7

சிற்றிலக்கியங்கள் - 1 (அக இலக்கியங்கள்)

பாடம் - 1

சிற்றிலக்கியம் - ஓர் அறிமுகம்

1.0 பாட முன்னுரை

நண்பர்களே! தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளைப் பற்றிப் பின்வரும் பாடங்களில் அறிய உள்ளோம். அதற்கு முன்னால் சிற்றிலக்கியம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா? இவ்வகையில் “சிற்றிலக்கியம் – ஓர் அறிமுகம்” என்ற இப்பாடப்பகுதி அமைகின்றது. இப்பாடத்தில் சிற்றிலக்கியம் என்றால் என்ன, அதன் வகைகள், பாகுபாடுகள் முதலியன பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளலாமா?

1.1 இலக்கிய வகை

ஒரு மொழியில் காலம்தோறும் பல்வேறு இலக்கியங்கள் தோன்றி வளர்ந்து வருகின்றன. இவ்வாறு, ஒரு மொழியில் காணப்படும் இலக்கியங்களை அவற்றின் அமைப்பு, உள்அடக்கம் அல்லது பொருள், யாப்பு முதலியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்துவர். அவற்றை இலக்கிய வகைகள் எனலாம்.

தமிழ் மொழியிலும் பல்வேறு இலக்கியங்கள் காணப்படுகின்றன. அவற்றைப் பொதுவாகப் பின்வருமாறு வகைப்படுத்திக் காட்டலாம்.

மேற்கண்ட பாகுபாடு மூலம் தமிழ் இலக்கிய வகைகளில் சிற்றிலக்கியம் என்பதும் ஒன்று என்பது தெரிகின்றது. சிற்றிலக்கியம் என்று கூறுவதால் பேரிலக்கியம் என்பது என்ன வென்று உங்கள் மனத்தில் கேள்வி எழுகிறதா? அதற்கான விளக்கத்தைப் பின்னர் பார்க்கலாம்.

1.1.1 சிற்றிலக்கியம் -சொல்லாட்சி நண்பர்களே! இப்போது சிற்றிலக்கியம் என்ற சொல் எவ்வாறு வழக்கத்தில் வந்தது என்று பார்ப்போமா?

முதன் முதலில் சிற்றிலக்கியம் என்பது பிரபந்தம் என்ற சொல்லால் வழங்கப்பட்டு வந்தது. பிரபந்தம் என்பது சமஸ்கிருத மொழிச் சொல் ஆகும். பிரபந்தம் என்ற சொல்லின் பொருள்யாது? நன்கு கட்டப்பட்டது என்பது அதன் பொருள். அதாவது நன்றாக இயற்றப்பட்டது என்பது பொருள்.

எல்லா வகையான இலக்கியங்களும் நன்றாக இயற்றப் பட்டவைதானே? பின் ஏன் குறிப்பிட்ட சில இலக்கிய வகைகளை மட்டும் குறிப்பிடப் பிரபந்தம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது என்ற சிந்தனை எழுகிறதல்லவா? எனவே, குறிப்பிட்ட சில இலக்கிய வகைகளைக் குறிப்பிடச் சிறு பிரபந்தம் என்று குறிப்பிட்டனர். காலப் போக்கில் தனித்தமிழ் ஆட்சி வலுப்பெற்றது. அப்போது சிறு பிரபந்தம் என்பது சிற்றிலக்கியம் என்ற சொல்லால் அழைக்கப்பட்டது.

1.1.2 சிற்றிலக்கியம் – விளக்கம் நண்பர்களே! சிற்றிலக்கியம் என்ற சொல் எவ்வாறு ஏற்பட்டது என்று கண்டோம். இனி, சிற்றிலக்கியம் என்பதன் விளக்கத்தைப் பார்ப்போமா?

காப்பியம் போல் கதைத் தொடர்ச்சி இல்லாமல், தனித்தனி எண்ணங்கள், தனித்தனி உணர்வுகள், தனித்தனிப் பாடல்கள் அமைந்து ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து வருவது சிற்றிலக்கியம் என்பர்.

மேலும் பல அறிஞர்கள் சிற்றிலக்கியம் என்பது குறித்துத் தம் கருத்துகளைக் கூறியுள்ளனர். அவற்றைத் தொகுத்துப் பார்க்கும் போது பின்வரும விளக்கம் கிடைக்கின்றது. சிற்றிலக்கியம் என்பது,

1) இறைவன், மன்னன், வள்ளல், ஞானக்குரவர், சாதாரண மக்கள் முதலியோருள் ஒருவரைத் தலைவராகக் கொண்டு பாடப்படும் இலக்கிய வகை.

2) பாட்டுடைத் தலைவனின் வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டும் பாடுபொருளாகக் கொள்ளும்.

3) அறம், பொருள், இன்பம், வீடு என்பன நான்கு உறுதிப் பொருள்கள். இவற்றுள் ஒன்றைப் பற்றிக்கூறும்.

4) குறைந்த பாடல் எண்ணிக்கையைக் கொண்டு அமையும்.

5) பல்வேறு வகையான யாப்பு அமைப்புகளால் பாடப்படும்.

6) ஒவ்வொரு சிற்றிலக்கியமும் ஒவ்வொரு வகையான யாப்பில் அமைந்திருக்கும்.

இந்த இலக்கணங்களைக் கொண்ட நூல்களே சிற்றிலக்கியங்கள் ஆகும்.

1.1.3 பேரிலக்கியம் – சிற்றிலக்கியம் வேறுபாடு வ.எண் பேரிலக்கியம் சிற்றிலக்கியம்

1) பாட்டுடைத் தலைவனின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் கூறும்.

வாழ்க்கையை முழுமையாகக் கூறும்.

2) பாடல்களின் எண்ணிக்கை பாடல் எண்ணிக்கை குறைவு. ஆகவே குறுகிய அளவு உடையது.

அல்லது பாடல்களின் நீளம் மிகுதி.

3) அறம்,பொருள்,இன்பம்,வீடு ஏதேனும் ஒரு பொருள் பற்றியது.

ஆகிய நான்கு பொருள்

பற்றியது.

1.1.4 சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை பாட்டியல் நூல்கள் சிற்றிலக்கிய வகைகளின் இலக்கணத்தைக் கூறுகின்றன. பாட்டியல் நூல்கள் என்றால் என்ன என்ற வினா உங்களிடையே எழலாம். அதற்கான விளக்கத்தைக் கீழே பார்க்கலாம்.

பாட்டு + இயல் = பாட்டியல். பாட்டு என்றால் செய்யுள் என்று பொருள். இயல் என்றால் இயல்பு என்பது பொருள். எனவே பாட்டின் இயல்புகளை அல்லது இலக்கணங்களை வரையறுத்துக் கூறும் நூல்கள் பாட்டியல் நூல்கள் ஆகும். சிற்றிலக்கிய வகைகளின் இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்கள் கீழே தரப்படுகின்றன.

பன்னிரு பாட்டியல்

வெண்பாப் பாட்டியல்

நவநீதப் பாட்டியல்

பிரபந்த மரபியல்

சிதம்பரப் பாட்டியல்

இலக்கண விளக்கம்

முத்து வீரியம்

பிரபந்த தீபிகை

சுவாமிநாதம்

என்ன நண்பர்களே! பாட்டியல் நூல்களின் பட்டியலைப் பார்த்தீர்களா? அவற்றைப் பற்றி மேலும் சில குறிப்புகளைத் தெரிந்து கொள்ளலாமா?

மேலே குறிப்பிட்ட பாட்டியல் நூல்களில் பிரபந்த மரபியல், பிரபந்த தீபிகை என்ற இரு நூல்களும் சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை 96 என்கின்றன. ஆனால், இப்போது முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றிலக்கிய வகைகள் காணப்படுகின்றன.

1.3 சிற்றிலக்கியங்கள் தோன்றுவதற்குரிய காரணங்கள்

நண்பர்களே! ஓர் இலக்கிய வகை தோன்றுவதற்குப் பல காரணங்கள் சூழல்களாக அமையும். அதைப் போன்றே சிற்றிலக்கிய வகைகள் தோன்றுவதற்கும் பல காரணங்கள் காணப்படுகின்றன. அவற்றைச் சுருக்கமாகக் காண்போமா?

சமுதாயத்தில் பல்வேறு காரணங்களால் மாற்றங்கள் நிகழ்கின்றன. இம்மாற்றங்கள் இலக்கியங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சங்க காலத்தில் மன்னன் தலைமை இடம் பெற்றான். பக்திக் காலத்தில் இறைவன் தலைமை இடம் பெற்றான். அதற்குப் பின்பு இறைவனைத் தலைவனாகக் கொண்டு பல சிற்றிலக்கியங்கள் தோன்றின.

1.3.1 அரசியல் சமூகச் சூழல் இலக்கியம் உருவாவதற்கும் அரசியல் சூழல்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. தமிழ் மொழியில் பெரும்பாலான சிற்றிலக்கியங்கள் கி. பி. பதினான்காம் நூற்றாண்டிற்குப் பின்னால் தோன்றியுள்ளன. அப்போது தமிழகத்தின் பல பகுதிகளைப் பேரரசர்களின் கீழ் இருந்த சிற்றரசர்களும் பாளையக்காரர்களும் ஆண்டு வந்தனர். அவர்கள் புலவர்கள் தம்மைப் புகழ்ந்து பாடவேண்டும் என்று விரும்பினர். மக்களுக்கும் காப்பியம் போன்ற பெரிய இலக்கியங்களைக் கேட்டு மகிழும் மனநிலை இல்லை. எனவே, புலவர்கள் சிற்றிலக்கியங்கள் பலவற்றைப் படைத்தனர்.

1.3.2 சமயச்சூழல் புலவர்கள் மக்களிடையே இறைப்பற்றை ஊட்டவும், சமயச் சிந்தனைகளை வெளிப்படுத்தவும் பல இலக்கியங்களைப் படைத்தனர்.

மேலும், இந்து சமயம், கிறித்தவ சமயம், இசுலாமிய சமயம் ஆகிய சமயங்களுக்கு இடையே போட்டி காணப்பட்டது. இப்போட்டியின் காரணமாகவும் புலவர்கள் பல சிற்றிலக்கியங்களைப் படைத்தனர்.

முற்கூறியன தவிர, புலமைப் போட்டி, புலமை விளையாட்டு, நாட்டுப்புறப் பாடல்களுக்கு இலக்கிய வடிவம் கொடுக்கும் நோக்கம் முதலிய பல காரணங்களும் சிற்றிலக்கியங்களின் தோற்றத்திற்குரிய சூழல்கள் ஆயின.

1.3.3 இலக்கண, இலக்கியச் சூழல் புலவர்கள் தமக்கு முன்னால் தோன்றிய இலக்கண நூல்களிலும், இலக்கிய நூல்களிலும் காணப்படும் சில குறிப்புகளைக் கருக்களாகக் கொண்டு சிற்றிலக்கிய வகைகள் பலவற்றைப் படைக்கும் ஆர்வத்தினால் புதியன படைத்தார்கள். படைப்பாற்றல் திறனுக்கு வடிகாலாய் அமைந்தன புதிய சிற்றிலக்கியங்கள்.

1.4 சிற்றிலக்கியங்களின் சிறப்புகள்

நண்பர்களே! பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என்ற இரு பெரும் பகுப்புகள் உள்ளன. இதனைப் பார்க்கும் போது பேரிலக்கியத்தைவிடச் சிற்றிலக்கியம் இலக்கியத் தகுதி குறைந்ததாக இருக்குமோ என்ற எண்ணம் உங்கள் மனத்தில் தோன்றலாம். அவ்வாறு எண்ணக்கூடாது என்பதற்காகச் சிற்றிலக்கியங்களின் சிறப்புகள் சிலவற்றை இப்போது பார்ப்போம்.

சிற்றிலக்கியக் கூறுகள் சங்க காலம் முதலாகவே காணப்படும் சிறப்பு உடையன.

சான்றாகச் சங்க இலக்கியங்களில் ஒன்றான ஆற்றுப்படை என்ற சிற்றிலக்கிய வகை இடம்பெறுவதைக் காணலாம். சங்க காலத்தில் தோற்றம் பெற்ற இந்தச் சிற்றிலக்கிய வகை இக்காலம் வரையிலும் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருக்கிறது. சான்றுகளாக, காமராசர் உலா, கிருபானந்தவாரியார் பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களைக் காட்டலாம். பெரும்பாலும் சிற்றிலக்கியங்கள் அனைத்தும் சமயங்களைச் சார்ந்தவர்களால் இயற்றப்படுகின்றன. இறைவன் மக்கள், மன்னன், என அனைத்து நிலையினரும் தலைவர்களாக அமைகின்றனர்.

நாட்டுப்புற வடிவங்களைப் பெற்ற சிற்றிலக்கியங்கள் பாமர மக்களையும் கவர்கின்றன.

பேரிலக்கியத்திற்கு இணையான இலக்கியச் சுவையும், இலக்கிய நயமும், கருத்துச் செறிவும் பெற்று இலக்கியத் தரம் மிகுந்தவையாகச் சிற்றிலக்கியங்கள் திகழ்கின்றன.

1.5 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரையிலும் சிற்றிலக்கியம் என்பது குறித்துப் பார்த்தவற்றைத் தொகுத்துக் காண்போமா?

தமிழ் மொழியில் பல இலக்கிய வகைகள் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கதும் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பதுமாகச் சிற்றிலக்கியம் திகழ்கின்றது.

சிற்றிலக்கியம் என்ற பொதுவான இலக்கிய வகையுள் பல இலக்கிய வகைகள் காணப்படுகின்றன. சிற்றிலக்கியங்கள் பல நிலைகளில் பாகுபாடு செய்யப்படுகின்றன. அரசியல், சமய, சமுதாயக் காரணங்களால் சிற்றிலக்கிய வகைகள் பல தோன்றி உள்ளன. அவை இலக்கிய வகைமை பெற்றுள்ளன.

பாடம் - 2

தூது இலக்கியம்

2.0 பாட முன்னுரை

நண்பர்களே! சென்ற பாடத்தில் நாம் சிற்றிலக்கியம் என்பது பற்றிப் பார்த்தோம் அல்லவா? அந்தச் சிற்றிலக்கிய வகையினுள் ஒன்று தூது இலக்கியம். தூது இலக்கியம் அகப்பொருள் சார்புடைய சிற்றிலக்கிய வகை ஆகும். இத்தகைய தூது இலக்கியம் பற்றி இந்தப் பாடத்தில் பார்ப்போமா?

2.1 தூது இலக்கியம்

தூது என்ற சிற்றிலக்கிய வகையைப் பற்றிய பொதுக் கருத்துகளையும் தூது இலக்கியத்தின் இலக்கணத்தையும், தூது இலக்கியத்தின் தோற்றத்தையும் இங்குக் காண்போம்.

• தூது

இருவரிடையே பேச்சு நிகழ்வதற்குச் செய்திகளை அல்லது கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கு உறுதுணையாய் இருப்பவரைத் தூதர் என்று வழங்குவர். காதலர்களிடையே தூது அனுப்பும் பழக்கம் உண்டு. அரசர்களிடையே தூது அனுப்பும் மரபும் உண்டு. இன்றும் அரசுகளுக்கு இடையே கருத்துப் பரிமாற்றங்களுக்காகத் தூதர்கள் நியமிக்கப்படுகின்றனர். நாடுகள் தோறும் பிறநாட்டுத் தூதரகங்கள் உள்ளன. தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் தூது பற்றி இலக்கியங்களும் படைக்கப்பட்டன.

• இலக்கியத்தில் தூது

தூது பற்றிய இலக்கியங்கள் பிற்காலத்திலேயே தோன்றின. அவை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகக் கருதப்பட்டன..

2.1.1 தூதின் இலக்கணம் தூது இலக்கிய வகையின் இலக்கணத்தைப் பின்வரும் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன:

இலக்கண விளக்கம் (874)

பிரபந்த மரபியல் (15)

சிதம்பரப் பாட்டியல், மரபியல் (10)

நவநீதப் பாட்டியல், செய்யுளியல் (20)

முத்து வீரியம், யாப்பு அதிகாரம், ஒழிபியல் (151)

பாட்டியல் நூல்கள் கூறும் இலக்கணம் மூலம் தூது இலக்கியம் என்பது,

1) தூது அனுப்புவோர் ஓர் ஆணாக அல்லது பெண்ணாக இருக்கலாம்.

2) தூது பெறுவோரும் ஓர் ஆண் அல்லது பெண்ணாக இருக்கலாம்.

3) காதல் காரணமாக ஏற்பட்ட பிரிவுத்துயரம், தூது அனுப்புவதன் நோக்கமாக அமையும்.

4) தூது அனுப்புவோர், உயர்திணை மாந்தர் அல்லது ஓர்அஃறிணைப் பொருளிடம் தம் செய்தியைக் கூறி அனுப்புவது.

5) தூது பெறுவோரிடம் இருந்து மாலையை அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருளை வாங்கி வருமாறு வேண்டித் தூது அனுப்புவது.

என்பன தெரிய வருகின்றன.

2.1.2 தூது இலக்கியத்தின் தோற்றம் தமிழ் மொழியில் தோன்றிய முதல் தூது நூல் நெஞ்சு விடு தூது எனும் நூல் ஆகும். இந்த நூலின் ஆசிரியர் உமாபதி சிவாச்சாரியார். அவர் தமது நெஞ்சத்தைத் தம் ஆசிரியருக்குத் தூதாக அனுப்புகிறார். இதில் சைவ சித்தாந்தக் கருத்துகள் நிரம்ப உள்ளன. இந்த நூலின் காலம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டு.

நண்பர்களே! இப்போது நாம் ஒரு செய்தியை மனத்தில் கொள்ளவேண்டும். எந்த ஓர் இலக்கியமும் திடீர் என்று தோன்றிவிடாது. ஓர் இலக்கிய வகை தோன்றுவதற்கு உரிய கூறுகள் அதற்கு முன்னால் உள்ள இலக்கண நூல்களிலும் இலக்கிய நூல்களிலும் காணப்படும் இதனைச் சிறிது விளக்கமாகக் காணலாம்.

• தொல்காப்பியத்தில் தூது

தொல்காப்பியர் தாம் இயற்றிய இலக்கண நூல் ஆகிய தொல்காப்பியத்தில் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே பிரிவு ஏற்படுவதற்கு உரிய காரணங்களில் ஒன்றாகத் தூது செல்வதைக் குறிப்பிடுகின்றார். இந்தச் செய்தியைக் கூறும் தொல்காப்பிய நூற்பா இதோ தரப்படுகிறது.

ஓதல் பகை தூது இவை பிரிவே

(அகத்திணையியல். 27 )

(ஓதல் = கல்வி கற்றல்; பகை = போர் செய்தல்)

தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே தூது செல்பவர்கள் யாவர் என்பதையும் தொல்காப்பியம் கூறுகின்றது. தோழி, தாய், பார்ப்பான், பாங்கன் (தோழன்), பாணன் என்போர் தூது செல்வர் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. இவை போன்று தூது பற்றிய செய்திகள் தொல்காப்பியத்தில் இடம்பெறக் காணலாம்.

• சங்க இலக்கியங்களில் தூது

சங்க இலக்கியங்களிலும் தூது பற்றிய செய்திகள் பல இடம் பெறுகின்றன.

• புலவரின் தூது

சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய புறநானூறு என்ற நூலில் தூது அமைப்பில் உள்ள பாடல் ஒன்றை இங்குக் காண்போமா?

அன்னச் சேவல் அன்னச் சேவல்

ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்

நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்

கோடு கூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்

மையல் மாலையாங் கையறுபு இனையக்

குமரி அம் பெரும்துறை அயிரை மாந்தி

வடமலை பெயர்குவை ஆயின் இடையது

சோழ நன்னாட்டுப் படினே கோழி

உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ

வாயில் விடாது கோயில் புக்கு எம்

பெரும் கோக் கிள்ளி கேட்க இரும் பிசிர்

ஆந்தை அடி உறை எனினே மாண்ட நின்

இன்புறு பேடை அணியத்தன்

நண்புறு நன்கலம் நல்குவன் நினக்கே

(புறநானூறு : 67)

(ஆடுகொள் வென்றி = வெற்றியுள் மிக்க வெற்றி; அடு = கொல்லுதல்; கோடு கூடு மதியம் = இரண்டு பக்கமும் வந்து பொருந்திய சந்திரன்; மையல் = மயக்கம் செய்யும்; கையறுபு இனைய = செயல் சற்று வருந்த; அயிரை = ஒரு வகை மீன்; மாந்தி = மேய்ந்து; பெயர்குவை ஆயின் = போவாயானால்; கோழி = உறையூர் என்ற நகரம்; அடிஉறை = அடிக்கீழ்; நல்குவன் = தருவான்)

இனி, இந்தப் பாடலில் உள்ள செய்தியைப் பார்ப்போமா? இந்தப் பாடல் பிசிராந்தையார் என்ற புலவர் பாடியது. அவர், வானத்தில் பறந்து செல்லும் அன்னச் சேவலைப் (ஆண் அன்னத்தை) பார்த்து அன்னச்சேவலே! அன்னச் சேவலே! என்று அழைக்கிறார். அப்பொழுது மாலைநேரம். எப்படிப்பட்ட மாலை நேரம்? நிலவொளி வீசும். துணையைப் பிரிந்த வாழ்வோரை மயங்கச் செய்யும் மாலை நேரம். அன்னச் சேவலானது தெற்குத் திசையில் உள்ள குமரித் துறையில் உள்ள அயிரை என்ற மீன்களைத் தின்று விட்டுச் செல்கின்றது. அப்போது பிசிர் ஆந்தையார் அந்த அன்னச் சேவலிடம் தன் செய்தியைக் கூறுகின்றார்.

• தூதுவனாக அன்னச் சேவல்

அன்னச் சேவலே! நீ வடதிசையில் உள்ள இமயமலைக்குப் போகின்றாயா? அவ்வாறு போவாய் ஆயின் இமயமலைக்கும் குமரித் துறைக்கும் இடையில் உறையூர் என்ற ஊர் உள்ளது. இந்த ஊர் சோழ நாட்டில் உள்ளது. நீ உறையூருக்குச் சென்றால் அங்கு உள்ள அரண்மனையின் உயர்ந்த மாடத்தில் தங்க வேண்டும்; அங்கு வாயில் காவலர்கள் இருப்பர்.

எனவே, அவர்களுக்கு உணர்த்தாது நீ அரண்மனையின் உள்ளே செல்ல வேண்டும்; அங்கு என் மன்னனாகிய கிள்ளி என்பவன் இருப்பான். அவன் கேட்கும்படி பெரிய பிசிர் என்ற ஊரில் உள்ள ஆந்தையின் அடியில் வாழ்வேன் என்று கூறவேண்டும். அவ்வாறு நீ கூறிய உடன் அவன் மனம் நெகிழ்ந்து உன் பெட்டை அன்னம் அணிவதற்கு நல்ல அணிகலன்களாய்த் தருவான் என்று பிசிர் ஆந்தையார் கூறுகின்றார்.

• திருக்குறளில் தூது

திருவள்ளுவர் திருக்குறளில் தூது என்ற தலைப்பில் ஓர் அதிகாரத்தையே அமைத்துள்ளார். அந்த அதிகாரத்தில் தூதுவரின் இலக்கணம், பண்புகள், தூது சொல்லும் முறை என்பவற்றைப் பத்துக் குறள்களில் விளக்குகின்றார். சான்றாக ஒரு குறளைக் காண்போம்.

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி

நன்றி பயப்ப தாம் தூது

(திருக்குறள் : 685)

(தொகச் சொல்லி = தொகுத்துச் சொல்லி; தூவாத = கொடிய சொற்கள்; நக = மனம் மகிழும்படி; நன்றி = நன்மை)

அதாவது, தூதனின் பண்புகளை இக்குறள் கூறுகின்றது. தூது செல்பவர்கள் தாம் சொல்ல வேண்டியவற்றைக் காரணவகையால் தொகுத்துக் கூறவேண்டும். கொடிய சொற்களை நீக்கிக் கூறவேண்டும். இனிய சொற்களால் கேட்பவர் மனம் மகிழும்படி சொல்ல வேண்டும். இவ்வாறு கூறித் தூது அனுப்புவோருக்கு நன்மை ஏற்படுத்துபவனே தூதன் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

இவ்வாறு, தூது பற்றிய செய்திகள் இலக்கண நூலிலும் இலக்கிய நூல்களிலும் இடம்பெறக் காணலாம். இச்செய்திகளைக் கருக்களாகக் கொண்டே தூது என்ற தனியான ஓர் சிற்றிலக்கிய வகை தோன்றியது எனலாம்.

2.1.3 தூது நூல்கள் கி.பி. 14ஆம் நூற்றாண்டில் தோன்றிய நெஞ்சுவிடு தூது என்ற நூலைத் தொடர்ந்து தமிழ் விடு தூது, அன்னம் விடு தூது, மேகம் விடு தூது, காக்கை விடு தூது, பழையது விடு தூது, மான் விடு தூது, கிள்ளை விடு தூது போன்று நூற்று ஐம்பதற்கும் மேற்பட்ட தூது நூல்கள் தோன்றியுள்ளன.

2.2 அழகர் கிள்ளை விடு தூது

நண்பர்களே! இது வரையிலும் தூது இலக்கியம் என்பது பற்றிய பொதுவான செய்திகளை அறிந்தீர்கள். இனி, அழகர் கிள்ளை விடு தூது என்ற நூலைத் துணையாகக் கொண்டு தூது என்ற சிற்றிலக்கிய வகையின் அமைப்பையும் பாடுபொருள்களையும் காண்போமா?

• பாடுபொருள்

அழகர் கிள்ளை விடு தூது நூல் எதைப் பற்றிப் பேசுகிறது? பாண்டிய நாட்டில் இறைவனாகிய திருமால் எழுந்தருளி உள்ள இடங்களில் ஒன்று திருமாலிரும் சோலை மலை ஆகும். இந்தத் திருமாலிரும் சோலை மலையின் பல பெயர்களில் அழகர் மலை என்பதும் ஒன்று. இந்த மலையில் இருக்கும் இறைவன் ஆகிய திருமாலை அழகர் என்றும் அழைப்பார். கிள்ளை என்றால் கிளி என்று பொருள்.

• கிளியின் தூது

திருமால் இரும் சோலை மலையில் எழுந்து அருளி உள்ள இறைவன் ஆகிய திருமால் தூது பெறும் தலைவன். அவனிடம் காதல் கொண்ட பெண் ஒருத்தி அவனிடம் ஒரு கிளியைத் தூது அனுப்புகின்றாள். இச்செய்தியைக் கூறுவதே அழகர் கிள்ளை விடு தூது நூல் ஆகும்.

• ஆசிரியர்

அழகர் கிள்ளை விடு தூது என்ற நூலின் ஆசிரியர் யார்? பலபட்டடைச் சொக்கநாதப்பிள்ளை. இவர் ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்று கருதுவர். இவரது ஊர் மதுரை. பலபட்டடைக் கணக்கு என்பது ஒரு வகையான வேலை. இவருடைய மரபினர் இந்த வேலையைப் பார்த்தவர்கள். எனவே சொக்கநாதப்பிள்ளை என்ற பெயருக்கு முன் பலபட்டடை என்பது அடைமொழியாக வந்துள்ளது.

அறிவியலின் வளர்ச்சியால் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் இல்லாத காலத்தில் மனிதர்களைத் தூது விடுதல், மேகத்தைத் தூது விடல், பறவைகளைத் தூது விடுதல் என்ற மரபு பழைய தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. இங்குக் கிளியைத் தூது விடுதலை மையமாகக் கொண்டு அழகர் கிள்ளை விடு தூது எனும் நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அழகர் பெருமை கூறப்படுகிறது.

நண்பர்களே! இனி, அழகர்கி ள்ளை விடு தூது நூலின் அமைப்பையும் பாடுபொருளையும், இலக்கிய நயங்களையும் காண்போம்.

2.2.1 அமைப்பும் பொருளும் அழகர் கிள்ளை விடு தூது, ஒரு பெண் ஆணுக்குத் தூது அனுப்புவதாக அமைந்த நூல் ஆகும். இந்த நூலின் அமைப்பையும் பொருளையும் பின்வருமாறு விளக்கலாம்:

• தூதுப் பொருள்

தூது என்ற சிற்றிலக்கிய வகையின் இன்றியமையாத பகுதி இது. தூது செல்லும் பொருளைத் தூது விடு பொருள் என்றும் அழைப்பர். தூது விடு பொருளின் பெருமைகளைக் கூறும் பகுதி புலவர்களின் புலமைத் திறனுக்குச் சான்று கூறும் பகுதியாக அமைகின்றது. மேலும், இப்பகுதி புலவர்களின் கற்பனைத் திறனை வெளிப்படுத்த ஏற்ற பகுதியாகவும் அமைகின்றது. அழகர் கிள்ளை விடு தூது நூலில் தூது விடு பொருளாகிய கிளியின் பெருமைகள் பல நிலைகளில் கூறப்படுகின்றன. அவற்றைப் பார்ப்போமா?

2.2.2 கிளியின் பெயர்ச் சிறப்பு தூது விடும் பெண், தூது விடு பொருளாகிய கிளியைப் பார்க்கின்றாள். அதனை அழைக்கின்றாள். கிளியின் பல்வேறு பெருமைகளைக் கூறிக் கிளியின் பெயர்ச் சிறப்பைக் குறிப்பிடுகிறாள். இலக்கிய நயம் மிக்க இப்பகுதியைப் பார்ப்போமா?

கார்கொண்ட மேனிக் கடவுள் பெயர் கொண்டு

(கண்ணி : 1)

(கார் = மேகம்)

• அரியும் கிளியும்

மேகம் நிறம் கொண்டவன் திருமால். திருமாலின் மற்றும் ஒரு பெயர் அரி. கிளியின் பெயர்களுள் ஒன்று அரி. எனவே, கிளி திருமாலின் பெயரைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கு அரி என்பது திருமால். கிளி என்ற இரண்டு பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றது.

மறம்தரு சீவகனார் மங்கையரில் தத்தை

சிறந்தது நின்பேர் படைத்த சீரே

(கண்ணி : 10)

(மறம் = வீரம், மங்கையர் = மனைவியர், தத்தை = காந்தருவதத்தை, சீர் = சிறப்பு)

• தத்தையும் கிளியும்

தமிழில் உள்ள ஐந்து பெரும் காப்பியங்களில் ஒன்று சீவக சிந்தாமணி ஆகும். இந்தக் காப்பியத்தின் தலைவன் சீவகன். அவனுக்குப் பல மனைவியர் உண்டு. அவர்களுள் முதல் மனைவி காந்தருவதத்தை. இவள் தத்தை என்ற பெயராலும் வழங்கப்படுவாள். சீவகன் மனைவியருள் தத்தை முதல்வி ஆகத் திகழக் காரணம் கிளியின் பெயரைப் பெற்றதால்தான் என்கிறார் புலவர். கிளிக்கு உரிய பல பெயர்களில் ஒன்று தத்தை. இங்கு, தத்தை என்பது சீவகன் மனைவி ஆகிய காந்தருவ தத்தை, கிளி என்ற இரண்டு பொருள்களில் கையாளப்படுகின்றது.

இது போன்று கிளியின் பெயர்கள் பல சுட்டப்படுவதைக் காணலாம்.

மனப் பேதையார் மால் வனம் சுடவே வன்னி

எனப் பேர் படைத்தாய் இயம்பாய் – அனத்தை

நிலவோ என்பார்கள் நெடும்துயர் வேழத்தைக்

கொலவோ அரி வடிவம் கொண்டாய் – சிலை நுதலார்

கொள்ளை விரகக் கொடும்படையை வெல்லவோ

கிள்ளை வடிவு எடுத்தாய் கிற்பாய் நீ – உள்ளம்

மிக உடைய மாதர் விதனம் கெடவோ

சுகவடிவு நீகொண்டாய் சொல்லாய் – தகவு உடைய

தத்தை அடைந்தவர் ஏதத்தை அடையார் என்னும்

வித்தை அடைந்தாய் உனை யார்மெச்ச வல்லார்

(கண்ணிகள் ; 50-54)

எனத் தூது அனுப்பும் தலைவி கிளியைப் புகழ்கின்றாள்.

(பேதையார் = பெண்கள், மால் = மயக்கம், இயம்பாய் = கூறுவாய், அனம் = அன்னப்பறவை, சோறு, வேழம் = யானை, சிலை = வில், நுதலார் = நெற்றியை உடைய பெண்கள், விரகம் = துன்பம், கிற்பாய் = வலிமை உடையாய், தத்தை = ஆபத்தை)

• பெண்கள் மயக்கம்

பெண்கள் காமம் காரணமாக மயக்க நிலை அடைந்துள்ளனர். இந்த மயக்கத்தைக் காடு என்கிறார். இந்தக் காட்டை எரிக்க நெருப்பு வேண்டும். கிளி தூது சென்று பெண்களின் காமத்தால் வரும் மயக்கம் என்ற காட்டை அழிக்கின்றது என்கிறார் புலவர். இங்கு வன்னி என்பது இரண்டு பொருள்களில் கையாளப்படுகின்றது.

வன்னி – நெருப்பு, கிளி

• பெண்களின் காமம்

பெண்கள் காமம் காரணமாக வெள்ளை நிறம் உடைய அன்னப்பறவையைப் பார்க்கும் போது நிலவு என்று எண்ணி வருந்துகின்றனர். தலைவனைப் பிரிந்த பெண்கள் நிலவைக் கண்டு வருந்துவர். இத்தகைய பெண்களின் துன்பம் ஆகிய யானையைக் கொல்ல அரி வடிவம் எடுத்ததாகக் கிளியின் பெயர்ச் சிறப்பு கூறப்படுகிறது. இங்கு அரி என்பது சிங்கம், கிளி என்ற இரு பொருள்களில் கையாளப்படுகிறது.

வில் போன்ற நெற்றியை உடைய பெண்களின் கொடிய படையாகக் காம மயக்கம் உள்ளது. இத்தகைய கொடும் படையை வெல்லக் கிள்ளை வடிவம் எடுத்ததாகக் கிளியைத் தூதுவிடும் தலைவி புகழ்கின்றாள். இங்கு, கிள்ளை என்ற சொல் நான்கு படைகளில் ஒன்றாகிய குதிரை என்ற பொருளில் பயன்படுத்தப்படுகின்றது.

• பெண்களின் துன்பம்

உள்ளம் உடைந்த பெண்களின் துன்பம் நீங்கக் கிளி சுக வடிவு எடுத்ததாகக் கூறப்படுகிறது. சுகம் என்பது இன்பம் என்று பொருள் படும், இங்கு, சுகம் என்பது கிளி, இன்பம் என்ற இரண்டு பொருள்களில் கையாளப்படுவதைக் காணலாம்.

பெருமையுடைய கிளியை அடைந்தவர்கள் துயரத்தை அடைய மாட்டார்கள் என்றும் கிளியின் பெயர்ச் சிறப்பு கூறப்படுகின்றது. தத்தை என்பதன் ஒரு பொருள் கிளி. மற்றொரு பொருள் தத்து (ஆபத்து), தத்தை என்பது துயரத்தை என்று ஆகின்றது.

இவ்வாறு பல இடங்களில் கிளியின் பெயர்ச் சிறப்புகள் கூறப்படுகின்றன.

2.2.3 கிளியின் நிறச் சிறப்பு கிளியின் நிறம் பச்சை, பஞ்சவர்ணக்கிளி என்று ஒரு வகையான கிளியும் உண்டு. இந்தக் கிளிக்கு ஐந்து நிறங்கள். கிளியின் இத்தகைய நிறங்கள் அழகர் கிள்ளை விடு தூது நூலில் சிறப்பித்துக் கூறப்படுகின்றன.

கார் கொண்ட மேனிக் கடவுள் பெயர்கொண்டு

நீர்கொண்ட பாயல் நிறம்கொண்டு

(கண்ணி : 1)

(நீர் = பாற்கடல், பாயல் = படுக்கை)

என்று கிளியின் பச்சை நிறம் சுட்டப்படுகின்றது.

திருமால் பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளான். அவனுடைய படுக்கை ஆல் இலை. ஆல் என்பது ஆலமரம். ஆலமரத்தின் இலையின் நிறம் பச்சை. கிளியின் நிறமும் பச்சை. எனவே, திருமால் ஆகிய இறைவனின் படுக்கை ஆகிய ஆல் இலையின் நிறம் கொண்டது கிளி என்று புகழப்படுகிறது.

எவ்வண்ணமாய்ப் பறக்கும் எப்பறவை ஆயினும்உன்

ஐவண்ணத் துள்ளே அடங்குமே – மெய்வண்ணம்

பார்க்கும் பொழுதில்உனைப் பார்ப்பதிஎன்பார் என்றோ

மூக்குச் சிவந்தாய் மொழிந்திடாய்

(கண்ணிகள் : 7-8)

(வண்ணம் = நிறம், பார்ப்பதி = பார்வதி தேவி, மொழிந்திடாய் = கூறுவாயாக)

பல வகையான பறவைகள் உலகில் உள்ளன. பல நிறங்களை உடைய பறவைகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் உன்னுடைய ஐந்து நிறங்களின் உள்ளே அடங்கி விடும் என்று தலைவி கிளியைப் போற்றுகிறாள். பஞ்சவர்ணக் கிளியின் ஐந்து நிறங்களுக்குள் உலகில் உள்ள அனைத்துப் பறவைகளின் நிறங்களும் அடங்கிவிடும் என்பது சுட்டப்படுகிறது.

கிளியின் மூக்கின் நிறம் சிவப்பு. கிளியின் உடம்பின் நிறம் பச்சை. இறைவி ஆகிய பார்வதி தேவியின் நிறம் பச்சை. எனவே, கிளியைப் பார்ப்பவர்கள் பார்வதி தேவி என்று எண்ணாமல் இருக்கக் கிளியின் மூக்கு நிறம் சிவப்பு ஆக உள்ளது என்று புலவர் கூறுகின்றார்.

2.2.4 கிளியின் பெருமை மன்மதனின் தேர் தென்றல் காற்று ஆகும். இந்தத் தேரை இழுப்பது கிளி என்று கூறப்படும் மரபு உள்ளது. எனவே, கிளி மன்மதனின் வாகனமாகக் கருதப்படுகிறது. கிளியின் பெருமைகளில் ஒன்றாக இச்செய்தி சுட்டப்படுகிறது.

வையம்படைக்கு மதனையும் மேற்கொண்டு இன்பம்

செய்யும் கிளி அரசே செப்பக்கேள்

என்று தூது அனுப்பும் தலைவி கூறுவதாக உள்ளது. மன்மதனின் வாகனம் கிளி என்பது சிலேடை நயம்படக் கூறப்படுகிறது. ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் பிரிந்து நின்று மற்று ஒரு பொருளையும் தருவது சிலேடை எனப்படும். இனி, முன்னால் காட்டிய அடிகளில் இடம்பெறும் சிலேடை நயத்தைக் காண்போம்.

வையம் படைக்கு மதனையும் என்பது

1) ஐ + அம்பு + அடைக்கும் + மதனையும்

2) வையம் + படைக்கும் + மதனையும்

என்று விரியும்.

(ஐ அம்பு = முல்லை, அசோகு நீலம், மா, தாமரை என்னும் ஐந்து மலர் அம்புகள், அடைக்கும் = வைத்திருக்கும், மதன் = மன்மதன், வையம் = உலகம், படைக்கும் மதனையும் = உலகில் உயிர்கள் தோன்றுவதற்குக் காரணமான காதல் உணர்வை ஊட்டும் மன்மதனையும்) என்று இரு பொருள்களைத் தருகின்றது.

இங்கு, மலர் ஆகிய அம்பைக் கொண்டுள்ள மன்மதனைக் கிளி சுமக்கிறது என்ற கருத்து வெளிப்படுகின்றது.

மலைத்திடும் மாரன் ஒற்றை வண்டிலும் இல்லாமல்

செலுத்திய கால் தேரை முழுத் தேராய் – பெலத்து இழுத்துக்

கொண்டு திரி பச்சைக் குதிராய்…..

(கண்ணிகள் : 4-5)

(மலைத்திடும் = போர் செய்யும், மாரன் = மன்மதன், வண்டில் = சக்கரம், கால் = தென்றல் காற்று, பெலத்து = வலிமையுடன்)

மன்மதனின் தேர் தென்றல் காற்று. அதற்குச் சக்கரம் கிடையாது. அந்தத் தேரைக் கிளி இழுத்துச் செல்கின்றது. அதாவது மன்மதனின் வாகனமாகக் கிளி உள்ளது என்பது கூறப்படுகிறது.

2.2.5 கிளியின் பிற சிறப்புகள் தூது அனுப்பும் தலைவி கிளியின் பல்வேறு சிறப்புகளைக் கூறுவதாக அழகர் கிள்ளை விடு தூது நூல் காட்டுகின்றது. சான்றுகளாகச் சிலவற்றைக் காண்போம்.

தள்ளரிய யோகங்கள் சாதியாதே பச்சைப்

பிள்ளையாய் வாழும் பெரியோர் யார்-உள்உணர்ந்த

மாலினைப் போல மகிதலத்தோர் வாட்டம்அறப்

பாலனத்தாலே பசி தீர்ப்பாய்-மேல் இனத்தோர்

நட்டார் எனினும் நடந்துவரும் பூசைதனை

விட்டார் முகத்தில் விழித்திடாய்-வெட்டும் இரு

வாள் அனைய கண்ணார் வளர்க்க வளர்வாய் உறவில்

லாளனைநீ கண்டால் அகன்றிடுவாய்-கேளாய்

இருவடிவு கொண்டமையால் எங்கள் பெரிய

திருவடிகள் வீறுஎல்லாம் சேர்வாய்

(கண்ணிகள் : 18-22)

(யோகங்கள் = மருந்துகள், யோக அப்பியாசங்கள், பச்சைப்பிள்ளை = இளம்பிள்ளை, பச்சை நிறமுடைய கிளி; மகிதலத்தோர் = உலகோர்; வாட்டம் அற = துன்பம் நீங்க; பாலனம் = பால் அன்னம் (பால்சோறு); நட்டார் – நண்பர்; பூசை – பூனை; வில்லாளன் – வில்லை ஏந்தியவன் (வேடன்); இரு வடிவு – இரண்டு நிறங்கள்; பெரிய திருவடிகள் – கருடன்; வீறு – பெருமை)

• கிளியின் தோற்றப் பொலிவு

முற்கூறிய அடிகளிலும் இலக்கிய நயம் சிறக்கக் காணலாம். மனிதர் உடற்பயிற்சி செய்து இளமையுடன் வாழ்வர். ஆனால், கிளி எந்த மருந்தும் உண்ணாது பச்சைப் பிள்ளையாய் உள்ளது. கிளி பால்சோறு உண்டு பசியைத் தீர்க்கின்றது. நண்பர்கள் என்றாலும் பூனையை ஏவி விட்டவர் பக்கத்தில் கிளி விழிக்காது. வில்லை வைத்துள்ள வேடனைக் கண்டால் அகன்று விடும். கிளிக்கு உடம்பில் பச்சை நிறமும் மூக்கில் சிவப்பு நிறமும் உள்ளது. எனவே அது மனிதவடிவமும் பறவை வடிவமும் கொண்ட கருடனின் பெருமைகளை ஒத்த சிறப்பைப் பெற்றுள்ளது.

இவ்வாறு தூது அனுப்பும் தலைவியால் தூதுப் பொருள் ஆகிய கிளியின் பல்வேறு பெருமைகள் போற்றப்படுகின்றன.

2.3 தலைவன் பெருமைகள்

தூது அனுப்பும் தலைவி தூதுப் பொருள் ஆகிய கிளியை அழைத்து அதன் பெருமைகளைப் பலவாறு புகழ்ந்து கூறிய பின் கிளியிடம் தூது பெறும் தலைவன் ஆகிய அழகரின் பல்வேறு பெருமைகளை எடுத்துக் கூறுகின்றாள். அழகரின் பெருமைகளைத் தலைவி எவ்வாறு புகழ்ந்து கூறுகின்றாள் என்று பார்ப்போமா?

2.3.1 தலைவனின் தசாங்கம் தூது அனுப்பும் தலைவி தூது பெறும் தலைவனாகிய அழகரின் தசாங்கங்களைக் கூறிப் புகழ்கின்றாள்.

• தசாங்கம்

நண்பர்களே! தசாங்கம் என்றால் என்ன? தசாங்கம் என்பது ஒரு சிற்றிலக்கிய வகை ஆகும். தசாங்கம் என்பது தசம் + அங்கம் என்று பிரிந்து பொருள் தரும். தசம் என்றால் பத்து என்று பொருள். அங்கம் என்றால் உறுப்பு என்று பொருள். தலைவனின் (அரசனின்) பத்து அங்கங்களைப் புகழ்ந்து பாடுவது தசாங்கம் ஆகும்.

• புகழுக்குரிய உறுப்புகள்

அழகர் கிள்ளை விடு தூது நூலில் இடம்பெறும் தலைவராகிய அழகரின் பத்து உறுப்புகள் புகழப்படுகின்றன. பத்து உறுப்புகள் யாவை? மலை, நதி (ஆறு), நாடு, ஊர், மாலை, யானை, குதிரை, கொடி, முரசு, ஆணை என்பன பத்து உறுப்புகள் ஆகும். இந்தப் பத்து உறுப்புகள் எவ்வாறு புகழப்படுகின்றன என்று பார்ப்போமா?

இன்னியம் ஆர்க்கும் இடபகிரி என்னும் பேர்

மன்னிய சோலை மலையினான்

(கண்ணி : 100)

(இன்னியம் – இசைக்கருவிகள்; ஆர்க்கும் – ஒலிக்கும்; பேர் – பெயர்; மன்னிய – நிலைபெற்ற)

• மலையும் நதியும்

திருமாலின் சோலை மலைக்குக் கேசவர்த்தினி, சிங்காத்திரி, இடபகிரி என்ற பெயர்கள் உண்டு. அவற்றுள் இடபகிரி என்ற பெயர் இந்தக் கண்ணியில் சுட்டப்படுகின்றது.

மாலுடைய தோளின் மணிமார்பின் முத்தாரம்

போலவரு நூபுரநதியான்

(கண்ணி : 103)

என்று திருமாலின் நூபுர நதி கூறப்படுகிறது.

(மணி மார்பு – அழகிய மார்பு; முத்து ஆரம் – முத்துக்களால் கோக்கப்பட்ட மாலை)

திருமாலின் தோள்களிலும் மார்பிலும் முத்துக்களால் கோக்கப்பட்ட மாலைகள் தவழ்கின்றன. ஆனை மலையிலிருந்து இறங்கி வருவது நூபுர நதி அல்லது சிலம்பாறு. இது திருமாலின் நதி என்று வருணிக்கப்படுகிறது.

இங்கு, திருமாலின் மார்புக்கு மலைகளும், முத்து ஆரத்திற்கு நதியும் உவமையாகக் கூறப்படுகின்றன.

• திருமாலின் நாடு

……..புனல் நாடும் தென்னாடும் நாட்டம் ஆம்

அந்நாடு இரண்டில் அருள்சேர் வலக்கண் எனும்

நல்நாடாம் தென்பாண்டி நாட்டினான்

(கண்ணி : 105-106)

(புனல் நாடு – நீர் வளம் மிக்க சோழ நாடு; தென் நாடு – பாண்டிய நாடு; நாட்டம் – கண்) என்று வருணிக்கப்படுகின்றது.

• திருமாலின் கண்கள்

நீர்வளம் மிக்க சோழ நாடும் தென் நாடு ஆகிய பாண்டி நாடும் திருமாலின் இரண்டு கண்கள் ஆகும். இந்த இரண்டு கண்களுள் வலக்கண் ஆகிய பாண்டிநாடு திருமாலின் நாடு ஆகும் என்று கூறப்படுகிறது.

திருமாலின் சீர்பதி என்ற ஊர்,

ஆர்பதியான அமராபதி போலும்

சீர்பதியான திருப்பதியான்

(கண்ணி : 111)

(ஆர்பதி – அருமையான ஊர்; அமராபதி – தேவர் உலகம்)

தேவர் உலகம் போன்ற சீர்பதி என்பது திருமாலின் ஊர் என்று காட்டப்படுகிறது.

• திருமாலின் மாலை

திருமாலின் மாலை துளசிமாலை என்பது

……………………………………………- மார்பு இடத்தில்

எண்ணும்கலன் நிறத்தோடும் இந்திரவில் போல்பசந்த

வண்ணம்தரும் துளப மாலையான்

(கண்ணி : 112)

(மார்பு இடத்தில் – மார்பில்; கலன் – அணிகலன்; பசந்த வண்ணம் – பச்சை நிறம்; துளப மாலை – துளசி மாலை) என்று கூறப்படுகிறது.

• திருமாலின் மார்பு

திருமாலின் மார்பில் பல அணிகலன்கள் காணப்படுகின்றன. அவற்றுள் பச்சைநிறத் துளசி மாலையும் சேர்ந்து உள்ளது. அது பார்ப்பதற்கு இந்திரவில் போன்றுள்ளது என்று உவமை நயம்பட வருணிக்கப்படுகின்றது. திருமால் அத்துவிதானந்தம் என்ற யானையை உடையவன் என்பது,

………………………………………- உள்நின்று

உருக்கும் வயிணவமாம் ஓங்கும் மதம்பொங்கத்

திருக்கொம்புதான் துதிக்கை சேர – நெருக்கிய

பாகம்ஒத்த வைகானதம் பாஞ்சராத் திரம்ஆம்

ஆகமத்தின் ஓசைமணி ஆர்ப்புஎடுப்ப – மோகம்அறு

மட்டும் பிணைக்கும் வடகலையும் தென்கலையும்

கட்டும் புரசைக் கயிறுஆக – விட்டுவிடா

ஆனந்தம்ஆன மலர்த்தாள் கண்ட அத்துவித,

ஆனந்தம் என்றகளி யானையான்

(கண்ணிகள் : 113-116)

(மதம் – சமயம், யானையின் மதம்; திருக்கொம்பு = திருமகள், அழகிய யானைக் கொம்பு; துதிக்கை – துதித்தல், யானையின் துதிக்கை; வைகானதம், பாஞ்சராத்திரம் – வைணவ ஆகமங்களின் பெயர்கள்; வடகலை, தென்கலை – வைணவ சமயத்தின் உட்பொருள்கள்; புரசைக்கயிறு – யானையின் கழுத்தில் கட்டும் கயிறு) என்று காட்டப்படுகின்றது.

• திருமாலின் யானை

திருமால் அத்துவிதானந்தம் என்ற யானையை உடையவன். வைணவ சமயம் என்பது யானையின் மதம். யானையின் அழகிய கொம்புகள் துதிக்கையைச் சேர்ந்துள்ளன. வைகானதம், பாஞ்சராத்திரம் என்ற வைணவ ஆகமங்கள் ஆகிய மணிகளின் ஓசை ஆரவாரிக்கின்றது. வடகலை, தென்கலை ஆகிய வைணவ சமயத்தின் உட்பிரிவுகள் யானையின் கழுத்தில் கட்டும் கயிறுகளாக உள்ளன என்று வருணிக்கப்படுகின்றது.

• திருமாலின் குதிரை

………………………………………- ஆறு அங்கம்

சாற்றியதம் அங்கமாய்க் கொண்டு தாரணியில்

போற்றிய வேதப் புரவியான்

(கண்ணி : 119)

(அங்கம் – உறுப்பு; தாரணி – உலகம்; தார்+அணி = படை அணி; புரவியான் – குதிரையை உடையவன்)

எனத் திருமாலின் குதிரை குறிப்பிடப்படுகிறது.

ஆறு வகையான உறுப்புகளைத் தன் உறுப்புகளாய்க் கொண்டு விளங்கும் வேதம் ஆகிய குதிரையை உடையவன் திருமால் என்று திருமாலின் குதிரை ஆகிய உறுப்பு வருணிக்கப்படுகின்றது.

இதைப் போன்று திருமாலின் கருடக்கொடியும், மும்முரசும், தவ நிலை ஆகியவையும் போற்றப்படுகின்றன..

2.4 புராணக் கதைகள்

தூது அனுப்பும் தலைவி திருமாலின் பெருமைகளைப் புராணக் கதைகளுடன் தொடர்பு படுத்திப் புகழ்கின்றாள். இதற்குச் சில கண்ணிகளைச் சான்றுகளாகக் காட்டலாம்.

அரிவடிவும் ஆய்ப் பின் நரன் வடிவும் ஆகிப்

பெரியதுஒரு தூணில் பிறந்து – கரிய

வரைத்தடம்தோள் அவுணன் வன்காயம் கூட்டி

அரைத்திடும் சேனை அருந்தி – உருத்திரனாய்ப்

பண்ணும் தொழிலைப் பகைத்து நிலக்காப்பும்

உண்ணும் படியெல்லாம் உண்டருளி – வெண்ணெய்உடன்

பூதனை தந்தபால் போதாமலே பசித்து

வேதனையும் பெற்று வெளிநின்று – பாதவத்தைத்

தள்ளுநடை இட்டுத் தவழ்ந்து விளையாடும்

பிள்ளைமை நீங்காத பெற்றியான்

(கண்ணிகள் : 67 – 71)

(அரி – சிங்கம்; நரன் – மனிதன்; அவுணன் – இரணியன்; காயம் – உடம்பு; சேனை – படை; உருத்திரன் – சிவன்; பண்ணும் தொழில் – அழித்தலாகிய தொழில்; பகைத்து = எதிராக; நிலக்காப்பு – உலகைக் காத்தல்; படி – உலகம்; வேதன் – பிரம்மன்; வெளிநின்று = வெளி எங்கும் பரவி; பாதவம் – மருதமரம்)

இங்கு, திருமால் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் செய்வதாக, நூலாசிரியர் குறிப்பிடுகிறார். கண்ணனாக வெண்ணெய் உண்டதையும் பூதனையை மாய்த்ததையும் மருத மரங்களைச் சாய்த்ததையும் சொல்கிறார். அப்படியும் விளையாட்டுத்தனம் போகவில்லையாம்.

2.4.1 இரணியன் கதை இரணியன் என்பவன் ஆணவம் மிகுந்து காணப்பட்டான். அவன் மகன் பிரகலாதன். அவன் எப்போதும் ஓம் நமோ நாராயணா என்று திருமாலைப் புகழ்ந்து கொண்டிருப்பான். இது இரணியனுக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் உன் கடவுள் ஆகிய திருமால் எங்கு இருக்கிறான் என்று கேட்டான்.

அதற்குப் பிரகலாதன் திருமால் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்; என்றான். உடனே இரணியன் வாளால் பக்கத்தில் உள்ள தூணை வெட்டினான். அதில் இருந்து திருமால் நரசிங்க அவதாரம் எடுத்து வந்தார். இரணியன் மார்பைப் பிளந்தார். அவன் ஆணவத்தை அடக்கினார். நரசிங்க வடிவு என்பது சிங்கமுகமும் மனித உடலும் இணைந்த வடிவம் ஆகும். இத்தகைய பெருமை உடையவன் திருமால் என்று போற்றப்படுகிறது.

2.4.2 திருமாலின் வடிவம் திருமால் குறுகிய வடிவம் எடுத்து மாபலி என்ற மன்னனிடம் தமக்கு மூன்று அடி மண் வேண்டும் என்று கேட்டார். மன்னனும் இவன் குறுகிய வடிவம் உடையவன்தானே? என்று எண்ணிச் சம்மதித்தான். திருமால் நீண்ட வடிவம் எடுத்து ஓர் அடியால் நிலத்தை அளந்தார். மற்றோர் அடியால் வானத்தை அளந்தார். மூன்றாம் அடிக்கு இடம் எங்கே என்று கேட்டார். இடம் இல்லை ஆதலால் மன்னனின் தலையில் திருவடியை வைத்தார். இவ்வாறு தன் அடியால் உலகை அளந்த சிறப்பு உடையவன் திருமால் எனப் போற்றப்படுகின்றான்.

2.4.3 பூதனையின் அழிவு பூதனை என்பவள் அரக்கி. அவள் கண்ணனைக் கொல்ல எண்ணினாள். தன் மார்பில் விஷத்தைத் தடவினாள். கண்ணனுக்குப் பால் புகட்டினாள். அவள் வஞ்சத்தை அறிந்த இறைவன் ஆகிய கண்ணன் அவள் மார்பை உறிஞ்சி அவளைக் கொன்றான். இத்தகைய சிறப்புகளை உடையவன் திருமால் என்று போற்றப்படுகின்றான். இவ்வாறு, தூது பெறும் தலைவனாகிய அழகரின் பல்வேறு சிறப்புகள் புராணக் கதைகள் மூலம் போற்றப்படுகின்றன.

2.5 தலைவி திருமாலைக் காணல்

தூது பெறும் தலைவன் ஆகிய அழகர் கோடைத் திருவிழாவிற்காக மதுரையில் உள்ள வைகை ஆற்றுக்கு எழுந்தருளுகின்றார். இதை,

குன்றில் உற்றவெள்ளம் கொழுந்து ஓடி வையைதனில்

சென்று எதிர்த்து நிற்பதுஎனச் சீபதியோர் – அன்று

எதிர்த்துக்

கூடலின்கூடல் எனும் கூடல் திருநகரில்

ஏடு அலர் தாரான் எழுந்துஅருளி -

(கண்ணிகள் : 145-146)

(சீபதியோர் – அழகர் மலையில் உள்ளவர்கள்; கூடலில் – கூடுவதால்; கூடல் – மதுரை)

திருமால் ஆகிய அழகர் மதுரையில் உள்ள வைகை ஆற்றுக்குக் கோடைத் திருவிழாவிற்காக வருகிறார். அப்போது அழகர் மலையில் உள்ளவர்கள் அந்த விழாவைக் காண்பதற்கு வையை ஆற்றுக்கு வருகின்றனர். இது ஓர் அழகிய உவமை மூலம் விளக்கப்படுகிறது. மலையில் இருந்து வெள்ளம் பெருக்கு எடுத்து வையை ஆற்றில் சென்று எதிர்த்து நிற்பது போல் மக்கள் கூடி நிற்கின்றனர் என்று கூறப்படுகிறது.

இந்தக் கண்ணிகளில் இன்னும் ஒரு சுவையான செய்தி உள்ளது. அழகர் மலையில் இருந்து ஏராளமான மக்கள் வந்து கூடி நிற்பதால் கூடல் என்று பெயர் பெற்ற மதுரை நகரம் என்று வருணிக்கப்படுகிறது. மதுரைக்குக் கூடல் என்ற ஒரு பெயரும் உண்டு. அது இவ்வாறு வருணிக்கப்படுகிறது.

2.5.1 தலைவியின் மயக்கம் இவ்வாறு வையை ஆற்றுக்குக் கோடைத் திருவிழாவிற்காக வரும் அழகரைத் தலைவி காண்கிறாள். அவன் அழகில் தலைவி மயங்குகிறாள். இந்நிகழ்ச்சி எப்படிக் கூறப்பெறுகின்றது எனக் காணுங்கள்!

அவனி பரிக்கும் அனந்த ஆழ்வான் மீது

பவனி வரக்கண்டு பணிந்தேன் – அவன் அழகில்

பின்னழகு முன்னழகாம் பேர் அழகைக் காணும்

முன்னே

முன் அழகைக் கண்டேன் நான் மோகித்தேன்

(கண்ணிகள் : 166-167)

(அவனி – உலகம்; பரிக்கும் – காக்கும்; அனந்தாழ்வான் – ஆதிசேடன்; பவனி – உலா)

என்று காட்டப்படுகிறது.

• ஆதிசேடனும் அழகரும்

அழகர் ஆதிசேடன் ஆகிய வாகனத்தின் மேலே ஏறி உலா வருகின்றார். அதைக் கண்டு தூது அனுப்பும் தலைவி அழகரை வணங்குகின்றாள். அழகரின் முன் அழகைக் கண்ட தலைவி அதைப் போன்ற பின் அழகைக் காண்பதற்கு முன்பு, அழகர் மீது மோகம் கொள்கின்றாள். முன்பிலும் பின்பு அழகியவர் என்று திருமாலுக்கு ஒரு பெயர் உண்டு என்பது கருதத்தக்கது ஆகும். கடவுளுக்குக் கூட முன் அழகு, பின் அழகு ஆகியன உண்டாம். ஆம்! இதோ திருமாலின் திருமேனியை அழகு செய்திருக்கும் கோலம் பாருங்கள்! இப்போது விளங்கும். இந்த உருவத்தைச் செதுக்கி வடித்த சிற்பியைப் போற்றுவதா, அழகு புலப்பட ஆடையும் அணியும் பூட்டுவித்து ஒப்பனை செய்த பட்டரைப் போற்றுவதா? இந்தக் கோலம்தான் புலவரை அப்படிப் பாடத் தூண்டியிருக்குமோ? இருக்கலாம்.

2.5.2 தலைவியின் புலம்பல் அழகரின் அழகில் மயங்கிய தலைவி பலவாறு புலம்புகின்றாள். சான்றாக,

செங்கரத்தில் அன்றுதிருடிய வெண்ணெய் போலச்

சங்குஇருக்க என்சங்குதான் கொண்டீர் – கொங்கை

மலைஅருவி நீர்உமக்கு மால்இரும் சோலைத்

தலைஅருவி நீர்தானோ சாற்றீர் – விலைஇலாப்

பொற்கலை ஒன்றுஇருந்தால் போதாதோ

அன்றுபுனை

வற்கலையிலே வெறுப்பு வந்ததோ – நற்கலைதான்

ஆரம்சேர் கொங்கைக்கு அளித்தது அறியீரோ

சோரம் திரும்பத் தொடுத்தீரோ – ஈரம்சேர்

நூலாடையாம் எங்கள்நுண் ஆடைதாம் உமக்குப்

பாலாடை ஆமோ பகருவீர்

(கண்ணிகள் : 172-176)

(செம் – சிவந்த; கரம் – கை; சங்கு – சங்கு வளையல்; கொங்கை – மார்பு; சாற்றீர் – கூறுவீர்; கலை – ஆடை; வற்கலை – மரஉரி; ஆரம் – மாலை; சோரம் – திருட்டுத் தொழில்; பாலாடை – பால் போன்ற ஆடை)

• கிருஷ்ண அவதாரம்

திருமால் கிருஷ்ண அவதாரம் எடுத்தபோது வெண்ணெய் திருடினான். அந்த வெண்ணெய் போன்று வெள்ளை நிறம் உடைய சங்கைக் கையில் வைத்துள்ளான். அத்தகைய சங்கு இருக்கும்போது ஏன் என் கைகளில் உள்ள வளையல்களைக் கவர்ந்தீர் என்று தலைவி கேட்கின்றாள். தலைவனிடம் கொண்ட காதல் காரணமாகத் தலைவியின் உடல் மெலிந்து அவள் கைகளில் உள்ள வளையல்கள் கழன்று விழுகின்றன. இதைத்தான் தலைவி இவ்வாறு கூறுகிறாள். தலைவி பிரிவு காரணமாகக் கண்ணீர் வடிக்கின்றாள். அந்தக் கண்ணீர் அவள் மார்பில் வடிகின்றது. அது மலையில் இருந்து வடியும் அருவி போல் உள்ளது. அழகர் விலைமதிக்க முடியாத பொன் ஆடை அணிந்துள்ளார். இராம அவதாரத்தின் போது அணிந்த மரஉரி ஆடையில் வெறுப்பு ஏற்பட்டுவிட்டதோ, எனவே தான் என்னுடைய ஆடையைக் கவர்ந்தீரோ என வினவுகின்றாள். மேலும், முன்னால் ஆயர் குலப் பெண்களின் ஆடையைத் திருடினீர். அது போன்று இப்பொழுது என் ஆடையைத் திருடுகிறீரோ என்கின்றாள். காமம் காரணமாகத் தலைவியின் ஆடை நழுவி விழுகின்றது. அதை இவ்வாறு சுவைபடக் கூறுகிறார்.

• பிற பொருள்களைத் தூது அனுப்பாமையின் காரணம் கூறுதல்

அழகரைக் கண்டு மயங்கி நிற்கிறாள் தலைவி. அப்போது அழகர் சோலை மலைக்கு மீண்டும் சென்று விடுகிறார். இதனால் தலைவி வருந்துகிறாள். அப்போது கிளியைக் காண்கின்றாள். அதனைப் பலவாறு புகழ்கின்றாள். பின்பு, பிற பொருள்களை ஏன் தூது சென்று வர அனுப்பவில்லை என்று காரணம் கூறுகின்றாள்.

ஈடுபட்ட வெள்ளை எகினத்தைத் தூதுவிட்டால்

சூடுபட்டார் துணிந்து சொல்வாரோ – கூடுகட்டி

அன்பாய் வளர்த்த தாயார்க்குஉதவாக்

கோகிலம்தான்

என்பால் அருள்வைத்து இயம்புமோ – தன்பேர்

அரிஎன்று சொன்னால் அளிஎன்று சொல்லும்

வரிவண்டு பேசி வருமோ – விரகம்செய்

வன்கால திக்கின் மலைவாய் இருக்கின்ற

தென்காலும் என்காதல் செப்புமோ – பொன்காதல்

வண்டுஅலையும் தாரான்முன் மாதரை எல்லாம்

தூற்றும்

கொண்டலையும் தூதுவிடக் கூடுமா – உண்ட

படிஏழும் காக்கும் பரங்கருணையான் முன்

கொடியோரும் போவாரோ கூறாய்

(கண்ணிகள் : 199-204)

(எகினம் = அன்னம்; கோகிலம் – குயில்; இயம்புமோ – கூறுமோ; அரி – திருமால்; விரகம் – துன்பம்; காலதிக்கு – எமன் திசை, அதாவது தெற்குத் திசை; வாய் – இடம்; தென்கால் – தென்றல் காற்று; அலையும் – மொய்க்கும்; தாரான் – மாலையை உடையவன்; மாதரை – பெரிய பூமி; தூற்றும் – தூற்றுகின்ற; கொண்டல் – மேகம்; படி – உலகம்; கொடியோர் – காக்கைகள்)

• தூது அனுப்ப இயலாக் காரணங்கள்

முன்னால் பிரமன் அன்னத்தின் வடிவம் எடுத்துச் சென்று சிவபெருமானைக் காண முயன்றான். முயன்றும் முடியவில்லை. எனவே அன்னத்தைத் தூது விட முடியாது. குயில் காக்கைகளின் கூட்டில் சென்று முட்டை இடும். அதை அறியாத காக்கைகள் அந்த முட்டையை அடைகாத்துக் குஞ்சு பொறிக்கும். பின் வளர்ந்த பிறகுதான் அது தன் குஞ்சு அல்ல என்று அறிந்து கொள்ளும்.குயில் குஞ்சும் அந்தக் காக்கைக் கூட்டை விட்டுப் பறந்துவிடும். எனவேதான், அன்பாய்த் தன்னை வளர்த்த தாயாகிய காக்கைக்கு உதவாத குயிலைத் தூது விட முடியாது என்கிறாள் தலைவி.

வண்டு என்பதைக் குறிக்க அரி, அளி என்ற சொற்களும் பயன்படும். இதனை அடிப்படையாக வைத்துத் தன் பெயரை அரி என்று சொன்னால் அளி என்று மாற்றிக் கூறும் வண்டைத் தூது விட முடியாது. தென்றல் தெற்குத் திசையில் உள்ள மலையிலிருந்து வீசும். தெற்குத் திசை எமனுடையது. எனவே, துன்பம் செய்வாரோடு தொடர்பு உடைய தென்றலைத் தூது விட முடியாது. பெரிய நில உலகம் முழுதும் தூற்றும் மேகத்தைத் தூதுவிட முடியாது என்கிறாள். உலகம் முழுவதையும் காப்பவன் திருமால். அவனிடம் கொடியோர் ஆகிய காக்கைகளைத் தூது விட முடியாது. காக்கைக்குக் கொடியோர் என்ற பெயரும் உண்டு. எனப் பிறபொருள்களைத் தூது அனுப்பாமையின் காரணங்கள் கூறப்படுகின்றன.

2.5.3 தூதுக்குரிய காலமும் நேரமும் எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பதற்கு ஏற்ற சமயம் வேண்டும். அதுபோலத் தூது சொல்வதற்கும் ஏற்ற சமயம் வேண்டும். எனவே, தூது அனுப்பும் தலைவி கிளியிடம் தூது கூற ஏற்ற சமயத்தைக் கூறுகிறாள்.

ஆர்த்த திருவோலக்கமாய் இருப்பன் அப்பொழுதுஉன்

வார்த்தை திருச்செவியில் வாயாது – சேர்த்தியிலே

மெல்ல எழுந்தருளும் வேளைபார்த்து அவ்வேளை

சொல்ல

எழுந்து ஒருவர் சொல்லாமுன் – வெல்லும் மதன்

அம்புஅலர் தூற்ற அடர்ந்து வரும்முன்னே

வம்பலர் தூற்ற வருமுன்னே – கும்பமுனி

வாயில் நுரைஅடங்க வந்தகடல் அடங்கத்

தாயின் உரை அடங்கத் தத்தையே – நீ உரையாய்

(கண்ணிகள் : 230 – 233)

(திருவோலக்கம் – சூழ்ந்து இருப்பவருடன் இருக்கையில் இருத்தல்; சேர்த்தி = பள்ளியறை; வார்த்தை – சொல்; வாயாது – சேராது; மதன் – மன்மதன்; அம்பலர் – அம்பாகிய மலர்; வம்பலர் – அயலவர்; கும்பமுனி – அகத்திய முனிவர்; தத்தையே – கிளியே)

• தூது சொல்லும் நேரம்

அழகர் தம்மைச் சுற்றி இருப்பவர்களுடன் இருக்கையில் அமர்ந்து இருப்பார். கிளியே! அப்போது சென்று நீ தூதுச் செய்தியைக் கூறினால் அது அவர் செவியில் கேட்காது. அவர் பள்ளியறைக்குச் செல்ல எழுந்திருப்பார். அப்போது நீ செல். பிறர் எழுந்து ஏதேனும் செய்தியைக் கூறும் முன்னால் நீ சொல்லி விடு. மன்மதன் என்னை வருத்தும் செயல் செய்யும் முன்பும் அயலார் பழிச்சொல் கூறும் முன்பும், காதலரை வருத்தும் கடல் அலைகள் அடங்கவும், தாயின் ஏச்சுச் சொற்கள் அடங்கவும் நீ தூதுச் செய்தியைக் கூறுவாயாக என்று தலைவி கிளியிடம் வேண்டுகின்றாள்.

இங்கு அகத்திய முனிவர் கடலைத் தன் வயிற்றுள் அடக்கிய செயல் சுட்டப்படுகிறது.

2.5.4 தலைவியின் வேண்டுதல் தலைவி தூதுப் பொருள் ஆகிய கிளியிடம் வேண்டும் செய்திகளைப் பார்ப்போம்.

எம்முடைய மாலை இருபுயத்து மாலைகேள்

உம்முடைய மாலை உதவீரேல் – அம்மை திருக்

கோதையார் சூடிக் கொடுத்து வரவிட்ட

தாதையார் மாலைதனைத் தம்மின் என்பாய் – நீதி

அடுப்பவர் யாவர்க்கும் ஆடித் தியாகம்

கொடுப்பவன் இல்லை என்று கூறான் – தடுக்கும்

அருமாலை நீக்கும் அழகன் புயத்து

மருமாலை நீ வாங்கி வா

(கண்ணிகள் : 236-239)

(மாலை – திருமாலை; மாலை – பூமாலை; புயம் – தோள்; வரவிட்ட – அனுப்பிய; தாதையார் – தாதுக்கள் நிறைந்த; தம்மின் – தாருங்கள்; ஆடித்தியாகம் – ஆடிமாதத்தில் அடிகளுக்கு நடைபெறும் திருவிழா; மாலை – மயக்கத்தை; மரு – மணம் மிக்க)

கிளியே! தலைவன் ஆகிய திருமாலின் இரு தோள்களிலும் கிடக்கும் மாலையைக் கேள். அந்த மாலையைத் தராவிட்டால் திருவில்லிப்புத்தூரில் இருந்து திருவிழாக்காலத்தில் சூடிக்கொடுத்த நாச்சியார் சூடிய மாலையை வாங்கி வா. தம்மை அன்போடு சேர்ந்தவர் யாவர்க்கும் இல்லை என்று கூறாதவன் தலைவன் ஆகிய அழகர். எனவே என் அரிய மயக்கத்தை நீக்கும் அழகரின் மணம் மிக்க மாலையை வாங்கி வா என்று தலைவி வேண்டுகிறாள்.

இவ்வாறு, அழகர் உலா வருவதைக் கண்டு, காதல் கொண்டு மயங்கிய தலைவி அவரிடம் கிளியைத் தூது அனுப்புவதாக அழகர் கிள்ளைவிடு தூது நூல் திகழ்கிறது.

2.6 தொகுப்புரை

நண்பர்களே! தூது இலக்கியம் பற்றி இதுவரையிலும் பார்த்தவற்றைத் தொகுத்துக் காண்போமா?

தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று தூது இலக்கியம். பாட்டியல் நூல்கள் தூது இலக்கியத்தின் இலக்கணம் கூறுகின்றன. தமிழ் மொழியில் தோன்றிய முதல் தூது நூல் நெஞ்சு விடு தூது ஆகும். ஆனாலும், தூது இலக்கியத்தின் கூறுகள் தொல்காப்பியத்திலும், பிற இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. அழகர் கிள்ளை விடு தூது நூலின் துணையுடன் தூது இலக்கியத்தின் அமைப்பையும் பாடுபொருளையும் அறிய முடிகின்றது.

தூது நூல்களில் தூது விடு பொருளின் பெருமைகள் பல கூறப்படுகின்றன. தூது பெறும் தலைவனின் சிறப்புகள் சுவைபடக் கூறப்படுகின்றன. தூது அனுப்பும் தலைவியின் நிலை காட்டப்படுகின்றது. தூது அனுப்புவோர் தூதுப் பொருளிடம் தூது வேண்டும் செய்தி இடம் பெறுகின்றது. தூது நூலின் இலக்கிய நயம் வெளிப்படுகின்றது.

பாடம் -3

குறவஞ்சி இலக்கியம்

3.0 பாட முன்னுரை

தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று குறவஞ்சி ஆகும். இது இலக்கிய நயம் மிகுந்தது. நாடகப் போக்கு உடையது. இசைச் சிறப்பு உடையது. நாட்டுப்புற இலக்கியக் கூறுகளைக் கொண்டது. இனி, குறவஞ்சி இலக்கியம் பற்றிக் காண்போமா?

நண்பர்களே! இந்தப் பாடம் குறவஞ்சி என்ற இலக்கிய வகையின் பொதுத் தன்மைகளை அறிமுகப்படுத்துகிறது. மேலும் திருக்குற்றாலக் குறவஞ்சியைச் சிறப்பு நிலையில் விளக்குகிறது.

3.1 குறவஞ்சி இலக்கியம்

குறவஞ்சி இலக்கியத்தைப் பற்றிய பொதுவான செய்திகளைக் காண்போம்.

• பெயர்க்காரணம்

குறவஞ்சி என்ற பெயர் இந்த இலக்கியவகைக்கு ஏன் வந்தது என்பதைக் காண்போமா? குறவஞ்சி என்ற இந்த இலக்கிய வகையினுள் இடம் பெறும் செய்திகளில், குறத்தி குறி கூறுதல், குறவனுடன் உரையாடுதல் என்பன பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே, இந்த இலக்கிய வகைக்குக் குறவஞ்சி என்ற பெயர் ஏற்பட்டது என்பர்.

இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. குறவஞ்சி என்ற சொல்லுக்குக் குறப்பெண் என்பது பொருள். வஞ்சி என்றால் பெண் என்று பொருள். இந்த இலக்கிய வகையில் குறத்தியின் செயல்களும், குறி வகைகளும் தலைமை இடம் பெறுகின்றன. எனவே, இந்த இலக்கிய வகைக்குக் குறவஞ்சி என்ற பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.

3.1.1 நூல் பெயர் பெறும் முறை நண்பர்களே! இனி, இந்தக் குறவஞ்சி என்ற இலக்கியம் பெயர் பெறும் முறையைப் பார்ப்போமா?

குறவஞ்சி இலக்கியம் பெயர்பெறும் முறையைப் பின்வரும் வரைபடம் மூலம் காட்டலாம்.

இதைச் சிறிது விளக்கமாகக் காண்போமா?

குறவஞ்சி நூல் எந்த இடத்தை அடிப்படையாகக் கொண்டு பாடப்படுகிறதோ அந்த இடத்தின் பெயரை ஒட்டி நூலின் பெயர் அமையும். (எடுத்துக்காட்டு) திருக்குற்றாலக் குறவஞ்சி (திருக்குற்றாலம் என்ற இடம்).

நூலில் இடம்பெறும் பாட்டுடைத் தலைவனின் பெயர் அடிப்படையிலும் நூல் பெயர் பெறும். (எடுத்துக்காட்டு) தியாகேசர் குறவஞ்சி.

இந்த நூலில் பாட்டுடைத்தலைவன் திருவாரூர் இறைவன் ஆகிய தியாகேசர் ஆவார். (தியாகேசர் – சிவன்)

பாடப்படும் இடத்தின் பெயரும் பாட்டுடைத் தலைவனின் பெயரும் இணைந்தும் நூல் பெயர் பெறும் முறை உள்ளது. (எடுத்துக்காட்டு) தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி.

இந்நூல் பாடப்பட்ட இடம் தஞ்சாவூர். இது தஞ்சை என்றும் அழைக்கப்படும். பாட்டுடைத்தலைவன் தஞ்சாவூரில் உள்ள வெள்ளைப் பிள்ளையார்.

நூலினுள் இடம்பெறும் தலைவியின் பெயராலும் சில நூல்கள் பெயர் பெற்று உள்ளன. (எடுத்துக்காட்டு) தமிழரசி குறவஞ்சி

இந்த நூலுள் இடம்பெறும் தலைவியின் பெயர் தமிழரசி.

3.1.2 குறவஞ்சியின் தோற்றம் இனி, குறவஞ்சி என்ற இலக்கிய வகை எவ்வாறு தோன்றியது என்று சுருக்கமாகப் பார்ப்போமா?

• தொல்காப்பியத்தில் குறவஞ்சி

குறவஞ்சி இலக்கிய வகையின் கரு தொல்காப்பியத்தில் காணப்படுகின்றது. களவுக் காலத்தில் தலைவி தலைவனைப் பிரிந்து வாடுகின்றாள். இதனை வளர்ப்புத் தாயும் பெற்ற தாயும் காண்கின்றனர். தலைவி ஏன் வாடிக் காணப்படுகின்றாள் என்பதை அறிய முயல்கின்றனர். எனவே, கட்டு, கழங்கு என்பன மூலம் குறி பார்க்கின்றனர். இதைத் தொல்காப்பியம்

கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும்

ஒட்டிய திறத்தால் செய்திக் கண்ணும்

(தொல்காப்பியம்: பொருள் அதிகாரம்: களவியல்: 24)

என்று கூறுகிறது.

• கட்டு

மேலே கூறியவற்றுள் கட்டு என்றால் என்ன என்று பார்ப்போமா? முறத்தில் அல்லது சுளகில் நெல்லைப் பரப்பி வைப்பர். அந்த நெல்லை எண்ணிக் குறி பார்ப்பர். இது கட்டு எனப்படும்.

• கழங்கு

கழங்கு என்றால் என்ன? இதுவும் ஒருவகையான குறிபார்த்தல் ஆகும். கழங்கு என்பது கழற்சிக்காய். இந்தக் காய்கள் மூலம் முருகனால் நோய் ஏற்பட்டு உள்ளதா என்று அறிவதற்காக வேலன் என்பவன் குறிபார்ப்பான்.

இவற்றால், குறிபார்த்தல் என்ற வழக்கம் தொல்காப்பியத்தில் சுட்டப்படுவதை அறியலாம். இதனைக் கருவாகக் கொண்டு பிற்காலத்தில் குறவஞ்சி இலக்கியம் தோன்றியது எனலாம்.

• இலக்கியங்களில் குறவஞ்சி

குறவஞ்சி இலக்கிய வகையின் கரு பழங்கால இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் காணப்படுகின்றது. அதற்கு ஒரு சான்றைக் காண்போமா?

சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய ஐங்குறுநூற்றில்.

பொய்யா மரபின் ஊர் முதுவேலன்

கழங்குமெய்ப் படுத்துக் கன்னம்தூக்கி

முருகுஎன மொழியும்

(ஐங் : 245)

(பொய்யாத = பொய்க்காத; கழங்கு = கழற்சிக்காய்; மெய்ப்படுத்து = உடம்பில் அணிந்து; கன்னம் = படிமக் கலம்/முகம் பார்க்கும் கண்ணாடி) என்று குறிக்கப்பட்டுள்ளது.

இனி, இந்தப் பாடல் கூறும் கருத்தைப் பார்ப்போம். வேலன் வெறியாடுகின்றான். அவன் தன் உடம்பில் கழற்காயை அணிந்துள்ளான். படிமக் கலத்தைத் தூக்கி வைத்துள்ளான். தலைவியின் துயருக்கு முருகு என்னும் அணங்கின் குறையே காரணம் என்கின்றான். இப்பாடலில் குறி கூறும் செய்தி உள்ளது.

இதைப்போன்று பெருங்கதை போன்ற நூல்களிலும் குறி பார்க்கும் செய்திகள் இடம்பெறுகின்றன.

இத்தகைய செய்திகளைக் கருவாகக் கொண்டு குறவஞ்சி என்ற இலக்கிய வகை தோன்றியது எனலாம்.

நண்பர்களே! குறவஞ்சி என்ற இலக்கிய வகையைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள வேண்டாமா? அதற்குத் திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற நூலைச் சான்றாக எடுத்துக் கொள்வோம். இந்த நூலின் துணையால் குறவஞ்சி என்ற இலக்கிய வகையின் அமைப்பையும் பொருளையும் விளங்கிக் கொள்ளலாம்.

3.2 திருக்குற்றாலக் குறவஞ்சி

குற்றாலம் என்ற இடத்தின் பெயரால் திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற நூல் பெயர் பெற்றது.

குற்றாலம் என்பது தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தின் தென்காசி வட்டாரத்தில் உள்ள ஊர் ஆகும். இந்த இடத்தில் குறும்பலா மரத்தின் அடியில் இறைவன் ஆகிய சிவபெருமான் எழுந்து அருளி உள்ளான். இந்த இறைவனுக்குத் திரிகூடநாதர் என்ற பெயரும் உண்டு. இந்த இறைவனைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல்.

இந்த நூலின் ஆசிரியர் திரிகூடராசப்பக் கவிராயர் ஆவார். இவர் பிறந்த இடம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த மேலகரம் என்பது ஆகும். இந்த நூலில் 128 பாடல்கள் உள்ளன.

இனி இந்த நூலின் துணையால் குறவஞ்சி இலக்கியம் பற்றி விரிவாகக் காணலாம்.

3.2.1 அமைப்பும் பொருளும் பொதுவாகக் குறவஞ்சி இலக்கியவகையின் அமைப்பையும் பொருளையும் பின்வரும் வரைபடம் விளக்கும்.

3.2.2 கடவுள் வணக்கம் ஒரு நூலை இயற்றும் புலவர் அந்த நூல் இனிது முடிவதற்காகக் கடவுளை வேண்டி வாழ்த்துவது மரபு ஆகும். இந்த மரபுக்கு ஏற்பத் திரிகூடராசப்பக் கவிராயரும் நூலின் தொடக்கத்தில் கடவுள் வணக்கம் பாடுகின்றார்.

நூலின் தொடக்கத்தில் விநாயகர், முருகன், திரிகூடநாதர், குழல்வாய் மொழி அம்மை, திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அகத்தியர், மாணிக்கவாசகர், கலைமகள் (சரசுவதி) ஆகியோரை வணங்கி நூலைத் தொடங்குகின்றார். சான்றாக ஒரு பாடலைப் பார்ப்போமா?

பூமலி இதழி மாலை புனைந்த குற்றாலத்து ஈசர்

கோமலர்ப் பாதம் போற்றிக் குறவஞ்சித் தமிழைப் பாட

மாமதத்து அருவி பாயும் மலை என வளர்ந்த மேனிக்

காமலி தருப்போல் ஐந்து கை வலான் காவலானே

(திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல் 1)

(மலி = நிறைந்த; இதழி = கொன்றைமலர்; கா = கற்பகச்சோலை; தரு = கற்பகமரம்; வலான் = வல்லவன்)

திருக்குற்றால நாதர் கொன்றை மலர் மாலையை அணிந்துள்ளார். அவருடைய தாமரை மலர் போன்ற பாதங்களை வணங்குகின்றேன். குறவஞ்சி என்ற இந்த நூலைப் பாட, பிள்ளையார்ப் பெருமானை வணங்குகின்றேன். எத்தகைய பிள்ளையார்ப் பெருமான்? மதமாகிய அருவி பொழிகின்ற மலைபோன்ற உடம்பை உடையவர். கற்பக மரம் போல் கேட்டவற்றைக் கொடுப்பவர். இத்தகைய விநாயகரை வணங்குகின்றேன் என்று புலவர் பாடுகின்றார்.

இப்பாடலில் பிள்ளையாருடைய உடம்புக்கு மலை உவமையாகக் கூறப்படுகிறது. கேட்ட வரங்களை அளிப்பவர் என்பதற்குக் கற்பகத்தருவை உவமை கூறுகின்றார். தாம் இயற்றும் குறவஞ்சி நூலைக் குறவஞ்சித் தமிழ் என்கிறார்.

3.2.3 அவை அடக்கம் நூலை இயற்றும் புலவர்கள் தம் அடக்கம் உடைமையை வெளிப்படுத்த அவை அடக்கம் பாடுதல் மரபு ஆகும். இதற்கு ஏற்பத் திரிகூட ராசப்பக் கவிராயரும் அவை அடக்கம் பாடுகிறார். அந்தப் பாடல் இதோ.

தாரினை விருப்பம் ஆகத் தலைதனில் முடிக்கும் தோறும்

நாரினைப் பொல்லாது என்றே ஞாலத்தார் தள்ளுவாரோ

சீரிய தமிழ் மாலைக்குள் செல்வர் குற்றாலத்து ஈசர்

பேரினால் எனது சொல்லைப் பெரியவர் தள்ளார் தாமே

(பாடல் 9)

(தார் = மாலை; முடிக்கும் தோறும் = அணியும்போது எல்லாம்; ஞாலத்தார் = உலகில் உள்ளவர்; தள்ளார் = தள்ளமாட்டார்)

இந்தப் பாடலின் பொருளைப் பார்ப்போம். உலகில் உள்ள மக்கள் மலர் மாலையைத் தலையில் சூடுவர். அப்போது அந்த மாலை தொடுக்கப்பட்டு உள்ள வாழை நாரைக் கீழே எறிய மாட்டார்கள். அதுபோல நான் இயற்றும் இந்தக் குற்றாலக் குறவஞ்சி என்ற நூலில் குற்றால நாதர் ஆகிய இறைவனின் பெயர் உள்ளது. எனவே என் பாடல்களை அறிஞர்கள் தள்ளாமல் ஏற்றுக்கொள்வர் என்கிறார்.

இங்கு, குற்றாலக் குறவஞ்சி என்ற நூலுக்கு மாலை உவமை ஆகிறது. மலருக்குச் சிவபெருமான் உவமை ஆகிறார். நாருக்குச் சொல் உவமை ஆகிறது.

3.3 திருக்குற்றால நாதர் உலா

குறவஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவன் ஆகிய திருக்குற்றால நாதர் என்னும் இறைவன் உலா வருகின்றார். தலைவன் உலா வருவதைக் கட்டியக்காரன் அறிவிக்கிறான். மக்கள் திரண்டு வந்து பார்க்கிறார்கள்.

3.3.1 கட்டியக்காரனின் அறிவிப்பு கட்டியக்காரன், தலைவன் உலா வரும் செய்தியைக் கூறுகின்றான். சான்றாகச் சில அடிகளைக் காண்போமா?

பவனி வந்தனரே – மழவிடைப் பவனி வந்தனரே

அவனி போற்றிய குறும் பலா உறை

மவுனநாயகர் எவனநாயகர்

சிவனும் ஆய் அரிஅயனும் ஆனவர்

கவனமால் விடை அதனில் ஏறியே

(பாடல் 12: 1 – 2)

(பவனி = உலா; மழவிடை = இளமை பொருந்திய எருது; அவனி = உலகம்; உறை = தங்கி உள்ள; மவுன நாயகர் = சத்துவகுணத்தலைவர்; எவன நாயகர் = என்றும் இளமை ஆனவர்; கவனம் = விரைந்து செல்லும்; மால் = பெரிய; விடை = காளை)

திருக்குற்றாலத்து இறைவன் உலா வருகின்றார். உலக மக்கள் யாவராலும் வணங்கத்தக்கவர்; குறும் பலா மரத்தின் அடியில் எழுந்து அருளி உள்ளவர்; என்றும் இளமை ஆனவர்; சிவன் வடிவம் ஆனவர்; அதனுடன் திருமால், பிரம்மன் ஆகிய கடவுளர்களின் உருவத்தையும் கொண்டவர்; இத்தகைய சிறப்புடைய இறைவன் உலா வருகின்றார். தன் வாகனம் ஆகிய காளை மீது ஏறி உலா வருகின்றார் என்று கட்டியக்காரன் கூறுகின்றான். நண்பர்களே! இந்தப் பாடல் அடிகள் இசை உடன் பாடி மகிழ ஏற்றனவாக உள்ளன அல்லவா? இசையுடன் பாடிப் பாருங்கள்.

3.3.2 உலாவைக் காணவரும் பெண்கள் தலைவனாகிய குற்றால நாதர் உலா வருகின்றார் என்பதைப் பெண்கள் அறிகின்றனர். உலா வரும் தலைவனைக் காண ஓடோடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி திருக்குற்றாலக் குறவஞ்சியில் நகைச் சுவையாக விவரிக்கப்படுகிறது. சான்றாக ஒரு பாடலைப் பார்ப்போமா?

ஒருகை வளை பூண்ட பெண்கள் ஒரு கைவளை

பூணமறந்து

ஓடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார்

இருதனத்து ரவிக்கைதனை அரையில் உடை

தொடுவார்பின்

இந்தஉடை ரவிக்கைஎனச் சந்தமுலைக்கு இடுவார்

கருதும்மனம் புறம் போக ஒரு கண்ணுக்கு மை எடுத்த

கையுமாய் ஒரு கண்இட்ட மையுமாய் வருவார்

(பாடல் 16: 5 – 7)

என்று கூறுகின்றார்.

(வளை = வளையல்; பூண்ட = அணிந்த; கவிழ்வார் = தலை கவிழ்வார்; ரவிக்கை = மேல் ஆடை (கச்சு); அரை = இடுப்பு; புறம் = உலா வரும் காட்சியின் பக்கம்; எடுத்த = இட்ட)

ஒரு கையில் வளையல்களை அணிகின்றனர். மற்றொரு கையில் வளையல் அணிய மறந்து ஓடுகின்றனனர். தாம் ஓடுவதைப் பார்த்துச் சிலர் சிரிக்கின்றனர். எனவே தலை கவிழ்கின்றனர். மார்புகளில் அணிய வேண்டிய ஆடையை இடையில் உடுக்கின்றனர். பின் இது மேல் ஆடை என உணர்கின்றனர். எனவே, அதை மார்புகளில் அணிகின்றனர். ஒரு கண்ணுக்கு மை இட்டுள்ளனர். மற்றொரு கண்ணுக்கு இடவேண்டிய மையைக் கையில் வைத்துள்ளனர் என்று கூறுகிறார். இவை உலாவைக் காணவரும் பெண்களின் விரைவையும் ஆசையையும் விளக்குகின்றன.

• இறைவழிபாடு

இது வயது வேறுபாடின்றி இறைவன் பேரழகில் ஈடுபடும் பெண்களின் பக்தி ஈடுபாட்டினைச் சுட்டுகின்றது.

3.3.3 உலாவைக் காணும் பெண்கள் இவ்வாறு, குற்றால நாதர் உலா வருகின்றார். உலாவைக் காண வந்த பெண்கள் உலாவரும் தலைவனைப் பார்க்கின்றனர். அவன் அழகில் மயங்கிய பெண்கள் இந்தத் தலைவன் யாராக இருக்கும் என ஐயம் கொள்கின்றனர். இறுதியில் தலைவன் திரிகூடராசனே என்று துணிகின்றனர். இச்செய்திகளைக் கூறும் இலக்கியச் சுவை மிகுந்த பாடல் அடிகளைப் பார்ப்போமா?

ஒரு மானைப் பிடித்துவந்த பெருமானைத் தொடர்ந்துவரும்

ஒரு கோடி மான்கள் போல் வரு கோடி மடவார்

புரி நூலின் மார்பன் இவன் அயன்என்பாற் அயன்ஆகில்

பொங்கு அரவம் ஏது தனிச் சங்கம் ஏது என்பார்

விரிகருணை மால் என்பார் மால் ஆகில் விழியின்மேல்

விழி உண்டோ முடியின்மேல் முடிஉண்டோ என்பார்

இருபாலும் நான்முகனும் திருமாலும் வருகைபோல்

ஈசன் இவன் திரிகூடராசனே என்பார்

(பாடல் 15 : 1 – 4)

(பெருமான் = சிவபெருமான்; மடவார் = பெண்கள்; புரி நூல் = முப்புரி நூல்; அயன் = பிரம்மன்; அரவம் = பாம்பு; சங்கம் = சங்கக் குண்டலம்; விரி = பரந்த; மால் = திருமால்; விழி = நெற்றிக்கண்; முடி = தலை, சடை, கூந்தல்; இருபாலும் – இரண்டு பக்கமும்; நான்முகன் – பிரம்மன்)

உலாவைக் காண வந்த பெண்கள் தலைவனைப் பார்க்கின்றனர். இவன் பிரம்மனாக இருக்குமோ என எண்ணுகின்றனர். பிரம்மன் ஆனால் அவனுக்குப் பாம்பு ஆகிய அணிகலன் ஏது? சங்குக் குழை ஆகிய காது அணி ஏது? எனவே, இவன் பிரம்மன் அல்ல. திருமாலாக இருக்குமோ? திருமால் ஆனால் அவனுக்கு நெற்றிக்கண் ஏது? தலையில் சடைமுடி ஏது? எனவே திருமால் அல்ல. மேலும், தலைவனின் இரண்டு பக்கமும் பிரம்மனும் திருமாலும் வருகின்றனரே. எனவே, இவன் திரிகூடராசன் ஆகிய இறைவனே என்று ஐயம் நீங்குகின்றனர். பெண்களின் இந்த இயல்பான பேச்சுப் படிப்பவர் மனத்தை ஈர்த்து ஆசிரியரின் திறனை எண்ணி இன்புறச் செய்கிறது.

3.4 வசந்த வல்லி

குற்றாலக் குறவஞ்சி நூலின் தலைவியின் பெயர் வசந்த வல்லி. அவள் குற்றால நாதர் உலாவரும் காட்சியைக் காண வருகின்றாள். அப்போது அவளைப் பற்றிய செய்திகள் நூலில் இடம்பெறுகின்றன. அவற்றைக் காண்போமா?

• வசந்த வல்லியின் தோற்றம்

உலாவைக் காணவரும் வசந்தவல்லியின் தோற்றம் காட்டப்படுகிறது. அந்தப் பாடல் இதோ.

பொன் அணித் திலகம் தீட்டிப்

பூமலர் மாலை சூட்டி வன்ன மோகினியைக் காட்டி

வசந்த மோகினி வந்தாளே

(பாடல் 16: 3 – 4)

என்கிறார்.

(திலகம் = பொட்டு; தீட்டி = இட்டு; வன்ன = அழகிய; மோகினி = மோகினிப் பெண் வடிவம்; காட்டி = தோற்றம் கொண்டு)

நெற்றியில் நல்ல அழகு உடைய திலகம் இட்டு உள்ளாள். தலையில் பூமாலை சூடியுள்ளாள். அழகிய மோகினிப் பெண் போல் தோற்றம் கொண்டு உள்ளாள். இத்தகைய வசந்த வல்லி என்ற பெண் உலாவைக் காண வருகின்றாள்.

3.4.1 வசந்த வல்லியின் பந்தாட்டம் தலைவியாகிய வசந்த வல்லி தலைவன் உலா வரும்போது பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். பந்து விளையாடும் காட்சி மிக அழகாக வருணிக்கப்படுகிறது. ஓசை நயம் மிக்க அந்தப் பாடலைப் பார்ப்போமா?

பொங்கு கனம் குழை மண்டிய கெண்டை

புரண்டு புரண்டு ஆடக் குழல்

மங்குலில் வண்டு கலைந்தது கண்டு

மதன் சிலை வண்டு ஓட இனி

இங்கு இது கண்டு உலகு என்படும் என்படும்

என்று இடை திண்டாட மலர்ப்

பங்கயமங்கை வசந்த சவுந்தரி

பந்து பயின்றனளே

(பாடல் 19: 2)

(பொங்கு = மிக்க; கனம் = கனத்த; குழை = காது அணி; மண்டிய = நெருங்கிய; கெண்டை = கெண்டைமீன்; மங்குல் = மேகம்; மதன் = மன்மதன்; சிலை = வில்; என்படும் = என்ன பாடுபடும்; பங்கய மங்கை = தாமரை மலரில் இருக்கும் திருமகள்; பயின்றனளே = விளையாடினளே)

வசந்த வல்லி காதுகளில் குழை என்ற அணிகலனை அணிந்து உள்ளாள். அது அவளுடைய கெண்டை மீன் போன்ற கண்களின் மீது புரண்டு புரண்டு ஆடுகின்றது. மேகம் போன்ற கூந்தல். அதிலிருந்து வண்டுகள் கலைந்து செல்கின்றன. அது கண்டு மன்மதனின் வில்லில் இருந்து நாண் ஆகிய வண்டுகளும் பறந்து போகின்றன. இதைப் பார்த்து உலகம் என்ன பாடுபடுமோ என்று இவள் இடை துவண்டு துவண்டு நடுங்குகின்றது. இவ்வாறு திருமகளைப் போன்ற வசந்த வல்லி பந்து விளையாடுகிறாள் என்கிறார் புலவர். நீங்கள் இந்தப் பாடலை மீண்டும் ஒருமுறைப் படித்துப் பாருங்களேன்!

இந்தப் பாடல் அடிகளில் பந்து மேலும் கீழும் சென்று வருவது போன்ற ஓசை கேட்கிறதா? சொற்களின் ஓசைநயம் அந்த உணர்வை உங்களுக்குத் தர வேண்டும். தருகிறதா என்று பாருங்கள்! தந்தால் எழுதிய ஆசிரியருக்கு அது வெற்றி இலக்கியத்தைச் சுவைக்கத் தெரிந்துள்ளது என்பதால் படிக்கின்ற உங்களுக்கும் அது வெற்றிதான்!! வசந்த வல்லியின் கண்களுக்குக் கெண்டை மீன்களும் கூந்தலுக்கு மேகமும் ஒப்புமை கூறப்படுகின்றன.

3.4.2 வசந்த வல்லியின் மயக்கம் உலா வரும் தலைவராகிய திரிகூடநாதரைத் தலைவி காண்கிறாள். காதல் கொள்கிறாள். அவர் அழகில் மயங்குகிறாள். இந்த நிகழ்ச்சியைக் காட்டும் ஒரு பாடலைப் பார்ப்போமா? அவள் இதுவரை உணராத உணர்வை அடைகிறாள். இறைவன் மீது கொண்ட காதலால் ஏங்கித் தவிக்கிறாள். அவளுடைய உணர்வுகளைச் சொற்களிலே சித்திரமாகத் தீட்டுகிறார் திரிகூட ராசப்பக் கவிராயர்.

வாகனைக் கண்டு உருகுது ஐயோ – ஒரு

மயக்கம் அதாய் வருகுது ஐயோ

மோகம் என்பது இதுதானோ – இதை

முன்னமே நான் அறிவேனோ?

ஆகம் எல்லாம் பசந்தேனே – பெற்ற

அன்னை சொல்லும் கசந்தேனே

தாகம் அன்றிப் பூணேனே – கையில்

சரிவளையும் காணேனே

(பாடல் 26:2)

(வாகன் = வாகான உடலினன்; ஆகம் – உடம்பு; பசந்தேன் = பசலை நிறம் கொண்டேன்; கசந்தேன் = வெறுத்தேன்; தாகம் = ஆசை)

தலைவனைக் கண்டதும் என் மனம் உருகுகின்றது. அதனால் மயக்கம் ஏற்படுகின்றது. மோகம் என்பது இதுதானோ? இதை நான் இதற்கு முன்னால் அறியவில்லை. உடம்பு முழுதும் பசலை நோய் ஏற்பட்டுள்ளது. பெற்ற தாய் கூறுகின்ற சொல்லும் கசப்பாய் உள்ளது. இவரிடம் எனக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. என் கைகளில் அணிந்துள்ள வளையல்களைக் காணவில்லையே என்று தலைவி மயங்கிக் கூறுவதாகக் காட்டப்படுகிறது. இப்பாடலில் ஏக்கம் நிறைந்த தலைவியின் குரல் வெளிப்படுவதை உணர முடிகிறது அல்லவா?

3.4.3 வசந்தவல்லி கூடல் இழைத்தல் நண்பர்களே! கூடல் இழைத்தல் என்றால் என்ன?

தலைவனிடம் காதல் கொண்ட பெண் தரையில் மணலைப் பரப்புவாள். கண்களை மூடிக் கொள்வாள். மற்ற விரல்களை மடக்கிக் கொண்டு சுட்டுவிரலால் மணலில் வட்டமாக வரைவாள். அப்போது சுட்டுவிரல் தொடங்கிய இடத்தில் வந்து முடிந்தால் தலைவி நினைத்தது நடக்கும் என்று அறிவாள். சரியாகப் பொருந்தாவிட்டால் தலைவி நினைத்தது நடக்காது என்று அறிவாள். இதுவே கூடல் இழைத்தல் ஆகும்.

• தலைவி தோழியைத் தூது அனுப்புதல்

தலைவன் ஆகிய திரிகூடராசரின் அழகில் மயங்கிய தலைவியாகிய வசந்தவல்லி தலைவனிடம் தோழியைத் தூது அனுப்புகிறாள். இந்த நிகழ்ச்சி இடம்பெறும் பாடல்களில் ஓர் அடியைக் காண்போம்.

தூது நீ சொல்லி வாராய் பெண்ணே

குற்றாலர் முன்போய்த் தூது நீ சொல்லி வாராய்

(பாடல் 43:1)

என்று தலைவி தோழியிடம் தூது சென்று வருமாறு வேண்டுகிறாள்.

தோழி தலைவனிடம் தூது செல்கிறாள். தூது சென்ற தோழி வருவதற்கு முன்னால் வசந்த வல்லி கூடல் இழைத்துப் பார்க்கிறாள்.

3.5 குறத்தி

இனி திருக்குற்றாலக் குறவஞ்சியில் இடம்பெறும் குறத்தியைப் பற்றிய செய்திகளைக் காண்போமா?

தலைவியாகிய வசந்த வல்லி கூடல் இழைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அப்போது குறி சொல்லும் குறத்தி வருகின்றாள். குறத்தியின் வருகையைக் கூறும் பாடல் அடிகள் இதோ.

கூடல் வளைக்கரம் அசைய மாத்திரைக்கோல்

ஏந்தி மணிக் கூடை தாங்கி

மாடமறுகு ஊடு திரிகூட மலைக்

குறவஞ்சி வருகின்றாளே

(பாடல் 48: 2 – 4)

(கூடல் = ஒன்று சேர்ந்த; வளைக்கரம் = வளையல் அணிந்த கை; தாங்கி = ஏந்திக்கொண்டு; மறுகு = தெரு; ஊடு = நடுவில்)

குறத்தி வருகின்றாள். வரும்போது வளையல்கள் அணிந்த அவள் கைகள் அசைகின்றன. கையில் மாத்திரைக்கோலை ஏந்தி உள்ளாள். கூடையையும் கையில் வைத்துள்ளாள். இவ்வாறு குறத்தி திருக்குற்றால நகரின் தெருவில் வருகின்றாள். குறத்தி குற்றாலநாதரின் பெருமைகளைப் பாடிக் கொண்டு வருவதைக் கண்டதும் வசந்தவல்லி ஏன் மகிழ்கிறாள்? நண்பர்களே, உங்களால் அறிந்து கொள்ள முடிகிறதா? ஆம், தான் விரும்பிய தலைவனின் புகழையும் அவன் மலையையும் பாடி வருவதால் மகிழ்கிறாள். மீண்டும் தன் தலைவனின் புகழைக் கேட்க அவள் உள்ளம் ஏங்குகிறது. அதனால் குறத்தியின் வருகை அவளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

3.5.1 குறத்தி தன் மலைவளம் கூறல் குற்றால நகரின் தெருவில் வரும் குறத்தி குற்றாலநாதரின் பெருமைகளைப் பாடிக்கொண்டு வருகின்றாள். அவளை வசந்த வல்லி பார்க்கின்றாள். மகிழ்ச்சியோடு குறத்தியை அழைக்கின்றாள். குறத்தியிடம் அவள் மலை வளத்தைக் கூறுமாறு கேட்கின்றாள். குறத்தி குற்றால மலையாகிய தன் மலையின் வளங்களைக் கூறுகின்றாள். ஓசை நயம் மிகுந்த அப்பாடல்களில் ஒரு பாடலைப் பார்ப்போமா?

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார்

கமன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்

தேன் அருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்

செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்

குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே

(பாடல் 54: 1)

(வானரம் = ஆண்குரங்கு; மந்தி = பெண்குரங்கு; வான் கவிகள் = வான் உலகில் வாழும் தேவர்கள்; கானவர் = வேடர்; விழி எறிந்து = கண்களால் ஏறெடுத்துப் பார்த்து; கமனசித்தர் = வானின் வழியாகச் செல்லும் சித்தர்கள்; காயசித்தி = காட்டு மூலிகைகள்; விளைப்பர் = வளர்ப்பார்கள்; திரை = அலை; பரி = குதிரை; கால் = சக்கரம்; கூனல் = வளைந்த)

ஆண்குரங்குகள் பலவகையான பழங்களைப் பறித்துப் பெண் குரங்குகளுக்குக் கொடுத்துத் தழுவுகின்றன. அவற்றுள் சில பழங்களைப் பெண் குரங்குகள் சிதறுகின்றன. அந்தப் பழங்களைத் தேவர்கள் இரந்து கேட்கின்றனர். வேடர்கள் தேவர்களைத் தம் கண்களால் ஏறெடுத்துப் பார்த்து அழைக்கின்றனர். வானத்தில் செல்ல வல்ல சித்தர்கள் மூலிகைகளை வளர்க்கின்றனர். மலையிலுள்ள அருவியின் அலைகள் எழுந்து வானத்தில் வழிந்து ஓடுகின்றன. இதனால் சூரியனின் குதிரைகளுடைய கால்களும் தேர்ச் சக்கரங்களும் வழுக்கி விழுகின்றன. இத்தகைய சிறப்புகளை உடையது குற்றால மலை என விளக்குகிறாள். இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்.

3.5.2 குறத்தி நாட்டு வளம் கூறல் குறத்தி குற்றால மலையின் வளங்களைக் கூறி முடிக்கின்றாள். பின், வசந்த வல்லி குறத்தியிடம் அவள் நாட்டு வளங்களைக் கூறுமாறு கேட்கின்றாள். அதற்குக் குறத்தி தன் நாட்டு வளங்களைப் பலவாறு கூறுகின்றாள். சான்றாக ஒரு பாடலைப் பார்ப்போம்.

ஓடக் காண்பது பூம் புனல் வெள்ளம்

ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்

வாடக் காண்பது மின்னார் மருங்கு

வருந்தக் காண்பது மின்னார் சங்கு

போடக் காண்பது பூமியில் வித்து

புலம்பக் காண்பது கிண்கிணிக்கொத்து

தேடக் காண்பது நல்லறம் சீர்த்தி

திருக்குற்றாலத் தென் ஆரிய நாடே

(பாடல் 56:9)

(பூம் புனல் = பூக்களைச் சுமந்துவரும் நீர்; ஒடுங்கக் காண்பது = அடக்கம் பெற்றது; வருந்த = கருவுற்று வருந்த; கிண்கிணி = கால் அணி; சீர்த்தி = புகழ்)

எளிமையும் இனிமையும் நிறைந்த இப்பாடல் ஓசையில் சிறந்து நிற்கிறது. குற்றாலநாதர் நாட்டின் வளம் குறத்தியின் செம்மாந்தக்குரலில் வெளிப்படும்போது பெருமிதச் சுவை தோன்றி இலக்கிய இன்பத்தை அனுபவிக்கச் செய்கிறது. குற்றால நாதருக்கு உரிய தெற்குத் திசையில் உள்ள நாடு குறத்தியின் நாடு. இந்த நாடு எத்தகைய வளம் மிக்கது என்பதைக் குறத்தி கூறுகின்றாள்.

இந்த நாட்டை விட்டுச் செல்வன பூக்களைச் சுமந்து வரும் நீர் மட்டுமே. அடங்கி இருப்பது யோகம் செய்பவர்களிள் மனம் மட்டுமே. மெலிந்து காணப்படுவது பெண்களின் இடை மட்டுமே. துன்பப்படுவது முத்துகளை ஈனும் சங்கு மட்டுமே. நிலத்தில் போடுவதாக உள்ளது நெல் முதலிய விதைகளே. ஒலி செய்வது கிண்கிணி என்ற அணிகலனில் உள்ள மணிகளே. ஈட்ட அல்லது சம்பாதிக்க முயல்வது நல்ல அறமும் புகழும் மட்டுமே என்று கூறுகிறாள். எனவே, தன் நாட்டில் வாடுவோரும், வருந்துவோரும் கிடையாது. எல்லோரும் மகிழ்வுடன் வாழ்கின்றனர் என்கிறாள்.

3.5.3 குறத்தி குறிகூறல் குறத்தியிடம் வசந்தவல்லி குறியின் தன்மைகளைக் கேட்கின்றாள். அதற்குக் குறத்தி தன் குறியின் சிறப்புகளைப் பலவாறு கூறுகின்றாள். இப்பகுதியுள் இடம்பெறும் ஒரு பாடலைக் காண்போமா?

வித்தாரம் என் குறி அம்மே! மணி

முத்து ஆரம் பூணும் முகிழ் முலைப் பெண்ணே!

வித்தாரம் என் குறி அம்மே

(பாடல் 16)

(வித்தாரம் = சிறப்புடையது; அம்மே = அம்மா; ஆரம் = மாலை; பூணும் = அணியும்; முகிழ் = மேல் எழுந்து தோன்றும்)

மணி, முத்து ஆகியவற்றால் ஆன அணிகலன் அணிந்துள்ள பெண்ணே! என் குறி கூறும் திறன் சிறப்பு உடையது அம்மா என்று தொடங்கித் தன் குறிச் சிறப்பைக் குறத்தி கூறுகின்றாள்.

• குறிகேட்டலும் குறி கூறலும்

தன் குறிச் சிறப்பைக் கூறிய குறத்தி தலைவிக்குக் குறி கூறுகிறாள். சான்றாக ஒரு பாடலைக் காண்போம்.

சொல்லக்களோய் குறி சொல்லக் கேளாய் அம்மே

தோகையர்க்கு அரசே குறி சொல்லக் கேளாய்

முல்லைப் பூம் குழலாளே நன்னகரின் வாழ் முத்து

மோகனப் பசும் கிளியே சொல்லக் கேளாய்

பல்லக்கு ஏறும் தெருவில் ஆனை நடத்தி மணிப்

பணி ஆபரணம் பூண்ட பார்த்திபன் வந்தான்

செல்லப் பூம் கோதையே நீ பந்து அடிக்கையில்

அவன்

சேனை கண்ட வெருட்சி போல் காணுதே அம்மே

(பாடல் 74)

என்கிறாள்.

(தோகையர் = பெண்கள்; குழலாள் = கூந்தலை உடையவள்; முத்து மோகனம் = முத்துகளால் ஆன மாலை; ஆனை = எருது ஊர்தி; நடத்தி = செலுத்தி; பணி = பாம்பு; ஆபரணம் = அணிகலன்; பார்த்திபன் = மன்னன்; சேனை = உலாவின் போது வந்த படைகள்; வெருட்சி = அச்சம்)

வசந்த வல்லியைப் பெண்களுக்கு அரசியே! முல்லைப் பூக்களை அணிந்து உள்ள கூந்தலை உடையவளே! முத்து மாலை அணிந்த பச்சைக்கிளி போன்றவளே! என்று குறத்தி அழைக்கின்றாள். மக்கள் செல்லும் தெருவில் எருதின் மேல் ஏறிப் பாம்பை அணிகலனாக அணிந்து குற்றால நாதர் வந்தார். அப்போது நீ பந்து விளையாடிக் கொண்டு இருந்தாய். குற்றால நாதரின் உலாவில் வரும் படைகளை நீ பார்த்தாய். அதனால் ஏற்பட்ட அச்சம் போலவே உன் முகத்தில் குறி தோன்றுகிறது என்று குறத்தி குறி கூறுகிறாள்.

இதைத் கேட்டதும் வசந்த வல்லி வெட்கத்தால் தலை குனிகின்றாள். குறத்திக்கு அணிகலன்களைப் பரிசாக வசந்தவல்லி கொடுக்கின்றாள்.

3.6 சிங்கனின் வருகை

குறத்தி வசந்த வல்லிக்குக் குறி கூறிப் பரிசுகள் பெறுகின்றாள். அப்போது சிங்கன் என்பவன் தன் மனைவி ஆகிய சிங்கியைத் தேடி வருகின்றான். சிங்கன் என்பவன் குறத்தியின் கணவன் ஆவான்.

சிங்கியைத் தேடி வரும் சிங்கனைப் பற்றி ஆசிரியர்,

மா மாலைப் பூண்ட சிங்கன் வங்கணச்

சிங்கியைத் தேடி வருகின்றானே

(பாடல் 80: 4)

(மா = மிகுந்த; மாலை = மயக்கம்; வங்கணம் = அன்பு)

என்கிறார்.

சிங்கியாகிய தன் மனைவியைக் காணாது மிகுந்த மயக்கம் கொண்ட சிங்கன் தன் அன்பு மனைவியைத் தேடி வருகின்றான் என்று புலவர் கூறுகின்றார்.

3.6.1 சிங்கனும் பறவைகளும் மனைவியைத் தேடிவரும் சிங்கன் தன் நண்பன் ஆகிய நூவன் என்பவனைச் சந்திக்கின்றான். சிங்கன் மரத்தில் ஏறிப் பறவைகளைப் பார்க்கின்றான். பின்னர், பறவைகளின் வடிவைக் கூறுகின்றான். இந்த இடத்தில் பல்வேறு பறவைகளின் பெயர்கள் கூறப்படுகின்றன. இது புலவரின் உயிரியல் அறிவைக் காட்டுகின்றது எனலாம். எந்த எந்தப் பறவைகளைச் சிங்கன் கூறுகின்றான் என்று பார்ப்போமா?

நாரை, அன்னம், தாரா, கூழைக்கடா, செங்கால் நாரை, காடை, சம்பங் கோழி, காக்கை, கொண்டைக் குலாத்தி, மாடப்புறா, மயில், கொக்கு, வெள்ளைப் புறா, செம்போத்து, ஆந்தை, மீன் கொத்திப் பறவை, மரம் கொத்திப் பறவை என்பன சுட்டப்படுகின்றன. (பாடல். 89)

3.6.2 சிங்கனும் துயரமும் சிங்கன் தன் மனைவியாகிய சிங்கியைப் பிரிந்த பிரிவால் வருந்திக் கூறுகின்றான்.

கள் உலவு கொன்றை அம்தார்க் கர்த்தர் திரிகூடவெற்பில்

பிள்ளை மதி வாள் நுதலாள் பேசாத வீறு அடங்கத்

துள்ளி மடிமேல் இருந்து தோளின் மேல் ஏறி அவள்

கிள்ளை மொழி கேட்க ஒரு கிள்ளையானேன் இலையே

(பாடல். 98)

என்று வருந்திக் கூறுகிறான்.

(கள் = தேன்; கர்த்தர் = தலைவர்; வெற்பு = மலை; பிள்ளைமதி = இளம் பிறை; வாள் = ஒளிபொருந்திய; வீறு = சிறப்பு; கிள்ளை = கிளி)

கொன்றை மாலை அணிந்த தலைவர் திரிகூடநாதர். அவர் மலை திரிகூட மலை. அம்மலையில் வாழ்கின்றவள் சிங்கி. அவள் பேச்சுக் கிளியின் பேச்சைப் போன்று இருக்கும். அவள் தோள் மேல் ஏறி அவளுடைய கிளிப் பேச்சைக் கேட்க நான் ஒரு கிளியாகக்கூடப் பிறக்கவில்லையே என்று சிங்கன் வருந்திக் கூறுகின்றான்.

• மனைவியைத் தேடுதல்

பல இடங்களில் தேடியும் சிங்கன் சிங்கியைக் கண்டுபிடிக்க வில்லை. இதனால் மனம் வருந்துகின்றான். சான்றாக ஒரு பாடலைப் பார்ப்போமா?

பேடைக் குயிலுக்குக் கண்ணியை வைத்து நான்

மாடப் புறாவுக்குப் போனேன்

மாடப் புறாவும் குயிலும் படுத்தேன்

வேடிக்கைச் சிங்கியைக் காணேன்

(பாடல் 112:1)

என்கிறான் சிங்கன்.

(பேடை = பெட்டை; படுத்தேன் = பிடித்தேன்; வேடிக்கை = வேடிக்கைக் காரியான)

பெண் குயிலைப் பிடிக்க நான் கண்ணியை வைத்தேன். வைத்துவிட்டு மாடப் புறாவைப் பிடிக்கப் போனேன். குயிலையும் மாடப் புறாவையும் பிடித்தேன். ஆனால் வேடிக்கைக் காரியான என் சிங்கியைக் காணாதவன் ஆனேன் என்று சிங்கன் வருந்துகிறான்.

• சிங்கியின் அடையாளம்

சிங்கன் சிங்கியைக் காணாது வருந்துகிறான். இதைக் கண்ட நூவன் சிங்கனிடம் சிங்கியின் அடையாளம் யாது எனக் கேட்கிறான். அதற்குச் சிங்கன் சிங்கியின் அடையாளத்தைக் கூறுகிறான்.

கறுப்பில் அழகி அடா!

என் சிங்கி கறுப்பில் அழகி அடா

(பாடல் 116:1)

எனத் தொடங்கிப் பல்வேறு அடையாளங்களைக் கூறுகின்றான்.

3.6.3 சிங்கனும் சிங்கியும் பல இடங்களிலும் தன் மனைவி சிங்கியைத் தேடித் திரிகிறான் சிங்கன். இறுதியில் திருக்குற்றால நகரில் உள்ள தெருவில் தன் மனைவியைக் காண்கிறான். அதைப் புலவர்,

ஆண் ஆகிப் பெண் விரகம் ஆற்றாமல் போன சிங்கன்

பூண் நாகப் பாம்பு அணிவார் பொன் நகர்சூழ்

நன்னகரின்

சேண் ஆர் பெரும் தெருவில் சிங்கியைமுன்

தேடிவைத்துக்

காணாமல் போன பொருள் கண்டவர்போல் கண்டானே

(பாடல் 121)

என்று கூறுகின்றார்.

(விரகம் = ஆசை; ஆற்றாமல் = தாங்கமுடியாமல்; பூண் = அணிகலன்;சேண் = நெடிய (பெருமை) ஆர் = பொருந்திய)

சிங்கன் ஆண் தன்மை உடையவன். பெண் ஆசை தாங்கமுடியாத நிலையை உடையவன். பாம்பை அணிகலனாக அணிந்தவர் சிவபெருமான். அவர் நகரம் திருக்குற்றாலம். அந்த நகரின் அழகிய தெருவில் சிங்கியைச் சிங்கன் கண்டான். இது, காணாமல் தொலைந்து போன பொருளை மீண்டும் கண்டவர் போலக் கண்டான் என்று உவமை நயம்படக் கூறப்படுகிறது.

• சிங்கனின் மகிழ்ச்சி

சிங்கன் தன் மனைவி சிங்கியைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றான். சிங்கன் மகிழ்ச்சி அடைந்ததைக் காட்டும் பாடல் இதோ.

தொண்டாடும் சுந்தரர்க்குத் தோழர் திரிகூட வெற்பில்

திண்டாடி நின்ற சிங்கன் சீராடும் சிங்கிதனைக்

கண்டு ஆடித் துள்ளாடிக் கள் ஆடும்தும்பியைப் போல்

கொண்டாடிக் கொண்டாடிக் கூத்து ஆடிக்கொண்டானே

(பாடல் 124)

(தொண்டாடும் = தொண்டு புரிந்த; திண்டாடி நின்ற = தவித்து நின்ற; துள்ளாடி = துள்ளிக் குதித்து; கள் = தேன்; ஆடும் = ஆடுகின்ற; தும்பி = வண்டு; கொண்டாடி = பாராட்டி)

திரிகூடமலை, இது திருக்குற்றால நாதருடைய மலை. திருக்குற்றால நாதர் தேவாரம் பாடித் தொண்டு புரிந்த சுந்தரரின் நண்பர். இத்தகைய திரிகூட நாதரின் திருக்குற்றால மலையில் சிங்கன் சிங்கியைக் காண்கிறான். கண்டு மகிழ்கின்றான். அவன் மகிழ்ச்சி எப்படி உள்ளது. தேனை உண்டு மயக்கம் கொண்ட வண்டைப் போல் சிங்கியைப் பாராட்டிக் கூத்து ஆடுகின்றான்.

3.7 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை படித்தவற்றைத் தொகுத்துக் காண்போமா?

தமிழில் உள்ள சிற்றிலக்கிய வகைகளுள் குறிப்பிடத்தக்க ஓர் இலக்கிய வகையாகக் குறவஞ்சி இலக்கியம் உள்ளது.

குறவஞ்சி என்ற இலக்கியம் இப்பெயர் பெற்றதன் காரணம் தெரிய வருகிறது.

குறவஞ்சி இலக்கியம் தோன்றுவதற்கான கருத்துகளை அறிய முடிகின்றது.

குறவஞ்சி இலக்கிய வகையின் அமைப்பையும் பாடு பொருளையும் அறிய முடிகிறது.

குறவஞ்சி இலக்கிய வகையில் இலக்கிய நயம், கற்பனைத் திறன், ஓசை நயம் முதலியனவற்றை உணர முடிகிறது.

பாடம் -4

கலம்பக இலக்கியம்

4.0 பாட முன்னுரை

தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளில் கலம்பக இலக்கியமும் ஒன்று ஆகும். பல உறுப்புகள் கலந்த கலவை இலக்கியமாக இது காணப்படுகிறது. சிற்றிலக்கிய வகைகளுள் இந்த இலக்கியம் பற்றிய செய்திகள் இந்தப் பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

4.1 கலம்பக இலக்கியம்

இறைவனையோ, அரசனையோ, தலைவனாகக் கொண்டு, பலவகைச் செய்யுள்களால் பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகை கலம்பகம்.

4.1.1 பெயர்க் காரணம் நண்பர்களே! கலம்பகம் என்ற சிற்றிலக்கிய வகைக்கு இப்பெயர் வரக் காரணம் என்ன என்று பார்ப்போமா?

கலம்பகம் என்பதற்குக் கலவை என்று ஒரு பொருள் உண்டு. சங்க இலக்கியங்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை என்ற நூலில்,

பல் பூ மிடைந்த படலைக்கண்ணி

(பெரும்பாணாற்றுப்படை – 174)

என்ற அடி இடம் பெற்றுள்ளது.

இந்த அடியின் பொருள் யாது? இந்த அடிக்கு உரை ஆசிரியராகிய நச்சினார்க்கினியர் பல வகையாகிய பூக்கள் கலந்து நெருங்கிய கலம்பக மாலை என்று பொருள் கூறுகிறார்.

கதம்பம் என்று ஒரு வகையான பூ மாலையை நாம் இப்பொழுதும் காண முடிகிறது. பல வகையான பூக்களைச் சேர்த்துத் தொடுத்த மாலையே கதம்பம் எனப்படுகிறது. கலம்பகம் என்பதே பேச்சு வழக்கில் கதம்பம் என்று மாறி வழங்கப்படுகிறது எனலாம்.

வைணவ பக்தி இலக்கியத்தை வழங்கியவர்கள் பன்னிரண்டு ஆழ்வார்கள். அவர்களுள் ஒருவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார். அவர், ”கலம்பகம் புனைந்த அலங்கல் அம் தொடையல்” (திருப்பள்ளியெழுச்சி.5) என்று குறிப்பிடுகின்றார். பல மலர்கள் கலந்து தொடுக்கப்பட்ட மாலை என்பது இதன் பொருள் ஆகும்.

நண்பர்களே! பல்வேறு மலர்கள் கலந்து தொடுக்கப்பட்ட மாலை கலம்பகம் என்று குறிப்பிடப்படுகிறது அல்லவா? அது போலப் பல்வேறு உறுப்புகளால் ஆன இலக்கிய வகை கலம்பகம் என்று கூறப்படுகிறது எனலாம்.

• பல்வேறு உறுப்புகளின் கலப்பு

கலம்பகம் என்பதைக் கலம்பு + அகம் என்று பிரித்தும் விளக்கம் கூறலாம். கலப்பு என்பது கலம்பு என்று ஆகி உள்ளது. நூலின் உள்ளே பல்வேறு உறுப்புகள் கலந்து வருவதால் கலம்பகம் என்று பெயர் பெற்றது எனக் கருதலாம்.

கலம்பகம் என்பதைக் கலம் + பகம் என்று பிரித்தும் பொருள் கூறலாம். கலம் என்றால் பன்னிரண்டு என்று பொருள். பகம் என்றால் ஆறு என்று பொருள். கலம்பகம் என்றால் பதினெட்டு என்று பொருள். இந்த இலக்கிய வகையில் புயம், அம்மானை, ஊசல், களி, மறம், சித்து, காலம், மதங்கியார், வண்டு, மேகம், சம்பிரதம், தவம், பரணி, தழை, இரங்கல், தூது, குறம், தென்றல் போன்ற பதினெட்டு உறுப்புகள் கலந்து வருகின்றன. எனவே கலம்பகம் என்று பெயர் பெற்றது என்றும் கருதப்படுகிறது.

என்றாலும், இக்கருத்துப் பொருந்தாது எனலாம். ஏனெனில்

1) எல்லாக் கலம்பக நூல்களிலும் 18 உறுப்புகள் காணப்படவில்லை.

2) சில நூல்களில் பதினெட்டுக்கும் குறைவான உறுப்புகளே உள்ளன.

3) வேறு சில நூல்களில் பதினெட்டுக்கும் அதிகமான உறுப்புகள் காணப்படுகிறன.

எனவே, கலம் + பகம் = கலம்பகம் என்று விளக்கம் கூறுவது, அவ்வளவு பொருத்தமாக இல்லை என்று கூறலாம்.

4.1.2 கலம்பகத்தின் தோற்றம் கலம்பக இலக்கிய வகையின் பல உறுப்புகளின் கருக்கள் தமிழின் தொன்மையான இலக்கண நூல் ஆகிய தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. தொல்காப்பியத்தில் பல கலம்பக உறுப்புகள் அகத்துறைகளாகவும் புறத்துறைகளாகவும் காட்டப்பட்டுள்ளன. இவ்வாறு காட்டப்பட்டுள்ளதைப் பின்வரும் வரைபடம் மூலம் விளக்கலாம்.

இவ்வாறு தொல்காப்பியர் கூறும் அகத்துறை, புறத்துறை சார்ந்த உறுப்புகளின் கலவையாகக் கலம்பகம் என்ற இலக்கிய வகை தோன்றியது எனலாம்.

4.2 நந்திக் கலம்பகம்

முதல் கலம்பக நூலாக நந்திக் கலம்பகம் என்ற நூல் காணப்படுகின்றது. நண்பர்களே! இந்த நந்திக் கலம்பகம் என்ற நூலைப் பற்றிச் சிறிது காண்போமா?

நந்திக் கலம்பகம் என்ற நூல் பல்லவ மன்னர்களில் ஒருவன் ஆகிய மூன்றாம் நந்திவர்மன் என்பவன் மீது பாடப்பட்டது ஆகும். இந்நூலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை.

4.2.1 மரபு வழி வரலாறு இந்த நூலைப் பற்றிய மரபு வழிச் செய்தி ஒன்று உள்ளது. அதைப் பார்ப்போமா? நந்திவர்மனின் தந்தைக்கு இரண்டு மனைவியர். ஒரு மனைவிக்குப் பிறந்தவன் நந்திவர்மன். மற்று ஒரு மனைவிக்குப் பிறந்தவர்கள் நால்வர். இந்த நால்வரும் நந்திவர்மனுக்குப் பின் பிறந்தவர்கள். நந்திவர்மன் இளமைப் பருவம் அடைந்ததும் அவன் தந்தை இறந்து விட்டார். எனவே, நந்திவர்மன், தன் தம்பியர் நால்வரையும் துரத்திவிட்டுத் தான் முடி சூடிக் கொண்டான். இந்தத் தம்பியர் நால்வருள் ஒருவரே நூல் ஆசிரியர் என்றும் கருதப்படுகிறது.

நந்திவர்மனால் துரத்தப்பட்ட தம்பியர் நால்வரும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடிவு செய்தனர். எனவே ஒருவன் மந்திர வித்தையைப் படித்தான். ஒருவன் தந்திர வித்தையைப் படித்தான். மற்று ஒருவன் வாள் வித்தையைப் படித்தான். இன்னும் ஒருவன் தமிழ் நூல்களைக் கற்று நூல் இயற்றும் திறமை பெற்றான்.

பின், இவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து நந்திவர்மனை எதிர்த்துப் போர் செய்தனர். ஆனால், போரில் தோல்வி அடைந்தனர். அதன் பிறகே இந்த நூல் பாடப்பட்டது என்று கருதப்படுகிறது.

நந்திக் கலம்பகம் என்ற இந்த நூலை இயற்றிய பின்பு ஆசிரியர் துறவு மேற்கொண்டு வாழ்ந்து வந்தார். வீடுகள் தோறும் சென்று பாடல்களைப் பாடிப் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். அவ்வாறு பாடும் போது தாம் இயற்றிய நந்திக் கலம்பகப் பாடல்கள் சிலவற்றையும் பாடுவார்.

• கணிகையின் பாடல்

ஒரு நாள் புலவர், நந்திவர்மனின் தலைநகர் ஆகிய காஞ்சிபுரத்துக்கு வந்தார். ஒரு கணிகையின் வீட்டின் முன் நின்று சில நந்திக்கலம்பகம் பாடல்களைப் பாடினார். இதைக்கேட்ட அந்தக் கணிகை மனம் மகிழ்ந்தாள். புலவர் பாடிய பாடல்களை எழுதி வைத்துக் கொண்டாள். அந்தக் கணிகை, தான் எழுதி வைத்துள்ள பாடல்களைத் தன் மாளிகையின் மேல் மாடத்தில் இருந்து இரவில் பாடிக் கொண்டிருந்தாள். ஊர்க் காவலர்கள் நகரைச் சுற்றி வந்து கொண்டிருந்தனர். கணிகை பாடும் பாடல்களைக் கேட்டனர். கணிகை பாடிய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த காவலர்கள்,

வான்உறு மதியை அடைந்ததுஉன் வதனம்

மறிகடல் புகுந்ததுஉன் கீர்த்தி

கான்உறு புலியை அடைந்ததுஉன் வீரம்

கற்பகம் அடைந்ததுஉன் கரங்கள்

தேன்உறு மலராள் அரிஇடம் புகுந்தாள்

செந்தழல் அடைந்ததுஉன் தேகம்

நானும்என் கலியும் எவ்விடம் புகுவேம்

நந்தியே நம்தயா பரனே

(நந்திக் கலம்பகம்: – 113)

என்ற பாடலைக் கேட்டனர்.

(வான் உறு = வானத்தில் தோன்றும்; மதி = சந்திரன்; வதனம் = முகம்; மறி = மோதுகின்ற; கீர்த்தி = புகழ்; கான் = காடு; தேன் உறு மலராள் = திருமகள்; அரி = திருமால்; தழல் = நெருப்பு; தேகம் = உடம்பு; கலி = வறுமைத் துன்பம்; தயாபரன் = அருள் நிறைந்தவன்)

நந்தி என்ற பெயர் உடைய மன்னனே! அருளில் மேம்பட்டவனே! நீ இப்போது இறந்து விட்டாய். எனவே உன் முகத்தின் ஒளி வானத்தில் உள்ள நிலவில் சேர்ந்துவிட்டது. உன் புகழ் கடலில் மூழ்கிவிட்டது. உன் வீரம் காட்டில் வாழும் புலியிடம் சேர்ந்து விட்டது. உன் கொடைத்திறம் கற்பக மரத்திடம் சேர்ந்து விட்டது. திருமகள் திருமாலிடம் சேர்ந்து விட்டாள். இவை எல்லாம் போய் விட்டன. எனவே, உன் உடல் நெருப்பிடம் சேர்ந்து விட்டது. ஆனால் நானும் என் வறுமையும் எங்கே போய் வாழ்வோம் என்ற பொருளில் இப்பாடல் அமைகின்றது.

• கணிகையின் விடுதலை

மன்னன் இறந்துவிட்டதாகச் செய்தி உள்ளதை ஊர்க் காவலர்கள் அறிந்தனர். உடனே தம் தலைவனிடம் இதைக் கூறினர். தலைவன் அரசனிடம் அறிவித்தான். அரசன் அந்தக் கணிகையை அழைத்து வருமாறு கட்டளை இட்டான். கணிகையைக் காவலர்கள் அழைத்து வந்தனர். கணிகை நடந்ததைக் கூறினாள். அரசன் அந்தத் துறவி வந்தால் தன்னிடம் அழைத்து வரும்படி ஆணை இட்டான்.

ஒரு நாள் துறவி வந்தார். அவரைக் காவலர்கள் அரசனின் முன் கொண்டு வந்தனர்.

அரசன் துறவியைக் கண்டான். அவர் வரலாற்றைக் கேட்டான். தன் தம்பி என உணர்ந்தான். மகிழ்ச்சி அடைந்தான். கலம்பகப் பாடல்களைப் பாடுமாறு அரசன் வேண்டினான். துறவி முதலில் மறுத்தார். பின் ஒப்புக் கொண்டார்.

4.2.2 பாடப்பட்ட முறை பச்சை ஓலையால் நூறு பந்தல்கள் போட வேண்டும். ஒவ்வொரு பந்தலிலும் மன்னன் அமர்ந்து ஒவ்வொரு பாடலாகக் கேட்க வேண்டும். ஒரு பாடல் முடிந்ததும் அந்தப் பந்தல் எரிந்துவிடும். கடைசிப் பாடலைக் கேட்கும் முன் பந்தலில் விறகுகளை அடுக்கி அதன் மேல் படுத்துக் கொண்டு கேட்க வேண்டும். கடைசிப் பாட்டு முடிந்ததும் உன் உடலிலும் விறகிலும் தீப்பற்றி எரியும். நீ இறப்பாய். இதற்குச் சம்மதமா என்று துறவி கேட்டார். மன்னவனும் சம்மதித்தான். துறவி கூறியவாறு பந்தல்கள் போடப்பட்டன. ஒவ்வொரு பாடலைக் கேட்கும் போதும் அந்தப் பந்தல் எரிந்தது.

• மன்னனின் தமிழ்ப்பற்று

இறுதியில் மன்னன் விறகை அடுக்கி அதன் மேல் படுத்தான். துறவி முற்கூறிய ”வான் உறு மதியை” என்று தொடங்கும் பாடலைப் படித்தார். மன்னன் உடலில் தீப்பற்றி எரிந்தது. மன்னன் இறந்தான். தமிழ் மொழி அல்லாத பிற மொழியைச் சேர்ந்த மன்னன் ஆகிய நந்திவர்மன் தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் காரணமாக உயிர் விட்டான் என்பதை

இந்த மரபு வழியாக வரும் செய்தி மூலம் அறியமுடிகிறது.

4.3 நந்திக் கலம்பகத்தின் உறுப்புகள்

நண்பர்களே! நந்திக் கலம்பகம் என்ற நூலின் துணையுடன் கலம்பக இலக்கியத்தின் உறுப்புகள் சிலவற்றைக் காண்போமா?

4.3.1 புயம் கலம்பக இலக்கியத்துள் இடம் பெறும் உறுப்புகளில் ஒன்று புயம் என்பது ஆகும். புயம் என்றால் தோள் என்று பொருள். நூலினுள் இடம் பெறும் தலைவனின் புயத்தின் அழகையும் ஆற்றலையும் புகழ்ந்து கூறுவதாக இந்த உறுப்பு அமைகின்றது. முத்துவீரியம் என்னும் பாட்டியல் நூல் புயம் என்ற உறுப்பை வாகு, வகுப்பு என்கின்றது. இன்னொரு பாட்டியல் நூல் ஆகிய பிரபந்த தீபிகை இந்த உறுப்பைப் புய வகுப்பு என்கின்றது.

நந்திக் கலம்பகத்தில் புயம் என்ற உறுப்பு தோள் வகுப்பு என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது. இந்த உறுப்பு அமையும் பாடல் இதோ தரப்படுகிறது. தோள் வகுப்பு என்பதற்குத் தோளின் பல சிறப்புகளை வகைப்படுத்திக் கூறுதல் என்று பொருள் கொள்ளலாம்.

மறமதம் கரிதிசை நிறுவின

மணிநகை யவர்மனம் நகுவன

விறலர சர்கள்மனம் நெகிழ்வன

விரைமலர் களிமுலை பொருவன

திறலுடை யனதொடை புகழ்வன

திகழொளி யனபுகழ் ததைவன

நறுமல ரணியணி முடியன

நயவர நினதிரு புயமதே

(நந்.கலம்பகம் – 11)

(மறம் = வலிமை; கரி = யானை; நிறுவன = நிற்கச் செய்தன; நகையவர் = பற்களை உடைய பெண்கள்; நெகிழ்வன = மலர்ச் செய்வன; விறல் = வெற்றி; விரை = மணம்; பொருவன = போர் செய்வன; தொடை = பாட்டு; ததைவன = நெருங்கும் தன்மை உடையன; நயவர = நன்மை பொருந்தியவனே!)

இனி, இந்தப் பாடலில் நந்திவர்மனின் தோளின் அழகும் வலிமையும் எவ்வாறு புகழப் படுகின்றன என்று பார்ப்போம்.

நந்திவர்மனின் தோள்கள் வலிமையும் மதமும் உடைய யானைகளை அந்த அந்தத் திசைகளில் நிற்கச் செய்யும் வல்லமை உடையன. முத்துகளைப் போன்ற பற்களை உடைய பெண்களின் மனத்தை மலரச் செய்வன. வெற்றியை உடைய அரசர்களின் மனத்தை அச்சம் கொள்ளச் செய்வன. மணம் நிறைந்த மாலையை அணிந்த பெண்களின் மார்புகளுடன் போராடுவன. பளபளப்பு உடையன. புலவர்களால் பாராட்டப் பெறுவன. ஒளி நிறைந்தன. அணிகள் அணிந்து உயர்ச்சி பெற்ற மேலிடம் உள்ளன என்று புகழப்படுகின்றன.

இந்தப் பாடலில் வரும் அடிகளைப் பாருங்கள். சிறு சிறு சொற்றொடர்களாக அமைந்து இன்பம் தருகின்றன. பெண்களின் பற்களுக்கு முத்துகள் உவமை ஆகக் கூறப்படுகின்றன.

இந்தப் பாடலில் நந்திவர்மனின் தோள்களின் ஆற்றல், வெற்றிச் சிறப்பு, அழகு, ஒளி, புகழ் என்பன கூறப்படுகின்றன. பெண்களுக்கு இன்பம் கொடுக்கும் தோள்கள். பகைவர்களுக்கு அச்சம் செய்யும் தோள்கள் என்று தோள்களின் மென்மையும் வலிமையும் புகழப்படுகின்றன. இவ்வாறு தோள்களின் பெருமைகளைக் கூறும் உறுப்பாகத் தோள் வகுப்பு என்ற உறுப்பு அமைகின்றது.

4.3.2 ஊசல் நந்திக் கலம்பகத்தில் இடம் பெறும் மற்றும் ஓர் உறுப்பு ஊசல் என்பது ஆகும். ஊசல் ஆடுதல் அல்லது ஊஞ்சல் ஆடுதல் என்பது பெண்கள் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று ஆகும். நாட்டுப்புறப் பெண்கள் விளையாடும் ஊசல் என்பதைப் புலவர்கள் இலக்கியங்களில் அமைத்துப் பாடுவது மரபு. சிலப்பதிகாரத்திலும் ஊசல் வரி என்ற பகுதி உள்ளது. திருவாசகத்தில் மாணிக்கவாசகர் திருப்பொன் ஊசல் என்ற பகுதியை அமைத்துள்ளார்.

ஊசல் என்பது கலம்பக உறுப்புகளில் ஒன்றாகவும் அமைகின்றது. நந்திக்கலம்பகத்தில் இந்த உறுப்பு இடம் பெறுகிறது. நந்திவர்ம மன்னனிடம் பெண்கள் காதல் கொள்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒன்று கூடினர். அப்பெண்களுள் ஒருத்தி நந்திவர்மனின் புகழை ஊசல் ஆடிக்கொண்டு பாடுவோம் என்று தோழிகளைப் பார்த்துக் கூறுவதாக இந்தப் பகுதி அமைகின்றது. நந்திக்கலம்பகத்தில் இடம் பெறும் ஊசல் பாடலை இப்போது பார்ப்போமா?

ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்

உத்தரியப் பட்டாட ஆடாமோ ஊசல்

ஆடகப்பூண் மின்னாட ஆடாமோ ஊசல்

அம்மென்மலர்க் குழல்சரிய ஆடாமோ ஊசல்

கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த

கோமுற்றப் படைநந்தி குவலயமார்த் தாண்டன்

காடவர்க்கு முன்தோன்றல் கைவேலைப் பாடிக்

காஞ்சிபுர மும்பாடி ஆடாமோ ஊசல்

(பாடல் – 33)

(ஓடு = ஓடிய ; அரி = செவ்வரி (சிவந்த வரி); மட = இளமை; நல்லீர் = பெண்களே; ஆடாமோ = ஆடுவோமாக; உத்தரியம் = மேல் ஆடை; ஆடகம் = பொன்; பூண் = அணிகலன்; அம் = அழகிய; மென் = மென்மையான; குழல் = கூந்தல்; சரிய = அவிழ்ந்து தொங்குமாறு; கூடலர் = பகைவர்; விண் = வான் உலகம்; கோமுற்றப்படை = திசைகளில் எல்லாம் சுற்றித் திரியும் படை; குவலயம் = மண் உலகம்; முன் தோன்றல் = முன்னால் பிறந்தவன் (தமையன்)

நண்பர்களே! இந்தப் பாடலின் பொருளையும் நயத்தையும் காண்போமா?

ஒரு பெண் மற்ற தோழிகளை அழைக்கின்றாள். எப்படி அழைக்கின்றாள்? சிவந்த வரி பரந்த கண்களை உடைய தோழிகளே! என்று. அழகிய பெண்களின் கண்களில் சிவந்த வரிகள் காணப்படுவது சிறப்பு என்று பொதுவாகக் கருதப்படும் உலக வழக்கு உள்ளது. எனவே இவ்வாறு அழைப்பதாகப் புலவர் காட்டுகிறார். தோழிமார்களை ஊஞ்சல் ஆட அழைக்கின்றாள். ஊஞ்சல் ஆடும் போது என்னென்ன நிகழும் என்று கூறி அந்தப் பெண் ஊஞ்சல் ஆட அழைக்கின்றாள். பட்டால் ஆன மேல் ஆடை அசையும் படி ஊஞ்சல் ஆடுவோம். ஒளி மிக்க பொன்னால் ஆன அணிகள் அசைய ஊஞ்சல் ஆடுவோம். அழகிய மலர் சூடிய கூந்தல் அவிழ்ந்து அசைய ஊஞ்சல் ஆடுவோம் என்கிறாள். ஊஞ்சல் ஆடும் வேகத்தில் ஆடை, அணிகலன் ஆகியன அசைதல் இயல்பு. கூந்தல் அவிழ்தலும் இயல்பு. எனவே இவ்வாறு அந்தப் பெண் கூறுகின்றாள். ஊஞ்சல் ஆடும் போது தலைவனின் புகழைப் பாடி ஆடுதல் இயற்கை. எனவே இங்கும் தலைவன் புகழ் பாடி ஆடத் தலைவி தோழியை அழைக்கிறாள்.

• தெள்ளாறு வென்றவன்

தெள்ளாறு என்ற இடத்தில் போர் நடந்தது. அந்தப் போரில் நந்திவர்மன் பகைவர்களைக் கொன்று வெற்றி பெற்றான். அத்தகைய நந்தி வர்மன் திசைகள் எல்லாம் சுற்றிச் செல்கின்ற படைகளை உடையவன். அவன் காடவன் என்பவனுடைய தமையன். இத்தகைய சிறப்புகளை உடைய நந்திவர்மனின் கையில் உள்ள வேலையும் அவனது காஞ்சிபுர நகரையும் புகழ்ந்து பாடி நாம் ஊசல் ஆடுவோம் என்று தலைவி தோழியை அழைக்கிறாள்.

நந்திவர்மன் பகைவர்களைக் கொன்று வெற்றி பெற்றான் என்பதைப் புலவர் பகைவர்களுக்கு வான் உலக வாழ்க்கையைக் கொடுத்தான் என்று நயம்படக் கூறுகிறார்.

நந்திவர்மன் தெள்ளாறு என்ற இடத்தில் நடந்த போரில் வெற்றிபெற்றான் என்ற வரலாற்றுச் செய்தியும் இப்பாடல் மூலம் தெரிய வருகிறது.

4.3.3 மறம் மறம் என்றால் வீரம் என்று பொருள். புறத்துறைகளில் ஒன்று மகள் மறுத்து மொழிதல் என்ற துறை ஆகும். மறவர் குலத்தில் பிறந்தவள் ஒரு பெண். அவளைத் திருமணம் செய்ய வேண்டும் என்று ஒரு மன்னன் விரும்புகின்றான். எனவே, மறவர்களிடம் ஒரு தூதுவனை அனுப்புகிறான். தூதுவன் மறவர்களிடம் சென்று மன்னன் கூறிய செய்தியைக் கூறுகின்றான். அதனைக் கேட்ட மறவர்கள் அந்தத் தூதுவனிடம் தங்கள் வீரத்தைச் சிறப்பித்துக் கூறுகின்றனர். தூது அனுப்பிய மன்னனின் வீரத்தை இகழ்ந்து கூறுகின்றனர். இறுதியில் மன்னனுக்குத் தம் குலத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க மறுக்கின்றனர். இதுவே மகள் மறுத்து மொழிதல் என்ற துறையின் பொருள். மறவர்கள் தம் மறப் பண்பை அதாவது வீரத்தைப் புகழ்ந்து கூறுவதே மறம் என்ற கலம்பக உறுப்பு ஆகும்.

நந்திக் கலம்பகத்தில் இடம் பெறும் மறம் என்ற உறுப்பில் இடம் பெறும் பாடலைப் பார்ப்போம்.

அம்பொன்று வில்லொடிதல் நாணறுதல்

நான்கிழவன் அசைந்தேன் என்றோ

வம்பு ஒன்று குழலாளை மணம் பேசி

வரவிடுத்தார் மன்னர் தூதர்

செம் பொன்செய் மணிமாடத் தெள்ளாற்றில்

நந்திபதம் சேரார் ஆனைக்

கொம்பு அன்றோ நம் குடிலில் குறுங்காலும்

நெடுவளையும் குனிந்து பாரே

(நந்.கலம்பகம் – 82)

(ஒன்று = கொள்ளும்; நாண் = அம்பின் பூட்டுக்கயிறு: அசைந்தேன் = தளர்ந்தேன்; வம்பு = நறுமணம்; குழலாள் = கூந்தலை உடைய பெண்; மணம் = திருமணம்; பதம் = அடிகள் (பாதங்கள்); குறுங்கால் = சிறிய தூண்; நெடுவளை = நீண்ட வளைச்சட்டங்கள்)

தூதுவனைப் பார்த்துப் பெண்ணின் தந்தை ஆகிய மறவன் கூறுகின்றான். மன்னன் அனுப்பிய தூதனே! என் வில் ஒடிந்துள்ளது. அதன் பூட்டுக் கயிறு அறுந்து உள்ளது. நான் மூப்பு அடைந்து விட்டேன் என்று எண்ணியா உன் மன்னன் உன்னை இங்கு அனுப்பினான்? நறுமணம் மிக்க கூந்தலை உடையவள் என் மகள். இவளைத் திருமணம் செய்ய வேண்டி உன்னை அனுப்பி உள்ளான் உன் மன்னன். என்னுடைய இந்தச் சிறிய குடிசையைப் பார், இந்தச் குடிசையில் சிறிய தூண்களும் நீண்ட வளைச் சட்டங்களும் உள்ளன. அவை எவற்றால் ஆக்கப்பட்டுள்ளன என்று தெரியுமா? நந்திவர்மன் ஆகிய என் மன்னன் தெள்ளாறு என்ற இடத்தில் போர் செய்தான். பகை மன்னர்களுடைய யானைகள் அப்போரில் இறந்தன. அந்த யானைகளின் கொம்புகளே இந்தத் தூண்களும் நெடிய வளைச் சட்டங்களும் ஆகும். நான் கூறுவதில் உனக்குச் சந்தேகம் இருக்கலாம். எனவே, இந்தக் குடிசையில் நீ குனிந்து பார் என்று பெண்ணின் தந்தை கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலில் நந்திவர்மனின் வீரமும் அவன் படைவீரர்களின் வீரமும் தெரியவருகின்றன. குடிசைகளில் தூண்களாகவும் வளைச் சட்டங்களாகவும் பயன்படுத்தும் அளவுக்குப் பல யானைகள் இறந்துள்ளன என்பது குறிப்பிடப்படுகிறது.

4.3.4 காலம் நண்பர்களே! காலம் என்ற கலம்பக உறுப்பைக் காண்போமா? தலைவன் தலைவியிடம் காதல் கொள்கிறான். இந்த நிலையில் தலைவன் பொருள் ஈட்டி வருவதற்காக வேறு நாட்டுக்குச் செல்கின்றான். இதனால் தலைவி தலைவனைப் பிரிய வேண்டி வருமே என்று வருந்துகின்றாள். இதனை உணர்ந்த தலைவன் ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தைக் கூறுகின்றான். இந்தக் காலம் வந்ததும் நான் திரும்பி வந்து விடுவேன் என்கிறான். நாட்கள் பல சென்றன. தலைவன் குறிப்பிட்டுச் சென்ற காலம் வந்து விட்டது. ஆனால் தலைவன் வரவில்லை. இதனால் தலைவி வருந்துகின்றாள். தலைவி தன் துன்பங்களைக் கூறி வருந்துவதாக அமையும் உறுப்பே காலம் என்பது ஆகும். நந்திக் கலம்பகத்தில் காலம் என்ற உறுப்பில் அமையும் பாடல் இதோ தரப்படுகிறது. வேனிற் காலத்தின் வருணனை அது.

• வேனிற்கால அழகு

இப்பாடலின் பொருளைப் பார்ப்போம். தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லும் போது வேனில் காலத்தில் வந்து விடுவதாகக் கூறுகிறான். வேனில் காலம் வந்து விட்டது. எப்படிப்பட்ட வேனில் காலம்! பருவ காலங்களில் மிகுந்த இன்பம் தருவது வேனில் காலம். இந்தக் காலத்தில் மரங்களில் உள்ள முதிர்ந்த இலைகள் உதிர்ந்து விடும். தளிர்கள் தோன்றும். செடி கொடிகளும் தளிர்க்கும் காலம். மலர்கள் மலர்ந்து மணம் வீசும் காலம். கணவனுடன் சேர்ந்து வாழும் பெண்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் காலம். வண்டுகள் மலர்களில் போய் அமர்ந்து பாடல் பாடும் காலம். குயில்கள் மாமரத்தின் இளங்தளிர்களைக் கௌவும் காலம்.கணவனுடன் சேர்ந்து வாழும் பெண்களுக்குத் தென்றல் காற்று இன்பத்தை அளிக்கும் காலம். கணவனைப் பிரிந்து வாடும் பெண்களுக்குத் தென்றல் தீயைப் போன்று துன்பம் செய்யும் காலம், இளம் பெண்கள் முத்துகளைப் பொறுக்கி எடுத்து விளையாடும் காலம் கணவனைப் பிரிந்து வாடும் பெண்கள் மன்மதனைப் பழி கூறும் காலம். இத்தகைய வேனில் காலம் வந்து விட்டது. ஆனால், வேனில் காலத்தில் வந்து விடுவேன் என்று கூறிச் சென்ற தலைவர் வரவில்லை. நான் என்ன செய்வேன் என்று தலைவி வருந்துவதாகக் காட்டப்படுகிறது. வேனில் காலத்தைப் புலவர் நன்றாக வருணிப்பதை நாம் அறியமுடிகிறது.

மலர்ச்சூழல் அமர்ந்தினிய வண்டார்க்கும் காலம்

வரிக்குயில்கள் மாவிலிளம் தளிர்கோதும் காலம்

சிலர்க்கெல்லாம் செழும்தென்றல் அமுதுஅளிக்கும் காலம்

தீவினையேற்கு அத்தென்றல் தீவீசும் காலம்

பலர்க்கெல்லாம் கோன்நந்தி பன்மாடக் கச்சிப்

பனிக்கண்ணார் பருமுத்தம் பார்த்தாடும் காலம்

அலர்க்கெல்லாம் ஐங்கணைவேள் அலர்தூற்றும் காலம்

அகன்றுபோ னவர்நம்மை அயர்ந்துவிட்ட காலம்

(நந்.கலம்பகம் – 60)

(ஆர்க்கும் = ஆரவாரிக்கும்; மாவில் = மாமரத்தில்; கோதும் = கௌவும்; கோன் = மன்னன்; கச்சி = காஞ்சி நகரம்; பனி = குளிர்ந்த; கண்ணார் = கண்களை உடைய பெண்கள், முத்தம் = முத்துகள்; ஆடும் = விளையாடும்; அலர் = மலர்; வேள் = மன்மதன்; அலர் = பழிச்சொல்; அயர்ந்து = மறந்து)

4.3.5 மதங்கியார் கலம்பக உறுப்புகளில் ஒன்றாகிய மதங்கியார் என்றால் என்ன என்று பார்ப்போமா?

மதங்கியார் என்போர் இசையுடன் பாடுவதில் சிறந்தவர்கள். கூத்து ஆடுவதிலும் வல்லவர்கள். இத்தகைய மதங்கியார் பிரிவைச் சார்ந்த ஒரு பெண் தன் இரண்டு கைகளிலும் வாளை ஏந்திக் கொண்டு சுழன்று ஆடுகின்றாள். அவ்வாறு ஆடும் மதங்கியார்ப் பெண்ணின் அழகை ஒருவன் புகழ்ந்து பாடுகிறான். இந்தப் பொருளுடன் அமைந்த கலம்பக உறுப்பு மதங்கியார் எனப்படுகிறது.

• மதங்கி

ஒரு தலைவனை அல்லது ஒரு மன்னனைப் புகழ்ந்து ஆடுவது வழக்கம். இவர்கள் இரு கைகளிலும் வாளைப் பிடித்துக் கொண்டு ஆடும் வழக்கமும் உண்டு என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

நந்திக் கலம்பகத்தில் இவ்வுறுப்பு இடம் பெற்றுள்ளதைக் காணலாமா?

பகைஇன்றிப் பார்காக்கும் பல்லவர்கோன் செங்கோலின்

நகையும்ஆண் மையும்பாடி நன்றுஆடும் மதங்கிக்குத்

தகையும்நுண் இடைஅதிரத் தனபாரம் அவற்றோடு

மிகைஒடுங்கா முன்இக்கூத் தினைவிலக்க வேண்டாவோ

(நந்.கலம்பகம் – 74)

(பார் = உலகம்; நகை = புகழ்; ஆண்மை = வாள் ஆற்றல்; தகையும் = மெலியும்; தனம் = மார்பு; மிகை = சுமை; ஒடுங்காமுன் = முறிந்து போகும் முன்பு)

இந்தப்பாடல் மதங்கியார் என்ற பெண்ணின் அழகைக் காட்டுகின்றது. நந்திவர்மன் பகை இல்லாமல் ஆட்சி, செய்யும் சிறப்பையும் இந்தப் பாடல் விளக்கக் காணலாம்.

4.3.6 தூது நந்திவர்மன் என்ற மன்னனிடம் ஒரு பெண் காதல் கொண்டாள். காதல் துன்பம் தாங்கமுடியாது அவள் வருந்துகின்றாள். எனவே, நந்திவர்மனிடம் தூது அனுப்பி அவன் அன்பைப் பெற வேண்டும் என்று எண்ணுகிறாள். இதனால் தூது அனுப்புகின்றாள் என்று தூது அனுப்பும் செய்தியைக் கூறுவதாக அமைவதே தூது என்ற கலம்பக உறுப்பு ஆகும்.

இந்தத் தூதுச் செய்தி இடம் பெறும் நந்திக்கலம்பகம் பாடலைக் கீழே காண்போம்.

பொழுதுகண்டு ஆய்அதிர் கின்றது

போகநம்பொய் யற்குஎன்றும்

தொழுதுகொண் டேன் என்று சொல்லுகண்

டாய்தொல்லை நூல்வரம்பு

முழுதும்கண் டான்நந்தி மல்லைஅம்

கானல் முதல்வனுக்குப்

பழுதுகண் டாய்இதைப் போய்ப் பகர்

வாய்சிறைப் பைங்குருகே

(நந்.கலம்பகம் – 7)

(பொழுது = சூரியன்; போக = மறைய; ஆய் = தாய்; பொய்யற்கு = பொய் பேசுகின்றவனுக்கு; தொல்லை = பழைய; வரம்பு = எல்லை; மல்லை = மாமல்லபுரம்; கானல் = கடல் துறை; பழுது = குற்றம்; குருகு = கிளி)

இந்தப் பாடலின் பொருளைப் பார்ப்போமா? நந்திவர்மனிடம் காதல் கொள்கிறாள் ஒரு பெண். காதல் துன்பம் அவளை வருத்துகிறது. அப்போது அவள் ஒரு கிளியைக் காண்கிறாள். அதை அழைக்கிறாள். எப்படி அழைக்கிறாள். சிறகுகளை உடைய பச்சை நிறம் கொண்ட கிளியே! என்று அழைக்கிறாள். பின் தன் செய்திகளை அப்பெண் அந்தக் கிளியிடம் கூறுகிறாள்.

கிளியே! சூரியன் மறைந்து விட்டது. மாலைப்பொழுது வந்து விட்டது. நான் நந்திவர்மனிடம் காதல் கொண்டதைத் தாய் அறிந்து விட்டாள். எனவே, மாலைப் பொழுதில் என்னை என் தாய் திட்டி வீட்டிலே இருக்கச் செய்து விடுகிறாள்.

நந்திவர்மன் பழைமையான இலக்கிய நூல்களை நன்கு கற்றுத் தெளிந்தவன். மாமல்லபுரம் என்ற இடத்தைச் சார்ந்த அழகிய கடல் துறைக்குத் தலைவன். அவன் பொய் பேசுகின்றவன். ஏன் எனில் அவன் வருவேன் என்று என்னிடம் கூறினான். ஆனால் வரவில்லை. இவ்வாறு பொய் பேசும் நந்திவர்மனிடம் கிளியே நீ செல். சென்று எப்போதும் நான் அவனையே எண்ணி ஏங்கிக் கொண்டிருப்பதாகக் கூறு. இவ்வாறு பொய் கூறுவது அவன் தகுதிக்கு ஏற்றது அல்ல என்றும் கூறுவாய் என்று அந்தப் பெண் கிளியிடம் தூது வேண்டுகிறாள்.

4.3.7 மேகம் கலம்பக இலக்கிய உறுப்புகளில் ஒன்று மேகம் என்பதும் ஆகும். இந்த உறுப்பும் தூதுப் பொருளைக் கொண்டதாக உள்ளது. தலைவனிடம் தலைவி காதல் கொள்கிறாள்.

தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்கின்றான். தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவி மேகத்தைத் தூது விடுவதாக அமையும் உறுப்பு மேகம் என்று அழைக்கப்படுகிறது. மேகம் என்ற இந்த உறுப்பு கார், குளிர் என்ற பெயர்களாலும் அழைக்கப்படும். நந்திக் கலம்பகத்தில் தலைவன் தலைவியிடம் மேகத்தைத் தூது அனுப்புவதாக இந்த மேகம் என்ற உறுப்பு அமைகிறது. அந்த நந்திக் கலம்பகப் பாடல் இதோ.

ஓடுகிற மேகங்காள்! ஓடாத தேரில்வெறும்

கூடு வருகுதுஎன்று கூறுங்கோள் – நாடியே

நந்திச்சீ ராமன்உடை நல்நகரில் நல்நுதலைச்

சந்திச்சீர் ஆம்ஆகில் தான்

(நந்.கலம்பகம் – 110)

(ஓடாத = விரைந்து செல்லாத; கூடு = வெறும் உடல்; நுதல் = நெற்றி; இராமன் = இராம பிரான்; சந்திச்சீர் = சந்தித்தீர்)

தலைவன் தலைவியுடன் மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கை வாழ்ந்து வருகிறான். இல்லற வாழ்க்கை மேலும் மகிழ்ச்சியுடன் அமையப் பொருள் வேண்டும் அல்லவா? எனவே பொருள் தேட வெளி ஊருக்குச் செல்கின்றான். செல்லும் போது தலைவன் தலைவியிடம் ஒரு குறிப்பிட்ட காலம் வந்ததும் வந்து விடுவேன் என்கிறான். தலைவன் குறிப்பிட்ட காலம் வந்து விட்டது. எனவே, தேரில் ஏறித் தலைவியை நோக்கி வருகின்றான். அப்போது மேகத்தைப் பார்க்கின்றான். அதைத் தலைவியிடம் தூது செல்லுமாறு வேண்டுகிறான்.

நில்லாமல் வேகமாக ஓடும் மேகங்களே! என்று தலைவன் மேகத்தை அழைக்கின்றான். மேகங்களே! இராம பிரான் போன்றவன் என் மன்னனாகிய நந்திவர்மன். அவனுடைய நகரம் காஞ்சிபுரம். அந்த நகரில் என் தலைவி வாழ்கிறாள். அவள் அழகிய நெற்றியை உடையவள். என் தலைவியை நீங்கள் கண்டீர்கள் ஆனால் அவளிடம் நான் கூறுகின்ற இந்தச் செய்தியைக் கூறுங்கள். விரைந்து ஓடாத தேரில் உன்னைக் காணும் விருப்பத்துடன் வெறும் உடம்பு ஒன்று வந்து கொண்டிருக்கிறது என்று கூறுங்கள் என்று தலைவன் மேகத்திடம் வேண்டுகிறான்.

இந்தப் பாடலின் இலக்கியச் சிறப்பைப் பார்ப்போமா? மேகங்கள் விரைந்து ஓடுகின்றன. அந்த வேகத்துடன் ஒப்பிடும் போது தலைவன் வரும் தேரின் வேகம் குறைவே. எனவே ஓடாத தேர் என்று கூறுகிறான். எனவே, தன் தேரைவிட விரைந்து செல்லும் மேகங்களைத் தலைவியிடம் தூது அனுப்புகிறான். இந்தப் பாடலில் ஓடுகிற, ஓடாத என்ற எதிர் எதிர்ச் சொற்கள் இடம் பெறுகின்றன.

அடுத்து, தலைவன் தன்னை வெறும் கூடு என்கிறான். ஏன் இவ்வாறு கூறுகிறான். தலைவனுடைய உயிர் தலைவியிடம் உள்ளது. எனவே, தேரில் உள்ளது உயிர் இல்லாத வெறும் உடம்பே. இவ்வாறு கூறித் தலைவன் தலைவியிடம் தான் கொண்ட காதலை வெளிப்படுத்துகிறான்.

பெண்களின் அழகு அவர்களின் முகத்தில் தெரியும், அதிலும் குறிப்பாக நெற்றியில் தெரியும்; எனவே தலைவன் அழகிய நெற்றியை உடைய தலைவி என்கிறான்.

4.3.8 சம்பிரதம் சம்பிரதம் என்றால் மாயம் என்று பொருள். இதை இந்திர சால வித்தை என்பர். இது உலக வழக்கில் கண் கட்டு வித்தை என்று கூறப்படுகிறது. சான்றாக ஒன்றைக் கூறலாம். கையில் சிறிது மண்ணை எடுத்துக் கொண்டு அதைச் சர்க்கரையாக மாற்றிக் காட்டுவது, இதை மாய வித்தை என்பர். இதையே சம்பிரதம் என்ற சொல் குறிக்கிறது. இவ்வாறு மாய வித்தைகள் செய்வதில் வல்லவர்கள் தங்கள் மாய வித்தையைப் புகழ்ந்து கூறுவதாக வரும் கலம்பக உறுப்பே சம்பிரதம் எனப்படும்.

நந்திக்கலம்பகத்திலும் இந்த உறுப்பு உள்ளது. அந்தப் பாடலைப் பார்ப்போமா?

வட்டன்றே நீர்இதனை மிகவும் காண்மின்

மற்றைக்கை கொட்டினேன் மாவின் வித்துஒன்று

இட்டுஅன்றே பழம்பழுப்பித்து உண்ணக் காண்மின்

இவைஅல்ல சம்பிரதம் இகலில் தெள்ளாற்று

அட்டுஅன்றே பொன்றும்வகை முனிந்த நந்தி

அவனிநா ராயணன் பாராளும் கோமான்

குட்டன்றே மழை நீரைக் குடங்கை கொண்டு

குரைகடலைக் குடிக்கின்றேன் குடிக்கின் றேனே

(நந்.கலம்பகம் – 68)

(வட்டு = மண் உருண்டை; கை கொட்டினேன் = கையில் போட்டு உள்ளேன்; வித்து = விதை; இகல் = போர்; அட்டு = போரிட்டு; பொன்றும் வகை = அழியும் படி; முனிந்த = சினம் கொண்ட; அவனி = உலகம்; நாராயணன் = திருமால்; கோமான் = மன்னர்க்கு மன்னன்; குட்டு = ஊருணி; குடங்கை = உள்ளங்கை; குரை = ஒலிக்கும்)

மாயவித்தை காட்டுபவன் கூறுகின்றான். ஐயாமார்களே! இதை நன்றாக உற்றுப் பாருங்கள். என் கையில் உள்ள இது என்ன? இது ஒரு மண் உருண்டை அல்லவா? இதை ஒரு கையில் இருந்து மற்றொரு கையில் போடுகிறேன். இந்த மண் உருண்டையில் ஒரு மாங்கொட்டையை வைக்கிறேன். அதை உடனே செடியாக முளைக்க வைப்பேன். பின்பு அதில் மாம்பழங்கள் பழுக்கச் செய்வேன். அதை உங்களுக்கு உண்ணவும் தருவேன். இது கூடப் பெரிய வித்தை அல்ல. இன்னொன்றையும் செய்வேன். அது என்ன?

நந்திவர்மன் மன்னன், அவன் தெள்ளாறு என்ற இடத்தில் பகைவர்களுடன் போர் செய்தான். அந்தப் போரில் பகைவர்களை அழித்தான். அவன் மண் உலகத் திருமால் போன்றவன். உலகை ஆளும் மன்னர்களுக்கு எல்லாம் மன்னன். அவன் நாட்டில் ஊருணிகள் உள்ளன. ஊருணி என்றால் என்ன? ஊர் + உணி = ஊருணி. ஊரில் உள்ள மக்கள் உண்ணும் நீர் நிறைந்த குளங்கள். அந்த ஊருணியிலுள்ள நீரை மட்டும் அல்லாது மேகம் பொழியும் மழை நீரையும் என் உள்ளங்கையில் அடக்கி விடுவேன். அது மட்டும் அல்ல. கடல் நீர் முழுவதையும் குடித்து விடுவேன். இதுவும் எனக்கு ஒரு பெரிய செயல் அல்ல என்று மாய வித்தை செய்பவன் தன் திறமையைக் கூறுகின்றான்.

இப்பாடல் மூலம் நந்திவர்மன் என்ற மன்னனின் வீரமும் அவன் நாட்டின் நீர் வளமும் காட்டப்படுகின்றன.

4.3.9 பாண் கலம்பக இலக்கியத்தின் உறுப்புகளில் ஒன்று பாண் என்பதும் ஆகும். பாண் என்றால் பண்களை இசைக்கும் தன்மை என்று பொருள். பண் என்பது இசை ஆகும். பண் என்பது பாண் என்று ஆனது. இது பண்ணைப் பாடுவோனைக் குறிக்கும். இந்த உறுப்பு பாணன் என்ற பெயராலும் குறிக்கப்படும் பாண் என்ற உறுப்பாக அமைந்த நந்திக் கலம்பகம் பாடல் இதோ தரப்படுகிறது.

உரை வரம்பு இகந்த உயர்புகழ்ப் பல்லவன்

அரசர் கோமான் அடுபோர் நந்தி

மாவெள் ளாற்று மேவலர்க் கடந்த

செருவேல் உயர்வு பாடினன் கொல்லோ

நெருநல் துணியரைச் சுற்றிப்

பரடு திறப்ப தன்னால் பல்கடைத்

திரிந்த பாணன் நறும்தார் பெற்றுக்

காஅர் தளிர்த்த கானக் கொன்றையின்

புதுப்பூப் பொலன்கலன் அணிந்து

விளங்கு ஒளி ஆனனன் இப்போது

இளம்களி யானை எருத்தம்மிசை அன்னே

(நந்.கலம்பகம் – 27)

(உரை = புகழ்; வரம்பு = எல்லை; இகந்த = கடந்த: அடு = கொல்லும்; மா = பெரிய; மேவலர் = பகைவர்; கடந்த = வென்ற, செரு = போர்; உயர்வு = பெருமை; பாடினன் கொல்லோ = பாடினான் போலும்; நெருநல் = நேற்று; அரை = இடை; பாடு = குதிகால்; திறப்ப = தோன்றும்படி; கடை = வீட்டு வாசல்; கார் = மழை; பொலன் கலன் = பொன்னால் ஆகிய அணிகலன்; களி = களிப்பு; எருத்தம் = பிடரி; மிசை = மேல்)

இப்பாடல் பாணனைக் கண்டவர்கள் கூறுவதாக அமைகின்றது.

மக்கள் பலர் செல்கின்ற ஒரு பெரிய தெரு. அந்தத் தெருவில் ஒருவன் யானையின் மீது ஏறி வருகின்றான். அவன் மணம் மிகுந்த மாலை அணிந்துள்ளான். பொன்னால் ஆன அணிகலன்களை அணிந்துள்ளான். மகிழ்ச்சி நிறைந்த முகத்தை உடையவனாய் உள்ளான். இவன் யாராக இருக்கும் என்று மக்கள் எண்ணினர். அவன் அருகில் சென்று பார்க்கின்றனர். அவ்வாறு பார்த்த போது அவன் அந்த மக்களுக்கு அறிமுகம் ஆனவன்தான். அவன் யார்? நேற்று வரையிலும் இடையில் கந்தல் ஆடை உடுத்தி இருந்தான். குதிகால் தோன்றும்படி ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று இரந்து அலைந்தவன். அந்தப் பாணனே இவன் என்று அறிந்து கொண்டனர். அந்தப் பாணனுக்கு இத்தனை சிறப்புகள் எவ்வாறு வந்திருக்கும் என்று எண்ணுகின்றனர். இறுதியில் அவர்கள் ஒரு முடிவுக்கு வருகின்றனர்.

புகழ் மொழிகளின் எல்லையைக் கடந்தவன்; பரந்த புகழ்க்கு உரியவன். மன்னர்களுக்கு எல்லாம் மன்னவன்; கொல்லும் போரினைச் செய்தவன். வெள்ளாறு என்ற இடத்தில் போர் செய்து பகைவர்களைக் கொன்றவன். அவனே நந்திவர்மன் என்ற மன்னன். அந்த நந்திவர்மனது வேலின் பெருமைகளைப் புகழ்ந்து இவன் பாடியிருப்பான்.அதனால் இவனுக்கு இவ்வளவு சிறப்புகள் கிடைத்துள்ளன என்ற முடிவுக்கு வருகின்றனர்.

4.4 தொகுப்புரை

நண்பர்களே! இது வரையிலும் பார்த்தவற்றைத் தொகுத்துப் பார்ப்போமா?

கலம்பகம் என்ற இந்த இலக்கிய வகையின் பெயர் வந்த முறையை அறியமுடிகிறது.

கலம்பக இலக்கிய வகையின் தோற்றம் தெரிய வருகிறது.

நந்திக்கலம்பகம் என்ற நூல் தொடர்பாக வழங்கப்பட்டு வரும் மரபு வழியான செய்தியை அறிய முடிகிறது.

பல வரலாற்றுச் செய்திகள் தெரிய வருகின்றன.

நந்திவர்மனின் கொடை, வீரம், ஆற்றல், புகழ் போன்ற பல சிறப்புகள் தெரிய வருகின்றன.

நந்திக்கலம்பகம் என்ற நூலின் இலக்கியச் சிறப்பு, உவமைச் சிறப்பு, சொல் ஆட்சித் திறன் என்பனவற்றை அறிந்து மகிழ முடிகிறது.

பாடம் - 5

மடல் இலக்கியம்

5.0 பாட முன்னுரை

அகப்பொருள் சார்பு உடைய சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று மடல் இலக்கியம் ஆகும். இந்த மடல் இலக்கிய வகையைச் சிறிய திருமடல் என்ற நூலின் துணையுடன் விளக்கிக் காட்டும் வகையில் இப்பாடம் அமைகின்றது.

5.1 மடல் இலக்கியம் - அறிமுகம்

நண்பர்களே! மடல் இலக்கியம் பற்றிய பொதுவான செய்திகளை முதலில் காண்போமா?

• பெயர்க் காரணம்

மடல் ஏறுதல் என்ற பொருளை விளக்கும் நிலையில் அமையும் இலக்கிய வகை ஆதலால் இது மடல் இலக்கியம் எனப்படுகிறது என்று பொதுவாகக் கூறலாம்.

இந்த இலக்கிய வகைக்கு வேறு பெயர்களும் உள்ளன. அவை யாவை?

1) வள மடல்

2) இன்ப மடல்

பன்னிரு பாட்டியல் (63), வெண்பாப் பாட்டியல் (28), நவநீதப் பாட்டியல் (செய்யுள் இயல் 22) போன்ற பாட்டியல் நூல்கள் இந்த இலக்கிய வகையை மடல் என்று குறிப்பிடுகின்றன.

முத்து வீரியம் (யாப்பு இயல், ஒழியியல், (126), பிரபந்த தீபிகை(210) போன்ற பாட்டியல் நூல்கள் இந்த இலக்கிய வகையை வளமடல் என்று கூறுகின்றன.

சிதம்பரப் பாட்டியல் (மரபியல் 10), பிரபந்த மரபியல் (14) போன்ற பாட்டியல் நூல்கள் இந்த இலக்கிய வகையை இன்ப மடல் என்று கூறுகின்றன.

இவற்றால் தொடக்க காலத்தில் இந்த இலக்கிய வகை மடல் என்று அழைக்கப்பட்டது. பின்னர் இன்ப மடல், வள மடல் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது என்பது தெரிய வருகின்றது.

5.1.1 தோற்றம் நண்பர்களே! இந்த மடல் இலக்கியத்தின் தோற்றத்தைப் பற்றிச் சிறிது பார்ப்போமா?

அகப்பொருள் கூறுகளில் ஒன்று மடல் ஏறுதல் என்பது ஆகும். தொல்காப்பியர் பொருள் அதிகாரம் களவு இயலில் (11) இதைப் பற்றிக் கூறுகின்றார். தலைவன் தலைவியிடம் காதல் கொள்கிறான். தலைவியைத் தன்னுடன் கூட்டுவிக்கும்படி தலைவன் தோழியிடம் வேண்டுகிறான். ஆனால் தலைவனால் தலைவியை அடைய முடியவில்லை. இதனால் தலைவன் மனம் வருந்துகிறான். இறுதியில் தலைவியை அடைவதற்காகத் தலைவன் மடல் ஏறப் போவதாகத் தோழியிடம் கூறுகின்றான்.

• மடல் கூற்றும் மடல் விலக்கும்

நம்பி அகப்பொருள் என்ற இலக்கண நூல் மடல் என்பதனை இரு நிலைகளில் விளக்குகின்றது.

தலைவன் தோழியிடம் தலைவியைத் தான் அடையாவிட்டால் மடல் ஏறுவேன் என்று கூறுவது மடல் கூற்று ஆகும்.

தோழி தலைவனிடம் மடல் ஏற வேண்டாம் என்று வேண்டித் தலைவன் மடல் ஏறுவதை விலக்குவது மடல் விலக்கு ஆகும்.

• சங்க இலக்கியங்களில்

சங்க இலக்கியங்களில் அகப்பொருள் தொடர்பான இலக்கியங்கள் மடல் பற்றிய செய்திகளைத் தருகின்றன சான்றாக,

துன்பத்தின் துணை ஆய மடல்

என்று கலித்தொகை (பாடல்.139: வரி-29) கூறக் காணலாம்.

தலைவன் தலைவியைப் பிரிந்த துன்பத்திற்கு மடல் துணையாக உள்ளது என்ற கருத்து இங்குக் காணப்படுகிறது. பிரிவு காலத்தில் எழுதப்படும் மடல், காதலர்கள் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துப் பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். எனவே துன்பத்தின் துணையாக அமைகிறது சங்க இலக்கியத்துள் இடம் பெறும் மடல் பற்றிய செய்திகள் மூலம் மடல் ஏற எண்ணுவோரின் மன நிலை, மடல் ஏறுவதன் நோக்கம் போன்றவை தெரிய வருகின்றன.

சங்க இலக்கியத்தில் மடல் பாடிய மாதங்கீரனார் என்ற புலவர் குறிப்பிடப்படுகிறார்.

திருக்குறளில் நாணுத்துறவுரைத்தல் என்ற அதிகாரத்தில் மடல் பற்றிய செய்திகளைத் திருவள்ளுவர் கூறுகின்றார்.

இந்த அதிகாரத்தில் காம நோயால் வருந்துபவர்களுக்கு மடல் காப்பு ஆக உள்ளமை, வெட்கத்தை விட்டு மடல் ஏறத் துணிதல் போன்ற செய்திகள் காணப்படுகின்றன.

நம்மாழ்வார் இறைவனின் பிரிவைப் பொறுக்காது தலைவி, பழி ஏற்படும் என்று எண்ணாது மடல் ஏறத் துணிந்தமையை நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பாடுகிறார். (திருவாய்மொழி, 5.3.9 & 10)

இவ்வாறு, இலக்கண நூல்களிலும், இலக்கிய நூல்களிலும் இடம் பெறும் மடல் பற்றிய செய்திகளைக் கருவாகக் கொண்டு மடல் என்ற தனி இலக்கிய வகை தோன்றியது எனலாம்.

• முன்னோடிகள்

இந்த மடல் இலக்கிய வகையின் முன்னோடியாகத் திகழ்பவர் திருமங்கை ஆழ்வார் ஆவார். இவர் சிறிய திருமடல், பெரிய திருமடல் என்ற இரண்டு மடல் இலக்கியங்களைப் பாடியுள்ளார்.

பின்னர், பல மடல் இலக்கியங்கள் எழுந்துள்ளன. அவற்றுள் தத்துவராயர் இயற்றிய கலி மடல், காளமேகப் புலவர் இயற்றிய சித்திர மடல், தாசி காளி முத்துப் புலவர் இயற்றிய வருண குல ஆதித்தன் மடல் என்பன சுட்டுவதற்கு உரியன ஆகும்.

5.1.2 மடலேறுதல் சங்க நூல்கள் மூலம் மடல் ஏறுதல் ஆகிய செயல் எவ்வாறு நிகழும் என்பதை உணர முடிகின்றது.

• குதிரை அமைப்பு

தலைவன் பனை மடலால் ஒரு குதிரையைச் செய்கின்றான். அது புல் உண்ணாத குதிரை. ஆனால் அது உண்மைக் குதிரையைப் போன்றதே என்று தலைவன் உணர்த்துகின்றான். அந்தக் குதிரையின் துணையுடன் தன் காம நோயை நீக்க முயல்வதாகத் தலைவன் கூறுகின்றான். பனை மடலால் தான் செய்த குதிரைக்கு மணிகளைக் கட்டுகின்றான். அதற்கு ஆவாரம் பூவால் தொடுக்கப்பட்ட மாலையைப் போடுகிறான். மடல் ஏறும் தலைவன் எலும்பு மாலையைத் தான் அணிந்து கொள்கிறான். தலையில் எருக்கம் பூவால் ஆன மாலையை அணிந்து கொள்கிறான். இந்தப் பூக்கள் விலை கொடுத்து வாங்காதவை. பயனற்ற பூக்கள். மடல் ஏறுபவன் தன் வெட்கத்தை விட்டு விடுகின்றான்.

• குதிரையின் மேல் தலைவன்

பனை மடலால் ஆன குதிரையின் மேல் தலைவன் ஏறுகின்றான். அந்தக் குதிரையைச் சிறுவர்கள் இழுத்துச் செல்கின்றனர். இதனைப் பார்ப்பவர்கள் ஆரவாரம் செய்கின்றனர்.

மடல் ஏறும் தலைவன் இவ்வாறு தன்னை மடல் ஏறும் நிலைக்கு உள் ஆக்கிய பெண்ணை இகழ்கின்றான். எனவே, இதைப் பார்க்கும் பலரும் அப்பெண்ணை இகழ்கின்றனர். இவ்வாறு மடல் ஏறுதல் ஆகிய நிகழ்ச்சி விளக்கப்படுவதைக் காணலாம்.

• பெண்கள் மடல் ஏறுதல்

மடல் ஏறுதல் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரியது என்பது மரபு. பெண்கள் மடல் ஏறுதல் மரபு அன்று. தொல்காப்பியரும் பெண்கள் மடல் ஏறுதல் இல்லை என்கின்றார்.

ஆனால் பன்னிரு பாட்டியல் நூல் தலைவர் கடவுளர்களாய் அமையும் நூல்களில் பெண்கள் மடல் ஏறுதலும் உண்டு என்று கூறுகின்றது. திருமங்கையாழ்வார் நாயகி பாவத்தில் பாடுகிறபோது மடல் ஏறுவதாகக் கூறுகிறார்.

5.1.3 சிறிய திருமடல் மடல் இலக்கிய வகையின் முன்னோடி நூலாக இந்தச் சிறிய திருமடல் காணப்படுகிறது. பன்னிரு ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல், பெரிய திருமடல் என்று இரு மடல் இலக்கியங்களைப் பாடியுள்ளார்.

மடல் இலக்கியத்தில் பாட்டுடைத் தலைவனின் பெயருக்கு ஏற்றவாறு எதுகை அமையும். எதுகை என்றால் என்ன? சொல்லின் இரண்டாவது எழுத்துக்கள் ஒன்று போல் வருமாறு பாடுவது எதுகை ஆகும். சிறிய திருமடலின் பாட்டுடைத் தலைவன் இறைவன் ஆகிய நாராயணன். இந்தப் பெயருக்கு ஏற்ப ஒவ்வோர் அடியிலும் உள்ள முதல் சொல்லின் இரண்டாம் எழுத்து நூல் முழுவதும் ஒத்து வருகின்றது. சான்றாகப் பின்வரும் அடிகளைக் காட்டலாம்.

நீரார் நெடுங்கயத்தைச் சென்றலைக்க நின்றுரப்பி

ஓரா யிரம்பணவெங் கோவியல் நாகத்தை

வாராய் எனக்கென்று மற்றதன் மத்தகத்து

சீரார் திருவடியால் பாய்ந்தான்.

(சிறிய திருமடல், அடிகள் 74-77)

என்ற அடிகளில் நீரார், ஓரா என இரண்டாவது எழுத்துக்கள் ஒன்று மேல் வருவதைக் காட்டலாம். இவ்வாறு நூல் முழுவதும் வருவது திருமங்கை ஆழ்வாரின் புலமைத் திறனைக் காட்டுகின்றது எனலாம்.

5.2 மடல் இலக்கியப் போக்கு

நண்பர்களே! மடல் இலக்கியம் என்பதைக் குறித்துப் பொதுவாகப் பார்த்தோம். இனி, சிறிய திருமடல் என்ற நூலின் துணையுடன் மடல் இலக்கிய வகையில் நூல் போக்கைக் காண்போமா?

5.2.1 உறுதிப் பொருள்கள் பொதுவாக உறுதிப்பொருள்கள் நான்கு என்று கூறப்படும். அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன ஆகும். ஆனால், சிறிய திருமடலில் தலைவி உலகில் உள்ள உறுதிப் பொருள்கள் மூன்று என்கிறார்.

முதலில் நிலவுலகம் பற்றித் தலைவி கூறுவதைக் காண்போமா?

காரார் வரைகொங்கை, கண்ணார் கடல்உடுக்கை

சீரார் சுடர்ச்சுட்டி செங்கலுழிப் பேராற்றுப்

பேரார மார்பின் பெருமா மழைக்கூந்தல்

நீரார வேலி நிலமங்கை யென்னும் . . . . . .

(சிறிய திருமடல், அடிகள் 1-4)

(கார் = மேகம்; வரை = மலை; கண் ஆர் = பரந்த; உடுக்கை = சேலை; சுடர் = சூரியன்; செங்கலுழி = சிவந்து ஓடும்)

என்கிறார். இந்த அடிகளில் நில உலகை ஒரு பெண்ணாகக் காட்டுகிறார். திருமங்கை ஆழ்வார்.

• நிலமகள்

மேகங்கள் சென்று தங்கும் அளவுக்கு மலைகள் உயர்ந்து காணப்படுகின்றன. இந்த மலைகள் பூமியாகிய பெண்ணின் மார்புகள், இடம் அகன்று பரந்த கடல் அவள் சேலை, சூரியன் அவள் இடும் பொட்டு (திலகம்), கருத்த மேகங்கள் அவளுடைய கூந்தல், இவ்வாறு நிலமகள் காணப்படுகின்றாள் என்கிறார்.

இத்தகைய நில உலகில் காணப்படும் உறுதிப்பொருள்கள் மூன்று என்கிறாள் தலைவி. அவை அறம், பொருள், இன்பம் என்பன ஆகும். இந்த நூலில் இன்பமே மேலானது. ஏன் எனில் இன்பத்தை அடைந்தவர்கள் அறத்தையும் பொருளையும் பெற்றவர்கள் ஆவார்.

5.3 தலைவிக்கு நிகழ்ந்தவை

தலைவி மற்ற பெண்களைப் பார்த்துத் தனக்கு உற்றதைக் கூறுகின்றாள். இதோ அந்தப் பாடல்அடிகள்.

ஏரார் இளமுலையீர்! என்தனக்கு உற்றதுதான்

காரார் குழலெடுத்துக் கட்டி – கதிர் முலையை

வாரார வீக்கி மணிமேகலை திருத்தி

ஆரார் அயில்வேல்கண் அஞ்சனத்தின் நீறணிந்து

சீரார் செழும்பந்து கொண்டடியா நின்றேன் நான்

(அடிகள் 17-21)

என்று தலைவி கூறுகின்றாள்.

(ஏர் = அழகு; உற்றது = நிகழ்ந்தது; கார் = கரிய; குழல் = கூந்தல்; வார் = கச்சு; வீக்கி = கட்டி; மணிமேகலை = ஓர் அணிகலன்; அஞ்சனம் = மை; செழும் பந்து = அழகிய பந்து)

பெண்களே! நான் கரிய கூந்தலில் முடித்தேன். வார் என்ற ஆடை வகையால் என் மார்புகளை இறுக்கிக் கட்டினேன். மணிமேகலை என்ற அணிகலனை அணிந்தேன். கண்களில் மை தீட்டினேன். இவ்வாறு என்னை அழகு படுத்திக் கொண்டு நான் பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது திருமால் குடக் கூத்து ஆடினான். இதை,

நீரார் கமலம்போல் செங்கண்மால் என்றொருவன்

பாரோர்கள் எல்லாம் மகிழப் பறைகறங்க

சீரார் குடமிரண்டு ஏந்திச் செழுந்தெருவே

ஆரார் எனச்சொல்லி ஆடும் . . . . .

(அடிகள் 22-25)

(நீர்ஆர் = நீர்நிலையில் உள்ள; கமலம் = தாமரை; செங்கண் = சிவந்த கண்களை உடைய; பறை = முரசு; கறங்க = ஒலிக்க)

என்று திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுகிறார்.

நான் பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது செந்தாமரை மலர் போன்ற சிவந்த கண்களை உடைய திருமால் வந்தான். எப்படி வந்தான்? பறை ஒலிக்க, இரண்டு குடங்களைக் கையில் ஏந்தி ஆடிக்கொண்டு வந்தான். அவ்வாறு ஆடும்போது ”பெண்களே உங்கள் பெண்மையைக் காத்துக் கொள்ளுங்கள்” என்று ஆடிக்கொண்டு வந்தான் என்று தலைவி கூறுகிறாள்.

இவ்வாறு திருமால் குடக்கூத்து ஆடிக்கொண்டு வருவதைப் பார்த்த தாய்மார்களும் மற்றவர்களும் என்னை அழைத்தனர். எனவே நானும் ஆங்குச் சென்றேன் என்று தலைவி கூறுகின்றாள்.

5.3.1 தலைவியின் மயக்கம் தலைவியின் மயக்கத்தைக் கண்டு அவளுடைய தாய்மார்கள் வருந்தினர். இந்த மயக்கம் நீங்கப் பாகவதர்களின் திரு அடித் தூசியைக் காப்பாக இட்டனர். சிவந்த குறிஞ்சி மலரால் ஆன மாலையைச் சாத்தன் என்ற பெண் தெய்வத்திற்கு அணிவித்து வணங்கினார். இதன் பிறகும் தலைவியின் மன மயக்கம் நீங்கவில்லை. இதனைத் தலைவி.

சீரார் செழும்புழுதிக் காப்பிட்டு – செங்குறிஞ்சித்

தாரார் நறுமாலைச் சாத்தற்குத்தான் பின்னும்

நேரா தனவொன்று நேர்ந்தாள் – அதனாலும்

தீராதென் சிந்தைநோய் தீராது

(அடிகள் 32-35)

(புழுதி = மண்; காப்பு = பாதுகாப்பாக; தார் = மாலை; சிந்தை = மனம்; நோய் = துன்பம்)

தலைவியின் நிலை கண்டு அவள் தாயார் வருந்தி மண் காப்பு இடுகின்றாள். நோய் நீங்குவதற்காக, பாகவதர்களின் கால் தூசியைக் காப்பாக இடும் வழக்கம் உண்டு. சாத்தன் என்ற தேவதையையும் வணங்கி வழிபட்டனர். எதனாலும் தலைவியின் துன்பம் நீங்கவில்லை.

5.3.2 தலைவியும் குறி கேட்டலும் ஏதேனும் நோய் ஏற்பட்டால் அந்த நோய் வருவதற்கு உரிய காரணம் யாது என்று குறத்தியை அழைத்துக் குறி கேட்கும் வழக்கம் அக்காலத்தில் காணப்பட்டது. அதன்படி தலைவியின் நிலையைக் குறி கேட்க நினைக்கின்றனர்.

ஆரானும் மூதறியும் அம்மனைமார் சொல்லுவார்

பாரோர் சொலப்படும் கட்டுப் படுத்திரேல்

ஆரானும் மெய்ப்படுவன் என்றார்

(அடிகள் : 37-39)

(முது அறியும் அம்மனைமார் = முதுமையான அறிவை உடைய தாய்மார்கள்; பாரோர் சொலப்படும் = உலக வழக்கப்படி; கட்டுப்படுத்தல் = குறி கேட்டல்)

• குறத்தி வருகை

தலைவியின் நிலை கண்ட முதுமையான அறிவை உடைய அவள் தாய்மார்கள் கூறிய வழக்கத்தின்படி குறத்தியை அழைத்துக் குறி கேட்கலாம் என்று முடிவு செய்கின்றனர். இதைக் கேட்டுக் கொண்டிருந்த குறத்தி ஒருத்தி தானாகவே வந்து குறி கூறத் தொடங்குகிறாள்.

• குறி கூறும் முறை

இவ்வாறு வந்த குறத்தி குறி கூறும் தன்மை காட்டப்படுகிறது. அந்தப் பாடல் அடிகளைப் பார்ப்போமா?

சீரார் சுளகில் சிலநெல் பிடித்தெறியா

வேரா விதிர்விதிரா மெய்சிலிரா கைமோவா

பேரா யிரம்உடையான் என்றாள் – பெயர்த்தேயும்

காரார் திருமேனி காட்டினாள்; கையதுவும்

சீரார் வலம்புரியே என்றாள் – திருத்துழாய்த்

தாரார் நறுமாலை கட்டுரைத்தாள்

(அடிகள் 41-46)

(பிடித்து எறியா – எடுத்து வீசி; சுளகு – முறம்; வேரா – வியந்து; விதிரா – விதிர் விதிர்த்து; மெய் சிலிரா – உடம்பு சிலிர்த்து; மோவா – மோந்து பார்த்து; பெயர்த்தேயும் – மீண்டும்; வலம்புரி – வலம்புரிச் சங்கு; துழாய் – துளசி)

குறத்தி வந்தாள். சுளகில் நெல்லை எடுத்து வீசினாள். விதிர் விதிர்த்தாள். மெய் சிலிர்த்தாள். கையை மோந்து பார்த்தாள் ஆயிரம் பெயர்களை உடைய திருமால் அல்லவா வந்துள்ளான் என்றாள். கரிய மேகத்தைக் காட்டி திருமாலின் நிறத்தைக் கூறினாள். அவன் கையில் சங்கு உள்ளது என்றாள். இத்தகையவன் யார் என்று கூறுகிறேன் என்று குறத்தி கூறத் தொடங்கினாள்.

• திருமாலின் பெருமை

குறத்தி திருமாலின் பெருமைகளைக் கூறுகின்றாள்.

குறள் வடிவம் எடுத்து உலகைத் தன் அடியால் அளந்தவன். இலங்கை நகரை அழித்தவன். கல்மழை பெய்த போது கோவர்த்தன கிரி என்ற மலையைக் குடையாகப் பிடித்துப் பசுக்களைக் காத்தவன். வெண்ணெய் உண்பதில் ஆசை உள்ளவன். இராவணனின் தங்கை ஆகிய சூர்ப்பனகையின் மூக்கையும் காதுகளையும் அறுத்தவன். சீதையை மீட்பதற்காக இராவணனுடன் போர் புரிந்தவன். நரசிம்ம வடிவம் எடுத்து இரணியன் மார்பைப் பிளந்தவன். முதலையின் வாயில் அகப்பட்ட கஜேந்திரன் ஆகிய யானையைக் காத்தவன். இவ்வாறு பல பெருமைகளை உடையவன் திருமால். அவனுக்குப் பல பெயர்கள் உண்டு. அந்தத் திருமாலே உங்கள் பெண்ணுக்கு நோய் உண்டாக்கியவன் என்று குறத்தி கூறுகிறாள்.

பேரா யிரம்உடையான், பேய்ப்பெண்டீர்! நும்மகளைத்

தீரா நோய்செய்தான் எனஉரைத்தாள்

(அடிகள் 103-104)

(பேய்ப்பெண்டீர் = அறிவு இல்லாத பெண்களே!; தீரா = தீர்க்க முடியாத; உரைத்தாள் = சொன்னாள்)

என்று தலைவி கூறுகிறாள்.

முன்னே கூறியவாறு பல்வேறு பெருமைகளைக் கொண்ட திருமாலே உங்கள் மகளுக்கு இத்தகைய துன்பத்தைக் கொடுத்துள்ளான். எனவே, நீங்கள் தாழ்ந்த கடவுளால் இந்த நோய் வந்துள்ளது என்று எண்ணி வருந்தாதீர்கள் என்று குறத்தி தலைவியின் தாய்மார்களிடம் கூறுகிறாள்.

5.3.3 தலைவியும் தூதும் தலைவனின் பிரிவைத் தாங்கமாட்டாத தலைவி நெஞ்சைத் தலைவனிடம் தூதாக அனுப்புகிறாள். தூதுச் செய்தி இடம் பெறும் அடிகளையும் பார்ப்போமா?

வாராய் மடநெஞ்சே! வந்து – மணி வண்ணன்

சீரார் திருத்துழாய் மாலை நமக்குஅருளி

தாரான் தருமென் றிரண்டத்தில் ஒன்றுஅதனை

ஆரானும் ஒன்னாதார் கேளாமே, சொன்னக்கால்

ஆராயும் மேலும், பணிகேட்டு அதுஅன்றெனிலும்;

போராது ஒழியாது போந்திடுநீ என்றேற்குக்

காரார் கடல்வண்ணன் பின்போன நெஞ்சமும்

வாராதே என்னை மறந்தது தான்

(அடிகள் : 115-122)

(வாராய் = வருவாயாக; மணிவண்ணன் = நீல நிறமுடைய திருமால்; தாரான் = தரமாட்டான்; தரும் = தருவான்; இரண்டத்தில் = இரண்டில்; ஒன்னாதார் = விரும்பாதவர்; கேளாமே = கேட்காமல்; சொன்னக்கால் = சொன்னாய் ஆகில்; போராது ஒழியாது = தங்கி விடாமல்; போந்திடு = வந்துவிடு; என்றேற்கு = என்ற எனக்கு; கடல் வண்ணன் = கடல் போன்ற நீல நிறம் உடைய திருமால்)

தலைவி நெஞ்சை அழைக்கின்றாள். நெஞ்சே! நீல நிறம் உடைய திருமால் எனக்குத் துளசி மாலையைத் தருவானா? தர மாட்டானா? என்ற இரண்டில் ஒன்றைக் கேட்டுத் தெரிந்து கொள். என்னை விரும்பாதவர்கள் அங்குத் திருமாலின் பக்கத்தில் இருந்தால் இதைக் கேட்காதே. திருமாலிடம் நீ கேட்கும் போது அவன் என்னைத் தெரியாது என்று கூறினாலும் சரி. அதைக் கேட்டுத் தெரிந்துவிட்டு வந்துவிடு. அங்கே தங்கி விடாதே என்று கூறுகிறாள். ஆனால், திருமாலிடம் தூது சென்ற அவள் நெஞ்சம் மீண்டும் அவளிடம் வரவில்லை. ”அது என்னை மறந்து விட்டது” என்கிறாள் தலைவி.

5.3.4 தலைவியும் மடல் ஏறுதலும் தலைவி தலைவனாகிய திருமாலை அடைய வேண்டி ஊர் ஊராகச் சென்று மடல் ஏறப் போவதாகக் கூறுகிறாள்.

திருமாலின் திருவடிகளைக் கண்டு மகிழும் வரையில் நான் ஊர் ஊராகச் செல்வேன் என்று தலைவி கூறுகிறாள். எந்த எந்த ஊர்களுக்குச் செல்வேன் என்பதையும் கூறுகிறாள். அந்தப் பாடல் அடிகள் இதோ தரப்படுகின்றன.

. . . . . . . . . . . . . . . .நானவனைக்

காரார் திருமேனி காணுமளவும் போய்,

சீரார் திருவேங் கடமே திருக்கோவில்

ஊரே மதிள்கச்சி ஊரகமே பேரகமே

பேரா மருதுஇறுத்தான் வெள்ளறையே வெஃகாவே

பேராலி தண்கால் நறையூர் திருப்புலியூர்

ஆராமம் சூழ்ந்த அரங்கம் – கணமங்கை

காரார் மணிநிறக் கண்ணனூர் விண்ணகவும்

சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர்

காரார் குடந்தை கடிகை கடன்மல்லை

ஏரார் பொழில்சூழ் இடவெந்தை நீர்மலை

சீராரும் மாலிரும் சோலை திருமோகூர்

பாரோர் புகழும் வதரி வடமதுரை

ஊராய வெல்லாம் ஒழியாமே

(அடிகள் : 137-149)

(அளவும் = வரையிலும்; சீர் = சிறப்பு; மதிள் = மதில்; மருது = மருதமரம்; இறுத்தான் = ஒடித்தவன்)

மேகம் போன்ற கரிய நிறம் கொண்ட திருமாலைக் காணும் வரை நான் பின்வரும் இடங்களுக்குச் செல்வேன் என்று தலைவி கூறுகிறாள். அந்த இடங்கள் எவை என்று பார்ப்போமா?

• திருமால் எழுந்தருளியுள்ள இடங்கள்

திருவேங்கடமலை, திருக்கோவிலூர், ஊரகம், திருவெள்ளறை, திருவெஃகா, திருவாலி, திருத்தண்கால், திருநரையூர், திருப்புலியூர், திருவரங்கம், திருக்கண்ண மங்கை, திருவிண்ணகர், திருக்கண்ணபுரம், திருச்சேறை, திருவழுந்தூர், திருக்குடந்தை, திருக்கடிகைத்தடங்குன்றம், திருக்கடல் மல்லை, திருவிடவெந்தை, திருநீர் மலை, திருமால் இரும்சோலை மலை, திரு மோகூர், வதரியாசிரமம், வடமதுரை முதலிய திருமால் எழுந்தருளி உள்ள இடங்களுக்குச் செல்லப் போவதாகத் தலைவி கூறுகிறாள்.

இவ்வாறு இந்த இடங்களுக்கு எல்லாம் சென்று, திருமாலின் பெயர்களைக் கூறிக் கொண்டு மடல் ஏறுவேன் என்கிறாள். இது பின்வரும் அடிகளில் காட்டப்படுகிறது.

ஓரானைக் கொம்பொசித்து ஓர்ஆனை கோள்விடுத்த

சீரானைச் செங்கண் நெடியானைத் தேன்துழாய்த்

தாரானை தாமரைபோல் கண்ணானை-எண்ணரும்சீர்ப்

பேரா யிரமும் பிதற்றி – பெரும் தெருவே

ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்

வாரார்பூம் பெண்ணை மடல்

(அடிகள் 150-153)

(கோள் = துன்பம்; விடுத்த = நீக்கிய; சீர் = சிறப்பு; ஊராது = ஏறமாட்டாது; ஒழியேன் = நிறுத்த மாட்டேன்; பெண்ணை மடல் = பனை மடல்)

திருமால் குவலயாபீடம் ஆகிய யானையின் கொம்பை ஒடித்தவன்; கஜேந்திரன் ஆகிய யானையின் துன்பத்தை நீக்கியவன்; சிவந்த கண்களை உடையவன்; எனக்கு எட்டாதவன்; தேன் நிறைந்த துளசி மாலையை அணிந்தவன்; தாமரை போன்ற கண்களை உடையவன்; இத்தகைய பெருமைகளை உடைய தலைவனுடைய பெயர்களை எப்போதும் பிதற்றிக் கொண்டு பெரிய வீதிகளின் வழியே பனை மடலில் ஏறுவேன். ஊர் மக்கள் பழித்தாலும் மடல் ஏறுவதை நிறுத்த மாட்டேன் என்று கூறுகிறாள்.

இதுவே, சிறிய திருமடல் என்ற நூலின் போக்கு ஆகும்.

5.4.தொகுப்புரை

நண்பர்களே! இதுவரையிலும் பார்த்தவற்றைத் தொகுத்துக் காண்போமா?

மடல் என்ற இலக்கிய வகையின் பெயர்க்காரணம், மடல் இலக்கியத்தின் வேறு பெயர்கள் என்பன தெரிய வருகின்றன.

மடல் இலக்கிய வகையின் தோற்றத்தைப் பற்றி அறிய முடிகின்றது.

திருமங்கை ஆழ்வார் இயற்றிய திருமடலின் அமைப்பை உணர முடிகிறது.

சிறிய திருமடல் என்ற நூலில் இடம் பெறும் செய்திகளையும், இலக்கியச் சிறப்புகளையும் அறிய முடிகின்றது.

பாடம் - 6

கோவை இலக்கியம்

6.0 பாட முன்னுரை

தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளில் கோவை இலக்கியமும் ஒன்று ஆகும். இந்த இலக்கிய வகை அகப்பொருள் கோவை என்ற பெயராலும் அழைக்கப்படும். இது நாடகப்போக்கு உடைய இலக்கிய வகையாகத் திகழ்கின்றது. இந்தக் கோவை இலக்கிய வகையைத் திருக்கோவையார் என்ற நூலின் துணையுடன் விளக்கும் வகையில் இப்பாடம் அமைகின்றது.

6.1 கோவை இலக்கியம் - அறிமுகம்

நண்பர்களே! கோவை இலக்கியம் பற்றிய சில பொதுவான செய்திகளை முதலில் காணலாம்.

• பெயர்க் காரணம்

கோவை என்ற சொல்லின் பொருள் யாது? முறையாகக் கோக்கப்பட்டது கோவை என்று பொருள்படும். இந்த இலக்கிய வகையுள் எவை எவை முறையாகக் கோக்கப்பட்டு உள்ளன?

அகப்பொருளுக்கு உரிய துறைகள் பலவற்றை முறையாகக் கோக்கப்பட்ட நூல் ஆகையால் இது கோவை இலக்கியம் எனப்படுகிறது. கோவை இலக்கியப் புலவர்கள் அகத்துறையைச் சார்ந்த பாடல்களை வரிசைப்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாகச் சங்கிலித் தொடர்போலக் கோவையாகப் பாடி உள்ளனர்.

6.1.1 தோற்றம் தொல்காப்பியம் என்ற இலக்கண நூலில் இடம் பெறும் பொருள் அதிகாரக் கருத்துகளே கோவை இலக்கியம் தோன்றுவதற்குக் கருக்களாய் அமைந்தன எனலாம். தொல்காப்பியர் பொருள் அதிகாரத்தில் கூறும் அகப்பொருள் துறைகளை நாடகப்போக்குடன் அமைத்துப் புலவர்கள் கோவை இலக்கியத்தைப் பாடினர்.

தொல்காப்பியத்திற்குப் பின் இறையனார் அகப்பொருள், மாறன் அகப்பொருள், நம்பி அகப்பொருள் போன்ற இலக்கண நூல்கள் தோன்றின. இந்த இலக்கண நூல்கள் கூறும் அகப்பொருள் செய்திகளுக்கு எடுத்துகாட்டுக்களாக இலக்கியம் படைக்கும் முயற்சியில் புலவர்கள் ஈடுபட்டனர். இந்த முயற்சியின் விளைவே கோவை இலக்கியம் எனலாம்.

சான்றுகளாகப் பாண்டிக்கோவை, தஞ்சை வாணன் கோவை என்ற நூல்களைக் கூறலாம். பாண்டிக்கோவை என்ற நூல் இறையனார் அகப்பொருள் என்ற இலக்கண நூலுக்கு எடுத்துக்காட்டு இலக்கிய நூலாக உள்ளது. தஞ்சை வாணன் கோவை என்ற நூல் நம்பி அகப்பொருள் என்ற இலக்கண நூலுக்கு எடுத்துக்காட்டு இலக்கிய நூலாக உள்ளது.

சங்க இலக்கியங்களில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்ற நூல்கள் முழுக்க முழுக்க அகப்பொருள் சார்ந்த இலக்கியங்கள் ஆகும். இந்த நூல்களை அடிப்படையாகக் கொண்டும் கோவை இலக்கியம் தோன்றியது எனலாம்.

திருக்குறளில் உள்ள காமத்துப்பால் இடம் பெறும் திருக்குறள்களும் கோவை இலக்கிய வகையின் கருக்களாக அமைந்துள்ளன என்று கருதலாம்.

பக்தி இலக்கியத்தில் இறைவனைத் தலைவனாகவும், தம்மைத் தலைவியாகவும் கொண்டு அகப்பொருள் மரபில் பக்தி இலக்கியச் சான்றோர்கள் பாடல்கள் பாடி உள்ளனர். இப்பாடல்களும் கோவை இலக்கியத்தின் கருக்களாய் உள்ளன. இவ்வாறு, இலக்கண நூல்களிலும் இலக்கிய நூல்களிலும் இடம் பெற்ற அகப்பொருள் செய்திகளைக் கருக்களாகக் கொண்டு கோவை என்ற பெயரில் தனியான ஓர் இலக்கிய வகை தோன்றியது எனலாம்.

6.1.2 கோவை நூல்கள் கோவை இலக்கிய நூல்களில் முதலில் வைத்து எண்ணப்படுவது பாண்டிக் கோவை என்ற நூல் ஆகும். இந்நூலின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது. இந்நூலை இயற்றிய ஆசிரியரின் பெயரை அறியமுடியவில்லை.

பாண்டிக்கோவை என்ற நூலை அடுத்துத் திருக்கோவையார் என்ற நூல் தோன்றியது. இதை அடுத்து, கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தஞ்சைவாணன் கோவை என்ற நூல் எழுந்தது. இந்நூலை இயற்றியவர் பொய்யாமொழிப் புலவர் ஆவார். இதைத் தொடர்ந்து பல கோவை நூல்கள் வந்து உள்ளன. இது வரையிலும் எழுபது கோவை நூல்கள் தோன்றி உள்ளன என்று கூறப்படுகிறது.

அகப்பொருள் துறைகள் பலவற்றை நானூறு பாடல்களில் பாடுவதற்குப் பதில் ஒரே துறையை நானூறு பாடல்களில் பாடும் மரபும் ஏற்பட்டது. இவ்வகையில் தோன்றிய இலக்கியத்தை ஒரு துறைக் கோவை என்பர்.

• திருக்கோவையார் தோற்றம்

திருக்கோவையார் என்ற நூல் மாணிக்கவாசகப் பெருமானால் இயற்றப்பட்டது. இந்த நூல் எவ்வாறு தோன்றியது என்பதற்கு மரபு வழியான செய்தி ஒன்று உள்ளது. அதைப் பற்றிக் காண்போமா?

• மரபுவழிச்செய்தி

மாணிக்கவாசகர் இறைவன் சிவபெருமானிடம் மிகுந்த அன்பு கொண்டவர். இறைவன் கோவில் கொண்டு எழுந்து அருளி உள்ள பல கோயில்களுக்கும் சென்று வந்தார். இறுதியில் இக்காலத்தில் சிதம்பரம் என்று அழைக்கப்படும் தில்லை நகருக்கு வந்தார். அங்கு ஒரு தவக்குடில் அமைத்து அதில் இருந்து இறைவனைப் பாடி மகிழ்ந்து வந்தார்.

ஒரு நாள் மாணிக்கவாசகரின் தவக்குடிலுக்கு ஒரு பெரியவர் வந்தார். அவர் மாணிக்கவாசகரிடம் சிவபெருமான் ஆணையாலே வந்ததாகக் கூறினார். மாணிக்கவாசகரின் பக்தியைப் பலவாறு புகழ்ந்தார். அவர் மாணிக்க வாசகரிடம் சிவபெருமானைத் தலைவராகக் கொண்டு ஒரு கோவை நூல் அருள வேண்டும் என்று வேண்டினார். அதற்கு ஏற்ப மாணிக்கவாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார் என்ற நூலைப் பாடினார். அந்தப் பெரியவர் மாணிக்கவாசகர் பாடிய 400 பாடல்களையும் ஏடுகளில் எழுதி எடுத்துச் சென்றுவிட்டார்.

அடுத்த நாள் காலையில் தில்லைக் கோயிலில் பூசை செய்ய வந்தவர் வாயில் படியில் ஏடுகள் இருப்பதைப் பார்த்தார். ஊர் மக்களுக்கு இதைத் தெரிவித்தார். அனைவரும் கோயிலில் கூடினர். ஏட்டை எடுத்துப் பிரித்துப் படித்தனர். அந்த ஏடுகளில் திருவாசகச் செய்யுள்களும் திருக்கோவையாரின் 400 செய்யுள்களும் இருந்தன. திருக்கோவையார் முடியும் இடத்தில் இவை திருவாதவூரன் பாட, அழகிய திருச்சிற்றம்பலம் உடையான் எழுதியவை என்று இருந்தது.

• பாடல்களின் பொருள்

ஊரிலுள்ள பெரியவர்கள் மனம் மகிழ்ந்து மாணிக்கவாசகரிடம் வந்தனர். நடந்ததைக் கூறினார். மாணிக்கவாசகர் மனம் நெகிழ்ந்தார். பெரியவர்கள் மாணிக்கவாசகரிடம் அவர் எழுதிய பாடல்களுக்குப் பொருள் கேட்டனர். மாணிக்கவாசகர் பெரியவர்களைக் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். இறைவன் முன்னர் நின்றார், நான் எழுதிய பாடல்களுக்குப் பொருள் இவரே என இறைவனைக் காட்டினார். பின் மாணிக்கவாசகர் சிவ அருள் ஒளியில் மறைந்தார். இவ்வாறு திருக்கோவையார் தோன்றியது என்ற செய்தி உள்ளது.

திருக்கோவையார் 25 அதிகாரங்களைக் கொண்டது. மொத்தம் 400 பாடல்களைக் கொண்டது.

திருக்கோவையார் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் தில்லையில் எழுந்து அருளியுள்ள இறைவனே ஆவான்.

6.2 பாடுபொருள்

நண்பர்களே! கோவை இலக்கிய வகையின் பாடு பொருளைக் காண்போமா? இதற்கு மாணிக்கவாசகர் இயற்றிய திருக்கோவையாரைத் துணையாகக் கொள்வோம்.

திருக்கோவையார் என்ற நூலில் 400 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு துறையை விளக்குகின்றது. இந்த வகையில் திருக்கோவையாரில் உள்ள 400 துறைகளையும் விளக்குவதற்குக் காலம் போதாது. எனவே, இடை இடையே சில பாடல்களை எடுத்துக் கொண்டு அவற்றுள் இடம் பெறும் செய்திகளை விளக்கமாகக் காணலாம்.

6.2.1 தலைவனின் ஐயம் தலைவன் தலைவியைக் காண்கின்றான். அவள் அழகைக் கண்டு வியக்கின்றான். இவள் யாராக இருக்கும் என்று ஐயம் கொள்கின்றான். இச்செய்தியைக் கூறுவதே ஐயம் என்ற துறை ஆகும். ஐயம் என்ற துறையில் அமைந்த திருக்கோவையார் பாடலைக் காண்போமா?

போதோ விசும்போ புனலோ பணிகளது பதியோ

யாதோ அறிகுவது ஏதும் அரிதுயமன் விடுத்த

தூதோ அனங்கன் துணையோ இணையிலி தொல்லைத்

தில்லை

மாதோ மட மயிலோ என நின்றவர் வாழ் பதியே

(பாடல் – 2)

(போது = மலர்; விசும்பு = ஆகாயம்; புனல் = நீர்; பணி – பாம்பு; அனங்கன் = மன்மதன்)

தலைவன் தன் நெஞ்சை நோக்கிக் கூறுவதாக இப்பாடல் அமைகின்றது. மனமே! இங்கு நிற்கும் பெண் யமனால் அனுப்பப்பட்ட தூதோ? அனங்கன் என்றால் உருவம் இல்லாதவன் என்று பொருள். அதாவது மன்மதன். இப்பெண் மன்மதனின் துணையோ! மயிலோ? தாமரைப் பூவில் வாழும் திருமகளோ? விண்ணவர் மகளோ? நீர்அடியில் உள்ள மகளோ? நாகலோகத்து மகளோ? ஈடற்ற தில்லை நகரில் வாழும் பெண்ணோ? என்று தலைவன் தலைவியைப் பார்த்து ஐயம் கொள்கின்றான்.

இதற்கு உரிய பேரின்பப் பொருள் என்ன என்று பார்ப்போமா? இறைவனுடைய திருமேனியை (உடம்பை) முதல் முதலாகக் கண்ட உயிர் பலவாறாக ஐயம் கொள்ளுதல் என்பதை இப்பாடல் குறிப்பிடுகின்றது.

6.2.2 தலைவனின் கவலை திருக்கோவையார் என்ற நூலில் கவன்று உரைத்தல் என்று ஒரு துறை உள்ளது. இதன் பொருள் யாது? தலைவன் தலைவியிடம் காதல் கொள்கிறான். தலைவியை நினைத்துத் தலைவன் வருந்துகின்றான். அதைக் கண்ட தலைவனின் தோழன் தலைவியின் பொருட்டு இவ்வாறு வருந்தியது தகாது என்று தலைவனிடம் கூறுகின்றான். தோழன் கூறிய பிறகும் தலைவனின் துன்பம் தீரவில்லை. எனவே தலைவனின் துன்பத்திற்குக் காரணம் இருத்தல் வேண்டும் என்று தோழன் எண்ணுகின்றான். எனவே தோழன் தலைவனிடம் அவன் கவலைக்கு உரிய காரணத்தைக் கேட்கின்றான். இந்தப் பொருளை உடைய திருக்கோவையார் பாடல் இதோ.

விலங்கலைக் கால்விண்டு மேன்மேல் இடவிண்ணும்

மண்ணும் முந்நீர்க்

கலங்கலைச் சென்ற அன்றும் கலங்காய் கமழ் கொன்றை

துன்றும்

அலங்கலைச் சூழ்ந்த சிற்றம்பலத்தான் அருளில்லவர்

போல்

துலங்கலைச் சென்றுஇதுஎன் னோவள்ளல் உள்ளம்

துயர்கின்றதே

(பாடல் – 24)

(விலங்கல் = மலை; கால் = காற்று; விண்டு = பிளந்து; முந்நீர் = கடல்; கலங்கலைச் சென்ற = கலங்குதலை அமைந்த; கலங்காய் = வருந்தவில்லை; அலங்கல = மாலை; சூழ்ந்த = சுற்றிய; துலங்கல் = துளங்குதல்; துயர்கின்றது = வருந்துகின்றது)

பாங்கன் தலைவனிடம் கேட்கின்றான். மலைகளைக் காற்றுப் பிளக்கிறது. விண்ணையும் மண்ணையும் கடல் கலக்குகிறது. இத்தகைய நிலையிலும் தலைவனே நீ கலங்கமாட்டாய். ஆனால் இப்போது நீ துன்பம் கொள்கிறாய். எப்படிப்பட்ட துன்பம்? கொன்றை மலரால் ஆகிய மாலையைத் தலையில் அணிந்தவன் சிவபெருமான். அத்தகைய இறைவனுடைய அருளைப் பெறாதவர்கள் மிகவும் வருந்துவர். அதைப் போன்று எதற்கும் வருந்தாத நீ இப்போது வருந்துகின்றாய். அதற்குக் காரணம் யாது? என்ற தோழன் தலைவனிடம் கேட்கின்றான். இப்பாடலில் இறைவனிடம் அன்பு செலுத்தாதவர் மிகவும் துன்பம் அடைவர் என்பது கூறப்படுகிறது.

6.2.3 தலைவியைக் காணுதல் திருக்கோவையாரில் இந்தத் துறை குறிவழிக் காண்டல் என்று குறிப்பிடப்படுகின்றது.

தலைவன் துன்பம் கொள்கின்றான். தோழன் தலைவனிடம் அவன் துன்பத்திற்கு உரிய காரணம் என்ன என்று கேட்கிறான். தலைவன் தலைவியின் பிரிவால் வந்த துன்பம் என்று கூறுகின்றான். அதற்குத் தோழன் தலைவியின் தன்மையையும், தலைவி இருக்கும் இடத்தையும் கேட்கின்றான். தலைவன் தலைவி பற்றிய செய்திகளைக் கூறுகின்றான். அதைக்கேட்ட தோழன் தலைவன் கூறிய வழியிலே சென்று தலைவியைக் காணச் செய்கின்றான். தலைவன் கூறிய இடத்தைச் சென்று அடைகின்றான். அந்த இடத்தில் நின்று தலைவி தன்னைக் காணாதபடி தோழன் தலைவியைப் பார்க்கிறான். இந்தத் துறையில் அமைந்த பாடல் இதோ.

வடிக்கண் இவைவஞ்சி அஞ்சும் இடைஇது வாய்பவளம்

துடிக்கின்றவா வெற்பன் சொற்பரி சேயான்

தொடர்ந்துவிடா

அடிச்சந்த மாமலர் அண்ணல்விண் ணோர்வணங்கு

அம்பலம்போல

படிச்சந் தமும்இதுவே இவளே அப்பணி மொழியே

(பாடல்-32)

(வடி = அழகு; வஞ்சி = வஞ்சிக் கொம்பு; வெற்பன் = தலைவன்; சொற்பரிசு = சொன்ன முறைப்படி; அண்ணல் = தலைவன்; படிச்சந்தம் = ஒப்புமை)

தோழன், தலைவன் கூறியவாறு சென்று தலைவியைக் காண்கிறான். தலைவியின் கண்களைப் பார்க்கிறான். அவை மா வடுவைப் பிளந்தது போன்று உள்ளன. இடையைப் பார்க்கிறான். அது வஞ்சிக் கொம்பு அச்சம் கொள்ளும் படியாக உள்ளது. அவ்வளவு மெல்லிய இடை, வாய் பவளம் போன்று சிவப்பு நிறமுடன் உள்ளது. அந்த வாய் துடிக்கின்றது. தலைவன் கூறிய அனைத்தும் ஒத்து உள்ளன. எனவே தலைவன் கூறிய தலைவி இவளே என்று தோழன் உறுதி செய்கின்றான்.

இந்தப் பாடலில் தலைவியின் கண்களுக்குப் பிளந்த மா வடு ஒப்புமை கூறப்படுகிறது. தலைவியின் சிவந்த வாய்க்குப் பவளம் உவமையாகக் கூறப்படுகிறது.

6.2.4 தலைவனின் குறை தலைவன் தலைவியைத் தேடிப் பலமுறை வருகின்றான். தலைவியும் தலைவனிடம் காதல் கொள்கின்றாள். தலைவன் தலைவியிடம் பேசுவதற்காகப் பல கேள்விகளைக் கேட்கின்றான். ஆனால் தலைவியும் தோழியும் எந்தப் பதிலையும் கூறவில்லை. இதனால் தலைவனின் முகம் வாடுகிறது. தலைவனின் முகம் வாடுவதைக் கண்ட தலைவியின் முகமும் வாடுகின்றது. இதைத் தோழி பார்க்கின்றாள். தலைவியின் முகம் வாடுவதற்குத் தலைவன் அடிக்கடி இங்கு வந்து செல்வதே காரணம் என்று தோழி எண்ணுகின்றாள். இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும் தோழியிடம் தலைவன் வருகின்றான். தோழியிடம் தனக்குக் குறை உள்ளது போலப் பணிவான சொற்கள் பலவற்றைக் கூறுகிறான். இந்தத் துறை குறையுற்று நிற்றல் என்று சுட்டப்படுகிறது.

குறையுற்று நிற்றல் என்ற துறையில் அமைந்த பாடலைப் பார்ப்போமா?

மடுக்கோ கடலின் விடுதிமில் அன்றி மறிதிரைமீன்

படுக்கோ பணிலம் பலகுளிக்கோ பரன்தில்லை முன்றில்

கொடுக்கோ வளைமற்று நும்ஐயர்க்கு ஆயகுற்றேவல்

செய்கோ

தொடுக்கோ பணியீர் அணியீர் மலர்நும் சுரிகுழற்கே

(பாடல் – 63)

(மடுக்கோ = செலுத்துவேனோ; திமில் = ஒரு வகையான தோணி; மறி = கீழ் மேல் ஆக மறியும்; திரை = அலை; படுக்கோ = பிடிப்பேனோ; பணிலம் = சங்கு; குளிக்கோ = எடுப்பேனோ; பரன் = இறைவன்; முன்றில் = முற்றம்; வளை = வளையல்; ஐயர் = தமையன்மார்; குற்றேவல் = ஏவிய தொழில்களைச் செய்தல்; தொடுக்கோ = தொடுப்பேனோ; பணியீர் = கட்டளை இடுங்கள்)

தலைவியிடம் கொண்ட காதலுக்காக எந்த வேலைகளையும் செய்யத் தயார் ஆக இருப்பதாகத் தலைவன் தோழியிடம் கூறுகின்றான்.

கடலில் தோணியைச் செலுத்த வேண்டுமா? செலுத்துகிறேன். கடலில் சென்று மீன் பிடித்து வர வேண்டுமா? பிடித்து வருகிறேன். கடலில் மூழ்கிச் சங்குகளை எடுத்து வர வேண்டுமா? எடுத்து வருகிறேன். இறைவனுடைய தில்லை நகரில் சென்று சங்கு வளையல்களை விற்று வர வேண்டுமா? விற்று வருகிறேன். உங்கள் தமையன் (அண்ணன்) மார்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டுமா? செய்கிறேன். உங்கள் கூந்தலில் சூட மலர் தொடுக்க வேண்டுமா? தொடுக்கிறேன். உங்களுக்கு என்ன செய்ய வேண்டும். கட்டளை இடுங்கள் என்று தலைவன் தோழியிடம் வேண்டுகிறான். இவை தலைவன் தலைவியிடம் கொண்ட காதலைக் காட்டுகின்றன.

தலைவன் தன்னை உயர்வாகக் கூறினால் தலைவி தன் காதலை மறுக்கக் கூடும் என்று எண்ணினான். எனவே, தாழ்வான வேலைகளைச் செய்வதாகத் தலைவன் கூறுகின்றான்.

6.2.5 தலைவனின் வருகை தலைவி தலைவன் கொடுத்த பொருளைத் தோழியிடம் இருந்து பெற்றுக் கொண்டாள். அதனால் தலைவி மிகுந்த இன்பம் அடைந்தாள். இதனைத் தோழி தலைவனிடம் தெரிவிக்கின்றாள். பின், தலைவியை நாங்கள் விளையாடும் இடத்திற்கு அழைத்து வருவேன். எனவே நீ பகல் பொழுதில் இந்த இடத்திற்கு வருவாயாக என்று தலைவனிடம் தோழி கூறுகின்றாள். இவ்வாறு தோழி தலைவனிடம் பகல் பொழுதில் தலைவியைச் சந்திப்பதற்கு உரிய இடத்தைச் சுட்டிக் கூறுவதாகக் குறி இடம் கூறல் என்ற துறை அமைகின்றது, குறி இடம் கூறல் என்ற துறையில் அமைந்த பாடலைப் பார்ப்போமா?

வானுழை வாள்அம்ப லத்துஅரன் குன்றுஎன்று

வட்கிவெய்யோன்

தானுழை யாஇருளாய்ப் புறம் நாப்பண்வண் தாரகைபோல்

தேனுழை நாகம் மலர்ந்து திகழ்பளிங் கால்மதியோன்

கானுழை வாழ்வுபெற் றாங்குஎழில் காட்டும்ஓர்

கார்ப்பொழிலே

(பாடல் – 116)

(உழை = இடம்; வாள் = ஒளி; வட்கி = அஞ்சி; வெய்யோன் = சூரியன்; நாப்பண் = நடுவில்; வண் = வளம் மிக்க; தாரகை = நட்சத்திரம்; தேன் = வண்டு; நாகம் = நாகம் என்ற மலர்; மதியோன் = சந்திரன்; கான் = காடு; கார் = கரிய; பொழில் = சோலை)

• இயற்கை அழகு

தோழி தலைவனிடம் தலைவியைப் பகல் பொழுதில் காண்பதற்கு ஒரு சோலைக்கு வருமாறு கூறுகின்றாள். அந்தச் சோலை எப்படிப்பட்டது என்பதையும் விளக்குகின்றார்.

அந்தச் சோலையில் மரங்கள் உயர்ந்து அடர்ந்து காணப்படுகின்றன. எனவே, இந்தச் சோலையைப் பார்த்த சூரியன் இது வானில் உள்ள சிவபெருமானின் ஒளிமிக்க மலை என்று எண்ணுகிறது. எனவே சூரியனின் கதிர்கள் உள்ளே செல்ல அஞ்சுகின்றன. அந்த அளவுக்கு அந்தச் சோலை இருட்டாய் உள்ளது. இவ்வாறு இருண்டு காணப்படும் சோலையில் நட்சத்திரம் போல் நாகம் என்ற மலர் மலர்ந்து காணப்படுகிறது. அந்தச் சோலையில் பளிங்கு காணப்படுகின்றது. அது சந்திரன் வான் உலக வாழ்வை விட்டுக் காட்டு உலக வாழ்வு பெற்றால் போல் உள்ளது. இத்தகைய அழகுடைய சோலை அது. அங்கே வருவாயாக என்று தோழி தலைவனிடம் கூறுகின்றாள்.

முன்னால் சிவபெருமானின் மாமன் தக்கன் செய்த வேள்வியில் சூரியனின் பற்கள் பறி போய்விட்டன. எனவே, இந்தச் சோலையைப் பார்த்த சூரியன் இது சிவபெருமானின் மலை என்று எண்ணி உள்ளே தன் கதிர்களைச் செலுத்த அஞ்சுகின்றது என்று நயம்படக் கூறப்படுகிறது.

6.3 தலைவியும் தலைவனும்

தலைவன் தலைவியிடம் காதல் கொள்கிறான். திருமணத்திற்கு முன்பு தலைவியைக் கூடுகிறான். இதை அறிந்த தோழி தலைவனிடம் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டுகிறாள். ஆனால் தலைவன் திருமணம் செய்ய முயலாது காலம் கடத்துகிறான். இதை உணர்ந்ததோழி தலைவி தலைவன் திருமணம் செய்யக் காலம் தாழ்த்துவதை அறிந்து வருந்துவதாகத் தலைவனிடம் கூறுகின்றாள். தானும் அது கண்டு வருந்துவதாகவும் தோழி கூறுகிறாள். எனவே, விரைவில் தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றாள். இந்தத் துறை ”வருத்தம் கூறி வரைவு கடாவுதல்” என்று குறிப்பிடப்படுகிறது.

6.3.1 ஊரார் பழி அஞ்சல் தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாது காலம் தாழ்த்துகின்றான். தோழி பலமுறை எடுத்துக்கூறியும் தலைவன் திருமணம் செய்ய முன் வரவில்லை. ஆனால், தலைவன் தலைவியைச் சந்திப்பதற்கு அடிக்கடி வருகின்றான். எனவே தோழி தலைவனிடம் இவ்வாறு நீ தலைவியை மறைவாகச் சந்திப்பது ஊரில் உள்ள மக்களுக்குத் தெரிந்து விட்டது. எனவே நீ இவ்வாறு வராதே என்று அறிவிக்கின்றாள். இது ”அலர் அறிவுறுத்தல்” என்று குறிப்பிடப்படுகிறது. தலைவிக்கும் தலைவனுக்கும் இடையே உள்ள உறவை ஊர் மக்கள் அறிந்து உள்ளனர். ஆனால் அதை வெளிப்படையாகக் காட்டவில்லை. இது அம்பல் எனப்படும். அம்பல் என்றால் மொட்டு என்று பொருள். தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே உள்ள உறவை அறிந்த ஊரார் அதை வெளிப்படையாகக் கூறுவது அலர் எனப்படும். அலர் எனறால் மலர் என்று பொருள்.

இனி, இந்த அலர் அறிவித்தல் என்ற துறையில் அமையும் பாடலைக் காண்போமா?

அலர்ஆ யிரம்தந்து வந்தித்து மால்ஆயிரம் கருத்தால்

அலர்ஆர் கழல்வழி பாடுசெய்தாற்கு அளவுஇல் ஒளிகள்

அலராய்இருக்கும் படைகொடுத்தோன் தில்லையான்

அருள்போன்று

அலர்ஆய் விளைகின்றது அம்பல் கைம்மிக்கு

ஐயமெய்அருளே

(பாடல் – 180)

(அலர் = மலர்; வந்தித்து = வணங்கி; கழல் = அடி; அலர் = வெளிப்படையான பழிச்சொல்)

திருமால் சிவபெருமானை ஆயிரம் மலர்கள் கொண்டு வழிபாடு செய்தான். அவனுடைய அன்பைக்கண்டு மகிழ்ந்த சிவபெருமான் திருமாலுக்குச் சக்கரம் ஆகிய படையை அல்லது கருவியைக் கொடுத்தான். இத்தகைய சிவபெருமானின் அருளைப் போன்று நீ தலைவிக்கு அருள் செய்ய வேண்டும். ஏனெனில், நீ தலைவியை மறைவாகச் சந்தித்துப் பழகுவது ஊரில் உள்ள மக்களுக்குத் தெரிந்து அவர்கள் வெளிப்படையாகப் பழிகூறுகின்றனர். எனவே, விரைவில் நீ தலைவியை மணம் செய்து கொள்ள வேண்டும் என்று தலைவனிடம் தோழி கூறுகின்றாள்.

6.3.2 தலைவனின் துணிவு தலைவன் தலைவியின் உறவினர்களுக்குத் தெரியாமல் தலைவியை உடன் அழைத்துக் கொண்டு செல்ல எண்ணுகிறான். இந்த எண்ணத்தைத் தலைவன் தோழியிடம் கூறுகின்றான். இதை அறிந்த தோழி தலைவனின் எண்ணத்தைத் தலைவியிடம் கூறுகின்றாள். இந்தக் கருத்து அடங்கிய துறை துணிந்தமை கூறல் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தத் துறையில் இடம் பெறும் பாடல் இதோ தரப்படுகிறது.

குறப்பாவை நின்குழல் வேங்கைஅம் போதொடு கோங்கம்

விராய்

நறப்பா டலம்புனை வார்நினை வார்தம் பிரான்புலியூர்

மறப்பான் அடுப்பதுஒர் தீவினை வந்திடில் சென்றுசென்று

பிறப்பான் அடுப்பினும் பின்னும்துன்னத் தகும் பெற்றியரே

(பாடல் – 205)

(போது = மலர்; விராய் = கலந்து; நறவு = தேன்; புளைவார் = அணிவார்; அடுப்பது = கூடுவது; அடுப்பினும் = அவ்வாறு ஏற்படினும்; துன்னத் தகும் = சேரத்தகும்; பெற்றியது = தன்மையது)

தலைவி தோழியிடம் கூறுகின்றாள். குறவர் குலத்தில் பிறந்த பெண்ணே! சிவபெருமானுடைய புலியூரை நினைத்தவர்கள் ஒரு பொழுதும் அதை மறக்க மாட்டார்கள் அவ்வாறு அவர்கள் மறக்க நேர்ந்தால் அதனால் தீய வினை வந்து சேரும். அந்தத் தீயவினையால் பல பிறப்புகள் பிறப்பர். அவ்வாறு பல பிறப்புகள் பிறந்தாலும் (மீண்டும்) சேரத்தகும் தன்மை உடையவர். அத்தகைய தலைவர் உன் கூந்தலில் வேங்கைப் பூவோடு கோங்கம் பூவையும் பாதிரி மலரையும் சூட நினைக்கின்றார். எனவே அவருடன் செல்லாது இருத்தல் ஆகாது என்று தோழி தலைவியிடம் தலைவனின் எண்ணத்தைத் தெரிவிக்கின்றாள்.

இறைவனை அன்புடன் நினைப்பவர்க்குப் பிறப்பு இல்லை என்பது இப்பாடலில் கூறப்படுகிறது.

எத்தனைப் பிறப்புகள் பிறந்தாலும் கற்பு உடைய மகளிர் கணவனைப் பின்தொடர்ந்து செல்வதற்கு உரியவர்கள் ஆவர் என்பதும் இப்பாடலில் சுட்டப்படுவதைக் காணலாம்.

6.3.3 தலைவியின் துணிவு தலைவன் உடன் செல்லும்படி தோழி தலைவியிடம் கூறுகின்றாள். தலைவியும் தலைவனிடம் கொண்ட அன்பின் காரணமாகத் தலைவனுடன் செல்லத் துணிகின்றாள். இந்தச் செய்தியைத் தோழி தலைவனிடம் கூறுகிறாள். இதுவே ”துணிவெடுத்து உரைத்தல்” என்ற துறையாக அமைகிறது. இந்தத் துறையில் அமையும் பாடலைப் பார்ப்போம்.

கம்பம் சிவந்த சலந்திரன் ஆகம் கறுத்ததில்லை

நம்பன் சிவநகர் நற்றளிர் கல்சுரம் ஆகும்நம்பா

அம்புஅஞ்சி ஆவம் புகமிக நீண்ட அரிசிந்து

கண்ணாள்

செம்பஞ்சி யின்மதிக் கின்பதைக் கும்மலர் சீறடிக்கே

(பாடல் – 209)

(கம்பம் = நடுக்கம்; சிவந்த = கோபம் கொண்ட; ஆகம் = உடம்பு; கறுத்த = முனிந்த; நம்பன் = எல்லோராலும் விரும்பப்படும் இறைவன்; சிவநகர் = சிவபெருமானின் திருத்தலங்களில் ஒன்று; சுரம் = காடு; ஆவம் = அம்புக் கூடு; அரி சிந்து = வரி ஓடிய; செம்பஞ்சி = ஒரு வகை மலர்; பதைக்கும் = வருந்தும்; சீறடி = சிறிய அடி)

சலந்தரனை வெகுண்டவர் சிவபெருமான். அத்தகைய சிவபெருமானின் தலங்களில் ஒன்று சிவ நகர் என்பது ஆகும். நம் தலைவி, அம்புகள் அச்சம் கொண்டு அம்புக் கூட்டினுள் நுழைந்து விடும் படியான சிவந்த வழிகளை உடையவள். அவளுடைய பாதங்கள் மென்மையான செம்பஞ்சு மலரை மதிப்பதற்குக் கூட அஞ்சும். அத்தகைய மென்மையான அடிகளை உடையவள் தலைவி. அப்படிப்பட்ட தலைவி உன்னுடன் வருவதற்குத் துணிந்து உள்ளாள். எனவே, அவளுக்கு நீ செல்லும் வழியில் உள்ள கற்கள் நல்ல தளிர் போன்று இருக்கும் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

இப்பாடலில் தலைவியின் கண்கள் அழகாக வருணிக்கப்படுவதைக் காணலாம். தலைவி தலைவனிடம் கொண்ட அன்பும் வெளிப்படுத்தப் படுகிறது.

6.4. உடன்போக்கு

தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்பிக் காதல் கொள்ளும் போது பெற்றோருக்குத் தெரியாமல் தம்தம் சொந்த ஊரை விட்டு, வெளியூர் செல்வது உண்டு அதை உடன் போக்கு என்பர்.

6.4.1 தலைவனோடு செல்லுதல் தலைவி தன் வீட்டை விட்டுத் தலைவனுடன் சென்று விடுகிறாள். இருவரும் மக்கள் அதிகம் காணப்படாத கொடிய வழியில் செல்கின்றனர். வழிநடை வருத்தம் தெரியாமல் இருக்க இருவரும் விளையாடிக் கொண்டு செல்கின்றனர். அப்போது அவர்கள் எதிரே வழிப்போக்கர் ஒருவர் வருகின்றார். அவரிடம் தாங்கள் செல்ல வேண்டிய நகரம் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று தலைவனும் தலைவியும் கேட்கின்றனர். அதற்கு அவர் நீங்கள் செல்ல வேண்டிய நகரம் பக்கத்தில் உள்ளது என்று கூறுகிறார். இதுவே ” நகர் அணிமை கூறல் ” என்ற துறை ஆகும். இந்தத் துறையில் அமைந்த பாடல் பின்வருமாறு.

மின்தங்கு இடையொடு நீவியன் தில்லைச்சிற்

றம்பலவர்

குன்றம் கடந்துசென் றால்நின்று தோன்றும் குரூஉக்

கமலம்

துன்றுஅம் கிடங்கும் துறைதுறை வள்ளைவெள்

ளைநகையார்

சென்றுஅங்கு அடைதட மும்புடை சூழ்தரு சேண்நகரே

(பாடல் – 221)

(மின் = மின்னல்; இடையொடு = இடையை உடைய பெண்ணொடு; வியன் = அகன்ற; குன்றம் = மலை; குரூஉ = நிறம்; கமலம் = தாமரை துன்று = நெருங்கிய; அம் = அழகிய; கிடங்கு = அகழி; வள்ளை = வள்ளைப் பாடல்; நகையார் = பற்களை உடைய பெண்கள்; அடை = சேரும்; தடம் = குணம்; சேண் = உயர்ந்த)

தலைவி மின்னல் போன்ற இடையை உடையவள். அவளொடு நீ அகன்ற தில்லையில் சிற்றம்பலவன் ஆகிய இறைவனின் மலையைக் கடந்து செல்ல வேண்டும். சிறிது தூரம் சென்றவுடன் தாமரைப் பூக்கள் நிறைந்த அகழிகள் காணப்படும். உரலில் நெல்லை இட்டு உலக்கையால் பெண்கள் குற்றும் போது, பாடல் பாடுவர். அந்தப் பாடல் வள்ளைப் பாட்டு அல்லது உலக்கைப் பாட்டு எனப்படும். இவ்வாறு பாடல் பாடுகின்ற பெண்கள் குளங்களில் சென்று நீராடுவர். அத்தகைய குளங்களும் உள்ளன. இத்தகைய வளம் மிக்க தில்லை ஆகிய நகர் தோன்றும். எனவே, விரைந்து செல்வீர்களாக என்று வழிப்போக்கர் தலைவன், தலைவி ஆகியோரிடம் கூறுகின்றார்.

6.4.2 தலைவனின் பிரிவு தலைவன் தலைவியைத் திருமணம் செய்வதற்கு வேண்டிய பொருளை ஈட்டுவதற்காகப் பிரிந்து செல்ல எண்ணுகிறான். தலைவியோ தலைவனிடம் மிகுந்த அன்பு கொண்டுள்ளாள். எனவே, தலைவனின் பிரிவைத் தலைவி தாங்கமாட்டாள். ஆகவே, தலைவன் தலைவியிடம் கூறாது பிரிந்து செல்ல எண்ணுகின்றாள். இது ” சொல்லாது ஏகல் ” என்ற துறையாக அமைகிறது. இந்த துறையில் பின்வரும் பாடல் இடம் பெறுகிறது.

வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளங்கும்

மனம்மகிழ்ந்து

தெருட்டின் தெளியலள் செப்பும் வகையில்லை

சீர்அருக்கன்

குருட்டில் புகச்செற்ற கோன்புலி யூர்குறு

கார்மனம்போன்று

இருட்டில் புரிகுழ லாட்கு எங்ஙனே சொல்லி ஏகுவனே

(பாடல் – 270)

(வருட்டில் = தடவினால்; திகைக்கும் = மயங்கும்; வசிக்கில் = இன்பமான சொற்களைக் கூறினால்; தெருட்டில் = தெளிவித்தால்; அருக்கன் = சூரியன்; குருட்டில் = குருடு ஆகிய இழி பிறவியில்; செற்ற = செல்லும்படி சினந்த; குறுகார் = அடையாதவர்; ஏகுவன் = செல்லுவேன்)

தலைவன் தனக்குள் எண்ணுகின்றான். தலைவியின் நெற்றி, தோள் முதலிய உறுப்புகளைத் தடவிக் கொண்டு நான் பிரிந்து செல்லப் போவதைக் கூற எண்ணினால் அதை உணர்ந்து கொண்டு தலைவி மயங்குவாள். இனிய சொற்களைக் கூறி அவளை மயக்க நினைத்தால் அவள் என் எண்ணத்தை அறிந்து கொண்டு உண்ணவும் மாட்டாள். உறங்கவும் மாட்டாள். வெளிப்படையாக நான் பிரிந்து செல்வதன் காரணத்தைக் கூறினாலும் அவள் தெளிவு பெறமாட்டாள். எனவே, நான் பிரிந்து செல்வதை அவனிடம் கூறுவதற்கு எந்த வழியும் இல்லை.

தக்கன் செய்த வேள்வியின் போது இறைவனாகிய சிவபெருமான் சூரியனின் கண்களைக் குருடு ஆக்கினான். அத்தகைய இறைவனது புலியூர் ஆகிய ஊரை அடையாதவர்களின் மனம் இருட்டாக இருக்கும். அதுபோல கரிய நிறம் உடைய சுருண்ட கூந்தலை உடைய தலைவியிடம் நான் என்ன சொல்லிக் கொண்டு பிரிந்து செல்வேன் என்று தலைவன் ஏங்குகின்றான்.

நெற்றியைத் தடவுதல், தோள்களைத் தடவுதல் போன்றவை அன்பு கொண்டவர் செய்யும் செயல்கள் ஆகும். அன்புடையவர்கள் பிரியும் போது இனிமையான சொற்களைக் கூறுதல் உலக வழக்கு. எனவே, இவை இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதைப் போன்று இறைவனை எண்ணாதவர்களுடைய மனம் இருண்டு காணப்படும் என்பதும் காட்டப்படுகிறது.

6.4.3 திருமணமும் மகிழ்ச்சியும் தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் ஈட்டச் சென்றான். பொருளை ஈட்டிய பின் தலைவியை மணக்க வருகின்றான். இதனால் திருமண முரசு ஓலிக்கிறது. தலைவியின் வீட்டருகில் வந்து விட்டனர். இந்தத் திருமண முரசின் ஒலியைத் தலைவியின் வீட்டில் உள்ளவர்கள் கேட்கின்றனர். தலைவிக்குத் திருமணம் நடக்கப் போவதை எண்ணி மகிழ்கின்றனர்.

இது மண முரசு கேட்டு மகிழ்ந்து உரைத்தல் என்ற துறை ஆகும். இந்தத் துறையில் வரும் பாடலைக் காண்போம்.

பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம் பொன்பொதிந்த

தோரணம் நீடுக தூரியம் ஆர்க்கதொல் மால்அயற்கும்

காரணன் ஏரணி கண் நுதலோன் கடல் தில்லைஅன்ன

வாரண வும்முலை மன்றல்என்று ஏங்கும் மணமுரசே

(பாடல் – 296)

(நீடுக = எங்கும் ஓங்குவதாக; தூரியம் = ஒருவகை இசைக்கருவி; ஆர்க்க = முழங்க; தொல் = பழைமையான; அயன் = பிரம்மன்; காரணன் = காரணனாக உள்ள சிவபெருமான்; ஏர் அணி = அழகு உடைய; வார் அணவும் = வார் பொருந்திய; மன்றல் = திருமணம்; ஏங்கும் = ஒலிக்கும்)

சிவபெருமான் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் காரணன் ஆக உள்ளவன். நெற்றியில் கண்ணை உடையவன். சிவபெருமானின் தில்லை நகரைப் போன்ற மார்பை உடைய தலைவியின் திருமணத்தை அறிவிக்கும் வகையில் மண முரசு ஒலிக்கிறது.

எனவே வாயில்களில் எல்லாம் நீரால் நிறைக்கப்பட்ட பொன்னால் ஆகிய குடங்களை வையுங்கள். எல்லா இடங்களிலும் தோரணங்களைக் கட்டுங்கள். இசைக்கருவிகளை முழக்குங்கள் என்று தலைவியின் வீட்டில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

திருமணத்தின் போது பொற்குடங்கள் வைத்தல், தோரணம் கட்டுதல், இசைக்கருவிகளை முழக்குதல் போன்ற வழக்கங்கள் உண்டு என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

6.4.4 ஊடல் நீங்குதல் இந்தத் துறை திருக்கோவையார் நூலின் இறுதிப் பாடலாக அமைகிறது. தலைவன் பரத்தையிடம் கொண்ட காதல் காரணமாகத் தலைவியைப் பிரிந்து விடுகிறான். இதனால் தலைவி தலைவனுடன் ஊடி இருக்கின்றாள். இந்த நிலையில் தோழி தலைவியிடம் தலைவனுடைய பயன்களை எடுத்துக் கூறுகின்றாள். தலைவன் உலகில் உள்ளவர்களுக்கு எத்தகைய பயன் உடையவனாக உள்ளான் என்பதை விளக்கிக் கூறுகிறாள். எல்லோருக்கும் பயன் உடையவன் ஆதலால் தலைவன் பிடித்தவரிடம் செல்வதும் குற்றம் அல்ல. எனவே நீ அவனோடு ஊடல் கொள்ளாதே என்று அறிவுரை கூறித் தலைவி தலைவனிடம் கொண்ட ஊடலைத் தோழி தீர்க்கின்றாள்.

இது ஊதியம் எடுத்து உரைத்து ஊடல் தீர்த்தல் என்ற துறையாகக் காட்டப்படுகிறது . இந்தத் துறையில் வரும் பாடல் இதோ.

கார்அணி கற்பகம் கற்றவர் நல்துணை பாணர்ஒக்கல்

சீர்அணி சிந்தாமணிஅணி தில்லைச் சிவன்அடிக்குத்

தார்அணி கொன்றையன் தக்கோர் தம்சங்க

நிதிவிதிசேர்

ஊருணி உற்றவர்க்கு ஊரன்மற்று யாவர்க்கும் ஊதியமே

(பாடல் – 400)

(ஊரன் = ஊரை உடைய தலைவன்; கார் = மேகம்; கற்பகம் = கற்பக மரம்; ஒக்கல் = சுற்றத்தினர்; சிந்தாமணி = நினைத்ததைக் கொடுக்கும் மணி; தக்கோர் = பெரியவர் அல்லது சான்றோர்; சங்க நிதி = குறையாத செல்வம்; ஊருணி = ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் குடிக்கும் நீரை உடைய குளம்;உற்றவர் = சுற்றத்தார்; ஊதியம் = பயன்)

தோழி தலைவனின் பெருமைகளைத் தலைவிக்குக் கூறுகிறாள். தலைவன் கேட்காமல் பிறர்க்குக் கொடுப்பவன். எனவே அவன் மேகத்தைப் போன்றவன். கேட்பவர்களுக்கும் கொடுப்பவன். எனவே கேட்பவர்களுக்குக் கேட்டவற்றைச் கொடுக்கும் கற்பக மரம் போன்றவன்; தலைவன் கல்வி கற்றவன். எனவே அவன் கற்றவர்களுக்கு நல்ல துணைவன். பாணர்களுக்கு அவர்களுடைய உறவினரைப் போன்றவன். நினைத்ததைக் கொடுப்பவன், ஆகையால் அவன் சிந்தாமணி என்ற மணியைப் போன்றவன். சிவபெருமான் அணியும் கொன்றைப் பூவின் தன்மை உடையவன். சான்றோர்களுக்குச் குறையாத செல்வம் போன்றவன். நண்பர்களுக்கும் பகைவர்களுக்கும் வேறுபாடு இல்லாது பயன் அளிப்பதால் அவன் தலைவிதியைப் போன்றவன். உறவினர்களுக்குப் பயன்படுவதால் ஊருணியைப் போன்றவன். எனவே, அவன் பரத்தையர்க்கும் பயன்படுகின்றான். ஆகவே அவனிடம் நீ ஊடல் கொள்ளாதே என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

6.5 தொகுப்புரை

நண்பர்களே! கோவை இலக்கியம் பற்றி இதுவரையிலும் பார்த்தவற்றைத் தொகுத்துக் காண்போமா?

கோவை இலக்கியத்தில் அகத்துறைகள் பல நிரல்(வரிசை) படச் சேர்க்கப்பட்டுள்ளன.

கோவை இலக்கியத்தின் துறைகள் சிலவற்றைப் பற்றி அறிய முடிகிறது.

திருக்கோவையார் என்ற நூலில் பாட்டுடைத் தலைவன் ஆகிய சிவபெருமானின் பெருமைகளை அறிய முடிகின்றது.

பண்டைத் தமிழர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றி உணர முடிகிறது.

கோவை இலக்கிய வகையின் இலக்கியச் சிறப்புகளை அறிய முடிகிறது.

1.2 சிற்றிலக்கியப் பாகுபாடுகள்

தமிழ்மொழியில் காணப்படும் சிற்றிலக்கியங்கள் அவற்றின் அமைப்பு, பாடுபொருள், யாப்பு முதலியனவற்றை அடிப்படையாகக் கொண்டு பாகுபாடு செய்யலாம். அவை பற்றி இனிக் காணலாம்.

1.2.1 பொருள் அடிப்படைப் பாகுபாடு சிற்றிலக்கியங்களில் இடம்பெறும் பொருளை அடிப்படையாகக் கொண்டு அகப்பொருள் சார்பு உடைய சிற்றிலக்கியங்கள், புறப் பொருள் சார்பு உடைய சிற்றிலக்கியங்கள், துதிப்பொருள் சார்பு உடைய சிற்றிலக்கியங்கள், தத்துவப்பொருள் சார்பு உடைய சிற்றிலக்கியங்கள், நீதிப்பொருள் சார்பு உடைய சிற்றிலக்கியங்கள் என்று வகைப்படுத்தலாம். இதனைப் பின்வரும் வரைபடம் மூலம் நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

1.2.2 எண்ணிக்கை அடிப்படைப் பாகுபாடு சிற்றிலக்கிய வகைகளில் இடம்பெறும் பாடல்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டும் சிற்றிலக்கியங்களைப் பாகுபாடு செய்யலாம். சான்றுகளாகச் சிலவற்றைப் பார்ப்போமா?

ஐந்து பாடல்களைக் கொண்டு சில சிற்றிலக்கிய வகைகள் காணப்படுகின்றன. சான்றாகப் பஞ்சகம் என்ற சிற்றிலக்கிய வகையைக் கூறலாம். சில சிற்றிலக்கிய வகைகள் பத்துப் பாடல்களைக் கொண்டு விளங்குகின்றன. சான்றுகளாகப் பத்து, பதிகம் என்ற சிற்றிலக்கிய வகைகளைக் காட்டலாம். வேறு சில சிற்றிலக்கிய வகைகள் நூறு பாடல்களைக் கொண்டு விளங்குகின்றன. சான்றாகச் சதகம் என்ற சிற்றிலக்கிய வகையைக் கூறலாம்.

1.2.3 யாப்பு அடிப்படைப் பாகுபாடு சில சிற்றிலக்கிய வகைகளை அவை இயற்றப்பட்ட யாப்பு வகைகளின் அடிப்படையில் பாகுபாடு செய்யும் நிலையும் உள்ளது. சான்றுகளாக ஊர் நேரிசை, ஊர் வெண்பா, அரசன் விருத்தம், பெயர் இன்னிசை ஆகிய இலக்கிய வகைகளைக் கூறலாம். பாட்டுடைத் தலைவனின் ஊரின் சிறப்பை நேரிசை வெண்பாக்களால் பாடுவது ஊர் நேரிசை என்ற இலக்கிய வகை ஆகும். பொது நிலையில் ஓர் ஊரின் சிறப்புகளை வெண்பாக்களால் புகழ்ந்து பாடுவது ஊர் வெண்பா என்ற இலக்கிய வகை ஆகும். அரசனின் சிறப்புகளை விருத்தப்பா வகையால் பாடுவது அரசன் விருத்தம் என்ற இலக்கிய வகை ஆகும். பாட்டுடைத் தலைவனின் ஊர்ச் சிறப்பை இன்னிசைவெண்பாவால் புகழ்ந்து பாடும் இலக்கிய வகை ஊர் இன்னிசை எனப்படும்.

1.2.4 சொல்முடிவு அடிப்படைப் பாகுபாடு சிற்றிலக்கிய நூல்களின் பெயர்கள் எந்தச் சொல்லை இறுதியில் பெற்றுள்ளன என்பதை அடிப்படையாகக் கொண்டும் சிற்றிலக்கியங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. சான்றுகளாகச் சிலவற்றைக் காண்போமா?

இரட்டை மணிமாலை, மும்மணிமாலை, நான்மணி மாலை போன்ற சிற்றிலக்கிய வகைகள் இறுதியில் மாலை என்ற சொல்லைப் பெற்று முடிகின்றன. எனவே, இவை மாலை இலக்கிய வகைகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.

வாயுறை வாழ்த்து, புறநிலை வாழ்த்து, இயன்மொழி வாழ்த்து என்பதை வாழ்த்து என்ற சொல்லை இறுதியில் பெற்றுள்ளன. எனவே, இவை வாழ்த்து வகைச் சிற்றிலக்கியங்கள் என்று பாகுபாடு செய்யப்படுகின்றன.

கண்படை நிலை, துயில் எடை நிலை, விளக்கு நிலை என்பன. இறுதியில் நிலை என்ற சொல்லைக் கொண்டுள்ளன. எனவே, இவை நிலை இலக்கிய வகைகள் என்ற பாகுபாட்டுள் அடக்கப் படுகின்றன.

1.2.5 நாட்டுப்புற இலக்கிய அடிப்படைப் பாகுபாடு அம்மானை, ஊசல், தாலாட்டு, பள்ளு, குறவஞ்சி, குறம் முதலியவை நாட்டுப்புற இலக்கியங்கள் ஆகும். இந்த இலக்கியங்களைப் பற்றி நீங்கள் பின்னால் வரும் பாடங்களின் மூலம் விளக்கமாக அறிந்து கொள்ளலாம். இத்தகைய நாட்டுப்புற இலக்கியங்களின் அடிப்படையில் இயற்றப்படும் சிற்றிலக்கியங்களைத் தனி ஒரு வகையாக வகைப்படுத்தலாம்.

1.2.6 உறுப்புகள் அடிப்படைப் பாகுபாடு கடவுளர், ஆடவர், பெண்கள் முதலியோரின் உறுப்புகளைப் புகழ்ந்து பாடும் நோக்கில் இயற்றப்பட்டன. சிற்றிலக்கியங்களை உறுப்புகள் அடிப்படைப் பாகுபாடு என்ற வகையில் அடக்கலாம். சான்றுகளாகச் சிலவற்றைப் பார்ப்போமா?

பெண்களின் மார்பைப் புகழ்ந்து பாடும் இலக்கிய வகை பயோதரப்பத்து என்று அழைக்கப்படுகின்றது. பயோதரம் என்றால் மார்பு என்று பொருள். பெண்களின் கண்களைப் புகழ்ந்து பாடும் இலக்கிய வகை நயனப்பத்து என்று அழைக்கப்படுகிறது. நயனம் என்றால் கண் என்று பொருள். இறைவனைப் பற்றிப் பாடும்போது பாதாதி கேச வருணனையும், மனிதர்களைப் பற்றிப் பாடும்போது கேசாதிபாத வருணனையும் மரபாகப் பின்பற்றப்படுகிறது.

இதைப் போன்று உறுப்புகளைப் பாதம் முதல் தலை வரை புகழ்ந்து பாடும் இலக்கிய வகை பாதாதிகேசம் எனப்படுகிறது. தலை முதல் பாதம் வரை உள்ள உறுப்புகளைப் புகழ்ந்து பாடும் இலக்கியவகை கேசாதிபாதம் எனப்படுகிறது. கேசம் என்றால் தலை என்று பொருள்.

1.2.7 இசை அடிப்படைப் பாகுபாடு குறிப்பிட்ட சில இசை வகைகளை அடிப்படையாகக் கொண்டும் சில இலக்கியங்கள் இயற்றப்படுகின்றன. அவற்றை இசை அடிப்படைப் பாகுபாடு என்ற வகையுள் அடக்கலாம். சான்றுகளாகக் கும்மி, சிந்து, தெம்மாங்கு போன்ற இலக்கிய வகைகளைக் குறிப்பிடலாம்.

1.2.8 தொழில் அடிப்படைப் பாகுபாடு குறிப்பிட்ட சில தொழில்களைச் செய்பவர்கள் அத்தொழில் களைச் செய்யும்போது பாடல்கள் பாடுவர், உழைப்பின் கடுமை தெரியாமல் இருக்க அவர்கள் பாடும் பாடல்களைத் தொழில் பாடல்கள் என்று கூறலாம். இத்தகைய தொழில் பாடல்களை அடிப்படையாகக் கொண்டும் சில வகை இலக்கியங்கள் தோன்றி உள்ளன. அவற்றைத் தொழில் அடிப்படைப் பாகுபாட்டில் கொண்டு வரலாம்.

சான்றுகளாக வண்ணப்பாட்டு, ஓடப்பாட்டு, வண்டிக்காரன் பாட்டு போன்ற சிற்றிலக்கிய வகைகளைக் குறிப்பிடலாம்.

இதுவரை நீங்கள் அறிமுகப்படுத்திக் கொண்ட சிற்றிலக்கிய வகைகளைப் பின்வரும் அட்டவணை மூலம் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்கிறீர்களா?