69

பண்டைய நாளில் ஊர் மக்களையும் , ஊரையும் காப்பாற்ற புலி , யானை , காட்டுப்பன்றி ஆகியவற்றைக் குத்தி வீரமரணம் அடைந்தோர்க்கும் , போரில் வீரமரணம் அடைந்தோர்க்கும் நடுகற்கள் எடுக்கப்பட்டன .

அந்நடுகற்களின் மூலம் அக்கால ஆடை , அணிகலன் , போர் ஆயுதங்கள் , போர்முறை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம் .

நடுகல்லில் உள்ள வீரனை அவ்வீரனின் தலைவன் , மனைவி , மக்கள் , உற்றார் ஆகியோர் வழிபடுவர் .

அக்காலச் சமுதாயத்தைப் பற்றி அறிய நடுகல் ஆய்வு ஒரு முக்கியமான ஆதாரமாகத் திகழ்கிறது .

பெரும்பாலான நடுகற்களில் இறந்த வீரனின் பெருமையும் பெயரும் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டிருக்கும் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1 ) கல்வெட்டுகள் மனைவியை எவ்வாறு குறிப்பிடுகின்றன ?

( விடை )

2 ) திருமணம் ஆகாத இளைஞர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?

( விடை )

3 ) “ முதுகண் ” என்பவர் யார் ?

( விடை )

4 ) தீப்பாய்ந்து இறந்த சோழ அரசி ஒருவரின் பெயரைக் குறிப்பிடுக .

( விடை )

5 ) வீரமாசத்தி என்பவர் யார் ?

வழக்குகளும் வரிவிதித்தலும்

அக்காலத்தில் ஏற்பட்ட சில வழக்குகள் பற்றியும் , அவைகளை விசாரித்தமை பற்றியும் , அளித்த தண்டனைகள் பற்றியும் கல்வெட்டுகள் மூலம் சில குறிப்புக்கள் கிடைக்கின்றன .

சிற்றூர்களில் கரணம் என்ற பெயரிலும் , பேரூர்களில் அதிகரணம் என்ற பெயரிலும் நீதிமன்றங்கள் இருந்தன .

அவற்றில் பணிபுரிந்தவர்கள் கரணத்தான் எனப்பட்டனர் .

இவற்றில் வழக்குகள் முடியாவிட்டால் மேல்முறையீடு செய்யத் தருமாசனம் என்ற நீதி அமைப்பும் இருந்ததைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன .

தர்மாசன அலுவலர் மத்யஸ்தன் அல்லது நடுவிருக்கை எனப்பட்டனர் .

5.4.1 வழக்குகளும் தண்டனையும்

இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டான் .

அக்கொலைக்குக் காரணமான ஐந்து சகோதரர்கள் கண்டுபிடிக்கப்பட்டு முதலாம் இராசராசன் காலத்தில் அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டால் அறிகிறோம் .

முதலாம் இராசராசன் காலத்தில் மதுராந்தகன் கண்டராதித்தன் என்னும் கோயிலை மேற்பார்வையிடும் உயர் அலுவலன் , பல கோயில்களில் நடந்த கையாடல்களையும் , வரி ஏய்ப்பையும் கண்டுபிடித்துச் சரியாக நடைபெற ஏற்பாடு செய்ததுடன் குற்றம் புரிந்தவர்களையும் தண்டித்தான் .

இதனையும் கல்வெட்டுகள் கூறுகின்றன .

• தூக்குத்தண்டனை

கொலைக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது .

அதற்குத் தலைவிலை என்று பெயர் .

ஆனால் ஈரோடு மாவட்டம் சாத்தம்பூர் என்னும் ஊரில் பூந்துறை நாட்டார் கூடி , அநியாயம் அழிபிழை செய்த தீயவர்களைக் கொன்றால் கொலை செய்தவர்களுக்குத் தலைவிலை இல்லை என்று தீர்மானம் செய்தனர் என்பதை , அவ்வூர் வல்லாள ஈசுவரன் கோயிலில் வெட்டப்பட்ட ஒரு கல்வெட்டுத் தெரிவிக்கிறது .

இக்கல்வெட்டு கொங்குச் சோழன் குலோத்துங்கன் ( 1149-1183 ) காலத்ததாகும் .

• விளக்கேற்றுதல்

ஓர் ஊரில் சகோதரர் இருவர் சண்டையிட்டதில் தம்பியால் அடிபட்டு அண்ணன் இறந்தான் .

தகுந்த சாட்சியங்களால் குற்றம் நிரூபிக்கப்பட்ட போதிலும் , வயோதிகப் பெற்றோருக்கு வேறுமக்களோ , ஆதரிப்பவரோ , சொத்தோ , நிலமோ இல்லாத காரணத்தால் , நாட்டுச்சபையார் இளையவனின் தலைவிலையை நீக்கிக் கோயிலுக்கு விளக்கேற்றுமாறு கூறினர் என்பதை , ஒரு கல்வெட்டுக் கூறுகிறது .

பிற்காலச் சோழர் காலத்தில் கி.பி. 12 , 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் இச்செய்திகள் கூறப்படுகின்றன .

• இறைப்பணியாளர் குற்றம்

கோயில்களில் இறைப்பணி புரியும் அர்ச்சகர்கள் செய்யும் குற்றங்களுக்குத் தண்டனையாக அவர்கள் நிலம் பறிமுதல் செய்யப்பட்டது .

நிலம் இல்லாவிடில் அவர்களைப் பணியிலிருந்து நீக்கி , அவர்கள் பணிசெய் நாளைப் பிற அர்ச்சகர்கட்கு விற்பனை செய்து பெற்ற பொன்னைக் கோயில் கருவூலத்தில் சேர்த்து , ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்தனர் .

• தவறான கொலைக்குரிய தண்டனை

வேட்டைக்குச் சென்ற இடத்தில் ஒருவன் அம்பெய்தபோது தவறுதலாக வேறு ஒருவன் மீதுபட்டு அவன் இறந்தான் .

கொலை புரியவேண்டும் என்ற தீய நோக்கம் இன்றித் தற்செயலாக ஆயுதம் பட்டு ஒருவன் இறந்தான் .

இப்படிப்பட்ட கொலைக்குற்றங்களுக்குத் தண்டனை கடுமையாக விதிக்காமல் , கோயிலுக்கு ஆயுள் முழுவதும் விளக்கேற்றுமாறு செய்துள்ளனர் .

• சாதிக்கு ஏற்ற தண்டனை

சாதிக்கு ஏற்ற தண்டனையும் அக்காலத்தில் நிலவியது .

சிவாச்சாரியார் இருவர் மிகக் கொடிய குற்றங்களைச் செய்தனர் .

வழக்கமாக அவர்கட்கு எளிய தண்டனை இல்லாமல் கீழ்ச்சாதிக்காரர்களுக்கு அளிக்கும் தண்டனைபோல் அவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது என்பதையும் ஒரு கல்வெட்டு மிக விரிவாகக் கூறுகிறது .

5.4.2 வரி விதித்தல்

வரி அல்லது கடமை என்பது அக்காலத்தில் அரசின் முக்கிய வருவாயாக இருந்தது .

நிலத்தின் மீதும் , தொழிலின்மீதும் , வணிகத்தின்மீதும் இவை விதிக்கப்பட்டன . ஆனாலும் பெரும்பாலான கொடை நிலங்கள் இறையிலி என்று வரி நீக்கப்பட்டிருந்தன .

பிற்காலக் கல்வெட்டுக்கள் மூலம் குறவன் , கூத்தாடி , தொட்டியர் , தொம்பர் , பட்டர் , புலவர் , மறவர் , மாணிக்கி , வலையர் , வேட்கோவர் , ஆண்டிகள் போன்ற சமூகத்தார்க்குச் சில ஊர்களில் அல்லது சில உள்நாட்டுப் பகுதியில் வரி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது .

• வரியைக் குறைத்தல்

அரசுக்கோ நாட்டுச்சபைகட்கோ கொடுக்க வேண்டிய வரிகளைக் குறைக்குமாறு சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளமையைக் கல்வெட்டுகளில் காணுகின்றோம் .

“ மச்சுனன் அழகப் பெருமாள் சொன்னமையில் ” , “ பெருந்தரம் வீரசோழ மூவேந்தவேளான் சொல்லி நினைப்புமிட்டமையில் இறை இழிச்சினோம் ’ என்று கூறி , வரியைப் பாதியாகவோ மூன்றில் ஒரு பங்காகவோ குறைத்துள்ளனர் .

( இழிச்சுதல் - குறைத்தல் ) .

' காடெழு கரம்பு நீரேறாப்பாழ் ' போன்ற தரிசு நிலத்தைப் பயிர் செய்தவர்கட்கும் , புதிதாகக் குடியேற்றப்பட்ட வேளாளர்கட்கும் , கைக்கோளர் முதலிய தொழில் புரியும் மக்களுக்கும் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு வரி இல்லையென்றும் , அடுத்துவரும் ஆண்டுகட்கு மூன்றில் ஒன்றும் , பின்னர் வரும் ஆண்டுகட்குப் பாதியும் வரி வாங்கப்பட்டது என்பதையும் கல்வெட்டு மூலமாக அறிகிறோம் .

தவறாக வரிவாங்கிய இடங்களில் வரி திருப்பிக் கொடுக்கப்பட்ட விபரமும் கல்வெட்டால் அறிகிறோம் .

சமூக அமைப்பு

பழங்காலத்தில் சமூகத்தில் பல வேறுபாடுகள் இருந்ததைக் கல்வெட்டுகள் ஓரளவு காட்டுகின்றன .

நான்கு வருணப் பாகுபாட்டை மீறிப் பல்வேறு சாதிகள் குறிக்கப்பட்டுள்ளன .

தமிழ்நாட்டு அரசர்கள் ' மேதினி கூறும் சாதி ஒழுக்கம் ' தவறாமல் இருக்கவேண்டி ஆட்சி புரிந்ததாக அவர்கள் மெய்க்கீர்த்தி கூறுகிறது .

5.5.1 வேறுபாடுகள்

“ நம்பி முதல் குப்பை எடுப்பான் வரை ” , “ பூசிக்கும் நம்பி முதல் கழுநீர் போகட்டுவான் வரை ” , “ அர்ச்சிப்பான் முதல் வெட்டியான் வரை ” என்ற கல்வெட்டுத் தொடர்கள் மூலம் தொழில் அடிப்படையில் தோன்றிய வேறுபாடுகளே சாதியையும் , மேல் கீழ் என்ற நிலையையும் ஏற்படுத்தின என்பதைக் காணுகிறோம் .

நம்பி என்பவர் திருக்கோயிலில் பூசை செய்பவர் .

வெட்டியான் என்பவன் சம்பளம் இன்றி ஊர்ச் சபைக்காக வேலை செய்பவன் .

• தீண்டாதார்

மக்கள் சேர்ந்து வாழ்ந்த இடங்கள் சேரி என்று கூறப்பட்டன .

பார்ப்பனச் சேரி , கம்மாளச்சேரி , இடைச்சேரி என்ற பெயருடன் பல சேரிகள் இருந்தன .

தீண்டாச்சேரி என்ற சேரி ஒன்றும் இருந்ததைக் காண்கிறோம் .

குளம் தூர் வாரும்போது கூட ஊரில் உள்ள அனைவரும் தங்கள் பங்குக்குத் தூர் வாரவேண்டும் என்று கூறுமிடத்தில் தீண்டாதார் ஒழியப் பிறர்தான் தூர் வாரவேண்டும் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது .

இச்சேரிகள் பேரூரை ஒட்டி இருந்தன .

• வலங்கை - இடங்கை வேறுபாடு

வலங்கை - இடங்கை என்பது அந்தணர் , வேளாளர் அல்லாத இதர மொத்த சமூகங்களின் இரண்டு பிரிவுகள் .

பிற்காலச் சோழர்களின் தொடக்க காலத்தில் இப்பிரிவு தொடங்கியது .

படைப்பிரிவில் ஏற்பட்ட வலங்கை - இடங்கைப் பிரிவு சமுதாயத்தில் எல்லாப் பிரிவினர் இடையேயும் பின்னர் வந்துவிட்டது .

வலக்கை , இடக்கை ; வலதுகை , இடதுகை ; வலங்கைப் பாணத்தார் , இடங்கைப் பாணத்தார் ; வலங்கையர் , இடங்கையர் எனவும் இவர்கள் குறிக்கப்பட்டுள்ளனர் .

10ஆம் நூற்றாண்டில் முதலில் படைப்பிரிவில் இவ்வழக்கம் தோன்றியது .

முதலில் உள்நாட்டுப் படை வலங்கைப் பழம்படை , வலங்கைப் படை , வலங்கை மாசேனை என அழைக்கப்பட்டது .

பின்னர் , குடியேறிய வன்னியர் , செங்குந்தர்களைக் கொண்ட படை இடங்கைப் படை என்று அழைக்கப்பட்டது .

பிறகு இப்பிரிவு பொதுமக்களிடமும் பரவியது .

வணிகம் , தொழில் சார்ந்தோர் வலங்கை இடங்கை எனப்பட்டனர் என்ற கருத்தும் உண்டு .

சோழ மன்னனுக்கு வலப்புறமும் இடப்புறமும் அமரும் உரிமை சிலருக்கு அளிக்கப்பட்டது .

நாளடைவில் அவர்கள் வலங்கை இடங்கைப் பிரிவுகளாக மாறினர் என்ற கருத்தும் உண்டு .

எப்படியோ மொத்த சாதிக்குள் இப்பிரிவு ஏற்பட்டுவிட்டது .

இப்பிரிவைப் பற்றிய ஏற்றுக் கொள்ளக்கூடிய பெயர்க்காரணம் இன்னும் சரியாகக் கண்டறியப்படவில்லை .

வழிபாட்டில் கூட இப்பிரிவு ஏற்பட்டுவிட்டது .

சில கோவில்களில் வலங்கை விநாயகர் , இடங்கை விநாயகர் எனப் பிரதிட்டை செய்த நிகழ்ச்சிகள் உள்ளன .

இவ்வகையினர் வலங்கைச் சாதியார் , இடங்கைச் சாதியார் எனவும் அழைக்கப்பட்டனர் .

• வலங்கையரும் இடங்கையரும்

தட்டார் , கொல்லர் , தச்சர் , கன்னார் , மரவேலைக்காரர் ஆகிய பஞ்சகம்மாளரும் , கம்பளத்தார் , செங்குந்தர் , தேவேந்திரர் , மாதாரிகள் வன்னியர் போன்ற தொழில் அடிப்படையாக இருப்பவர்கள் இடங்கைச் சாதியார் என்றும் , கவறைச்செட்டிகள் , சேணியர் போன்ற வணிகப் பிரிவினர் வலங்கைச் சாதியார் என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது .

• சலுகைகள்

சில சாதியாருக்குச் சில உரிமைகளை அரசர்களும் , அதிகாரிகளும் அளித்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன .

வாயிற்படி அமைத்தல் , வாத்தியம் வாசித்தல் , சன்னல் அமைத்தல் , மேல் ஆடை அணிதல் , பகல் தீவட்டிப் பந்தம் பிடித்தல் , குதிரை ஏற்றம் , குடைபிடித்தல் , காலுக்குச் செருப்பு அணிதல் போன்ற உரிமைகளும் சலுகைகளும் சிலருக்கு வழங்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன .

இவை சமூக வேறுபாடுகளை நீக்கும் முயற்சி எனலாம் .

5.5.2 அடிமைமுறை

அக்காலத்தில் ஆண்மக்களும் , பெண் மக்களும் செல்வர்களிடமும் , கோயில்களிடத்தும் , மடங்களிடத்தும் தம்மை விற்றுக்கொண்டு அடிமைகளாயிருந்து தொண்டாற்றி வந்தனர் என்பது பல கல்வெட்டுகளால் நன்கறியக் கிடக்கின்றது .

கொடிய பஞ்சம் தோன்றி நாட்டுமக்களை வருத்திய காலத்தில் , அவர்கள் தம்மையும் தமது குடும்பத்தாரையும் பாதுகாக்க இயலாமல் தங்களை விற்றுக்கொண்டு அடிமைகளாக உயிர்வாழும்படி நேர்ந்தது என்பதைச் சில கல்வெட்டுகள் குறிப்பதைக் காணலாம் .

அன்றியும் வழிவழியாக அடிமைகளாக வாழ்ந்துவந்த குடும்பத்தினரும் உண்டு என்பதையும் சில கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன .

• கோயிலில் அடிமைகள் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலப்பெரும்பள்ளம் திருக்கோயிலில் நாங்கூர் அந்தணன் ஒருவன் பதின்மூன்று காசுக்கு ஆறுபேரை அடிமைகளாக விற்றனன் .

மற்றும் பெண்கள் இருவர் , தம்மை உள்ளிட்ட எழுவரைப் பதினைந்து காசுக்கு விற்றனர் .

தந்திவர்மமங்கலத்து மத்தியஸ்தன் ஒருவன் வயலூர்க் கற்றளிப்பரமேசுவரர் கோயிலில் திருப்பதியம் பாடுவதற்கும் , அடிமைகளாகத் தொண்டு புரிவதற்கும் , கி.பி. 948ஆம் ஆண்டு , சிலரை அளித்தான் என்பதை அவ்வூர்க் கல்வெட்டுக் கூறுகிறது .

திருநெல்வேலி மாவட்டம் கருங்குளம் இராசசிம்மேசுவரமுடையார் கோயிலில் ஓர் உவச்ச அடிமையை அரசியல் அதிகாரி ஒருவன் 1105ஆம் ஆண்டு தந்த செய்தியும் கல்வெட்டில் கூறப்படுகிறது .

• அடிமைகட்கு அடையாளம்

பாணபுரத்திலிருந்து அழகிய பாண்டிப் பல்லவரையன் என்பான் 1119ஆம் ஆண்டு தன் குடும்பப் பெண்கள் சிலரை , தேவரடியாராகப் பணிபுரிந்து வருமாறு சூல இலச்சினை பொறித்து , திருவல்லம் கோயிலில் பணிபுரியுமாறு அடிமைகளாக விட்டான் .

• அடிமைகளின் விற்பனை

1201ஆம் ஆண்டு கொடிய பஞ்சத்தில் வேளாளன் ஒருவனும் அவன் பெண்மக்கள் இருவரும் கோயிலைச் சார்ந்த மடத்திற்கு 110 காசுகளுக்கு விலைப்பட்டு அடிமைகளான செய்தி , திருப்பாம்புரக் கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது .

நாகப்பட்டினம் அருகில் உள்ள திருக்காரோணக் கல்வெட்டு ஒன்றில் , கணக்கர் இருவர் தம் அடிமைகளைக் கோயிலுக்கு விற்றதைத் தெரிவிக்கிறது .

அதற்காக ‘ ஆள்விலைப் பிரமாண இசைவுதீட்டு‘ எழுதப்பட்டதையும் அக்கல்வெட்டுக் குறிக்கிறது .

சிலர் ஊர்ப் பொது இடத்தில் தம் அடிமைகளைக் கொண்டுவந்து நிறுத்தி “ விலைகொள்வார் உளரோ ” என்று கூவி விற்றுள்ளனர் .

விலைகுறித்தால் கொள்வேன் என்று சிலர் விலைக்கு வாங்கியுள்ளனர் .

செல்வர் சிலர் தம் சொத்துக்களையும் , நிலங்களையும் தம் மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கும்போது தமது அடிமைகளையும் பிரித்துக் கொடுத்துள்ளனர் என்பதையும் சில கல்வெட்டுகள் கூறுகின்றன .

• பரம்பரை அடிமை

எதிரிலிசோழக் கங்கநாடாழ்வான் என்பவன் 1219ஆம் ஆண்டு திருமறைக்காட்டுக் கோயிலுக்கு ஆண்கள் ஐவரையும் , பெண்கள் ஐவரையும் பரம்பரை அடிமைகளாக விற்ற செய்தி ஒரு கல்வெட்டால் புலப்படுகிறது .

தச்சன் ஒருவனும் , அவன் மனைவியும் அவர்கள் மக்கள் நால்வரும் அச்சுதமங்கலம் கோயிலில் பரம்பரை அடிமைகளாக இருந்ததை , ஒரு கல்வெட்டுக் கூறுகிறது .

இவர்களில் பலர் பக்திக்காக மட்டும் அல்லாது , கொடிய பஞ்சம் வந்தபோது வறுமையின் காரணமாகவும் பரம்பரை அடிமையாகத் தங்களைக் கோயில்களுக்கு விற்றுக்கொண்டனர் என்று தெரிகிறது .

5.5.3 நம்பிக்கைகள்

அக்கால மக்களிடம் சில நம்பிக்கைகள் இருந்தன என்பதையும் சில கல்வெட்டுகள் கூறுகின்றன .

கொங்குச் சோழ மன்னன் வீரசோழனின் ஜன்ம நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் வந்தது .

சமயப் பெரியோர்கள் அதற்குக் கழுவாயாகச் சிவலிங்கப் பிரதிட்டை செய்யவேண்டும் என்று கூறினர் .

ஆனால் வீரசோழன் கொழுமம் பகுதியில் வீரசோழீசுவரம் என்ற கோயிலையே கட்டினான் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன .

• தண்ணீர்ப் பந்தலும் சுமைதாங்கியும்

இறந்தவர்கட்காக நடுகல்லும் , பள்ளிப்படைக் கோயிலும் கட்டும்போது , அவர்களின் ஆத்மா சாந்தியடைய , அவர்கள் தாகம் தீர , அருகில் கிணறு வெட்டுவது , தண்ணீர்ப் பந்தல் அமைப்பது வழக்கமாக இருந்தது .

முதலாம் இராசராசன் நடத்திய ஈழப் போரில் தன் தந்தை இறந்ததற்காக ஒற்றியூரன் பிரதிகண்ட வர்மன் கிணறுவெட்டித் தண்ணீர்ப் பந்தல் அமைத்தான் என்று கூறப்பட்டுள்ளது .

அதேபோல , கருவுற்ற பெண்கள் நலமாகக் குழந்தைப் பேறு அடைய சுமைதாங்கிகள் அமைக்கப்பட்டதையும் கல்வெட்டுக் கூறுகிறது .

• பாவம் - புண்ணியம்

சுவர்க்கம் , நரகம் போன்ற நம்பிக்கைகளும் மக்களிடையே இருந்தன .

நன்மையும் புண்ணியமும் செய்தோர் சுவர்க்கம் புகுவர் என்றும் , தீமையும் பாவமும் செய்தோர் நரகம் புகுவர் என்றும் மக்கள் கருதினர் .

கங்கையாறு மிகப் புனித ஆறாகக் கருதப்பட்டதால் மக்கள் கங்கைக்கு நீராடச் சென்றனர் .

அவர்கள் பெயருக்கு முன் ‘ கங்கையாடி ’ , ‘ கங்கைக்குப் போய்வந்த ’ என்ற தொடர்கள் சேர்த்து எழுதப்பட்டன .

சிலர் தங்கள் பெற்றோரின் அஸ்தியைக் கங்கையில் கரைப்பதற்காகச் சிவாச்சாரியார்கள் மூலம் அனுப்பிவைத்தனர் .

சென்றுவந்த சிவாச்சாரியார்கட்குக் கொடைகள் வழங்கப்பட்டன என்பதையும் சில கல்வெட்டுகள் கூறுகின்றன .

தொகுப்புரை

பழங்கால மக்களின் வாழ்வியல் முறையும் , அக்காலச் சமுதாய நிலையும் சிறப்புடன் இருந்தன .

மக்களின் பொறுப்பு , ஊர்க்கூட்டங்களில் மக்கள் ஏற்றுக்கொண்ட பங்கு போன்றவையும் சிறப்பாக உள்ளன .

அக்காலத்தில் சமுதாயத்தில் பெண்களின் நிலை உயர்வாக இருந்தது .

வீரமரணம் அடைந்தோருக்கு நல்ல மரியாதை இருந்தது சமூகத்தில் பல வேறுபாடுகள் இருந்தாலும் சமூக உரிமைகள் இருந்தன .

வழக்குகள் விசாரிக்கப்பட்டுக் குற்றம் செய்தோருக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டன .

அடிமைமுறையும் இருந்தது .

தண்ணீர்ப் பந்தல் , சுமைதாங்கி ஆகியவற்றை நிறுவிப் பிறர்க்கு உதவி புரிந்துள்ளனர் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1 ) நம்பி என்பவர் யார் ?

( விடை )

2 ) வழக்குகளில் மேல்முறையீடு செய்யும் நீதி அமைப்பிற்கு என்ன பெயர் ?

( விடை )

3 ) அடிமைகளை எவ்வாறு விற்றனர் ?

( விடை )

4 ) தண்ணீர்ப் பந்தல் அமைக்கக் காரணம் என்ன ?

( விடை ) 5 ) தவறான கொலைக்குரிய தண்டனை எது ?

வேளாண்மையும் வணிகமும்

பாட முன்னுரை

உலகில் மிகவும் இன்றியமையாத ஒரு தொழில் வேளாண்மை .

வேளாண்மைத் தொழில் இல்லாமல் உலகில் உணவு உற்பத்தி இல்லை .

உணவு இல்லாமல் எவரும் உயிர்வாழ முடியாது .

அதனால்தான் சங்ககாலப் புலவர் குடபுலவியனார்

" உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே "

( புறநானூறு-18 )

என்று பாடினார் .

அவரே ‘ உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே ’ என்றும் பாடியுள்ளார் .

நீர்பாய்ச்சி நிலத்தில் வேளாண்மை செய்ய , பண்டைக் காலம் முதல் மக்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர் .

அதனால் விளைவு பெருகியது .

பெரும்பாலும் வேளாண்மை அடிப்படையாகவே வணிகமும் ஏற்பட்டது .

உற்பத்தியாகும் பொருள்களை மக்களிடம் கொண்டு செலுத்துவோர் வணிகர்களே .

அவர்களிடையே உள்ள பல்வேறு பிரிவுகளையும் , வணிகத்தின் சிறப்பியல்புகளையும் கல்வெட்டுகள் கூறுகின்றன .

வேளாண்மைச் சிறப்பையும் , வணிகப் பெருமையையும் இப்பாடத்தில் நாம் காணலாம் .

நீர்நிலைகள்

ஆறு , அணை , குளம் , ஏரி , ஏந்தல் , வாய்க்கால் , கிணறு ஆகிய நீர் நிலைகளைக் கல்வெட்டுகள் கூறுகின்றன .

நீர்த் தேக்கங்களிலிருந்து குமிழி , தூம்பு , மடை , மதகு , கண் , வாய் , துளை ஆகியவற்றின் வழியாக நீர் பாய்ந்து நிலத்தை அடைகிறது .

வாய் என்பது மதகு .

நீரைக் கொண்டு செல்லுவது ' கால் '

எனப்படும் .

வாயிலிருந்து செல்லும் கால் வாய்க்கால் ஆயிற்று .

6.1.1 நீர்நிலை ஏற்படுத்தல்

' கூவல் ( கிணறு ) குறைவின்றித் தொட்டான் மிகுபுகழ் பெறுவான் ' என்று நீதி நூல் கூறுகிறது .

கூவ நூல் என்ற பழந்தமிழ் நூலொன்று கிணறு தோண்டுவதைப் பற்றிக் கூறுகிறது .

கல்வெட்டொன்று ' பருத்தி வயக்கலும் இவ்வயல்களால் கிணறு இரண்டும் இக்கிணற்றால் விளை நிலமும் ' என்று கூறுகிறது .

குளம் தோண்டுதல் , ஏரி வெட்டுதல் , சுனை குழித்தல் என்பன கல்வெட்டுத் தொடர்கள் .

• நீர் பாய்ச்சு முறைகள்

மழை நீராலும் , ஆற்று நீராலும் , ஊற்று நீராலும் வேளாண்மை நடைபெறும் .

' பாயும் நீர் பாயவும் , வாரும்நீர் வாரவும் , இறைக்கும் நீர் இறைக்கவும் படுவது ' என்ற கல்வெட்டுத் தொடரால் பாய்தல் , வாருதல் , இறைத்தல் மூலம் நீர் நிலத்தில் சேர்வது தெளிவாகிறது .

குற்றேத்தம் , நெட்டேத்தம் என இரு முறைகளைக் கல்வெட்டுக் கூறுகிறது .

அவை நீர் இறைத்துப் பாய்வதும் , தானே பாய்வதும் ஆகும் .

• கிணறுகள்

பழங்காலத்தில் செயற்கையாகத் தோண்டும் கிணறுகள் மிக அரிதாகவே இருந்தன .

‘ இவ்வூரில் கிணறு பெற்ற மனை ’ , ‘ கிணறு பெற்ற தோட்டம் ’ எனக் கல்வெட்டுகள் குறிப்பது இதன் சிறப்பையும் , அருமையையும் உணர்த்தும் .

கூவலூர் , காஞ்சிக் கூவல் , கொல்லன்கூவல் என்ற ஊர்ப் பெயர்கள் அங்குள்ள கிணறுகளால் பெயர் பெற்றன .

ஊர் மக்கள் பயன்படுத்தும் நீர்நிலை ஊருணி எனப்படும் .

• ஆறுகள்

சங்க காலத்தில் சோழநாட்டில் காவிரி , அரிசில் என இரண்டு ஆறுகள் இருந்தன .

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தேவார காலத்தில் மண்ணி , கொள்ளிடம் , கடுவாய் , வெண்ணி போன்ற ஆறுகள் புதியதாகக் குறிக்கப்படுகிறது .

பழங்காவிரி , புதுக்காவிரி போன்ற தொடர்கள் கல்வெட்டில் உள்ளன .

• சோழ மன்னர்களும் பேராறுகளும்

முதல் இராசராசன் ( 985-1014 ) திருச்சிக்கு அருகில் ஓடும் உய்யக்கொண்டான் ஆற்றையும் , கோனேரிராசபுரம் அருகில் ஓடும் கீர்த்திமான் ஆற்றையும் வெட்டினான் .

கடுவாய் எனும் பழம் பெயரையுடைய குடமுருட்டி ஆற்றில் பிரியும் முடிகொண்டான் ஆற்றை முதலாம் இராசேந்திரன் ( 1012-1044 ) உருவாக்கினான் .

காவிரியில் பிரியும் வீரசோழன் ஆற்றை வீரராசேந்திர சோழனும் ( 1063-1070 ) , குற்றாலத்திற்கு அருகே காவிரியில் பிரியும் விக்கிரமன் ஆற்றை விக்கிரம சோழனும் ( 1118-1136 ) வெட்டினர் .

• ஏரிகள்

சோழவாரிதி , வீரநாராயணன் ஏரி ஆகியவைகளை முதல் பராந்தகன் ( 907-953 ) வெட்டினான் .

வீரநாராயணன் ஏரி வீராணம் எனப்படுகிறது . கண்டராதித்தப் பேரேரி , செம்பியன் மாதேவிப் பேரேரி ஆகியவை கண்டராதித்த சோழனால் ( 950-957 ) அமைக்கப்பட்டன .