68

தேவார காலத்திலேயே சுமார் 20 மடங்கள் தமிழ்நாட்டில் இருந்தன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் .

சமய அடியார்களும் , அரசர்களும் பல மடங்களை ஏற்படுத்தினர் .

அவை பெரும்பாலும் கோயில்களைச் சார்ந்தே இருந்தன .

• மடங்களின் பெயர்கள்

திருநீலவிடங்கன் மடம் , கூத்தாடு நாயனார் மடம் என இறைவன் பெயரிலும் , அருள்மொழித்தேவன் மடம் , வீரபாண்டியன் மடம் என அரசர் பெயரிலும் , நமிநந்தியடிகள் மடம் , பரஞ்சோதி மடம் என நாயன்மார் பெயரிலும் , திருமாளிகைப்பிச்சன் மடம் , அன்பர்க்கு அடியான் மடம் எனச் சமய அடியார் பெயரிலும் , பன்மாகேசுவரர் மடம் , நாற்பத்தெண்ணாயிரவர் மடம் எனப் பல குழுவினர் பெயரிலும் மடங்கள் ஏற்பட்டன .

• பலவகை மடங்கள்

திருமுருகன் திருமடம் , அறப்பெருஞ்செல்வி சாலை , சங்கரதேவன் அறச்சாலை என்ற அமைப்பில் திருமடம் , சாலை , அறச்சாலை எனவும் மடங்கள் அழைக்கப்பட்டன .

ஒரே ஊரில் பல மடங்கள் இருந்தன .

சோழ மாதேவியில் மேலைமடம் , கீழைமடம் என இரு மடங்கள் இருந்தன .

4.2.1 மடங்களின் நிருவாகம்

மடத்தின் தலைவர் மடபதி அல்லது மடாதிபதி எனப்பட்டார் .

மடத்தை ஒட்டியுள்ள பகுதிகள் மடவளாகம் என்றும் , மடத்திற்குரிய கொடை நிலம் மடப்புறம் எனவும் கூறப்பட்டன .

மடங்களில் பூசிக்கும் ஆண்டார் , கும்பிட்டிருக்கும் ஆண்டார் ஆகியோர் இருந்தனர் .

அவர்கள் தவசியர் என்றும் கூறப்பட்டனர் .

மடத்து நிர்வாகத்திற்குச் சில இடங்களில் ஏழுபேர் கொண்ட குழு இருந்தது .

அவர்கள் மடத்துச் சத்தப் பெருமக்கள் எனப்பட்டனர் .

4.2.2 சமண , பௌத்த மடங்கள்

பொதுவாக சமணர்களும் பௌத்தர்களும் மடங்களில் தங்கியிருந்தனர் .

அதற்குரிய சான்றுகள் பல கிடைத்துள்ளன .

• சமண மடங்கள்

சமண காஞ்சி எனப்படும் திருப்பருத்திக் குன்றத்திலும் , பாடலி என அழைக்கப்பட்ட திருப்பாதிரிப் புலியூரிலும் சமணர் மடங்கள் இருந்தன .

திண்டிவனத்திற்கும் , செஞ்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மேல் சித்தாமூரில் இன்றும் திகம்பர சமண மடம் ஒன்று சிறப்புடன் விளங்குகிறது .

தமிழகத்தின் சமணத் தலைமைப் பீடமாக அது விளங்குகிறது .

வச்சிரணந்தி , சிம்மசூரி , சர்வநந்தி போன்ற சமணப் பெரியார்கள் சமண மடத்துடன் தொடர்புகொண்டவர்களாகக் குறிக்கப்படுகின்றனர் .

பல சமணப் பள்ளிகளில் தீர்த்தங்கரர் உருவங்கள் வணங்கப்பட்டன .

• பௌத்த மடங்கள்

இன்று பூதமங்கலம் எனப்படும் போதிமங்கை , காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் பௌத்த அறநிலையங்கள் இருந்தன .

தமிழகக் கடலோரப் பகுதியான தொண்டி போன்ற பல இடங்களில் பௌத்த மடங்கள் இருந்தன .

பல பௌத்தப் பள்ளிகளில் புத்தபெருமான் வணங்கப்பட்டார் .

சமயம்

சமயம் பற்றிய செய்திகளும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன .

குறிப்பாக , சைவ சமயம் பற்றிய செய்திகள் பல உள்ளன .

4.3.1 சைவம்

சமய அடியார்களும் , ஊர்களும் , நிலங்களும் , பல பொருள்களும் அன்று பெற்றிருந்த பெயர்கள் அவர்களின் ஆழ்ந்த சமய நம்பிக்கையையும் , சமய ஈடுபாட்டையும் , சமயத் தொடர்பையும் காட்டுகின்றன .

மக்கள் தங்கள் குழந்தைகட்குச் சமய அடியார்கள் பெயரைக் குறிப்பாகத் தேவார மூவர் , நாயன்மார் பெயர்களையே பெரும்பாலும் வைத்தனர் .

திருஞானசம்பந்தன் , நாவுக்கரசன் , ஆலாலசுந்தரன் , தம்பிரான் தோழன் என்ற பெயர்களைக் கல்வெட்டில் காணுகின்றோம் .

• இறைவன் பெயர்கள் இடல்

மஞ்ஞகன் வயல் , கணபதி வாய்க்கால் , கூத்தாடும் நல்லூர் என்று வயல் , வாய்க்கால் , ஊர் என முடியும் பெயர்களும் சமய அடிப்படையில் எழுந்துள்ளன .

ஏரி உடைப்பு ஒன்றுக்குக் கூட காளியம்மை உடைப்பு என்று பெயர் வழங்கியது .

உடைப்பு என்பது ஏரியின் உடைந்த பகுதியாகும் .

• சிவபெருமான் பிள்ளைகள்

பிள்ளையார் , முருகன் , பைரவர் , சேத்திரபாலர் , சண்டிகேசுவரர் , திருஞானசம்பந்தர் ஆகியோர் சிவபெருமானின் பிள்ளைகள் என்று அழைக்கப் பெறுவர் .

பிள்ளையாரை மூத்த பிள்ளையார் என்றும் , முருகனை இளைய பிள்ளையார் என்றும் கல்வெட்டில் அழைப்பர் .

அம்மையின் ஞானப்பால் உண்டதால் திருஞானசம்பந்தர் சிவபெருமானின் பிள்ளை ஆனார் .

• முருகன் பெயர்கள்

பிள்ளையார் என இவர்களை அழைக்கும் கல்வெட்டுக்கள் முருகப் பெருமானைக் குன்றம் எறிந்த பிள்ளையார் , சிறைமீட்ட பெருமாள் , தேவ சேனாபதி , இளைய நயினார் , வேலாயுதசாமி , கந்தன் , ஆறுமுகன் , சுப்பிரமணியர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றன .

சில கல்வெட்டுகள் ‘ சதா வேலுமயிலும் துணை ’ என முடிகின்றன .

4.3.2 திருமுறை விண்ணப்பம்

வழிபாட்டின்போது தெய்வீகப் புலமையுடை அருளாளர்கள் இயற்றிய பாடல்களைப் பாடி வழிபாடு செய்வது வழக்கம் . அவற்றைப் பாடுவதற்கு ஓதுவார்கள் தனியாக நியமிக்கப்பட்டிருந்தனர் .

சிவாலயங்களில் சைவத் திருமுறைப் பாடல்கள் ஓதப்பட்டன .

இதனைத் திருமுறை விண்ணப்பம் செய்தல் என்று கல்வெட்டுக் கூறும் .

வைணவக் கோயில்களில் திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் பாடப்பட்டன .

• திருமுறைப் பெயர்கள்

சைவத் திருமுறைகளில் பயின்றுவரும் பல தொடர்கள் மக்களுக்குப் பெயராக வைக்கப்பட்டிருந்தன .

அம்பலத்தாடி , ஒளிவளர்விளக்கு , சீருடைக்கழல் , செம்பொற்சோதி , பொன்னார் மேனியன் , எடுத்தபாதம் , மழலைச் சிலம்பு ஆகிய பெயர்கள் அவ்வாறு அமைந்தவை .

4.3.3 சமயப் பொறை

இராசராசன் மகள் , திருமலையிலும் , தாதாபுரத்திலும் ‘ குந்தவை ஜினாலயம் ’ என்ற சமணப் பள்ளிகளை ஏற்படுத்தினாள் .

வீரபாண்டியன் பட்டினத்தில் இருந்த பெரிய இசுலாமியப் பள்ளியை , உதயமார்த்தாண்டன் புதுப்பித்து , உதய மார்த்தாண்டப்பள்ளி என்று பேரிட்டுக் கொடை அளித்தான் .

சருகணியில் உள்ள சர்வேசுவரன் கோயிலான கிறித்தவ தேவாலயத்திற்குச் சேதுபதி மன்னர்கள் கொடை கொடுத்தார்கள் .

தமிழகத்தில் சமயப்பூசல் பெரிதாக இன்றி , மத நல்லிணக்கத்துடன் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்பதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன .

தொகுப்புரை

பழங்காலத்தில் சமய நம்பிக்கையும் கடவுள் வழிபாடும் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததை அறிந்தீர்கள் .

சங்ககாலத்திலேயே கோயில்கள் இருந்ததையும் , ஐவகை நிலத்திற்கும் தனித்தனியே தெய்வங்களை உரிமையாக்கியதையும் படித்தோம் .

நடுகல்லே தெய்வமாக மாறியது என்பதையும் பிற்காலப் பல்லவர் , பாண்டியர் , சோழர் ஆகியோர் கற்கோயில் கட்டியதையும் அறிந்தீர்கள் .

சைவ , சமண , பௌத்த மடங்கள் சமய வளர்ச்சிக்கும் , சமுதாயப் பணிக்கும் இருப்பிடமாக விளங்கின .

மருத்துவக் கல்லூரி அமைத்து மருத்துவப் பணிகள் செய்யப்பட்டன .

பல சமயங்கள் இருந்தபோதிலும் சமயப்பொறை காணப்பட்டது .

மக்கள் கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டனர் .

மன்னர்களின் பிறந்த நாள் அன்று கோயில்களில் வழிபாடு நடைபெறக் கொடைகள் கொடுக்கப்பட்டன .

கோயிலில் விளக்கேற்றுதல் புண்ணிய செயலாகக் கருதப்பட்டது .

மலர் வழிபாடு செய்ய கோயிலில் நந்தவனம் அமைத்தனர் .

சமயமும் வழிபாடும் எந்த வகையில் சிறப்புற்றிருந்ததன என்பதனைக் கல்வெட்டுகள் கூறுகின்றன .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1 ) மடங்கள் எதற்காக ஏற்பட்டன ?

( விடை )

2 ) மடத்தின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார் ?

( விடை )

3 ) தமிழகத்தின் சமணத் தலைமைப் பீடமாக எது விளங்குகிறது ?

( விடை )

4 ) கல்வெட்டுகள் இளைய பிள்ளையார் என்று யாரை அழைக்கிறது ?

( விடை )

5 ) இராசராசன் மகள் எங்கெல்லாம் சமணப் பள்ளியை ஏற்படுத்தினாள் ?

வாழ்வியலும் சமுதாயமும்

பாட முன்னுரை

பழங்காலத்து மக்கள் நீதி நூல்கள் காட்டிய வழியில் அறநெறிப்படி வாழ்ந்து வந்தனர் .

இல்வாழ்க்கையில் மக்கள் ஈடுபட்டு , சுற்றத்தாருடன் கூடி , விருந்தினரை உபசரித்து மகிழ்ந்து வாழ்ந்தனர் .

கற்றறிந்த சான்றோர்கட்கும் , சமயப் பெரியார்கட்கும் , புலவர்கட்கும் , குருக்கள்மார்க்கும் உயர்வும் மரியாதையும் தந்து அற வாழ்க்கை நடத்தினர் .

திருமணம் செய்யாத இளைஞர்களைப் பயலாள் என்று கல்வெட்டுக் கூறுகிறது .

ஊர்ச்சபை நிர்வாகத்தில் முப்பத்தைந்து வயதுக்கு மேலானவர்களே அங்கம் பெற்றனர் .

பெண்களுக்கு ஊர்ச்சபைகளில் அன்று இடமளிக்கப்படவில்லை .

ஓரூரில் பல்வேறு சமூகத்தார் தனித்தனிக் குடியிருப்புக்களில் வாழ்ந்தாலும் அவர்கள் வேறுபாடு இன்றி ஒற்றுமையுடன் வாழ்ந்தனர் .

கோயில்களே சமூக நிறுவனங்களாக விளங்கின .

மக்களின் அரசியல் , சமூகம் , பொருளாதாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் சமய நிறுவனம் ஆகிய கோயில் முக்கியப் பங்கு வகித்தது சிறப்புக்குரியது .

தனி மனித வாழ்வும் , குடும்ப வாழ்வும் , சமுதாய வாழ்வும் சிறந்திருந்தன .

இவை பற்றிய செய்திகள் இந்தப் பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன .

மக்கள் வாழ்வு

ஊரை ஒட்டிய புதுக்குடியிருப்புக்கள் ஏற்பட்டபோது பழைய ஊர்க் குடிகளே அங்குக் குடியேற அனுமதிக்கப்பட்டனர் .

பொது நிலத்தை அனுபவித்து ஊரில் வாழ்ந்த அர்ச்சகர் , ஆசிரியர் , கணக்கர் , தச்சர் , கொல்லர் போன்ற பெருமக்கள் பிற ஊர்களில் சென்று தொழில் நடத்த அனுமதிக்கப்படவில்லை . பல ஊர்களில் சிவன் கோயிலுக்கும் பெருமாள் கோயிலுக்கும் பொதுவான கொடையை மக்கள் வழங்கினர் .

மத நல்லிணக்கம் நிலவியது .

5.1.1 கருணையும் கண்டிப்பும்

தலைக்கு எண்ணெயும் , குழந்தைகட்குப் பாலும் , கன்றுக்குட்டிக்குப் புல்லும் தாராளமாக இலவசமாக வழங்கினர் .

சொந்தநிலம் உடையவர்களும் , சொந்த நிலத்தில் வீடு கட்டியவர்களும் , கற்றறிந்து பிறர்க்குக் கற்பித்த பெரியவர்களுமே ஊர் நிர்வாகத்தில் அனுமதிக்கப்பட்டனர் .

தவறிழைத்தவர்கட்கு அங்கு இடமில்லை .

கணக்குக் காட்டாதவர்களும் அவர்கள் உறவினர்களும் ஊர் அவையில் அங்கம் பெறும் உரிமையை இழந்தனர் .

5.1.2 ஊர்களும் செய்திப்பதிவும்

நல்ல விளைநிலம் உள்ள பகுதிகளிலும் , ஆறு கால்வாய்ப் பகுதிகளிலேயே புதிய ஊர்கள் அதிகமாக ஏற்பட்டன .

போக்குவரத்தும் , தகவல் தொடர்பும் இல்லாத அந்நாளிலேயே , அரசன் பட்டமேற்ற ஆண்டு , மாதம் , நாள் தெரிந்து கல்வெட்டுக்களில் குறித்திருந்ததும் , நிகழ்ச்சிகளை ஆணைப்படுத்திக் கல்வெட்டுக்களிலும் , செப்பேடுகளிலும் , ஓலை ஆவணங்களிலும் பொறித்து வைத்ததும் வியப்புக்குரிய செயலாகவே தெரிகிறது .

முக்கிய நிகழ்ச்சிகளை ஆவணமாகப் பதிவு செய்தனர் .

அவைகளே இன்றைய வரலாற்றுக்குத் துணை

புரிகின்றன .

5.1.3 மக்களின் பொறுப்பு

கல்வியைக் கற்பதிலும் , கற்றவர்கள் கூறுவதைக் கேட்பதிலும் மக்கள் பேரார்வம் காட்டினர் .

பிராமணி , ஆழ்வி , தேவி , மணவாட்டி என்று அழைக்கப்பட்ட மனைவிமார்கள் குடும்பப் பொறுப்புக்களைச் செவ்வனே நிறைவேற்றி வந்தனர் .

மாணிகள் எனப்படும் பிரம்மச்சாரிகள் கோயில் பணிகளில் நியமிக்கப்பட்டிருந்தனர் .

அரசுக்கும் , நாட்டுச் சபைக்கும் கொடுக்க வேண்டிய நிலவரியையும் , பிற வரிகளையும் தவறாமல் செலுத்தினர் .

ஊராரும் சம்பளம் பெறாமல் அவைகளில் உறுப்பினர்கள் ஆகப் பணிபுரிந்தனர் .

5.1.4 ஊர்க் கூட்டங்கள்

ஊர்க் கூட்டங்கள் கோயில் மண்டபங்களிலும் , கோபுரத்தின் அருகிலும் , பெரிய மரங்களின் அடியிலும் , ஆற்றங்கரைகளிலும் பகல் நேரத்தில் நடைபெற்றது என்பதைக் கல்வெட்டுக்களில் காணுகிறோம் .

அச்சபைகளில் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டனர் என்பதை " வாட்டம் இன்றிக் கூட்டம் பெருகி நிறைவற நிறைந்து குறைவறக் கூடி " என்ற கல்வெட்டுத் தொடரால் அறிகின்றோம் .

அச்சபைகளில் பெண்கள் இடம்பெறவில்லை .

பெண்கள் நிலை

சமுதாயத்தில் சரிபாதி எண்ணிக்கையுடைய பெண்கள் நிலை எவ்வாறு இருந்தது ?

அவர்கள் வாழ்க்கை முறை என்ன ?

என்பன பற்றியும் கல்வெட்டுகள் சில குறிப்புகளைத் தருகின்றன .

கல்வியறிவும் , உலகியல் அறிவுமுடைய பெண்கள் குடும்பப் பொறுப்பேற்று இல்லறத்தினை நல்லறமாக்கினர் .

5.2.1 சொத்துரிமையும் கொடையும்

பெண்கள் “ சீதனம் ” பெற்றுள்ளனர் .

திருமணத்தின்போது பெற்றோர் மணமகளுக்குக் கொடுப்பது சீதனம் எனப்படும் .

ஒரு கல்வெட்டில் “ என் தமக்கைக்குச் சீதனம் வாத்த நிலம் ” என்ற குறிப்புக் காணப்படுகிறது .

அது கணவன் உரிமையாகிறது .

ஆனால் கணவன் இறந்தபின் அவன் சொத்துக்கள் மனைவியையே சேர்கிறது .

• பெண்கள் கொடை

பெண்களுக்குச் சொத்துரிமை ஓரளவு இருந்துள்ளது .

குந்தவையார் , செம்பியன்மாதேவி போன்ற அரச குடும்பத்துப் பெண்கள் மட்டுமல்ல சில வணிகர் , வேட்டுவர் , வேளாளர் குலப் பெண்களும் கோயிலுக்குக் கொடுத்த கொடை பற்றிக் கல்வெட்டுகள் கூறுகின்றன .

காவலன் குறும்பிள்ளரில் சொக்கன் மனைக்கிழத்தி , வேளாளரில் கண்ணன் மூவேந்தவேளான் மணவாட்டி பெருந்தேவி ஆகியோர் கோயிலுக்குக் கொடை கொடுத்தமை பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன .

இராசராசன் கூட “ நம் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் ” ஆகிய பெண்கள் கொடைகளைத் தன் கல்வெட்டில் குறிக்கின்றான் .

• பெண்களின் பாதுகாவலர்கள்

சில இடங்களில் பெண்கள் கொடை கொடுக்கும்போது அப்பெண்ணின் தந்தை அல்லது கணவன் அல்லது சகோதரன் ஆகியோர் அப்பெண்ணிற்காகக் கொடை கொடுத்ததாகக் கூறிக் கொள்கின்றனர் .

“ திருச்சிற்றம்பல தேவனை முதுகண்ணாக உடைய இவன் பிராமணி சாத்தி ’ ' என்பது ஒரு கல்வெட்டுத் தொடராகும் .

முதுகண் என்பது பாதுகாவலரைக் குறிக்கும் கல்வெட்டுச் சொல்லாகும் .

மனைவிக்குக் கணவரும் , மக்களுக்குப் பெற்றோரும் பாதுகாவலராகக் ( முதுகண்ணாகக் ) குறிக்கப் பெற்றுள்ளனர் .

• தேவரடியார் நிலை

தேவரடியார் என்று பெயர் பெற்ற திருக்கோயில் பணிப்பெண்கள் கொடை கொடுக்கும் அளவிற்குச் சிறப்புடன் திகழ்ந்துள்ளனர் .

சில தேவரடியார்கள் திருமணமும் செய்துகொண்டு கணவனோடு வாழ்ந்துள்ளனர் .

அவர்கள் மக்கட் செல்வங்களான ஆண்களும் , பெண்களும் கொடையளித்துள்ளனர் .

தேவரடியாருக்குக் கோயிலில் பொட்டுக்கட்டுதல் என்னும் சடங்கு செய்து , சந்தனம் தெளித்து , புத்தாடை , அணிகலன்கள் கொடுத்து நகர்வலம் செய்வித்துச் சிறப்புச் செய்துள்ளனர் .

அவர்கள் குடும்பத்தார்க்குக் கொடை கொடுத்தனர் . 5.2.2 ஆளுமை

அரசனோடு அத்தாணி மண்டபத்தில் வீற்றிருந்து அரசியர் அதிகாரமும் செய்துள்ளனர் .

இதனை

“ செம்பொன் வீரசிம்மாசனத்து

உலகமுழுதுடையாளொடும்

வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி

மின்மரான ஸ்ரீ ராஜராஜன் “

“ உலகுடைய முக்கோக் கிழானடிகளொடும்

செம்பொன் வீரசிம்மாசனத்து

வீற்றிருந்தருளிய சக்கரவர்த்தி

ஸ்ரீ ராஜாதிராஜன் ’

என்ற கல்வெட்டு மெய்க்கீர்த்தித் தொடர்களால் அறியலாம் .

• பெண் அதிகாரிகள்

அரசு அதிகாரிகளாகச் சில பெண்கள் இருந்துள்ளனர் .

“ அதிகாரிச்சி எருதன் குஞ்சரமல்லி ” போன்றோர் பெயர்களைக் கல்வெட்டில் காணுகிறோம் .

இவர்கள் சிலர் அதிகாரிகளின் மனைவியராகவும் இருந்துள்ளனர் .

சில இடங்களில் அரசமாதேவியின் பணிப்பெண்களாக இருந்தனர் .

இவ்வாறு சில பெண் அதிகாரிச்சிகள் இருந்துள்ளனர் .

5.2.3 தீப்பாய்தலும் நோன்பும்

கணவன் இறந்தவுடன் அவனோடு உடன்கட்டையேறி வீரமரணம் அடைந்த பெண்கள் பற்றியும் சில குறிப்புகள் கிடைத்துள்ளன .

சங்க காலத்திலேயே இவ்வழக்கம் உண்டு என்பதைப் புறநானூற்றில் பூதப்பாண்டியன் தேவியின் வரலாற்றால் அறிகின்றோம் .

மணிமேகலையில் சாதுவன் மனைவி ஆதிரை தீப்பாய முற்பட்டதை நாம் காணுகின்றோம் .

செயற்கரும் செயல் முடித்தபின் ஆண்களும் தீப்பாய்ந்துள்ளனர் .

• சோழமாதேவியர்

முதல் பராந்தகன் காலத்தில் இருங்கோவேள் மரபில் வீரசோழ இளங்கோவேள் மனைவி கங்கமாதேவி தீப்பாய்ந்து இறந்ததையும் , கங்கைகொண்ட சோழன் ஆகிய முதல் இராசேந்திரன் மனைவி வீரமாதேவியார் தீப்பாய்ந்ததையும் , மூன்றாம் குலோத்துங்கசோழன் மனைவி தீப்பாய்ந்ததையும் , இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன் மனைவியும் முதலாம் இராசராசன் தாயுமாகிய வானவன்மாதேவி இராசராசன் குழந்தையாக இருக்கும்போதே தீப்பாய்ந்து இறந்ததையும் கல்வெட்டுகள் கூறுகின்றன .

“ முழங்கு எரி நடுவணும்

தலைமகன் பிரியாத் தையல் ’

என இராசராசன் மனைவி வானவன்மாதேவி கல்வெட்டில் குறிக்கப்படுகிறாள் .

• கைம்மை நோன்பு

இவ்வாறு தீப்பாய்ந்து இறந்த பெண்களை வீரமாசத்தி என்பர் .

பின்னர் இவர்கள் ' வீரமாசத்தி ' என்று வழிபடப்பட்டனர் .

சமுதாயத்தில் எல்லாப் பெண்களும் கணவன் இறந்த பின்னர் தீப்பாய்ந்தனர் என்று கொள்ள முடியாது .

இவ்வழக்கம் மிக அருகியே காணப்பட்டது .

பலர் கைம்மை நோன்பு நோற்றும் வாழ்ந்திருக்கக் கூடும் .

கண்டராதித்தன் திருத்தேவியரரான செம்பியன் மாதேவி தன் கணவன் இறந்தபின் , பல ஆண்டுகள் மூன்று அரசர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்து , பல இறைப்பணிகள் செய்துள்ளார் .

இவர்கள் கைம்மை நோன்பு நோற்றவர்கள் ஆவர் .

அரசனும் அரசியும் இறந்த பின்னர் அவர்கட்குப் பள்ளிப்படை என்னும் சமாதிக் கோயில்கள் எடுக்கப்பட்டன .

பஞ்சமாதேவி பள்ளிப்படை என்ற பெயரைக் கல்வெட்டில் காணுகின்றோம் .

வீரவழிபாடு

போர்க்களத்தில் வீரம் காட்டிப் போர் செய்து வீரமரணம் அடைந்தவர்கட்குச் சமுதாயத்தில் மிக நல்ல மரியாதை இருந்தது .

அவர்களைப் புதைத்த இடத்தை மேடாக்கிக் கல்வட்டம் அமைத்து அவ்விடத்தில் நீண்டு உயர்ந்த கல் ஒன்றை நடுவர் .

அது நெடுங்கல் அல்லது நெடுநிலை நடுகல் எனப்படும் .

அக்கல்லில் அவ்வீரன் பெயரையும் , அவன் பெருமைகளையும் கல்வெட்டாகப் பொறிப்பர் .

அதற்கு மாலைசூட்டி , ஆட்டுக் கிடாயைப் பலிகொடுத்து , கள் படைத்து வழிபடுவர் .

5.3.1 வீரக்கல்

செய்யுள்களும் , இலக்கியங்களும் , இலக்கணங்களும் , இதிகாசங்களும் , புராண ஆகமங்களும் , தோத்திரங்களும் , சாத்திரங்களும் உயர்ந்தோராகிய மேன்மக்களின் வழக்கு ஆகும் .

வரலாற்றில் ஊற்றுக் கண்ணாகத் திகழும் குடிமக்களின் பண்பாட்டை அறிய , அக்காலச் சமுதாயத்தின் உண்மை நிலையை அறிய , நடுகற்களாகிய வீரக்கற்களே சான்றாக விளங்குகின்றன .

• வீரக்கல் எடுக்கப்பட்டோர்

பண்டைய நடுகற்கள் மன்னர்களுக்கோ உயர்ந்தோர்களுக்கோ எடுக்கப்படவில்லை .

அவை சமுதாயத்தில் பெரும் தொகையாக விளங்கிய மறவர் , எயினர் , மழவர் , வேடர் , வடுகர் , கோவலர் , கள்வர் , பறையர் , பாணர் குடிகளைச் சேர்ந்த சேவகன் , இளமக்கள் , தொறுவாளன் , இளையோர் , ஆள் , இளமகன் , அடியாள் , அடியார் , மன்றாடி , மனைமகன் ஆகியோருக்கு மட்டுமே எடுக்கப்பட்டன . • வீரக்கற்களின் சிறப்பு