன்றும் பிறந்ததால் அந்த நாளில் பல கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறக் கொடைகள் அளித்தனர் .

‘ சதய நாள் விழா உதியர்மண்டலம் தன்னில் வைத்தவன் ’ என்று இராசராசன் புகழப்படுகின்றான் .

அரசர்கள் பலர் பெயரால் சந்தி எனப்படும் வழிபாடு நடைபெற்றது .

• வழிபடும் காரணம்

பழங்காலத்தில் தன் வேண்டுதலுக்காவும் , வேண்டிய அவ்விருப்பம் நிறைவேறியதற்காகவும் , இறைவன் அருளால் குழந்தை பிறந்ததற்காகவும் , பிறந்த அந்தக் குழந்தையின் நலத்திற்காகவும் , அரசன் வெற்றி பெறுவதற்காகவும் , அரசனின் உடல் நலத்திற்காகவும் , மாசிமகம் , வைகாசி விசாகம் , பங்குனி உத்தரம் , மார்கழித் திருவாதிரை , திருக்கார்த்திகை , ஆடிப்பூரம் ,

பிரதோஷம் , அமாவாசை , பவுர்ணமி ஆகிய சிறப்பு நாட்களில் மக்கள் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர் .

• மலர் வழிபாடு

பூசையின்போது மலர் தூவி வழிபடுவதும் , மாலை சாத்தி வழிபடுவதும் சிறப்புமிக்கது .

பூக்களால் செய்யப்படுவதுதான் ( பூ + செய் ) பூசை ஆயிற்று என்பர் .

அவ்வாறு இறைவனுக்கு அளிக்கும் மலரும் மாலையும் வாசனையுடையதாய் இருக்கவேண்டும் .

இதனைக் கல்வெட்டு நாறு திருப்பள்ளித் தாமம் என்று கூறும் .

மாலையாகத் தொடுக்கும்போது ஒரு விரல் அகலத்தில் இரு பக்கங்களிலும் இரண்டு இரண்டு வாசனையுடைய பூவாக வைத்துத் தொடுக்க வேண்டும் என ஒரு கல்வெட்டு கூறுகிறது .

ஒரு விரற்கிடை ஈரிரண்டு நறும்பூவாக என்பது கல்வெட்டுத் தொடர் .

4.1.6 கோயில்களில் விளக்கேற்றல்

கோயிலில் விளக்கேற்றி வழிபடுவது மிகச்சிறந்த புண்ணியம் தரும் செயல் என்று அக்கால மக்கள் எண்ணியதால் , பலர் கோயிலுக்கு விளக்கு ஏற்றினர் .

எப்பொழுதும் அணையாமல் கோயிலில் தொடர்ந்து எரியும் விளக்கிற்கு நந்தா விளக்கு என்று பெயர் .

குறிப்பிட்ட நேரங்களில் அல்லது குறிப்பிட்ட பூசைகளின்போது எரியும் விளக்கிற்குச் சந்தி விளக்கு என்று பெயர் .

இரவில் மட்டுமல்லாது கருவறை என்னும் உள்நாழிகையில் பகலிலும் விளக்கு எரிக்கப்பட்டது .

திருவீதிகளில் இறைவன் எழுந்தருளி உலா வரும்போது பிடி விளக்கு பிடிக்கப்பட்டதாகக் கல்வெட்டுக் கூறுகிறது .

• நெய்யும் எண்ணெயும்

நெய் , இலுப்பை எண்ணெய் , தேங்காய் எண்ணெய் ஆகியவற்றால் விளக்கு ஏற்றப்படும் .

விளக்கு எரிக்கும் நெய்க்காக ஆடு , பசு , எருமை ஆகியவை கொடையாக அளிக்கப்பட்டன .

அவை சாவா மூவா ஆடு , சாவாமூவாப் பசு , சாவாமூவா எருமை எனப்படும் .

பொதுவாக 96 ஆடுகள் , 48 பசு , 24 எருமைகள் கொடுக்கப்படும் .

விளக்குப்புறம் அல்லது விளக்குப்பட்டி என்ற பெயரில் நிலங்களைக் கொடையாகவிட்டு , அதன் வருவாயைக் கொண்டும் விளக்கு எரித்தனர் .

விளக்கு ஏற்ற விளக்குகளும் இருந்தன .

• இடமும் நேரமும்

விளக்கு எங்கு எரிய வேண்டும் , எவ்வளவு நேரம் எரிய வேண்டும் என்றும் கல்வெட்டில் எழுதினர் .

‘ ஏகநாயகன் திருவாசலுக்கு இரவு விளக்கு எரிய ’

‘ அந்திப்பட்டு 1 / 2 நாழிகை எரியும் விளக்கு ’

‘ கோயிலைச் சூழவும் எரியும் விளக்கு ’

‘ விக்கிரம சோழன் திருமாளிகையில் எரியும் விளக்கு ’

என்பன கல்வெட்டுத் தொடர்கள் .

எண்ணிக்கையோ நேரமோ ‘ முட்டாமல் ’ குறையாமல் எரிய வேண்டும் எனவும் தம் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர் .

விளக்கு அணையாமல் ‘ பார்ப்பவர்கள் ’ இருந்தனர் .

சில இடங்களில் கூனரும் , குறளரும் விளக்குப் பிடிப்பதற்காக நியமிக்கப்பட்டு , கோயிலில் உணவு பெற்று வாழ்ந்தனர் என்பதை முன்பே கண்டோம் .

• பெயரிடல் விளக்குகட்குப் பெயர்களும் வைக்கப்பட்டன .

ஈழச்சீயல் விளக்கு , மலையான் சீயல் விளக்கு , அனந்தலை விளக்கு என விளக்குகள் பெயர் பெற்றிருந்தன .

ஒரு விளக்கிற்கு இராசராசன் என்று அரசன் பெயரே வைக்கப்பட்டிருந்தது .

இவ்விளக்குகள் உலோகத்தால் செய்யப்பட்டிருந்தன .

• வேண்டுதல்

ஒருவன் இறைவனை வேண்டி , குழந்தைப்பேறு பெற்றதால் பால் கறக்கும் பசுவாக 32 பசுக்கள் கொடுத்து விளக்கெரிக்க ஏற்பாடு செய்தான் .

‘ திருப்புலிப் பகவற்கு சிவப்பிராமணன் பாரதவாஜி

பஞ்சநதன் பெரியான் இத்தேவர்க்குப் பிரார்த்தித்து

ஆண்பிள்ளை பெற்றமைக்கு திருநந்தா விளக்குக்கு

32 பசு பால் பசு கொடுத்தான் ’

என்பது கல்வெட்டுத் தொடர் .

திருவிடைமருதூரில் ஒரு பெண் தான் விரும்பிய கணவனை அடைந்ததால் லட்சம் விளக்கு ஏற்றினாள் .

அவள் தன்னைப் போலவே பாவை விளக்கு வைத்ததை ,

‘ கோயில் தேவரடியாள் போகமார்த்தாள் மகன்

உற்றாநாஞ்சி இட்ட தன் பெண்ணுருவாகச் செய்த

பித்தளைப் பாவைமேல் திருநந்தா விளக்கு ’

என்பது கல்வெட்டுத் தொடர் .

சங்கிலியுடன் இணைத்துத் தொங்கும் விளக்கும் , நிலத்தில் குத்திவைத்த விளக்கும் ஏற்றப்பட்டன .

குத்திவிளக்கே குத்துவிளக்காகப் பெயர் மாறியது .

• புண்ணியம்

கோயிலில் விளக்கேற்றுவது புண்ணியம் .

அதை அணைப்பது பாவம் என்று கருதினர் .

கோயில் அறக்கொடைகட்குத் தீங்கு செய்தார் சன்னதி இருளச் சந்தியா தீபம் அணைச்ச தோஷத்தில் போவாராக என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது .

கொலைப் பாவம் கூட விளக்கேற்றினால் போகும் என நம்பினர் .

பல கொலையாளிகள் விளக்கு வைத்ததைக் கல்வெட்டுகள் கூறுகின்றன .

4.1.7 கோயில் கொடைகள்

வழிபடுவோர் கோயிலுக்குப் பொன்னும் , பொருளும் , விளை நிலங்களும் , கால்நடைகளும் கொடையாக அளித்தனர் .

இறைப் படிமங்களையும் ( விக்கிரகங்கள் ) , பூசைக்கு வேண்டிய பற்பல பரிகலம் ஆகிய பாத்திரங்களையும் , நிவேதனத்துக்கு நெல்லையும் , விபூதிமடல் , சேகண்டியாகிய எறிமணி போன்ற பூசைப் பொருள்களையும் கொடையாக அளித்தனர் .

• அமுது

இறைவனுக்குத் திருஅமுது படைக்கக் கொடுக்கும் எல்லாப் பொருள்களுமே அமுது என்று பெயர் பெற்றன .

நெய்யமுது , தயிரமுது , உப்பமுது , பருப்பமுது , அடைக்காய்அமுது என எல்லாமே அமுதுதான் .

• பண்பாடு

கோயிலுக்குப் பொன் கொடுக்கும்போது துளைநிறை செம்பொன் , தீப்போக்குச் செம்பொன் என உயர் மாற்றுடைய பசும்பொன்னாகக் கொடுத்தனர் .

கோயில் நிலத்தை உழுது கோயிலுக்கு மேல் வாரமாக நெல் கொடுக்கும்போது , நிலம் விளைந்தாலும் , விளையாவிட்டாலும் , காய்ந்து அழிந்தாலும் , மழை பெய்து அழிந்தாலும் , ஊர் கேடு போனாலும் தவறாமல் கோயிலுக்கு நெல் கொடுத்தனர் .

காசு கொடுக்கும்போது அன்றாடு நற்காசு , குறையில்லாத நல்ல காசு ( வாசிபடா நற்காசு ) கொடுத்தனர் .

அன்றாடு நற்காசு என்பது அந்த நாளில் வழக்கில் இருந்த நல்லகாசு ஆகும் .

• தண்டனை

யாராவது கோயிலுக்குக் கொடுக்க வேண்டிய வரியையோ , பலிசை எனப்படும் வட்டியையோ கொடுக்க மறுத்தால் , கோயில் சபையார் அவர்கள் வீட்டுக்குச் சென்று மண் கலங்களைக் கொடுத்து வெண்கலங்களைப் பறிமுதல் செய்து கொள்ளலாம் என்று கல்வெட்டில் ஆணையாகப் பொறிக்கப்பட்டது .

கொடைகள் சந்திரசூரியர் உள்ளவரை தொடர்ந்து தவறாமல் நடக்க வேண்டும் என்றும் கல்வெட்டில் பொறித்தனர் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1 ) செங்குட்டுவன் யாருக்குக் கோட்டம் அமைத்தான் ?

( விடை )

2 ) ‘ கற்றளிப் பிச்சன் ’ என்பவன் யார் ?

( விடை )

3 ) மருத்துவக் கல்லூரி எங்கே இருந்தது ?

( விடை )

4 ) ' ஆலயம் தொழுவது சாலவும் நன்று ' என யார் கூறினார் ?

( விடை )

5 ) எது புண்ணியமாகவும் , எது பாவமாகவும் கருதப்பட்டது ?

மடங்கள் சமய நம்பிக்கைக்கும் , வழிபாட்டிற்கும் உரியனவாகக் கோயில்கள் விளங்குவதைப் போல , சமயப் பணிகட்கும் , சமய வளர்ச்சிக்கும் மடங்கள் ஏற்பட்டன .